விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 7
உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் எட்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள். 8.1, 8.2
‘உணர்வு’ தன்னுடைய தொடரின் ஏழாம் பகுதியின் முடிவிலும், எட்டாம் பகுதியின் தொடக்கத்திலும் ‘இஸ்லாம் எனும் நேரான மார்க்கத்தை[!] மக்களுக்கு எடுத்துச் சொன்னபோது முகம்மது நபி பட்ட துன்ப துயரங்களை’ எடுத்து இயம்பியிருக்கிறது. 1. முகம்மது வாழ்ந்த காலத்தில் அந்த மக்கள் காட்டுமிராண்டி நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். 2. முகம்மதின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களை குரைஷிகள் கொன்று குவித்தார்கள். இவை வழக்கமாக மதவாதிகள் கூறிக் கொண்டிருக்கும் பச்சைப் பொய்கள். அந்தப் பொய்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இஸ்லாம் எப்படியெல்லாம் மனித சமூகத்தை அதாவது காட்டுமிராண்டி நிலையிலிருந்த மனித சமூகத்தை நவநாகரீக[!] நிலைக்கு உயர்த்தியது என்பதை உணர்த்துவதற்காக ‘உணர்வு’ கும்பல் அடுக்கியிருக்கும் பொய்கள், கூடவே மார்க்ஸ், ஏங்க்ல்ஸ் மீதான புரிதலற்ற விமர்சனங்கள் இவைகள் தான் எட்டாவது பகுதியில் நிரம்பியிருக்கின்றன. இவைகளை பார்ப்பதற்கு முன் சில நினைவூட்டல்களை செய்ய வேண்டியதிருக்கிறது, அவை ஏற்கனவே நினைவூட்டப்பட்டவை தான் என்ற போதிலும்.
நடப்பது ஒரு கற்பனை உரையாடல். ‘உணர்வு’ கும்பல் தானே செய்யும் இந்த கற்பனைக்கு உரை வடிவம் கொடுத்து வெளியிட்டு வருகிறார்கள். இதில் எந்த கம்யூனிஸ்டுக்கும் தொடர்பில்லை. ஆனாலும் அவர்களே அவர்களை நோக்கி முன்வைக்கும் விமர்சனங்களுக்கு அந்தத் தொடரில் பதில் எதையும் இதுவரை முன்வைக்கவில்லை. இப்படி பதில் கூறாத அல்லது பதில் கூறவியலாத நிலையில் தான் மார்க்ஸ் குறித்த அரசியலற்ற இழிவுபடுத்தல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எனவே, தன் அணிகளிடம் கம்யூனிசத்தை இழிவுபடுத்த வேண்டிய அவசர அவசியம் ‘உணர்வு’ கும்பலும் ஏற்பட்டிருக்கிறது என்பதையே மீண்டும் மீண்டும் இவை எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
எந்த ஒரு புதிய நடைமுறையையும் மக்களிடம் அறிமுகம் செய்யும் போது அதை ஏற்றுக் கொள்ள மக்கள் தயங்குவார்கள், எதிர்ப்பார்கள். சிலர் எல்லை மீறியும் செல்லக்கூடும். இது பொதுவானது. இதையே மதவாதிகள் தங்களை முதன்மைப் படுத்துவதற்காக முன்வைக்கிறார்கள். இதைத் தான் ‘உணர்வு’ கும்பல் மக்கள் காட்டுமிராண்டி நிலையில் வாழ்ந்தார்கள் என்றும், முகம்மதை பின்பற்றியோரை குரைஷிகள் கொன்று குவித்தார்கள் என்றும் பெருமிகைப்படுத்தி கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவை உண்மைகளல்ல, பச்சைப் பொய்கள். எப்படி என்பதை ஆராய்வோம்.
முகம்மதின் சமகாலத்து மக்கள் காட்டுமிராண்டி நிலையில் இருந்தனரா? எந்த ஒரு சமூகத்தின் நாகரீகமும் அந்தந்த சமூகம் வாழும் சூழலைப் பொருத்தே அமையும். முகம்மது பல வழிப்பறி போர்களை நடத்தியிருக்கிறார். இதைக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிப்போர் உண்டு. ஆனால், பாலை நிலத்தில் வழிப்பறி என்பது தொழில். அந்த தொழிலைச் செய்வது அவர்களின் நாகரீகம். இப்படி இதைப் புரிந்து கொள்வது தான் சரியானது. மாறாக, இருபத்தோறாம் நூற்றாண்டில் இருந்து கொண்டு ஒரு மதத்தலைவர் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டது சரியல்ல என்று செய்யப்படும் விமர்சனம் ஒருதலைப் பட்சமானது, உள்நோக்கம் கொண்டது. அதேபோல தாங்கள் பின்பற்றிவரும் வாழ்முறைகளில் மாற்றம் செய்ய நினைக்கும் ஒருவரை அந்த மக்கள் எதிர்ப்பதும், அதற்கான நடவடிக்கைகளும் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பான மனோநிலையில் இருந்து புரிந்து கொள்ளப்பட வேண்டும். மாறாக, அந்த மக்கள் காட்டுமிராண்டி நிலையில் இருந்தார்கள் என்று இன்று வர்ணிப்பதும் ஒருதலைப் பட்சமானது, உள்நோக்கம் கொண்டது.
முகம்மதின் சமகால மனிதர்கள் காட்டுமிராண்டிகளாய் இருந்ததில்லை, உயரிய நாகரீகத்திலேயே இருந்தார்கள். இதை இஸ்லாமிய வரலாற்றில் இருந்தே நிரூபிக்கலாம். இஸ்லாமியர்களின் புனிதத்தலமாக இன்று விளக்கும் மக்காவின் கஆபா பள்ளி ஒரு குலத்தின் ஆதிக்கத்தில் இருந்தாலும் எல்லா கோத்திரங்களின் சிலைகளும் அதனுள் இருந்தன. எல்லா மக்களும் பிரச்சனைகளின்றி அவரவர் தெய்வங்களை வழிபட்டு வந்தனர். இது அவர்களின் பண்பட்ட நாகரீக நிலைக்கு சான்று இல்லையா? அனைத்து பகுதி மக்களும் கூடும் வணிக முக்கியத்துவம் வாய்ந்த மக்காவில் அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக ஜம்ஜம் எனும் கிணற்றை வெட்டியிருந்தார்கள். இது அவர்களின் பண்பட்ட நாகரீக நிலைக்கு சான்று இல்லையா? முகம்மதும் அவரின் சீடர்களும் மக்காவைத் துறந்து யாத்ரிப் எனும் நகருக்குச் சென்ற போது அவர்களை வரவேற்று தங்களில் சொத்துகளில் பங்குபிரித்துக் கொடுத்தார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை வைத்திருப்பது அன்றைய வழக்கம் என்பதால் அவர்களை விவாகரத்து செய்து உங்களுக்கு விருப்பமானவர்களை மணந்து கொள்ளுங்கள் என்றார்கள். [ஆணாதிக்கம் எனும் அடிப்படையில் இது விமர்சிக்கப்பட வேண்டியதே என்றாலும்] இது அவர்களின் பண்பட்ட நாகரீக நிலைக்கு சான்று இல்லையா? எனவே முகம்மதின் சமகால மனிதர்கள் காட்டுமிராண்டி நிலையில் இருந்தார்கள் என்பது மதவாதப் பொய். இதற்கு நேர்மாறாக கஆபா வில் இருந்த பிற மக்களின் சிலைகளை அடித்து நொறுக்கி அப்புறப்படுத்தியது, இந்த மதவாதப் புழுகர்கள் யாரை நாகரீகம் கற்பிக்க வந்தவர் என கொண்டாடுகிறார்களோ அந்த முகம்மது தான். எல்லா மக்களும் வந்து சென்று கலந்திருந்த மக்காவில் “என்னைப் பின்பற்றுபவர்களைத் தவிர வேறு யாரும் இனிமேல் மக்காவில் நுழையக் கூடாது” என உத்தரவு பிறப்பித்தது, இந்த மதவாதப் புழுகர்கள் யாரை நாகரீகம் கற்பிக்க வந்தவர் என கொண்டாடுகிறார்களோ அந்த முகம்மது தான். எனவே, ‘உணர்வு’ கும்பல் கூறுவது என்னைப் பின்பற்றினால் நாகரீகம், பின்பற்றாவிட்டால் காட்டுமிராண்டித்தனம் எனும் அயோக்கியத்தனத்தைத் தான்.
முகம்மதைப் பின்பற்றியோரை குரைஷிகள் கொன்று குவித்தார்களா? முகம்மது தன்னுடைய கொள்கையை திட்டங்களை மக்களிடம் பரப்புரை செய்தபோது அவர்கள் ஏற்கவில்லை, எதிர்த்தார்கள், இன்னல்களை ஏற்படுத்தினார்கள். ஆனால் கொன்று குவித்தார்களா? எத்தனை பேரைக் கொன்றார்கள்? ‘உணர்வு’ கும்பலால் பட்டியல் தர முடியுமா? முகம்மது மக்காவில் பரப்புரை செய்த ஆரம்ப சில ஆண்டுகளில் முகம்மதின் பக்கம் வந்தவர்கள் எழுபதுக்கும் குறைவு. இவர்களில் சிலர் அபிசீனியா சென்றார்கள். ஏனையோர் முகம்மதுடன் யாத்ரிப் நகருக்கு சென்றார்கள். ஓரிருவரைக் கொன்று விட்டார்கள் என்று கூறினால் அது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் கொன்று குவித்தார்கள் என்று கூறுவது அப்பட்டமான பொய். இன்னும் சொல்லப் போனால் முகம்மதுவுக்கும் அவரைப் பின்பற்றியோருக்கும் குரைஷிகள் கொடுத்த இன்னல்களால் தான் மக்காவைத் துறந்து யாத்ரிப் எனும் மதீனா நகருக்கு முகம்மது புலம்பெயர்ந்து சென்றார் என்பதே அப்பட்டமான பொய். தன்னுடைய பரப்புரைகளுக்கு, கொள்கைகளை செயல்படுத்துவதற்கு மக்காவை விட யாத்ரிப் நகரமே பொருத்தமான இடம் என்று முகம்மது முடிவு செய்தார். அதனால் தான் அவர் இடம் பெயர்ந்தார். மட்டுமல்லாது, முகம்மதைப் பின்பற்றிய அனைவரும் மக்காவிலிருந்து யாத்ரிப்புக்கு முகம்மதுடன் போக விரும்பவில்லை, மக்காவில் தங்கியிருக்கவே விரும்பினார்கள். அவர்களை மிரட்டித்தான் முகம்மது யாத்ரிப்புக்கு அழைத்துச் சென்றார். யாத்ரிப் சென்ற பின்னரும் கூட அவர்கள் மக்காவாசிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்பது தான் உண்மை. இதை குரான், ஹதீஸ்கள் வாயிலாகவே நிரூபிக்க முடியும். மறுக்க முடியுமா ‘உணர்வு’ கும்பலால்? ஆனால், மதீனாவில் ஆட்சியமைத்த பிறகு தன்னை எதிர்த்தவர்களை கொன்று குவித்தவர் வேறு யாருமல்லர் இந்த மதவாதப் புழுகர்கள் யாரை நாகரீகம் கற்பிக்க வந்தவர் என கொண்டாடுகிறார்களோ அந்த முகம்மது தான். தன் பரப்புரைக்கு இடையூறு செய்த அபூஅபக் எனும் முதியவரை ஏமாற்றிக் கொலை செய்யதது, தன்னை எதிர்த்துக் கவிதை புனைந்தார் என்பதற்காக மர்வான் எனும் பெண் கவிஞரை கொலை செய்தது, போரில் பிடிபட்ட கைதிகளை தனக்கு எதிராக சதி செய்தார்கள் எனக் குற்றம் சாட்டி சற்றேறக்குறைய அறுநூறு பேரை கொன்று குவிக்க உத்தரவிட்டது என தனக்கு குறுக்கே நின்றவர்களையெல்லாம் குப்பையைப் போல் அழித்து அப்புறப்படுத்தியது சாட்சாத் அதே முகம்மது தான். எனவே, ‘உணர்வு’ கும்பல் கூறுவது மாமியார் உடைத்தால் மண்குடம் மறுமகள் உடைத்தால் பொன் குடம் எனும் அயோக்கியத்தனத்தைத் தான்.
இவைகளை சிந்தித்துப் பார்க்குமாறு ‘உணர்வு’ கும்பலை கோர முடியாது. ஏனென்றால் சிந்திக்க பிடிவாதமாய் மறுக்கும் மதவாதக் கும்பல் அது. சிந்திக்க பிடிவாதமாய் மறுப்பதால் தான் அது மதவாதக் கும்பலாய் நீடிக்கிறது. எனவே, இஸ்லாமியர்களே, நீங்கள் சிந்தியுங்கள் எது நாகரீகம்? எது காட்டுமிராண்டித்தனம்?
முகம்மதும் தன்னுடைய கொள்கையை திட்டங்களை செயல்படுத்த துன்ப துயரங்களைக் கடந்திருக்கிறார், மறுக்க முடியாது. ஆனால் ‘உணர்வு’ கும்பல் இதை இங்கு பெருமிகையாக எடுத்துக் கூற வேண்டிய தேவை என்ன? கடந்த பகுதிகளில் மார்க்ஸ், லெனின் உள்ளிட்ட ஆசான்களை முன்வைத்து உலகில் சோசலிசம் எவ்வாறு அவசியமாக இருக்கிறது என்று கம்யூனிஸ்ட் கூறுவது போல தங்கள் கற்பனை உரையாடலை அமைத்திருந்தார்களல்லவா அதற்கு எதிர்வினையாக முகம்மதுவின் வாழ்க்கை இங்கே விவரிக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது, மார்க்ஸ், ஏங்கல்ஸ், பகத்சிங் போன்றவர்களை விட எங்கள் முகம்மது உயர்ந்தவர், வெற்றியடைந்தவர் என்று காண்பிப்பதற்கும் முகம்மதின் துன்ப துயரங்கள் இங்கே காட்சிப் படுத்தப் பட்டிருக்கின்றன. இதனிடையே மார்க்ஸ் ஏங்கல்ஸை கொச்சைப்படுத்தும் விதமான அரசியலற்ற விமர்சனங்கள் கூட. ஒரே நூற்றாண்டில் அடிமைகளை விடுதலை செய்து, வறுமையை விரட்டி, மூட நம்பிக்கையை ஒழித்து, விவசாயத்தை கொழித்து, பொருளாதாரத்தை மேம்படுத்தி, உயர்வான நாகரீகத்தை அல்லாவின் துணையுடன் முகம்மதும் அவரைப் பின்பற்றியவர்களும் ஏற்படுத்தினார்கள். எனவே, கம்யூனிசத்தை விட இஸ்லாமே சிறந்தது என்பதைத் தான் ‘உணர்வு’ கும்பல் சொல்ல முயன்றிருக்கிறது.
ஒரு வித்தியாசத்தை இங்கே கவனிக்க வேண்டும். இது அவர்களே செய்யும் கற்பனை உரையாடல் என்றாலும் கம்யூனிசமே உலகின் தேவை என்பதை விளக்க கொள்கை சார்ந்த விசயங்களைப் பேசுகிறார் கம்யூனிஸ்ட். ஆனால் இஸ்லாமே உலகின் தேவை என்பதைக் கூற கொள்கை ரீதியான விசயங்கள் இல்லாமல் முகம்மது தன்னுடைய கொள்கையைக் கூற பட்ட துன்ப துயரங்கள் பேசப்படுகின்றன. கூடவே மூன்றாம் தர அரசியல்வாதியின் வாக்குறுதி போல் வறுமையை ஒழித்து, மூடநம்பிக்கையை விரட்டி என்று பொய்களின் அணிவகுப்பு. மட்டுமல்லாது மார்க்ஸ் உண்மையை மறைத்து விட்டார், குடிகாரர், ஏங்கல்ஸ் முதலாளி என்பன போன்ற புரிதலற்ற விமர்சனங்கள். மதவாதக் கும்பலிடம் இதற்குமேல் புரிதலை எதிர்பார்க்க முடியாது என்பதால் இஸ்லாமியர்களை நோக்கிய பயணத்தில் தொடரலாம்.
முகம்மது மதீனாவை மையமாக வைத்து உருவாக்கிய அரசு ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களின் மத்திய தரைக்கடல் பகுதிகளில் பரந்து விரிந்து ஒரு பேரரசாக உருவெடுத்தது. இரண்டாம் உலகப் போர் வரை ஒட்டாமன் பேரரசு [உஸ்மானிய பேரரசு] எனும் பெயரில் நீடித்தது. தற்போது சௌதி அரேபியாவில் இருக்கும் அரசு முகம்மது உருவாக்கிய அரசல்ல. முகம்மது உருவாக்கிய அரசான ஒட்டாமன் பேரரசை சௌத் என்பவர் பிரிட்டனின் உதவியோடு எதிர்த்துப் போரிட்டு தோற்கடித்து உருவாக்கிய அரசு. முகம்மது உருவாக்கிய அரசு பல நூற்றாண்டுகளாக நீடித்து நின்றதையும், அதன் மக்கள் எல்லா வளமும் பெற்று வாழ்ந்ததான ஒரு உருவகத்தையும் கொண்டு தான் இஸ்லாத்தின் வெற்றியை அறுதியிட்டிருக்கிறது ‘உணர்வு’ கும்பல்.
முதலில் ஒரு முரண்பாட்டை சுட்டிக் காட்டி விடலாம். ‘உணர்வு’ கும்பலும் அதையொத்த மதவாதிகளும் மதம் என்று வரும் போது முகம்மதுக்கு பின் வந்த ரஷ்ஷாதிய கலீபாக்களை தவிர்த்து ஏனைய மன்னர்களை இஸ்லாமிய மன்னர்களாக கூற மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அரண்மனை, அந்தப்புரம், குடி என்று ராஜபோகத்தில் திளைத்தவர்கள். மத விழுமியங்களை அலட்சியம் செய்தவர்கள். அதனால் அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்பார்கள். ஆனால் அதேநேரத்தில் அந்த மன்னர்களின் காலத்தில் செழித்தோங்கியிருந்த அறிவியல் கலை வளர்ச்சிகளை இஸ்லாத்தின் கொடையாக பெருமிதம் கொள்வார்கள். ‘உணர்வு’ கும்பலையும் அதையொத்த மதவாத கும்பல்களையும் புரிந்து கொள்ள இந்த முரண்பாட்டை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
அடிமை விடுதலை – மனிதனை மனிதன் அடிமை கொள்வது தவறு. அனைவரும் சக மனிதர்களே, சம உரிமை பெற்றவர்களே எனும் எண்ணம் முகம்மதுவிடம் இருந்ததில்லை. அவ்வாறான சிந்தனை முகம்மதுவிடம் இல்லாதது தவறும் அல்ல. ஏனென்றால், அது ஆண்டான் அடிமை காலகட்டம். ஆனால் முகம்மதுவிடம் இல்லாத அந்த சிந்தனையை இன்றைய மதவாதிகள் முகம்மதுவிடம் திணிக்க விரும்புகிறார்கள். அதனால் தான் முகம்மது அடிமை முறையை ஒழித்தார் என்று கூறிக் கொண்டு, அதற்கு ஆதாரமாக குற்றங்களுக்கு பகரமாக அடிமையை விடுதலை செய்யச் சொன்னதையும், அடிமை தனக்கான விலையைக் கொடுத்தோ அல்லது வேறொரு எஜமானன் அந்த விலையை கொடுக்க அனுமதித்ததையும் விடுதலை என்று காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாமிய தரவுகளின் படி இன்றும் ஒருவன் அடிமைகளை வைத்துக் கொண்டிருந்தால் அதனை குற்றம் என்று கொள்ள முடியாது. சௌதி அரேபியாவில் அண்மைக் காலம் வரை அடிமைகள் முறை இருந்தது. சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாக 1960ல் தான் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டது. வரலாறு இப்படி இருக்க செல்லும் இடமெல்லாம் அடிமைகளை விடுவித்துக் கொண்டு சென்றார்கள் என்று எந்த அடிப்படையில் கூறுகிறது ‘உணர்வு’ கும்பல்?
வறுமை ஒழிப்பு – தனியுடமை, வறுமை தோன்றியதிலிருந்து இன்று வரை வறுமை ஒழிப்பு என்பது பேசப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் வறுமை ஒழிப்பு தான் நடந்ததேயில்லை. பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசு ஏற்படும் போது மட்டும் தான் வறுமை ஒழிப்பை நோக்கி எட்டு வைக்க முடியும். ஏனென்றால், வறுமை என்பது தனி மனிதனோடு மட்டும் தொடர்பு கொண்டதல்ல. ஒரு மனிதனுக்கு கோடி ரூபாய் கொடுத்து விட்டு அவனது வறுமை ஒழிந்து விட்டது என்று கூற முடியாது. ஏனென்றால் அவன் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறான், அல்லது பிற மனிதனை சுரண்டிக் கொண்டிருக்கிறான். வறுமை ஒழிப்பு என்பது சுரண்டலை ஒழிப்பதோடு தொடர்பு கொண்டது. சுரண்டல் ஒழிக்கப்படும் போது தான் வறுமையை ஒழிக்க முடியும். சுரண்டலை தக்க வைத்துக் கொண்டு வறுமை ஒழிப்பு குறித்து பேசுவது அரசியல் வியாதிகளின் தேர்தல் நேரத்து வாக்குறுதியாக மட்டுமே இருக்கும். பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசு மட்டுமே சுரண்டலை ஒழிக்கும் நோக்கம் கொண்டது. மதீனாவில் முகம்மது ஏற்படுத்திய அரசு ஆண்டைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் முடியாட்சி வடிவிலான அரசு. இந்த அரசுக்கு சுரண்டலை ஒழிக்கும் நோக்கம் இருக்கவில்லை. ஆகவே, ‘உணர்வு’ கும்பல் கூறும் வறுமை ஒழிப்பு என்பதை அரசியல் வியாதிகளின் தேர்தல் வாக்குறுதியாக மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும்.
மூட நம்பிக்கை ஒழிப்பு – இதை மதவாத கும்பலான ‘உணர்வு’ கும்பல் கூறுவது தான் வேடிக்கையானது. அவர்களைப் பொருத்தவரை மூட நம்பிக்கை என்பது இஸ்லாம் அல்லாத பிற மதங்களிலிருக்கும், அதிலும் சன்னி வஹ்ஹாபிகளின் பிரிவைத் தவிர பிற இஸ்லாமிய பிரிவிலிருக்கும் மூட நம்பிக்கைகளை மட்டுமே குறிக்கும். பிறமத உருவச் சிலைகள் கடவுளைக் குறிக்கும் என்றால் அது மூடநம்பிக்கை. ஆனால் மக்காவிலிருக்கும் கல் தூண் சைத்தானைக் குறிக்கும் என்றால் அது மூட நம்பிக்கையல்ல. பழனியில் மொட்டையடித்தால் மூடநம்பிக்கை, மக்காவில் மொட்டையடித்தால் கடவுள் நம்பிக்கை. முகம்மது மக்காவிலிருக்கும் கஆபாவை பாதுகாத்துக் கொண்டு ஏமனிலுள்ள கஆபாவை இடித்துத் தள்ள ஆளனுப்பினார். அவருக்கு மக்காவிலுள்ள கஆபா கடவுள் நம்பிக்கை. ஏமனிலுள்ள கஆபா மூடநம்பிக்கை. இதை மூடநம்பிக்கை ஒழிப்பு என்று கூறுவதா? மதவெறி என்று கூறுவதா?
விவசாயம், பொருளாதாரம் – இதுவும் அரசு, அதன் கொள்கைகள் சார்ந்த விசயம் தான். ஓர் அரசு யாரின் பிரதிநிதியாக இருந்து மக்களை ஆள்கிறதோ அவர்களைச் சார்ந்து தான் பொருளாதாரத்தை கையாளும். எடுத்துக்காட்டாக, நிலம் கையகப் படுத்தும் மசோதாவை கொண்டுவர பாசிச மோடி அரசு கடும் முயற்சி எடுத்தது. விவசாயிகளுக்கு பலனளிக்கும் திட்டம் என்று தான் மோடி கூறுகிறார். அது சரி என்று கொள்ள முடியுமா? பொருளாதார முன்னேற்றம் என்றால் நாட்டில் ஒரேசீராக முன்னேற்றம் இருக்குமா? யாருக்கு முன்னேற்றம்? யாருக்கு பின்தள்ளல்? என்று பார்க்க வேண்டாமா? பொதுவாக விவசாயம் முன்னேறியது, பொருளாதாரம் முன்னேறியது என்றால் அதன் பொருள் என்ன? நாட்டிலுள்ள அனைவரும் முன்னேறினார்கள் என்பதா? இல்லை என்றால் யார் முன்னேறினார்கள்? யாரால் முன்னேற முடியவில்லை? இது தான் விசயம். பொதுவாக முன்னேற்றம் என்றாலது ஆளும் வர்க்கத்தின் குரல். எல்லா அரசுகளுமே வர்க்க அரசுகள் தாம். இதில் முகம்மது உருவாக்கிய அரசு மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா? அரசின் தன்மையோடு இணைக்காமல் முன்னேற்றம் குறித்து பேசுவது வறட்டு ஜம்பம். ‘உணர்வு’ கும்பல் பேசுவதும் வரட்டு ஜம்பம் தானேயன்றி வேறில்லை.
ஆக, முகம்மது ஏற்படுத்திய அரசும் பிற அரசுகளைப் போல நிறைகுறைகளுடன் கூடிய அரசு தான். ஒரு அரசை சிறந்த அரசு என்று கூற வேண்டுமென்றால் ஒப்பீட்டு அடிப்படையில் மட்டுமே கூற முடியும். எடுத்துக்காட்டாக, இராஜேந்திர சோழன் அரசை விட முகம்மதின் அரசு சிறந்திருந்தது என்பது போல் தான் கூற முடியும். முகம்மது ஏற்படுத்திய அரசு ஆண்டான் அடிமை காலகட்ட அரசு, அது நிலப்பிரபுத்துவ காலகட்டத்தைக் கடந்து முதலாளித்துவத்தின் தொடக்க காலம் வரை நீடித்திருக்கிறது. இதில் அந்தந்த காலகட்டத்தின் மாற்றங்களை உள்வாங்கி தன்னை தகவமைத்துக் கொண்டதால் தான் நீடித்து நிற்க முடிந்திருக்கிறது. இப்படியான மாற்றங்களை முகம்மதின் கொள்கை தீர்மானிக்க முடியாது. அந்தந்த காலகட்டங்களின் அரசியல் சூழல் தான் தீர்மானிக்க முடியும். எடுத்துக்காட்டாக இஸ்ரேல் எனும் நாட்டின் உருவாக்கத்தைப் பார்க்கலாம். முதல் உலகப் போரில் பிரிட்டனின் எதிர் அணியில் இருந்தது ஒட்டாமன் பேரரசு. ஒட்டாமன் பேரரசுக்கு உட்பட்டிருந்த அரேபியப் பிரதேசங்களில் பிரிட்டன் உருவாக்கிய தேசியப் பிரச்சனைகளால் பிரிட்டனுடன் ஒப்பந்தம் போட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இது தான் இஸ்ரேல் எனும் நாடு உருவாக சாதகமான அம்சமானது. இந்த ஒப்பந்தம் முகம்மதின் கொள்கையால் தீர்மானிக்கப்பட்டதா? அரசியல் சூழலாலா?
‘உணர்வு’ கும்பலைப் பொருத்தவரை அவர்களுக்கு அரசு குறித்த தெளிவான பார்வையோ, அரசியல் சமூக மாற்றங்கள் குறித்த அவதானிப்போ எதுவும் கிடையாது. பொத்தம் பொதுவாக முகம்மதில் தொடங்கி முதல் உலகப் போர் காலத்திய ஒட்டாமன் பேரரசு வரை ஒரே அரசு. அதில் தேனும் பாலும் ஓடியது. இதுவே இஸ்லாத்தின் வெற்றி. இப்படி குறுகிய, தட்டையான, அரசியலற்ற, மதவாதக் கண்ணோட்டத்திலிருந்து கொண்டு தான் அந்த கற்பனை உரையாடலை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆக, இப்படி அவர்கள் முகம்மதின் வரலாற்றையும், இஸ்லாமிய அரசின் பெருமைகளையும் கூறுவது இரண்டு நோக்கங்களுக்காக. 1. கம்யூனிசம் போலல்லாமல் இஸ்லாம் எவ்வளவு சீரும் சிறப்புமாக மக்களை வாழவைத்திருக்கிறது பாருங்கள். 2. பகத்சிங் இஸ்லாத்தின் மீது சில கேள்விகளை முன்வைத்திருக்கிறார். கடவுள் ஏன் ஏகாதிபத்தியங்களின் மனதை மாற்றி மக்களுக்கு நல்லது செய்யுமாறு அவர்களின் சிந்தனையை மாற்றவில்லை? ஒரு நாடு இன்னொரு நாட்டை சுரண்டுவதை ஏன் கடவுள் அனுமதித்திருக்கிறார்? இந்த கேள்விகளுக்கான பதில் கூறுவதற்காகவும் தான் முகம்மது பற்றியும், இஸ்லாமிய அரசு பற்றியும் விவரித்திருக்கிறார்கள். அதாவது ‘உணர்வு’ கும்பல் கூறும் இந்த வரலாறு தெரியாததால் தான் யூத கிருஸ்தவ மதங்களைப் போல் இஸ்லாத்தையும் எண்ணிக் கொண்டு பகத்சிங் புரியாமல் கேள்வி கேட்டிருக்கிறார் என்று கூறுகிறார்கள். இதை பார்த்து எந்த வாயால் சிரிக்க வேண்டும் என்று வாசகர்கள் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
இப்போது ‘உணர்வு’ கும்பல் கம்யூனிசத்தின் மீது வைத்திருக்கும் விமர்சனங்களைப்[!] பார்க்கலாம். மார்க்ஸ் குடிகாரர். குடித்து விட்டு தெரு விளக்குகளை உடைத்தார். இது எப்படி கம்யூனிசத்தின் மீதான விமர்சனமாகும் என தெரியவில்லை. வேண்டுமானால் மார்க்ஸின் மீதான விமர்சனம் என்று கூறலாம். ஆனால் அப்படியும் கூற முடியாது. ஏனென்றால் மார்க்ஸ் குடித்தார் என்பதை மார்க்ஸ் மறைக்கவில்லை. தன் நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார். மார்க்ஸியத்தைப் பின்பற்றும் கம்யூனிஸ்டுகளும் மறுக்கவில்லை. பின் எப்படி இது மார்க்ஸின் மீதான விமர்சனமாகும்? ஒருவேளை ‘உணர்வு’ கும்பல் மார்க்ஸின் கொள்கையே குடிப்பது என்பதாக கருதுகிறார்களோ. அப்படியென்றால் அதற்கு விளக்கமளிக்கலாம். குடிப்பது என்பதற்கு இந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கும் பொருள் ஐரோப்பாவில் இருக்குமா? இது பண்பாடு சார்ந்த விசயம் நாட்டுக்கு நாடு இது மாறுபடும். ஒரு எடுத்துக்காட்டை பார்க்கலாம். ஒரு அரேபிய வீட்டுக்கு ஒரு விருந்தாளி வருகிறார் என்று கொள்வோம். அந்த வீட்டிலிருக்கும் பெண்களையெல்லாம் ஒரு உள்ளறையில் அடைத்து வைத்து விட்டு விருந்தாளியை வரவேற்பார் அந்த அரபி. இதுவே ஒரு ஐரோப்பிய நாட்டினர் வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தால் அவரை ஆண் பெண் பேதமில்லாமல் கட்டியணைத்து வரவேற்பார்கள். இதை அந்த நாட்டின் பண்பாடு கலாச்சாரம் சார்ந்த விசயம் என்று கருதாமல், வீட்டுக்கு வந்த ஓர் அன்னியனை அந்த வீட்டின் பெண் பொது இடம் என்று கூடப் பார்க்காமல் தெருவில் நின்று கட்டிப்பிடித்து கொஞ்சிக் கொண்டிருந்தார் என்று கூறினால் அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? இந்தியாவைப் பொருத்தவரை குடிக்கு அடிமையான ஒருவர் கூட தன் மகன், தம்பி போன்ற நெருங்கிய உறவுகள் குடிப்பதை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் ஐரோப்பியாவைப் பொருத்தவரை சாப்பாட்டு மேஜையில் உயர்ந்த வகை மதுவைப் பரிமாறுவது கௌரவம் தரும் விசயம். பால் பேதம், உறவு பேதமின்றி அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது அங்கு சாதாரண விசயம். இதைத்தான் மார்க்ஸும் செய்தார். அவ்வாறு மது அருந்தியதை எழுதியும் வைத்திருக்கிறார்.
போதை குறித்த மார்க்ஸின் கருத்து என்ன? அரசுகள் தங்கள் குடிமக்களை பலவிதமான போதைகளில் ஆழ்த்தி வைக்க விரும்புகின்றன. மதம், கலை, விளையாட்டு உள்ளிட்டு அனைத்தையும் போதையாக்கி மக்களை அரசுக்கு எதிராக சிந்திக்க விடாமல் தடுப்பது ஆளும் வர்க்கத்த்தின் நோக்கங்களுக்கு உகந்ததாக இருக்கிறது. மதம் மக்களுக்கு அபினியைப் போல் செயல்படுகிறது என்று மதத்தையே போதையாக பார்த்தவர் சாராயம் குறித்து என்ன கருத்து கொண்டிருந்திருப்பார்? இப்படி கருத்து கொண்டிருக்கும் ஒருவரை நீங்கள் என்ன மாதிரி வகைப்படுத்துவீர்கள்? ஆனால் ‘உணர்வு’ கும்பல் ஏதோ சரக்கடித்து விட்டு சாக்கடையில் மல்லாந்து கிடந்ததைப் போல் உருவகப்படுத்த விரும்புகிறது. அவர்களின் தரம் அது தான். அவர்களுக்கு அப்படி தான் சிந்திக்க முடியும் என்பயே இது உணர்த்துகிறது. தவிரவும், தன் அணிகளிடையே பரவிவரும் மார்க்ஸ் குறித்த உயர்ந்த கருத்துகளை உடைக்க வேண்டிய தேவையும் அவர்களுக்கு இருக்கிறதே.
மார்க்ஸ் போதை திரவங்களை அருந்தினார் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அதை மார்க்ஸும் மறுக்கவில்லை, மார்க்ஸியர்களும் மறுக்கவில்லை. முகம்மது போதை திரவங்களை அருந்தினார் என்பது குறித்து ‘உணர்வு’ கும்பல் என்ன கருதுகிறது? மறுத்தால் ஹதீஸ்களின் வாயிலாக நீரூபிக்கிறேன். ஆம் முகம்மது சாராயம் குடித்தார் என்று ஒப்புக் கொள்ளுமா ‘உணர்வு’ கும்பல்?
அடுத்த விமர்சனம், ஏங்கல்சின் மனைவி மரணமடைந்திருக்கும் போது ஆறுதல் வார்த்தைகள் எதுவும் கூறாமல் பணம் கேட்டு கடிதம் எழுதினார் மார்க்ஸ் என்பது. ஆம், அப்படித்தான் நடந்து கொண்டார். அது தவறானது தான். மார்க்ஸ் பின்னர் தன் தவறை உணர்ந்து மனம் வருந்தி ஏங்கல்சுக்கு கடிதம் எழுதினார், தவறு செய்யாத மனிதர்கள் என உலகில் யாருமில்லை. ஆனால், அந்தத் தவறு உணரப்பட்டதா? அதற்கு அவரின் எதிர்வினை என்ன? என்பதில் தான் அவரைக் குறித்த மதிப்பீடே அடங்கியிருக்கிறது. மார்க்ஸ் குடும்பத்தின் வறுமை நிலையை உணர்த்த ஜென்னியின் ஒற்றை வரி போதுமானது, “எங்கள் குழந்தைகள் பிறந்த போது பால் வாங்க காசில்லை, இறந்த போது சவப்பெட்டி வாங்க காசில்லை” இது போன்ற நிலையில் நேர்ந்த தவறு அது. இதை அவர் உணர்ந்து வருந்தியிருக்கிறார். இதில் மார்க்ஸியர்கள் வெட்கப்படுவதற்கு என்ன இருக்கிறது? போலியாய் புனிதத்தை கட்டியமைத்து அதனை கட்டிக்காக்க பொய்களாக அடுக்கிக் கொண்டிருப்பவர்கள் தான் வெட்கப்பட வேண்டும். மார்க்ஸும் ஏங்கல்ஸும் நட்பின் இலக்கணமாக இருந்தார்கள் என்றால் அவர்களின் மொத்த வாழ்வையும் எடுத்துக் கொண்டு பரிசீலித்துப் பார்ப்பவர்களுக்குப் அது சரிதான் என்பது புரியும். யானையின் வாலை மட்டும் பிடித்துப் பார்த்த குருடன் யானை மூங்கில் குச்சி போல் இருக்கும் என்று தான் சொல்வான். உண்மையை விரும்புபவர்கள் அதனை பொருட்படுத்த வேண்டியதில்லை.
மார்க்ஸ் இந்த விசயத்தில் தவறு செய்திருக்கிறார். இதை மார்க்ஸும் மறுக்கவில்லை, மார்க்ஸியர்களும் மறுக்கவில்லை. முகம்மது புரிந்த தவறுகள் குறித்து ‘உணர்வு’ கும்பல் என்ன கருதுகிறது? வகை மாதிரிக்கு ஒன்றை பார்க்கலாமா? முகம்மதுக்கு ஒரே நேரத்தில் பல மனைவியர்கள் இருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான். அத்தனை மனைவியர்களுக்கு இடையில் ஒரு பகலில் ஒரு தோப்புக்குச் சென்று புதிதாக ஒரு பெண்ணிடம் கை நீட்டியிருக்கிறார். அந்தப் பெண் மறுக்க நல்ல சேலை பரிசளிக்குமாறு சீடர்களிடம் கூறி விட்டு அவமானப்பட்டு வெளியேறியிருக்கிறார். இது தெளிவாக ஹதீஸில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து முகம்மது என்ன நினைத்தார்? சரியா? தவறா? ‘உணர்வு’ கும்பல் இது குறித்து என்ன கருதுகிறது? ஒரு தவறு நடந்து அதை தவறு என உணர்ந்து மன்னிப்பு கோரியவர் மீது விமர்சனம் வைக்கும் மதவாதக் கும்பல், ஆணாதிக்கத் திமிரில் நடந்து கொண்ட முகம்மது, அதை தவறு என உணராத முகம்மது, மன்னிப்பு கோராத முகம்மது குறித்து என்ன விமர்சனம் வைக்கப் போகிறது?
எதை தனிப்பட்ட விசயமாக பார்ப்பது? எதை வாழ்வோடு பிணைந்த பொதுவான விசயமாக பார்ப்பது? பொது வாழ்வின் உரைகல்லாக விளங்கும் யாருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவும் இருப்பதில்லை. அனைத்தும் உரசிப் பார்க்கத் தக்கதே. அதன் மூலம் வந்தடையும் முடிவு தான் ஒருவரை புகழுக்கும் புழுதிக்கும் கொண்டு சென்று சேர்க்கும். ‘உணர்வு’ கும்பல் மார்க்ஸின் மீது வைத்த மது அருந்தியது, பணம் கேட்டு கடிதம் எழுதியது ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பார்த்தால் மார்க்ஸ் மட்டுமல்லாது மார்க்ஸியர்களும் நேர்மையானவர்களாக இருக்கிறார்கள். முகம்மது குறித்தும், முகம்மதியர்கள் குறித்தும் நாம் வந்தடையும் முடிவு என்ன? அங்கு எந்த நேர்மையையும் பார்க்க முடியவில்லை. சப்பைக் கட்டுகளும், போலியாக புனிதப்படுத்தலும் தான் இருக்கிறது. இது தான் மக்களை விடுதலை செய்ய நினைப்பவருக்கும், மக்களை ஆள நினைப்பவர்களுக்குமான வித்தியாசம்.
அடுத்து ‘உணர்வு’ கும்பல் எழுதியிருப்பது, \\\சுயமரியாதை இல்லாமல் ஏங்கல்ஸிடம் பணம் வாங்கிக் கொண்டு காலம் கழித்த மார்க்ஸ்/// இதைப் படிக்கும் போது இந்த மதவாதக் கும்பலின் மேல் பரிதாபம் தான் ஏற்படுகிறது. விமர்சிக்க வேண்டும் என்று ஆர்வம் இருக்கிறது. ஆனால் அதை எப்படி செய்வது என்பது தான் அவர்களுக்கு புரியவில்லை. வறுமை, அதைத் தீர்க்க வேலைக்கு செல்கிறார். அவரின் இயல்பு ஒரு முதலாளியின் கீழ் வேலை செய்ய இயலவில்லை. அவருடைய நண்பர் உதவ முன்வருகிறார். அதை ஏற்றுக்கொண்டு ஒரு சமூக அறிவியலாளனாக சமூக மாற்றங்கள் குறித்த மிக முதன்மையான கண்டுபிடிப்பைச் செய்கிறார். மிகச் சிறந்த படைப்புகளை ஏராளம் தருகிறார், ஒரு அறிவியலாளனாக ஓய்ந்திருக்காமல் ஒரு புரட்சியாளனாக உலகை மாற்ற கடைசி மூச்சு வரை நடைமுறையோடு இணைந்திருக்கிறார். மார்க்ஸின் பங்களிப்பை முதலாளித்துவ அறிஞர்களே மறுக்க முடியாத நிலையிலிருக்கும் போது இந்த மதவாதப் பைத்தியங்கள் \\\காலம் கழித்த/// என்று இழிவுபடுத்துகிறார்கள். இந்தப் புல்லர்களை ஒன்றே ஒன்று கேட்டு வைப்போம். கதீஜாவின் பெருஞ்செல்வத்தை உதாரித்தனமாக செலவு செய்து அழித்த முகம்மது புலம் பெயர்ந்த பின் என்ன வேலை செய்து வயிறு வளர்த்தார்? எந்த கொம்பனாவது பதில் சொல்ல முடியுமா? அதுவும் ஒரு வயிறல்ல ஏகப்பட்ட மனைவிகள் வேறு.
அப்புறம் ஏங்கல்ஸ் ஒரு முதலாளியாக இருந்து கொண்டு சோசலிசத்தை சொன்னதில் இந்த மதவாதப் புல்லர்களுக்கு என்ன வெட்கக் கேடு என்று ஒன்றும் புரியவில்லை. முதலாளியாக இருப்பவர் சோசலிசம் பேசக் கூடாது என்று அகராதி ஏதும் எழுதி வெளியிட்டிருக்கிறதா ‘உணர்வு’ கும்பல்? அல்லது அடிமையை வைத்துக் கொண்டே முகம்மது அடிமை விடுதலை பேசியதாக மதவாத ஜல்லியடிக்கிறார்களே அந்த அர்த்தத்திலிருந்து கிளைத்து வந்த அகராதியாக இருக்குமோ.
பின்குறிப்பு – விரிவஞ்சி இந்தப்பகுதி இந்த இடத்தில் முடிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாம் பின்பற்றக் கூடியது, மார்க்ஸியம் கடினமானது என்பது குறித்தும், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து மேற்கோள் காட்டி எழுதப்பட்டிருப்பது குறித்தும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
இத்தொடரின் முந்திய பகுதிகள்:
1. கற்பனை உரையாடலல்ல, காத்திரமான சொல்லாடல்
2. கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே
3. பதில்சொல்ல முடியாத டி.என்.டி.ஜே
4. வளைகுடாவில் வேலை செய்யும் முஸ்லீம்கள்
5. எதிலும் மேலோட்டமாக இருப்பதே மதவாதம்
6. துரோகி முகம்மதா மார்க்ஸா டி.என்.டி.ஜே பதில் சொல்லுமா?
பெண் குழந்தைகள் பிறந்தால் உயிரோடுப் புதைப்பார்கள் என்றால், எப்படி மனிதர்கள் உருவாக முடியும். பெண்களைக் கொன்று விட்டு ஆண்கள் குழந்தைப் பெற்றார்களா? பெண் குழந்தைகளைக் கொன்று விடும் சமூகத்தில், நபியின் முதல் மனைவியான கதீஜா எப்படி பெருவணிகராக இருக்க முடியும்? மூதாதையர்கள் வரலாற்றியல் ஆய்வில் அரபிகள் சிறந்து விளங்கியது, மிகப் பெரிய பண்பட்ட ஒரு சமூகத்தில் மட்டுமே நடக்க இயலுகிற ஒன்றல்லவா? கலைக்கென்றே ஒரு சந்தை (உக்காளா) கூடுமளவுக்கு மிகப் பெரிய பண்பட்ட சமூகமாக அல்லவா அரபிகள் சமூகம் இருந்தது? அரபு நாட்டின் விவசாய சமூகத்தை விடவும் நாடோடி அல்லது வணிக அரபு சமூகம் முன்னேறியிருந்தது என்பதும் வரலாறு அல்லவா?
திரு . செங்கொடி அவர்களே …
இந்த சுட்டியினை பார்க்கவும்.. இடது சாரி கருத்து கொண்ட எனக்கு லெனினை பற்றிய இந்த தகவல் மனதிற்கு மிகவும் நெருடலை ஏற்படுத்திய ஒன்று.. தயவு செய்து இதற்க்கு தகுந்த விளக்கத்தை அளிக்கவும் http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=27444&ncat=2
நண்பர் சித்தார்த்,
கம்யூனிசம் குறித்தும், ஆசான் லெனின் குறித்தும் அவதூறு பரப்ப வேண்டும் என்று வெறி பிடித்தலையும் மதவாத கூட்டங்களின் அழுகிய குப்பத் தகவல்கள் இவை. ஒதுக்கித் தள்ளுங்கள்.