இன்று மேதினம். ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் அனைவருமே ஒரு நாள் வேலை நேரம் என்பது எட்டு மணி நேரம் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு வரையறை செய்வதற்கு தொழிலாளர்கள் செய்த போராட்டங்கள், தியாகங்கள் பற்றி தெரிந்திருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். மட்டுமல்லாமல் அவ்வாறு போராடி, தியாகங்கள் செய்து பெற்ற பல உரிமைகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. மேதினத்தின் வரலாறு தெரியாததால் தான் உரிமைகள் பறிக்கப்படும் போது நாமென்ன செய்ய முடியும் எனும் இயலாமையும், விரக்தியும் மேலோங்குகின்றன. இதற்கு எதிராக அந்த வீர வரலாற்றை நமக்கு அறிமுகப்படுத்தும் நூலாக இந் நூல் திகழ்கிறது.
இஸ்லாமியர்கள் என்றால் அவர்களுக்கும் கம்யூனிசத்துக்கும் வெகுதூரம் என்பதாக இங்கே ஒரு பிம்பம் வலுவந்தமாக கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் இஸ்லாமியர்கள் அன்றிலிருந்து இன்றுவரை கம்யூனிசத்துடன் நெருங்கிய பிணைப்பை கைக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இலங்கை மலையக வெகுஜன இயக்கத்தைச் சேர்ந்த பி.ஏ. காதர் அவர்களின் இந்நூல் பொருத்தமான சான்று.
நூலிலிருந்து .. .. ..
மேதினம் இன்று பலராலும் பலவிதமாக வெவ்வேறு நோக்குடன் கொண்டாடப்படுகிறது. ஏன் அரசாங்கம் கூட காலி முகத் திடலிலே வெளிநாடுகளிலிருந்து பிரசித்தி பெற்ற நடிக நடிகைகளையும் பாடகர்களையும் இறக்குமதி செய்து களியாட்ட விளாக்களுடன் மேதினத்தை ஆரவாரத்தோடு கொண்டாடுகிறது. மொத்தத்தில் இன்று மேதினத்தின் உட்பொருளும், வர்க்கத்தன்மையும் ஒழிக்கப்பட்டு ஒரு தீபாவளி பண்டிகையைப் போன்றோ அல்லது உல்லாசப் பொழுதுபோக்கும் ஒரு ஓய்வு தினமாகவோ மாற்றப்பட்டு விட்டது.
ஆனால் மேதினம் என்பது ஒரு பண்டிகை அல்ல. களியாட்ட விழா அல்ல. தொழிலாளர்கல் ஓய்வு கொள்ளும் விடுமுறை தினமும் அல்ல. மாறாக, உலகெங்கிலுமுள்ள வீரத் தொழிலாளர்கள் சகல வேறுபாடுகளையும் ஒதுக்கிவிட்டு, வர்க்க அடிப்படையில் ஒன்றுபட்டு, ஒரே குரலில் தம் லட்சியத்தை பிரகடனப்படுத்தும் நாள். சுரண்டும் வர்க்கத்துக்கு எதிராக சுரண்டப்படும் வர்க்கம் கடந்த காலங்களின் தான் ஆற்றிய வீரப் போராட்டங்களை நினைவுபடுத்தி எதிர்கால போராட்டங்களுக்கு விண்ணை அதிரவைக்கும் வீர சபதம் செய்யும் நாள். ஆளும் வர்க்கத்தின் மீது தனக்குள்ள கடனை தீர்ப்பதற்கு உலகத் தொழிலாள வர்க்கம் தனது ஒத்திகையை ஒத்திகை பார்க்கும் ஒப்பற்ற திருநாள்
இந்த மகத்தான நாளில் உலகெங்கிலுமுள்ள தொழிலாளி வர்க்கம் குறைவான வேலை நேரத்துக்காக தான் பல பத்தாண்டுகள் ஏன் நூற்றாண்டுகளாய் நடத்திய போராட்டங்களையும், ஆற்றிய தியாகங்களையும் சிந்திய ரத்தத்தையும் நினைவுகூர்கிறது. கடந்தகால படிப்பினைகளிலிருந்து எதிர்கால திட்டங்களை சரிபார்த்துக் கொள்கிறது. தனதும் உலக மக்களினதும் விடுதலைக்குப் பாதை சமைக்கிறது.
ஆம். மேதினம் ஒரு தற்செயலான சம்பவத்தால் பிறந்ததல்ல. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரத்தை வரையறுப்பதற்காக நடத்திய இடைவிடாத போராட்டத்தின் உச்சகட்டமே மேதினம். அந்த வரலாற்றை அப்படியே முழுமையாக வடித்தால் அதுவே ஒரு வீர காவியம் ஆகிவிடும்.