கோடிக்கணக்கான மக்களின் வாழ்வோடு விளையாடிய அரசு

chennai flood

தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் சொல்வது சரியா?
அவருடைய அறிக்கையில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாக ஏதாவது இருக்கிறதா?

‘‘செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீரை ஒரே சமயத்தில் பெருமளவில் திறந்துவிட உத்தரவிட்டது யார் என்கிற விவகாரத்தில் பொதுப்பணித் துறை இன்ஜினீயர்கள், தலைமைச் செயலக அதிகாரிகள்… என இரு தரப்பினரும் மோதிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தால், பொதுப்பணித் துறையினர்தான் பொறுப்பு என்கிற தொனியில் வார்த்தைகள் இருப்பதைப் பார்த்து சம்பந்தப்பட்ட இன்ஜினீயர்கள் டென்ஷன் ஆகியிருக்கிறார்கள்’’ 

‘‘பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர், துறை செயலாளர் பழனியப்பன் ஐ.ஏ.எஸ்., பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன்… ஆகியோருக்கு இடையே என்ன நடந்தது என்பதுதான் தலைமைச் செயலகத்தில் தலைபோகிற விவாதமாக நடந்துகொண்டு இருக்கிறது. தலைமைச் செயலக அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்படும் தகவல்களைச் சொல்கிறேன்.

கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி காலையிலேயே பொதுப்பணித் துறை அதிகாரிகள், தலைமைச் செயலாளருக்கு ரெட் சிக்னல் காட்டிவிட்டார்கள். ‘இரண்டு நாட்களில் அதிகமான மழை பெய்யப் போவதாகத் தகவல் வருகிறது. எனவே, அதற்கு நாம் தயாராக வேண்டும்’ என்பதுதான் இவர்களது கோரிக்கை. முன்னேற்பாடாக சில வாக்குறுதிகளை அரசாங்கத்திடம் இருந்து வாங்கி வைத்துக்கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் துடித்தார்கள். ‘மேலே கேட்டுச் சொல்கிறோம்’ என்று சொல்லப்பட்டது. தகவல் இல்லை. 29-ம் தேதி காலையில் இதே தகவல் பொதுப்பணி அதிகாரிகளால் தரப்பட்டது. மாலையும் தரப்பட்டது. அப்போதும் சிக்னல் எதுவும் காட்டப்படவில்லை. 30-ம் தேதியும் காலை, மாலை இரண்டு நேரங்களிலும் இதேபோல் தகவல் சொல்லப்பட்டது. ‘இதோ முதல்வரைச் சந்திக்கப் போகிறேன். உடனே தகவல் தருகிறேன்’ என்று தலைமை அதிகாரி ஒருவர் சொன்னாரே தவிர, தகவல் தரவில்லை. அவர் கார்டனுக்கு போனாரா, இல்லையா என்பதும் தெரியவில்லை.

டிசம்பர் 1-ம் தேதி காலையில் பதற்றத்துடன் பொதுப்பணி அதிகாரிகள் பேசினார்கள். இன்று மதியம் சொல்கிறோம் என்று தகவல் வந்துள்ளது. மாலை 3 மணி அளவில் செம்பரம்பாக்கத்தில் இருந்த அதிகாரிகள், ‘இனி நாங்கள் இங்கு இருப்பதே சாத்தியமில்லை.அந்த அளவுக்குத் தண்ணீர் வரத்து அதிகமாகி வருகிறது’ என்றார்களாம். ம்ஹூம்! நோ ரெஸ்பான்ஸ். ‘உங்களால் தகவல் தர முடியாவிட்டால் நான் வருகிறேன்’ என்று ஒரு அதிகாரி சொல்லி இருக்கிறார். அதன்பிறகும் நோ ரியாக்‌ஷன். அன்று காலையில் 7,500 கன அடி தண்ணீர் திறந்ததாகவும் இரவில் 29 ஆயிரம் கன அடி திறந்ததாகவும் அதிகாரப் பூர்வமாகச் சொல்லப்படுகிறது.

அரசாங்கக் கணக்குப்படியே இவ்வளவு தண்ணீரை ஒரே நாள் இரவில் திறந்ததால்தான் சென்னை மூழ்கியது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் எச்சரித்த 28-ம் தேதியே உஷார் ஆகி, கொஞ்சம் கொஞ்சமாக திறந்துவிட்டிருந்தால் இந்தப் பாதிப்பு இருந்திருக்காது அல்லவா!”

‘‘கலெக்டர் சுந்தரவல்லி, வெள்ள அபாயம் குறித்து டிசம்பர் 1-ம் தேதியன்று அடுத்தடுத்து இரண்டு அறிக்கைகளை வெளியிட்டதாக தலைமைச் செயலாளர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறாரே?’’

‘‘7,500 கன அடி தண்ணீர் திறந்துவிடுவதாக பகல் 11.20 மணிக்கும், 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடுவதாக மதியம் 1.32 மணிக்கும் அறிக்கை வெளியிட்டதாகச் சொல்கிறார். முதல் அறிக்கையை எல்லோரும் பார்த்தார்கள். ஆனால், இரண்டாவது அறிக்கையை யாரும் பார்த்ததாகத் தெரியவில்லை. மாலையில் ஒரே ஒரு பத்திரிகையில் மட்டும், ‘20 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டலாம்’ என்றுதான் இருக்கிறது. அரசாங்கம் அறிவித்ததாகவோ, கலெக்டர் சொன்னதாகவோ அதிலும் இல்லை. ஆனால், அனைத்து மாலை நாளிதழ்களிலும் வந்ததாக தலைமைச் செயலாளர் எப்படிச் சொல்கிறாரோ தெரியவில்லை. மேலும், இவ்வளவு குறுகிய நேரத்தில் அடுத்தடுத்து அறிக்கைகளை ஒரு கலெக்டர் வெளியிட்டால், ஆற்று ஓரங்களில் குடியிருக்கும் மக்கள் எப்படி உஷாராக முடியும்? அரசு இயந்திரம் எப்படிச் சமாளிக்க இயலும்?… இந்த முடிவை ஏன் இவ்வளவு காலதாமதமாக எடுத்தார்கள் என்பதுதான் கேள்வி. பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர், சென்னை கலெக்டர், சென்னை போலீஸ் கமிஷனர், சென்னை கார்பரேஷன் கமிஷனர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது என்றால் அவர்கள் கூடிப் பேசினார்களா என்பதும் தெரியவில்லை!”

‘‘தலைமைச் செயலாளரின் அறிக்கையில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாக ஏதாவது இருக்கிறதா?”

‘‘முக்கியமான பாயின்ட் ஒன்றை கவனியும். அவர் அறிக்கையில் எங்குமே ‘முதல்வர் ஆணைப்படி’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. சின்னச் சின்ன விவகாரங்கள் என்றால்கூட முதல்வரின் ஆணைப்படி என்கிற வார்த்தையை கட்டாயம் பயன்படுத்து வார்கள். தலைமைச் செயலாளர் ஏன் பயன்படுத்தவில்லை என்பதில் இருந்தே புரிந்தால் சரி. ஏதாவது பிரச்னையில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே முதலமைச்சர் பெயரை இதில் சம்பந்தப்படுத்தவில்லை. பொதுப்பணித் துறையின் உதவிப் பொறியாளரே எல்லா முடிவுகளையும் எடுக்கலாம் என்று சொல்லி மொத்த அதிகாரத் தலைகளையும் காப்பாற்ற மட்டுமே இந்த அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடு விளையாடிய ஒரு விவகாரத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் இவர்கள் என்பதை நினைத்தால் பதற்றமாக இருக்கிறது’’ ….

ஜூனியர் விகடன்-மிஸ்டர் கழுகு பகுதியில் இருந்து…
20 Dec, 2015

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

2 thoughts on “கோடிக்கணக்கான மக்களின் வாழ்வோடு விளையாடிய அரசு

  1. 4 லட்சம் கொடுக்க,விவசாயிகலின் கொரிக்கையை எர்ரு தன்னீர் திரந்து விட இதர்கெல்லாம் எங்கல் தாத்தா பாட்டியின் சொத்து என்பதால் ஆனையிடுவொம்.மர்ரதெல்லாம் அதிகாரிகல்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்