மத்ஹபுகள் ஏன் தொடங்கப்பட்டன? பதில் சொல்லுமா டி.என்.டி.ஜே

mutazilia4

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 9

உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் ஒன்பதாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.  9.1, 9.2

‘உணர்வு’ கும்பல் தங்களின் கற்பனை உரையாடலில் ஒன்பதாம் பகுதிக்கு கொடுத்திருக்கும் தலைப்பு “யூதர்களின் கைக்கூலியா மார்க்ஸ்?” கம்யூனிசத்தின் மீதும் மார்க்ஸ் மீதும் மிகப் பெரிய தாக்குதலை தொடுத்திருப்பதாக கருதிக் கொண்டு இப்படி ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறது ‘உணர்வு’ கும்பல். ஆனால், இதை விட மிகக் கடுமையான, கொடுமையான அவதூறுகளெல்லாம் மார்க்ஸ் மீது வீசப்பட்டிருக்கின்றன. அவைகளோடு ஒப்பிட்டால் இது மிகவும் கொசுறான அவதூறு. இந்த கொசுறுக்கு கோபப்படும் அளவுக்கு மார்க்சியவாதிகள் ஒன்றும் தொட்டாற் சுருங்கிகளல்ல. எனவே, ‘உணர்வு’ கும்பல், “இந்த வார்த்தைகளை மட்டும் எங்கள் தோழர்கள் கேட்டால் கொதித்துப் போய் விடுவார்கள்” என்றெல்லாம் பில்டப் கொடுக்க வேண்டியதில்லை. மட்டுமல்லாது, மதவாதிகளைப் போல் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் மார்க்சியர்கள் எதையும் அணுகுவதில்லை. மாறாக, அறிவுவயப்பட்டு சரியான பார்வையோடு அணுகுவார்கள்.

எந்த அடிப்படையில் மார்க்ஸ் யூதர்களின் கைக்கூலியாக இருந்தார் என ‘உணர்வு’ கும்பல் புளி போட்டு விளக்குவதற்கு முன்னால் நீர் மேலாண்மை குறித்தும், இந்தியாவில் இஸ்லாம் பரவிய விதம் குறித்தும் வழக்கம் போல பொய் புனைகளை கலந்து கட்டி புருவம் விரிய விவரிக்கிறது. படிப்பவர்கள் சிரிப்பார்களே எனும் கூச்சம் கொஞ்சம் கூட இல்லாமல் எழுதிச் சென்றிருக்கிறார் சகோ(!) பாஸில். ‘உணர்வு’ கும்பலால் ஞானஸ்நானம் செய்யப்பட்டவர்களை தவிர வேறு யாரும் ‘உணர்வு’ படிக்கப் போவதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் போலும்.

ஒன்பதாவது பகுதியின் தொடக்கத்தில் ‘உணர்வு’ கும்பல் ஒரு படிமத்தை பயன்படுத்தியிருக்கிறது. அதாவது, மூலதனத்தை முழுவதும் படித்து அதில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மார்க்ஸ் இஸ்லாம் குறித்து எழுதியிருப்பதாக முஸ்லீம் கூறுகிறார். ஆனால் கம்யூனிஸ்டோ நான் சரியாக படிக்கவில்லை, அப்படி இருப்பதாக நினைவில் இல்லை என்கிறார். இதன் மூலம் ‘உணர்வு’ கும்பல் கூற விரும்புவது என்ன? கம்யூனிஸ்டுக்கு மூலதனம் குறித்து தெரியவில்லை, ஆனால், ஒரு முஸ்லீம் அதைப் படித்திருக்கிறார் என்பது தான் அவர்கள் காட்ட விரும்பும் காட்சி. மூலதனம் படித்திருக்க வேண்டும் என்பது ஒருவன் கம்யூனிஸ்டாக இருப்பதற்கான நிபந்தனை அல்ல. மறுபுறத்தில், ஒருவன் முஸ்லீமாக இருக்க வேண்டுமென்றால் குரான் குறித்து தெரியாமல் இருக்க முடியாது. ஆனால் யதார்த்தத்தில் இப்படி இல்லை. ஏராளமான கம்யூனிஸ்டுகள் மூலதனம் குறித்து படித்து தெளிந்திருக்கிறார்கள். மறுபுறம் ஏராளமான முஸ்லீம்கள் குரான் குறித்த எந்த தெளிவும் இல்லாமல் இருக்கிறார்கள். தெரிந்திருப்பவர்களில் பெரும்பாலானோர் மந்திரம் போல அரபு சொற்களை மனப்பாடம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த யதார்த்தத்தைத் தான் எதிர்மறையில் அந்த படிமத்தின் மூலம் காட்ட விரும்புகிறது ‘உணர்வு’ கும்பல். என்ன செய்வது உள்ளொன்று வைத்து புறமொன்று கூறும் கலையில் வல்லவர்களல்லவா?

பொதுவாக ‘உணர்வு’ கும்பல் குரான் வசனங்களுக்கு கொடுக்கும் விளக்கங்கள், அந்த குரான் வசனங்களின் மெய்யான பொருளுக்கு மாற்றமாக வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்கும். அதே அடிப்படையில் மூலதனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நீர் மேலாண்மை குறித்த ஒரு செய்திக்கு அதன் மெய்யான பொருளை விட்டு விலகி திணிக்கப்பட்ட பொருளாக, தங்களுக்கு சாதகமான முறையில் திரிக்கப்பட்ட பொருளாக ‘உணர்வு’ கும்பல் தன் தொடரில் குறிப்பிட்டிருக்கிறது.

அதாவது இந்தியாவின் நீர்ப்பாசன முறை பற்றி கூறும் ஓர் இடத்தில், இந்தியாவின் நீர்ப்பாசன முறையை முகலாயர்கள் புரிந்து கொண்ட அளவுக்கு அதற்குப் பின் வந்த ஆங்கிலேயர்கள் புரிந்து கொள்ளவில்லை. அதனால் தான் 1866ல் பீகார் பகுதியில் பெரும் பஞ்சம் ஏற்பட்டு லட்சக் கணக்கில் மக்கள் மடிந்தார்கள் என்று குறிப்பிடுகிறது. இந்த ஒற்றைச் செய்திக்கு ‘உணர்வு’ கும்பல் கொடுக்கும் பொருள் என்ன? வானத்திலிருந்து மழை மூலம் கிடைக்கும் நீர்தான் நிலத்தில் ஊற்றாக ஓடுகிறது. அதில் உங்களுக்கு குடிநீர் கிடைக்கிறது. அதன் மூலம் கனிகளையும் பயிர்களையும் மனிதர்களாகிய நீங்கள் விளைவிக்கிறீர்கள் எனப் பொருள்படும் இரண்டு குரான் வசனங்களை எடுத்துப் போட்டு, பார்த்தீர்களா இஸ்லாத்தின் பயனை? குரானில் இப்படி சொல்லப்பட்டிருப்பதால் தான் முஸ்லீம்கள் நீரின் பயனை உணர்ந்து அதனை வீணாக்கமல் பயன்படுத்தி விவசாயத்தை பெருக்கி மக்களை பஞ்சம் பசி பட்டினி இல்லாமல் வாழ வைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இந்த குரான் வசனங்களைப் புரியாமல் தண்ணீரை வீணாக்கினார்கள். அதனால் தான் பஞ்சம் வந்து பல லட்சம் மக்கள் அழிய நேர்ந்தது. இப்படி அன்று நேர்ந்த அந்த பஞ்ச மரணங்களுக்குள் தங்கள் குரான் வசனங்களைத் திணித்து வைத்திருக்கிறார்கள். அதாவது, இப்படி குரானின் பயனை அறிந்து தன் மூலதனத்தில் குறிப்பிட்ட மார்க்ஸ், அதனை குரான் வசனங்களின் மேன்மையாக குறிப்பிடாமல் நீர்ப்பாசன முறையாக குறைத்து விட்டார். மார்க்ஸ் தெரிந்தே வரலாற்றை மறைத்து விட்டார் என்கிறது ‘உணர்வு’ கும்பல். உண்மை என்ன?

மார்க்ஸ் பல இடங்களில் ஆசிய வகைப்பட்ட உற்பத்தி முறை குறித்து விளக்குகிறார். ஐரோப்பியாவில் நிலவிய பண்ணையடிமை முறை அதே மாதிரியில் இந்தியாவில் இல்லை. இந்தியாவில் நீர்பாசன முறை அரசின் பொறுப்பில் இருந்தது. அதாவது கோவிலின் பொறுப்பில் நிலங்கள் வைக்கப்பட்டிருந்தன. விளைச்சலுக்கான பாசன வசதி செய்து கொடுப்பது மன்னருடைய பொறுப்பு. ஆறுகளைப் பராமரிப்பது, ஏரி, குளங்களை வெட்டுவது, அவைகளுக்கு நீர் கொண்டு செல்லும் கால்வாய்களை பாதுகாப்பது, அதற்காக பணியாளர்களை நியமிப்பது என்று வயல்களுக்கு நீரைக் கொண்டு சேர்ப்பது வரை மொத்த நீர்ச் சுழற்சியும் மன்னனின் கீழ் இருந்தது. இதற்குப் பகரமாக விளைச்சலின் குறிப்பிட்ட பங்கை திரையாக மன்னனுக்கு செலுத்த வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் நிலவில் இருந்த விவசாய உற்பத்தி முறை இது தான். முகம்மதிய ஆட்சியாளர்களுக்கும் வெகு முன்னதாகவே இது தான் இந்தியாவில் நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது. இதுதான் வரலாறு. இந்த வரலாற்றை உறுதிப்படுத்த கல்வெட்டு சான்றுகள் இருக்கின்றன. இப்போது ‘உணர்வு’ கும்பல் கூறும் பொருளை இந்த வரலாற்றுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். எவ்வளவு அபத்தமாக இருக்கிறது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை காலனி நாடாக பிடித்து வைத்திருந்ததன் நோக்கம் வேறு. இங்கிருக்கும் மூல வளங்களை கொள்ளையடிக்கவும், தொழிற் புரட்சியின் மூலம் உற்பத்தி செய்து குவிக்கப்படும் பொருட்களை சந்தைப்படுத்தவுமே இங்கிலாந்துக்கு காலனி நாடுகள் அவசியப்பட்டன. முதலாளிய உற்பத்தி முறையின் விளைவாக தேவைப்பட்ட இந்தியச் சந்தையின் உள்நாட்டு பண்ணையடிமை முறை விவசாய உற்பத்தியை அழிப்பதில் தான் அவர்கள் இந்தியாவை காலனியாக பிடித்ததன் நோக்கம் அடங்கியிருக்கிறது. ஆங்கிலேயர்களின் நோக்கம் இவ்வாறாக இருக்கும் போது பல்லாண்டு காலம் தொடர்ந்து வந்திருக்கும் நீர் மேலாண்மை முறையை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு இல்லை. அதனால் தான் இந்த முறையை தங்களுக்கு இசைவாக மகல்வாரி முறை, இரயத்துவாரி முறை என்றெல்லாம் மாற்றிக் கொண்டார்கள். ஆனால் ‘உணர்வு’ கும்பலோ முகம்மதிய ஆட்சியாளர்கள் குரானின் வசனங்களுக்கு ஏற்ப நீர்ப்பாசன முறையை அமைத்தார்கள். ஆங்கிலேயர்களுக்கு குரான் தெரியாததால் விவசாய முறையை அழித்தது பஞ்சத்தை ஏற்படுத்தினார்கள் என்று எழுதியிருக்கிறது. இதைக் கண்டு நாம் எந்த வாயால் சிரிப்பது? அது மட்டுமா? முகலாயர்கள் ஆட்சி தொடர்ந்திருந்தால் இந்தியா செழிப்பாகி தன்னிறைவு பெற்ற நாடாகி இருக்கும் என்றும் கூட சொல்லியிருப்பதை என்ன சொல்ல? ‘உணர்வு’ கும்பலுக்கு தெரிந்த இந்த வரலாற்றை மார்க்ஸ் மறைத்து விட்டார் என்றெல்லாம் எழுதி வைக்கிறார்கள். வரலாற்றறிவு தான் இல்லை என்று ஆகி விட்டது, கொஞ்சம் பொது அறிவு கூடவா இல்லாமல் போகும்?

‘உணர்வு’ கும்பல் தங்கள் வரலாற்றை இந்தியாவுடன் முடித்துக் கொள்ளவில்லை. ஐரோப்பிய நாடுகளுக்கும் நீட்டியிருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகள் இன்று உலகின் வல்லரசாக இருப்பதற்கே அன்றைய இஸ்லாமிய ஆட்சி தான் காரணம் என்கிறார்கள்.

இன்று ஐரோப்பா வல்லரசாக விளங்குவதற்குக் காரணம் அன்று இஸ்லாமியர்கள் பல கால்வாய்களை வெட்டி, நிலத்தை சீர் செய்து, விஞ்ஞான ரீதியில் மண் வளத்தை ஆராய்ச்சி செய்து பாலைவனமாக இருந்த தேசத்தை பொருளாதாரத்தில் சீர்தூக்கச் செய்ய .. .. ..

இன்று பரவலாக வழக்கத்தில் இருக்கும் வல்லரசு எனும் சொல்லின் பொருள் முதலாளித்துவ வலிமையோடு மட்டுமே இணைத்து பொருள் கொள்ளக்கூடியது என்பது ஒருபுறம் இருக்கட்டும், ஐரோப்பாவில் இன்று வல்லரசாக இருக்கும் நாடுகள் இங்கிலாந்து, பிரான்சு, ரஷ்யா. இந் நாடுகளில் ரஷ்யாவின் சில பகுதிகளைத் தவிர வேறு எங்கும் இஸ்லாமிய ஆட்சி இருந்ததில்லை. பொதுவாக பொருளாதார வலிமை என்று கொண்டாலும் இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி இருந்ததில்லை. ஐரோப்பிய கண்டம் எனக் கொண்டால் அதில் இருக்கும் நாடுகளில் வளமிக்கதாயும், ஏழ்மையில் வீழ்ந்தும் பல நாடுகள் இருக்கின்றன. என்றால் ‘உணர்வு’ கும்பலின் மேற்கண்ட கூற்றுக்கு என்ன பொருள் எடுத்துக் கொள்வது? அதுவும் பாலைவன நாடுகளை மேம்படுத்தி பொருளாதார முன்னேற்றம் அடையச் செய்தார்களாம். இஸ்லாம் தோன்றியதே ஒரு பாலைவன நாட்டில் தான், இன்றும் அது பாலைவன நாடுதான். அந்த பாலைவன நாட்டில் இஸ்லாமிய ஆட்சி விவசாயத்தில் தொழில் துறையில் என்ன மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது? பெட்ரோல் வளம் மட்டும் கண்டுபிடிக்கப்படாமலிருந்தால் அதுவும் ஆப்பிரிக்க நாடுகளைப் போல் வறுமையில் வீழ்ந்திருக்கும்.

பொதுவாக இஸ்லாமியர்கள் ஐரோப்பாவைப் பற்றி குறிப்பிடுகிறார்கள் என்றால் அது ஸ்பெயினுக்கு மட்டுமே பொருந்தும். சற்றேறக் குறைய ஏழு நூற்றாண்டுகள் முகம்மதியர்கள் ஸ்பெயினை ஆண்டிருக்கிறார்கள். இதில் அவர்கள் பல சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள். கிருஸ்தவர்களோடு ஒப்பிடுகையில் கல்வி, மருத்துவம், வானவியல் உள்ளிட்ட பல துறைகளில் மேன்மை கண்டிருக்கிறார்கள் என்பதை மறுக்க வேண்டியதில்லை. ஆனால் அவற்றை ‘உணர்வு’ குறிப்பிடும் விதத்தில் எடுத்துக் கொள்ள முடியுமா என்பதே இங்கு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த இடத்தில் முட்டஸிலாக்கள் குறித்து கவனிப்பது பொருத்தமானதாக இருக்கும்.

‘உணர்வு’ கும்பலின் செயல்பாடுகளை நுணுக்கமாக பார்த்தால் ஆதிக்க ஜாதி மனோபாவம் வெளிப்படும். தாங்கள் மட்டுமே தூய வடிவில் இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள். எனவே, அவ்வாறு பின்பற்றாத பிற இஸ்லாமியர்களின் திருமணம் போன்ற பொது நிகழ்வுகளில் கூட கலந்து கொள்ள மாட்டோம் என தூயவாதம் பேசுவார்கள். இப்படி தூய்மை வாதம் பேசும் இவர்கள் தான் இஸ்லாத்தின் அருமை, பெருமைகளை ஜாக்கி வைத்து தூக்குவதற்கு முட்டஸிலாக்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். யார் இந்த முட்டஸிலாக்கள்?

முட்டஸிலாக்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால், முகம்மதுக்கு பிறகான காலங்களிலிருந்து தொடங்க வேண்டும். மதீனாவில் முகம்மது தொடங்கிய அரசு சற்றேறக் குறைய இரண்டாம் உலகப் போர் வரை நீடிக்கிறது. இதில் முகம்மதுக்கு பின் வந்த நான்கு கலீபாக்கள் ரஷாதிய கலீபாக்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்குப் பிறகு உமையா கலீபாக்கள் ஆட்சிப் பொறுப்பேற்றனர். இவர்களுக்குப் பிறகு அப்பாஸிய கலீபாக்களின் கீழ் அரசு வந்தது. தொடர்ந்து ஃபாத்திமியர்கள், அய்யுபியர்கள், மம்லக்குகள் என மாறி பின்னர் துருக்கியில் உத்மானியர்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி தங்களையும் கலீபாக்கள் என அழைத்துக் கொண்டனர். இதில் முகம்மதுவுக்குப் பின்பிலிருந்து உமையாக்களின் காலம் வரையிலான வரலாறு இரத்த வரலாறு. அதிகாரத்தின் வாரிசு யார் என்பதை முடிவு செய்ய போரிடுவதிலேயே காலம் கழிந்தது. அப்பாஸியர்களின் காலத்தில் தான் வாரிசுச் சண்டை முடிவுக்கு வந்து நிலையான ஆட்சி தொடங்குகிறது. சஹீஹ் சித்தாஹ் எனப்படும் ஆறு ஹதீஸ் தொகுப்புகள் இவர்களின் காலத்திலேயே தொகுக்கப்பட்டு இஸ்லாம் முழுமையடைகிறது.

இப்போது இதில் முதன்மையான ஒரு கேள்வியை எழுப்ப வேண்டியதிருக்கிறது. முகம்மது வாய்மொழியாக குரானைக் கூறிச் செல்கிறார். குரானை மனனம் செய்திருந்தவர்கள் வாரிசுரிமைப் போர்களினால் மரணமடைந்து விட்டார்கள் என்று காரணம் கூறி குரான் தொகுக்கப்படுகிறது. தொடர்ந்து நடைபெறும் போர்களினூடாக குரானுக்கு விளக்கம் வேண்டும் எனும் காரணம் கூறி ஹதீஸ்கள் தொகுக்கப்படுகின்றன. ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டு, குறிப்பிட்ட ஆறு தொகுப்புகள் தான் சரியான தொகுப்புகள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு, வாரிசுரிமைப் போர்களும் ஓரளவுக்கு முடிவுக்கு வந்த பின்னர், மத்ஹபுகள் என்ற பெயரில் நான்கு உரையாசிரியர்கள் தோன்றுகிறார்கள். குரான் தொகுக்கப்பட்டதற்கும், ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டதற்கும் ஏதோ ஒரு காரணம் சொல்லும் மதவாதிகள், இந்த மத்ஹபுகள் தோன்றுவதற்கான காரணம் என்ன? எந்த தேவையினால் மத்ஹபுகள் தோன்றின? என்பதை கூற முன்வருவார்களா? ‘உணர்வு’ கும்பலால் இந்த முதன்மையான கேள்விக்கு பதில் கூற முடியுமா?

இந்தக் கேள்விக்கான பதில் தான் முட்டஸிலாக்கள். உமையாக்களின் கடைசிக் காலத்தில் முட்டஸிலி ஒரு இயக்கமாக தோன்றுகிறது. கி.பி. 748ல் இன்றைய ஈராக் பகுதியில் வாசில் இப்ன் அத்தா என்பவர் “இருவேறு கருத்துகளுக்கிடையில் ஒரு நிலையெடுத்தல்” (அல் மன்ஸிலா பைனா அல் மன்ஸிலதைன்) எனும் தலைப்பில் மக்களுக்கு உபதேசிக்கத் தொடங்குகிறார். சுருக்கமாகக் கூறினால், அல்லா என்பது எல்லாவற்றையும் மிகைத்த சக்தி என்றால் அது சைத்தானை உலவ விட்டது ஏன்? எனும் கேள்வியை எழுப்பினார். அதாவது கடவுள் நம்பிக்கையை பகுத்தறிவுவாதியாக நின்று அணுகினார். இவருக்குப் பின் அம்ர் இப்ன் உபைத் என்பவர் இதை ஒரு தத்துவமாக உருவாக்கினார். இதற்கு முட்டஸிலி எனும் பெயர் கொடுத்து ஒரு இயக்கமாக உருவாக்கினார். மக்களிடையே மிகுந்த செல்வாக்கு செலுத்தும் இயக்கமாக இது மாறியது. பாக்தாத், பாஸ்ரா ஆகிய நகரங்களில் இத் தத்துவத்தை போதிக்கும் கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டன. அப்பாஸிய கலீபாக்கள் இந்த தத்துவத்துக்கு ஆதரவாக இருந்தார்கள். இந்த கல்வி நிலையங்களிலிருந்து உருவான அறிஞர்கள் இஸ்லாமிய பிரதேசமெங்கும் பரவி இந்த தத்துவத்தை போதித்தார்கள்.

இந்த முட்டஸிலாக்களுக்கு எதிராகத் தான் மத்ஹபுகள் தோன்றின. அபு ஹனிபா நுமன் இப்ன் தாபித், மாலிக் இப்ன் அனஸ், முஹம்மது இப்ன் இத்ரிஸ் அல் ஷாபி, முஹம்மது இப்ன் ஹன்பல் ஆகியவர்கள் முட்டஸிலி தத்துவத்துக்கு எதிராக கடுமையாக போராடினார்கள். இவர்களின் வழிமுறையைப் பின்பற்றித் தான் ஷாபி, ஹனபி, ஹன்பலி, மல்லிக் எனும் பிரிவுகள் (மத்ஹபுகள்) உருவாகின. எட்டாம் நூற்றாண்டில் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரை மிகுந்த செல்வாக்குடன் இருந்த இந்த இயக்கம் அதன் பிறகு மங்கத் தொடங்கி, 14ம் நூற்றாண்டின் இறுதியில் மறைந்து போனது. இதில் வேடிக்கை என்னவென்றால், இஸ்லாத்தின் பொற்காலம் என அழைக்கப்பட்டது இந்த முட்டஸிலாக்கள் செல்வாக்குப் பெற்றிறிந்த அப்பாஸிய கலீபாக்களின் காலம் தான். அவர்களின் காலத்தில் தான் ‘உணர்வு’ கும்பல் பெருமிதத்துடன் குறிப்பிடும் நீர்ப்பாசன முறைகள் மேன்மையுற்று, கல்வி, மருத்துவம், வானவியல் என அனைத்துத் துறைகளிலும் இஸ்லாமியர்கள்(!) சிறப்படைந்திருந்தார்கள்.

இப்போது பிரச்சனை என்னவென்றால் முட்டஸிலாக்களை முஸ்லிம்கள் என்று அழைக்கலாமா? என்பது தான். பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு மத்ஹபுகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அதில் கரைந்து போனார்கள் என்றாலும்; அவர்கள் செல்வாக்குடன் இருந்த காலத்தில் அல்லாவின் ஆற்றல் மீது பகுத்தறிவுவாதிகளாக நின்று கேள்வி எழுப்பினார்கள். அவர்களை முஸ்லீம்களாக மதிப்பிட வேண்டுமா? வேண்டாமா? என்பது மதவாதிகளின் பிரச்சனை. ஆனால் நாங்கள் தான் தூய இஸ்லாமியர்கள், இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்றுபவர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் ‘உணர்வு’ கும்பல் இஸ்லாத்தின் அருமை பெருமைகளை பீஜப்படுத்திக் காட்ட முத்தஸிலாக்களை பயன்படுத்திக் கொள்வது அயோக்கியத்தனம் இல்லையா? என்பதே கேள்வி. ஏகாதிபத்தியவாதிகளால் திட்டமிடப்பட்ட இஸ்லாமிய மீட்டுருவாக்கத்தை பரப்பும் ‘உணர்வு’ கும்பல் வாந்தியெடுப்பது மட்டும் தான் இஸ்லாம் எனும் நிலையிலிருந்து தமிழக முஸ்லீம்கள் வெளிவந்து இஸ்லாமிய வரலாற்றை பரிசீலனையுடன் படித்துப் பார்க்க வேண்டும்.

இந்தத் தொடரை கம்யூனிசத்தை விட இஸ்லாம் உயர்வானது என்று காட்டுவதற்காகத் தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். என்றால் அவர்கள் செய்திருக்க வேண்டியது என்ன? இஸ்லாம், கம்யூனிசம் இரண்டின் தத்துவங்களை எடுத்துக் கொண்டு எது சரியானது என விவாதித்திருக்க வேண்டும். அதற்கு துணையாக அறிவியல், வரலாற்று அம்சங்களை சான்றுகளுடன் நிருவியிருக்க வேண்டும். இஸ்லாத்தில் இருப்பது என்ன? புனிதப்படுத்தப்பட்ட கற்பனைகள், இதைத் தவிர வேறு என்ன இருக்கிறது? அதனால் தான், அவ்வாறு இயலாததால் தான் ஏதேதோ சொல்லி, பொய்களை அடுக்கி, வரலாற்றை திரித்து தன் பின்னால் திரண்டிருப்பவர்களிடம் இஸ்லாமே உயர்ந்தது என நிலைக்க வைக்க பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது ‘உணர்வு’ கும்பல். அறிவு நேர்மையுள்ள, மீளாய்வுக்கு ஆயத்தமாக இருக்கும் முஸ்லீம்களுக்காகவே அலுப்பை ஏற்படுத்தும் இந்த பீஜப்படுத்தல்களை சுருக்கமாகவேனும் குறிப்பிட்டாக வேண்டியதிருக்கிறது.

ஏற்கனவே பல முறை இங்கு குறிப்பிடப் பட்டிருக்கிறது, இது மெய்யாக நடந்த உரையாடலல்ல, ‘உணர்வு’ கும்பலே செய்திருக்கும் கற்பனை உரையாடல் என்று. அவர்களே செய்த இந்த கற்பனை உரையாடலின் தரம் எப்படி இருக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை பதிவு செய்து கொள்ளலாம்.

ஆட்சியாளர்கள் எப்போதும் ஆட்சியாளர்களாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள். முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் என்று இதில் பேதம் ஒன்றும் இல்லை என்று ஓரிடத்தில் கம்யூனிஸ்ட் தெரிவிக்கிறார். இதை மறுக்க வேண்டுமென்றால் வரலாற்றில் முஸ்லீம் ஆட்சியாளர்களும், கிருஸ்தவ ஆட்சியாளர்களும் வேறு வேறாக நடந்திருக்கிறார்கள் என்பதை சான்றுகளுடன் நிரூபித்திருக்க வேண்டும். ஆனால், ‘உணர்வு’ கும்பல் செய்திருப்பது என்ன? கேரளாவில் முகம்மது இருக்கும் போதே இஸ்லாம் எப்படி பரவியது என விவரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இன்னொரு இடத்தில், மதம் மாறினால் மட்டும் தொழிலாளர்கள் நிலை மாறி விடுவதில்லை. அவன் தொடர்ந்து அப்படியே வறுமையிலேயே நீடிக்கிறான் என கம்யூனிஸ்ட் கூறுகிறார். இதற்கு பதில் கூற வேண்டுமானால் என்ன செய்திருக்க வேண்டும்? மதம் மாறியவர்களை இஸ்லாம் நல்ல வளத்துடன் வாழ வைத்திருக்கிறது என எடுத்துக் காட்டியிருக்க வேண்டும். ஆனால், ‘உணர்வு’ கும்பல் செய்திருப்பது என்ன? மார்க்ஸ் யூத கைக்கூலியா? என்று கேள்வி எழுப்புகிறார். அவர்களே எழுதும் கற்பனை உரையாடலில் கூட கம்யூனிஸ்டுகள் எழுப்பும் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் வேறு வேறு வழியில் திசை விலக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன? இஸ்லாம் அந்த அளவுக்கு ஒட்டுப்போட முடியாதபடி கிழிந்து, நைந்து போன துணியாக இருக்கிறது என்பது தானே! ‘உணர்வை’ வாசிக்கும் அறிவு நாணயமுள்ள இஸ்லாமியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் இஸ்லாம் அரபு வணிகர்களால் கேரளாவில் பரவியது என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. அதேநேரம், எப்போது? எதனால்? பரவியது என்பதில் ‘உணர்வு’ கும்பல் கூறுவது முழுக்க முழுக்க ஆதாரமற்ற மதவாத பசப்பல்கள் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

இஸ்லாம் இந்தியாவில் எப்போது பரவியது என்பதற்கு, துல்லியமாக இந்த ஆண்டில் தான் பரவியது என்பதற்கு சான்றாதாரம் எதுவுமில்லை. ஆனால் ‘உணர்வு’ கும்பல் முகம்மதின் காலத்திலேயே அதாவது 630 லேயே பரவியது என்று அடித்து விட்டிருக்கிறார்கள். இதற்கு ஆதாரம் என்று எதனையும் அவர்கள் காட்டவில்லை. என்றாலும், பொதுவாக முஸ்லீம்கள் முகம்மதின் காலத்திலேயே இந்தியாவில் இஸ்லாம் பரவியதாக நம்புகிறார்கள்(!) எந்த அடிப்படையில் இப்படி நம்புகிறார்கள் என்றால், முகம்மது நிலவை பிளந்து காட்டியதாக ஒரு கட்டுக்கதை குரான், ஹதீஸ்களில் உண்டு. இந்த நிலவு பிளந்த நிகழ்ச்சியை இந்தியாவிலிருந்து ஒருவர் பார்த்து அவர் முஸ்லீமாக மாறினார் என்றொரு கதை முஸ்லீம்கள் மத்தியில் உலவுகிறது. இந்த கதையின் அடிப்படையில் தான் ‘உணர்வு’ கும்பல் 630 களிலேயே இஸ்லாம் இந்தியாவில் பரவி விட்டதாக கதையளக்கிறது.

முகம்மது நிலவை பிளந்து காட்டிய அதே காலத்தில் இந்தியாவில் கேரள பகுதிகளை ஆண்டு வந்த சேரர் தொண்டைமான் எனும் மன்னர் நிலவு பிளந்ததை தன் கண்களால் பார்த்து, கடல் வழியாக  அரபு நாட்டுக்குச் சென்று முகம்மதை சந்தித்து இஸ்லாத்தை தழுவுகிறார். பின்னர் தரை வழியாக இந்தியாவை நோக்கி திரும்பும் வழியில் ஓமன் நாட்டில் மரணித்து விட, அவரின் சமாதி இன்றும் ஓமனில் உள்ளது. பின்னர் அவருடன் அனுப்பி வைக்கப்பட்ட மாலிக் பின் தீனார் என்பவர் இந்தியா வந்து இஸ்லாத்தை பரப்பினார் என்று ஈர்க்கும் வண்ணம் கதை சொல்கிறார்கள். ஆனால் கதைகள் உண்மை ஆகி விடுவதில்லையே.

தொண்டைமான் என அழைக்கப்படும் சேரமான் பெருமான் பாஸ்கர ரவி வர்மாவின் காலம் எட்டாம் நூற்றாண்டு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த முகம்மது நிலவை பிளந்ததை எப்படி பார்க்க முடிந்தது? முகம்மதை எப்படி சந்திக்க முடிந்தது?

மக்காவில் முகம்மதை சந்தித்துவிட்டு கடல் வழியாக திரும்பினாலும், தரை வழியாக திரும்பினாலும் தற்போது ஓமன் நாட்டிலிருக்கும் சலாலா எனும் நகருக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவரின் சமாதி இருப்பது சலாலா நகரில். இது எப்படி நேர்ந்தது?

அன்றைய அரேபிய பகுதியில் அருகில் இருந்த நாடுகளுக்கு முகம்மது கடிதம் அனுப்பிய செய்திகள் கூட அதிகாரபூர்வ ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் போது, தூரப் பகுதி நாடான இந்தியாவிலிருந்து ஒரு மன்னரே முகம்மதை தேடி வந்து மதம் மாறி பின் அவருடன் மாலிக் பின் தீனார் எனும் பிரச்சாரகரையும் அனுப்பி வைத்தனர் என்றால் அந்தச் செய்தி அதிகாரபூரவமான ஹதீஸ்களில் இடம் பெறாமல் போனதெப்படி?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையளிப்பது யார்? ‘உணர்வு’ கும்பல் ஒருபோதும் விடையளிக்காது. பரிசீலனையுள்ள முஸ்லீம்கள் தான் விடையளிக்க வேண்டும். எனவே, 630 களிலேயே இந்தியாவில் இஸ்லாம் பரவிவிட்டது என ‘உணர்வு’ கும்பல் கூறுவது கலப்பற்ற கட்டுக்கதை. இஸ்லாம் இந்தியாவில் எதனால் பரவியது என்பதில் ‘உணர்வு’ கும்பலின் மதவாதப் பொய்களைக் காணலாம்.

அரபு வியாபாரிகள் குரானில் கூறியிருந்தபடி, அளவு நிருவைகளில் மோசம் செய்யாமல் நேர்மையாக இருந்தார்கள். வியாபாரத்தில் விற்போரும் வாங்குவோரும் நட்டமையக் கூடாது என்பதில் விழிப்புடன் இருந்தார்கள். ஒருவர் தன் கைகளால் உழைத்து உண்பதே சிறந்த உணவு என்று நம்பினார்கள். வாழ்க்கை வசதிகள் அதிகமிருப்பது செல்வமில்லை, போதுமென்ற மனமே உண்மையான செல்வம் என ஏற்றுக் கொண்டார்கள். இன்னும் இது போன்ற குரானின் நீதி போதனைகளை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்ந்ததைக் கண்டும், புதிய வணக்க முறைகளைக் கண்டும் கேரளாவிலிருந்த அன்றைய மக்கள் இஸ்லாத்துக்கு மாறினார்கள் என்கிறது ‘உணர்வு’ கும்பல். ஆனால் வரலாறு என்ன? அன்று இருந்த மக்கள் இஸ்லாத்துக்கு மட்டுமல்ல, கிருஸ்தவம், பௌத்தம் உள்ளிட்ட பல மதங்களுக்கு மாறினார்கள். அவ்வாறு மாறியவர்களெல்லாம் அந்தந்த மதங்களில் உள்ள நீதி போதனைகளைக் கண்டு மாறினார்கள் என்று ‘உணர்வு’ கும்பல் ஒப்புக் கொள்ளுமா?

அன்றைய மக்கள் தங்கள் வழிபாட்டு முறையை மாற்றிக் கொண்டதற்கு அடிப்படையாக இருந்த அம்சம் பார்ப்பனியக் கொடுங்கோன்மை, தீண்டாமை எனும் கொடூரம். இந்து எனும் ஒற்றை மதம் அன்று இல்லை என்றாலும் நிலவில் இருந்த பல நாட்டார் சிறு தெய வழிபாடுகளை பார்ப்பனிய மதம் உள்வாங்கிக் கொண்டு அவர்களை சூத்திரர்களாக இழிவுபடுத்தியது. வேலைப் பிரிவினைகளை பிறப்பு வழியிலான பிரிவினைகளாக மாற்றி தன்னுடைய மேலாதிக்கத்திற்காக அவர்களை அடிமைகளாக மாற்றியது பார்ப்பனியம். இந்தக் கொடுமைகளிலிருந்து விடுபட்வே மக்கள் மதம் மாறினார்கள். இது வரலாற்று ஆய்வாளர்களால் ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்ட அம்சம். நிரூபிக்கப்பட்ட இந்த விசயங்களிலேயே மதவாதப் பொய்களை கூச்சமின்றி பரப்ப முனைந்திருக்கிறது ‘உணர்வு’ கும்பல் என்றால் அதன் பொருள் என்ன? தன்னைப் பின்பற்றுபவர்களை அவ்வளவு கேவலமாகவா மதிப்பிட்டிருக்கிறது ‘உணர்வு’ கும்பல்? ‘உணர்வு’ இதழில் இதை வாசித்த அனைவரும் பதில் கூறட்டும். இந்தப் பகுதிக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவித்தீர்களா? உங்கள் மறுப்பை பதிவு செய்தீர்களா? இல்லை என்றால், அன்று தீண்டாமைக் கொடுமைகளை வேறுவழியின்றி ஏற்றுக் கொண்டவர்களுக்கும், இந்த அப்பட்டமான மதவாத பொய்களை அட்டியின்றி ஏற்றுக் கொண்ட உங்களுக்கும் என்ன வித்தியாசம்? நேர்மையுள்ளவர்கள் பதில் கூறட்டும்.

அடுத்து கற்பனைத் தொடரின் தலைப்பில் உள்ள விசயத்துக்கு வருவோம், மார்க்ஸ் யூதக் கைக்கூலியா? எந்த அடிப்படையில் ‘உணர்வு’ கும்பல் இந்த அவதூறை வீசுகிறது?

முகம்மது நபி(ஸல்) அவர்களின் ஆறாம் நூற்றாண்டு காலத்திலேயே பிரபுத்துவ முறை இஸ்லாத்தால் ஒழிக்கப்பட்டு மக்களாட்சி மலர்ந்த ஒன்பது நூற்றாண்டு சரித்திரத்தை மறைத்து, 15ம் நூற்றாண்டில் பிரபுத்துவமுறை ஒழிந்தது என்று சரித்திரப் புரட்டு செய்து, அரேபியர்களின் ஆதிக்கம் என்று வரலாற்றை மாற்றியது யூதர்களுக்காகத் தான் இருக்குமென்று சந்தேகப்படுவதில் என்ன தவறு என்றேன்

ஒரு அச்சு ஊடகத்தில் எழுதுவதற்கான எந்தத் தகுதியாவது, மேற்கண்ட இந்த வாக்கியத்தில் வெளிப்பட்டிருக்கிறதா? பிரபுத்துவ முறை என்றால் என்ன? ஆறாம் நூற்றாண்டு அரேபியாவில் நிலப் பிரபுத்துவ முறை இருந்ததா? மனிதகுல வரலாற்றை உற்பத்தி முறையின் அடிப்படையில் பிரிக்கும் காலகட்டங்கள் குறித்த குறைந்தபட்ச அறிதலாவது இத்தொடரை எழுதும் சகோ(!) பாஸிலுக்கு இருக்கிறதா? அல்லது இதை வெளியிடும் உணர்வு இதழின் நிர்வாகத்தினருக்கு இருக்கிறதா? அல்லது உணர்வு இதழை இயக்கும் டி.என்.டி.ஜே வுக்கு அவ்வாறான அறிதல் இருக்கிறதா? இப்படி எந்தவித அடிப்படை அறிவும் இல்லாமல் எழுதுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். உணர்வு இதழைப் படிப்பவர்கள் எல்லோரும் முட்டாள்கள். எந்தக் குப்பையை எழுதினாலும், நாம் எழுதுவதை மட்டுமே அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் எனும் எண்ணம் இருந்தால் மட்டுமே இப்படி எழுத முடியும்.

முகம்மது வாழ்ந்தது ஆண்டான் அடிமைக் காலகட்டத்தில். இதற்கு சில காலத்துக்குப் பிறகு தான் நிலப்பிரபுத்துவ முறை வருகிறது. அதிலும், முகம்மது வாழ்ந்த அரேபிய பெரும் பாலை நிலப்பரப்பு. எனவே, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை அங்கு இருந்திருக்கவில்லை. ஆண்டான் அடிமை முறையிலிருந்து நேரடியாக முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மாறியது அரேபியா. ஆண்டான் அடிமை முறை ஒழிகிறது என்றால் அதன் பொருள், ஆண்டான் அடிமை வாயிலான உற்பத்தி முறை மாறி வேறொரு வடிவிலான உற்பத்தி முறை அங்கு வருகிறது என்பதாகும். ஆறாம் நூற்றாண்டிலேயே இல்லாத நிலப்பிரபுத்துவ முறையை ஒழித்தது இஸ்லாம் என்றால் அந்த இடத்தில் எந்த உற்பத்தி முறையை கொண்டு வந்தது? முதலாளித்துவ உற்பத்தி முறையையா?

1960 வரை அரேபியாவில் அடிமைகள் இருந்தார்கள் என்பதும், அதன் பிறகே மதத்தின் போதனையை மீறி, பன்னாட்டு நிர்ப்பந்தக்களுக்கு பணிந்து, சட்டம் போட்டு அடிமை முறை சௌதி அரேபியாவில் ஒழித்தார்கள் என்பதும் பாஸிலுக்கோ, டி.என்.டி.ஜே கும்பலுக்கோ தெரியுமா? அடிமை முறையை இஸ்லாம் ஒழித்தது என்று குதித்துக் கொண்டிருக்கும் ‘உணர்வு’ கும்பல் 1960 வரை சௌதியில் அடிமை முறை ஏன் இருந்தது என்பதற்கு காரணம் கூற முடியுமா? அடிமை முறையே அரேபிய நிலப்பரப்பில் 1960 வரை நீடித்தது என்றால் ஆறாம் நூற்றாண்டிலேயே அரேபியாவில் இஸ்லாம் நிலப் பிரபுபுத்துவத்தை ஒழித்தது என்று எப்படிக் கூற முடியும்?

‘உணர்வு’ கும்பலுக்கு ஒரு விசயம் உருத்தலாக இருந்திருக்கிறது. அரேபியா விவாசாய நிலமே இல்லாத பாலைப் பரப்பு தானே அங்கு நிலப்பிரபுத்துவம் முறையை இஸ்லாம் ஒழித்தது எப்படி கூறமுடியும் என்று யோசித்து நிலம் எனும் சொல்லை மட்டும் நீக்கி விட்டு பிரபுத்துவ முறை என்று கூறுகிறது ‘உணர்வு’ கும்பல். இது பித்தலாட்டம் இல்லையா? இப்படி வரலாறு, சமூக அறிவு என்று எதுவுமே தெரியாமல் ‘உணர்வு’ கும்பல் இப்போது உளரும் இந்த உளரல்களை அப்போதே மார்க்ஸ் மறைத்து விட்டாராம். அதனால் அவர் யூதக் கைக்கூலியாம். இதைவிட பெரிய கேலிக் கூத்து என்னவென்றால் கிபி. 630ல் கேரளாவில் நடந்த இஸ்லாமிய எழுச்சியில் இதற்கான ஆதாரம் இருக்கிறதாம். தொடரும் எனப் போட்டு அதை அடுத்த பகுதியில் குறிப்பிட்டிருக்கிறார்கள். மார்க்ஸ் ஒரு யூதக் கைக்கூலி என்பதற்கு அல்லது இஸ்லாம் ஆறாம் நூற்றாண்டிலேயே நிலப்பிரபுத்துவ முறையை ஒழித்து விட்டது என்பதற்கு 630ல் நடந்த கேரள இஸ்லாமிய எழுச்சியில் என்ன ஆதாரம் இருக்கிறது என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

இத்தொடரின் முந்திய பகுதிகள்:

1. கற்பனை உரையாடலல்ல, காத்திரமான சொல்லாடல்

2. கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே

3.  பதில்சொல்ல முடியாத டி.என்.டி.ஜே

4. வளைகுடாவில் வேலை செய்யும் முஸ்லீம்கள்

5. எதிலும் மேலோட்டமாக இருப்பதே மதவாதம்

6. துரோகி முகம்மதா மார்க்ஸா டி.என்.டி.ஜே பதில் சொல்லுமா?

7.  ‘உணர்வு’ கும்பலின் தரம் பொய்களும் அறியாமையும் தான்

8. உணர்வு கும்பலிடம் வரலாற்றறிவை எதிர்பார்க்க முடியுமா?

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

One thought on “மத்ஹபுகள் ஏன் தொடங்கப்பட்டன? பதில் சொல்லுமா டி.என்.டி.ஜே

  1. செங்கொடி அவர்களே, உங்களின் வரலாற்று அறிவையும், அணுகல் முறையையும் மெச்சுகிறேன். அவை என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றன. உண்மையில், நம் நாட்டில் வரலாற்று பேராசிரியர்கள் என்று திரியும் பல அறிவிலிகள் உங்களிடம் பிச்சை வாங்க வேண்டும் என்பதே என் கருத்து. அது நம் கல்வி முறையின் மாபெரும் கொடுமையுங்கூட. உங்களின் வரலாற்று விளக்கத்தில் எனக்கு சில ஐயங்கள் இருக்கின்றன, அவற்றை பிறகு கேட்கிறேன்.

    எனக்கு வேறு ஒரு சந்தேகம். முகமது அரேபியாவில் நிலவைப் பிளந்தபோது, அதை கேரள அரசன் அப்படியே பார்த்தாரா? பூகோள அடிப்படையில், நேர வித்தியாசமெல்லாம் கிடையாதா? அப்படியே இருந்தாலும் கூட, பிளக்கும் நிலவை, அந்த நேரத்தில் பூமியில் இருட்டாக இருந்த பிரதேசத்தில் வாழ்ந்த அனைத்து மக்களுமல்லவா பார்த்திருக்க வேண்டும். ஒருவேளை, அந்த சேர மன்னன் மட்டும்தான் அந்த நேரத்தில் விழித்துக் கொண்டிருந்தாரோ! அடித்துவிட ஒரு அளவில்லையா?

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s