தமிழ்நாடு மின்சார வாரியம் நட்டமடைந்த வரலாற்றை பேசும் ஆவணப் படம் இது. இது ஏற்கனவே பலராலும், குறிப்பாக மின்சாரத்துறையில் இருக்கும் திரு. காந்தி போன்றவர்களால் கட்டுரைகளாக எழுதப்பட்டு, பரவலாக கவனத்துக்கு உள்ளான விசயம் தான் என்றாலும் தற்போது ஆவணப்படமாக வெளிவந்திருப்பது வெகு மக்கள் கவனத்தை பெறும், பெற வேண்டும்.
மின்சாரம் என்பது மக்களுக்கு இன்றியமையாத ஒரு உற்பத்திப் பொருள் என்பதிலிருந்து மாறி அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும் கொள்ளையடிப்பதற்கான கருவி என எப்படி மாறிப்போனது என்பதை ‘ஊழல் மின்சாரம்’ எனும் இந்தக் காணொளியைக் காணும் எவரும் எளிதில் உணரலாம். அதேநேரம் இது மின்சாரத்துடன் முடிந்து போய்விடுவதில்லை. எதனோடும் இதை பொருத்திப் பார்க்கலாம். எல்லாத் துறைகளிலும் கல்வி, விவசாயம், வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் உட்பட அனைத்திலும் இது தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கான திட்டங்கள் என அலங்கரிக்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் இப்படி கொள்ளையடிக்கப்படுவதற்கான வாய்ப்புகளுக்காகவே கொண்டுவரப்படுகின்றன. அவ்வளவு ஏன்? ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன் தொகுதி நிதியிலிருந்து ஒரு சாக்கடை அமைப்பதாக இருந்தால் கூட அதில் அவருக்கு கிடைக்கும் கமிசன் தொகை தான் அச் செயலைச் செய்வதற்கான தூண்டுகோலாக இருக்கிறது.
மணல் கொள்ளை விதிமுறைகளை மீறி நடப்பது ஏன்? தாது வளங்கள் வகைதொகையின்றி ஏற்றுமதி செய்யப்படுவது ஏன்? நீராதாரங்கள் மீது கவனமற்று அலட்சியம் காட்டப்படுவது ஏன்? விலைவாசி தடையின்றி உயர்வது ஏன்? இது போன்ற இன்னும் பலநூறு ஏன்? களுக்கு விடையாக இருப்பது ஒரே ஒரு பதில் தான். எல்லாவற்றையும் தனியார் கொள்ளையடிக்க திறந்து விடு, அதன் மூலம் கமிசனாக கிடைப்பதை சுருட்டிக் கொள்.
மக்கள்.. .. .. ஹ .. அவர்கள் செத்துத் தொலைந்தால் நமக்கென்ன?
இதற்கு லைசன்ஸ் வழங்கத்தான் நாம் வாக்களிக்கப் போகிறோமா?
நன்றி: தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு.