அய்லான் குர்தி – முதலைக் கண்ணீர் நாடகங்கள்

refug

கடந்த வாரம் முழுவதும் உலகெங்குமுள்ள ஊடகங்களின் ஒட்டுமொத்தச் செய்தியும் இது தான் உலகை உறைய வைத்த அய்லான் குர்தி. துருக்கியின் கடற்கரை ஒன்றில் மணலில் முகம் புதைந்தபடி குப்புறக் கிடந்த ஒரு சிறுவனின் உடல். இந்தப் புகைப்படம் வெளியானதிலிருந்து அகதிகளின் மேல் உலகின் கவனம் குவிக்கப்பட்டதைப் போல ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. எப்போதும் அகதிகளை வரவேற்கும் ஜெர்மனியின் இளக்கம் எடுத்துக் காட்டப்படுவதில் தொடங்கி, உலக நாடுகள் அகதிகள் குறித்த தங்கள் பார்வையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது வரை ஏராளமான செய்திகளும் அறிக்கைகளும் கொட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நிதியுதவிகள் குவிகின்றன. ஐநாவுக்கு வழக்கமாக வரும் நன்கொடைகளை விட இந்தப்படம் வெளியானதற்குப் பிறகு வரும் நன்கொடைகள் நூறு மடங்குகளுக்கும் மேல் அதிகரித்திருக்கிறதாம்.

 

ஆச்சரியமாக இருக்கிறது, உலகம் இப்போது தான் அகதிகள் எனும் சொல்லை செவியுறுகிறதா? அந்த ஒற்றைப் புகைப்படம் இவ்வளவு அதிர்வலைகளைக் கிளப்ப முடியுமென்றால், இதுவரை அகதிகள் குறித்து வெளியான கொடுஞ் செய்திகளெல்லாம் உலகின் காதுகளை எட்டவே இல்லையா? தோராயமாக ஒவ்வொரு ஆண்டும் ஆறு லட்சம் அகதிகள் தங்கள் சொந்த நாடுகளை விட்டு, வாழிடங்களை விட்டு அகதிகளாக வெளியேறுகிறார்கள். இப்படி அகதிகளாக வெளியேறுபவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு நாட்டில் சேர்ந்து வாழ்கிறார்கள் என்று கருத முடியாது. அதில் கணிசமான பங்கினர் மனம் பதைக்கும் படி இறந்து போகிறார்கள். ஐநாவின் கூற்றின் படியே இந்த ஆண்டு முப்பதாயிரம் அகதிகள் வரை இறந்து போகலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் ரொஹிங்கியா முஸ்லீம்கள் நடுக்கடலில் தத்தளிக்கும் பல படங்கள் ஊடகங்களில் வெளியாகின. அப்போதெல்லாம் ஏற்படாத தாக்கம், பதைப்பு இந்த ஒற்றைப் படத்தில் ஏற்பட்டிருக்கும் மாயம் என்ன? பிஞ்சுக் குழந்தை என்பதாலா? அகதிகள் குறித்த குற்ற உணர்ச்சி திடீரென மேலை நாடுகளுக்கு ஏற்பட்டு விட்டதா? அல்லது, அந்தப் படம் மேலைநாடுகளின் கொடூரத்தை அம்பலப்படுத்தி விட்டதா? எதுவுமில்லை.

 

அகதிகள் என்றால் எல்லா அகதிகளும் பொதுவாக அகதிகள் தாமா? தாம் வாழும் நாட்டைத் துறந்து இன்னொரு நாட்டிற்கு சென்று வாழ நேர்வது தான் அகதிகளின் இலக்கணம் என்றால், பெருமுதலாளிகளைப் பொருத்த வரையில் அவர்களுக்கு உலகமே ஒரு கிராமம் போல அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று எப்படி வேண்டுமானாலும் வாழலாம், தொழில் செய்யலாம். அவ்வாறு செய்வதனால் அங்கு இயல்பாக வாழும் மக்களுக்கு எவ்வளவு கேடு நேர்ந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. பணக்காரர்களைப் பொருத்தவரை அவர்களின் தேவைகளைப் பொருத்து இடம்பெயர நேரிட்டால் அதற்காக தேவைப்படும் அனுமதி அவர்களின் காலடிக்கே வரும். ஏழைகளும் நடத்தர மக்களுமே அனுமதியும் பெறமுடியாமல், வாழவும் முடியாமல் கள்ளத் தனமாக நாடோடுகிறார்கள், செத்தழிகிறார்கள்.

 

அகதிகள் என்றால் எல்லா அகதிகளும் பொதுவாக அகதிகள் தாமா? நிச்சயம் இல்லை. அந்தந்த நாடுகள் கொண்டிருக்கும் அரசியல் உறவுகள் அகதிகளின் நிலையில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும். இந்தியாவை எடுத்துக் கொண்டால், காஷ்மீர் பண்டிட்களும் அகதிகள் தான், திபெத்தியர்களும் அகதிகள் தாம், ஈழத் தமிழர்களும் அகதிகள் தாம். ஆனால் அவர்கள் நடத்தப்படும் விதம் ஒன்றல்ல. காஷ்மீர் பண்டிட்களுக்கு கிடைத்திருக்கும் வசதிகளும் வாய்ப்புகளும் திபத்தியர்களுக்கு கிடைக்காது. திபெத்தியர்களுக்கு இருக்கும் சுதந்திரமும், வாய்ப்புகளும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு போதும் கிடைக்காது. இந்தியாவில் ஈழத் தமிழர்கள் என்றுமே சிறையில் அடைபட்டிருக்கும் கொத்தடிமைகள் போலத்தான். இந்தியா மட்டுமல்ல, ஒவ்வொரு நாடும் அகதிகள் குறித்து வெவ்வேறு அளவுகோல்களை வைத்திருக்கின்றன. இந்த அளவுகோல்களிலும், வித்தியாசங்களிலும் மறைந்திருக்கும் கொடூரத்தை அய்லான் குர்திகளின் படம் வெற்றிகரமாக மறைத்து விடுமா?

 

மக்கள் ஏன் அகதிகளாக உருமாறுகிறார்கள்? பிறந்து வளர்ந்த சொந்த மண்ணை நிரந்தரமாக விட்டுப் பிரிவது என்பது கொடும் வலி தரும் நிகழ்வு. அதிலும் நினைக்கும் இடத்தை சென்று சேர்வோமா எனும் ஐயம் அதனிலும் வலியூட்டக் கூடியது. ஒற்றை பைபர் படகில் நிற்கக் கூட இடமில்லாத அளவுக்கு, எந்த வித பாதுகாப்பு கருவிகளும் இன்றி ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் கடலில் கடந்து ஆஸ்திரேலியா வரை செல்லத் துணிகிறார்கள் என்றால் வாழ்ந்த இடத்தில் எந்த அளவுக்கு அவர்கள் குதறப்பட்டிருப்பார்கள்? இதனால் தானே அவர்கள் அகதிகளாகிறார்கள். மூன்றாம் உலக நாடுகள் அனைத்திலும் நிகழும் இந்தக் கொடூரம் யாருக்குமே தெரியாதா? அய்லான் குர்திகளுக்காக விடும் கண்ணீரில் இந்தச் சூடு இருக்காதா?

 

ஏகாதிபத்தியங்கள் தங்கள் நலனுக்காக மூன்றாம் உலக நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களை அந்தந்த நாட்டு அரசுகளின் துணையோடு பறிக்கின்றன. நிதி மூலதனங்கள், அன்னிய முதலீடு எனும் பெயரில் கொண்டு வரப்படும் திட்டங்கள், சட்டங்கள் எல்லாம் மக்களை அகதிகளாக்கும் வலிமை பெற்றவை. ஒருவேளை மத்திய கிழக்கில் சில நாடுகளைப் போல் அரசுகள் ஏகாதிபத்தியங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அங்கு மதவாதமும், தீவிரவாதமும் வெடித்துப் பரவும். தங்கள் மதக் கொள்கைகளுக்காக ஜிஹாத் செய்ய புறப்படுவார்கள். அல்லது ஊழலை எதிர்த்துப் போராடுவார்கள். ஜிஹாத் செய்பவர்களுக்கு அரசால் ஊட்டி வளர்க்கப்படும் மதம் எவ்வாறு சமூகக் கொடுமைகளை மறைக்கிறது என்பதை புரிந்து கொள்ளமாட்டார்கள். ஊழல் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கு எதெல்லாம் ஊழல், அது எப்படி ஏற்படுகிறது? எப்படிக் களைவது? என்ற எதுவும் தெரியாது. ஏகாதிபத்தியங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அரசு வந்து விட்டால், ஜிஹாத்தும், ஊழலுக்கெதிரான கோபமும் காணாமல் போய்விடும். இப்படி இரண்டு முனைகளிலும் ஏகாதிபத்தியங்கள் உருவாக்கி வைத்திருக்கும் அகதிகளை உருவாக்கும் இயந்திரங்களுக்குள் மக்கள் தள்ளப்படுவதால் தானே அகதிகள் உருவாக்கப்படுகிறார்கள்.

 

சிரியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் உள்நாட்டுப் போரின் தீவிரத் தன்மை தான் அய்லான் குர்திகளை நாடுகடக்க வைத்திருக்கிறது. பஸாரின் அரசுக்கு எதிராக பல தடைகளை மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் போட்டு வைத்திருக்கின்றன. அமெரிக்காவின் ஆசீர்வாதத்தால் இஸ்ரேல் சிரியாவின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. மற்றொரு பக்கம் ஐ.எஸ், முன்னாள் இராணுவத்தினர், அல்நுஸ்ரா போன்ற குழுக்கள் அரசுடன் மோதுகின்றன. தூய இஸ்லாமிய அரசை கொண்டு வரப்போகிறார்களாம். பஸார் அரசு ஷியாவின் ஒரு பிரிவைச் சார்ந்தது. தூய இஸ்லாம் என்பது ஷன்னி மட்டும் தான். இப்படித்தான் ஜிஹாதிகள் பிறக்கிறார்கள். சிரியாவின் அகதிகளை உருவாக்கும் இயந்திரம் இப்படித்தான் ஏகாதிபத்தியங்களால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

 

ஆனால், அய்லான் குர்திகளை எந்த ஏகாதிபத்தியங்கள் உருவாக்கினவோ அதே ஏகாதிபத்தியங்கள் இப்போது ஆரவாரமாய் அறிவித்துக் கொண்டிருக்கின்றன. ஆண்டுக்கு ஒரு லட்சம் அகதிகளை ஏற்றுக் கொள்கிறோம், இரண்டு லட்சம் அகதிகளை ஏற்றுக் கொள்கிறோம் என்று. ஐநா அகதிகள் குறித்த கொள்கையை மறு பரிசீலனை செய்யுமாறு கோருகிறது. இவற்றின் மூலம் தங்கள் காருண்யத்தை புதுப்பிக்க போட்டி போடுகின்றன. சகிக்க முடியவில்லை இந்த முதலைக் கண்ணீர் நாடகங்களைக் கண்டு.

 

அகதிகளை உருவாக்கிக் கொல்பவர்களே, அதற்கு தீர்வு செல்வது போல நயவஞ்சக நாடகமாடினால் மக்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த கொடூர அரசியலை புரிந்து கொள்ளாமல் அய்லான் குர்திகளுக்காக பரிதாபப்பட்டு உகுக்கும் கண்ணீர் போலியனவை. அவர்களின் உணர்ச்சிகளில் உண்மை இருக்கலாம். ஆனால் சமூக உணர்வுகள் வெற்றிடமாக இருக்கும் போது ஏற்படும் உணர்ச்சி மேலிடுதல் அபாயகரமானது. மதவாதங்களும், தீவிரவாதமும் இதே அடிப்படையிலிருந்து தான் உருவெடுக்கின்றன. தங்கள் கண்ணீர் கன்னத்தில் சுடுவது மெய்யென்றால் மக்கள் ஏகாதிபத்தியங்களை எதிர்த்து போராட முன்வர வேண்டும். அது தான் அய்லான் குர்திகளை உருவாக்காமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

3 thoughts on “அய்லான் குர்தி – முதலைக் கண்ணீர் நாடகங்கள்

  1. தங்கள் கண்ணீர் கன்னத்தில் சுடுவது மெய்யென்றால் மக்கள் ஏகாதிபத்தியங்களை எதிர்த்து போராட முன்வர வேண்டும். அது தான் அய்லான் குர்திகளை உருவாக்காமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

  2. kashmir panditgal eppadi agadigal aavargal avargalaanal agadigalaippol nadathappattanar hari sing aayiram salogaigal kettalum kashmirai indiavudan inaithu vittar adanal panditgal agadigal alla islamiyargalal thurathappatta avargal votu vangikkaga agadigalaga nadathap pattanar

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s