இந்தியா மூன்றுபுறம் கடலால் சூழப்பட்டிருக்கிறது, நான்கு புறமும் கடனால் சூழப்பட்டிருக்கிறது என்று வேடிக்கையாய் சொலவடை சொல்வார்கள். இப்போது எட்டுத் திக்கிலிருந்தும் பார்ப்பனியம் சூழ்ந்து கொண்டிருக்கிறது எனச் சொல்வது தகும். இந்தியாவில் அரசு இயந்திரம் பார்ப்பனமயமாகி இருக்கிறது என்பதை உணர்வதற்கு சான்றுகள் எதுவும் தேவையில்லை. ஆனால் குறிப்பாக மோடி பிரதமரான பிறகு இது மிகுந்த விரைவுடன் செயலாற்றுகிறது. சமஸ்கிருதமயமாக்கம், உயர்கல்விக் கூடங்களில் ஆக்கிரமிப்பு, மாட்டுக்கறி, பகுத்தறிவுவாத அறிஞர்களின் படுகொலை என இதற்கு பற்பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். இவைகளுக்கு பலரும், பல அமைப்புகளும், பல்துறை அறிஞர்களும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். என்றாலும், அரசின் ஆதரவினால் இவை குறைவுறாமல் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கின்றன. இவைகளைத் தடுத்தாக வேண்டும் எனும் தார்மீக எண்ணம் இருந்தாலும், இவைகளின் விளைவு மக்களிடையே என்னவாக இருக்கின்றன என்பதைக் கவனிப்பது இன்றியமையாததாகிறது.
அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை எடுத்துக் கொண்டால், தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் பிஜேபி வெல்லவில்லை என மகிழ்ந்து கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி க்கு இணையான நடவடிக்கைகளைக் கொண்டிருக்கும் அ.தி.மு.க வென்றிருக்கிறது. இதற்கு தேர்தல் கமிசன் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கின்றன என்றாலும் 85 லிருந்து மாறிமாறி தேர்ந்தெடுக்கப்படும் மரபை மீறி வென்றிருக்கிறது என்பதும், இந்திய அரசின் எல்லாத் துறைகளும் அரசுக்கு வெளியே ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்தும் அ.தி.மு.க பின்னால் அணிவகுத்து நிற்கின்றன என்பதும் கவனிக்கத் தக்கது. அடுத்து, அ.தி.மு.க, தி.மு.க வுக்கு வெளியே அதிக வாக்குகள் வாங்கியிருக்கும் கட்சி என்று பார்த்தால் பா.ம.க வும், பா.ஜ.க வும் வருகின்றன. அதிலும் பா.ஜ.க வாங்கியிருக்கும் 2.8 விழுக்காடு வாக்குகள் சமூகத்தின் மீது அக்கரை கொண்டுள்ள அனைவரும் கவலை கொள்ள வைப்பதாகும். பா.ம.க ஒரு ஆதிக்கசாதிக் கட்சி என்பதுடன், ஆதிக்கசாதி அமைப்புகள் வெளிக்கிளம்பி வந்து கொண்டிருக்கும் சூழலை, தலித்தியம் பேசும் கட்சிகள் தேர்தலில் துடைத்து ஒதுக்கப்பட்டுள்ளதோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.
ஆக, வெகு மக்கள் எதார்த்தம் என்ன? ஒருபக்கம் அரசு இயந்திரத்தில் ஓரளவுக்கு மறைமுகமாக இருந்த பார்ப்பனியத் தன்மை தனக்கு எந்த முகமூடியும் தேவையில்லை என்று வெளிப்படையாக வந்து கொண்டிருக்கிறது. மறுபக்கம் மக்கள் ஓட்டுக்கட்சி அரசியல், தேர்தல், போலி ஜனநாயக ஆட்சி ஆகியவைகளுக்கு மாற்று தெரியாமல் ஆர்.எஸ்.எஸ் ஆல் ஊதிவிடப்படும் சாதி அரசியலுக்குள் தங்களுக்குத் தெரியாமலேயே விழுந்து கொண்டிருக்கிறார்கள்.
பலமான எதிர்க்கட்சி எனும் பம்மாத்துடன் இருக்கும் தி.மு.க பரவிக் கொண்டிருக்கும் பார்ப்பனியத்துக்கு எதிராக எதுவும் செய்யப் போவதில்லை. குறைத்தபட்சம் தன்னுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்ள ‘சமஸ்கிருதத்தை விரட்டுவோம்’ என்பன போன்ற சில்லரை முழக்கங்களுடன் சில அடையாள எதிர்ப்பைக் காட்டுவதற்கு வெளியே அது வேறெதுவும் செய்யப் போவதில்லை. தேர்தலுக்கு அப்பாற்பட்டு இயங்கும் பெரியாரிய இயக்கங்களின் செயல்பாடுகள் தேவைகளை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருக்கின்றன.
தேர்தலுக்கு உள்ளும், வெளியுமாய் இயங்கும் தமிழ் தேசிய இயக்கங்கள் திராவிட எதிர்ப்பு எனும் போர்வையில் வெளிப்படையாய் பெரியாரை எதிர்ப்பதும் மறைமுகமாய் பார்ப்பனியத்தை ஆதரிப்பதுமாய் இருக்கின்றன. தலித்திய கட்சிகளுக்கு அடுத்த தேர்தலில் என்ன செய்வது என்பதைத் தவிர வேறு பிரச்சனைகள் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. இஸ்லாமிய, கிருஸ்தவ சிறுபான்மை இயக்கங்களோ மதத்தை விட்டுவிட்டால் விழுந்து மரித்து விடுவோம் எனும் மனோநிலையிலிருந்து மாற மாட்டோம் என அடம் பிடிக்கின்றன.
மக்களிடையே இயங்கும் இயக்கங்களின் இந்த நிலை தான் அதாவது, நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பார்ப்பனியத்துக்கு ஆதரவாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த நிலைப்பாடுகள் தான் மக்கள் பார்ப்பனியத்தின் பிடிக்குள் மெல்ல மெல்ல வந்து கொண்டிருப்பதன் காரணம்.
சிறுபான்மை இயக்கங்கள் மத நம்பிக்கைகளைக் எல்லாவற்றையும் விட முதன்மையானதாய் கொண்டிருப்பதும், தலித்திய கட்சிகள் தேர்தலைப் பற்றி மட்டுமே சிந்திப்பதும் உடனடியாய் தவிர்த்து விடக் கூடிய பிரச்சனைகள் அல்ல. ஆனால், உடனடியாக விளங்கிக் கொண்டு தவிர்க்க வேண்டிய வேறு சில பிரச்சனைகளும் இருக்கின்றன.
நம்முடைய ஆயுதத்தை எதிரியே தீர்மானிக்கிறான். குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த திட்டமிட்ட படுகொலைகளில் ‘ராக்கெட் லாஞ்சர்கள்’ வரை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எதிரி இப்படி நவீன ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது அதற்கு எதிராக சுவரொட்டி ஒட்டுவதும், அடையாள ஆர்ப்பாட்டம் நடத்துவதும், சில கட்டுரைகளை எழுதுவதும் போதுமா? புரட்சிகர அரசியலில் இருக்கும் சிலர் இவ்வாறு கேள்வி எழுப்புகிறார்கள். அதாவது, எதிரிகள் ராக்கெட் லாஞ்சர்களைப் பயன்படுத்துகிறார்கள், ஆர்.டி.எக்ஸ் பயன்படுத்துகிறார்கள் எனவே, அவர்களுக்கு எதிராக ஏ.கே 47 ரக துப்பாக்கிகளை தூக்கிக் கொண்டு நிற்பது தான் எதிரியே நம் ஆயுதத்தை தீர்மானிக்கிறான் என்பதன் பொருள் எனக் கருதுகிறார்கள் போலும்.
முதலில் இது எதிரியின் ஆயுதம் எது என்பதை தீர்மானிப்பதில் இருக்கும் குழப்பம். குஜராத் படுகொலைகளையே எடுத்துக் கொள்வோம். முஸ்லீம்களை கொன்று குவிப்பதற்கு பயன்படுத்திய கருவிகள் எவை என்பது வேறு. அந்த திட்டமிட்ட படுகொலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பதற்கு எதை கருவியாக பயன்படுத்தினார்கள் என்பது வேறு. பொய்யாக என்றாலும் கோத்ரா மூலம் மக்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டு ஒன்றுபடுத்தி அவர்களின் திட்டத்துக்கு ஆதரவானவர்களாக மக்களை கட்டியமைத்தார்களே அது தான் முதன்மையானது. அரசின் அத்தனை துறைகளையும் அவர்களின் திட்டத்துக்காக வேலை செய்ய வைத்தார்களே அது தான் முதன்மையானது. இந்த வகையில் அவர்களின் ஆயுதம் அரசும், மக்களை தங்களுக்கு ஆதரவானவர்களாக திருப்பியதுமே.
இரண்டாவது, இந்தியாவில் கலவரமாக உருவகிக்கப்பட்டு நடத்தப்படும் எதுவும் பார்ப்பனிய தத்துவார்த்திகளினாலோ, புரவலர்களினாலோ நடத்தப்படுவது இல்லை. மக்களையே முன்னிருத்துகிறார்கள். தவறான, முறைகேடான வழிகளில் என்றாலும், மக்களை வென்றெடுத்தே அவர்களைக் கொண்டே முன்திட்டமிடப்படும் கலவரங்களை நடத்துகிறார்கள். இங்கும் அவர்களின் ஆயுதமாக இருப்பது மக்களை தன்னுடைய நோக்கத்துக்கு இசைவாக திரட்டுவது தான்.
எதிரிகளின் ஆயுதம் தங்களை நோக்கி மக்களை திரட்டுவதும், அதற்கு இசைவாக அரசின் அனைத்து துறைகளையும் பயன்படுத்துவது தான். என்றால் அதற்கு எதிரான ஆயுதமாக எது இருக்க முடியும்? அரசை அம்பலப்படுத்துவதும், மக்களை அவர்களுக்கு எதிராக உண்மைகளை உணர வைத்து, அவர்களுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதாகத் தானே இருக்க முடியும். இதைக் குலைப்பதற்காகத் தான் கலை, இலக்கியம், விளையாட்டு முதல் போதை வரை அனைத்தையும் பயன்படுத்துகிறது அரசு. என்றால் இதற்கு எதிராக ஏ.கே 47 வகை துப்பாக்கிகளையோ, அல்லது அதனிலும் தீவிரமான கருவிகளையோ தரித்து நின்றால் அது எதிரிக்கு எதிரான ஆயுதமாகி விடுமா?
பார்ப்பனியத்தின் நுணுக்கமான வடிவமாக தற்போது பரவிவரும் ஆதிக்கசாதி வெறியின் பரவலாக ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. நீறுபூத்த நெருப்பாகக் கிடந்த ஆதிக்கசாதிவெறி ஆர்.எஸ்.எஸ் இன் தற்போதையை நிகழ்ச்சிநிரலை ஒட்டி விசிரி விடப்படுகின்றன. ஆணவக் கொலைகளில் குறிப்பிட்ட கொலையின் கொடூரத்தன்மை என்பதை விட அது ஆதிக்கசாதி வெறியர்களிடம் ஏற்படுத்தும் தூண்டுதல் அபாயகரமானது. ஆனால், இங்கே குறிப்பிட்ட கொலையின் கொடூரத்தனமை குறித்து பேசும் பலர் அது ஏற்படுத்தும் தூண்டுதலை சிந்திக்க மறுக்கிறார்கள். இந்த ஆணவக் கொலைகளுக்கு எதிராக என்ன செய்வது? தனிப்பட்ட நிகழ்வுகளை விடுத்து சமூகத் தளத்தில் பார்த்தால் ஆதிக்க சாதி மனோபாவத்துக்கு எதிராக களத்தில் இறங்கி வேலை செய்வதும், கலப்பு மணங்களை பெரிய அளவில் ஊக்குவிப்பதும், பெரிதாக விளம்பரப்படுத்தி ஆதிக்க சாதி ஒடுக்கப்பட்ட மக்கள் கலப்பு மணங்களை நடத்துவதும் செய்ய வேண்டும். மாறாக கத்தியை எடுப்பது சரியான தீர்வாக அமையுமா?
90களின் பின்னான தலித்திய அரசியல் என்பது ஓட்டுக் கட்சிகளின் அனைத்துவித சீரழிவுகளுக்கும் ஆட்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒருவிதத்திலும் பயனளிக்காததாக மாறியிருக்கிறது. தவிரவும் தத்துவார்த்த அடிப்படையில் தலித் அரசியல் என்பது எப்போதுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான எழுச்சியை தந்ததில்லை. சிறுபான்மை மக்களை எதிரொலிப்பதாக கூறப்படும் கட்சிகள், இயக்கங்கள் எதுவுமே அம்மக்களின் சமூக வாழ்வு குறித்து எந்த அக்கரையும் செலுத்தியதில்லை. மதப் பெருமிதங்கள் மூலம் உணர்ச்சிகரமான ஒன்றுதிரட்டலை மட்டுமே அவை செய்துள்ளன. மட்டுமல்லாது, அவர்கள் மத அடிப்படையில் ஒன்று திரண்டிருப்பது பார்ப்பன பாசிசங்களுக்கு எவ்வளவு உதவிகரமாக இருக்கிறது என்பதை அவர்கள் உணரவும் இல்லை. இவை உணரவைக்கப்பட்டாக வேண்டும். இது தான் மக்கள் முன்னுள்ள இலக்கு.
நுணுக்கமாகவும், பொதுத் தளமாகவும் பரவி வரும் பார்ப்பனியத்தை முறியடிக்க வேண்டுமென்றால் மக்கள் வர்க்கமாக இணைவதைத் தவிர வேறு குறுக்கு வழிகளில்லை. ஒடுக்கப்பட்ட மக்களும், சிறுபான்மையினரும், புரட்சிகர அரசியலில் இருப்போரும் வர்க்க அடிப்படையில் ஒருங்கிணைந்தாக வேண்டிய தேவை இன்றியமையாததாக மாறியிருக்கிறது. இதற்கான வழியைச் சமைப்பது தான் புரட்சிகர அரசியலில் இருப்போருக்கான உடனடிக் கடமை.