கபாலி: சில கற்பிதங்களை முன்வைத்து

Kabali1

வழக்கமான ரஜினி பட அலம்பல்களைத் தாண்டி கபாலி எனும் புதிய படம் வேறொரு தளத்தில் ஆதரிக்கவும், எதிர்க்கவும் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ் திரை உலகைப் பொருத்தவரை பல்வேறு விதங்களில் விமர்சனங்கள் செய்யப்படுகின்றன. தொழில்நுட்பத்தை முதன்மையானதாக வைத்து, கலைஞர்களின் நடிப்புத்திறனை முதனமையானதாக வைத்து, கதையை, திரைக்கதையை, ஒளிப்பதிவை, இசையை, இயக்குனரை என பல அம்சங்களை முன்வைத்து திரைப்படங்கள் விமர்சிக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் கபாலி தாண்டியிருக்கிறது. ஒருவேளை இதுவும் கூட சாதனை தானோ, என்னவோ.

 

பொதுவாக கலை என்பது, அது எந்த ஊடகத்தில் இருந்தாலும், என்ன வடிவங்களில் இருந்தாலும் அதன் சாராம்சம் படைப்பாளி சுகிப்பாளிக்கு கடத்தும் ஒற்றை கருத்துப் பரிமாற்றம் என்பதே. பரிமாற்றப்படும் அந்தக் கருத்துக்கு வலுவும், வனப்பும், நேர்த்தியும், அழகும், ஈர்ப்பும் சேர்ப்பதற்காகவே தொழில்நுட்பம் தொடக்கம் இசை வரை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான விமர்சனங்கள் படைப்பாளியிடமிருந்து சுகிப்பாளிக்கு என்ன கருத்து கடத்தப்படுகிறது என்பதைத் தவிர பிறவற்றை அலசுவதாகவே இருக்கின்றன. கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்பதை விடுத்து கலை இலக்கியம் யாவும் கலைக்கே என்பதே முண்டியடித்து முதன்மை பெற முயல்கிறது.

 

இந்த அடிப்படையில் கபாலி என்ன சொல்கிறது? குற்றக் கும்பல்களைப் பற்றிய கதை. 25 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்குப் பிறகு வெளிவரும் குழுத் தலைவன் ஒருவன் தனக்கு எதிரான குழுவை அழிக்க முயல்கிறான். நடுவில் மனைவி மகளைத் தேடி அடைகிறான். அவ்வளவு தான். இதில் ரஜினி எனும் ஊதப்பட்ட பிம்பத்தை கழித்துவிட்டுப் பார்த்தால், இந்தப் படத்தில் ஈர்ப்புக் கவர்ச்சி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. என்ன சொல்ல வருகிறது இந்தக் கதை? ஹிட்லர் குழந்தைகளிடம் மிகுந்த பாசம் கொண்டவர் என்று சொல்லப்படுவதைப் போல, துப்பாக்கியைத் தூக்கி அரை நொடியில் ஒருவனை கொன்று போடும் திடமனம் கொண்ட கபாலி மகளையும் மனைவியையும் உருகி உருகி நேசிக்கிறார், தேடியலைகிறார் எனும் மனமுரணையா? சிறை சென்று மீளும் ஒரு குற்றக் குழுத் தலைவனின் மனப் போராட்டம் எனும் நோக்கில் திரைக்கதை அமைக்கப்படவில்லை. அல்லது அனேகர் கூறுவது போல மலேயத் தமிழர்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராடிய தலைவனின் கடைசிக் கால வாழ்க்கை என்பதா? திரைக்கதையின் இலக்கு இதிலும் இல்லை. தமிழர் போராட்டம், வெகுசில வசனங்கள் இவைகளைக் கழித்து விட்டால் கதை வானத்தில் மிதந்து கொண்டிருக்கும், அதை தரையில் கால்பாவ வைப்பதற்குத்தான் தமிழர் போராட்டமும், ஒடுக்கப்பட்டவர் கோணத்திலான சில வசனங்களும் பயன்பட்டிருக்கின்றன. இந்த இரண்டு கோணங்களைத் தவிர வேறெந்தக் கோணமும் கபாலியில் இல்லை. ஆனால் திரைக்கதை இந்த இரண்டு கோணங்களிலும் ஒட்டாமல் இருக்கிறது. அதனால் தான் படத்தைப் பார்த்து விட்டு வெளிவரும் யாருக்கும் ரஜினியைத் தவிர வேறெதுவும் ஒட்டாமல் வெளியேறி விடுகிறது.

 

கபாலியை எதிர்மறையாக விமர்சிப்பவர்கள் ஆதிக்கசாதி மனவியல்பு கொண்டவர்கள் என்பதான பிம்பமாக்கல் தற்போது நிலவுகிறது. அதில் உண்மை இல்லாமலும் இல்லை. படத்தில் இடம்பெறும் சில தலித்திய வசனங்களையும், இயக்குனர் தலித் என்பதையும் கண்ணேற்றே எதிர்மறையான விமர்சனங்கள் பல கிளம்பி வந்து கொண்டிருக்கின்றன. இதற்குமுன் பல படங்கள் தேவர் மகன், சின்னக் கவுண்டர், சுந்தரபாண்டியன் போன்றவை வெளிப்படையாக சாதி அடையாளத்தோடும், ஆதிக்கத்தோடும் வெளிவந்த போதும் அவை பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை. ஆனால் கபாலியில் தலித்திய வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதாலேயே எதிர்க்கப்படுகின்றன. இந்த யதார்த்தத்திலிருந்து பார்த்தால் இதற்கு எதிர்வினையாக கபாலியை எதிர்ப்பவர்கள் ஆதிக்கசாதி மனவியல்பை ஆதரிப்பவர்கள் எனும் கருத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

 

அவ்வாறான கருத்தை புரிந்து கொள்ள முடிகிறது என்பதாலேயே ஆதிக்க சாதி மனவியல்பை எதிர்ப்பவர்கள் அனைவரும் கபாலி படத்தை ஆதரிக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியுமா? கபாலி ஒரு தலித்தியப் படம் என நம்புகிறவர்கள் கபாலியை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்கிறார்கள். இதற்கு சில காரணங்களையும் கூறுகிறார்கள்.

 

1. இன்றைய ஆதிக்க சாதிச் சூழலில் முழுக்க முழுக்க சிறந்த படங்களாக, உள்ளீட்டிலும், வடிவத்திலும் சிறந்த படங்களாக வருவது இயலாது. ஒரு சில எட்டுகளை எடுத்து வைத்து படிப்படியாகத்தான் நகர முடியும். அப்படியான நகர்வை நாம் ஆதரிக்க வேண்டுமல்லவா? சரிதான், முன்நகர்வுகளை ஆதரிக்க வேண்டும் தான். ஆனால், கபாலி அத்தகைய முன்நகர்வைக் கொண்டிருக்கிறதா? கபாலியின் கதையிலும், திரைக்கதையிலும், பயன்படுத்தப்பட்ட உத்திகளிலும் அவ்வாறான விசயங்கள் எதுவுமில்லை. தமிழர்கள் போராடுவதான ஒரு காட்சி, ஒடுக்குமுறைக்கு எதிராக ஓரிரு வசனங்கள் இவைகளை ஒரு மூன்றாம் தர வணிகப் படத்தில் பொருத்தி வைத்து சந்தை மதிப்புள்ள ஒரு நடிகரை நடிக்க வைத்து விட்டால் அது முன்நகர்வை கொண்ட படமாகி விடுமா? எடுத்துக்காட்டாக ஈ, நாகரீகக் கோமாளி போன்ற படங்களைச் சொல்லலாம். பல குறைபாடுகள் இருந்தாலும் அவைகளில் முன்நகர்வு இருக்கிறது. கத்தி என்றொரு படம் வந்தது, கார்ப்பரேட்டுகளை எதிர்த்துப் போராடுவது தான் அதில் முக்கிய இழை. என்றாலும் அதனை முன்நகர்வாக கொள்ள முடியாது. ஏனென்றால், உலகமயமாக்கத்தால் கொதித்துப் போயிருக்கும் மக்களிடையே கார்ப்பரேட்டுகளை எதிர்ப்பது ஒரு ட்ரெண்டாக ஆகிக் கொண்டிருக்கிறது. இவைகளோடு ஒப்பிட்டால் கபாலி என்ன விதமான முன்நகர்வைக் கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் மீளாய்வு செய்வது நல்லது.

 

2. ஆடை அரசியல் குறித்த வசனங்கள் கல்லூரி மாணவர்களிடையே விவாதங்களை கிளப்பியிருக்கிறது. ஆம். நிச்சயமாக இது வரவேற்கத் தக்க ஒன்று தான். ஆனால் அந்த விவாதங்களின் தொடர்ச்சியைக் கோரும் பங்களிப்பு எதுவும் படத்தில் இல்லையே என்பது தான் ஆதங்கம். அதாவது அந்த விவாதங்களை தேடலில் சென்று சேரக்கூடிய உள்ளடக்கம் படத்தில் கொஞ்சமும் இல்லாதிருப்பது அந்த விவாதங்களை வெறும் உளக் கிளர்ச்சியுடன் முடிவடைய வைக்கின்றன. பழைய லியாகத் அலிகான், நாராயணன் வசனங்களில் இது போன்ற வெற்றுக் கிளர்ச்சிகள் அதிகம். இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு விவாதம் தொடர்ந்து தேடலுக்கும் அதன் மூலம் சரியான திசையையும் கண்டடைவது குறிப்பிட்ட ஒருவன் கொண்டிருக்கும் சூழலையும் அறிவையும் பொருத்தது என்பதை மறுப்பதாக பொருளாகாது. இப்படியான வெற்றுக் கிளர்ச்சியை ஏற்படுத்தும் வசனங்கள் மட்டுமே ஒரு படத்தை ஏற்கத்தக்க படமாக்கி விடுமா என்பது தான் கேள்வி.

 

3. படத்தில் தலித் அரசியலை நோக்கி அமைந்திருக்கும் குறியீடுகள். அதாவது, கபாலியின் அறிமுகக் காட்சியில் படித்துக் கொண்டிருக்கும் நூல், கோட்டுசூட்டு போடுவேன், உனக்கு முன்னால் கால்மேல் கால் போட்டு அமருவேன் போன்ற வசனங்களில் இருக்கும் அழுத்தம். தனி இடம் பிடித்திருக்கும் நீல நிறம் உள்ளிட்டவை தலித் அரசியலை நோக்கிய குறியீடுகளாக காட்டப்படுகின்றன. ஆனால் இது போன்ற குறியீடுகள் மட்டும் தான் படத்தில் இருக்கிறதா? இதற்கு எதிரான குறியீடுகளும் படத்தில் இடம்பெறவில்லையா? அவைகளை எப்படி எடுத்துக் கொள்வது? முதலில் ரஜினி எனும் நடிகரின் மெய்வாழ்வின் மதிப்பீடு என்ன? அப்பழுக்கற்ற சந்தர்ப்பவாதி, பார்ப்பனியவாதி. இந்த நடிகர் கபாலியாக அறிமுகமாகும் காட்சியில் ஒரு தாமிரக் காப்பை கையில் மாட்டுவது போல் ஒரு காட்சி வரும். இப்படி தாமிரக் காப்பை அணிவது ஆர்.எஸ்.எஸ் மரபு. இந்துத்துவத்தில், பார்ப்பனியத்தில் பெருமை கொள்ளும் பலரும் இது போன்ற தாமிரக் காப்பை கையில் அணிந்திருப்பதை பார்க்கலாம். இந்தக் குறியீடு சொல்லவரும் கருத்து என்ன?

 

ஒரு காட்சியில் காட்டப்படும் தலைவர்களின் படங்களில் இடம்பெற வேண்டிய பெரியாரின் படம் இல்லாதிருப்பது குறித்து பலரும் விமர்சித்து விட்டார்கள். இதற்கு ஒரு செவ்வியில் இயக்குனர் ரஞ்சித் மறந்து விட்டது, வேறொன்றுமில்லைஎன பதிலளித்திருக்கிறார். தலித்திய சிந்தனையிலுள்ள ஒரு இளைஞர், தலித்திய குறியீடுகளை இணைத்திருப்பதாக போற்றப்படும் ஒரு இயக்குனர் பெரியாரை மறக்க முடியுமா? இதை குறியீடாகக் கொண்டால் இது சொல்லவரும் கருத்து என்ன?

 

மற்றொரு காட்சியில் கபாலி கூறும் நண்டுக் கதை. இது பார்ப்பனியக் கதையாடலல்லவா? சாதியப் படிநிலைகளை வகுத்து அதனை நடைமுறைப்படுத்த எந்த எல்லைக்கும் செல்லும் பார்ப்பனியம், நீ முன்னேறவில்லை என்றால் அதன் காரணம் மேலிருந்து யாரும் ஒடுக்குவதால் அல்ல. உன்னுடனே இருப்பவர்கள் உன்னை இழுத்துப் போடுகிறார்கள் அது தான் காரணம் என்கிறார்கள். ஒரு தலித்திய இயக்குனர் தன் படத்தில் இப்படி ஒரு கதையை குறியீடாக, வசனமாக வைக்க முடியுமா? இந்தக் கதையை மக்கள் சாதியப் படிநிலையில் ஒடுக்கப்படுகிறார்கள் எனும் கருத்து இல்லாதவர்கள் தான் ஏற்க முடியும். தலித்திய சிந்தனை உள்ள யாராலும் இக் கதையை ஏற்க முடியாது. இந்தக் குறியீடு சொல்லவரும் கருத்து என்ன?

 

இப்படி தலித்தியத்துக்கு எதிர்மறையான குறியீடுகளும் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. இவைகளைக் கொண்டு தலித்துகளுக்கு எதிரான குறியீடுகளைக் கொண்ட படம் என முடிவுக்கு வரலாமா?

 

கொஞ்சம் திரையரங்குக்கு வெளியில் இருந்து பார்க்கலாம். தொடக்க நாட்களில் படத்தைக் காண சீட்டின் விலை 1500 லிருந்து 4000 வரை விற்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இவ்வளவு விலை கொடுத்து திரைப்படத்தை காண மேட்டுக்குடி வர்க்கத்தினரைத் தவிர வேறு யாரால் இயலும்? அதிக விலையினால் காணாமல் சென்ற அல்லது கண்டு பொருளாதார பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் தலித்துகளாகத்தான் இருப்பர். தலித்துகளுக்காக படத்தில் குறியீடுகளைப் பயன்படுத்தியதாக கூறப்படும் இயக்குனர், தன் படத்தை தலித்துகள் பார்க்க முடியாதவாறு அல்லது பார்த்ததால் பாதிப்படையுமாறு இருக்கும் நிலை குறித்து ஏதாவது கருத்து கூறியிருக்கிறாரா? என்றால் இல்லை என்பதே பதில். அப்படியானால் இங்கே படைப்பும் படைப்பாளியும் தனித்தனியே பிரிக்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு முதன்மையான அம்சம்.

 

தயாரிப்பாளர் தானு, நடிகர் ரஜினி இருவரையும் பொருத்தவரை வணிகம், எவ்வளவு லாபம் என்பதைத் தாண்டி வேறெந்த சிந்தனையும் இருக்காது. இதில் யாருக்கும் ஐயமும் இருக்காது. ஆனால் இயக்குனர் ரஞ்சித், கபாலி வெளியானதற்குப் பிறகு அவர் பல்வேறு ஊடகங்களுக்கு அளித்திருக்கும் செவ்விகளில் தன்னுடைய மனவோட்டத்ததை பதிவு செய்திருக்கிறார். அவைகளில் ஒடுக்கப்பட்டோரின் வலியும், மீண்டெழும் உத்வேகமும் தெரிகிறது. ஆனாலும் அவைகளில் தானும் தன்னுடைய படைப்பும் வெவ்வேறாக தெரிவது குறித்த எந்த விளக்கமும் இல்லை. தமிழ் திரை உலகைப் பொருத்தவரையில் சந்தை மதிப்புள்ள நடிகரை வைத்து எடுக்கப்படும் படங்களில், ஒரு வளர்ந்து வரும் இயக்குனரால் இதை தவிர்க்கவே முடியாது. என்றாலும் தனக்கு இது உவப்பானதல்ல, வருத்தம் எனும் ஒற்றைச் சொல்லிலாவது பதிவு செய்திருக்க வேண்டும். என்றால் இதை எப்படி புரிந்து கொள்வது? தலித்திய உணர்வுள்ள ஒரு இயக்குனர் தன்னுடைய வளர்ச்சிக்காக தெரிந்தே இதை அனுமதிக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா?

 

தலித்திய உணர்வுள்ள இயக்குனர் இயக்கிய படம் என்பதற்காகவே கபாலி கொண்டாடப்பட வேண்டும் என்றால் மேற்கண்ட அம்சங்களை என்ன செய்வது? அதாவது, கதையில், படத்தின் மைய இழையில் தலித்திய உணர்வு வெளிப்படவில்லை, படத்துக்கு வெளியே தன்னை பாதிக்கும் இடங்களில் அவர் தலித்திய உணர்வை வெளிப்படுத்தவில்லை. இவைகளை இணைத்துப் பார்த்தால் அவர் ஒரு தலித் இயக்குனர் என்பதையும், படத்தில் சில தலித்திய வசனங்கள் இருக்கின்றன என்பதையும் மட்டுமே கொண்டு கபாலியை ஏற்கத்தக்க படமாக கொள்ள முடியாது என்பது தெளிவாகிறது.

 kabali2

இன்னும் சில அம்சங்களும் இருக்கின்றன. சாதிய வெறி மேலோங்கி இருக்கும் சூழலில் தலித் இயக்குனரின் திரைப்படத்தை எதிர் விமர்சனம் செய்வது ஆதிக்க சாதிக் கண்ணோட்டத்தில் படத்தை மறுக்கும் பார்ப்பனியர்களுக்கு துணை செய்வதாக ஆகாதா? ஒருவேளை ஆதரித்தால் அது எதிர்விமர்சனம் இன்றி பரவலாக எல்லோரையும் சென்று சேர்ந்தால் நாளை ரஜினி மட்டுமல்ல கமல், விஜய், அஜீத் என சந்தை வாய்ப்புள்ள நடிகர்களும் தலித்திய சிந்தனையுடன் படமெடுக்க முன்வந்தால் அது எவ்வளவு நன்றாக இருக்கும்? என்றெல்லாம் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

 

முதல் கேள்வியை எடுத்துக் கொண்டால், கபாலியைத் தூற்றும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு துணையாகும் வாய்ப்பும் இதில் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், கபாலியை ஆதரிப்பது தலித் உணர்வு கொண்ட வசனங்களை உடைய ஒரு படத்தை எதைப்பற்றியும் கவலைப்படாத, சந்தர்ப்பவாத வணிகக் கும்பலுக்கு, அவர்களின் லாபவெறிக்கு துணையாக ஆக்குவதாக ஆகுமே. இதை என்ன செய்வது? பொதுவாக ஆதிக்க சாதி எதிர்க்கிறது எனவே தலித்துக்கு துணையாக இருக்க வேண்டும் என்பது நடைமுறைச் செயல்களுக்கு பொருத்தமாக இருக்கக் கூடும். ஆனால் படைப்பை பொருத்தவரை அது துல்லியமாக விளக்கப்பட வேண்டும். சரி தவறுகளை கறாராக விமர்சித்து நெறிப்படுத்துவதன் மூலமே தலித் படைப்பாளிக்கு உதவ முடியும். அதேநேரம், அவ்வாறு செய்யப்படும் விமர்சனம் எதிர்மறையான ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் பயன்பட முடியாமல் செய்ய முடியும்.

 

இரண்டாவது கேள்வியை எடுத்துக் கொண்டால், அது ஒரு உள்ளீடற்ற யூகம். ஒரு வணிக வெற்றிப்படத்தைத் தொடர்ந்து அதே போன்ற படங்கள் வருவது ட்ரெண்ட் செட்டிங். ஒரு ட்ரெண்டாக தலித்தியப் படங்கள் வருவது தலித் இயக்குனருக்கும் உதவாது, தமிழ் திரைப்படச் சூழலை மாற்றுவதற்கும் உதவாது.

 

எல்லாம் சரி. இவ்வளவு வியக்கியானம் கூறுகிறவர்கள் ஒரு படம் எடுத்துக் காட்டலாமே. வாய்ப்பிருக்கும் சூழலில் அதையும் செய்யலாம். ஆனால், அப்போது இது ஒரு புரட்சிகர படம், எனவே புரட்சிகர இடதுசாரிகள் அனைவரும் இப்படத்தை ஆதரிக்க வேண்டும் என ஒருபோதும் கோரப்படாது. கறாராக விமர்சியுங்கள் என்றே கோரப்படும்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

10 thoughts on “கபாலி: சில கற்பிதங்களை முன்வைத்து

 1. என்ன ஒரு அலசல் என்ன ஒரு பகுப்பாய்வு….என்ன ஒரு விமர்சனம்…மிகச் சரியான தெளிவான விமர்சனம்….கபாலிக்காக கட்டிபுரண்டு அடித்துக்கொண்டவர்களும்…முற்போக்கு பேச படுவோரும் கண்டிப்பாக படித்து சிந்திக்க வேண்டிய கட்டுரை…

 2. [21:06, 30/07/2016] Sathish Chelladurai: தோழர் செங்கொடியின் பதிவின்படி பார்த்தால் அது ரஞ்சித் மட்டுமே பணம் போட்டு தோழர்களை வைத்து எடுத்தால் மட்டுமே சாத்தியம்.
  [21:23, 30/07/2016] Sathish Chelladurai: இன்னொன்னு அது தலித் கட்சி திட்டமல்ல .. திரைப்படம்…ஈ ல தான கர்லாக்கட்டைன்னு ஜனநாதன் பெண்களை முன் நகர்வு செய்தார்னு நினைக்கன்.. தொடர்ச்சியான ஜன நாதன் படங்களில் ஒரு குத்துப்பாட்டு வைப்பது வாடிக்கை. இதுதான் முன் நகர்வா என நெகட்டிவ் பாய்ண்ட் எடுத்து வைக்க இயலும்.

  ஜன நாதன் பணமல்ல அது..ரஞ்சித் பணமல்ல..தானு ரஜினி இருவருமே பக்தர்கள் … இருவரிடமிருந்தும் தப்பி பிழைத்து எடுத்த சில வசனங்களே கடுப்பை கெளப்பதுனா?

  அம்பேத்கர் காந்தி உடை அரசியலை வீடு ,நண்பர்கள் என்னிடம் கேட்கிறார்கள். பேட்டிகளில் தலித் வாழ்வு பேசு பொருளாகிறது. ரஞ்சித் அதிகாரத்தை கைப்பற்றனும்னு பேட்டி கொடுக்கார்!எந்த சினிமா ரிலிஸ் ஆனதும் இப்படி பேச்சு நிகழ்ந்தது?

  ஆக நெகட்டிவா எழுதனும்னு முடிவு செய்துட்டா கட்டம் கட்டி அடிச்சி துவைக்கலாம்..

  கேங் லீடர் லாலிபாப்பா சாப்புடுவார் ? நாயகப்பாத்திரம் அதன் மோட்டிவேட்டான பெண் பாத்திரம், எங்கயும் சதைய நம்பாத காட்சிகள் என ப்ளஸ்ம் உண்டு.

  கையில் காப்பை குறிப்பிட்ட தோழர் …இதெல்லாம் பசங்க கேங் குறியீடா வைத்திருந்ததுன்னு பல வண்ண கயிறுகளை காட்டுவார். அதை ஏன் குறியீடா சிந்திக்க கூடாது . யார் கயிறு கட்டுவான்னு தோழர்க்கு தெரியாதது அல்ல.

  காப்பு போடும் முன்னே மை பாதர் இஸ் பாலையா என்ற தலித்திய நாவலை காண்பிப்பார்கள்..அதுவும் கண்ணுக்கு தெரிந்திருக்காது.

  நாயகன் என்ன சைக்கோவா? எதிரிகளை சுடுவதால் மனைவி மகளை நேசிக்க கூடாதா? என்ன தோழர் எழுதிருக்கிங்க?

  ரஞ்சித் தன்னால் முடிந்த அரசியலை தமது சினிமாவில் சொல்வன்னு சொன்னார். அந்த நோக்கத்துக்கு காயடிச்சு மூடிட்டு சம்பாதிச்சிட்டு போடான்னு பேக் செய்து அனுப்பிராதிங்க…

  ஸ்ஸ்ஸப்பா.. சோடா ப்ளீஜ் 😊
  [21:51, 30/07/2016] Sathish Chelladurai: ப்ரீ லைப் ஸ்கூலில் முதல் சந்திப்பில் மாணவர்கள் நீல உடை சிகப்பு உடையில் இருந்தார்கள்.. எனக்கு அது அருமையாக தோன்றியது. கார்ல் மாக்ஸ் படமும் இருந்தாதக நினைவு
  [21:53, 30/07/2016] Sathish Chelladurai: பெரியாரை ஏன் வைக்கல? அதை அவர் வெளில சொல்ல இயலாது தோழர்..அவர் இன்னும் சினிமால நிக்கனும். கட்டாயம் தானு தலையிட்டிருக்கலாம். பெரியார் இல்லைனா நான் இங்க இல்லன்னு விகடன் கலந்துரையாடலில் சொன்னார்.

 3. வணக்கம் தோழர் சதீஷ் செல்லத்துரை,

  முதலில் சிலவற்றை புரிந்து கொள்வது நல்லது. ரஞ்சித் தலித் இயக்குனர், தன்னுடைய வேட்கையை தன்னுடைய படங்களில் கொண்டுவர விரும்புகிறார். வரவேற்கிறோம், இதில் மாற்றுக்கருத்து ஒன்றுமில்லை. அவ்வாறான தலித் முனைப்புகளுக்கு ஆதிக்க சாதிகளிலிருந்து எதிர்ப்புகள் வந்தால் அதை எதிர்கொள்வோம், துணை நிற்போம் இதிலும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒரு படைப்பு என்று வரும்போது படைப்பின் அம்சங்கள் குறித்து தான் பேச முடியுமேயல்லாது, அவர் தலித் இயக்குனர், தலித் முன்னெடுப்புகளைச் செய்பவர் எனவே அவர் படைப்புகளை – குறைகளிருந்தாலும் – ஆதரியுங்கள் என்பதை ஏற்க முடியாது என்பது தான் கட்டுரையின் கருத்து.

  இன்னொரு கோணத்தில், தலித் இயக்குனரின் படம் என்பதால் ஆதிக்க சாதிகள் திட்டமிட்டு எதிர்ப்பதை; அதாவது ஆதிக்க சாதி கண்ணோட்டத்தில் எதிர்க்கிறோம் என்பதை வெளிப்படுத்தாமல் படத்தின் அம்சங்களிலிருந்து எதிர்ப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். இதை தவறு என்கிறோம். ஆனால் மறு பக்கத்தில் தலித் இயக்குனரின் படம் என்பதால் தலித் ஆதரவாளர்கள் திட்டமிட்டு ஆதரிக்க வேண்டும். அதாவது, தலித் என்பதால் ஆதரிக்கிறோம் என்பதை வெளிப்படுத்தாமல் படத்தில் அம்சங்களிலிருந்து ஆதரிப்பதாக காட்ட வேண்டும். இதை எப்படி சரி என்று ஏற்க முடியும். அது தவறு என்றால் இதுவும் தவறு தான். இது சரி என்றால் அதுவும் சரியாகத்தான் இருக்க முடியும். இதை ஒப்ப முடியுமா? அல்லது சிலர் புரியாமல் கூறிக் கொள்வது போல் நீங்களும், எதிரியே நம் ஆயுதத்தை தீர்மானிக்கிறான் என்று இதற்கு விளக்கம் கொடுக்கப் போகிறீர்களா?

  \\\இருவரிடமிருந்தும் தப்பி பிழைத்து எடுத்த சில வசனங்களே கடுப்பை கெளப்பதுனா?/// \\\நெகட்டிவா எழுதனும்னு முடிவு செய்துட்டா கட்டம் கட்டி அடிச்சி துவைக்கலாம்/// \\\அதுவும் கண்ணுக்கு தெரிந்திருக்காது/// \\\அந்த நோக்கத்துக்கு காயடிச்சு மூடிட்டு சம்பாதிச்சிட்டு போடான்னு பேக் செய்து அனுப்பிராதிங்க/// நீங்கள் பயன்படுத்தியிருக்கும் இது போன்ற சொல்லாடல்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் என்ன? எது சரியான விமர்சனம், எது ஆதிக்கசாதி வெறியர்களின் போர்வையிலான விமர்சனம் என்பதை பிரித்தறிய முடியாமல், எதிர்ப்பாய் இருப்பது அனைத்தும் ஆதிக்கசாதி வகைப்பட்ட விமர்சனங்களே என ஒற்றை முடிவில் நீங்கள் இருப்பதாய் காட்டுகிறது. இதைத்தான் இந்த கட்டுரை தீவிரமாக மறுக்கிறது. அவ்வாறு தட்டையாய் முடிவு செய்யாமல் அம்சங்களிலிருந்து பரிசீலித்துப் பாருங்கள் எனக் கோருகிறேன்.

  ஈ படத்தில் கர்லாக்கட்டை என்றொரு பாட்டு இருக்கிறது என்பதற்காக அதை மைய இழையை மறுதலிக்க முடியுமா? இது போன்ற மைய இழையில் கபாலியின் வசனங்களும் குறியீடுகளும் இருந்தால் கொண்டாடி இருக்கலாம் என்கிறேன். இரண்டுக்குமான வித்தியசம் புரியும் எனக் கருதுகிறேன்.

  சரி, நண்டுக் கதை குறித்து என்ன கருதுகிறீர்கள்? மார்க்ஸ் படம் இல்லாமலிருந்தால் இந்தக் கதைக்கு அது ஒரு பொருட்டே அல்ல. மார்க்ஸ் படம் இருக்கிறதா இல்லையா என்பதை வைத்து படத்தை விமர்சிக்க முடியாது. ஆனால், பெரியார் இந்தக் கதையோடு ஒன்றியவர். இருக்கும் படங்களில் யாரும் மலேயெத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் அல்லர். ஆனல் பெரியார் குரல் கொடுத்திருக்கிறார். மார்க்ஸின் படம் இல்லை என்றால் அல்லது யார் படமும் இல்லை என்றால் கூட அங்கு கேள்வியே எழுந்திருக்காது. எல்லாரும் இடம் பெற்று பெரியார் மட்டும் இடம்பெறவில்லை என்பது தான் கேள்வியை எழுப்புகிறது.

  சரி இப்படிப் பார்ப்போம். பெரியார் படம் தவிர்க்கப்பட்டிருக்கிறது – இது ரஞ்சித் குறையல்ல, ரஜினியோ, தானுவோ தடுத்திருக்கலாம். நண்டு கதை – இதுவும் ரஞ்சித் தவறல்ல, ரஜினியோ தானுவோ விரும்பியிருக்கலாம். அப்படியானால் அந்த வசனங்களையும் குறியீடுகளையும் ரஜினியோ தானுவோ விரும்பவில்லை என்றால் .. .. ..? படத்தின் வணிகத்துக்கு அவை பயன்படும் என ரஜினியோ தானுவோ நினைத்திருக்கலாம் அல்லவா? இன்னொரு புறம் குறைகளாக தெரிபவை ரஞ்சித் நினைத்து ரஜினியோ தானுவோ தடுத்தவை, நிறைகளாக தெரிபவை எல்லாவற்றையும் மீறி ரஞ்சித்தின் புரட்சிகர நடவடிக்கைகள் என்றா புரிந்து கொள்வது? இப்படி புரிந்து கொண்டால் அதற்குப் பெயர் என்ன?

  பொதுவாக தலித்தியம் அல்லது அடையாள அரசியல் என்பது மார்க்ஸியத்தை சிதைக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கோட்பாடுகள். மார்க்ஸியத்தை சிதைக்க உருவாக்கப்பட்ட கோட்பாடு என்றாலும் எந்த மார்க்ஸியரும் தலித்திய அமைப்பினரை தள்ளி வைத்து பார்ப்பதில்லை, இணைத்துக் கொண்டே செல்ல விரும்புகிறார்கள். அதேநேரம் அடையாள அரசியலில் இருக்கும் சிக்கல்களையும் விமர்சித்து கொண்டு செல்கிறார்கள். தட்டையான புரிதலுள்ள யாருக்கும் இதைச் செரிப்பது பிரச்சனைக்குறியதாகவே இருக்கும். நீங்கள் சரியாக உள்வாங்கிக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

 4. தமிழ் சினிமாவில் அத்திப்பூத்தாற்போல் ஒரு ரஞ்சித் வந்திருக்கார். தான் ஒரு தலித் என்று அடையாளப்படுதிக்கொள்வதே பெரிய புரட்சிதான் .போங்க சார்.உங்கவிமர்சன த்த அப்புறம் பார்க்கலாம் .

 5. மார்க்சியத்தை குலைக்கும் செயல்பாடுகள் என்பது அதீத கற்பனை…ஏன்னா இங்க அதன் வீச்சு எத்தனை தூரம் சென்றடைந்துள்ளது என அறிவீர்கள்..தலித்தியத்தை சலூகைக்காரர்களாக சொல்லும் கம்யூனிஸ்ட்கள் இல்லியா என்ன?

  கர்லாக்கட்டையை கவனத்தை கலைக்காதா? ஒரு பக்கம் முன் நகர்வும் இன்மொருபக்கம் நுகர்வாகவும் காட்டுவதை மைய்ய இழை க்கு பாதிக்காததுன்னு சப்பக்கட்டு வேண்டாமே தோழர்… அவசியமில்லாததை ஏன் வைக்கனும்?

  இது ஜனநாதனை குற்றப்படுத்தியல்ல.. சினிமா இண்டஸ்ட்ரியின் யதார்த்த நிலை.

  அது தவறெனில் இது தவறு இது சரியெனில் அது சரி என வாதிடுவது யாருக்கான நிலையில் என்பது அவசியமானது.

  குறைகளிலிருந்தாலும் ஆதரிங்கன்னு சொல்லல.. எதிர்க்க கிளம்பியதுதான் ஆச்சர்யம். ஏனெனில் விமர்சனம் மேக்கிங் ரீதியாக இருந்தால் அது வேறு தளம். கொள்கை ரீதியாக எனில் ஆண்டை அடிமை.. ஆண்டைய எதிர்க்கும் குரல். அதும் மலேசிய தமிழ் சார்ந்த கதை.தலித் சினிமாவாக வசனங்கள் பொருத்திப்பார்க்கப்படுவது நஷ்டமில்லையே..அதிலென்ன பிரச்சனை?

  நான் எழுதிய வார்த்தைகளில் தப்பு என்ன? விமர்சன!ம் அப்படி இருக்கிறது நான் என்ன செய்ய? ஆதிக்க சாதி மன நிலையாக பதிவை நான் பார்க்கல.. ஆதிக்க கம்யூ மனநிலைந்னு பார்க்கலாம். அந்த மனநிலையை அடிக்கடி உணர்கிறேன். மேதமை என்பது படிப்பில் அல்ல.. யதார்த்த வாழ்வில்… அதனை உணர்ந்திருந்தால் இன்னேரம் புரட்சிகர இயக்கங்களின் வீச்சு பரவலாக சென்றடைந்திருக்கும் மக்களிடம்.

  நான் மிக தெளிவாக சொல்கிறேன்..அரசியல் நிறைந்த சினிமா உலகில் படத்தை அணுகுவதில் தூய்மைவாதம் என்பது செல்லாது. முடிந்தால் தோழரின் கூற்றுப்படி ஒரு திரைப்படம் எடுக்கவும். கிடைத்த கருவிகளை தம்மால் முடிந்தளவு பயன்படுத்த விழைபவர்களை விமர்சனம்னு ஓட விடாதிங்க…பிற்போக்கான கருத்துக்களை திணித்தால் கூட சொல்லலாம்.

 6. வணக்கம் தோழர்,

  ஆதிக்க சாதி மனோநிலை இல்லை, ஆதிக்க கம்யூனிஸ்ட் மனோநிலை என்னவிதமான சொற்பாடு இது? பொருளை அப்படியே வைத்து விட்டு சொல்லை மட்டும் மாற்றுவது. ஆதிக்க கம்யூனிஸ்ட் என்றால் என்ன பொருள்? அப்படி ஏதேனும் இருக்கிறதா? நீங்கள் குறிப்பிட விரும்புவது என்ன? கபாலி குறித்த இந்தக் கட்டுரை யதார்த்த நிலையை உணராமல் படிப்பு மேதமையை காட்டுவதற்காக எழுதப்பட்டிருப்பதா கருதுகிறீர்களா? கபாலியின் அம்சங்களுக்கு, அதன் சுற்றாடல்களுக்கு வெளியிலிருந்து இந்த விமர்சனம் எதையும் பேசவில்லை. எதை நீங்கள் கபாலியின் சுற்றாடல் எனக் கருதுகிறீர்களோ அதை நான் மறுத்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் நான் அழுத்தமாகக் கூறுகிறேன். விமர்சனம் செய்வது ஓட வைப்பதற்காக அல்ல. ஆனால், நீங்கள் ஒன்றுமில்லாததற்கு கொடுக்கும் ஆதரவு நிச்சயம் ஓட வைக்கும்.

  கிடைத்த கருவிகளை தம்மால் முடிந்தளவு பயன்படுத்த விழைபவர்கள் என நீங்கள் குறிப்பிடுவது தான் சப்பைக்கட்டாக இருக்கிறது. முடிந்தளவு வணிகத்துக்காக பயன்பட்டிருக்கிறது என்பது தான் சரியானது. இந்தப்படம் தலித் மீட்புக்கானது என யாரும் சொல்லவில்லை. நீங்களும் நானும் ஏன் ரஞ்சித்தும் கூட சொல்லவில்லை. முடிந்த அளவு அதை நோக்கியிருக்கிறது என நீங்கள் கூறுகிறீர்கள். நான் இல்லை என்கிறேன். நண்டு கதை ஒன்று மட்டுமே போதும் அந்த மனோநிலையில் ரஞ்சித் கூட இல்லை என்பதற்கு.

  ஆதிக்கசாதி என்ன மனோநிலையிலிருந்து படத்தை எதிர்க்கிறதோ, அதே மனோநிலையிலிருந்து நீங்கள் படத்தை ஆதரிக்கிறீர்கள். இரண்டையுமே நான் நிராகரிக்கிறேன். காரணம் இரண்டுமே யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டு இருப்பதால். சினிமா இண்டஸ்ட்ரியின் யதார்த்தம் ஆதிக்கசாதி மனோபாவமாக இருக்கிறது என்பதால் அதே போன்றதொரு எதிர் ஆதிக்கசாதி மனோபாவத்தை கட்டமைக்க விரும்புகிறீர்களா? உங்களைப் போன்றோர் ஆதரவு அந்தப் பொருளைத்தான் வெளிப்படுத்துகிறது. சரியான கறாரான விமர்சனமே இயக்குனரை மட்டுமல்லாது சினிமா இண்டஸ்ட்ரியையும் மேம்படுத்த உதவும். மாறாக உங்கள் வழியில் சென்றால் பத்தோடு பதினொன்றாக ரஞ்சித்தின் பின்னாலும் ஓர் அடையாள அரசியல் கூட்டம் நிரம்பியிருக்கும்.

  கறாராக விமர்சிப்பது ஆதிக்கசாதிக்கு பயன்படும் என ஒருபோதும் எண்ணாதீர்கள். நீங்கள் ஆதரிக்கும் நிலைதான் எதிர்மறையாக ஆதிக்கசாதிக்கு பயன்படும். மாறாக கறாராக விமர்சிப்பது தான் ஆதிக்க சாதி பயன்படுத்துவதிலிருந்து தடுக்கும். மற்றப்படி கோட்பாட்டு ரீயான, இயக்க ரீதியான விமர்சனங்களை வேறொரு வாய்ப்பில் பார்த்துக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன்.

 7. எது மறைய வேண்டும் என்று நினைக்கிறோமோ — அதை மறையாமல் — மறக்கடிக்காமல் — பார்த்துக் கொள்வது இரண்டு துறையினருக்கு கை வந்த கலை — ஒன்று சினிமாத்துறை — அடுத்தது அரசியல் துறை ….

  இந்தபடத்தில் தலித் என்பதைக் கூறி — அதைவைத்து கோடிகளை வாரிக்கொட்டி குபேரனாவது என்பதும் — இயக்குனர் அனைத்து மீடியக்களிலும் — தான் ஒரு ” தலித் ” என்று முத்திரைக் குத்திக் கொள்வதும் — தான் சிவப்பு கலரில் ஏன்பிறந்தோம் என்று வருத்தப் படுவதைப் போல ” பாவ்லா ” காட்டுவது ஏன் … ? தலித்துகள் அனைவருக்கும் ” ஒரு கலரை ” ஆவணப்படுத்த முயலுவதும் ஏன் … ?

  அந்தக் கால படங்களில் வெளிப்படையாக — பிள்ளைவாள் — முதலியார்வாள் — பிராமணர்வாள் என்று சாதியாக குறியீடுகளை சொல்லியே வசனம் மற்றும் காட்சிகள் இருக்கும் — தங்களை ” பகுத்தறிவாளர்கள் ” என்று பறை சாற்றி மக்களை ஏமாற்றியவர்களின் கதை – வசனத்தில் உருவானவைக் கூட அப்படித்தான் இருந்தது என்பது — தமிழ்நாட்டின் சோகம் — அவர்களையும் ஆட்சிக் கட்டிலில் அமரவைத்த நாம் இன்றுவரை — ஏமாளிகள் தானே …. ?

  இவர் என்னத்தை புதுமையாக காட்டிவிட்டார் என்று இப்படி ஒரு பரபரப்பு — விளம்பரம் — வானுயர டிக்கட் விலை — யார் சம்பாத்தித்து ” கொழுக்க ” இந்த ஏற்பாடு … ? முன் எப்போதும் முன்வைக்கப் படாத கருத்தை இந்தப் பட இயக்குனர் வைத்து சாத்தித்து விட்டாரா … ? சிந்தித்தால் உண்மை புரியும் —- வசூலான பணத்தில் ஒரு பகுதியை சமூக நலனுக்கு செலவிட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கிறார் ஒரு நீதிபதி — அது சரி — உடனே இவர்கள் தொகையை தூக்கி கொடுத்துவிடுவார்களா … ? அப்படியே கொடுத்தாலும் — வருமானவரி விலக்கு கிடைக்கும் ஒரு நிறுவனத்துக்கு கொடுத்ததை போல கூறி ” கருப்பை — வெள்ளையாக்குவதில் ” கில்லாடிகள் தானே இவர்கள் … ? போத்தீஸ் விளம்பரம் குறித்த சர்ச்சை ஞாபகம் வருகிறதா … ?

  இதில் கிடைக்கின்ற லாபம் எதை நோக்கி பயணிக்கும் என்பதை யார் அறிவார் — இதனால் உருவாகப் போவது உங்களின் மொழியில் ” கார்பொரேட் ” கள் தானே … தயாரிப்பாளரும் — உச்ச நடிகரும் — இனி இந்தப்பட இயக்குனரும் — லாபம் பார்த்த அனைவரும் முன்னாள் — இந்நாள் முதலாளித்துவ போர்வைக்குள் மறைந்து வாழ ஒரு வழியைத்தான் உருவாக்குகிறது இந்த மக்களிடம் கொள்ளையடிக்கும் காசு …..

  தலித் … தலித் என்று பேத்துகிற இயக்குனர் — தலித்தாக நடித்த நடிகர் போன்றவர்கள் எப்படி ஒரு டிக்கட் விலை 1000 த்தில் ஆரம்பிக்க ஒத்துக்க கொண்டார்கள் — ஒரு தலித்தினால் அந்த விலை கொடுத்து வாங்க முடியுமா — அப்படி வாங்குவதாக இருந்தால் அவர்களும் மேலே வந்து விட்டவர்கள் தானே — அப்புறம் ஏன் முகமூடி போட்டு மக்களை ஏமாற்ற வேண்டும் …. ?

  சாதிகளும் — பிரிவினையும் என்றும் மறையாமல் இருக்க — ” தமிழ்நாடு ஹரிஜன வீட்டுவசதி கழகம் ” என்று ஒன்றை நிரந்தரமாக்கிய உத்தமர்களும் — ” சமத்துவ புரம் ” என்ற ஒன்றை ஏற்படுத்தி — அதை பார்க்கும் போதெல்லாம் — அனைத்து சாதிகளும் நினைவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிற ” கோமாளி ” அரசியல்வாதிகளும் — இன்றும் ஜனநாயகம் — பொதுவுடைமை — சோசலிசம் என்று மேடை தோறும் பொய்களை வாரி இறைக்கும் கனவான்களும் தான் ” ரிசர்வ் தொகுதி ” என்ற ஒன்றை உருவாக்கி — பிரிவினையை பறைசாற்றி வருவது — ஏமாளிகள் அறிந்தது தானே —- ஒன்றுமில்லாத ஒன்றை பூதாகாரமாக்க துடித்து வேலை செய்யும் தற்கால ஊடகங்கள் — போன்றவற்றை எந்த ” குறிக்குள் ”
  அடைப்பது என்பதை தோழர் தான் தெளிவாக்க வேண்டும் …. ” கபாலி ” ஒன்றும் ஏழைப்பங்காளர் இல்லை …. அப்படித்தானே …. ?

 8. வினவில் கபாலி குறித்து சில கருத்துக்களை முன்வைத்தேன்.
  போட்டுத்தாக்கிவிட்டார்கள். எனது பார்வை தவறானதென்றால் அதை எவ்வாறு சரி
  செய்வது? நான் என் பார்வையை வெளிப்படுத்துகிறேன். ஆனால், பல தோழர்களின்
  கருத்து என்னைவிடவும் மோசமானது என அறிவேன். அவர்கள் இதுபோல
  வெளிப்படுத்துவதில்லை. எங்களைப் போன்றவர்களுக்கான வழிகாட்டலும் இல்லை.

  வணக்கம் தோழர்,

  நீங்கள் எழுதியிருப்பதை படிக்க முடியவில்லை. எழுத்துறு மாற்றியிலும் சிக்கவில்லை. எனவே, ஒழுங்குறி தமிழ் எழுத்துறுக்களைப் பயன்படுத்தி மீண்டும் தட்டச்சு செய்யுமாறு கோருகிறேன்.

 9. ஈ, நாகரீக கோமாளி போன்ற படங்களை முன்நகர்வு என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எந்த வகையில் முன்நகர்வு என்று குறிப்பிடவில்லை. உங்கள் பார்வை தவறானது. நாகரீக கோமாளி படத்திற்கு பு.க வில் விமர்சனம் எழுதப்பட்டுள்ளது வாசித்துப்பாருங்கள். ஈ படமும் சென்னை லும்பன் வாழ்க்கையை கொண்டாடுகின்ற பல சமரசங்களை செய்துகொண்ட படம் தான். கத்தியிலும் பெரிதாக ஒன்றும் இல்லை. இந்த வகை படங்கள் அனைத்திலும் நடந்திருப்பது வெறும் வடிவ மாற்றங்களே தவிர வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் குறிப்பிடும் முன்னகர்வு அதுவாக தான் இருக்க வேண்டும்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s