திமுக வை ஆதரிக்கிறதா பு.ஜ?

saffronisation

தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் சமப்படுத்துபவர்களின் நோக்கமென்ன? என்றொரு கட்டுரை புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2016 இதழில் வெளிவந்திருக்கிறது. பாராளுமன்ற தேர்தல் முறையை புறக்கணிக்கிறோம் என்பதால் அதில் இருக்கும் ஓட்டுக் கட்சிகளை ஒரே தட்டில் வைத்து சமமாகப் பார்க்க வேண்டும் என்று அவசியமில்லை என விளக்கப்பட்டிருக்கிறது. உடனே, தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு கட்டுரை தேவையா எனத் தொடங்கி இது திமுக வுக்கு ஆதரவான கட்டுரை என்பதினூடாக இதற்கு ஐ சப்போர்ட் திமுக என்று எழுதியிருக்கலாமே என்பது வரை பல்வேறான சொற்களில் ஆனால் ஒரே பொருளிலான விமர்சனங்கள் முகநூல், வாட்ஸ் ஆப் போன்ற சமூகத் தளங்களில் கிளம்பி வந்து கொண்டிருக்கின்றன.

 

கோவன் திமுக தலைவரை சந்தித்த போது கிளம்பி வந்த அதே மாதிரியான விமர்சனங்கள் என்பதால் ஒரு நினைவுபடுத்தலுடன் தொடங்கலாம். கோவன் கருணாநிதியுடனான சந்திப்பு குறித்து தோழர் மருதையன் அளித்த விளக்கங்களை பார்த்தவர்கள் அதன் மீது வைத்த எதிர்வினை என்ன? பருண்மையாகவும், நுணுக்கமாகவும் விரியும் அந்த விளக்கத்துக்கு குறிப்பான விமர்சனங்கள் எதையும் வைக்க முடியாமல் இருப்பவர்கள் தாம் மீண்டும் அதே வகையிலான விமர்சனத்தை இப்போது வைக்கிறார்கள்.

 

ஒரு புரட்சிகர இடதுசாரி அமைப்பு, பாராளுமன்ற முறையின் மீது நம்பிக்கையற்ற, புரட்சியின் மீது நம்பிக்கையுள்ள ஒரு அமைப்பு அது இயங்கும் காலகட்டத்தில், இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் ஒரே மாதிரி சமமாகத் தான் கருத வேண்டுமா? என்றொரு கேள்வியை எழுப்பினால் இவர்களின் பதில் என்னவாக இருக்கும். அப்படி கருத வேண்டியதில்லை என்பது தானே. என்றால் இவர்களின் இந்த விமர்சனத்தின் கோணம் அல்லது நோக்கம் என்ன?

 

ஒரு கருத்து கூறப்பட்டால் அது சரியா? தவறா? எனப் பார்க்காமல் இது சாதகமானதா? பாதகமானதா? எனப் பார்க்கும் கண்ணோட்டம் இது. 2ஜி ஊழல் பெரிதாக பேசப்பட்ட காலத்திலும் பு.ஜவின் விளக்கங்கள் திமுக ஆதரவு எனும் சாயலில் இருப்பதாக பலர் கூறினார்கள். ஆனால் அது தான் சரியானது என இன்று பலர் உணர்ந்திருக்கிறார்கள். 2ஜி ஊழல் பெரிதாக பேசப்பட்டதில் என்ன நுண்ணரசியல் தொழிற்பட்டதோ அதே நுண்ணரசியல் தான் இப்போது அதிமுகவும் திமுகவும் சமம் என்பதிலும் தொழிற்படுகிறது.

 

அந்தக் கட்டுரை திமுக, அதிமுக எனும் இரண்டு கட்சிகள் குறித்த மதிப்பீடு அல்ல. அது ஒரு எதிர்வினை. அதை திமுக குறித்த மதிப்பீடு என்று கருதிக் கொள்பவர்கள், சூழலை பொருத்திப் பார்க்காமல் இரண்டு கட்சிகளை மட்டும் தனித்த துண்டுகளாக எடுத்துக் கொண்டு பரிசீலிக்கிறார்கள் என்றே பொருள் கொள்ளப்படுவார்கள். அல்லது இது தேர்தல் காலம் என்பது மட்டும் தான் சூழல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள் கொள்ளப்படுவார்கள். இதை ஒப்புகிறார்களா விமர்சிப்பவர்கள்?

 

பார்ப்பனிய சக்திகள் தங்களை பல தளங்களிலும், பல வழிகளிலும் பலப்படுத்திக் கொண்டு வருகின்றன. அவர்களுக்கு தடையாக இருக்கும் சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இந்தத் தடையை உடைப்பதற்கு அவர்கள் கையாளும் உத்திகளில் ஒன்று தான் திமுகவை ஒழிப்பது. உடனே, திமுக தான் பார்ப்பனீயத்தை ஒழிக்கப் போகிறதா? திமுக பாஜக வுடன் கூட்டணி வைக்கவில்லையா? என்றெல்லாம் தட்டையாக கேள்வி எழுப்பாதீர்கள். அதிமுக எந்த நிர்பந்தங்களும் இல்லாத நிலையிலும் ஆடு வெட்ட தடைச் சட்டம், மதமாற்ற தடைச் சட்டம், அயோத்தியில் ராமர் கோவில் போன்ற பார்ப்பனிய நிகழ்ச்சி நிரலுக்கு களம் அமைத்துக் கொடுத்த கட்சி. திமுக வாக்கு வங்கி எனும் அடிப்படையிலேனும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை, சீர்திருத்தத் திருமணம் உள்ளிட்டு எந்தக் கல்லூரியில் ராமன் பொறியியல் படித்தான் என்று கேள்வி எழுப்பும் கட்சி. இந்த அடிப்படையிலிருந்து தான் பார்ப்பனியம் திமுகவை பார்க்கிறது.

 

கடந்த திமுக ஆட்சியின் காலத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். ஆட்சியை விமர்சிக்க கிடைத்த எந்த குறைந்தபட்ச வாய்ப்பையும், எந்த ஊடகமும் நழுவ விட்டதில்லை. ஆனால் இன்று எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதை மூடி மறைப்பதற்கு எந்த ஊடகமும் தயங்கியதே இல்லை. ஊடகங்கள் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் இதே நிலை தானே நிலவுகிறது. ஏன், இந்தத் தேர்தலில் கூட பதுக்கப்பட்ட பணத்தை சோதனையிட்ட தேர்தல் கமிசன் எப்படி செயல்பட்டது. அல்லது இது திமுகவுடன் தொடர்புடையதாக இருந்தால் எப்படி செயல்பட்டிருக்கும்? அரசு நிர்வாகம் தொடங்கி ஊடகங்கள், நீதிமன்றங்கள் வரை அனைத்திலும் இந்த நிலை தானே. திமுகவுக்கு யாருக்கும் பணம் கொடுத்து, பயம் கொடுத்து சரிக்கட்ட தெரியாதா? அல்லது லாபியிங் பற்றி ஒன்றுமே தெரியாத கட்சியா திமுக? இந்த தேர்தலில் கூட மநகூ அதிமுகவின் பி டீம் எனும் கூற்றை சாத்தியமே இல்ல என்று முற்று முழுதாக புறந்தள்ளி விட முடியுமா? யதார்த்தத்தில் திமுகவையும் அதிமுகவையும் தெளிவான எல்லைக் கோட்டுடன் எல்லா இடங்களிலும் பிரித்துப் பார்க்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியுமா?

 

ஆக, அனைத்திலும் செயல்படும் இந்த வித்தியாசப்படுத்திப் பார்க்கும் பார்வை, எந்த அடிப்படையிலிருந்து ஏற்பட்டிருக்கிறது? என்பது முக்கியமான கேள்வி. இதற்கு பார்ப்பனீயம் என்பதன்றி வேறு பதில் இல்லை. பார்ப்பனீயத்தை எதிர்க்கும் வரலாற்றுக் கடமையிலிருந்து ஒரு புரட்சிகர இடதுசாரி அமைப்பு விலகி நிற்க முடியுமா? எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த வித்தியாசப்படுத்திப் பார்க்கும் பார்வையை மக்களிடம் மறைத்து எல்லாம் ஒன்று தான் என்று போடப்படும் நாடகங்களை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தும் கடமை யாருக்கு இருக்கிறது? அல்லது எல்லா கோணங்களிலிருந்தும் நீங்கள் பார்ப்பனீயத்தை எதிர்க்கலாம், ஆனால் இந்தக் கோணத்திலிருந்து மட்டும் எதிர்க்கக் கூடாது என்று இலக்கணம் சொல்ல, வரம்பிட நினைக்கிறார்களா?

 

எல்லாம் சரி, தேர்தல் காலத்தில் இது திமுகவுக்கு சாதகமானது இல்லையா? அப்படி ஒரு தோற்றம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், வேறுபடுத்திப் பார்க்கும் அந்த பார்ப்பனீயப் பார்வை தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த தேர்தல் காலத்தில் இதைச் சொல்லாமல் வேறு எப்போது சொல்வது? தவிரவும் இது இப்போது தான் சொல்லப்படுகிறது என்பதும் முன்னர் வெளிவந்த பல பழைய கட்டுரைகளை மறந்து விட்ட ஒரு கணிப்பு. மட்டுமல்லாமல் திமுக வலைதளங்கள் இந்தக் கட்டுரையை பரப்புகின்றன என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. பகுத்தறிவின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு எதிராக எழுதப்படும் ஒரு கட்டுரையை பிற மதத்தினர் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தினால் அதை என்ன செய்துவிட முடியும்? மெய்நிகர் உலகில் இது தவிர்க்க முடியாதது.

 

இப்போது திமுகவுக்கு சாதகமாக இருக்கிறது என்பவர்கள், அவர்கள் எதிர்பார்ப்பது போலவே இப்போது அந்தக் கட்டுரை வெளியிடப்படாமல் இருந்து எல்லாரும் சமம் எனும் கருத்து நிலைப்பது அதிமுகவுக்கு சாதகமாக அமைகிறதே என்பது குறித்து என்ன கூறுவார்கள்? அந்தக் கட்டுரை திமுகவுக்கு ஆதரவானது என்பதை விட ஒரு பார்ப்பனிய உத்திக்கு எதிரானது என்பதே சரி.

 

இரண்டு கம்யூனிஸ்டுகள், அதிமுக, தேமுதிக, வைகோ என எல்லாரையும் கடுமையாக விமர்சித்து விட்டு திமுகவை மட்டும் மென்மையாக கையாளுவது ஏன்? இப்படி ஒரு கேள்வியை எழுப்புவது உள்நோக்கம் கொண்டது. இதுவரை திமுகவை விமர்சிக்கவே இல்லை என்கிறார்களா? திமுகவை, கருணாநிதியை கடுமையாக விமர்சிக்கும் பல கட்டுரைகளை எடுத்துக்காட்ட முடியும். மாறாக, இந்த கட்டுரையின் நோக்கம் வேறு. இது திமுகவையோ, அதிமுகவையோ விமர்சிக்கும் நோக்கத்தை விட இரண்டையும் சமப்படுத்துபவர்களின் நோக்கத்தைத்தான் விமர்சிக்கிறது, அம்பலப்படுத்துகிறது. கட்டுரையின் நோக்கம் ஒன்றாக இருக்க அதை வேறொன்றாக திரிப்பது ஏன்?

 

மநகூ எனும் இரண்டுக்கும் மாற்றான அணியை கிண்டலாக விமர்சித்து விட்டு அதிமுகவை விட திமுக சிறந்தது என்று கூறுவது எப்படி சரியாகும்? போலி கம்யூனிஸ்டுகள் கூட திமுகவை விட பெட்டர் இல்லையா? இப்படி கேட்பது ஒரு விதத்தில் அறியாமை தான். திமுக, அதிமுக வுக்கு மாற்றாக மநகூ இருக்க முடியாது என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதேபோல ஏன் அவர்கள் போலி கம்யூனிஸ்டுகள் என்பதற்கும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் விலக்கி வைத்துவிட்டு திமுகவை எப்படி பெட்டர் என்று சொல்லலாம் என்று கேட்பது என்ன விதமான புரிதல்? மீண்டும் மீண்டும் இதை வலியுறுத்த வேண்டியதிருக்கிறது. அந்தக் கட்டுரையின் நோக்கம் திமுகவை தூக்கிப் பிடிப்பது அல்ல. மாறாக இரண்டையும் சமப்படுத்துபவர்களின் நோக்கம் வேறாக இருக்கிறது என்பதையே அந்தக் கட்டுரை பேசுகிறது.

 

அது என்ன, திமுக பாஜக வுடன் கூட்டணி அமைத்தால் அது சந்தர்ப்பவாத கூட்டணி, அதிமுக அமைத்தால் அது இயல்பான கூட்டணியா? பார்ப்பனிய ஆதரவில் இரண்டுக்கும் வேறுபாடு ஒன்றுமில்லை என்றும் கேட்கிறார்கள். ஆடுமாடு வெட்டத் தடை எனும் அதிமுகவின் இயல்புக்கும், ராமன் எந்தக் கல்லூரியில் பொறியியல் படித்தான் எனும் திமுகவின் இயல்புக்கும் இடையே வித்தியாசம் ஒன்றும் இல்லை என எண்ணினால் அதை எப்படி ஏற்க முடியும்? ஒட்டுமொத்த அளவில் ஆராயும் அதே நேரம் நுணுக்கமாகவும் ஆராய்வது தான் மார்க்சிய ஆய்வு. ஆனால் விமர்சிப்பவர்களோ, அதிமுகவும் குஜராத்தில் மோடியை ஆதரித்தது, திமுகவும் மோடியை ஆதரித்தது எனவே இரண்டும் ஒன்று தான் என்று மேலெழுந்தவாரியாக முடிவு செய்து அதையே மார்க்சிய ஆய்வு என ஏற்கச் சொல்லுகிறார்கள்.

 

என்ன இருந்தாலும் இது ஓட்டுப் போடாதே புரட்சி செய் என்று சொல்லும் அமைப்பல்லவா? ஆம். அதில் ஏதேனும் மாற்றம் வந்து விட்டிருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? அல்லது இது இரட்டை மொழியில் பேசும் அமைப்பு என்று கூற விரும்புகிறீர்களா? கடந்த கால வரலாற்றிலிருந்து ஏதேனும் சான்று காட்ட முடியுமா அதற்கு? அதே ஏப்ரல் 2016 இதழ் தேர்தல் முறையை நரகலில் நல்லரிசி தேடாதீர் என்று தான் வெளிப்படுத்தியிருக்கிறது. இதழின் இன்னொரு கட்டுரையான தோற்றுப் போனது அரசுக் கட்டமைவு! தேர்தல்கள் தீர்வைத் தராது!!’ என்பதில் தொடக்கமே இப்படி இருக்கிறது, “தமிழக மக்கள் முன் அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, பாஜக, மநகூ என நீளும் பட்டியலில் எந்த ஒரு கட்சியும் மக்களின் முழு நம்பிக்கைக்குறியதாக, மாற்று எனக் கூறுவதற்குத் தகுதியுடையதாக இல்லைஎன்று தான் தொடங்குகிறது. எனவே, விமர்சிப்பவர்கள் தங்கள் கருத்துகளை மறு பரிசீலனை செய்யுங்கள். தேவைப்பட்டால் இது குறித்து இன்னும் விரிவாக பேசலாம்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

8 thoughts on “திமுக வை ஆதரிக்கிறதா பு.ஜ?

 1. நான் வினவில் கொடுத்த மறுமொழியில் தெளிவாகக் கூறியுள்ளேன். ஏதோ சும்மா கலைஞர் மோடியை ஆதரித்ததாகக் கூறவில்லை. குசராத்தில் ஓடிய ரத்த ஆறு உறையுமுன்னே திமுக நேரக குசராத் சென்று மேடையில் நின்று மோடியுடன் கைகோர்த்து அவரை அப்பாவியாக உலகுக்குக் காட்டியது. மசூதியை நொறுக்கிய பயங்கரவாதி அத்வானிக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தது. இதற்கு மேலும் திமுக இந்துத்துவத்துக்கு எதிரானது நீங்கள் கூறினால் ஒன்றம் செய்வதற்கில்லை. ஜெயலலிதா தன்னலத்துக்காகவேனும் வாஜ்பாயை ஆட்சியை ஒன்றரை ஆண்டில் கலைத்தார். ஆனால் கலைஞர் எப்போதும் போல் அவரது கூட்டணி தர்மம் காக்க முழு ஐந்தாண்டும் பாஜகவின் வர்ண தர்மம் காத்தார். கலைஞர் அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்துத்துவத்துக்கு எதிராகச் சில காரியங்கள் செய்தார் என்றால் அவற்றை ஜெயலலிதாவுக்கும் பொருத்திப் பார்க்கலாம். ஜெயேந்திரரை ஜெயலலிதா கைது செய்ததை விட வேறு இந்துத்துவ எதிர்ப்பு இருக்க முடியுமா? நீங்களும் வினவும் செய்யும் வேலை மிகவும் ஆபத்தானது. என்னை ஆதரிக்காதவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்றார் புஷ். இன்று வினவு சொல்கிறது – திமுகவையும் அதிமுகவையும் சமப்படுத்தும் அனைவரும் பார்ப்பனிய ஆதரவாளர்கள் என்று. இரண்டும் கருத்தியல் மிரட்டலே. நான் எந்த இடத்திலும் வாதிடத் தயார், மெய்ப்பிக்கத் தயார், எந்தக் கருத்தியல்படி பார்த்தாலும் திமுகவும் அதிமுகவும் ஒன்றே. கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒன்றே. கருணாநிதி வேட்டி கட்டிய ஜெயலலிதா. ஜெயலலிதா சேலை கட்டிய கருணாநிதி. நான் மீண்டும் சொல்கிறேன். திமுகவுக்கு ஜால்ரா தட்டுவது வினவின் கருத்துரிமை. அதை நான் எதிர்க்கப் போவதில்லை. ஆனால் இரண்டையும் சமப்படுத்துவோரை பார்ப்பன ஆதரவு சக்திகள் என்று முத்திரை குத்தும் வேலை எல்லாம் வினவுக்குத் தேவையில்லை. தேவைப்பட்டால் முழு விவாதம் நடத்த தயார்.

 2. இந்தக் கட்டுரையை விமர்சிப்பவர்கள் சற்றொப்ப சூடம் அணைத்து சத்தியம் செய்வது போன்ற மனோநிலையில் இருக்கிறார்கள். அந்தக் கட்டுரை தேர்தல் நேரத்தில் மக்களிடம் திமுகவுக்கு ஆதரவு ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் எழுதப்பட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். அவர்கள் கருதுவதாலேயே அது மெய் என்று வாதிடுகிறார்கள். ஆனால் அவர்கள் ஏன் அவ்வாறு கருதுகிறார்கள்? அல்லது அவர்கள் அவ்வாறு கருதுவதற்கான தூண்டுதல் எங்கிருக்கிறது? என்பதை அவர்கள் பரிசீலிக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு நினைக்கிறார்கள் என்பது மட்டுமே போதுமானதில்லை அல்லவா.

  இன்னொரு கோணத்திலிருந்து இதைப் பார்க்கலாம். கருணாநிதியின் தலையை வெட்டுவேன் என்று வடமாநிலத்தில் ஒருவன் கூறிய போது தமிழகத்தில் அதற்கு பதிலடி கொடுத்தது (போதுமான அளவில் இல்லை என்றாலும் கூட) திமுக. இதை ஒட்டி பு.ஜவில் வெளி வந்த கட்டுரை ஒன்று திமுக வின் பக்கம் நின்று பேசியது. இன்று விமர்சிப்பவர்களுக்கு அன்று திமுக ஒரு ஓட்டுக்கட்சி அதனை புஜ ஆதரிக்கலாமா? என்ற எண்ணம் தோன்றவில்லை.

  2ஜி ஊழல் நாடு முழுவதும் பரவலாக விவாதிக்கப்பட்ட காலத்தில் புஜவில் வெளிவந்த கட்டுரைகள், அப்போது என்ன விவாதிக்கப்பட்டு வந்ததோ அதை மறுத்து அந்த ஊழலின் உண்மை நிலையை பேசியது. அது திமுகவுக்கு ஆதரவாக இருந்தது, திமுகவினர் விளக்கம் கூறுவதற்கு புஜவின் தரவுகளைப் பயன்படுத்திக் கொண்டனர். அதுவும் ஒரு தேர்தல் காலகட்டம் தான். ஆனாலும் அது திமுகவுக்கான ஆதரவாக புரிந்து கொள்ளப்படவில்லை.

  தோழர் கோவன் கருணாநிதியை சந்தித்த நிகழ்வில் கூட கருணாநிதி கோவன் சந்திப்பு மட்டும் தான் விவாதிக்கப்பட்டதேயன்றி பிற கட்சித் தலைவர்களை சந்தித்தது விவாதிக்கப்படவில்லை. எல்லா கட்சித் தலைவர்களையும் சந்தித்திருக்கும் போது கருணாநிதியை சந்தித்தது மட்டும் திமுகவுக்கு ஆதரவாக விவாதிக்கப்பட்டது எப்படி என்பதற்கு அவ்வாறு விமர்சித்த யாரும் விளக்கமளிக்கவில்லை.

  திமுகவையும், அதன் தலைவரையும், அதன் கொள்கைகளையும், அதன் நடவடிக்கைகளையும் விமர்சித்து பல்வேறு கட்டுரைகள் புஜ வில் வந்திருக்கின்றன. இது எல்லோருக்கும் தெரியும். இப்போதும் தேர்தல் புறக்கணிப்பு பரப்புரைகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தப் பரப்புரை விமர்சனங்களில் திமுகவுக்கு யாரும் விலக்களிக்கப் போவதில்லை. இவை எல்லாவற்றையும் இணைத்துப் பாருங்கள். இப்போது மட்டும் குறிப்பிட்ட அந்தக் கட்டுரைக்காக – அந்தக் கட்டுரையின் நோக்கம் வேறு என விளக்கப்பட்ட பின்னரும் – அது திமுகவுக்கு ஆதரவானது தான் என விமர்சிக்கப்படுவதற்கான காரணம் என்ன? இதை விளக்கும் கடமை விமர்சிப்பவர்களுக்கு இல்லையா? அவர்கள் நினைக்கிறார்கள் என்பதாலேயே அது உண்மையானதாக ஆகிவிடும் எனக் கருதுகிறார்களா?

  முந்திய கட்டுரையில் சில கேள்விகள் எழுப்பபட்டிருந்தன. அவைகள் பரிசீலிக்கப்பட்டனவா என்பதற்கு எந்தத் தடயமும் இல்லை. 1. ஒரு புரட்சிகர அமைப்பு தன் சம காலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பல ஓட்டுக் கட்சிகளை ஒரே விதமான சமமானதாகத் தான் கருத வேண்டுமா? 2. சூழல் என்பதில் இது தேர்தல் காலம் என்பதை மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டுமா? பார்ப்பனிய சக்திகளின் வினையாக்கல்கள் அந்தத் தேர்தல் சூழல் என்பதில் பங்கு பெறாதா? 3. அதிமுகவையும் திமுகவையும் பிரித்துப் பார்ப்பது தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு சாதகமாகி விடும் என்றால் அப்படி பிரித்துப் பார்க்காமல் எல்லாம் ஒன்று தான் என்றால் அது அதிமுகவுக்கு சாதகமானதாக ஆகிவிடாதா? இவை பரிசீலிக்கப்பட்டால் இந்த விவாதம் இன்னும் செழுமையாக இருக்கும்.

  அந்தக் கட்டுரையின் சாராம்சம் என்ன? திமுகவை சிறந்த கட்சி எனச் சொல்லவில்லை. ஆனால் ஒன்று எனச் சொல்பவர்களுக்கு உள்நோக்கம் இருக்கிறது. கடவுள் இருக்கிறார் என்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறோம். இவ்வாறு ஒப்பீடு செய்து கலாய்ப்பவர்கள் தொடர்ந்து கொள்ளலாம். ஆனால், உள்ளீடு என்று ஒன்று வேண்டுமல்லவா? மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. அந்தக் கட்டுரை திமுக எனும் கட்சி குறித்த மதிப்பீடு அல்ல. ஒருபுறம் தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் திராவிடக் கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு உணர்ச்சி மேடையில் நின்று திமுகவும் அதிமுகவும் சமம் என்கின்றன. மறுபக்கம் புதிதாய் உருவான கூட்டணி ஒன்று இரு கட்சிகளின் ஊழல், நிர்வாக குளறுபடிகளை சுட்டிக் காட்டி பொதுக்கருத்து மேடையில் நின்று திமுகவும், அதிமுகவும் சமம் என்கின்றன. பாஜகவும் தேர்தலுக்கு பின்பு அதிமுகவுடன் நெருங்கிக் கொள்ளலாம் எனும் கணக்கில் நப்பாசை மேடையில் நின்று திமுகவும், அதிமுகவும் சமம் என்கிறது. நிதானித்துப் பாருங்கள், தொலைக்காட்சி விவாதத்தில் பொருளாதார வல்லுனர், சமூக ஆர்வலர், நெறியாளர் என வெவ்வேறு பெயர்களில் ஒரே கருத்தையும் அதற்கு எதிராக திமுக ஆதரவாளர் என்று ஒருவர் எதிர்க் கருத்தோடும் கலந்துரையாடல் என்று கூறிக் கொண்டு அமர்ந்திருப்பதைப் போன்ற தோற்றம் இங்கு இல்லையா? பார்ப்பன திட்டமிடலுடன் ஒரு கருத்தை எல்லோரும் வெவ்வேறு திசையில் மக்களிடம் பரப்பிக் கொண்டிருக்கும் போது அதற்கு எதிராக அதிமுகவும், திமுகவும் ஒன்றல்ல என்றொரு கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது. தத்துவார்த்த ரீதியாகவோ, நடைமுறை சார்ந்தோ அதில் என்ன தவறு இருக்கிறது என்பது விவாதிக்கப்படாமல் அக விருப்பங்களிலிருந்து விவாதிக்கப்படுகிறது. இது சரியா? ஒப்பிட்டுப் பாருங்கள். புரட்சிகர அமைப்புகளின் ஆதரவாளர்கள் என்று சிலர் விமர்சன மேடையில் நின்று திமுகவும், அதிமுகவும் சமம் என்கின்றனர். நுணுக்கமாக புரிந்து கொள்வது மார்க்சியத்துக்கு விரோதமானதா என்ன?

  இப்போதும் கூட திமுக தனித்து நிற்கிறது அதனை எல்லோரும் எதிர்க்கிறார்கள் எனவே அதற்கு ஆதரவாக புஜ கட்டுரை எழுதியிருக்கிறது என்று புரிந்து கொண்டு கலாய்த்துக் கொள்ளலாம். விமர்சிப்பவர்களின் கலாய்க்கும் உரிமையில் யாரும் குறுக்கிடப் போவதில்லை.

  புஜவின் குறிப்பிட்ட அந்த கட்டுரை மாவோயிஸ்டுகள் மம்தாவை தேர்தலில் ஆதரித்ததற்கு எதிரான விமர்சனத்துடன் எந்த விதத்தில் முரண்படுகிறது? முதலில், மாவோயிஸ்டுகள் மம்தாவை ஆதரித்த போது புஜவிலோ, வினவிலோ தனிக் கட்டுரை வெளிவந்ததாக நினைவில் இல்லை. அதேநேரம் ஒரு ஆங்கில நாளிதழின் கட்டுரையை மொழிபெயர்த்து வெளியிட்டதாய் நினைவு. இப்போதைய அவசரத்துக்கு அந்தக் கட்டுரையும் கிடைக்கவில்லை. எனவே அந்தக் கட்டுரையின் இணைப்பையோ, அல்லது சாராம்சத்தையோ கூறினால் பரிசீலிக்கலாம். பொதுவாகப் பார்த்தால், தேர்தல் பாதையை புறக்கணிக்கும் ஒரு கட்சி, தேர்தல் பாதையில் போட்டியிடும் ஒரு கட்சியை வெளிப்படையாய் ஆதரிக்கிறது. அதுவும், தங்களின் நெருக்கடி நிலையை, அரசு ஒடுக்குமுறையை, இராணுவத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் ஓட்டுக் கட்சி அரசாங்கத்தின் ஆதரவைப் பெற வேண்டி தேர்தலில் அக்கட்சியை ஆதரிக்கிறது (தோழர் ஃபெரோஸின் ஆடியோவிலிருந்து) இந்த நிலை இங்குள்ள நிலையோடு எப்படி பொருந்துகிறது? தோழர் கோவன் கைது செய்யப்பட்டதை ஒரு நெருக்கடியாகவும், அதை எதிர்கொள்ள முடியாமல் கருணாநிதியை சந்தித்தது போலவும் உருவகப்படுத்துவதற்கு ஏதாவது முகாந்திரம் இருக்கிறதா? மீண்டும் மீண்டும் இங்கு கோரப்படுவது ஒன்று தான். விமர்சிப்பவர்கள் என்ன எண்ணுகிறார்களோ அது தான் உண்மை என்பதற்கு என்ன சான்று இருக்கிறது? எனவே விமர்சிப்பவர்கள் தங்கள் யூகங்களிலிருந்து வெளியேறி வரவேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள்.

  பரிசீலனையுடன் இருக்கும் பட்சத்தில் தேவைப்பட்டால் மீண்டும் விரிவாக வருகிறேன்.

 3. நண்பர் நலங்கிள்ளி,

  இரண்டு பகுதிகளாக இங்கு நான் கூறியிருப்பதை உள்வாங்கிக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். திமுக ஒரு ஊழல்வாதக் கட்சி என்பதிலோ, தன் நலனுக்காக பார்ப்பனியம் போன்ற எந்த சக்திகளுடனும் சமரசமாகின்ற கட்சி என்பதிலோ மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் புஜ கட்டுரையை எடுத்துக் கொண்டாலும், அதற்கான விளக்கங்களை எடுத்துக் கொண்டாலும் அதில் முன்வைக்கப் பட்டிருப்பது இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்பது தான். ஆனால் பெரும்பாலானோர் இதை திமுகவுக்கான ஆதரவு என்றே பார்க்கிறார்கள். இது ஏன்?

  சிற்சில செயல்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த அளவில் பாருங்கள் திமுகவும், அதிமுகவும் ஒரே தட்டில் வைத்து சமமாகப் பார்க்க வேண்டிய கட்சிகளா? அடுத்து இன்றைய சூழலில் அனைத்து வழிகளிலும் ஒரு உள்நோக்கத்துடன் திமுகவையும், அதிமுகவையும் ஒன்றுபடுத்தி மிகப்பெரிய பரப்புரை மக்களிடையே செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன? அதிமுக ஆதரவு சக்திகளால் மறைமுகமாக இரண்டு கட்சிகளும் ஒன்று என்றொரு பிம்பம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு எல்லா வகையிலும் அரசு எந்திரம் தொடங்கி அனைத்தும் துணை போய்க் கொண்டிருக்கிறது எனும் யதார்த்த நிலையை புறந்தள்ளிவிட வேண்டுமா? இரண்டையும் பிரித்துப் பார்ப்பது திமுகவுக்கு ஆதரவான நிலை என்றால் இரண்டையும் ஒன்றுபடுத்திப் பார்ப்பது அதிமுகவுக்கு ஆதரவான நிலையாக இருக்கிறதே அதற்கு உங்கள் பதில் என்ன?

  எல்லாவற்றையும் இணைத்துப் பார்த்து நீங்கள் முடிவெடுத்தால் அது நிச்சயம் உங்கள் பின்னூட்டத்துக்கு எதிரான கருத்தையே கொண்டிருக்கும் என்பது நிச்சயம். தேவைப்பட்டால் தொடர்கிறேன்.

 4. என் கருத்துக்குப் பொறுமையாகப் பதிலளித்த செங்கொடி அவர்களுக்கு நன்றி. மீண்டும் நான் சொல்கிறேன். ஒப்பளவில் அதிமுகவை விட திமுக நல்ல கட்சி என்பதும், இரண்டையும் சமப்படுத்தக் கூடாது என்பது வினவின், உங்களின் நிலைப்பாடு. அதனை நான் மதிக்கிறேன், ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இப்படி ஏற்றுக் கொள்ளாதவர்கள் அனைவரையும் பார்ப்பன அடிவருடிகள் என ஒட்டுமொத்தமாக முத்திரை குத்துவதுதான் கருத்தியல் மிரட்டல் என்கிறேன் நான். மேலும் திமுக, அதிமுக இரண்டையும் சமப்படுத்தும் தமிழ்த் தேசியவாதிகள் அனைவரையும் ஒரே தட்டில் வைத்து போகிற போக்கில் விமர்சித்து விட்டுப் போவது என்ன அறிவு நாணயம்? எல்லா கம்யூனிஸ்டுகளுமே சந்தர்ப்பவாதிகள் என இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியையும் மகஇகவையும் சமப்படுத்தினால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? மேலும் வினவும் நீங்களும் கூறுவது போல், சோ போன்ற பார்ப்பன சக்திகள் திமுக, அதிமுக இரண்டும் சமம் எனக் கூறுவதில்லை. எதையாவது காரணம் காட்டி திமுகவுக்கு அதிமுக மேல் எனக் கூறுவதே அவர்கள் வழக்கம். அப்படிப்பட்ட சோவே கூட 1996இல் அறிவாலயம் சென்று கலைஞர் கைப்பிடித்து ஜெயலலிதாவைத் தோற்கடிக்கக் குரல் கொடுத்தது தனிக்கதை. வெவ்வேறு அரசியல் சக்திகளுக்கும் திமுகவையும் அதிமுகவையும் சமப்படுத்துவதில் வெற்வேறு உள்நோக்கங்கள் இருக்கலாம். அதனை நான் மறுக்கவில்லை. ஆனால் தமிழினத்துக்கு எதிரான, தமிழ்த் தேசியத்துக்கு எவ்வித இறையாண்மையையும் பெற்றுத் தரும் திராணியற்ற இந்தத் தேர்தல் அரசியலைப் புறக்கணித்து தமிழர்களிடம் பாடாற்றி வரும் தமிழ்த் தேசியவாதிகளின் பார்வையும் சோ போன்ற பார்வையும் ஒன்றா? சீமான் போன்று தமிழ்த் தேசியத்தை சந்தர்ப்பவாதமாகப் பேசுகிற போலி தமிழ்த் தேசியவாதிகளையும் தமிழ்த் தேசிய இறையாண்மைக்குக் குரல் கொடுக்கும் தமிழ்த் தேசியவாதிகளையும் எப்படி ஒரே தட்டில் வைப்பீர்கள். நான் உள்ளபடியே கூறுகிறேன், என் நீண்ட கால அரசியல் அனுபவத்தில், தமிழ்த் தேசியப் பார்வையில் எனக்குக் கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த வேறுபாடும் தெரியவில்லை. இந்துத்துவ எதிர்ப்பில் ஜெயலிதாவைக் கலைஞர் விஞ்சி நிற்பதாக வினவு எழுதுகிறது. இல்லை, இரத்தக்கறை படிந்த மோடியின் கைகளைத் தூக்கிப் பிடித்த, இந்த்துத்வ பயங்கரவாதி அத்வானிக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்த திமுக எந்த விதத்தில் அதிமுகவுக்கு மேம்பட்டது என நான் சென்ற பின்னூட்டத்தில் கேட்டிருந்தேன். வினவு பின்னூட்டதிலும் கேட்டிருந்தேன். இப்படி நான் சமப்படுத்தியது தவறு என உங்களால் மெய்ப்பிக்க முடியவில்லை. இப்படி ஒவ்வொரு அரசியல் தளத்திலும் திமுகவும் அதிமுகவும் ஒன்றே என என்னால் மெய்ப்பிக்க முடியும். வினவின் வாதத்திலிருந்து ஓர் எடுத்துக்காட்டுக்கு இந்துத்துவத்தை எடுத்துக் கொண்டேன், அவ்வளவுதான். வேண்டுமானால், நீங்கள் விரும்பினால் ஒவ்வொரு தளமாக எடுத்துக் கொண்டு கலைஞரும் ஜெயலலிதாவும் ஒன்றுதான் என என்னால் மெய்ப்பிக்க முடியும். வாய்ப்பிருந்தால் விவாதிப்போம். என் தொடர்பு எண் – 98******21. என்னை ஒரு பொருட்டாக மதித்து எனக்கு பதில் அளித்ததற்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 5. நண்பர் நலங்கிள்ளி,

  பதில் கூறியதற்கு நன்றி எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவ்வாறு குறிப்பிடுவது தேவையில்லை எனக் கருதுகிறேன். நான் கண்டிப்பாக பதில் கூறுவேன், கொஞ்சம் தாமதமாகலாம் என்பதைத் தவிர தேவைப்படும் இடத்தில் பதில் கூறாமல் இருக்க மாட்டேன்.

  சோ போன்ற பார்ப்பனிய சக்திகளின் பார்வையும், தமிழ் தேசியவாதிகளின் பார்வையும் ஒன்றா? என்பது உங்களின் முதன்மையான கேள்வி. அதைத்தான் நானும் முன்வைக்க விரும்புகிறேன். எந்தக் கட்சியாலும் அதனை சில செயல்பாடுகளை எடுத்துக் கொண்டு ஒன்றுபடுத்தி பார்க்க வேண்டிய தேவையில்லை. சூழலோடு பொருத்தாமல் சில செயல்பாடுகளை மட்டும் துண்டித்து எடுத்துப் பார்த்து வந்தடையும் முடிவு தவறாகவே அமையும்.

  திமுக, அதிமுக இரண்டையும் வேறுபடுத்திப் பார்ப்பதற்கு அதன் கடந்த கால வரலாறுகளில் எவ்வளவு சான்றுகள் உள்ளனவோ, அதற்கு சற்றும் குறையாமல் ஒன்றுபடுத்திப் பார்ப்பதற்கான சான்றுகளும் இருக்கவே செய்கின்றன. ஆனால் சூழல் எப்படி இருக்கிறது? இதை அந்தக் கட்டுரை மிகத் துல்லியமாகவே புலப்படுத்துகிறது.
  \\\ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தத் தனிச்சலுகை வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை. காரணம், தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு அரசியல் மரபை வேரடி மண்ணோடு ஒழித்துக்கட்ட வந்த அவதாரமாக ஜெயலலிதாவைக் கருதுகிறது பார்ப்பன-பனியா ஆளும் கும்பல். பார்ப்பன எதிர்ப்பு, சுயமரியாதை, பகுத்தறிவு, இந்தி-சமஸ்கிருத திணிப்புக்கு எதிர்ப்பு ஆகிய திராவிடக் கருத்தாக்கங்கள் தமிழகத்தில் நீறுபூத்த நெருப்பாக இருந்து வருவதற்கு கருணாநிதியையும், தி.மு.க..வையும் காரணமாகக் கருதி வருகிறது, பார்ப்பனக் கும்பல்///
  ஆக, இது ஒரு தெளிவான குறியீடாக பார்ப்பன பாசிசங்களால் மாற்றப்பட்டிருக்கிறது.

  இந்தச் சூழலுக்குள் இரண்டும் ஒன்று எனச் செய்யப்படும் பரப்புரைகளைப் பாருங்கள், \\\ஒருபுறம் தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் திராவிடக் கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு உணர்ச்சி மேடையில் நின்று திமுகவும் அதிமுகவும் சமம் என்கின்றன. மறுபக்கம் புதிதாய் உருவான கூட்டணி ஒன்று இரு கட்சிகளின் ஊழல், நிர்வாக குளறுபடிகளை சுட்டிக் காட்டி பொதுக்கருத்து மேடையில் நின்று திமுகவும், அதிமுகவும் சமம் என்கின்றன. பாஜகவும் தேர்தலுக்கு பின்பு அதிமுகவுடன் நெருங்கிக் கொள்ளலாம் எனும் கணக்கில் நப்பாசை மேடையில் நின்று திமுகவும், அதிமுகவும் சமம் என்கிறது. .. .. புரட்சிகர அமைப்புகளின் ஆதரவாளர்கள் என்று சிலர் விமர்சன மேடையில் நின்று திமுகவும், அதிமுகவும் சமம் என்கின்றனர்/// ஆக எல்லா திசைகளிலும் அந்த பார்ப்பன கும்பல்களின் குறியீட்டு அடிப்படையில் ஜெயாவை அதிமுகவை விமர்சிக்க வேண்டிய இடங்களிலெல்லாம் இரண்டும் ஒன்று எனும் தேற்றம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுதான் இங்கிருக்கும் யதார்த்தம்.

  ஒரு சில செயல்பாடுகளின் அடிப்படையில் இரண்டு வேறு தன்மைகளிலான கட்சிகளை ஒன்றுபடுத்த வேண்டியதில்லை எனும் உங்கள் கருத்துக்கு இசைவாகவே; இந்த பார்ப்பன குறியீட்டு சூழலை உள்வாங்கி, இரண்டும் ஒன்று எனக் கருதுபவர்களின் கருத்து தவிர்க்கவியலாமல் பார்ப்பன பாசிசங்களுக்கு துணைபோவதாய் அமைகிறது என அக்கட்டுரை விளக்குகிறது.

  தேவைப்பட்டால் தொடர்வோம்.

 6. பொத்தாம் பொதுவாகப் பார்ப்பனிய ஆற்றல்கள் எல்லாமே அதிமுகவை உயர்த்திப் பிடிப்பதாகவும் கூறி விட முடியாது. என். ராம் திமுகவை ஆதரிக்கிறார், இன்று பார்ப்பன தினமலர் கூட திமுகவை ஆதரிக்கிறது. சோவே கூட 1996 சட்டமன்றத் தேர்தலில் ஊழல் ஜெயலலிதா ஆட்சியைத் தோற்கடிக்க திமுகவால்தான் முடியும் எனக் கலைஞரை ஆதரித்தார். சாவி நீண்ட காலமாகத் திமுகவை ஆதரித்து வந்தவரே. இப்படி பார்ப்பனியம் என்னும் ஒற்றை எதிர்மறைக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் எடுக்கும் நிலைப்பாடுகளின் அடிப்படையில் நாம் ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுக்க முயல்வது சரியான சமூக அறிவியல் பார்வையாகாது. மற்றபடி இப்படி எழுத்தில் இந்தப் பெரும் வினாவை விவாதிப்பது கடினம் என நினைக்கிறேன். இப்போதைக்கு விடை பெறுகிறேன்.

 7. நண்பர் நலங்கிள்ளி,

  நேரில் சந்திக்க வாய்ப்பில்லாத இருவர் விவாதிப்பதற்கு இணையத்தில் எழுதுவதை விட வேறு தெரிவுகள் சிறப்பானதில்லை என நான் கருதுகிறேன். மற்றப்படி உங்கள் முடிவில் நான் குறுக்கிட முடியாது. இறுதியாக ஒன்று மட்டும். பார்ப்பனியம் என்பது ஓர் எதிர்மறைக் கருத்தல்ல, இந்தியச் சூழலில் மீப்பெரும் அரசியல், நன்றி.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s