அதியமானும் சுதந்திரமும்

last british troops leave from india feb 1948 mumbai
1948 பிப்ரவரியில் சகல மரியாதையுடன் வழியனுப்பபடும் பிரிட்டீஷ் படைகள்

அண்மையில் 69 ஆவது முறையாக, ஆட்சி மாற்றத்தை சுதந்திரம் எனும் தவறான பொருளில் கொண்டாடினார்கள். [இதைவிட மென்மையாக இந்த அயோக்கித்தனத்தை குறிப்பிடவே முடியாது] இப்படி கூறுபவர்களை, தமிழ் கூறும் மெய்நிகர் உலகின் பிரபல தாராளவாதியான அதியமான் தன்னுடைய முகநூல் நிலைத் தகவல் ஒன்றில் கோபத்துடன் கண்டித்திருந்தார்.

போலி சுதந்திரம், etc என்றெல்லாம் அரத பலசான மார்க்சிய டைலாக்கை இன்னும் பேசும் அன்பர்களுக்கு :

சுதந்திரமே பெற முடியாமல் இன்னும் ஆங்கிலேயர் ஆட்சி தொடர்ந்திருந்தால், இன்று அனுபவிக்க முடிந்த அடிப்படை உரிமைகளை கூட பெற்றிருக்க முடியாது. நீங்க படித்து கூட இருக்க முடியாது. இட ஒதுக்கீடு, தலித் எழுச்சி எல்லாம் சாத்தியாமாகியிருக்காது….

காமராஜர் முதல்வராகி கல்வி தொண்டு செய்திருக்க முடியாது.

வறுமையை இந்த அளவு கூட குறைத்திருக்க முடியாது.

—————

சுதந்திரத்திற்க்காக போராடி தியாகம் செய்தவர்கள் எல்லோரும் லூஸுகள் என்று சொல்லாமல் சொல்லும் அறிவீலிகள்…

முகநூல் கணக்க இலவசமா, ‘சுதந்திரமா’ பயன்படுத்த இந்த சுதந்திரம் தான் சாத்தியமாக்கியது என்று உணராத அறிவீலிகள்…..

அவர் பொங்கியிருப்பதை இலையில் கொட்டி காண்பித்து விடலாம் என எண்ணியதன் விளைவே இந்தக் கட்டுரை. என்ன, கொஞ்சம் தாமதமாகி விட்டது. பொருத்தருள்க.

47 ஆகஸ்ட் 15 ஐ சுதந்திரம் என்று கூறாமல் ஆட்சி மாற்றம் என்று ஏன் கூறுகிறோம் என்பதை பலமுறை கூறியிருந்த போதிலும் மீண்டும் ஒருமுறை சுருக்கமாக கூறிவிடலாம். இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவால் குவிந்த உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தவும், தேவைப்படும் மூல வளங்களைக் கொள்ளையிடவும் உலகின் பெரும்பகுதியை தங்களின் காலனி நாடாக மாற்றினார்கள். அதில் இந்தியாவும் ஒன்று. தங்களின் கலனி நாட்டு மக்களை தங்களின் நோக்கங்களுக்கு இசைவாக ஆட்சி செய்தார்கள். தேவைப்படும் இடங்களில் கொடூரமாக ஒடுக்கியும், தேவைப்படும் இடங்களில் சலுகைகள் வழங்கியும். இதன் தொடர்ச்சியில் நெருக்கடிகள் முற்றி காலனி நாடுகளை இனிமேலும் வைத்திருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அந்த நெருக்கடிகளை பொதுவாக மூன்றாக வகைப்படுத்தலாம்.

  1. 1917க்குப் பிறகு ரஷ்யாவில் லெனின் தலைமையிலான சோவியத்களில் அரசு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் கொண்டிருந்த அக்கரையும் செயல்பாடுகளும் உலக மக்களை அரசு குறித்த கண்ணோட்டத்தை மாற்றச் செய்தது. இதன் விளைவாக இந்தியாவில் காந்தியின் ‘அகிம்சை’யை மீறி மக்கள் போராட்டங்கள் வெடித்தன. இதற்கு மேலும் காந்தியையும் காங்கிரசையும் கேடயமாக பயன்படுத்த முடியாத நிலை மெல்ல ஏற்பட்டது.
  1. சூரியன் மறையாத பரந்து விரிந்த காலனி நாடுகளை நூற்றாண்டுக் கணக்காக மக்களின் சமூக பண்பாட்டு நலன் சிறிதுமின்றி ஆண்டதன் விளைவாக மக்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே விரிந்த இடைவெளி, உலகப் போர்களால் ஏற்பட்ட பொருளாத நெருக்கடி, போன்றவற்றால் பல்வேறு நாடுகளை தொடர்ந்து நிர்வாகம் செய்ய முடியாதபடி முற்றிய முரண்பாடுகளால் காலனி நாடுகள் சுமையாகிப் போனது.
  1. வளர்ந்து வரும் பொருளாதார வல்லரசாகவும், புதிய ஏகதிபத்திய தலைமையாகவும் உருவெடுத்த அமெரிக்கா உலகை தன் மதிப்பீட்டின்படி மறுபங்கீடு செய்ய இங்கிலாந்தை நெருக்கியது.

ஆகிய இந்த மூன்று முதன்மையான நெருக்கடிகளால், அந்தந்த நாடுகளில் தங்கள் உருவாக்கிய தலைமைகளிடம் ஆட்சியை மாற்றிக் கொடுத்து விட்டு தங்கள் நோக்கங்களை காப்பாற்றிக் கொண்டார்கள். அதாவது, என்ன நோக்கங்களுக்காக காலனி நாடுகளை ஏற்படுத்தினார்களோ அந்த மூல வளங்கள், சந்தைக்கு பங்கம் வராதவாறு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டு நாடுகளை விட்டு வெளியேறினார்கள். இன்று அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் பல்வேறு வர்த்தக, பொருளாதார, இராணுவ ஒப்பந்தங்கள் மூலம் நாட்டை மறுகாலனியாக்கி தங்கள் கொள்ளையைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதை சுதந்திர நாடு என்று கூறுவதா? மறுகாலனி நாடு என்று கூறுவதா? இல்லை இந்தியா சுதந்திர நாடு தான் என்றால் யாருக்கு சுதந்திரம்? அல்லது சுதந்திரம் என்பதன் பொருள் என்ன?

இனி அதியமானின் பொங்கலை பார்க்கலாம், \\\இன்னும் ஆங்கிலேயர் ஆட்சி தொடர்ந்திருந்தால், இன்று அனுபவிக்க முடிந்த அடிப்படை உரிமைகளை கூட பெற்றிருக்க முடியாது. நீங்க படித்து கூட இருக்க முடியாது/// இதில் அவர் சொல்ல வருவது என்ன வென்றால், 47ஐ நீங்கள் ‘சுதந்திர’மாக கொண்டாடவில்லை என்றால் வெள்ளை ஆட்சியை விரும்புகிறீர்கள் என்று பொருள் என்பதைத்தான் தேசபக்தியை குழைத்து கூறுகிறார். எங்கோ கேட்டது போல் இருக்கிறதா? “நாங்கள் நடத்தும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் நீங்கள் எங்களோடு இல்லையென்றால் எதிரிகளோடு இருக்கிறீர்கள் என்பது பொருள்” என்று பயங்கரவாதி புஷ் கூறியது தான். அதெப்படி இந்தியா பெற்றது விடுதலை இல்லை என்றால் அது வெள்ளை ஆட்சியை விரும்புவதாக அர்த்தப்படுமா? அல்லது அதரப் பழசான ஏதோவொரு மார்க்சியவாதி வெள்ளை ஆட்சியை விரும்புவதாக அதியமானிடம் அசரீரியாக சொல்லிவிட்டாரா? அதியமான் தான் தெளிவிக்க வேண்டும்.

இன்று அனுபவிக்க முடிந்த எந்த அடிப்படை உரிமை அன்றைய வெள்ளை ஆட்சியில் கிடைக்கவில்லை? ஆட்சியாளர்கள் மாறியிருக்கிறார்களே தவிர ஆட்சி மாறவில்லை. சாராயக் கடைகளுக்கு எதிராக போராடும் மாணவர்களையும் மக்களையும் குண்டாந்தடியால் கவனித்து விட்டு குடிப்பவர்களுக்கு காவல் நிற்கிறதே அரசு. இது ஒன்றே சொல்லிவிடவில்லையா எது அடிப்படை உரிமை? என்பதை, ஏன் அது அடிப்படை உரிமையாக இருக்கிறது என்பதை. ஏன் இந்த அரசு குடிப்பதை அடிப்படை உரிமையாகவும், சாராயக் கடையை எதிர்த்தால் அதை சட்டவிரோதம் என்றும் கருதுகிறது? தமிழ்நாடு மாநில அரசில் மட்டுமல்ல, அடிப்படையில் எல்லா அரசுகளுமே தன் மக்கள் போதையில் வீழ்ந்து கிடப்பதைத் தான் விரும்புகிறது. சாராயம் மட்டும் தான் போதையா? கலை, விளையாட்டுகள் தொடங்கி மதங்கள் வரை அரசுகள் பல்வேறு போதை ஊக்கிகளை போற்றிப் பாதுகாத்து. வளர்த்து வருகின்றன. அர்த்தசாஸ்திரம் எழுதிய கௌடில்யன் தொடக்கம் சீனாவின் அபினிப்போர் ஈறாக உலகின் வரலாற்றுப் பக்கங்களில் இதற்கு ஏராளம் ஆதாரங்களுண்டு. அரசு என்றால் என்ன என்பதை ஐயம்திரிபற தன் குடிமக்கள் தெரிந்து கொண்டுவிடக் கூடாது. தெரிந்து அரசுக்கு எதிராக யாரும் திரண்டு விடக் கூடாது என்பது தான் எந்த ஒரு அரசுக்கும் விருப்பமாக இருக்கிறது. இப்படியான விருப்பத்தைக் கொண்டிருக்கும் அரசுகள் எவற்றை அடிப்படை உரிமைகளாக கருதும்?

அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தால் அடிப்படை உரிமை என்ன, மக்களின் உயிர் வாழும் உரிமையைக் கூட அந்த அரசு பறித்தெடுக்கும். இதைத்தான் அன்றைய ஆங்கில அரசும் செய்தது இன்றைய மோடி அரசும் செய்கிறது, இதில் எங்காவது அடிப்படை உரிமைகள் எட்டிப் பார்க்கின்றனவா? ‘மருமகளை மயக்கிய மாமனார்’ என்று நீலப்பட சுவரொட்டியை சுதந்திரமாக ஒட்டலாம். ஆனால், ‘69 ஆண்டுகளாகியும் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வக்கற்ற அரசு ஆளும் அருகதையை இழந்து விட்டது’ என்று சுவரொட்டி ஒட்டினால் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் போட்டு உள்ளே அடைக்கிறது. என்றால் இந்த அரசுக்கு எது அடிப்படை உரிமை? எது உரிமை மீறல்? இதைத்தானே ஆங்கிலேயனும் செய்தான். அது அன்னிய ஆட்சி, இது அய்ம்பத்தாறு இன்ச் ஆட்சி என்று கூறுவது எந்த அளவுகோலை வைத்து?

\\\நீங்க படித்து கூட இருக்க முடியாது/// இப்படி அடித்து விளையாடுவது தேசபக்த பழங்களுக்கு வாடிக்கை தான். ஆனால் உண்மை வேறல்லவா? இருநூறு ஆண்டுகளா? ஈராயிரம் ஆண்டுகளாக மக்களை படிக்க விடாமல் தடுத்து வைத்திருந்தது யார்? பார்ப்பனியக் கொடுங்கோன்மையிலிருந்து கொஞ்சமேனும் மீட்டுக் கொண்டு வந்தது ஆங்கிலேயனல்லவா? குலக் கல்வியை, குடுமிக் கல்வியை மாற்றி மெக்காலே கல்வி முறையை புகுத்தியதால் தானே கொஞ்சமேனும் மக்கள் படிக்க முடிந்தது. சரஸ்வதி எங்கள் சிண்டுக்குள் தான் படுத்துக் கிடப்பாள், அவளை அவிழ்த்து விடமாட்டோம் என்று கயிற்றை இறுக்கியவர்களை, நிர்வாகத்துக்கு ஆள் தேவை என்று மக்கள் படிப்பதற்கு தொடக்கப் புள்ளியை ஏற்படுத்தியது ஆங்கிலேயன் தான். ஏன் ஆங்கில ஆட்சியில் படித்தவர்கள் எல்லாம் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு பொடிநடையாய் வெள்ளைக் காலனிக்கு வெளியில் சென்று கற்று வந்தார்களா? யார் மக்களுக்கு கல்வி வழங்கியது என்பது ஒருபுறம் இருக்கட்டும், எது கல்வி?

தான் கொண்டுவந்த கல்வியே ஆனாலும் ஆங்கிலேயென் இந்திய விடுதலை போராட்ட வரலாற்றையா பாடமாக வைத்தான்? எதை கல்வியாக கொடுக்க வேண்டும் என்பதில் ஆங்கிலேயனுக்கு ஒரு இலக்கணம் இருந்தது. அந்த இலக்கணம் இன்று வரை மாறியிருக்கிறதா? ‘சுதந்திர’ இந்தியாவின் பாடத்திட்டத்தில் இந்தியாவின் முதல் விடுதலைப் போர் ‘சிப்பாய்க் கலகம்’  என்று தான் இன்றும் குறிக்கப்பட்டிருக்கிறது. பகத் சிங் பாராளுமன்றத்தில் குண்டு வீசியது எதனால்? பகத்சிங் காண விரும்பிய இந்தியா எது? பாடமாக வைக்குமா இன்றைய இந்தியா? தீரன் சின்ன மருதுவின் திருச்சி பிரகடனம் கூறுவது என்ன? பாடமாக வைப்பார்களா? இந்திய சுதந்திரம் என்றால் ஆங்கிலேயன் உருவாக்கிய காங்கிரசும் காந்தியும் தான். இதைத் தாண்டி ஊறுகாய் போல் வேறு சிலர். எது கல்வி என்பதில் ஆங்கிலேயனின் இலக்கணத்தை மில்லியேனும் மீறமாட்டேன் என்கிறார்களே ஏன்? ஏனென்றால் இருவரின் இலக்கணமும் வேறு வேறு அல்ல. இவர்கள் கூறும் சுதந்திரமும் மக்களுக்கானது இல்லை.

\\\இட ஒதுக்கீடு, தலித் எழுச்சி எல்லாம் சாத்தியாமாகியிருக்காது/// தேசபக்தி நெய் மண்டையில் உருகி வழிந்து கண், காதுகளை நிறைத்து விட்டது என்பதல்லாது, வேறென்ன கூறுவது? இட ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தியது யார்? சுதந்திரம் குறித்து பேசும் போது பார்ப்பனிய கொடுமையை பேசாமல் தவிர்க்க முடியாது. இத்தகைய அறிவுஜீவிகள் பெரியாரையும் பகத்சிங்கையும் பேசும் போது வெள்ளையனை ஆதரித்தார்கள் என்று கொளுத்திப் போடுவார்கள். இருவரும் சுதந்திரம் குறித்து ஒரே மாதிரியான கருத்தைக் கூறியிருக்கிறார்கள். அதிகாரத்தை வெள்ளையனிடமிருந்து எடுத்து பார்ப்பன பனியாக்களிடம் கொடுத்தால் அதற்குப் பெயர் சுதந்திரமாகுமா? என்று கேள்வி எழுப்பினார்கள். அன்று காங்கிரஸ் பெருந்தலைகள் அனைவரும் ஒன்று தீண்டாமையை தூக்கிப் பிடித்தவர்கள், அல்லது தீண்டாமையை மழுப்பியவர்கள். காந்தி ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஏன் ஹரிஜன் என புதுப்பெயர் சூட்டினார் என கேள்வி எழுப்பினால் அங்கு காந்தியின் தீண்டாமை பொக்கை வாய் காட்டும். இதற்கு எதிராக ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது தான் இடஒதுக்கீடு.

இந்தியா என்பது மேல்தட்டு பனியாக்கள் மட்டுமல்ல ஊடும் பாவுமாக இந்தியாவின் உயிராக இருப்பது ஒடுக்கப்பட்டவர்களே. கல்வி கற்றவர்கள் எனும் அடிப்படையில் பார்ப்பனர்கள் மட்டுமே வெள்ளை அரசின் நிர்வாகப் பதவிகளில் இருந்தார்கள். இந்தியாவின் பெரும்பான்மை மக்களை நிர்வாகத்தை விட்டு விலக்கி வைப்பது தன் ஆட்சிக்கு ஆபத்து என உணர்ந்த ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தது தான் இட ஒதுக்கீட்டு முறை. இதுமட்டுமல்ல மாநில ஆட்சி, நகராட்சி, தேர்தல் முறை என  பலவற்றை அறிமுகப்படுத்தி இந்தியர்களை அதிகாரத்தில் பங்கெடுக்க வைப்பதன் மூலம் மக்களின் விடுதலை எழுச்சியை தடுக்க நினைத்தான் வெள்ளையன். இவைகளையும் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தியது ஆதிக்கக் கும்பலே. ஆனாலும் வெகுசிலர் இதில் ஏறி வர முடிந்தது. இதன் இன்னொரு விளைவு தான் தலித் எழுச்சி.

என்று ஆதிக்க ஜாதி ஒடுக்குமுறை தோன்றியதோ அன்றே அதை எதிர்த்த எழுச்சிப் போராட்டமும் தோன்றி விட்டது. நாட்டுப்புற கதைப்பாடல் வடிவங்களில் அந்த வீரத்தை காணலாம். ஆனால் அவை அனைத்துமே பார்ப்பனியத்தால் செரிக்கப்பட்டன. வள்ளலார், நந்தன், வைகுந்தர் என அவரவர் வழியில் பார்ப்பனியத்தை எதிர்த்தவர்களெல்லாம் இன்று அவர்களின் போராட்ட வரலாறு நீக்கப்பட்டு கடவுள் போல வடிவமைக்கப்பட்டு விட்டனர். என்றாலும், நிலப்பிரபுத்துவ கொடுந்தளைகளிலிருந்து வெள்ளையர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாளித்துவ உற்பத்தி முறைகளும், இட ஒதுக்கீடு, கல்வி, நிர்வாகத்தில் பங்கு பெறும் வாய்ப்பு என அனைத்தும் இணைந்து தான் தலித் எழுச்சிக்கான சாத்தியத்தை அதிகப்படுத்தியது. ஆனால் அதியமான்களுக்கு இவைகளெல்லாம் தெரியாது என்று எடுத்துக் கொள்ள முடியுமா? அப்படிக் கொண்டால் அது மாத்திரைக் குறைவு தான்.

\\\காமராஜர் முதல்வராகி கல்வி தொண்டு செய்திருக்க முடியாது/// கல்விக் கண் திறந்தவர் என்று காமராஜர் நினைவு கூறப்படுவது ஓரளவுக்கு சரிதான். என்றாலும் அந்த கல்விப்பணியும், எளிமையும் எப்படி புரிந்து கொள்ளப்பட வேண்டும்? எந்த ஒன்றிலிருந்தும் அரசியலை உருவி விட்டுப் பார்த்தால் அது உணர்ச்சி மேலீட்டுக்குத் தான் வழி வகுக்கும். நிலம் சார்ந்த உற்பத்தி முறையோடு மக்களின் உற்பத்தி இருக்கும் வரை ஏட்டுக் கல்வி என்பது பிரதானமானதில்லை, அனுபவக்கல்வியே முதன்மையானதாக இருக்கும். இது மாற்றமடைந்து ஆலை சார்ந்த உற்பத்தி அதிகரிக்கும் போது அங்கு அனுபவக் கல்வியை விட ஏட்டுக்கல்வி அதாவது பள்ளிகளில் படித்து பட்டம் பெற்று வேலை செய்வது முதன்மையானதாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் பள்ளிக் கல்வியின் தேவை அதிகரிக்கும் போது அதை ஈடு செய்யும் விதத்தில் பள்ளிக்கல்வியை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். இந்த அவசியத்தை காமராஜர் முறையாகக் கையாண்டு மதிய உணவுத் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம் பள்ளிக் கல்வியை பரவலாக்கினார். இந்த அடிப்படையிலிருந்து தான் காமராஜரின் சாதனைகளை புரிந்து கொள்ள வேண்டும். சரி இதற்கும் ஆங்கிலேய காலனி ஆட்சிக்கும், ஆட்சி மாற்றத்துக்கும் என்ன தொடர்பு? வெள்ளை ஆட்சி தொடர்ந்திருந்தால் காமராஜர் இதை செய்திருக்க மாட்டாரா? அல்லது, மத்திய அரசின் நோக்கத்துக்கு, பன்னாட்டு முதலாளிகளின் தேவைக்கு எதிராக இருந்திருந்தாலும் இதைச் செய்திருப்பாரா? இப்படி பரிசீலித்துப் பார்ப்பது தான் சரியானது. அவ்வாறன்றி கமராஜரின் கல்விப் பரவலாக்கத்தின் பலனை ஆட்சி மாற்றத்துக்கு கொடுப்பது அறியாமை.

\\\வறுமையை இந்த அளவு கூட குறைத்திருக்க முடியாது/// இதைக் கண்டு எப்படி சிரிப்பது என குழப்பமாக இருக்கிறது. எந்த அளவு குறைத்திருக்கிறார்கள் வறுமையை? ஊட்டச்சத்து குறைவுள்ள குழந்தைகள் ஆப்பிரிக்க கண்டத்தை விட இந்தியாவில் அதிகம் என்று ஒரு அய்.நா அறிக்கை கூறுகிறது. அண்மையில் வறுமைக் கோட்டை அளக்க பைசா சுத்தமாக அலுவாலியாக்கள் கணக்கு கூறிய போது இந்திய மக்கள் அதன் மீது காறி உமிழ்ந்தார்கள். வீடில்லாமல் சாலையில் உறங்குபவர்கள் எத்தனை கோடி என்பது வல்லாரை சாப்பிட்டாலும் அதியமான்களின் நினைவில் நிற்பதில்லை. ஏழ்மை விகிதத்தை குறைத்திருக்கிறோம் என்று காட்டுவதற்காக அள்ளிக் கொட்டப்பட்டிருக்கும் புள்ளி விபரங்களே இந்திய வறுமையின் அளவை அம்பலப்படுத்துவதற்கு போதுமானது. அவ்வளவு ஏன்? ஆகஸ்டு 15ஐ தூக்கிப் பிடிப்பதற்காக அதியமான எழுதியிருக்கும் வாக்கியத்தை அசை பிரித்தாலே அதுவே சொல்லும் இந்திய வறுமை நிலையை. இந்த அளவு கூட குறைத்திருக்க முடியாது என்பதன் பொருள் என்ன? வறுமையைக் குறைத்திருக்கிறோம் என்று அதியமானாலும் சொல்ல முடியவில்லை. அதனால் தான் புள்ளிவிபரப் பித்தலாட்டங்களின் மூலம் வறுமையை காகிதங்களில் குறைத்துக் காட்டுகிறார்களே, அந்த அளவு கூட குறைத்திருக்க முடியாது என்று அதியமானால் முனங்கத்தான் முடிந்திருக்கிறது.

இந்தப் படத்துக்கு விளக்கம் எதுவும் தேவையா?
இந்தப் படத்துக்கு விளக்கம் எதுவும் தேவையா?

ஆனால், இதை ஏதோ கொஞ்சம் வறுமையை குறைத்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியுமா? உலகின் முதன்நிலை பணக்காரர்கள் பத்துப் பேரில் இந்தியாவிலிருந்து மூன்று பேர் இடம்பிடித்திருக்கிறார்கள். இராணுவத்துக்காக அதிகம் செலவு செய்யும் நாடுகளில் உலகின் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. வெளிநாட்டு வங்கிகளில் இந்திய தனிநபர்கள் போட்டு வைத்திருக்கும் கருப்புப் பணத்தின் அளவு இந்தியாவின் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட பாதி அளவு. கடல்மேல் பனி நுனி போல் வெளி வந்திருக்கும் ஊழல்களின் அளவு மட்டுமே பலப்பல லட்சம் கோடிகள். பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடித்திருக்கும் இந்திய இயற்கை வளங்களின் மதிப்பை கணக்கிடவே முடியாது. இது போன்ற தகவல்களோடு இணைத்து ஒப்பிட்டுத் தான் இந்திய வறுமைக் குறைப்பு அளவை பார்க்க வேண்டும். இதை வறுமைக் குறைப்பு என்று கூற முடியாது, மக்களின் வயிற்றிலடிப்பு என்று தான் கூற வேண்டும். இப்படி சொந்த மக்களை வயிற்றிலடித்து வாழ வழியில்லாமல் செய்வதற்கு பெயர் தான் சுதந்திரமா?

சுதந்திரத்துக்காக போராடி தியாகம் செய்தவர்களை முட்டாளாக்கியது யார்? காந்தியும் கதர் குல்லா போட்டவர்களும் மட்டும் தானா தியாகிகள்? திப்பு, தாந்தியா தோபே தொடங்கி சௌரி சௌரா புரட்சியாளர்கள் வழியாக பம்பாய் கப்பற்படை எழுச்சி வரை கோடிக்கணக்கான தியாகிகள் அடையாளம் தெரியாமல் இந்த மண்ணில் விதைக்கப்பட்டிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டு இந்திய வளங்களை கபளீகரம் செய்வதற்கும், மக்களை காயடிப்பதற்கும் தானா அவர்கள் போராடினார்கள்? எட்டப்பன்களை, தொண்டைமான்களை அரசு சிறப்பு மரியாதைகளோடு கௌரவிப்பதற்குத் தானா அவர்கள் போராடினார்கள்? இதை சுதந்திர தினம் என்றும், இதை சுதந்திர நாடு என்றும் கூறுபவர்கள் தான் அந்த கோடானுகோடி   தியாகிகளை கேலி செய்கிறார்கள், அவமரியாதை செய்கிறார்கள்.

இப்பல்லாம் யார் சார் ஜாதி பார்க்கிறார்கள் என்று ஆணவக் கொழுப்பை காட்டுபவர்களும், பிச்சைக்காரர்களெல்லாம் பேங்க் பாலன்ஸ் வைத்திருக்கிறார்கள் என்று நாக்குநுனியில் பேசுபவர்களும் அடுத்து தவறாமல் சொல்வது செல்போன் இண்டர்நெட் என்பது தான். அந்த வகையில் தான் அதியமானும் முகநூலை சுதந்திரமாக பயன்படுத்த முடியுமா? என்கிறார். சுதந்திரம் என்பதன் பொருள் புரியாதவர்களின் கைகளில் சுதந்திரம் எனும் சொல் படாதபாடு படுகிறது. பேஸ்புக் பாவிப்பது சுதந்திரத்தின் அடையாளம் என்று நாங்கள் கருதுவதில்லை. கலை, சினிமா, விளையாட்டு, மதம் போல் சமூகத் தளங்களும் ஒரு லாஹிரி வஸ்து[போதைப் பொருள்] தான். ஒரு எல்லைக்குமேல் அதை பயன்படுத்துவதும் அரசுக்குத் தான் உதவி செய்யும். எடுத்துக்காட்டாக சாக்கடை அடைத்து தெருவில் ஓடினால் அதைப் பார்க்கும் மனிதனின் சமூகக் கடமை என்ன? உரியவர்களிடம் செல்லி அடைப்பை சரி செய்ய வைப்பதும் மீறினால் அதற்காக போராடுவதும் தான் சமூகக் கடமை. ஆனால், சமூகத் தளங்கள் இதை எவ்வாறு மாற்றியிருக்கின்றன? அதை போட்டோ பிடித்து சமூகத் தளங்களில் பதிவேற்றி விடுவதாக மனிதனின் சமூகக்கடமையை வெட்டிக் குறைத்திருக்கின்றன. தவிரவும், அப்படி பதிவேற்றுவது தான் தன்னுடைய உச்சபட்ச சமூகக் கடமை என்றும், பிறர் மத்தியில் தான் மட்டும் செய்திருப்பதால் ஒரு பெருமித உணர்வும், துல்லியமாகச் சொன்னால் சமூகத்திலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலையும் ஏற்படுகிறது. ஒரு பொது இடத்தில், ஒரு பேரூந்தில், இரயில் பயணங்களில் அருகிருக்கும் சக பயணிக்கு, சக மனிதனுக்கு உறவுக்கரம் நீட்டுவதற்குப் பதிலாக செல்போன் திரைகளை நிரடி நிரடி விரல் தேய்த்து தனித்தீவாய் அமர்ந்திருப்பதும் தான் விளவாகியிருக்கிறது இந்த சமூகத் தளங்களால். சமூகத்தளங்களின் முதலாளிகளுக்கு தேவையும் இது தான். விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை விட இந்த லாபம் தான் முதலாளிகளுக்கு முக்கியம்.

முகநூல் போன்ற சமூகத்தளங்கள் குறித்த சரியான பார்வை இது தான், இப்படித்தான் பார்க்க வேண்டும். இந்த எல்லையில் நின்று அது கொடுக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தும் விதமாகத்தான் அந்த சமூகத் தளங்களைப் பயன்படுத்துகிறோம், பயன்படுத்த வேண்டும். ஆனால், இதை 47ல் நடந்த ஆட்சி மாற்றத்துடன் தொடர்புபடுத்துகிறார் அதியமான். பேஸ்புக் பயன்படுத்துவது சுதந்திரமா? இல்லை, இவர் சொல்லும் சுதந்திரம் கிடைத்ததால் தான் பேஸ்புக் கிடைத்ததா? அவர் சொல்வதின் பொருள் என்ன? இதில் சீனாவில் பேஸ்புக் இல்லை என்று கூப்பாடு வேறு.

முதலாளித்துவம் எத்தனை கொடூரமானது என்பதற்கு மக்கள் வாழும் தடமெங்கும் தடயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் யாரோ ஒன்றிரண்டு அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளாக மடைமாற்றி, முதலாளித்துவத்துக்கு கொஞ்சம் டிங்கரிங் செய்தால் அது மக்களை காத்துவிடும் என்று அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள் போல சத்தியம் செய்வது தான் அதியமானின் வேலை. இந்த வேலையைத்தான் சகதியில் சப்தம் எழுப்பும் சள்ளைக் குஞ்சுகளைப் போல் இணையப் பரப்பில் தொடர்ந்து செய்து வருகிறார் அதியமான். அறிவு நேர்மையுடன் அவர் தன்னை பரிசீலித்துக் கொள்ள வேண்டும் என்பதை தவிர வேறு ஒன்றும்கூறுவதற்கில்லை.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

One thought on “அதியமானும் சுதந்திரமும்

  1. \\\வறுமையை இந்த அளவு கூட குறைத்திருக்க முடியாது/// இதைக் கண்டு எப்படி சிரிப்பது என குழப்பமாக இருக்கிறது. எந்த அளவு குறைத்திருக்கிறார்கள் வறுமையை?

    பார்க்கவும் : MDG report: India on track in reducing poverty http://www.thehindu.com/news/national/millennium-development-goals-report-2015-india-on-track-in-reducing-poverty/article7396544.ece

    மற்ற எதிர்வினைகளுக்கு விரிவான விளக்கங்கள் எமது பிளாக் பதிவுகளில் : http://nellikkani.blogspot.in/

    மீண்டும் மீண்டும் விளக்க திரணியில்லை.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s