வணக்கம் தோழர்
பொதுவுடமை வாதிகள் மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது சரியா ? தவறா ?
திரு ராஜ்ரம்யா கேள்வி பதில் பகுதியிலிருந்து
நண்பர் ராஜ் ரம்யா,
தவறு என்று ஒற்றைச் சொல்லில் கூறிவிட முடியும். ஏன் தவறு என்பதையும் சேர்த்தால் தான் அது முழுமையடையும். முதலில் மதம் என்பது என்ன? இயங்கியல் அடிப்படையில் அதன் கருத்துமுதல்வாத தன்மையை விவரிப்பது ஒரு வகை. அதை விட, மக்களிடம் மதத்தின் பாத்திரம் என்ன என்பதை உள்வாங்கிக் கொள்வது இன்றியமையாதது. மதம் மக்களுக்கு அபினியைப் போல போதை மயக்கத்தைக் கொடுக்கிறது. அதேநேரம் இதயமற்ற இந்த உலகின் கொடூரச் சுரண்டலுக்கு தற்காலிக இளைப்பாறலை, செயற்கையான ஆற்றுப்படுதலை செய்கிறது.
மக்கள் எந்த அடிப்படையில் மதங்களின் மீது பிடிமானம் கொண்டிருக்கிறார்கள்? இரண்டு வழிகளில் மதங்களின் மீதான பிடிமானம் நிலை கொண்டிருக்கிறது. ஒன்று, மரபு வழியிலான உறுதிப்பாடு. இரண்டு, எதிர்காலம் குறித்த பயம். இவற்றில் மரபு ரீதியிலான உறுதிப்பாடு பெரும்பாலும் மீளாய்வுக்கு உட்படுத்தாத அல்லது உட்படுத்த விரும்பாத நிலையில் இருக்கிறது. எதிர்காலம் குறித்த பயத்தில் மதம் எதுவும் தமக்கு செய்ய இயலாத நிலையில் இருக்கிறது என்பதை அறியாத அல்லது அறிய விரும்பாத நிலையில் இருக்கிறது. இந்த இரண்டின் மீது தான் மதம் தனது பொய்யான இளைப்பாறுதலை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.
மதம் குறித்து, அல்லது மதத்தில் ஈடுபாடு கொண்டிருக்கும் மக்கள் குறித்து மார்க்சியம் என்ன பார்வையைக் கொண்டிருக்கிறது? மதம் என்பது அரசைப் பொருத்தவரை தனிமனித விவகாரம். ஆனால், கட்சியைப் பொருத்தவரை அது சமூகத்தில் நிலவும் முரண்பாடான பிரச்சனை. இந்த இரண்டு கருத்தின்படி தான் ஒரு பொதுவுடமைவாதி மதத்தை அணுக வேண்டும். அரசு தனிமனித எல்லையைத் தாண்டி மதத்தை ஆதரிக்கவோ எதிர்க்கவோ செய்யும் போது பொதுவுடமைவாதி அதில் தலையிட்டு அரசுக்கு எதிராக போராட வேண்டும். எடுத்துக்காட்டாக அண்மைய இரண்டு நிகழ்வுகளைப் பார்க்கலாம். ஒன்று அஞ்சலகங்களில் கங்கை நதிநீர் விற்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனும் அரசின் அறிவிப்பு. இது மதம் ஒரு தனிமனித விவகாரம் என்பதைத் தாண்டி ஒரு குறிப்பிட்ட மதத்தை ஆதரிக்கும் அரசின் செயல்பாடு. இதை எதிர்க்க வேண்டும். இரண்டு, மதப் பரப்புரையாளர் ஜாகிர் நாயக் மீது அரசு எழுப்பும் நிர்ப்பந்தம். இது மதம் ஒரு தனிமனித விவகாரம் என்பதைத் தாண்டி ஒரு குறிப்பிட்ட மதத்தை எதிர்க்கும் அரசின் செயல்பாடு. ஜாகிர நாயக் போன்ற மத பரப்புரையாளர்கள் அறிவியலுக்கு எதிராக மக்களிடம் மூட நம்பிக்கையை வளர்க்கிறார்கள் எனும் அடிப்படையில் எதிர்க்கப்பட வேண்டியவர்களே என்றாலும் அரசின் நடவடிக்கை எதிர்க்கப்பட வேண்டும்.
கட்சியைப் பொருத்தவரை மதம் என்பது சமூகப் பிரச்சனை. மதம் ஒரு தனி மனித விவகாரம் என்று ஒரு பொதுவுடமைவாதி ஒதுங்கியிருக்க முடியாது. மதம் எனும் அந்த சமூகப் பிரச்சனையை எதிர்த்து போராட வேண்டியது ஒரு பொதுவுடமைவாதியின் சமூகக் கடமை. ஆனால் அது முதன்மையான சமூகக் கடமையல்ல. அதாவது, மதங்களுக்கு எதிராகப் போராடுவது என்பது வர்க்கப் போராட்டத்துக்கு மேலானதல்ல, வர்க்கப் போராட்டத்துக்கு உட்பட்டதே.
சமூகவலைதளங்களைப் பொருத்தவரை சமூக ஆர்வலர்கள், முற்போக்காளர்கள் மதங்களுக்கு எதிரான பரப்புரைக்கு மிகுந்த முதன்மைத்தனம் கொடுக்கிறார்கள். இது தேவையற்றது. எவ்வாறென்றால், மதங்களின் மீதான பிடிப்பு மக்களுக்கு அற்றுப் போய்விட்டால் வேறு பிரச்சனைகளே இருக்காதா? ஆனால், மதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கும் பிரச்சனைகள் இல்லாதாகும் போது மதம் இற்றுப் போய் மக்களிடமிருந்து தானாகவே நீங்கி விடும். மக்களிடம் மதம் நீடித்திருப்பதற்கே மதத்திற்கு அற்பட்ட பிற பிரச்சனைகள் இருந்து கொண்டிருப்பதே காரணம். எனவே, அவைகளை தீர்ப்பதற்கான வார்க்கப் போராட்டத்துக்கு உட்பட்டுத் தான் மதங்களுக்கு எதிரான போராட்டங்கள் அமைய வேண்டும். பொதுவுடமைவாதியைப் பொருத்தவரை மதங்களுக்கு எதிரான போராட்டம், வர்க்கப் போராட்டத்துக்கு இடையூறாக ஆகிவிடக் கூடாது என்பது கவனிக்கத் தக்கது.
இந்த அடிப்படைகளை கைக் கொண்டு மதப் பண்டிகைகளைப் பார்த்தால், முதலில் அவை வர்க்க ஒற்றுமைக்கு எதிரான அம்சங்களாக இருக்கின்றன. இரண்டாவதாக பண்டிகைகளின் தன்மையைப் பார்த்தால், பார்ப்பனிய மத பண்டிகைகள் உள்ளடக்கத்தில் பண்பாடு கலாச்சார ரீதியிலும், பொருளாதார சமூக ரீதியிலும் உழைக்கும் மக்களுக்கு எதிரான உணர்வை கொண்டிருக்கிறது, பிற மதப் பண்டிகைகள் ஒப்பீட்டளவில் இந்த அளவுக்கு இல்லை என்றாலும் உழைக்கும் மக்களுக்கு எதிரானவைகளே. மூன்றாவதாக எந்த மதப் பண்டிகை ஆனாலும் அது நுகர்வு வெறியோடு பின்னிப் பிணைந்ததாக இருக்கிறது.
மத பண்டிகைகளின் இந்த மூன்று அம்சங்களையும் பரிசீலித்துப் பார்த்தால் ஒரு பொதுவுடமைவாதியின் சமூகக் கடமையான மக்களின் மூடநம்பிக்கையை எதிர்க்கும் போராட்டங்களுக்கு எதிராக நிற்பதுடன், வர்க்கப் போராட்டத்துக்கும் எதிர் வரிசையில் திடமாக நிற்கிறது. இப்படியான அடிப்படையிலிருக்கும் மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது என்பதன் பொருள் என்ன? அந்த அடிப்படைகளுக்கு ஏற்புரை வாசிப்பது என்பதாகத் தான் இருக்க முடியும். இதை சாதாரண ஒரு முற்போக்குவாதி செய்ய முடியுமா? என்றால் ஒரு பொதுவுடமைவாதி இதை எப்படி செய்ய முடியும்?
நன்றி தோழர்