மூடு டாஸ்மாக்கை!

makkal athikaram 3

குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும்!

கெடு விதிப்போம் ஆகஸ்டு 31!

அருகதை இழந்தது அரசுக் கட்டமைப்பு!

இதோ, ஆள வருகுது மக்கள் அதிகாரம்!!

அன்புடையீர்! வணக்கம்,

தமிழகத்தில் பெண்கள் தாலியறுக்க, மாணவர்கள், இளைஞர்கள் வாழ்வை இருட்டாக்க அரசே டாஸ்மாக் சாராயக் கடைகளை நடத்தி வருகிறது. எங்கள் ஊருக்கு சாராயக் கடை வேண்டாம் என மனுக் கொடுத்தோம், மன்றாடினோம், பட்டினி கிடந்தோம், சாராயக் கடைக்கு பூட்டு போட்டோம், கல்லால் அடித்தோம். ஆனால், போலீசு காவலோடு மீண்டும் சாராயக் கடைகளைத் திறந்து நடத்துகிறது புரட்சித் தலைவி அம்மா அரசு. உங்களால் என்ன செய்ய முடியும் எனச் சவால் விட்டு பெரும்பான்மை மக்களை நாயினும் கீழாக நடத்துகிறது போலீசும், அதிகார வர்க்கமும்.

மரத்தடியில் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பறை வேண்டும், படிப்புச் சொல்லிக் கொடுக்க வாத்தியார் வேண்டும், பச்சிளம் குழந்தைகளைக் காக்க ஆஸ்பத்திரி வேண்டும், உயிர் காக்கும் மருந்து வேண்டும், குடிக்க எங்க ஊருக்கு தண்ணீர் வேண்டும், சாலை வேண்டும், தெரு விளக்கு வேண்டும் எனக் கேட்கிறோம். ஆனால், இவை எதையும் செய்ய வக்கற்ற அரசாங்கம், டாஸ்மாக் வேண்டாம் என சொல்லும் மக்களை மிரட்டுவதுடன், சாராயக் கடையை வைத்தே தீருவேன் என நிற்கிறது.

மக்களுக்கு வேலையில்லை, போதிய சம்பளம் இல்லை, விலைவாசி உயர்வு, நெல் கரும்புக்கு போதிய விலை இல்லை, உரிமைகளற்ற கூலிகளாக தொழிலாளர்கள், மொத்தத்தில் உழைத்து வாழும் பெரும்பான்மை கோடிக்கணக்கான மக்களுக்கு உத்திரவாதமான வாழ்க்கை இல்லை. இது தான் மத்திய மாநில அரசுகளின் யோக்கியதை. இவற்றிலிருந்து மக்களின் கோபத்தை திசை திருப்புவது டாஸ்மாக் குடி. டாஸ்மாக் அரசுக்கு வருமானத்தை மட்டுமல்ல, மக்களை போராடாமல் ஆட்டு மந்தைகளாக்கி வைக்கவும் உதவுகிறது.

சமூக விரோதக் கும்பல் கள்ளச் சாராயம் விற்பதை, கஞ்சா விற்பதை, விபச்சாரம் செய்வதை நாம் ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம், அடித்து விரட்டுவோம் அல்லவா! மக்களுக்கு கேடு என்பதால் தானே அதைச் செய்கிறோம். அதையே சட்டப்படி அரசு செய்தால் ஏன் அனுமதிக்க வேண்டும்?

நாட்டு மக்களை, இந்த நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கத்தானே நாம் ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளோம். நம் வரிப் பணத்தில் அவர்களின் உல்லாச ஊதாரி வாழ்க்கைக்காக லட்சலட்சமாய் கொட்டிக் கொடுக்கிறோம். ஆனால், இவர்கள் ஆங்கிலேய ஆட்சியை விட மிகக் கொடுமையாக மக்களிடம் நடந்து கொள்கிறார்கள்.

ஆற்று மணலை, நிலத்தடி நீரை, கடலோர தாது மணலை, கிரானைட் மலைகளை கொள்ளை அடிப்பது தானே இந்த அரசின் கொள்கை. விவசாய நிலங்களைப் பிடுங்கி ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பலிடம் கொடுப்பதும், கல்விக் கொள்ளையர்களோடு கூட்டு சேர்ந்து பெற்றோர்களிடம் கட்டணக் கொள்ளை அடிப்பதும் தானே இந்த அரசின் கொள்கை. பன்னாட்டு கம்பனிகள் மீத்தேன் எடுக்க விவசாயத்தை அழிப்பேன் என்பதும், மக்களின் குடி கெடுக்க சாராயம் விற்றே தீருவேன் என்று அரசு அதிகாரத்தை செயல்படுத்துவதை நாம் அனுமதிக்க முடியுமா? மக்களுக்கு எதிரியாக மாறியதுடன், ஆள அறுகதையற்ற இவர்களை தூக்கி எறியாமல் தீர்வு எப்படி கிடைக்கும்? வந்து வந்து போகும் தேர்தல் இதற்கு தீர்வு அல்ல.

தாய்மார்களின் தாலி அறுத்துக் கொண்டு தப்பித்து ஓடும் திருடனை விரட்டிப் பிடித்து, சுற்றி வலைத்து, கட்டி வைத்து அடிப்பதும், திருட வரும் திருடர்களுக்கு ஈரக்குலை நடௌக்கத்தை ஏற்படுத்துவதும் சரி என்றால், அதுபோல அனைவரும் வேண்டாம் எனச் சொல்லும் சாராயக் கடையை நடத்தவே விடாமல் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்த வேண்டும்.

அனைத்துக் கட்சிகளின் அறிக்கை, பல்வேறு அமைப்புகளின் போராட்டங்களால் டாஸ்மாக்கை மூட முடியவில்லை. அடையாளப் போராட்டத்தைக் கண்டு அரசு மூடப்போவதில்லை. ஊரில் அனைத்து மக்களும் கையெழுத்திட்டு ஆகஸ்ட் 31 கெடு, அதற்குள் மூடிவிடு. இல்லையெனில் அடுத்த நாள் கடையை நடத்த விடக் கூடாது!

டாஸ்மாக் கடை முன்னால் பெரிய பள்ளாம் வெட்டுங்கள், பெண்கள் தினமும் குப்பைகளை கொட்டுங்கள், மாணவர்கள்இளைஞர்கள் கடையிலேயே ஒண்ணுக்கு அடியுங்கள், கடையை முற்றுகையிடுங்கள். கைது செய்தால் வெளியே வந்து மீண்டும் முற்றுகையிடுங்கள். அப்பவும் இந்த அதிகாரிகளுக்கு திமிரு அடங்கவில்லை என்றால் டாஸ்மாக் கடையை நிரந்தர கழிப்பிடமாக்குங்கள். டாஸ்மாக் சரக்கை இறக்க விடாமல் லாறியை மறியுங்கள். ஊருக்குள் விடாதீர்கள். இப்படியாக அதிகாரத்தை மக்கள் தாங்களே கையிலெடுத்து அமல்படுத்த முடியும்.

டாஸ்மாக்கால்னமது வாழ்க்கை பறி போவதற்கு எதிராக நாம் தான் போராட வேண்டும். நமது வயிற்றுப் பசிக்கு நமது கையால் சாப்பிட்டால் தான் பசியடங்கும். நமது உரிமைக்காக நாமே அதிகாரம் செலுத்த வேண்டும். அது தான் மக்கள் அதிகாரம்.

டாஸ்மாக்கை மூடு! மக்கள் அதிகாரத்தை நிறுவு!

தடுக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே!

மூடு கடையை, எவன் வருவான் பார்ப்போம்!

நம்ம ஊரில் இனி டாஸ்மாக் கிடையாது.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

12 thoughts on “மூடு டாஸ்மாக்கை!

  1. அன்பின் செங்கொடி,வணக்கம் .தமிழக அரசுக்கு , இன்று மிகப்பெறும் வருமானத்தை ஈட்டித் தருவது டாஸ்மாக் மட்டுமே.போக்குவரத்து ,மின்சாரம் போன்ற மற்ற பல துறைகள் நட்டத்திலும், நிதிநெருக்கடியிலும் சிக்கித் தவிக்கின்றன.இந்நிலையில், டாஸ்மாக்கை மூடிவிட்டு மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தினால்,ஏற்படக்கூடிய மிகப்பெரும் நிதியிழப்பை எவ்வாறு அரசு சமாளிக்கும்? தினம் குடித்து பழகிய பலரும் , திடீரென்று மதுக்கடைகளை மூடினால் ,பலர் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்களா ? உலகின் பெரும்பாலான நாடுகளில் மது உண்டு. இங்கு மட்டும் ஏன் எல்லா கட்சியினரும் ,டாஸ்மாக்கை மட்டுமே மையப்படுத்தி போராடுகின்றனர்? நன்றி.

  2. நண்பர் வர்தன்,

    டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடிமட்டும் தான். கூடவே, மக்களின் சொல்லொணா துயரங்கள். ஆனால் வைகுண்டராஜன் தாது மணல் கொள்ளையடிப்பதன் மூலம் அரசுக்கு ஏற்படுத்திய இழப்பு 60 லட்சம் கோடி. மட்டுமல்லாமல் பல்நூறு பேருக்கு சிறுநீரகக் கோளாறு கேன்சர். அரசு தன் வருவாயைப் பெருக்க என்ன செய்ய வேண்டும்?

    குடியை நிருத்தினால் யாரும் செத்துப் போய்விட மாட்டார்கள். சாராயத்துக்கு அடிமையாகி விட்டவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு சில வாரங்கள் பிடிக்கும் அந்த சில வாரங்கள் கடினமாக இருக்கும் அவ்வளவே. சாராயக்கடை திறந்து வைப்பதன் மூலம் செத்தவர்கள் எவ்வளவு பேர் கணக்கு தெரியுமா உங்களுக்கு?

    எல்லா நாடுகளிலும் சாராயம் இருக்கிறது. கௌடில்யன் அன்றே சொல்லி வைத்திருக்கிறான். மக்களைஏதாவது போதையில் ஆழ்த்தி வைத்திருந்தால் தான் அவர்களை அடிமையாகவே, ஆள்பவர்களை நோக்கி கேள்வி எழுப்பாத அடிமைகளாகவே வைத்திருந்து ஆள முடியும் என்று. தவிரவும் எந்த நாட்டிலும் அரசே ஊற்றிக் கொடுப்பதில்லை. பள்ளிக்கூடங்களை விட நூலகங்களை விட சாராயக் கடைகளை அதிகம் திறந்ததில்லை. மேற்கூரை இல்லாத பள்ளிக் கூடங்கள் இருக்கும் நாட்டில் எலைட் பார்களைத் திறப்பதில்லை. இங்கு நடக்கிறது.

    இப்போது சொல்லுங்கள். மக்களை ஆள்வதற்கு என்ன தகுதி இருக்கிறது இவர்களுக்கு?

  3. அன்பின் செங்கொடி,வணக்கம் .விரிவாக பதில் அளித்ததற்கு நன்றி.அரசாங்கம் மாற்று வருமானத்திற்கு என்ன செய்யவேண்டும் என்ற தீர்வை ,தாங்கள் முன்வைக்கவில்லை.வைகுண்டராஜனை பற்றி தாங்கள் குறிப்பிட்டது ஏன் ? வருமானத்திற்காக அரசாங்கமே மணல் மாபியாவில் ஈடுபடட்டும் என்று கூற வருகிறீர்களா? மதுவும் விற்காமல், இயற்கையையும் ( மணல் ,கிரானைட் ) சுரண்டாமல் முப்பதாயிரம் கோடி வருமானத்திற்கு மாற்றுவழி இருந்தால் கூறவும்.நன்றி.

  4. நண்பர் வர்தன்,

    நான் கூறவந்தது என்னவென்றால், இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் கொள்ளைக் கும்பல்களை தடுத்து நிறுத்தினால், வளம் பாதுகாக்கப்படுவதோடு, வரி ஏய்ப்பு செய்த பலலட்சம் கோடி அரசுக்கு கிடைக்கும். சில ஆயிரம் கோடிகளுக்காக சாராயக் கடைகளைத் திறந்து மக்களை சீரழிக்க வேண்டியதில்லை..அரசின் வருமானத்தில் பெரும்பகுதி பெரு முதலாளிகளுக்கே சலுகைகளாக போய்ச் சேருகிறது. இவைகளை முறைப்படுத்தினாலே மக்கள் மீது சுமத்தப்படும் அத்தனை மறைமுக வரிகளையும் நீக்கி விடலாம்.

  5. Be proud of tamilan am also want to join ur group but I don’t know how to get membership to makkal athikaram

  6. வணக்கம் தினேஷ்,

    உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்களை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்

  7. அன்புடையீர் வணக்கம் ……….
    எங்கள் ஊர் .. .. .. .. ..

    நண்பரே,
    மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.

  8. தோழர்க்கு அன்பு வணக்கம்

    தங்களின் போராட்டங்கள் ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் , பெண்களின் நம்பிக்கையாகவும் , கேடு விளைவிக்கும் அரசுக்கு எதிராகவும் இருப்பது மகிழிச்சி அளிக்கிறது

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s