நீங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் களைத்துப் போய் இருப்பீர்கள், இவ்வாண்டு செய்ய வேண்டிய வேலைகள், அது குறித்த திட்டங்கள், விட வேண்டிய பழக்க வழக்கங்கள், அது குறித்த வரம்புகள் உள்ளிட்ட விபரங்களை எழுதித் தொகுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் படித்துப் பார்த்து ஒருவித பரவச நிலையில் இருப்பீர்கள். நான் நினைப்பது சரியானால் கடந்த ஆண்டும் இதையே செய்திருந்திருப்பீர்கள். ஆனால் கடந்த ஆண்டு திட்டமிட்டதை செய்திருக்கிறோமா? எவ்வளவு விகிதம் நிறைவேற்றியிருக்கிறோம்? ஏன் முழுமையாக நிறைவேறவில்லை? என்ன காரணம்? எது தடையாக இருந்தது? அந்த தடை இப்போதும் இருக்கிறதா அல்லது நீங்கி விட்டதா? இருக்கிறது என்றால் எப்படி நீக்குவது? இவை குறித்து சிந்தித்ததுண்டா?
கண்டிப்பாக அறிவுரை கூறும் எண்ணமெல்லாம் இல்லை, அதற்கான தகுதியும் எனக்கு இல்லை. பரிசீலனை இல்லா திட்டம் பாழ் என்று எனக்கு சிலர் சொன்னார்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான அனுபவங்கள். அந்த அனுபவங்களின் முதுகில் அவர்களே பயணம் செய்திருக்கும் போது வேறொருவர் வந்து பயணக் கட்டுரை எழுத முடியாது அல்லவா? என்னைப் பொருத்தவரை நான் யார் குறித்த பயணக் கட்டுரைகளும் எழுத விரும்புபவனல்லன். நான் கூற விரும்புவதெல்லாம் எனக்கு இது போன்ற புத்தாண்டு சபதங்கள் எழுதுவதில் உடன்பாடு இல்லை என்பது மட்டுமே. ஏன் உடன்பாடு இல்லை என்பதை மட்டுமே.
ஏனென்றால் புத்தாண்டு என்பது எனக்கு இன்னுமொரு நாளே. புகைப் பழக்கம், குடிப்பழக்கம் இன்னபிற கெட்ட பழக்கங்களை ஒழிப்பதற்கும், புதுப்புது திட்டங்களை செயல்படுத்த உறுதியேற்பதற்கும் இந்த நாளில் ஏதோ கனமிருப்பதாக நான் கருதியதில்லை. ஆனால் அனேகர் அப்படி இந்த நாளில் ஏதோ ‘கனம்’ இருப்பதாக கருதுகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. இது ஒரு புத்தாண்டு நாள், கொண்டாடப்பட வேண்டிய நாள் என்பதை விட – நான், என்னுடைய கெட்ட பழக்கங்களை ஒழித்து, நல்ல பழக்கங்களைக் கைக் கொள்ள வேண்டிய நாள் – எனும் புத்தாக்க நினைப்பை விதைத்திருக்கிறதே இந்த நாள், அது தான் அபாயமாகப் படுகிறது.
இது ஆங்கிலப்புத்தாண்டு நாம் தமிழ்ப் புத்தாண்டைத் தான் இவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் எனும் பொருளில் நான் கூறவில்லை. எது தமிழ் புத்தாண்டு தையா? சித்திரையா? என்பதற்குள்ளும் நான் புக விரும்பவில்லை. தமிழ் புத்தாண்டோ ஆங்கிலப் புத்தாண்டோ, தையோ, சித்திரையோ ஏதோ ஒரு நாளில் வங்கிகளில் புதுக் கணக்கு தொடங்குவார்களே அது போல நமக்கு நாமே தீர்மானங்களையும், சபதங்களையும், வைராக்கியங்களையும் எடுத்துக் கொண்டு – அது போல் ஒழுகுகிறோமோ இல்லையோ – சில நாட்கள் முனைந்து முயற்சி மேற்கொண்டு விட்டு .. .. .. என்ன சடங்கு இது?
இரண்டு விதங்களில் இதை நான் தவறு எனக் கருதுகிறேன். ஒன்று, நான், எனது பழக்கங்கள் என்பதன் அடிப்படை என்ன? ஒருவனுக்கு புகைப் பழக்கம் இருக்கிறது என்றால் அதை அவன் எங்கிருந்து கற்றான்? மனிதர்களே இல்லாத காட்டில் பிறந்து வளர்ந்திருந்தால் அவனுக்கு இந்த புகைப் பழக்கம் வந்திருக்குமா? மனிதன் என்பது எந்த விதத்திலும் ஒரு தனி மனிதனை மட்டும் குறிக்காது. ஏனென்றால் சமூகம் இல்லாமல் எந்த ஒரு மனிதனும் மனிதனில்லை. யாரோ ஒருவனைக் கண்டு இவனுக்கு புகைப் பழக்கம் வந்திருக்கும். இவனைக் கண்டு எத்தனையோ பேர் புகைப்பழக்கத்தைக் கற்றிருக்கலாம். இந்த மேல் கீழ் கண்ணிகளை கை விட்டு விட்டு தான் மட்டும் சரியாக மாற தீர்மானம் போடுவது எந்த அடிப்படையில் சரி? அவனையறியாமலேயே பலர் புகைப் பழக்கத்துக்கு ஆளாக காரணமாக இருந்ததற்கு எந்தப் பொறுப்பும் இல்லையா? இந்த இடத்தில் பிறர் சரியாகும் வரை நீங்களும் புகைப் பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும் எனும் பொருளில் கூறவில்லை. ஒரு சமூகம் சார்ந்த செயலை தனிமனிதன் சார்ந்து தீர்த்துவிட முடியாது எனக் கூற விளைகிறேன்.
இரண்டு, புகைப்பழக்கம் என்பது முழுக்க முழுக்க நம்முடைய விருப்பம் சார்ந்தது மட்டுமா நாம் கற்றுக் கொண்டோம். அனேகர் அப்படி நினைத்தாலும் அது உண்மையில்லை. விளம்பரம், புகைபிடிப்பது ஆண்மையின் அல்லது கௌரவத்தின் அடையாளம் என்பன போன்ற சமூக கருத்துகளை உருவாக்கியது என்பதிலிருந்து தான் புகைப் பழக்கம் அதனைப் பிடிப்பவர்களின் விருப்பமாகியது. மறுபக்கம், அதை விட நினைத்தாலும் முடிவதில்லை. அது தன்னைப் பிடிப்பவர்களை மீள முடியாதவாறு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. இப்படி இரு முனைகளிலும் நெருக்கித் தள்ளி முட்டுச் சந்தில் தள்ளி விடுவதற்கு விருப்பம் என்று பெயர் வைக்க முடியுமா? புகைப்பழக்கம் மட்டுமல்ல நம்முடைய ஒவ்வொரு விருப்பமும் இவ்வாறு நமக்கு வெளியிலிருந்து கட்டியமைக்கப்பட்டு நமக்குள்ளே திணிக்கப்படுவது தான். யதார்த்தம் இப்படி இருக்கும் போது சமூகத்தை விட்டுத்தள்ளி தனித் தீவாக இருந்து நான் மட்டும் இத் தீங்கிலிருந்து நீங்கி விடுகிறேன் என எண்ணுவது எப்பேற்பட்ட சுயநல நடவடிக்கை.
பொதுவாக பண்டிகைகள் என்பது நுகர்வுக் கலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்கும் வணிக நடவடிக்கைகளே. புதிதான பொருட்களை நுகர்வதை கழித்துக் கட்டி விட்டு பண்டிகளைகளை கற்பனை செய்து பாருங்கள். அவை வெறுமையாகக் காட்சியளிக்கும். முதலாளித்துவ உலகின் தாரக மந்திரம் இது தான், “என்று ஒருவன் புதிதாக பொருட்களை நுகர்வதற்கு சக்தியற்றுப் போய் விடுகிறானோ, அன்று அவன் உயிரில்லாதவனாக கருதப்படுவான்” நாம் பண்டிகைகளை கொண்டாடுகிறோம் என்றால் அதன் பொருள் இதற்கு உட்பட்டது தான். அந்த மந்திரத்தை ஏற்றுக் கொண்டு தான் நாம் பண்டிகைகளைக் கொண்டாடுகிறோம்.
கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாமா? கடந்த ஆண்டில் எத்தனை எத்தனை பிரச்சனைகள் நம்மைக் கடந்து சென்றிருக்கின்றன? டாஸ்மாக்கை எடுத்துக் கொள்வோம். தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் சாராயக் கடைகளை மூடு என்று போராடினார்கள். எதை நாம் மக்களாட்சி என்று ஏற்றிருக்கிறோமோ அந்த மக்களாட்சி போராடிய மக்களை அடித்து விரட்டிவிட்டு போலீஸ் காவலோடு சாராயக் கடைகளை இலக்கு வைத்து திறந்து நடத்தியது. இது குறித்து நாம் என்ன நினைத்தோம்? அந்த நினைப்பு இன்றைய நம் கொண்டாட்டத்தில் என்ன பங்கு வகித்தது?
வெள்ளச் சேதத்தை எடுத்துக் கொள்வோம். முழுக்க முழுக்க செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விடுவதில் நிலவிய நிர்வாக அலட்சியங்களே அத்தனை துயரங்களுக்கும், பொருள் உயிர் இழப்புகளுக்கும் காரணம். ஆனால் பாசிச ஜெயாவோ மக்களை மடையர்களாக்குவதில் முனைவர் பட்டம் பெற்றுக் கொண்டிருக்கிறார். இது குறித்து நாம் என்ன நினைத்தோம்? அந்த நினைப்பு இன்றைய நம் கொண்டாட்டத்தில் என்ன பங்கு வகித்தது?
விஜயகாந்தை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு கோமாளி எனும் கருத்து ஊடகங்களால் ஏற்கனவே ஏற்படுத்தப் பட்டிருந்தது. ஆனாலும் அந்த ஊடகங்களைப் பார்த்து அவர் ‘தூ’ என காறி உமிழ்ந்தது சரியான நடவடிக்கையாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. காரணம் அந்த அளவுக்கு அச்சு, காட்சி ஊடகங்கள் அனைத்தும் ஜெயாவின் ஊது குழல்களாக செயல்பட்டன. இது குறித்து நாம் என்ன நினைத்தோம்? அந்த நினைப்பு இன்றைய நம் கொண்டாட்டத்தில் என்ன பங்கு வகித்தது?
இது தான் நம்முடைய பிரச்சனை. நாம் சமூக மனிதர்கள், தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதை நாம் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறோம் என்பதை விட்டு விடுவோம். இந்த கொண்டாட்டங்கள் நம்மை தனி மனிதனைத் தவிர வேறெதுவும் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல எனும் மனோநிலைக்கு நம்மை நெட்டித் தள்ளுகின்றன. மட்டுமல்லாது, அந்த கொண்டாட்ட மனோநிலை மட்டுமே மகிழ்ச்சி எனும் சட்டகத்துக்குள்ளும் நம்மை அடைத்து விட முயல்கிறது.
நம்முடைய கொண்டாட்டங்கள் எப்படி இருக்க வேண்டும்? சக மனிதர்களின் பங்களிப்பு இல்லாமல் எப்படி நம்மால் ஒரு கணம் கூட இருக்க முடியாதோ அதே போல நம்முடைய கொண்டாட்டங்கள் நம்மை சமூகமாய் உள்ளிழுத்துக் கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும். புத்தாண்டு சபதங்கள் என்பது நம்மை தனி மனிதனாக பார்க்கிறதா? சமூக மனிதனாய் பார்க்கிறதா? நம்மை தனி மனிதனாய் பார்க்கச் செய்யும் அனைத்தையும் நாம் புறந்தள்ள வேண்டும். அனைத்து நிகழ்வுகளிலும் நமக்கென்று ஒரு கருத்து இருந்தே தீரும். அந்தக் கருத்துகளை சமூக நிகழ்வுகளின் மீது இரக்கமற்று மோத விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். வெளிப்படையாய் மோத விடும் போது மட்டுமே நாம் உள்வசமாய் திரும்ப முடியும்.
அப்படி உள்வசமாய் திரும்பி சமூக மனிதனாய் முதல் படி எடுத்து வைக்க இந்த புத்தாண்டில்[!] வாழ்த்து தெரிவித்து விடுவோமா?
good try