உக்ரைன் – உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் – 5
தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க
தொடரின் கடந்த பகுதியில் உக்ரைன் பிரச்சனையின் மையம் என்ன என்பதைப் பார்த்தோம். இன்னும் சற்று நுணுக்கமாக அதைப் பார்க்கலாம்.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ரஷ்யா ஆதரவு அதிபர் யனுகோவிச், மேற்கத்திய நாடுகளின் ‘திட்டமிட்ட’ கலவரங்கள் மூலம் தூக்கி வீசப்பட்டு அமெரிக்க, ஐரோப்பிய ஆதரவாளரான யுஷென்கோ பதவியில் அமரவைக்கப்பட்டார். ஆனால் மீண்டும் 2010ல் நடந்த தேர்தலில் மொத்த வாக்குகளில் பாதியளவு வாக்குகள் பெற்று மீண்டும் வென்று யனுகோவிச் அதிபரானார். வழக்கம் போலவே 2013 மத்தியில் அரசுக்கு எதிரான ‘கலகங்கள்’ மூண்டன. உலகின் ஊடகங்கள் யனுகோவிச்சின் ஊழல்களுக்கு எதிராக மக்கள் போராடுவதாக மார்கெட்டிங் செய்தன. ஆனால் இந்தக் கலவரங்கள் மேற்கத்திய நாடுகளால் திட்டமிட்டு நடத்தப்படுபவை தான் என்பது ஐய்ரோப்பிய யூனியன் சிறப்புப் பிரதிநிதி ஆஸ்டினுக்கும், எஸ்தானிய வெளியுறவு அமைச்சர் உர்மாஸ் பேட் ஆகியோருக்கு இடையிலான தொலைபேசி உரையாடல் வெளியானதை தொடர்ந்து அம்பலமானது. அவர்கள் பேச்சில் கலவரத்தில் இறந்த 88 பேர் எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த தொலைதூர துப்பாக்கி சுடுபவர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள் என தெரிவிக்கிறார். இப்படி நடக்கும் கலவரங்களைத் தான் ஊழலுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டம் என ஊடகங்கள் கொண்டாடின.
மேற்கத்திய ஆயுத பணபல உதவிகளால் கலவரம் தொடரவே, 2014 பிப்ரவரியில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் ஐரோப்பிய யூனியனின் முன்னிலையில் ஒப்பந்தம் ஏற்பட்டது. செப்டம்பருக்குப் பிறகு மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்றும், அதுவரை இடைக்கால அரசு ஆட்சியில் இருக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து யனுகோவிச் பதவி விலகிய மறுநாளே இடைக்கால அரசுக்குப் பதிலாக கலவரக்காரர்கள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். ஐரோப்பிய யூனியன் வேடிக்கை பார்த்தது.
யனுகோவிச் வெற்றி பெற்று பதவி ஏற்கும் போதெல்லாம் ஏன் கலவரங்கள் நடக்கின்றன? ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய நாடாகவும் சோவியத் யூனியனின் உணவுக் கிடங்காகவும் திகழ்ந்த உக்ரைன் தனி நாடான பிறகு முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகளால் மக்களுக்கு ஏற்ற விதத்தில் பொருளாதர வளர்ச்சியை அடைய முடியாமலும் ஊழலாலும் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதற்கு ஒரே தீர்வு உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது தான் என்பது முதாலாளித்துவ பொருளாதார அறிஞர்களின் கருத்து. இதை யனுகோவிச் ஏற்காமல் ரஷ்யாவிடமிருந்து கடனும், மானியங்களும் பெறுவதன் மூலம் நிலமைகளை சமாளித்து வந்தார். ஐரோப்பிய யூனியனுடன் இணைவதற்கான பேச்சு வார்த்தைகளிலுருந்து யனுகோவிச் இரண்டுமுறை முறித்துக் கொண்டு வெளியேறினார். இதற்கு அவர் கூறிய காரணம், இணைவதற்காக ஐரோப்பிய யூனியன் முன்வைக்கும் நிபந்தனைகள் உக்ரைனை திவாலாக்கி விடும் என்பது தான்.
நுணுக்கமாகப் பார்த்தால் ஐரோப்பிய யூனியனுடன் உக்ரைன் இணைவது உக்ரைனின் பொருளாதரத்துக்கு உகந்தது என்பதை விட ஐரோப்பிய முதலாளிகளுக்கு அவசியம் என்பது தான் பொருத்தமானது. வளமான உக்ரைனிய விளைநிலங்கள் மீது ஐரோப்பிய பெருமுதலாளிகள் நீண்ட காலமாகவே கண்வைத்திருக்கிறார்கள். ஆனால் உக்ரைனிய சட்டத்தின்படி விளைநிலங்களை அன்னியர்கள் வாங்க முடியாது. என்றாலும் பலவிதமான வழிமுறைகள் மூலம் பல ஐரோப்பிய நிறுவனங்கள் உக்ரைனிய விவசாயத் துறையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்தக் காரணங்களால் உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைத்தே தீர்வது என அமெரிக்காவும் ஐரோப்பிய வல்லாதிக்க நாடுகளும் முனைப்புக் காட்ட, இணைய மறுப்பதற்கு யனுகோவிச் கூறும் முக்கிய காரணம் ஏற்றுமதி கட்டுப்பாடு. அதாவது உக்ரைன் ஆண்டொன்றுக்கு 1.5 கோடி டன் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்கிறது. இதை இரண்டு லட்சம் டன்னாக குறைத்துக் கொண்டு பிற மேற்கத்திய நாடுகளின் ஏற்றுமதிக்கு வழி விட வேண்டும் என்பது தான் அந்த ஏற்றுமதி கட்டுப்பாடு. இதனால் உக்ரைனுக்கு ஆண்டொன்றுக்கு 20 பில்லியன் யூரோ இழப்பு ஏற்படும். இது எப்படி உக்ரைனின் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு தீர்வாகும்?
ஆனால், இடைக்கால அரசுக்குப் பதிலாக அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட கலகக்காரர்கள் தேர்தல் நடத்தி புதிய அரசு செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடிய திட்டங்களை உடனடியாக செய்யத் தொடங்கினார்கள். ஐ.எம்.எஃப் பிடமிருந்து 35 பில்லியன் டாலர் கடன் பெறுவது, அமெரிக்காவிடமிருந்து 1 பில்லியன் உதவித் தொகை பெறுவது, ஐரோப்பிய யூனியனுடன் இணைவது போன்ற மிக முக்கிய முடிவுகள் மிக அவசரமாக எடுக்கப்பட்டன. இவைகளை விட சிறுபான்மையினருக்கான பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்தது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. அதாவது உக்ரைனிய மொழி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கும். மொழி, இன சிறுபான்மையினருக்கு இதுவரை கிடைத்துவந்த சலுகைகள் எதுவும் இனி கிடைக்காது.
உக்ரைனுக்கு உட்பட்ட பகுதியான கிரீமியாவில் இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கிரீமியா தனி பாராளுமன்றம், தனி அதிபர் உள்ளிட்ட அதிகாரங்கள் கொண்ட, ரஷ்ய எல்லைக்கு அருகிலிருக்கும், ரஷ்யர்கள் அதிகம் வசிக்கும் தன்னாட்சிப் பகுதி. இதனால் கிரீமியா சட்டவிரோத வழியில் பதவியை பிடித்திருக்கும் கலகக்காரர்கள் அரசை ஏற்க முடியாதென்றும், தாங்கள் உக்ரைனுடன் இணைந்திருப்பதா? ரஷ்யாவுடன் சேர்வதா? என்பதை வாக்கெடுப்பு நடத்தி தீர்மானிக்கப் போவதாக அறிவித்தது. இதை ரஷ்யா வரவேற்றதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்புக்காக படைகளையும் அனுப்பியது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் கடுமையாக எதிர்த்தன.
உக்ரைனின் அரசியல் சட்டப்படி தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட விக்டர் யனுகோவிச் அரசை ஆயுத உதவி பணஉதவி வழங்கி கலவரங்களை ஏற்படுத்தி அதன் மூலம் சட்டவிரோதமான முறையில் ஆட்சியைக் கைப்பற்றிய கலகக்காரர்களின் ஆட்சியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா கிரீமிய மக்களிடம் ஜனநாயகமான வழியில் வாக்கெடுப்பு நடத்துவோம் என அறிவித்ததை உக்ரைன் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது எனக் கூறியது. எதையும் கண்டு கொள்ளாமல் வாக்கெடுப்பு நடந்தது. பெரும்பான்மை மக்கள் ஆதரவுடன் கிரீமியா ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலகக்காரர்கள் தூக்கி வீசுவதற்கு ஆதரவளித்த அமெரிக்கா, மக்கள் விருப்பப்பட்டு ரஷ்யாவுடன் இணைந்ததை “ரஷ்யா 19ம் நூற்றாண்டு மனோபாவத்துடன் நடந்து கொள்கிறது, அதற்கு 21ம் நூற்றாண்டு ஆயுதங்களுடன் பதிலடி கொடுப்போம்” என்று கூறியது. அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ரஷ்யா மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தன.
மக்களுக்கு மதிப்பளிக்கின்ற, ஜனநாயகத்தை மதிக்கின்ற நாடு அமெரிக்கா என்றால் உலக மக்கள் தங்கள் பின்வாயால் சிரிப்பார்கள். ஏனென்றால், உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் ஏதோ ஒரு விதத்தில் அமெரிக்காவின் ஜனநாயகப் படுகொலைகளின் ரத்தக்கறை படிந்திருக்கிறது. ஆனாலும் ரஷ்யா ஒரு சமரசத் தீர்வுக்கு முன்வந்தது. உக்ரைனில் ஒரு சமஸ்டி முறை குடியரசை ஏற்படுத்தினால் தாம் அதை பரிசீலிப்பதாக புதின் அறிவித்தார். இதை மேற்குலகம் முற்றாக நிராகரித்து கலகக்காரர்களின் ஆட்சி தொடரும் என்றது. அவர்களுக்கு ஜனநாயகம் என்பதன் பொருள் நிதிமூலதனங்களின் கொள்ளைக்கு வழி திறந்து விடும் நாடு என்பது தான்.
இந்த அமெரிக்காவின் நரித்தனங்களைத் தான் தமிழ் இந்து மழுப்பலாக ஆதரித்து நிற்கிறது. தமிழ் இந்து மட்டுமல்ல, அனைத்து ஊடகங்களுமே இப்படித்தான் ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம் மக்களுக்கு எதை செய்தியாக வழங்க வேண்டும் என முடிவு செய்கிறதோ அவைகளை மட்டுமே செய்தி எனும் போர்வையில் தந்து கொண்டிருக்கின்றன. ஊடக தர்மம் என்று இவர்கள் கூறிக் கொள்வதெல்லாம் கழிப்பறை காகிதங்கள் பெறும் மதிப்பைக் கூட பெறுவதில்லை என்பது தான் உண்மை.
உண்மை நின்றிட வேண்டும் என்பது தமிழ் இந்து வின் முழக்கமாக பொறிக்கப்பட்டுள்ளது. பொய்மை நின்றிட வேண்டும் என்பது தான் அதன் உண்மையான பொருள்.
இத் தொடரின் முந்திய பகுதிகள்
1. உக்ரைன் உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’
2. பொய் சொல்லக்கூட தெரியாத தமிழ் இந்து நாளிதழ்