அடுத்த பசுமை வேட்டை – கிரீன் ஹண்ட் – தமிழ் நாட்டிலா?
நாட்டின் பல்வேறு இடங்களில் புலிகள் காப்பகம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. வனங்களைக் காப்பது, வன விலங்குகளைக் காப்பது என்ற பெயரில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. திட்டங்கள் பலவாக இருந்தாலும், செயல்படுத்தப்படும் இடங்கள் பலவாக இருந்தாலும் அனைத்திலும் பாதிக்கப்படுவது அங்கு வாழும் பழங்குடியின மலைவாழ் மக்களே. தெளிவாகச் சொன்னால் வனம், காடுகள் மலைகள் தொடர்பாக தீட்டப்படும் திட்டங்கள் அனைத்தும் அங்கு கிடைக்கும் மரம் உள்ளிட்ட வனச் செல்வங்களையும், கனிம வளங்களையும் பெரு முதலாளிகள் சூறையாடுவதற்காகவே கொண்டுவரப்படுகின்றன.
அருவிகள், ஆற்றோர தரிப்பிடங்கள் போன்றவற்றில் உல்லாச விடுதிகளை கட்டுவதற்கும், அதற்கான சாலைகள் அமைப்பதற்கும் வனங்களை குறுக்கும் நெடுக்குமாக பிளந்து போடுகிறார்கள். இதனால் பாதிக்கப்படும் வன விலங்குகள் மலை கிராமங்களுக்குள் புகுந்து மக்களையும் விளை நிலங்களையும் தாக்கி சேதப்படுத்துகின்றன.
வங்களில், மலைகளில் கிடைக்கும் கனிம வளங்களைக் கொள்ளையிடுவதற்காக அங்கு வாழும் மக்களை இரக்கமே இல்லாமல் துடைத்தழிக்கிறார்கள். இதை எதிர்த்துப் போராடுவதால் தான் மலை வாழ் மக்களை மாவோயிஸ்டுகள் என்று சொல்லி அவர்களை அழிப்பதற்காக பசுமை வேட்டை நடத்தப்படுகிறது.
அண்மையில் ஆந்திராவில் செம்மரங்களை கடத்தி கோடிகளில் புரள்பவர்களுக்கு சலாம் போட்டு, அப்பாவி உழைக்கும் மக்கள் இருபது பேரை சுட்டுக் கொன்றார்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக அந்த வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாத்து வந்த பழங்குடியின மலைவாழ் மக்களை துரத்தியடிப்பதை நோக்கமாகக் கொண்டு தான் வனங்களைக் காப்பது, வன விலங்குகளைக் காப்பது என்ற பெயரில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
அவ்வாறான திட்டங்களில் ஒன்று தான் திடீரென அறிவிக்கப்பட்ட குமரி மாவட்ட புலிகள் வனச் சரணாலயம். இது களியல், குலசேகரம், வேளிமலை, அழகியபாண்டியபுரம், கடையல், பேச்சிப்பாறை, பொன்மனை, சுருளோடு, தடிக்காரன்கோணம் ஆகிய வனப்பகுதிகளை உள்ளடக்கியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. திற்பரப்பு அருவி இந்தப் பகுதிக்குள் அடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதிக்களுக்குள் காணி என்றழைக்கப்படும் பழங்குடியின மக்கள் வசிக்கிறார்கள். புலிகள் காப்பகம் அமைப்பதற்காக இவர்களிடம் எந்தக் கருத்துக் கேட்பும் நடத்தவில்லை யாரும்.
இவர்களை அப்புறப்படுத்துவதற்கு அவர்களை பார்ப்பன நீரோட்டத்தில் இணைப்பதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றன. மறுபுறம் காட்டு விலங்குகளை வேட்டையாடி கொன்று தின்று விட்டு அந்தப்பழியை காணி இன மக்கள் மீது சுமத்தி வழக்குப் போட்டு கைது செய்து அச்சுறுத்தி இடம்பெயர்ந்து செல்லுமாறு நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். ஆண்டாண்டு காலமாய் வாழ்ந்து வரும் இடத்தை விட்டு அவர்கள் எங்கு செல்வார்கள்? வனங்களை, வன விலங்குகளை பாதுகாப்பதையும் தங்கள் வாழ்வையும் பிரிக்க முடியாதபடி இயைந்திருக்கும் அந்த மக்களை விரட்டி விட்டு கொள்ளையர்களுக்கு வழி திறந்துவிடும் இந்த அரசை என்ன செய்வது?
அந்தக் காணி இனமக்கள் தங்களை விழிப்பூட்டிக் கொள்ளவும், ஒன்றிணையவும் பாடும் பாடல் ஒன்றிருக்கிறது. தங்கள் நம்பிக்கைகளையும், யதார்த்தத்தையும் எளிய சொற்களில் தெறித்தாற்போல் கூறும் இந்தப் பாடல் நிச்சயம் உங்களை ஈர்க்கும். அவர்களோடு இணைந்து, உளுத்துப் போன இந்த அரசை உலுக்கிப் போடுவது நம்முடைய கடமை,
[இந்த பாடலை தந்தவர் திரைப்பட நடிகர், பாடலாசிரியர் என்.டி. ராஜ்குமார்]
மலையரசன் கோட்டைக்குள்ள
மதவாதக் கூட்டம் வந்து
ஏதேதோ சொல்லுறானே மலையம்மா – எங்களை
குத்தம் செய்யத் தூண்டுறானே மலையம்மா .. .. .. மலையரசன்
மலவாகக் காட்டாளன் காலாட்டுப் பேயெல்லாம்
ஆடும் குலம் எங்க குலம் மலையம்மா
இங்கு ஏதேதோ சாமியின்னு
என்னென்னமோ பேச அந்த
கள்ளத்தனம் புரியுதே மலையம்மா – நம்ம
காணிகுலம் வீணாப் போகுது மலையம்மா .. .. .. மலையரசன்
தெங்கு நட்டோம் கமுகு நட்டோம்
சின்னச் சின்ன தோட்டமிட்டோம்
பாரஸ்டுகாரனப் போல் மலையம்மா அந்த
தெம்மாடிப் பாட்டக்காரன்
கண்டிருந்து தட்டிப் பறிச்சான்
குடும்பமும் அடகு போகுது மலையம்மா
எங்களோட கும்பி காந்துது மலையம்மா .. .. .. மலையரசன்
புலிகள் சரணாலம் கொண்டுவர வேணுமுண்டு
பண்ணிகள எருமகள வேட்டையாடி திண்ணுறான்
யானைகள கொண்ணுபுட்டு
தந்தங்கள திருடிப்புட்டு
எங்க மேல பழிய தூக்கிப் போடுறானே அவனே
எப்படி புலியக் காக்கப்போறான் மலையம்மா
மலையரசன் கோட்டைக்குள்ள
மதவாதக் கூட்டம் வந்து
ஏதேதோ சொல்லுறானே மலையம்மா – எங்களை
குத்தம் செய்யத் தூண்டுறானே மலையம்மா