உக்ரைன் பிரச்சனையில் மூக்குடைபட்டது யார்?

0023ae606e66148c858101

 

உக்ரைன் உண்மைகளை மறைக்கும் தமிழ் இந்துதொடர் – 6

தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க 

 

உக்ரைன் தொடரை, ‘தமிழ் இந்துகீழ்க்கண்டவாறு முடித்திருக்கிறது.

 

தன்னுடைய எல்லையைப் பல்வேறு திசைகளில் அதிகரித்துக் கொள்ள ரஷ்யா முயற்சி செய்கிறது. முதலில் ஜார்ஜியா, அடுத்ததாக கிரிமியா இப்போது கிழக்கு உக்ரைன். உக்ரைனிலேயே ரஷ்ய ஆதரவாளர்கள் கணிசமாக இருப்பதால் பிரச்சினை இப்போ தைக்குத் தீரப் போவதில்லை

 

அதாவது ரஷ்யா ஒவ்வொரு நாடாக ஆக்கிரமித்து வருவதால் உக்ரைன் பிரச்சனை இப்போதைக்கு தீராது என்பது தமிழ் இந்துவின் முடிவு. இந்த முடிவு எவ்வளவு அயோக்கியத் தனமானது என்பதை முன்பே கண்டிருக்கிறோம். ‘தமிழ் இந்துவைப் பொருத்தவரை முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளை அமெரிக்கா ஒவ்வொன்றாக தன் பிடிக்குள் கொண்டுவந்து கொண்டிருப்பது குறித்து தமிழ் இந்துவுக்கு கவலையோ, கருத்தோ ஒன்றுமில்லை. ஆனால் அதற்கு எதிராக ரஷ்யா நடவடிக்கை எடுத்தால் அது நாடு பிடிக்கும் ஆக்கிரமிப்பு. இப்படி அப்பட்டமாக அமெரிக்க அடிவருடித் தனத்தை கைக் கொண்டிருக்கும் தமிழ் இந்துதான் வாய்மை நின்றிட வேண்டும் என்பதை தன் முழக்கமாக வைத்திருக்கிறது.

 

இப்படி அப்பட்டமாக தன்னை வெளிக்காட்டிக் கொண்ட தமிழ் இந்துதம்மையறியாமல் ஒரு உண்மையும் போகிற போக்கில் எழுதிச் சென்றிருக்கிறது.

“ரஷ்யா உக்ரைன் மோதலில் நேட்டோ அமைப்பின் பங்கும் வெகுவாக அலசப்படுகிறது. 2008-ல் இந்த அமைப்பு உக்ரைனையும் ஜார்ஜியாவையும் தாங்கள் உறுப்பினர்களாக அனுமதிக்கப் போவதில்லை என்று அறிவித்தது. இதன் பிறகு ரஷ்யா, உக்ரைனுக்கிடையே கொஞ்சம் நல்லுறவு மலர்ந்தது போல இருந்தது”

இதில் தெளிவாக ரஷ்ய உக்ரைன் மோதலுக்கான உண்மையான காரணம் நேட்டோ உக்ரைனையும் ஜார்ஜியாவையும் தன்னுடைய உறுப்பு நாடாக ஆக்க முனைந்தது தான் என்பது வெளிப்பட்டிருக்கிறது. யதார்த்தம் எப்படி இருந்தாலும் அமெரிக்காவுக்கு பக்கமேளம் வாசிப்பது என்பது தமிழ் இந்துவுக்கு மட்டுமல்ல. அனைத்து அச்சு, காட்சி ஊடகங்களுக்கும் பொதுவான தன்மையாக மாறிப்போய் வெகு காலம் ஆகிறது. காரணம் எந்த வகையிலேனும் கம்யூனிசத்தை எதிர்க்க வேண்டும் என்பதைத் தாண்டி வேறொன்றும் இல்லை. தற்போதைய ரஷ்யாவுக்கும் கம்யூனிசத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்ற போதிலும், ரஷ்யாவை, சீனாவை இன்னமும் அவர்கள் கம்யூனிசத்தின் ஒரு குறியீடாகத்தான் பார்க்கிறார்கள். அவ்வளவு தான்.

 

இப்போது உக்ரைன் பிரச்சனை ஓரளவு தீர்ந்திருக்கிறது, அல்லது உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை என்றாலும், அன்றைய நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் எடுத்த நடவடிக்கைகளும் அதற்கு ஒத்து ஊதிய ஊடகங்களும் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் ரஷ்யாவின் மீது விதித்த பொருளாதரத் தடைகள் ரஷ்யாவின் ரவுடித்தனத்தை ஒழித்துக் கட்டி சர்வதேச அரங்கில் (அதாவது அமெரிக்காவின் முன்) மண்டியிட வைத்து விடும் குஷியாக எழுதின. ஆனால் உக்ரைன் பிரச்சனையில் அடிவாங்கியிருப்பது அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் தான். அதனால் தான் சர்வதேச ஊடகங்கள் இதை அப்படியே கழனிப் பானைக்குள் ஊறவைத்து விட்டு அடுத்த பிரச்சனைகளுக்கு நகர்ந்து விட்டன.

 

இதற்கு ரஷ்யா மூன்று விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

1. எரிவாயு ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தும் முயற்சியை தீவிரப்படுத்தியது.

2. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு தடை விதித்தது.

3. சைபீரிய வான்பரப்பை பயன்படுத்தும் ஐரோப்பிய ஒன்றிய விமானங்களுக்கு தடைவிதிக்க ஆலோசிப்பதாக அறிவித்தது.

 

உக்ரைனுடனான எரிவாயு பிரச்சனை குறித்து ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ரஷ்யா ஒரு எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடு. ரஷ்யாவின் எரிவாயு இல்லாமல் ஐரோப்பிய யூனியனால் இருக்க முடியாது. கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை (ஓபெக்) ஏற்படுத்தி இருப்பது போல் எரிவாயு உற்பத்தி செய்யும் நாடுகளும் உருவாக்க வேண்டும் என்று கத்தார், ஈரான் போன்ற அரேபிய நாடுகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியது ரஷ்யா. இந்த முயற்சி வெற்றிடைந்து ஒரு கூட்டமைப்பு உருவாகி அது எரிவாயு விலையை தீர்மானிக்கும் நிலை வந்தால் ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். ஏனென்றால் ரஷ்யாவின் எரிவாயு இல்லையென்றால் ஐரோபிய யூனியன் நாடுகள் குளிரில் நடுங்க வேண்டியதிருக்கும்.

 

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து ரஷ்யா உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கிறது. காய்கறிகள், பால் பொருட்கள் போன்றவற்றை முக்கியமாக இறக்குமதி செய்கிறது. இவைகளை வெனிசூலா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை தொடங்கிய்துமே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அலறத் தொடங்கி விட்டன.

 

ஐரோப்பிய, அமெரிக்க விமான நிறுவனங்கள் ஜப்பான் சீன போன்ற நாடுகளுக்குச் செல்ல ரஷ்யாவின் சைபீரிய வான்பரப்பை பயன்படுத்துகின்றன. இதற்கு தடை விதிக்க ஆலோசிப்பதாக ஒரு செய்தியை கசிய விட்டது. ஒருவேளை அப்படி ஒரு தடையை ரஷ்யா விதிக்குமானால் அமெரிக்க ஐரோப்பிய விமானங்கள் துருவப் பகுதியை சுற்றிக் கொண்டு பறக்க வேண்டும். இதனால் கூடுதல் எரிபொருள் செலவும், கூடுதல் நேரமும் ஆகும். எனவே பயணத்திற்கான கட்டணத்தை அதிகரிப்பது தவிர்க்க முடியாததாகும். இதேநேரம் ஏனைய விமானங்களுக்கு தடை இல்லை என்பதால் அவை வழக்கமான கட்டனத்திலேயே இயங்கும். இது அமெரிக்க, ஐரோபிய விமான நிறுவங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

 

இவைகளல்லாமல் இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. அமெரிக்க பொருளாதாரம் சப் பிரைம் நெருக்கடியிலிருந்து இன்னமும் மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் கச்சா எண்ணெய் விலை உயர்வினால் ரஷ்யா பெரும் பொருளாதார லாபமடைந்தது. (தற்போதைய விலை குறைப்பு ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கயாக பார்க்கும் பொருளாதார வல்லுனர்களும் உண்டு) இதனால் ஐரோப்பிய பெரு நிறுவனங்கள் ரஷ்யாவில் முதலீடு செய்ய ஆரவம் காட்டுகின்றன. குறிப்பாக எரிவாயு உற்பத்தியில் முதலீடு செய்ய விரும்புகின்றன. இதற்கு பகரமாக ஐரோப்பிய அணு உலைகளில் ரஷ்ய நிறுவனங்கள் முதலீடு செய்ய நிபந்தனை போடுகின்றன. இதற்கு ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை இடையூறாக இருக்கிறது.

 

ஒட்டுமொத்தமாக பார்த்தால் ரஷ்யா மீது அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடை ரஷ்யாவை பாதித்ததை விட அமெரிக்க ஐரோப்பியாவை அதிகம் பாதித்தது. இதனால் பொருளாதரத் தடை பிசுபிசுத்துப் போனது. அண்மையில் ரஷ்ய எரிவாயு நிறுவனம் ஒன்றுக்கும் ஷெல் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பொருளாதாரத் தடை குறித்து யாருக்கும் கவலை இல்லை.

 

ரஷ்யாவுக்கு 21ம் நூற்றாண்டு ஆயுதங்களுடன் பதிலடி கொடுப்போம் என கொக்கரித்த அமெரிக்கா இன்று எந்த பதிலடியும் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறது. ஆனால் அமெரிக்கா அமைதியாக இருக்காது. அமைதியாக இருப்பது அதன் இயல்பிலேயே இல்லை. உக்ரைன் பிரச்சனையை அமெரிக்கா இவ்வளவு தீவிரமாக அணுகியதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

1. பதிலிப் போருக்குப் பிறகு தன்னை எதிர்க்க யாரும் இல்லை என்று உலகின் போலீசாக நடந்து கொண்டு வருகிறது அமெரிக்கா. உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கை அமெரிக்காவுக்கு சமமாக ரஷ்யா மீண்டும் வளர்ந்து விட்டதன் குறியீடாக அமெரிக்கா கருதியது.

2. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கையானது, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து செய்து வரும் நடவடிக்கைகளின் எதிர் விளைவு என்பதை மறைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

இந்த காரணங்களினால் தான் தன்னிடமிருக்கும் ஊடக பலத்தைப் பயன்படுத்தி ரஷ்யா மீது ஆக்கிரமிப்பாளன் தோற்றத்தை ஏற்படுத்த பகீரதப் பிரயத்தனம் செய்தது. அது போதிய பலன் தராமல் போகவே அடுத்த வாய்ப்புக்காக அமைதி காக்கிறது.

 

அன்று முதல் இன்று வரை, சிலியின் அலண்டோ தொடங்கி லிபியாவின் கடாபி வரை அமெரிக்காவின் ரத்தக்கரை தெரிக்காத நாடே உலகில் இல்லை. இதை மறைப்பதற்கு அதன் கையிலிருக்கும் சர்வதேச ஊடகங்கள் கம்யூனிசத்தின் மீதான அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றன. அதை அப்படியே பிராந்திய ஊடகங்களும் வாந்தியெடுத்து வருகின்றன. அப்படியான் ஒரு தொடர் தான் தமிழ் இந்துவின் உக்ரைன் பற்றிய இந்த தொடர்.

 

ஒரு பக்கம் கம்யூனிசம் செத்து விட்டது என்று தொடர் பிரச்சாரம். மறு பக்கம் வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் கம்யூனிச அவதூறுகள். செத்து விட்ட ஒன்றுக்காக எதற்காக அவதூறுப் பிரச்சாரத்தை தொடர்ந்து செய்ய வேண்டும். உலகை கம்யூனிச பூதம் பிடித்தாட்டுகிறது என்று அன்றே ஆசான்கள் எவ்வளவு தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இத் தொடரின் முந்திய பகுதிகள்

1. உக்ரைன் உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’

2.  பொய் சொல்லக்கூட தெரியாத தமிழ் இந்து நாளிதழ்

3. தமிழ் இந்துவின் அமெரிக்க ஆவர்த்தனம்

4. தமிழ் இந்துவின் விசமத்தனம்

5. பொய்மை நின்றிட வேண்டும் – தமிழ் இந்துவின் முழக்கம்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

குடியரசு கொண்டாட்டம் ஒரு முரண்தொடை

image0101310

 

கிடத்தப்பட்டிருக்கும் அந்த உடலின்

கைகளில் இன்னும் காயவில்லை

மலம் அள்ளிய ஈரம்.

ஒருமுறை கைதட்டிக் கொள்வோம்

ஐந்து செயற்கைக் கோளுடன்

வெற்றிரமாக ஏவப்பட்டது ராக்கெட்.

 

வெமுலாக்கள் சாதி வெறியால் மரணம்

ஆனால் என்ன?

தலித்தா இல்லையா ஆய்வு செய்வோம்.

கொஞ்சம் பாராட்டலாம்

ஊனமுற்றோர்க்கு மோடி

சக்கர நாற்காலி வழங்கினார்.

 

இடுகாட்டுக்கு பாதையில்லை

போலீசே பிணம் திருடி

புதைத்த கொடூரம்.

பெருமிதம் கொண்டால் என்ன?

பன்னாட்டு தரத்தில் எட்டு வழி

வழுக்கும் சாலைகள்.

 

இரு கால், ஒரு கை செயல் தராவிடினும்

அபாயகரமான பயங்கரவாதி

பேராசிரியருக்கு நீதிமன்றம் தந்த பெயர்.

இந்தியராய் பெருமை கொள்வோம்

பதான்கோட்டில் தீவிரவாதிகள்

சுட்டுக் வீழ்த்தப்பட்டனர்.

 

பனங்கள் இறக்க அனுமதிக்க மாட்டோம்

டாஸ்மாக்குக்கு இலக்கு நிர்ணயித்தவாறே

சட்டமன்றத்தில் அமைச்சர்.

இதெல்லாம் ஒரு பிரச்சனையா?

வெள்ள நிவாரணம்

முறையாக கொடுக்கப்பட்டது.

 

கச்சா எண்ணெய் விலை இறங்க இறங்க

பெட்ரோல் விலை உயரும்

இது மோடி விதி.

அதனால் என்ன?

பென்ஸ் கார் இரண்டு லட்சம்

திட்டம் இருக்கிறதே.

 

அடடே! மறந்து விட்டேன்.

மக்கள் வதங்கினால் என்ன?

இன்று குடியரசு தினம்.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

ரோஹித் வெமுலா: கொலை செய்தவர்களை என்ன செய்வது?

12507441_1129797033699125_5059966828576283960_n

மீண்டும் ஒரு முறை பார்ப்பனிய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய மாணவன் ஒருவன் கொலை செய்யப்பட்டிருக்கிறான். ஒருபக்கம், “கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான்.. தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான்” என்று பாட்டுப் பாடி கலை என்ற பெயரில் பார்ப்பனிய நச்சுக் கருத்தை மக்களிடம் பரவ விடுகிறார்கள். மறுபக்கம் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் உயர் கல்வி நிறுவங்களுக்குள் நுழைந்து விட்டாலோ கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஏதாவது ஒரு விதத்தில் கொலை செய்து விடுகிறார்கள். இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்? என்று ஒரு பக்கம் பொதுக் கருத்தை உருவாக்க முயல்கிறார்கள். மறுபக்கமோ பொதுப் பாதையில் ஒடுக்கப்பட்டவர்கள் பிணத்தைக் கொண்டு சென்றால் காவல் துறையே பிணத்தைப் பிடுங்கி தனிப் பாதையில் கொண்டு சென்று புதைக்கிறது. பழைய மனுவின் காலம் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்று அத்தனை துறையும் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதன் வெளிப்பாடு தான் இது. இதற்கான இப்போதைய சான்று தான் ரோஹித் வெமுலாவின் கொலை.

கடந்த டிசம்பர் 21ம் தேதியிலிருந்து ரோஹித் வெமுலா உட்பட ஐந்து மாணவர்கள் ஹைதராபாத் பல்கலைக் கழகத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தார்கள்.  ஏன் இவர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள் என்பதை அறிய வேண்டுமென்றால் அதை முசாபர் நகர் படுகொலைகளிலிருந்து தொடங்க வேண்டும்.

இந்திய அரசு நிர்வாகம் பார்ப்பன மயமாகி இருப்பதற்கு தனியே சான்றுகள் ஏதும் தேவையில்லை. ஆனாலும் மோடி ஆட்சியேறிய பிறகு பரிவாரக் குரங்குகள் அனைத்துக்கும் வெறி பிடித்திருக்கிறது. மாட்டுக்கறி இருக்கிறதா என்று எந்த வீட்டிலும் நுழைந்து சோதனை செய்யும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது. இரயில் பயணத்தில் கூட யாரையும் சந்தேகப்பட்டு சோதனை செய்து அடித்து உதைக்கும் அதிகாரம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. காதலர்களைக் கண்டு விட்டால் கலாச்சார காவலர்களாகி எந்த பாசிச எல்லைக்கும் செல்ல முடியும் அவர்களால். இப்படி ஒரு பெண்ணை கேலி செய்ததான முகாந்திரத்தில் தான் முசாபர் நகரில் கலவரம் என்ற பெயரில் படுகொலைகள் நடத்தப்பட்டன. இதை நாடெங்கிலும் உள்ள முற்போக்கு சக்திகள் கண்டித்தன. அதன் ஒரு வடிவமாக “முசாபர் நகர் பாக்கி ஹை” எனும் ஆவணப்படம் வெளிவந்தது.

இதை டெல்லி பல்கலைக் கழகத்தில் திரையிட முனைந்த போது அந்த பரிவாரக் குரங்குகளின் அட்டகாசத்தால் திரையிட முடியாமல் போனது. ஆனால் ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் அந்தக் குரங்குகளின் அட்டகாசத்தை மீறி ‘அம்பேத்கார் மாணவர் கூட்டமைப்பு’ அந்த ஆவணப்படத்தை திரையிட்டது. இப்படத்தை திரையிட்டது தேச துரோக குற்றம் என்பது போல்

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் எனும் அமைப்பு ரவுடித்தனத்தில் ஈடுபட்டு அமபலப்பட்டுப் போனது. மட்டுமல்லாது யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி காவிக் காலிகளை அம்பலப்படுத்தும் பணியையும் அம்பேத்கார் மாணவர் கூட்டமைப்பு செவ்வனே செய்தது. இதை நேரடியாக எதிர்க்க முடியாததால் நரித்தனத்தில் இறங்கியது ஏ.பி.வி.பி. பல்கலைக் கழக தலைமைக்கும், மத்திய தொழில்துறை இணையமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கும் பொய்ப்புகார்களை அனுப்பினார்கள். தத்தாத்ரேயா ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் அம்பேத்கார் மாணவர் கூட்டமைப்பு என்ற பெயரில் தேசத்துரோக பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாக அமைச்சர் சுமிதி இரானிக்கு எழுதி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தான் ரோஹித் வெமுலா உட்பட ஐந்து ஒடுக்கப்பட்ட மாணவர்கள் நீக்கப்படுகிறார்கள். இதனை எதிர்த்து அவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே தறகாலிக கூடாரம் அமைத்து பதினைந்து நாட்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருந்த நிலையில், மாணவர்கள், ஜனநாயக சக்திகள் என அனைவரும் அந்த போராட்டத்துக்கு ஆதரவளித்த நிலையில் திடீரென கடந்த 17ம் தேதி ஞாயிறு இரவில் விடுதி அறையில் பிணமாகத் தொங்கினார் ரோஹித் வெமுலா. அதிர்ச்சியடைந்த மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த போராடிய ஆறு மாணவர்களைக் கைது செய்த காவல் துறை, யாருக்கும் சொல்லாமல் ரோஹித் வெமுலாவின் உடலை திருடிச் சென்று போஸ்ட்மார்ட்டம் கூட செய்யாமல் எரித்து விட்டது.

ரோஹித் வெமுலாவின் கடைசிக் கடிதம் கிடைத்திருப்பதால் அது தற்கொலை என்று முடிவு செய்யப்பட்டு விட்டது. என்றாலும் இறந்த மாணவனின் உடலை திருடிச் சென்று எரிக்கும் அதிகாரம் காவல்துறைக்கு உண்டா? இதே நிகழ்வு தான்

திருநாள்கொண்டச்சேரி கிராமத்திலும் நடந்திருக்கிறது. என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் காவல்துறையின் இந்த அதிகாரம் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டாமா?

தற்கொலை என்றாலும் கூட இது நிறுவனக் கொலை தான் என்பதற்கு நிரூபணம் எதுவும் தேவையில்லை. அதாவது கொலை செய்வதற்குப் பதிலாக தற்கொலை செய்யும் அளவுக்கு நெருக்குதல் தொடுப்பது. தற்போது தத்தாத்ரேயா, சுமிதி இரானி, துணைவேந்தர் ஆகியோரை கொலை வழக்கில் கைது செய்யக் கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரசும், ஊடகங்களும் கள்ள மௌனம் சாதிக்கின்றன. இன்னும் சில நாட்களில் போராட்டங்களும் கூட குறைந்து போகலாம். அடுத்தொரு கொலை நிகழும் வரை இது ஒரு சம்பவமாக் கூட எஞ்சி விடலாம். ஆனால் இது போன்ற கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டாமா? எனும் கேள்வியை என்ன செய்வது?

ரோஹித் வெமுலா முதன்முறையோ கடைசி முறையோ அல்ல. கடந்த நான்கு ஆண்டுகளில் பதினெட்டு தலித் மாணவர்கள் இது போல் உயர் கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனை பேரை இந்த பட்டியலில் சேர்ப்பது?

ரோஹித் வெமுலாவும் ஏனையோரும் ஏன் எதனால் தற்கொலை நோக்கி நெட்டித் தள்ளப்படுகிறார்கள்? தாத்ரியில் ஒரு இஸ்லாமிய முதியவர் கொல்லப்பட்டதற்கும் இதற்கும் ஒரு வேறுபாடும் இல்லை. பொது இடங்களில் வானரங்கள் நேரடியாக தாக்குதலில் இறங்குகின்றன. அதுவே உயர் கல்வி நிருவனங்கள் என்றால் கல்லூரிகளிலிருந்து, விடுதிகளிலிருந்து நீக்கப்படுதல், உதவித் தொகையை நிறுத்துதல், உரிய அங்கீகாரம் கிடைக்கவிடாமல் செய்தல் என நிர்வாக வழிகளில் தாக்குதல் நடக்கிறது. அரசுப் பதவிகள் என்றால் தேர்வு செய்ய மறுப்பது, சிறு குறைகளுக்கும் மீப்பெரும் தண்டனைகளை வழங்குவது. வங்கிகளில் இஸ்லாமியர்கள், தலித்கள் வாழும் பகுதிகளுக்கு கடன் தர மறுப்பது. நீதிமன்றங்களில், மருத்துவமனைகளில், நிர்வாகத் துறைகளில் என எல்லா இடங்களிலும் நடப்பது ஒன்றுதான், வடிவங்கள் மட்டுமே வேறு வேறு.

நாங்கள் உற்பத்தி செய்து குவிக்கும் நுகர் பொருட்களை வாங்கும் சக்தியற்ற யாரும் உயிர் வாழத் தகுதியற்றவர்கள் என்கிறது ஏகாதிபத்தியம். பார்ப்பனிய அடிமைகளைத் தவிர வேறு யாரும் இந்தியாவில் இருக்கத் தகுதியற்றவர்கள் என்கிறது பார்ப்பனீயம். இதை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சாம பேத தண்டங்களை வீசத் தயங்க மாட்டோம் என்கிறது பார்ப்பனீயம்.

ரோஹித் வெமுலாவும் ஏனையோரும் ஏன் கொல்லப்பட்டார்கள்? ஒடுக்கப்பட்டவர்கள் என்பவர்கள் பெரும்பான்மை காட்டுவதற்காக இந்து எனும் பட்டிக்குள் அடைபட்டிருக்க வேண்டும். தேர்தல் வழியாக அதிகாரம் பெறுவதற்கோ, அல்லது வேறு பலன்களுக்காகவோ கை காட்டிய இடத்தில் இஸ்லாமியர்கள் கிருஸ்தவர்கள் மீது ஏவல் நாய் போல் பாய்ந்து குதற வேண்டும். இது தான் தலித்துகள் குறித்த பார்ப்பனியத்தின் இலக்கணம். இதை மீறி பார்ப்பனியத்துக்கு எதிராக செயல்பட்டாலோ, பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டாலோ அவர்கள் கொல்லப்படும் அல்லது தற்கொலைக்குள் தள்ளப்படும் தகுதியை எட்டுவார்கள்.

இதை மழுங்கடிக்கும் நைச்சியங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த இலக்கணத்துக்குள் இருக்க விரும்புகிறோமா? என்பது தான் முக்கியமான கேள்வி. நிகழ்வதை ஆழ அவதானிக்காமலிருப்பது கூட குற்றமில்லை. ஆனால் நிகழ்வதை வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்ப்பது அதிக ஆபத்தானது. பார்ப்பனிய மதத்துக்குள் நீடிக்க வேண்டுமா என்பது கடைசிக் கேள்வி. இப்போதைக்கு ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையோர் ஒன்றிணைய வேண்டும். சாதி மத ஏனைய பேதங்களை மறந்து வர்க்க அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும். ஒன்றிணைந்து பார்ப்பனியத்துக்கு ஆதரவான ஒவ்வொரு செங்கலும் நொருக்கப்பட வேண்டும். இன்று நடக்கும் போராட்டங்கள் மக்களை இந்த நோக்கத்தை நோக்கி கொண்டுவருவதற்கு பயன்பட வேண்டும். ரோஹித் வெமுலா செய்ததும் அது தான், இனியொரு ரோஹித் வெமுலா உருவாகாமல் தடுப்பதும் அது தான்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

பதான்கோட் – இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையே

pathonkot_2692291f

கடந்த வாரம் பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் என்னுமிடத்தில் உள்ள விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஐந்து நாட்கள் நீண்ட இந்த தாக்குதலில் ஏழு வீரர்களை இழந்து ஆறு பயங்கரவாதிகளைக் கொன்றிருக்கிறார்கள். முதலில் ஜெய்ஷ் இ முகம்மது எனும் அமைப்பு நடத்தியதாக கூறப்பட்டாலும் பின்னர் ஐக்கிய ஜிஹாத் எனும் அமைப்பு இத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. ஒப்பீட்டளவில் இந்த முறை தேச பக்தி பொங்கி பெருக்கெடுத்து ஓடவில்லை. அது போலவே ஊடகங்களில் வழியும் இஸ்லாமிய வெறுப்பும் அடக்கி வாசிக்கப்பட்டதாகவே தெரிகிறது. என்றாலும் நடந்து முடிந்த இந்த தாக்குதல் நிகழ்வின் மீது கேள்விகள் இல்லாமலில்லை.

ஆகஸ்ட் 15, ஜனவரி 26, டிசம்பர் 6 போன்ற நாட்கள் எதிர் வருகின்றன என்றால், நாட்டிலுள்ள புலனாய்வு, இரகசிய தகவல் பிரிவு புலிகள் எல்லாம் எங்கெங்கு தீவிரவாதிகள் பதுங்கியிருக்கிறார்கள்? எங்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்? எதை குறி வைத்திருக்கிறார்கள்? என்று அருகில் இருந்து பார்த்தது போல் தகவல் பரப்புவர்கள். நாடே அமளிதுமளிப்படும். இப்போது அந்த துப்பறியும் புலிகள் எல்லாம் ஒட்டு மொத்தமாக விடுப்பில் சென்று விட்டார்களா? நாற்காலியைத் தேய்த்துக் கொண்டு ஏசி அறையில் இருந்தே உருவாக்கப்படும் இது போன்ற புலனாய்வு தகவல்களுக்கு ஒரு முக்கியத்துவமும் தர வேண்டியதில்லை என்பதை மக்கள் தங்கள் அனுபவங்களிலிருந்தே தெரிந்து வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் கடந்த டிசம்பர் 6 ல் இவ்வாறு தகவல் பரப்பி மக்களை கெடுபிடிக்கு ஆளாக்க முடியாதவாறு மழை வெள்ளம் காத்தது. என்றாலும் குறிப்பிட்ட சில நாட்களில் திட்டமிட்டு இவர்கள் செய்யும் கெடுபிடிகள் எவ்வளவு வக்கிரமான அராஜகம், மக்களை பீதிக்குள்ளாக்கும் பயங்கரவாதம் என்பதையும் அந்த மழை வெள்ளம் முகத்தில் அறைந்து உணர்த்தியிருக்கிறது.

பதான்கோட் தக்குதல் நிகழ்வதற்கு முன்பே இப்படி நிகழப் போகிறது என்று அமெரிக்கா இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தகவல் தெரிவித்ததாக  சு. சாமி சொல்லியிருக்கிறார். அமெரிக்காவுக்கு தெரியாமல் உலகின் எந்த மூலையிலும் எந்த ஒரு பயங்கரவாதத் தாக்குதலும் நடந்து விடாது என்பது ஒருபக்கம் இருந்தாலும், அப்படி ஒரு தகவல் வந்ததா? ஆம் என்றால் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?

தாக்குதல் நிகழ்வதற்கு ஒரு நாள் முன்னதாக ஒரு எஸ்.பி கடத்தப்பட்டிருக்கிறார். அவரின் வாகனம் தாக்குதலுக்கு பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால் அந்த தகவல்கள் முறைப்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மட்டுமல்லாது, அவரின் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றன. அது குறித்தும் மௌனம் நிலவுகிறது.

பயங்கரவாதிகள் விமானநிலையத்துக்குள் னுழைந்த தகவல் கிடைத்ததும் பதான்கோட்டிலேயே முறைப்படி பயிற்சி பெற்ற இராணுவ வீரர்கள் ஏராளமாக இருந்தும் அவர்களைப் பயன்படுத்தாமல் தில்லியிலிருந்து கமாண்டோக்களை அழைத்தது ஏன்?

ஐந்து நாட்களாக தாக்குதல் நீடித்த நிலையிலும் ஏன் ஒரு பயங்கரவாதியைக் கூட உயிருடன் பிடிக்க முடியவில்லை?

மேற்கண்ட இந்த கேள்விகளெல்லாம் இந்திய இறையாண்மைக்கு இழுக்கு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, நாட்டின் பாதுகாப்பு, எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்ற சொற்களோடு தொடர்புபடுத்தி எழுப்பப் பட்டதல்ல. முந்திய வாஜ்பாய் அரசில் தேசிய பாதுகாப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பின்றி நிறைவேற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு நாடாளுமன்றத் தாக்குதல் எனும் நாடகம் நடத்தப்பட்டதோ அதே போல் இதுவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகமா என்பதை அறியும் நோக்கிலேயே எழுப்பட்டிருக்கின்றன. இப்போதைக்கு விடையில்லை என்றாலும் ஐயம் புறக்கணிக்கக் கூடியதல்ல.

இராணுவத்துக்கும் மக்களுக்குமான இடைவெளி எப்போதுமே எட்டிப் பிடிக்க முடியாதது தான். பதான்கோட் தாக்குதலில் உயிரிழந்த ஏழு இராணுவ வீரர்களின் மதிப்பு, சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்ற அறுநூற்றுக்கும் அதிகமான தமிழக மீனவர்களுக்கு இல்லை. காஷ்மீரிலும் வடகிழக்கிலும் இந்திய இராணுவத்தால் உயிரிழக்கம் அப்பாவிகள் இந்திய அரசுக்கு ஒரு பொருட்டானவர்களே அல்லர். இந்த அடிப்படையிலிருந்து தான் இராணுவத்தை பார்க்க முடியுமேயன்றி தேசபக்தியின் அடிப்படையில் ஒரு போதும் பார்க்க முடியாது.

இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் கண்டித்துள்ளன, அமெரிக்காவும் கூட. மட்டுமல்லாது பாகிஸ்தானுக்கு விரைந்து நேர்மையான நடவடிக்கைகளை பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி இருக்கிறது. இப்படி அமெரிக்க மூக்கை நுழைத்ததால் தான் அஷ்பக் அஹமது, ஹாஃபிஸ் ஷக்கூர், காசிம் ஜான், அஸார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்தால் தான் வெளியுறவுச் செயலாளர்கள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று முதலில் தெரிவித்த இந்திய அரசு பிறகு சுதியிறங்கி இந்த தாக்குதலால் திட்டமிட்டிருந்த பேச்சு வார்த்தைகள் குலையாது என்று அறிவித்திருக்கிறது. அதாவது அமெரிக்கா பேச்சுவார்த்தையை நிறுத்தக் கூடாது என்று வற்புறுத்தவில்லை என்றால் இங்கே பாகிஸ்தானுக்கு எதிராக தேசபக்தி அலை பொங்கியிருக்கும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் பகை நாடுகள் போலத்தான் முறுக்கம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். எல்லையை ஒரு காகம் கடந்தாலும் பேச்சுவார்த்தை ரத்து என்று கொதிப்பு காட்டுகிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடந்து கொண்டே தான் இருக்கிறது தங்குதடை இல்லாமல். பாகிஸ்தான் ஒவ்வொரு முறையும் காஷ்மீர் தான் பேச்சுவார்த்தையின் மையப் பொருள் அதை விட்டு விட்டு பேச மாட்டோம் என்கிறது. இந்தியாவோ ஒவ்வொரு முறையும் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அதைத் தவிர மற்றதைப் பேசுவோம் என்கிறது. பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. வர்த்தகமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. என்ன தான் பேசுகிறார்கள்? என்ன தான் பிரச்சனை? இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனை ஏன் தீராமல் இழுத்துக் கொண்டே செல்கிறது? மக்களுக்கு தெரியுமா இவை குறித்து?

ஒரு வேளை இத் தாக்குதல் அரசின் நாடகமாக இல்லாவிட்டால் ஏன் இது போன்ற தாக்குதல்கள் நடக்கின்றன? எப்போதுமே இந்திய நீதிக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு. அது எதிர் வினையை மட்டுமே பார்க்கும், வினையைப் பார்க்காது. அது பயங்கரவாதமாக, வன்முறையாக பார்க்கும் அத்தனை எதிர்வினைக்கும் அரச பயங்கரவாதம் முதல் வினையாக இருக்கிறது. இந்தியாவுக்கு சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் எல்லைப் பிரச்சனை இருக்கிறது என்றால் அவை என்ன தீர்க்கவே முடியாதவைகளா? தீர்க்க விரும்பாதவை என்பதே உண்மை. அண்டை நாடுகளுடன் சுமூக உறவு நீடித்து விட்டால் ஆயுத வியாபாரிகள் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்? இது தான் மெய்யான பிரச்சனை. இந்தியா அமெரிக்காவின் அல்லக்கை நாடாக மாறி நாளாகிறது. அடிமை சாசனம் எழுதிக் கொடுக்க வேண்டியது மட்டுமே மீதம் இருக்கிறது.

எது சரி எது தவறு என்ற கண்ணோட்டம் இன்றியே இங்கே தேசபக்தி பொங்கி பிரவாகமெடுத்து விடுகிறது. பாகிஸ்தானுடனான பிரச்சனையில் இந்திய அரசின் நிலைபாடு அதை தீர்க்கும் நோக்கில் இருக்கிறது என்று யாராவது உறுதியாக சொல்ல முடியுமா? ஆனால் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஏதாவது கூறி விட்டால் அதற்கு எதிராக மக்களின் சிந்தனை திரும்புகிறது. இதே கேள்வியை பாகிஸ்தானை நோக்கியும் எழுப்ப முடியும்.

அரசு, எந்த நாட்டு அரசாக இருந்தாலும், பாகிஸ்தான் என்றாலும் இந்தியா என்றாலும் அவை மக்களுக்கு எதிரானவை என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. அவை மக்கள் குறித்து கவலைப் படுவதும் இல்லை. ஆனால் அவற்றின் செயல்கள் மக்கள் பெயராலேயே நடக்கின்றன. இந்த இடத்தில் மக்களின் பங்கு ஓட்டுப் போடுவதும், எங்காவது பிரச்சனை வந்தால் ஊட்டப்படும் தேசபக்தியை வழிமொழிவதும் தானா? அரசின் செயல்பாடுகளை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டாமா?

பதான்கோட் தாக்குதல் குறித்து பேசுவதானால் மேற்கண்ட அம்சத்தை விலக்கி வைத்து விட்டு பேச முடியாது. ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் இத் தாக்குதலை நடத்தி இருந்தால் காஷ்மீர் பிரச்சனையில் இந்திய அரசு செய்த துரோகங்களை கணக்கிலெடுக்காமல் பதான்கோட்டை மட்டும் தனித்துப் பார்க்க முடியாது. ஆம், காஷ்மீர், வட கிழக்கு, பாகிஸ்தான், சீனா என இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எதிலும் அரசு அதை கையாளும் விதம் ஒட்டுமொத்தமாக மக்கள் நலனுக்கு எதிரானது. இதை தேசபக்தி கொழுக்கட்டையை வாயில் திணித்துக் கொண்டு வேடிக்கை பார்க்கத் தான் வேண்டுமா?

இத் தாக்குதலில் மக்களுக்கு பாதிப்பில்லை, பெரிய அளவில் இழப்பில்லை என அமைதியாக இருப்பதும், தேசபக்தி கொழுக்கட்டை ருசியில் அமைதியாக இருப்பதும் ஒன்று தான். மக்கள் அரசுக்கு எதிரான எதிர்ப்பை எந்த வழியிலேனும் பதிவு செய்ய வேண்டும். பதான்கோட்டில் அரசு நடந்து கொண்ட முறை குறித்தும், எல்லை பிரச்சனைகளை அரசு கையாளும் விதம் குறித்தும் பதியப்படும் எதிர்ப்புகள் தொடக்கமாக அமைய வேண்டும். அரசுக்கும் இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளி இட்டு நிரப்ப முடியாதது. ஆனால் அடித்து நொருக்க முடியும். அதற்கான தொடக்கமாக அமைய வேண்டும்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

எது கொண்டாட்டம்?

frosted-glass

நீங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் களைத்துப் போய் இருப்பீர்கள், இவ்வாண்டு செய்ய வேண்டிய வேலைகள், அது குறித்த திட்டங்கள், விட வேண்டிய பழக்க வழக்கங்கள், அது குறித்த வரம்புகள் உள்ளிட்ட விபரங்களை எழுதித் தொகுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் படித்துப் பார்த்து ஒருவித பரவச நிலையில் இருப்பீர்கள். நான் நினைப்பது சரியானால் கடந்த ஆண்டும் இதையே செய்திருந்திருப்பீர்கள். ஆனால் கடந்த ஆண்டு திட்டமிட்டதை செய்திருக்கிறோமா? எவ்வளவு விகிதம் நிறைவேற்றியிருக்கிறோம்? ஏன் முழுமையாக நிறைவேறவில்லை? என்ன காரணம்? எது தடையாக இருந்தது? அந்த தடை இப்போதும் இருக்கிறதா அல்லது நீங்கி விட்டதா? இருக்கிறது என்றால் எப்படி நீக்குவது? இவை குறித்து சிந்தித்ததுண்டா?

 

கண்டிப்பாக அறிவுரை கூறும் எண்ணமெல்லாம் இல்லை, அதற்கான தகுதியும் எனக்கு இல்லை. பரிசீலனை இல்லா திட்டம் பாழ் என்று எனக்கு சிலர் சொன்னார்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான அனுபவங்கள். அந்த அனுபவங்களின் முதுகில் அவர்களே பயணம் செய்திருக்கும் போது வேறொருவர் வந்து பயணக் கட்டுரை எழுத முடியாது அல்லவா? என்னைப் பொருத்தவரை நான் யார் குறித்த பயணக் கட்டுரைகளும் எழுத விரும்புபவனல்லன். நான் கூற விரும்புவதெல்லாம் எனக்கு இது போன்ற புத்தாண்டு சபதங்கள் எழுதுவதில் உடன்பாடு இல்லை என்பது மட்டுமே. ஏன் உடன்பாடு இல்லை என்பதை மட்டுமே.

 

ஏனென்றால் புத்தாண்டு என்பது எனக்கு இன்னுமொரு நாளே. புகைப் பழக்கம், குடிப்பழக்கம் இன்னபிற கெட்ட பழக்கங்களை ஒழிப்பதற்கும், புதுப்புது திட்டங்களை செயல்படுத்த உறுதியேற்பதற்கும் இந்த நாளில் ஏதோ கனமிருப்பதாக நான் கருதியதில்லை. ஆனால் அனேகர் அப்படி இந்த நாளில் ஏதோ கனம்இருப்பதாக கருதுகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. இது ஒரு புத்தாண்டு நாள், கொண்டாடப்பட வேண்டிய நாள் என்பதை விட நான், என்னுடைய கெட்ட பழக்கங்களை ஒழித்து, நல்ல பழக்கங்களைக் கைக் கொள்ள வேண்டிய நாள் எனும் புத்தாக்க நினைப்பை விதைத்திருக்கிறதே இந்த நாள், அது தான் அபாயமாகப் படுகிறது.

 

இது ஆங்கிலப்புத்தாண்டு நாம் தமிழ்ப் புத்தாண்டைத் தான் இவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் எனும் பொருளில் நான் கூறவில்லை. எது தமிழ் புத்தாண்டு தையா? சித்திரையா? என்பதற்குள்ளும் நான் புக விரும்பவில்லை. தமிழ் புத்தாண்டோ ஆங்கிலப் புத்தாண்டோ, தையோ, சித்திரையோ ஏதோ ஒரு நாளில் வங்கிகளில் புதுக் கணக்கு தொடங்குவார்களே அது போல நமக்கு நாமே தீர்மானங்களையும், சபதங்களையும், வைராக்கியங்களையும் எடுத்துக் கொண்டு அது போல் ஒழுகுகிறோமோ இல்லையோ சில நாட்கள் முனைந்து முயற்சி மேற்கொண்டு விட்டு .. .. .. என்ன சடங்கு இது?

 

இரண்டு விதங்களில் இதை நான் தவறு எனக் கருதுகிறேன். ஒன்று, நான், எனது பழக்கங்கள் என்பதன் அடிப்படை என்ன? ஒருவனுக்கு புகைப் பழக்கம் இருக்கிறது என்றால் அதை அவன் எங்கிருந்து கற்றான்? மனிதர்களே இல்லாத காட்டில் பிறந்து வளர்ந்திருந்தால் அவனுக்கு இந்த புகைப் பழக்கம் வந்திருக்குமா? மனிதன் என்பது எந்த விதத்திலும் ஒரு தனி மனிதனை மட்டும் குறிக்காது. ஏனென்றால் சமூகம் இல்லாமல் எந்த ஒரு மனிதனும் மனிதனில்லை. யாரோ ஒருவனைக் கண்டு இவனுக்கு புகைப் பழக்கம் வந்திருக்கும். இவனைக் கண்டு எத்தனையோ பேர் புகைப்பழக்கத்தைக் கற்றிருக்கலாம். இந்த மேல் கீழ் கண்ணிகளை கை விட்டு விட்டு தான் மட்டும் சரியாக மாற தீர்மானம் போடுவது எந்த அடிப்படையில் சரி? அவனையறியாமலேயே பலர் புகைப் பழக்கத்துக்கு ஆளாக காரணமாக இருந்ததற்கு எந்தப் பொறுப்பும் இல்லையா? இந்த இடத்தில் பிறர் சரியாகும் வரை நீங்களும் புகைப் பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும் எனும் பொருளில் கூறவில்லை. ஒரு சமூகம் சார்ந்த செயலை தனிமனிதன் சார்ந்து தீர்த்துவிட முடியாது எனக் கூற விளைகிறேன்.

 

இரண்டு, புகைப்பழக்கம் என்பது முழுக்க முழுக்க நம்முடைய விருப்பம் சார்ந்தது மட்டுமா நாம் கற்றுக் கொண்டோம். அனேகர் அப்படி நினைத்தாலும் அது உண்மையில்லை. விளம்பரம், புகைபிடிப்பது ஆண்மையின் அல்லது கௌரவத்தின் அடையாளம் என்பன போன்ற சமூக கருத்துகளை உருவாக்கியது என்பதிலிருந்து தான் புகைப் பழக்கம் அதனைப் பிடிப்பவர்களின் விருப்பமாகியது. மறுபக்கம், அதை விட நினைத்தாலும் முடிவதில்லை. அது தன்னைப் பிடிப்பவர்களை மீள முடியாதவாறு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. இப்படி இரு முனைகளிலும் நெருக்கித் தள்ளி முட்டுச் சந்தில் தள்ளி விடுவதற்கு விருப்பம் என்று பெயர் வைக்க முடியுமா? புகைப்பழக்கம் மட்டுமல்ல நம்முடைய ஒவ்வொரு விருப்பமும் இவ்வாறு நமக்கு வெளியிலிருந்து கட்டியமைக்கப்பட்டு நமக்குள்ளே திணிக்கப்படுவது தான். யதார்த்தம் இப்படி இருக்கும் போது சமூகத்தை விட்டுத்தள்ளி தனித் தீவாக இருந்து நான் மட்டும் இத் தீங்கிலிருந்து நீங்கி விடுகிறேன் என எண்ணுவது எப்பேற்பட்ட சுயநல நடவடிக்கை.

 

பொதுவாக பண்டிகைகள் என்பது நுகர்வுக் கலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்கும் வணிக நடவடிக்கைகளே. புதிதான பொருட்களை நுகர்வதை கழித்துக் கட்டி விட்டு பண்டிகளைகளை கற்பனை செய்து பாருங்கள். அவை வெறுமையாகக் காட்சியளிக்கும். முதலாளித்துவ உலகின் தாரக மந்திரம் இது தான், “என்று ஒருவன் புதிதாக பொருட்களை நுகர்வதற்கு சக்தியற்றுப் போய் விடுகிறானோ, அன்று அவன் உயிரில்லாதவனாக கருதப்படுவான்நாம் பண்டிகைகளை கொண்டாடுகிறோம் என்றால் அதன் பொருள் இதற்கு உட்பட்டது தான். அந்த மந்திரத்தை ஏற்றுக் கொண்டு தான் நாம் பண்டிகைகளைக் கொண்டாடுகிறோம்.

 

கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாமா? கடந்த ஆண்டில் எத்தனை எத்தனை பிரச்சனைகள் நம்மைக் கடந்து சென்றிருக்கின்றன? டாஸ்மாக்கை எடுத்துக் கொள்வோம். தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் சாராயக் கடைகளை மூடு என்று போராடினார்கள். எதை நாம் மக்களாட்சி என்று ஏற்றிருக்கிறோமோ அந்த மக்களாட்சி போராடிய மக்களை அடித்து விரட்டிவிட்டு போலீஸ் காவலோடு சாராயக் கடைகளை இலக்கு வைத்து திறந்து நடத்தியது. இது குறித்து நாம் என்ன நினைத்தோம்? அந்த நினைப்பு இன்றைய நம் கொண்டாட்டத்தில் என்ன பங்கு வகித்தது?

 

வெள்ளச் சேதத்தை எடுத்துக் கொள்வோம். முழுக்க முழுக்க செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விடுவதில் நிலவிய நிர்வாக அலட்சியங்களே அத்தனை துயரங்களுக்கும், பொருள் உயிர் இழப்புகளுக்கும் காரணம். ஆனால் பாசிச ஜெயாவோ மக்களை மடையர்களாக்குவதில் முனைவர் பட்டம் பெற்றுக் கொண்டிருக்கிறார். இது குறித்து நாம் என்ன நினைத்தோம்? அந்த நினைப்பு இன்றைய நம் கொண்டாட்டத்தில் என்ன பங்கு வகித்தது?

 

விஜயகாந்தை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு கோமாளி எனும் கருத்து ஊடகங்களால் ஏற்கனவே ஏற்படுத்தப் பட்டிருந்தது. ஆனாலும் அந்த ஊடகங்களைப் பார்த்து அவர் தூ என காறி உமிழ்ந்தது சரியான நடவடிக்கையாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. காரணம் அந்த அளவுக்கு அச்சு, காட்சி ஊடகங்கள் அனைத்தும் ஜெயாவின் ஊது குழல்களாக செயல்பட்டன. இது குறித்து நாம் என்ன நினைத்தோம்? அந்த நினைப்பு இன்றைய நம் கொண்டாட்டத்தில் என்ன பங்கு வகித்தது?

 

இது தான் நம்முடைய பிரச்சனை. நாம் சமூக மனிதர்கள், தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதை நாம் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறோம் என்பதை விட்டு விடுவோம். இந்த கொண்டாட்டங்கள் நம்மை தனி மனிதனைத் தவிர வேறெதுவும் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல எனும் மனோநிலைக்கு நம்மை நெட்டித் தள்ளுகின்றன. மட்டுமல்லாது, அந்த கொண்டாட்ட மனோநிலை மட்டுமே மகிழ்ச்சி எனும் சட்டகத்துக்குள்ளும் நம்மை அடைத்து விட முயல்கிறது.

 

நம்முடைய கொண்டாட்டங்கள் எப்படி இருக்க வேண்டும்? சக மனிதர்களின் பங்களிப்பு இல்லாமல் எப்படி நம்மால் ஒரு கணம் கூட இருக்க முடியாதோ அதே போல நம்முடைய கொண்டாட்டங்கள் நம்மை சமூகமாய் உள்ளிழுத்துக் கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும். புத்தாண்டு சபதங்கள் என்பது நம்மை தனி மனிதனாக பார்க்கிறதா? சமூக மனிதனாய் பார்க்கிறதா? நம்மை தனி மனிதனாய் பார்க்கச் செய்யும் அனைத்தையும் நாம் புறந்தள்ள வேண்டும். அனைத்து நிகழ்வுகளிலும் நமக்கென்று ஒரு கருத்து இருந்தே தீரும். அந்தக் கருத்துகளை சமூக நிகழ்வுகளின் மீது இரக்கமற்று மோத விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். வெளிப்படையாய் மோத விடும் போது மட்டுமே நாம் உள்வசமாய் திரும்ப முடியும்.

 

அப்படி உள்வசமாய் திரும்பி சமூக மனிதனாய் முதல் படி எடுத்து வைக்க இந்த புத்தாண்டில்[!] வாழ்த்து தெரிவித்து விடுவோமா?

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

%d bloggers like this: