உக்ரைன் – உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் – 4
தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க
உக்ரைன் தொடர் நான்காம் பகுதியில் உக்ரைன் பிரச்சனையின் மையத்தை, வழக்கம் போல உண்மைக்கு எதிரான தன்மையிலிருந்து அலசியிருக்கிறது ‘தமிழ் இந்து’ உக்ரைன் பிரச்சனையில் அமெரிக்கா ஏன் தலையிட வேண்டும் என்பதற்கு ரஷ்யாவின் அதிகாரம் அதிகமாவதை அதனால் சகித்துக் கொள்ள முடியாது என்று பதிலளித்திருந்தது ‘தமிழ் இந்து’ இந்த அறுவறுப்பான பொய்யை புரிந்து கொள்ள உக்ரைன் பிரச்சனையை பல கோணங்களிலிருந்து அணுக வேண்டும். அப்போது தான் ‘தமிழ் இந்து’வின் அமெரிக்க அடிவருடித்தனத்தின் உச்சம் விளங்கும்.
ஏற்கனவே கூறப்பட்டிருக்கிறது என்றாலும் மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டு கூறிவிடுவது அவசியம். ரஷ்யா ஒரு சோசலிச நாடல்ல, முதலாளித்துவ நாடு தான். புதின் உட்பட அதன் தலைவர்கள் யாவரும் கம்யூனிசத்தை எதிர்க்கும் முதலாளித்துவ அரசியல்வாதிகள் தாம் என்பதை மறந்து விடலாகாது.
\\\பிரிந்த நாடுகளை எல்லாம் ஒன்று சேர்ப்பது இப்போதைக்கு நடைமுறை சாத்தியமில்லை. என்றாலும் முடிந்த வரை முயற்சிக்கிறார் புதின். முடிந்தவரை என்றால்? பிரிந்த நாடுகளின் கொஞ்சூண்டு பகுதியை ரஷ்யாவுடன் இணைக்கும் வாய்ப்பு உண்டு என்று தெரிந்தாலே அதில் முழு மூச்சுடன் இறங்கிவிடுகிறார்/// இப்படி எழுதியிருப்பதும் ‘தமிழ் இந்து’ தான். அதாவது சோவியத் யூனியன் பிரிவை ஏற்க முடியாத புதின், பிரிந்து போன நாடுகளை ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ள கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவற விடுவதில்லை. அதனால் அது உக்ரைனை [கிரீமியாவை] அபகரித்துக் கொள்ள, ரஷ்யாவின் அதிகாரம் விரிவடைவதை விரும்பாத, மக்கள் அனைவரும் சம உரிமையுடன் வாழ்வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கா ஜனநாயகம் பரவ வேண்டும் எனும் உயரிய நோக்கத்தில் உக்ரைன் பிரச்சனையில் தலையிடுகிறது. இது தான் ‘தமிழ் இந்து’வின் பார்வை. இது உண்மை தானா?
ஒரு தேசிய இனத்துக்கு மொழி அடிப்படையான ஒன்று. உக்ரைனிய மொழி தனி மொழியா? அதை தனி மொழியாக ஏற்காமல் ரஷ்ய மொழியின் வட்டார வழக்கு மொழியாக கருதும் ரஷ்ய தேசியவாதிகள் இன்னும் உண்டு. தமிழ்நாட்டில் சென்னைத் தமிழ் என்றொரு வட்டார வழக்கு உண்டு. தமிழுடன் உருது மொழியை கலந்து பேசிய சென்னை உழைக்கும் மக்களின் மொழியே சென்னைத் தமிழ் என்று வழங்கப்படுகிறது. இது பார்ப்பனியத்தால் இழிவுபடுத்தப்படுகிறது. தென் மாவட்டங்களிலிருந்து முதன்முறையாக சென்னை செல்லும் யாரும் சென்னைத் தமிழை புரிந்து கொள்ள சிரமப்படுவார்கள். இது போல ரஷ்ய மொழியுடன் உக்ரைனுக்கு இன்னொரு பக்கம் இருக்கும் போலிஷ் மொழியை கலந்து பேசப்படுவது தான் உக்ரைனிய மொழி. 1917 புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட சோசலிச அரசு தான் ரஷ்ய வட்டார வழக்கு மொழியாக இருந்த மொழியை தனிமொழியாக அங்கீகரித்து தனி வரிவடிவமும் ஏற்படுத்திக் கொடுத்தது.
உக்ரைன் எனும் நாடு வரலாற்றில் எப்போது உருவானது? 1917 புரட்சிக்கு முன்னர் உக்ரைன் என்றொரு நாடு இருக்கவே இல்லை. இன்றைய உக்ரைனின் கிழக்குப் பகுதி ஜார் ரஷ்யாவின் கீழும், மேற்கின் ஒரு பகுதி ஆஸ்திரியாவின் கீழும், இன்னொரு பகுதி ஹங்கேரியின் கீழும் இருந்தன. புரட்சிக்குப் பிறகான சோசலிச அரசு அந்தப் பகுதிகளில் பேசப்படும் ரஷ்ய வட்டார வழக்கு மொழியின் அடிப்படையில் மூன்று பகுதிகளையும் ஒன்றிணைத்து உக்ரைன் எனும் தனி நாடாக ஏற்படுத்தி, அதற்குறிய அந்தஸ்துடனும், தனி மொழியுடன் கூடிய தேசிய இனமாகவும் அங்கீகரித்தது. உக்ரைன் எனும் சொல்லுக்கு எல்லைப்புற நாடு என்பது பொருள்.
1991 ல் உக்ரைன் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தனி நாடான பிறகு சில ஆட்சிக் கலைப்புகளைக் கண்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கூட மேற்குலக ஆதரவுடன் நடந்த கலகத்தில் அமெரிக்க ஆதரவாளரான டிமோசென்கோ பிரதமராக்கப்பட்டார். இது வரையில் உக்ரைனில் நடந்த எந்த குழப்பத்திலும் ரஷ்யா தலையிடவே இல்லை. சோவியத் யூனியனை மீண்டும் உருவாக்க கிடைக்க எந்த வாய்ப்பையும் ரஷ்யா தவற விடுவதில்லை என ‘தமிழ் இந்து’ எழுதியிருப்பது உண்மையானால் இந்த நிகழ்வுகளிலெல்லாம் ஏன் ரஷ்யா வாய்ப்பை தவற விட்டது?
உண்மையில், டிமோசென்கோ பிரதமரான பிறகு தான் பிரச்சனைகள் தொடங்குகின்றன. அமெரிக்க ஆதரவாளரான டிமோசென்கோவுடன் அமெரிக்க இராணுவ தளத்தை கிரீமியாவில் அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை தொடங்குகிறது அமெரிக்கா. இதை ரஷ்யா விரும்பவில்லை. இந்த இடத்தில் முக்கியமான இன்னொரு ‘பிளாஷ் பேக்’கை பார்த்து விடுவது பொருத்தமானது.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் அச்சு நாடுகள், நேச நாடுகள் என்று உலகம் இரண்டாக பிரிந்திருந்தது. இது போலவே அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போர் காலகட்டத்திலும் நோட்டோ நாடுகள், வார்ஷா நாடுகள் எனப் பிரிந்திருந்தன. நோட்டோவை அமெரிக்காவும், வார்ஷாவை சோவியத் யூனியனும் வழிநடத்தின. இதன்படி அந்தந்த நாடுகளைக் காக்கும் பொருட்டு நோட்டோ நாடுகளில் அமெரிக்காவும், வார்ஷா நாடுகளில் சோவியத் யூனியனும் தங்கள் இராணுவங்களை நிறுத்தியிருந்தன. சோவியத் யூனியனின் கடைசி அதிபர் கோர்ப்பச்சேவும் அமெரிக்க அதிபர் ரீகனும் செய்து கொண்ட ‘சுய ஆயுதக் களைவு’ ஒப்பந்தத்தின் படி வார்ஷா நாடுகளில் நிலை கொண்டிருந்த இராணுவத்தை சோவியத் யூனியன் விலக்கிக் கொண்டது. மட்டுமல்லாது அணு ஆயுதங்களை யூரல் மலைகளுக்கு அப்பால் நகர்த்தியது. முறைப்படி வார்ஷா கூட்டமைப்பு கலைக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா எப்படி நடந்து கொண்டது? நோட்டோ கலைக்கப்படவில்லை, நோட்டோ நாடுகளில் நிலை கொண்டிருந்த அமெரிக்க இரானுவம் சில நாடுகளிலிருந்து விலகினாலும் பல நாடுகளில் தொடர்ந்து இருந்து வருகிறது, மட்டுமல்லாது, முன்னாள் வார்ஷா நாடுகளான போலந்து, ஸெகோஸ்லாவாக்கியா, ருமேனியா போன்ற நாடுகளையும் நோட்டோவில் சேர்த்துக் கொண்டு இராணுவ தளங்களை நிறுவி வருகிறது. இதுமட்டுமின்றி முன்னாள் சோவியத் குடியரசுகளான எஸ்டோனியா, லாட்வியா போன்ற நாடுகளையும் இணைத்துக் கொண்டு அந்த நாடுகளில் அணு ஆயுதங்களைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது அமெரிக்கா. இதன் தொடர்ச்சியாகத் தான் கிரீமியாவில் இராணுவ தளம் அமைக்கும் அமெரிக்காவின் முயற்சிகளை பார்க்க வேண்டும்.
அமெரிக்காவின் இந்த அத்துமீறல்களை விரும்பாத ரஷ்யா தனது காலடி வரை வந்து விட்ட அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கைகளை தொடங்கியது. முதல்கட்டமாக உக்ரைனுக்கு வழங்கிவந்த எரிவாயுவின் விலையை உயர்த்தியது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் குளிர் பிரதேச நாடுகள் என்பதால் கணப்பு அடுப்புகள் இல்லாமல் இருக்க முடியாது. கணப்பு அடுப்புகளில் பயன்படுத்தப்படும் எரிவாயுவுக்கு ரஷ்யாவையே பெரிதும் சார்ந்திருக்கின்றன மேற்கு ஐரோப்பிய நாடுகள். இந்த எரிவாயுவை முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கு மானிய விலையில் வழங்கி வந்தது ரஷ்யா. அப்படி மானிய விலையில் எரிவாயு பெற்று வந்த நாடுகளில் உக்ரைனும் ஒன்று. இந்த மானியத்தை ரத்து செய்த ரஷ்யா உக்ரைனும் சர்வதேச அளவில் விற்கும் சந்தை விலையையே உக்ரைனும் தர வேண்டும் என்று வற்புறுத்தியது. இதனால் பிரதமர் டிமோசென்கோ அமெரிக்க உதவியை நாட அமெரிக்கா ஐரோபிய யூனியனைக் கைகாட்டியது. இந்த நெருக்கடி முற்றியதோடு ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளும் சேர்ந்து கொள்ள, அடுத்து வந்த தேர்தலில் ரஷ்ய ஆதரவு பெற்ற யனுகோவிச் மீண்டும் வெற்றி பெற்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது என்று எற்கனவே இருந்த டிமோசென்கோ அரசு எடுத்திருந்த முடிவின்படி ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிபந்தனைகளை ரஷ்ய ஆதரவு யனுகோவிச் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். இதனால் உலக நியதிப்படி[!] கலகக்காரர்களால் கலகம் மூண்டு யனுகோவிச் தூக்கி வீசப்பட்டார். இது தான் உக்ரைன் பிரச்சனையின் மையம்.
இப்போது ‘தமிழ் இந்து’ எழுதியிருப்பதோடு ஒப்பிட்டுப் பாருங்கள். எவ்வளவு வன்மத்தோடும், எவ்வளவு விசமத்தனத்தோடும் அந்தத் தொடர் எழுதப்பட்டிருக்கிறது என்பது புரியும். ஏன் இப்படி எழுத வேண்டும்? வேறென்ன கம்யூனிச எதிர்ப்பு மனோபாவம் தான் காரணம். ரஷ்யா சீனா போன்றவை சோசலிச நாடுகள் அல்ல என்றபோதிலும் தங்களது கம்யூனிச எதிர்ப்பை தீர்த்துக் கொள்ள ரஷ்யா சீனாவை கம்யூனிசத்தின் குறியீடாக பாவிக்கின்றன. அதனால் தான் இது போன்ற அபத்தங்களை கூசாமல் அவிழ்த்து விடுகின்றன. தனக்கு உகந்த முறையில் மட்டுமே உலகம் இயங்க வேண்டும் என்று கருதிக் கொண்டு எந்த நியதிக்கும் உட்படாமல் அடாவடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்காவை வெட்கமின்றி தாங்கிப் பிடிக்கும் ‘தமிழ் இந்து’ வேறு என்ன தான் செய்யாது?
உக்ரைன் பிரச்சனையின் வேறு சில விளைவுகளை அடுத்த தொடரில் பார்ப்போம்.
இத் தொடரின் முந்திய பகுதி
1. உக்ரைன் உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’
2. பொய் சொல்லக்கூட தெரியாத தமிழ் இந்து நாளிதழ்
தமிழ் இந்து அமெரிக்க அடிவருடினா நீ யாருய்யா. ரஷ்ய அடி அடி வருடி தானே நீ.
ஐயா,
ரஷ்யா குறித்த என்னுடைய கருத்தை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். உங்கள் கருத்தை நேரடியாக சொல்லலாமே. தவிரவும் அமெரிக்க அடிவருடித் தனத்துக்கு ஆதாரங்கள் தந்துள்ளேன். நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள்?
கட்டுரை குறித்த உங்கள் எதிர்வினை என்ன? எங்கே கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் பார்ப்போம்.
Hindu called as Lett News paper , socialist one.