மீண்டும் ஒரு முறை பார்ப்பனிய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய மாணவன் ஒருவன் கொலை செய்யப்பட்டிருக்கிறான். ஒருபக்கம், “கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான்.. தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான்” என்று பாட்டுப் பாடி கலை என்ற பெயரில் பார்ப்பனிய நச்சுக் கருத்தை மக்களிடம் பரவ விடுகிறார்கள். மறுபக்கம் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் உயர் கல்வி நிறுவங்களுக்குள் நுழைந்து விட்டாலோ கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஏதாவது ஒரு விதத்தில் கொலை செய்து விடுகிறார்கள். இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்? என்று ஒரு பக்கம் பொதுக் கருத்தை உருவாக்க முயல்கிறார்கள். மறுபக்கமோ பொதுப் பாதையில் ஒடுக்கப்பட்டவர்கள் பிணத்தைக் கொண்டு சென்றால் காவல் துறையே பிணத்தைப் பிடுங்கி தனிப் பாதையில் கொண்டு சென்று புதைக்கிறது. பழைய மனுவின் காலம் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்று அத்தனை துறையும் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதன் வெளிப்பாடு தான் இது. இதற்கான இப்போதைய சான்று தான் ரோஹித் வெமுலாவின் கொலை.
கடந்த டிசம்பர் 21ம் தேதியிலிருந்து ரோஹித் வெமுலா உட்பட ஐந்து மாணவர்கள் ஹைதராபாத் பல்கலைக் கழகத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தார்கள். ஏன் இவர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள் என்பதை அறிய வேண்டுமென்றால் அதை முசாபர் நகர் படுகொலைகளிலிருந்து தொடங்க வேண்டும்.
இந்திய அரசு நிர்வாகம் பார்ப்பன மயமாகி இருப்பதற்கு தனியே சான்றுகள் ஏதும் தேவையில்லை. ஆனாலும் மோடி ஆட்சியேறிய பிறகு பரிவாரக் குரங்குகள் அனைத்துக்கும் வெறி பிடித்திருக்கிறது. மாட்டுக்கறி இருக்கிறதா என்று எந்த வீட்டிலும் நுழைந்து சோதனை செய்யும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது. இரயில் பயணத்தில் கூட யாரையும் சந்தேகப்பட்டு சோதனை செய்து அடித்து உதைக்கும் அதிகாரம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. காதலர்களைக் கண்டு விட்டால் கலாச்சார காவலர்களாகி எந்த பாசிச எல்லைக்கும் செல்ல முடியும் அவர்களால். இப்படி ஒரு பெண்ணை கேலி செய்ததான முகாந்திரத்தில் தான் முசாபர் நகரில் கலவரம் என்ற பெயரில் படுகொலைகள் நடத்தப்பட்டன. இதை நாடெங்கிலும் உள்ள முற்போக்கு சக்திகள் கண்டித்தன. அதன் ஒரு வடிவமாக “முசாபர் நகர் பாக்கி ஹை” எனும் ஆவணப்படம் வெளிவந்தது.
இதை டெல்லி பல்கலைக் கழகத்தில் திரையிட முனைந்த போது அந்த பரிவாரக் குரங்குகளின் அட்டகாசத்தால் திரையிட முடியாமல் போனது. ஆனால் ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் அந்தக் குரங்குகளின் அட்டகாசத்தை மீறி ‘அம்பேத்கார் மாணவர் கூட்டமைப்பு’ அந்த ஆவணப்படத்தை திரையிட்டது. இப்படத்தை திரையிட்டது தேச துரோக குற்றம் என்பது போல்
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் எனும் அமைப்பு ரவுடித்தனத்தில் ஈடுபட்டு அமபலப்பட்டுப் போனது. மட்டுமல்லாது யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி காவிக் காலிகளை அம்பலப்படுத்தும் பணியையும் அம்பேத்கார் மாணவர் கூட்டமைப்பு செவ்வனே செய்தது. இதை நேரடியாக எதிர்க்க முடியாததால் நரித்தனத்தில் இறங்கியது ஏ.பி.வி.பி. பல்கலைக் கழக தலைமைக்கும், மத்திய தொழில்துறை இணையமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கும் பொய்ப்புகார்களை அனுப்பினார்கள். தத்தாத்ரேயா ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் அம்பேத்கார் மாணவர் கூட்டமைப்பு என்ற பெயரில் தேசத்துரோக பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாக அமைச்சர் சுமிதி இரானிக்கு எழுதி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து தான் ரோஹித் வெமுலா உட்பட ஐந்து ஒடுக்கப்பட்ட மாணவர்கள் நீக்கப்படுகிறார்கள். இதனை எதிர்த்து அவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே தறகாலிக கூடாரம் அமைத்து பதினைந்து நாட்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருந்த நிலையில், மாணவர்கள், ஜனநாயக சக்திகள் என அனைவரும் அந்த போராட்டத்துக்கு ஆதரவளித்த நிலையில் திடீரென கடந்த 17ம் தேதி ஞாயிறு இரவில் விடுதி அறையில் பிணமாகத் தொங்கினார் ரோஹித் வெமுலா. அதிர்ச்சியடைந்த மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த போராடிய ஆறு மாணவர்களைக் கைது செய்த காவல் துறை, யாருக்கும் சொல்லாமல் ரோஹித் வெமுலாவின் உடலை திருடிச் சென்று போஸ்ட்மார்ட்டம் கூட செய்யாமல் எரித்து விட்டது.
ரோஹித் வெமுலாவின் கடைசிக் கடிதம் கிடைத்திருப்பதால் அது தற்கொலை என்று முடிவு செய்யப்பட்டு விட்டது. என்றாலும் இறந்த மாணவனின் உடலை திருடிச் சென்று எரிக்கும் அதிகாரம் காவல்துறைக்கு உண்டா? இதே நிகழ்வு தான்
திருநாள்கொண்டச்சேரி கிராமத்திலும் நடந்திருக்கிறது. என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் காவல்துறையின் இந்த அதிகாரம் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டாமா?
தற்கொலை என்றாலும் கூட இது நிறுவனக் கொலை தான் என்பதற்கு நிரூபணம் எதுவும் தேவையில்லை. அதாவது கொலை செய்வதற்குப் பதிலாக தற்கொலை செய்யும் அளவுக்கு நெருக்குதல் தொடுப்பது. தற்போது தத்தாத்ரேயா, சுமிதி இரானி, துணைவேந்தர் ஆகியோரை கொலை வழக்கில் கைது செய்யக் கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரசும், ஊடகங்களும் கள்ள மௌனம் சாதிக்கின்றன. இன்னும் சில நாட்களில் போராட்டங்களும் கூட குறைந்து போகலாம். அடுத்தொரு கொலை நிகழும் வரை இது ஒரு சம்பவமாக் கூட எஞ்சி விடலாம். ஆனால் இது போன்ற கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டாமா? எனும் கேள்வியை என்ன செய்வது?
ரோஹித் வெமுலா முதன்முறையோ கடைசி முறையோ அல்ல. கடந்த நான்கு ஆண்டுகளில் பதினெட்டு தலித் மாணவர்கள் இது போல் உயர் கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனை பேரை இந்த பட்டியலில் சேர்ப்பது?
ரோஹித் வெமுலாவும் ஏனையோரும் ஏன் எதனால் தற்கொலை நோக்கி நெட்டித் தள்ளப்படுகிறார்கள்? தாத்ரியில் ஒரு இஸ்லாமிய முதியவர் கொல்லப்பட்டதற்கும் இதற்கும் ஒரு வேறுபாடும் இல்லை. பொது இடங்களில் வானரங்கள் நேரடியாக தாக்குதலில் இறங்குகின்றன. அதுவே உயர் கல்வி நிருவனங்கள் என்றால் கல்லூரிகளிலிருந்து, விடுதிகளிலிருந்து நீக்கப்படுதல், உதவித் தொகையை நிறுத்துதல், உரிய அங்கீகாரம் கிடைக்கவிடாமல் செய்தல் என நிர்வாக வழிகளில் தாக்குதல் நடக்கிறது. அரசுப் பதவிகள் என்றால் தேர்வு செய்ய மறுப்பது, சிறு குறைகளுக்கும் மீப்பெரும் தண்டனைகளை வழங்குவது. வங்கிகளில் இஸ்லாமியர்கள், தலித்கள் வாழும் பகுதிகளுக்கு கடன் தர மறுப்பது. நீதிமன்றங்களில், மருத்துவமனைகளில், நிர்வாகத் துறைகளில் என எல்லா இடங்களிலும் நடப்பது ஒன்றுதான், வடிவங்கள் மட்டுமே வேறு வேறு.
நாங்கள் உற்பத்தி செய்து குவிக்கும் நுகர் பொருட்களை வாங்கும் சக்தியற்ற யாரும் உயிர் வாழத் தகுதியற்றவர்கள் என்கிறது ஏகாதிபத்தியம். பார்ப்பனிய அடிமைகளைத் தவிர வேறு யாரும் இந்தியாவில் இருக்கத் தகுதியற்றவர்கள் என்கிறது பார்ப்பனீயம். இதை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சாம பேத தண்டங்களை வீசத் தயங்க மாட்டோம் என்கிறது பார்ப்பனீயம்.
ரோஹித் வெமுலாவும் ஏனையோரும் ஏன் கொல்லப்பட்டார்கள்? ஒடுக்கப்பட்டவர்கள் என்பவர்கள் பெரும்பான்மை காட்டுவதற்காக இந்து எனும் பட்டிக்குள் அடைபட்டிருக்க வேண்டும். தேர்தல் வழியாக அதிகாரம் பெறுவதற்கோ, அல்லது வேறு பலன்களுக்காகவோ கை காட்டிய இடத்தில் இஸ்லாமியர்கள் கிருஸ்தவர்கள் மீது ஏவல் நாய் போல் பாய்ந்து குதற வேண்டும். இது தான் தலித்துகள் குறித்த பார்ப்பனியத்தின் இலக்கணம். இதை மீறி பார்ப்பனியத்துக்கு எதிராக செயல்பட்டாலோ, பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டாலோ அவர்கள் கொல்லப்படும் அல்லது தற்கொலைக்குள் தள்ளப்படும் தகுதியை எட்டுவார்கள்.
இதை மழுங்கடிக்கும் நைச்சியங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த இலக்கணத்துக்குள் இருக்க விரும்புகிறோமா? என்பது தான் முக்கியமான கேள்வி. நிகழ்வதை ஆழ அவதானிக்காமலிருப்பது கூட குற்றமில்லை. ஆனால் நிகழ்வதை வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்ப்பது அதிக ஆபத்தானது. பார்ப்பனிய மதத்துக்குள் நீடிக்க வேண்டுமா என்பது கடைசிக் கேள்வி. இப்போதைக்கு ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையோர் ஒன்றிணைய வேண்டும். சாதி மத ஏனைய பேதங்களை மறந்து வர்க்க அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும். ஒன்றிணைந்து பார்ப்பனியத்துக்கு ஆதரவான ஒவ்வொரு செங்கலும் நொருக்கப்பட வேண்டும். இன்று நடக்கும் போராட்டங்கள் மக்களை இந்த நோக்கத்தை நோக்கி கொண்டுவருவதற்கு பயன்பட வேண்டும். ரோஹித் வெமுலா செய்ததும் அது தான், இனியொரு ரோஹித் வெமுலா உருவாகாமல் தடுப்பதும் அது தான்.