சுவாதி கொலை வழக்கில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டு விட்டார்.
மூன்று நாட்களுக்குப் முன்பு, கார்த்திக் என்பவரை காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொன்று விட்டு அதை மறைப்பதற்காக அவரின் பெற்றோருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து சரிக்கட்ட முயற்சித்திருக்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.
கடந்த வாரத்தில் நிகழ்ந்த இவை வெறும் தகவல்கள் அல்ல. மக்கள் மீது காவல்துறை கொண்டிருக்கும் மதிப்பீடு. காலங்காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் இதுபோன்ற மனிதத்தன்மையற்ற படுகொலைகள் காவல் துறையின் திமிரை வெளிக்காட்டிக் கொண்டே இருக்கின்றன.
ராம்குமாரின் கைதில் தொடங்கி கொலை வரை மக்களிடம் இருக்கும் எந்த ஐயத்திற்கும் விளக்கமளிக்க முன்வராத காவல் துறை (காவல்துறையும், சிறைத்துறையும் துறை ரீதியாக வேறுவேறு தான் என்றாலும் வேறுபாடு இருக்கிறதா என்ன?) தெனாவெட்டாக, ராம்குமார் மின் ஒயரை கடித்து தற்கொலை செய்து கொண்டான் என்கிறது. ஒருவாரம் கடந்த நிலையிலும் பெற்றோருக்கு உடலைக் காட்டவோ, பெற்றோர் தரப்பு மருத்துவர் முன்னிலையில் உடற்கூறு சோதனை செய்யவோ பிடிவாதமாக அரசு மறுத்து வருகிறது. அதற்கு நீதிமன்றமும் ஒத்தூதுகிறது.
இந்த முரண்பாடுகள், இந்த தெனாவெட்டு, இந்த திமிர்த்தனம் எதுவும் புதிதில்லை. ராம்குமார் என்றில்லாமல் தொடர்ந்து நடந்து வருவது தான். சுவர் கடந்து நாவல் பழம் பறித்தான் என்பதற்காக ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சிறுவனை சுட்டுக் கொன்ற வழக்கு என்னானது என்று யாருக்காவது தெரியுமா?
அரசாங்கம், நீதி மன்றம், காவல்துறை, இராணுவம் என அனைத்தும் ஒருங்கிணைந்து உழைக்கும் மக்களுக்கு எதிராக இருக்கிறது என்பதின் நடைமுறை எடுத்துக்காட்டுகள் தான் இவை. ராம்குமார் மின்கம்பியை பற்களால் கடித்து தற்கொலை செய்து கொண்டான் என காவல் துறை கூறுவதின் பொருள் என்னவென்றால், நான் நினைத்தால் உங்களில் யாரையும் அடித்துக் கொல்வேன், உங்களால் என்ன செய்துவிட முடியும்? என்பது தான்’
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராடிய மாணவர்களை அடித்து இழுத்து, ஆடைகளை அலங்கோலப்படுத்தி கைது செய்து அப்புறப்படுத்தும் ரவுடித்துறை; கோவையில் காவிக் கழிசடைகள் பத்து கி.மீ நெடுகிலும் கடைகளை அடித்து நொறுக்கியும், பொருட்களை திருடிச் சென்றும், காவல்துறை வாகனம் உட்பட, வண்டிகளை தீ வைத்துக் கொளுத்தியும் கும்பல் தாக்குதல் நடத்தியதை அனுமதித்ததை வேறு எப்படியாவது புரிந்து கொள்ள வழியிருக்கிறதா?
முதிர்ந்தவர்களைக் கூட ஒருமையில் விழிப்பதும், கைலி உடுத்தியிருந்தால் கன்னத்தில் அறைவதும் என காவல் துறை அத்துமீறுவது உழைக்கும் மக்கள் பெரும்பாலானோரின் சொந்த அனுபவம்.
நான் நினைத்தால் எந்தச் சட்டத்தையும், மரபையும் எட்டாக மடித்து வியர்வையை ஒற்றிக் கொள்வேன் என்னை எவன் கேட்க முடியும் எனும் அரசும்,
சட்டங்களுக்கு நாங்கள் மட்டுமே விளக்கம் கூறுவோம், வேறு எந்தக் கொம்பனுக்கும் அந்த அதிகாரத்தை தர முடியாது என்று அழிச்சாட்டியம் செய்யும் நீதி மன்றங்களும்,
சட்டத்தை மீறும் அதிகாரமும், மீறப்படுவதை அனுமதிக்கும் அதிகாரமும் எனக்கு மட்டுமே உண்டு, மீறுகிறவர்களை அடித்து நொறுக்குவேன், கொன்றும் வீசுவேன் எனத் திரியும் காவல்துறையும்,
உழைக்கும் மக்கள் மட்டும் சட்டத்தின் படி நடந்து கொள்ள வேண்டும் என நீதி போதனை செய்கின்றன.
நாம் என்ன செய்யப் போகிறோம்?