முகநூல் நறுக்குகள் 7-12
செய்தி:
கிரானைட் கொள்ளை வழக்குகள் இரண்டில் இருந்து பி.ஆர்.பழனிச்சாமி, அவருடைய மகன் ஆகியோரை மேலூர் கோர்ட்டு விடுவித்தது உத்தரவிட்டுள்ளது. மட்டுமல்லாது, அரசு அனுமதி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்சுல்மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டு் தீர்ப்பளித்துள்ளது.
இம்சை அரசன் 24ம் புலிகேசி: யாரங்கே துப்புகிற துப்பலில் நீதி மன்றங்கள் மூழ்கி தத்தளிக்க வேண்டாமா? .. .. .. ம்ம்ம்.. .. .. கிளப்புங்கள்.
மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மகேந்திரபூபதி தீர்ப்பை வாசிக்கும் கேட்பொலி: http://vocaroo.com/i/s0BfgiYNPdJt
*********************************************
இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்.
அன்றைய வெள்ளை ஆட்சியில் மட்டுமல்ல, இன்றும் அது தான் நடக்கிறது.
டாஸ்மாக்கிற்கு எதிரான மாநாடு நடந்து ஒன்றரை மாதங்கள் ஆகிறது. அதில் அரசுக்கு எதிராக பேசியதாக இப்போது வழக்குப் பதிவு.
யாருப்பா அங்கே! ஆகஸ்டு 14ல் சுதந்திர தினம் என்று மிட்டாய் கொடுத்தவங்க எல்லாம் வரிசையில வாங்க.. .. ..
************************************************
பாரத் மாத்தாக்கி ஜொய்யா! மக்களுக்காக பாடுபடுபவன் நாயா?
சட்டிஸ்கரில் சுரங்கத் தொழிலாளர்கள் அளிக்கும் நன்கொடையைக் கொண்டும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இலவச மருத்துவமனையை சேர்ந்த மக்கள் மருத்துவர் சாய்பால் ஜானா அவர்களை கைது செய்திருக்கிறது பாசிச பாஜக அரசு.
பல்வேறு அரசு குழுக்களிலும், சுகாதாரம் தொடர்பான கமிட்டிகளிலும் பங்கெடுத்துள்ள மருத்துவரான இவரை, எப்போதும் மருத்துவமனையிலேயே இருந்து, மக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவம் சார்ந்த தேவைகளையும் கவனித்துக் கொண்டிருந்த மருத்துவரான இவரை கடந்த 25 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்பவர் என்று புளுகுகிறது பாசிச பாஜக அரசு.
1992ல் பிலாய் தொழிலாளர் போராட்டத்தின் போது போலீசு துப்பாக்கி சூட்டில் 18 பேர் கொல்லப்பட்டார்கள். இதில் காயம்பட்டவர்களுக்கு மருத்துவ சிக்கிச்சையளித்தார் என்பது தான் இவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு. இந்த நகைப்புக்கிடமான வழக்கில் தான் 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தாராம்.
கட்டெறும்பு கத்தியெடுத்து குத்துச்சுன்னு சொன்னாலும் மக்கள் நம்புவாங்க ன்னு போலீசு நினைக்குது.
பன்னாட்டு கார்ப்பரேட்டுகள், அதானிக்கு சட்டிஸ்கரில் இருக்கும் கனிம வளங்களை கொள்ளையடிக்க தாராளமாக அனுமதிக்க வேண்டும். அதற்கு எதிராக இருக்கும் தொழிலாளர்கள், பழங்குடியினர், அறிவுத்துறையினர் ஆகியோரை எந்த வழியிலேனும் அப்புறப்படுத்த வேண்டும். இது தான் அரசின் திட்டம். இதற்கு எதிராக இருக்கும் யாரும் வளர்ச்சியின் விரோதிகள் என்கிறார் மோடி.
இந்த அடிப்படையில் தான் மருத்துவர் பினாயக் சென் கைது செய்யப்பட்டார், பழங்குடி செயற்பாட்டாளர் சோனி சோரி மீது ஆசிட் தாக்குதல் நடத்தப்பட்டது. செய்தியாளர்கள் சோமுரு நாக், சந்தோஷ் ஆகியோர் சித்திரவதை செய்யப்பட்டனர். பத்திரிக்கையாளர் மாலினி சுப்பிரமணியம் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி, தொடர்ச்சியாக மிரட்டல்கள் கொடுத்து சட்டீஸ்கரை விட்டு வெளியேற்றப்பட்டார். இதன் தொடர்ச்சியாகத் தான் மருத்துவர் சாய் பால் ஜானாவும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கைது செய்த அவரை ஒரு நாயைப் போல் சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்றிருக்கிறார்கள். மெய்யான சுதந்திரப் போர் எவ்வளவு அவசரமாக இருக்கிறது என்பதைத் தான் இவை உணர்த்துகின்றன.
******************************************************
இப்படி ஒரு செய்தி உலவுகிறதே உண்மையா?
இந்து திருமண சட்டத்தில் திருத்தம். காதல் திருமணம் அதாவது பதிவுத் திருமணம் செய்யும் போது கண்டிப்பாக பெற்றோர் ஒப்புதல் வேண்டும். குறிப்பாக மணப் பெண்ணின் தாயார் ஒப்புதல் மிக அவசியம். 30 நாட்களுக்குள் பெற்றோரின் ஒப்புதல் தெரிவிக்கப்படாவிட்டால் பதிவுத் திருமணம் செல்லாததாகி விடும்.
இப்படி ஒரு செய்தி உலவுகிறதே உண்மையா?
கலப்பு மணத்துக்கு அங்கீகாரம் கொடுத்து சட்டம் இயற்றப்பட்டிருக்கும் தமிழ் நாட்டில் அந்த அங்கீகாரத்தை அடித்து நொருக்குகிறது இந்தத் திருத்தம்.
அண்மையில் உடுமலைப் பேட்டை சங்கர் கொலையில் துள்ளத்துடிக்க நடுரோட்டில் வெட்டிக் கொன்ற தேவர் சாதிவெறிக்கு ஆதரவாக நின்று இந்த திருத்தம் செய்யப்பட்டிருக்கிறதா? அரிவாளைத் தூக்கி நீங்கள் சட்டத்துக்குள் மாட்டிக் கொள்ள வேண்டாம். நான் சட்டத்தையே மாற்றி விடுகிறேன் எனும் ஆணவமா?
அதுசரி, தேர்தல் காலத்தில், சட்டமன்றம் கூடாத நிலையில் இவ்வாறான சட்டத் திருத்தம் செய்ய முடியுமா?
*****************************************************
மாநிலங்கள் எல்லாம் சும்மா! இனி இந்தியா மட்டும் தான் ஆமா!
மாநில உரிமைகள் குறித்து பேசுவதை மாநிலக் கட்சிகள் கைகழுவி நாட்களாகின்றன. மாநில உரிமைகளுக்கான போராட்டம் என்பதெல்லாம் தற்போது தேர்தல் வர்த்தமானங்களை முன் வைத்து கடிதம் எழுதுவதுடன் நின்று போய் விட்டது.
ஆதார் அட்டைக்கான முன்னெடுப்பை மத்திய அரசு உச்ச நீதி மன்ற வழி காட்டுதலையும் மீறி மக்களிடம் திணிக்க முயன்ற போது எந்த மாநில அரசுகளும் இது குறித்து கவலை தெரிவிக்கவோ தடுக்கவோ முன்வரவில்லை. மாறாக, ஒத்துழைத்தன.
பலமுறை முயன்றும் முடியாமல் போன ஆதார் அட்டைக்கான மசோதாவை பண மசோதாவாக தாக்கல் செய்து நிறைவேற்றவும் செய்திருக்கிறது பாசிச பி.ஜே.பி அரசு.
இந்த நிலையில் தான் பி.ஜே.பி அரசிடமிருந்து ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது. ரேசன் கார்டுகள் இனி ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படாது என்பது தான் அந்த அறிவிப்பு. அதாவது, ரேசன் கார்டு என்பது தனி நபர் அடையாள ஆவணமாகவும், வசிப்பிட ஆவணமாகவும் கோடிக்கணக்கான ஏழை மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி அவ்வாறு பயன்படுத்த முடியாது. தெளிவாகச் சொன்னால், ஆதார் அட்டை இல்லையென்றால் இனி இந்தியனாக மதிக்கப்பட மாட்டாய் இதன் பொருள்.
ஆதார் அட்டை ஏன் கொண்டு வரப்படுகிறது? யாருக்காக கொண்டு வரப்படுகிறது? அதன் விளைவுகள் சமூகத்தில் எந்த அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாக்கும்? என்பது குறித்தெல்லாம் சமூகத்தின் மீது அக்கரை கொண்ட பலரும் பேசியும் எழுதியியும் முடித்து விட்டார்கள்.
ஏற்கனவே ‘உங்கள் காசு உங்கள் கையில்’ எனும் சர்க்கரை தடவிய திட்டத்தின் மூலம் ரேசன் கடைகளுக்கு சவக்குழி வெட்டப்பட்டு தயாராக இருக்கிறது. இப்போது ரேசன் கார்டுகளை வெறும் அட்டையாக மாற்றும் அறிவிப்பும் வந்து விட்டது.
பாரத் மாத்தாக்கு ஜொய்ய்ய்ங் ன்னு சொல்லாதவங்க இந்தியாவில் இருக்க முடியாதுண்ணு குரங்குகள் கும்பி கருகி கத்திக் கொண்டிருக்கின்றன. அப்புறம் என்ன? ஆதார் அட்டை இல்லாதவங்க பாகிஸ்தானுக்கொ, சீனாவுக்கோ போங்க ன்னு சொல்ல வேண்டியது தான் பாக்கி.
இதையும் செய்தியாகத்தான் கடந்து போகப் போகிறோமா?
***************************************************
விவசாயி தாக்கப்பட்டதில் ஊடகங்களுக்கு பங்கில்லையா?
அண்மையில் டிரக்கடருக்காக வங்கிக் கடன் பெற்ற விவசாயி இரண்டு தவணையை திருப்பிக் கட்டாததால் போலீசாலும் அந்த தனியார் வங்கி ஊழிகர்களாலும் கடுமையாக தாக்கப்பட்டார். மட்டுமல்லாது டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதை மல்லையாவுடன் ஒப்பிட்டு அனைவரும் கண்டித்தனர். இதில் கவனிக்காமல் விடப்பட்ட ஒரு விசயம் “ஒரு தனியார் வங்கி” என்பது.
அச்சு ஊடகங்களானாலும், காட்சி ஊடகங்களானாலும் அதை ஏதோ ஒரு தனியார் வங்கி என்று தான் குறிப்பிட்டனவே தவிர கோடக் மஹிந்திரா எனும் தனியார் வங்கி என அதன் பெயரைக் குறிப்பிட்டு எழுதவோ, காட்சிப் படுத்தவோ இல்லை. ஏன்? காசு கொடுத்தால் எதையும் செய்ய ஆயத்தமாக இருப்பவர்களுக்கு சமூகத்தில் வேறு பெயர் உண்டு. நான்காவது தூண் நாற்பதாவது தூண் என்று பெயர் வைத்துக் கொண்டு, கொஞ்சம் கூட அறிவு நாணயம் இல்லாமல், அது அப்பட்டமாக அம்பலப்பட்டிருக்கும் இன்றைய நிலையிலும் அதைப் பற்றி கவலைப் படாமல் இளித்துக் கொண்டிருக்கும் இந்த நாளிதழ்களை இனியும் காசு கொடுத்து வாங்கி படிக்கத்தான் வேண்டுமா?