பகத்சிங் நினைவு நாளில் மாணவர் கடமை என்ன?

ஓங்கட்டும் நாட்டுப்பற்று!                       ஒழியட்டும் மறுகாலனியாக்கம்!

மார்ச்-23 பகத்சிங் நினைவுநாள்; மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்!

 

ன்பார்ந்த மாணவர்களே, இளைஞர்களே,

தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மீதான தாக்குதல்கள், தற்கொலைகள், படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. விழுப்புரம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தால் 3 மாணவிகள் படுகொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கியெடுத்தது. ஆனாலும் தனியார் கல்லூரிகளின் கொட்டம் அடங்கவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இத்தனை கொடுமைகளுக்கும் காரணம் என்ன? இந்த அரசு நடைமுறைப்படுத்தும் தனியார்மயக் கொள்கைதான். வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயர்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் ( நாட்டை மீண்டும் அடிமையாக்கும் ) கொள்கையின் விளைவாகத்தான் கல்வி படிப்படியாக தனியார் கைக்கு மாறி கடைச்சரக்கானது. சாராயம் விற்ற ரவுடிகளும்கூட கல்வித் தந்தைகளானார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இரத்தம் குடித்த தனியார்மய காட்டேரியின் அடங்காத பசிக்கு மொத்த கல்வித்துறையையுமே படையல் போட்டுள்ளது பார்ப்பன பாசிச மோடி அரசு.

கடந்த டிசம்பர் – 15 ந்தேதி கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடைபெற்ற உலக வர்த்தக கழகத்தின் மாநாட்டில் காட்ஸ் ஒப்பந்தத்தின்படி கல்வித்துறையை மொத்தமாக தனியாருக்கு திறந்துவிட சம்மதம் தெரிவித்து கையெழுத்துப் போட்டுவிட்டு வந்திருக்கிறது.

இனி என்ன நடக்கும்? உள்நாட்டு – வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் கல்வித் தந்தைகளாக காட்சியளிப்பார்கள். பன்னாட்டு கம்பெனிகள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கே கல்விக் கடையை விரிப்பார்கள். மாணவர்களுக்கான இலவசக் கல்வி ரத்து செய்யப்படும். அரசுக் கல்லூரிகள், நிதி தன்னாட்சி (Financial autonomous) நிறுவனங்களாக மாற்றப்படும். கல்லூரிகளே மாணவர்களிடமிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் வசூலித்துக்கொள்ளும். “டீச் இன் இந்தியா” திட்டம் மூலம், வெளிநாட்டு கல்வியாளர்கள், துறைசார் வல்லுநர்களை இறக்குமதி செய்து மாபெரும் திறந்தவெளி இணைய பாடத்திட்டங்கள் MOOCs (Massive Online Open Course) தயாரிக்கப்படும், உள்நாட்டு ஆசிரியர்களின் வேலைகள் ஒழிக்கப்படும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் கல்லூரிக்குச் செல்லாமல் கல்வி கற்பிக்கப்படும். மாணவர்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும்.

இப்படி, ஒட்டுமொத்த கல்வித்துறையையும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள், தனியார், கார்ப்பரேட் கொள்ளையர்களுக்காக மாற்றுவதுதான் காட்ஸ். இனி கல்வி பற்றி முடிவெடுக்க இந்திய நாடாளுமன்றத்திற்கு எவ்வித சட்ட உரிமையும் கிடையாது. இதற்குப் பெயர் இறையாண்மையா?march23-baghat-singh-martyr-day-rsyf

கல்வித்துறையை மட்டுமல்ல, மனிதன் உயிர் வாழ்வதற்கு அடிப்படையான மருத்துவம், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட சேவைத்துறைகள் அனைத்தும் காட்ஸ் – ன் காலடியில் அடகு வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அரசு பொதுத்துறை நிறுவனங்கள் பல தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டுவிட்டன. மீதமிருக்கும் ஒன்றையும் விடாமல் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தூக்கிக் கொடுத்து வருகிறார் மோடி.

பன்னாட்டுக் கம்பெனிகள் நம் தொழிலாளர்களை காண்ட்ராக்ட் ஊழியர்கள் எனும் பெயரில் கொத்தடிமைகளாக கசக்கிப் பிழிகிறார்கள். வேலைபறிப்பு, ஆலை மூடல் என தொழிலாளர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஐ.டி ஊழியர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. நமது விவசாய நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்காக பறிக்கப்படுகிறது, விவசாயிகள் விவசாயத்திலிருந்தே விரட்டப்படுவதோடு, பட்டினி போட்டுக் கொல்லப்படுகிறார்கள். காடு, மலை, ஆறு, மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களும், கனிம வளங்களும் கார்ப்பரேட் முதலாளிகள் சூறையாட திறந்துவிடப்பட்டிருக்கிறது. மொத்தமாக, நாடே மறுகாலனியாக்கப்பட்டு வருகிறது.

சுருக்கமாகச் சொன்னால், 1947 க்கு முன்னால் நாடு எப்படிப்பட்ட அடிமைத்தனத்தில் இருந்ததோ அதேபோல்தான் இன்றும் உள்ளது. அது காலனி, இது மாறுகாலனி அவ்வளவுதான் வித்தியாசம். அன்று, ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியை இந்தியாவில் நிலைநாட்ட வங்காளத்தின் தளபதி மீர்ஜாபர் விசுவாசமாக சேவை செய்தான். இன்று அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை மறுகாலனியாக்க விசுவாசமாக வேலை செய்கிறார் பார்ப்பன பாசிச மோடி.

நாம் என்ன செய்யப்போகிறோம்? ஆங்கிலேய காலனியாதிக்கத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்க தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துக் கொண்டான் 23 வயது இளைஞன் பகத்சிங். அவன் தனது போர்க்குணமிக்க போராட்டங்களால் ஆங்கிலேய ஆட்சியை நிலைகுலையச் செய்த மாவீரன். வெள்ளையர்களை அடித்து விரட்டி வென்றெடுக்க வேண்டிய விடுதலையை, உண்ணாவிரதம், அறவழிப்போராட்டங்கள் என கெஞ்சிப் பெற வேண்டிய பிச்சையாக்கினார் காந்தி. ஆனால், விடுதலையை போராடி சாதிக்க வேண்டும் என்று கொதித்தெழுத்த பகத்சிங்கும் அவரைச் சார்ந்த மாணவர்களும், இளைஞர்களும் காந்திய காரிருளை கிழித்து போர்க்குணமிக்க போராட்டங்களை முன்னெடுத்தனர். பீதியடைந்த ஆங்கிலேய அரசு இந்திய விடுதலைப்போரை வீழ்த்த பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரை தூக்கிலேற்றியது. அதன் நினைவுநாள்தான் மார்ச்-23. நாட்டின் விடுதலைக்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்ட இவர்கள்தான் நம்முடைய கதாநாயகர்கள். பகத்சிங்தான் நம் ரோல்மாடல். அவர் நினைவை நெஞ்சிலேந்துவோம்! பகத்சிங் நினைவுநாளை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்துவோம்!

’’அநீதிகளுக்கெதிரான இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை, எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை’’ என்று நாட்டின் விடுதலையை சாதிக்கும் கடமையை நம்மிடம் விட்டுச் சென்றிருக்கிறார் பகத்சிங். மறுகாலனியாக்கத்தை வீழ்த்தாமல் நமக்கு விடுதலை இல்லை. நாட்டின் விடுதலையை நேசிக்கும் மாணவர்கள், இளைஞர்களாகிய நாம் பகத்சிங் பாதையில் பயணிப்போம்! தேச விடுதலைப் போரை முன்னெடுப்போம்!

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு – 944512675

 

முதல் பதிவு: வினவு

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s