கன்னையா குமார், ஜே.என்.யு பிரச்சனைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு ஊடகங்கள் பட்ஜெட் குறித்து பேச ஆரம்பித்து விட்டன. இல.கணேசன் பட்ஜெட் பற்றி கூறும் போது வெளிப்படையாக ஒன்றை ஒப்புக் கொண்டார், எதிர்க் கட்சிகள் என்றால் எதிர்ப்பதும், ஆளும் கட்சிகள் என்றால் ஆதரிப்பதும் இயல்பானது தான். அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார். ஓட்டுப் பொறுக்கும் எந்தக் கட்சிக்கும் இதைத் தாண்டிய அறிவோ, தெளிவான பார்வையோ இருப்பதில்லை. ஊடகங்களில் உரை தரும் பொருளாதார அறிஞர்கள் எனும் அடைமொழியோடு அழைக்கப்படுபவர்களும் இதே பார்வையை கொஞ்சம் மேல்பூச்சு வேலைப்பாடுகளுடன் செய்கிறார்கள்.
பெரும்பாலான உழைக்கும் மக்களோ இது ஏதோ மீப்பெரும் பொருளாதார அறிவு தேவைப்படும் ஒரு விசயமாக எண்ணிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தன் வீட்டில் வெள்ளை அடிப்பதற்கு சுண்ணாம்பு வாங்கிக் கொடுக்கும் ஒருவர், அடித்தபின் எவ்வளவு சுண்ணாம்பை செலவு செய்து எவ்வளவு நேரத்தில் அடித்திருக்கிறார். சரியாக அடித்திருக்கிறாரா? சுண்ணாம்பு மிச்சமிருக்கிறதா என்று கணக்கு கேட்பதோடு ஒப்பிடக் கூடியது இது. மட்டுமல்லாது இவ்வளவு வாங்கிக் கொடுத்தேனே மீதம் எங்கே எனக் கேட்கவும் வேண்டும். மொத்த வரவு என்ன? என்னென்ன வகைகளுக்கு எப்படி செலவு செய்யப் போகிறீர்கள்? மொத்த செலவு என்ன? எவ்வளவு லாபம் அல்லது எவ்வளவு பற்றாக்குறை? அவ்வளவு தான். இப்படி எளிமையாக அணுவதற்குப் பதிலாக வரவினங்கள், வரிகள், உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி, சலுகைகள், மானியங்கள், திட்டங்கள், ஒதுக்கீடுகள். விகிதங்கள், குறியீடுகள், அப்படி, இப்படி என்று குழப்பி உழைக்கும் மக்களை இதிலிருந்து ஓடச் செய்கிறார்கள். ஒட்டு மொத்த நிர்வாகத்தையே உழைக்கும் மக்களால் எளிதாக நிர்வகிக்க முடியும் எனும் போது பட்ஜெட் எனும் வரவு செலவுத் திட்டம் பெரிய விசயமா என்ன?
ஒரு நாட்டின் வரவு செலவுத் திட்டம் எனும் போது அந்த நாட்டு அரசின் தன்மையை விலக்கி விட்டு பட்ஜெட்டை மட்டும் தனியாக பார்க்க முடியாது. அரசு என்பது பெரும்பான்மையாக இருக்கும் உழைக்கும் மக்களுக்கானதாக இல்லை என்பதையும் பெரிய பணக்காரர்களுக்கு ஆதரவாக மட்டுமே செயல்படும் என்பதையும், இதில் எந்தக் கட்சிக்கும் விதி விலக்கு இல்லை என்பதையும் தன் சொந்த பட்டறிவின் மூலம் உழைக்கும் மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். தவிரவும் அரசின் அனைத்து துறைகளும் அது என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்களோ அந்த நோக்கங்களுக்கே எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் உழைக்கும் மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த தன்மையில் இருக்கும் அரசு கொண்டு வரும் வரவு செலவுத் திட்டம் என்ன தன்மையைக் கொண்டிருக்கும் என்பதை தனியாக விளக்க வேண்டியதில்லை.
பட்ஜெட் என்பதில் வகுக்கும் திட்டங்கள் அந்தப்படியே செயல்படுத்தப்படுகிறது, அதில் மாற்றங்கள் செய்யப்படாது, அல்லது மாற்றங்கள் தேவைப்பட்டால் மக்களுக்கு அறிவித்து விட்டே பாராளுமன்ற ஒப்புதல் பெற்று செய்யப்படும் என்று நம்புவதெல்லாம் தெளிவான மூடநம்பிக்கைகள். பட்ஜெட்டுக்கு முன்பே விலை உயர்வு, புதிய வரிவிதிப்புகளை எல்லாம் அறிவித்து விட்டு, இது மக்களுக்கு சுமையைத் தராத பட்ஜெட் என்று கூச்சநாச்சமின்றி கூறும் கலையில் கைதேர்ந்தவர்கள் இவர்கள். பட்ஜெட் என்பது பொதுவாக வழக்கமாக செய்யப்பட்டு வரும் ஒரு செயல் என்பதைத் தாண்டி அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் பார்க்கலாம். 1960 வரை நாட்டில் 75 விழுக்காடு மக்களுக்கு வேலைவாய்ப்பை தந்து கொண்டிருந்தது, இன்றும் 50 விழுக்காட்டுக்கு மேல் வேலைவாய்ப்பை தந்து கொண்டிருப்பது விவசாயம் தான். இந்தியா ஒரு விவசாய நாடு. ஆனால் இன்றுவரை விவசாயத்துக்கு என்று தனி பட்ஜெட் கிடையாது. ஆனால் என்றோ வெள்ளைக்காரன் புதிதாக ரயில் தண்டவாளங்கள் போடுவதற்கு அதிக நிதி வேண்டும் எனவே அதற்கு தனி பட்ஜெட் வேண்டும் என்று தீர்மானித்தது, இன்றும் பூனையை கட்டி வைத்த கதை போல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, பட்ஜெட் என்பது நாட்டையே வழி நடத்தும் விசயம் என்பது பொய்.
பணக்காரன் என்றால் அவனுக்கு தனி மரியாதை, சலுகை இருக்கலாம் தவறில்லை எனும் மனோ பாவம் உழைக்கும் மக்களுக்குள்ளும் படிந்திருக்கிறது. ஏனென்றால் அவன் சம்பாதித்த பணத்துக்கும் வரி கட்டுகிறான் என்றொரு விளக்கம் கூறப்படுகிறது. ‘நாங்கள் வரி கட்டும் குடிமகன்’ என்று அவர்கள் கூட சமயத்தில் சொல்லிக் கொள்வதுண்டு. ஆனால் நாட்டில் போடப்படும் அனைத்து வரிகளையும் சுமப்பது ஏழை எளிய மக்கள் தான் என்பதை உழைக்கும் வர்க்கம் உணர வேண்டும். பணக்காரர்களுக்கு விதிக்கப்படும் வரியானது ஏதாவது ஒரு விதத்தில் உழைக்கும் மக்கள் மீதே சுமத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு முதலாளி தான் உற்பத்தி செய்யும் பொருளின் மீது செலுத்தும் வரியை இரண்டு விதங்களில் திரும்ப எடுத்துக் கொள்கிறான். முதலாவது, அந்தப் பொருளின் சந்தை விலை என்பது அவன் கட்டும் வரியையும் உள்ளடக்கியது தான். எனவே, அந்தப் பொருளை வாங்கும் மக்கள் முதலாளிக்கு உற்பத்திக்காக போடப்பட்ட வரியையும் சேர்த்தே கட்டுகிறார்கள். இரண்டாவது, தற்போது அளவிடப்படும் வாட் போன்ற வரிவிதிப்புகள் முதலாளிக்கு போடப்படும் வரிகளையும் உள்ளடக்கிய சந்தை விலைக்கே போடப்படுகிறது. அதாவது முதலாளிக்கு போடப்படும் வரியையும் சேர்த்து கட்டிவிட்டு அந்த வரிக்கும் சேர்ந்து வாட் வரி கட்டப்படுகிறது. இது வேலைவாய்ப்பை மக்களுக்கு வழங்குவதற்கான சலுகை என்ற பெயரில் அந்த முதலாளிக்கே போய்ச் சேருகிறது. எனவே, அனைத்து வரிகளையும் சுமப்பது தாங்கள் தான் எனும் உண்மையை உழைக்கும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எளிய மக்களுக்கு அளிக்கப்படும் மானியங்கள் பட்ஜெட் திட்டங்களில் பெரும்பகுதி நிதியை எடுத்துக் கொள்வதால் நல்ல பல சமூகத் திட்டங்களுக்கு நிதி கிடைப்பதில்லை என எண்ணுவதும் ஒரு விதத்தில் மூட நம்பிக்கையே. எளிய மக்களுக்கு மட்டுமே மானியங்கள் அளிக்கப்படுவதில்லை. எளிய மக்களுக்கு அளிக்கப்படுவதை விட பல மடங்கு அதிகமாக சலுகைகள் மானியங்கள் முதலாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் தோராயமாக ஒரு லட்சம் கோடி சலுகைகள் முதலாளிகளுக்கு அறிவிக்கப்படுகின்றன. இதை விட பல மடங்கு சலுகைகளும் வரி விலக்குகளும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படுவதற்கு வெளியே கொட்டிக் கொடுக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக கெயில் நிறுவனத்தைக் கொள்வோம், குழாய் பதிக்கும் விவசாய நிலத்துக்கு 40 விழுக்காடு விலை கொடுத்தால் போதும், குழாயில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு விவசாயியே நட்ட ஈடு வழங்க வேண்டும் என்பதை பட்ஜெட்டில் அறிவித்தா செய்தார்கள்?
பட்ஜெட் பற்றி குறிப்பிடுவதற்கு இன்னுமொரு முதன்மையான அம்சமும் இருக்கிறது. பட்ஜெட்டை உருவாக்கும் போது பல கோடி மக்களை பிரநிதித்துவப்படுத்தும் விவசாய அமைப்புகளையோ, தொழிலாளர் அமைப்புகளையோ, மாணவர் அமைப்புகளையோ அல்லது வெகு மக்கள் அமைப்புகள் எதனையும் அழைத்து, ‘இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டம் எப்படி இருக்க வேண்டும்? உங்கள் கோரிக்கைகள், ஆலோசனைகள் என்ன?’ எனக் கேட்டு பரிசீலிப்பதில்லை. மாறாக சில பத்து பேர்களை பிரநிதித்துவப்படுத்தும் ‘அசோசம்’ போன்ற பணக்கார தொழிலதிபர் சங்கங்களை அழைத்து அவர்கள் கோரிக்கைகள், ஆலோசனைகளைக் கேட்டு அவர்களின் விருப்பப்படியே பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. பட்ஜெட் என்பது மக்களை ஏமாற்றும் ஒன்று என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் ஏதும் வேண்டுமா?
மேற்கண்ட இந்த அடிப்படையான அம்சங்களிலிருந்து விலகி நின்று பட்ஜெட்டை பார்க்க முடியுமா? அப்படி விலக்கி வைத்து விட்டுத் தான் பார்க்க வேண்டும் என்று விரும்புகின்றன அரசும், ஊடகங்களும். அதனால் பொருளாதார அறிஞர்கள் எனப்படுவோரை வைத்து பல்வேறு கலைச் சொற்களைப் போட்டு மக்களைக் குழப்புகின்றன. குறிப்பாக இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டம் நமக்கு கூறுவது என்ன?
இந்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் மொத்த வரவு 16லட்சத்து 30ஆயிரத்து 888 கோடி; மொத்த செலவு 17லட்சத்து 73ஆயிரத்து 330 கோடி; பற்றாக்குறை ஒரு லட்சத்து 42ஆயிரத்து 442 கோடி. இதில் இதுவரை பெற்ற கடன்களுக்காக திருப்பி செலுத்தப்படும் தொகை மற்றும் வட்டிக்கான தொகை சேர்க்கப்படவில்லை. தோராயமாக அதை 5லட்சம் கோடி எனக் கொண்டால் உத்தேசமாக ஆறரை லட்சம் கோடி பற்றாக்குறை. இந்த பற்றாக்குறையை எப்படி சமாளிப்பார்கள்? வேறெப்படி மீண்டும் கடன் வாங்குவதன் மூலமும், புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதன் மூலமுமே. புதிய நோட்டுகளை அச்சடிப்பது என்றால் நாம் விரும்பும் அளவுக்கெல்லாம் அச்சடித்துக் கொள்ள முடியாது. ஒரு நாட்டின் தங்க இருப்பையும், மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவையும் வைத்து ஒருமாதிரி கணக்குப் போட்டு இவ்வளவு தான் அடிக்க முடியும் என்று இலக்கு வைத்துக் கொள்வார்கள். புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க அச்சடிக்க அது ரூபாயின் சர்வதேசிய மதிப்பை குறைக்கும். இந்த அடிப்படையில் தான் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்த பட்ஜெட்டில் 9 லட்சம் கோடி கடன் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை வைத்துக் கொண்டு இது விவசாயிகளுக்கான பட்ஜெட், இதுவரை இப்படி ஒரு கடன் தொகை வழங்கப்பட்டதே இல்லை என்றெல்லாம் நீட்டி முழக்குகிறார்கள். ஆனால் கடன்கள் யாருக்காக வழங்கப்படுகின்றன? ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாகவோ குறைவாகவோ கடன் வழங்குவதான அறிவிப்புகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. வழங்கப்பட்டும் வருகின்றன. ஆனால் அந்த கடன்களின் மூலம் விவசாயி தன்னுடைய வரிய நிலையிலிருந்து உயர்ந்திருக்கின்றானா? இல்லை. மாறாக தற்கொலைகள் அதிகரித்திருக்கின்றன. ஏன்? ஏனென்றால், கடன்கள் விவசாயிகளுக்காக வழங்கப்படுவதில்லை. முதலாளிகளுக்காக வழங்கப்படுகின்றன. விவசாயிகளின் வழியாக வழங்கப்படுவதால் அது விவசாயிகளுக்கான கடனாக ஆகி விடுவதில்லை. கடனாக வாங்கும் விவசாயி அதை தன்னுடைய வாழ்க்கைக்காக பயன்படுத்துவதில்லை. உரம் உள்ளிட்ட இடுபொருட்களை வாங்குவதற்கே பயன்படுத்துகிறான். விவசாயி வாங்கும் கடன் இறுதியில் முதலாளிக்கே போய்ச் சேருகிறது. உரத்தின் விலையை தன்னுடைய விருப்பத்தின் அடிப்படையில் நிர்ணயித்துக் கொள்ள முதலாளியால் முடியும். ஆனால், அந்த உரத்தை வாங்கிப் பயன்படுத்தும் விவசாயி அதன் விளை பொருளான உற்பத்தியை அவனுடைய செலவின் அடிப்படையில் கூட அவனே நிர்ணயித்துக் கொள்ள முடியாது. இது தான் யதார்த்தம் என்றால் கடன்கள் யாருக்காக? விவசாயிகலின் பெயரால் முதலாளிகளுக்காக. இது விவசாயக் கடன்களுக்கு மட்டுமல்ல, அனைத்துக் கடன்களுக்கும் பொருந்தும். தனியார் கல்லூரிகளில் இடங்கள் நிரம்பவில்லையா? மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்படும். மருத்துவ வியாபாரிகளுக்கு லாபவெறி குறையவில்லையா? மக்களுக்கு காப்பீட்டுத் திட்டங்கள் தொடங்கப்படும். ரியல் எஸ்டேட் வியாபாரம் சூடு பிடிக்கவில்லையா? வீட்டுக் கடன் வழங்கப்படும். கடன்களின் பொருள் இது தான். இந்த அடிப்படையில் அதிகரித்து 9 லட்சம் கோடிகளாக கொடுக்கப்படும் கடன்களால் விவசாயிக்கு ஏதாவது பலன் ஏற்படுமா?
இந்த பட்ஜெட்டில் எல்லாத் துறைகளையும் விட அதிகபட்சமாக பாதுகாப்புத் துறைக்கு 3லட்சத்து 40ஆயிரத்து 922 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, பன்னாட்டு அளவில் பெரும்பாலான நாடுகள் தங்களின் பாதுகாப்புச் செலவுகளை பல மடங்கு உயர்த்தியிருக்கின்றன. பல நாடுகளில் வாழும் உழைக்கும் மக்களின் வரிப்பணத்தில் மஞ்சள் குளித்துக் கொண்டிருப்பது வெகு சில ஆயுத உற்பத்தி முதலாளிகள் தான். இவர்களின் இந்த லாபக் குவிப்பு குறைந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் நாடுகளுக்கிடையிலான முரண்பாடு தீர்க்கப்படாமல் மோதல் வரை இழுத்துக் கொண்டு செல்லப்படுகின்றன. திட்டமிட்டு நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகள் மோதல்கள் உருவாக்கப்படுகின்றன. இரண்டு உலகப் போர்கள் நடந்திருக்கின்றன. இந்தப் போர்களில் மக்களுக்காக நலம் என ஏதாவது இருக்கிறதா? ஆளே இல்லாத சியாச்சின் பனிக்காடுகளுக்காக பல்லாயிரம் கோடிகளையும், பலநூறு இராணுவத்தினரையும் இழந்தோம். ஆனால், இலங்கை இராணுவத்தால் தாக்கப்பட்டு 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொலையுண்டிருக்கிறார்கள். இந்திய இராணுவம் அவர்களைக் காக்க சுண்டு விரலைக் கூட அசைத்ததில்லை. அதேநேரம் மத்திய தொழில்முறை பாதுகாப்புப் படையினர் இரவும் பகலும் ரிலையன்ஸின் பெட்ரோலிய நிறுவனத்தைக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தன்மையிலிருக்கும் இராணுவத்துக்கு இவ்வளவு பணம் கொட்டப்பட வேண்டுமா என்று உழைக்கும் மக்களை விட்டால் வேறு யாரால் கேட்க முடியும்?
பழங்குடியினர் நலனுக்கு என்று 4ஆயிரத்து 826 கோடியை ஒதுக்கியிருக்கிறார்கள். இவர்கள் கூறும் பழங்குடியினர் நலன் என்பது என்ன என்று பார்த்தால் அதில் பழங்குடியினருக்கு எதிரான அரசின் அயோக்கியத் தனம் தான் தெரிகிறது. மத்திய கிழக்கு மாநிலங்களில் ஏராளமான தாது வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த வளங்களைக் கொள்ளையடிக்க வேதாந்தா போன்ற நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. இதை அந்த மலைக் காடுகளில் வாழும் பழங்குடியின மக்கள் எதிர்க்கிறார்கள். எதிர்க்கும் அந்த மக்களை துரத்தியடித்து விட்டு அதை கொள்ளையடிக்கும் நிறுவனங்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்க அரசு துடிக்கிறது. இதற்காக காட்டு வேட்டை என்றொரு திட்டத்தை செயல்படுத்தியது. சட்ட விரோதமாக சல்வாஜுடும் போன்ற குழுக்களை அமைத்து இயக்கியது. இவயெல்லாம் அந்த பழங்குடியின மக்களை அந்த மலைக் காடுகளிலிருந்து விரட்டியடிப்பதை நோக்கமாகக் கொண்டவை. இதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் சென்றார்கள். ஆனாலும் அவர்களை முழுமையாக வெளியேற்ற முடியவில்லை. அதனைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்டது தான் பழங்குடியினர் வளர்ச்சித் திட்டங்கள். அதாவது, காடுகளுக்குள்ளிருந்து வாழ்வது பழங்குடியினருக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது. எனவே அவர்களை முன்னேற்றுகிறோம் என்று கூறி நகர்களின் ஓரங்களில் வீடு கட்டிக் கொடுப்பது, குறுந்தொழில்களை செய்ய பயிற்சியளிப்பது, ஊக்குவிப்பது, சிறு வங்கிக் கடன்கள் மூலம் கடைகள் வைக்க உதவுவது. சுருக்கமாகச் சொன்னால் பொருளாதார ஆசை காட்டி அவர்களை அவர்களின் வாழிடங்களிலிருந்து அப்புறப்படுத்துவது. இதைத்தான் பழங்குடியினர் நலன், பழங்குடியினர் வளர்ச்சி என்கிறது அரசு. நாட்டையும் மக்களையும் நேசிக்கும் யாரும் இதைக் கேட்டு அமைதியாக இருக்க முடியுமா?
கல்விக்கு 72ஆயிரத்து 38 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். அதாவது பள்ளிக்கல்வி, எழுத்தறிவு என பொதுக்கல்விக்கு 43 ஆயிரத்து 273 கோடியும், மேல்நிலைக் கல்விக்கு 28ஆயிரத்து 765 கோடியும் ஒதுக்கியிருக்கிறார்கள். இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டுக்கு இது யானைப் பசிக்கு சோளப் பொரி போன்றது என்பது ஒருபுறம் இருக்கட்டும். கடந்த ஆண்டு இவ்வளவு ஒதுக்கினார்கள், இந்த ஆண்டு இவ்வளவு குறைவாக ஒதுக்கியிருக்கிறார்கள். எனவே, இது கல்வியைக் குறித்து கவலைப்படாத பட்ஜெட் என்றோ; கடந்த ஆண்டு இவ்வளவு ஒதுக்கினார்கள், இந்த ஆண்டு இவ்வளவு அதிகமாக ஒதுக்கியிருக்கிறார்கள். எனவே, இது கல்வியை உயர்வாக மதிக்கும் பட்ஜெட் என்றோ மதிப்பிடுவது எவ்வளவு அறுவெறுப்பானது. மோடி அரசுக்கு கல்வி குறித்த பார்வை என்ன? கல்விக்கு என்று உருவாகியிருக்கும் சர்வதேச ‘காட்’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட துடித்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு. அது நடைமுறைக்கு வந்தால் பள்ளிக் கல்வியோ உயர் கல்வியோ எதுவானாலும் அரசுக்கும் கல்விக்கும் தொடர்பே இருக்காது, இருக்கக் கூடாது. கத்தரிக்காய் போல கல்வியும் ஒரு வியாபாரப் பண்டம் என்றாகிவிடும். முக்கால்வாசிப் பேர் வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் நாட்டில் எத்தனை பேரால் ஆரம்பக் கல்வியை கூட விலை கொடுத்து வாங்க முடியும்? இதை நவீன மனுநீதி எனக் குறிப்பிட்டால் அதில் பிழை இருக்க முடியுமா? பார்ப்பன பாசிசக் குரங்குகள் உயர் கல்வியை கவ்விக் கொள்ள துடித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் கல்விக்கான இந்த ஒதுக்கீடு எப்படி பயன்படுத்தப்படும் என்பதற்கு சிறப்பான எடுத்துக்காட்டு தான், எல்லா பள்ளிகளிலும் செத்த மொழியான சமஸ்கிருதம் மூன்றாம் மொழியாக சொல்லிக் கொடுக்கப்படும் எனும் அறிவிப்பு. சுயமரியாதையுள்ள யாரும் இதை ஒப்ப முடியுமா?
புள்ளி விபரங்களால் பட்ஜெட்டை புரிந்து கொள்ள முடியாது, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு துறையாக எடுத்துக் கொண்டு பார்த்தாலும் அனைத்திலுமே அதிகாரக் கொழுப்பு வழிந்து ஓடுவதைத் தவிர வேறெதையும் பார்க்க முடியாது. அரசைப் புரிந்து கொள்வது என்பதின் நீட்சியாக மட்டுமே பட்ஜெட்டை அணுக முடியும். இது சரியான பார்வை என்பதற்காக மட்டுமல்ல, இந்த பார்வை மட்டுமே பொருத்தமான எதிர்வினை செய்வதற்கான உந்துதலை தரும் என்பதற்காகவும் தான்.
எளியவர்களும் புரிந்துகொள்ளும்படியான ஒரு அருமையான பதிவு தோழரே! நிலப்பிரபுத்துவ, காலனிய ஜனநாயகத்தின் அயோக்கியத் தனங்களில் இதுவும் ஒன்று என்பதை எளிமையாக விளக்கி இருக்கிறீர்கள்…