பொதுவாக நான் ஆங்கிலக் கட்டுரைகளை வாசிக்க முயல்வதில்லை. ஏனென்றால் என் ஆங்கிலப் புலமையின் உயரம் அவ்வளவு தான். தேவை ஏற்படும் போது மொழிபெயர்ப்புகளை நாடுவதும், கிடைக்காவிட்டால் மொழிபெயர்ப்பு கருவிகளை நாடுவதும் தான் என் வழக்கம். மொழிபெயர்ப்புக் கருவிகள் வழியாக புரிந்து கொள்ள முயல்வது என்பது இடியாப்ப இழைகளை நேர்படுத்தும் திறமையை ஒத்தது.
அண்மையில் ஒரு மொழி பெயர்ப்புக் கட்டுரையை படித்துக் கொண்டிருந்தேன். படித்து முடிக்க முடியாத அளவுக்கு எரிச்சல் வந்தது. அந்த அளவுக்கு மனம்போனபடி, கட்டுரையின் கருத்தை புரிந்து கொள்ள முடியாதபடி சிதைத்து மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. இவ்வளவு மோசமான மொழிபெயர்ப்பையும் இணைய வெளியில் வெளியிட முடியுமா எனும் வியப்பு வந்து போனது. நாம் ஏன் மொழிபெயர்க்கக் கூடாது எனும் துணிவு தலைகாட்டியது. அதன் விளைவே இந்தக் கட்டுரை.
எனக்கு கட்டுரைகளை மொழிபெயர்க்கும் அளவுக்கு ஆங்கிலப் புலமை கிடையாது என்பதை முதலிலேயே ஒப்புக் கொள்கிறேன். எனவே, குறைகளை சுட்டிக் காட்டுங்கள். படித்தபின் உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சிகளை அப்படியே வெளிப்படுத்துங்கள். அது எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் பரவாயில்லை. வெளிப்படுத்தாமல் நமட்டுச் சிரிப்புடன் நகர்ந்து விடாதீர்கள். அப்படிச் செய்தால், இது போன்ற மொழிபெயர்ப்புகள் தொடரும் என உங்களை எச்சரிக்கிறேன்.
மூலக் கட்டுரை: One Year After Dadri, There are Still No Answers
ஓராண்டுகளுக்குப் பிறகும் பதிலில்லாமல் தொடர்கிறது தாத்ரி
பசுவின் பெயரால் நடந்த மனித கசாப்புக்கு மெய்யாகவே நீதி கிடைத்துவிட்டதா? ஓராண்டுக்குப் பின்னரும் அக்லக்கின் குடும்பம் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருப்பது தொடர்கிறது.
எனக்கு இந்திய நீதி முறையின் மீது நம்பிக்கை இருக்கிறது என்கிறார் கொலை செய்யப்பட்ட அக்லகின் மகன் சர்தாஜ். உங்களது அக்கம்பக்கத்தினர்களால் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் உங்கள் குடும்பத்தினர் மீது முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்ட போது நீங்கள் பீதியடைந்தீர்களா? என்று கேட்கப்பட்ட போதுதான் மேற்கண்ட பதிலைக் கூறினார் அக்லக்கின் மகன். மாடிறைச்சி வைத்திருந்தார் எனும் வதந்தியை முகாந்திரமாகக் கொண்டு நூற்றுக்கும் அதிகமானோர் திரண்ட ஒரு வன்முறைக் கும்பல் அக்லக்கை கிழித்துப் போட்டு சரியாக ஆண்டு ஒன்று கடந்து விட்டது. தற்போது உத்திரப் பிரதேச காவல்துறை அக்லக்கின் வீட்டில் இருந்தது மாட்டிறைச்சி தான் என முடிவு செய்திருக்கிறது. அப்படி முடிவு செய்திருப்பது அக்லக் தன் வீட்டில் பசுவை அறுத்தார் என்பதற்கு ஆதாரமாகாது என்ற போதிலும் கூட அக்லக்கின் குடும்பம் பதட்டத்திலேயே இருந்து கொண்டிருக்கிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்ட செயற்பாட்டாளர் சலீம் பைக் என்னிடம் கூறும் போது, மாட்டுத் தொழிலில் ஈடுபடும் முஸ்லீம்கள் ஒரு மாநிலத்திலிருந்து வேறொரு மாநிலத்துக்கு மாடுகளை கன்றுகளை அனுப்பும் போது தகுந்த அரசு சான்றிதழ்கள் இருந்த போதிலும் பசு பாதுகாப்பு படைகளால் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுவதையும், தாக்கப்படுவதையும், பணம் கேட்டு மிரட்டப்படுவதையும் தான் ஆவணமாக பதிவு செய்து வைத்திருப்பதாக கூறினார்.
மாடுகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு கொண்டு செல்லப்படும் போது பசு பாதுகாப்பு படையினரால் பிடித்து கௌசாலா வில் ஒப்படைக்கப்படும் சில வழக்குகளை நான் கவனித்துப் பார்த்திருக்கிறேன். உரிய ஆவணங்களை சரிபார்த்து காவல்துறை கௌசாலா விலிருந்து மாடுகளை விடுவிக்குமாறு ஆணை வழங்கிய பிறகு அவற்றில் சில மாடுகள் இறந்து விட்டதாகவோ, காணாமல் போய் விட்டதாகவோ கூறி மீதமுள்ளவை மட்டுமே உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. பெரும்பாலான முஸ்லீம் கால்நடை வியாபாரிகளுக்கு, அவர்களிடம் பேசி அல்லது சட்ட வழிமுறைகளைக் காட்டி தங்களிடமிருந்து பறிக்கப்பட்டதை திரும்பப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அறிவுக் கூர்மையோ, திறனோ இருப்பதில்லை. கால்நடைகள் எப்படி இறந்து போகின்றன அல்லது காணாமல் போகின்றன என்பது ஒன்றும் ரகசியம் அல்ல.
மொரதாபாத் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வு, எளிய பொருளாதார பின்னணி கொண்ட ஒருவன் தன் தங்கையின் திருமணத்திற்காக வாங்கிச் சென்ற இறைச்சி மாட்டிறைச்சியா என போலீசுக்கு சந்தேகம் வந்ததைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் அந்தப் பெண்ணின் திருமணமே தள்ளிப் போனது.
பசுவின் மீதான பாதுகாப்பு எனும் போர்வையில் வன்முறை நிகழ்வுகள் அதிகரித்ததினால் தூண்டப்பட்ட வெறுப்புணர்வு தான் அக்லக் மீதான குரூரமான தாக்குதல் என்கிறார் சலீம் பைக்.
இவை விழிம்பு நிலை மனிதர்களின் உரிமைகளைக் காக்கும் பொருட்டு மனித உரிமை ஆணையம் போன்ற அமைப்புகளின் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்கிறார். குறிப்பாக, இது போன்ற தாக்குதல்கள் மீண்டும் நடக்காத வண்ணம் உறுதிப்படுத்தப் பட வேண்டும் என்கிறார்.
அவர் தாத்ரி தாக்குதல் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒன்பது கேள்விகள் அடங்கிய மனுவை பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ளார். தாத்ரி தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு அனுப்பப்பட்ட விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளில் அவர் தேடினார். மத்திய மாநில அரசு சார்ந்த மற்றும் அரசு சாரா இன்னும் காவல்துறை, உளவுத்துறை உயரதிகாரிகளின் இழப்பீட்டு விபரங்களினூடாக அமைதி நடவடிக்கைகளை தேடினார்.
தொடர்ந்து அவர், 2015 அக்டோபர் 15 ல் பதிவு செய்யப்பட்டதில், பல்வேறு கமிசன்களின் முதன்மையான விசாரணைகளிலிருந்து கிடைத்த பதில்கள் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கின்றன. உத்திரப் பிரதேச மாநில மனித உரிமை கமிசன் எங்களுக்கு தாத்ரி தாக்குதல் குறித்து எந்த முறையீடும் வரவில்லை என்கிறது. மட்டுமல்லாது, தாத்ரிக்கு அனுப்பபட்ட விசாரணைக் குழுவின் நடவடிக்கைகளும் பூச்சியமாகவே இருக்கிறது. மிகவும் இன்றியமையாத ஏழு கேள்விகளுக்கான பதில், உங்கள் மீதமுள்ள கேள்விகளுக்கான பதில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட தகவல்களில் இருக்கிறது எனும் வெற்றுச் சொற்களாகவே இருக்கிறது.
தேசிய மனித உரிமை கமிசனின் சட்டப் பிரிவிலிருந்து கிடைத்த ஒற்றைப் பக்க பதில் மட்டும் கொஞ்சம் பரவாயில்லை. உலக அளவில் விவாதிக்கப்பட்ட ஒரு நிகழ்வுக்கு, தாத்ரியிலிருந்து ஒன்றரை மணி நேர பயண தூரத்தில் இருக்கும் சிறுபான்மையினருக்கான தேசிய கமிசனினிலிருந்து ஐந்தரை பக்க பதிலை பெறுவதற்கு ஒன்றரை மாதம் எடுத்துக் கொண்டதை எப்படி புரிந்து கொள்வது?
முதல் அமைச்சரின் அலுவலகத்திலிருந்து வந்த பதிலிலிருந்து நான் அறிந்து கொண்டது என்னவென்றால், (அதுவும் முதல் மேல் முறையீட்ட பதிவு செய்த பிறகு தான் வந்தது) 2015 டிசம்பர் 3ம் தேதி இயற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட விதி எண் 4 (2) (v) ன் படி நீங்கள் கோரும் தகவல் மிக நீண்ட தகவல்களை உள்ளடக்கியதாகவும், தொகுப்பற்ற விபரங்களாகவும், திசைதிருப்பும் வண்ணமும், பொது நலனுக்கு ஊறு விளைவிக்கும் படியும் இருக்கிறது. இது தான் அவர்களின் பதில். வேறில்லை. ஆனால், இதில் வருத்தத்துக்குறிய விசயம் என்னவென்றால் அந்த விதியின் தொடக்கத்தில் இந்த தேதிக்கு முன்னர் கேட்கப்பட்ட விபரங்களுக்கு இது பொருந்தாது என்றும், அந்த தேதிக்கு முன்னர் இருந்த விதிகளின் படி குறைவாக பதிலளிக்கவோ, பல்வீனமானது என நிராகரிக்கவோ கூடாது என்று இருப்பதை கவனிக்க மறுத்தது தான். முதலமைச்சர் அலுவலகம் அக்லக்கின் தாக்குதல் குறித்த இன்றியமையாத அந்த ஒன்பது கேள்விகளில் எந்த ஒன்றுக்கும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வகுப்புவாதச் சூழல், தண்டனை, இழப்பீடுகளை கோருவதாக இருக்கிறது எனும் பொருந்தாத முறையற்ற வாதத்தைக் கொண்டே அந்த மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்பதே என்னுடைய புரிதல்.
இப்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரங்களை கேட்பது ஒரு அதிசயத்தை விட்டுச் சென்றிருக்கிறது. பல்வேறு கமிசன்கள் அலுவலகங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் தொடங்கி முதல்வர் அலுவலகம் வரை இந்த விசயத்தை வெகு சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது இந்த விசயம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்று கருதுகிறார்கள்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 48வது பகுதியில் மாநிலக் கொள்கைகளுக்கான நேரடியான பிரிவில் வேளாண்மை, கால்நடை வளர்ப்புக்கான அமைப்புகள் எனும் தலைப்பில் மாநிலங்கள் வேளாண்மைக்கும், கால்நடை வளர்ப்புக்கும் நவீன, அறிவியல்பூர்வமான முறையில் ஊக்கம் அளிக்க வேண்டும். குறிப்பாக, இனப்பெருக்க முறையை மேம்படுத்தி பரவலாக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் மாடுகளை கறவைப் பசுக்களை கன்றுகளை வெட்டாமல் பாதுகாக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இப்போதைய காலத்துக்கு பொருத்தமானது தானா? (மாடுகளை பராமரிப்பதின் முதன்மையான நோக்கமே விவசாயத்துக்கு பயன்படுத்துவது தான். ஒருபக்கம் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கேற்ப இயந்திரமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதும், மறுபக்கம் விவசாயத்தையே திட்டமிட்டு அழித்துக் கொண்டிருக்கும் போதும் மாடுகளைப் பரவலாக்குவது என்பதன் பொருள் என்ன? – மொ.ர்)
இந்தியாவில் மாடுகள் அறுக்கப்படுவது குறித்த சொல்லாடல் அரசியல் சட்டத் தளங்களில் இரகசியமானதாக ஒன்றும் இல்லை. விவசாயச் சமூகத்தில் மாடுகளின் பங்களிப்பு என்பதில் எருதுகளுக்குறிய இடம் தெளிவாகக் அறியப்பட்டிருக்கிறது. எவ்வாறாயினும் தேர்தல் அண்மிக்கும் பொழுதுகளில் மக்களின் பொதுக்கருத்தாக தாயாக உருவகிக்கப்பட்டு மதவாத உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றன. செய்தி ஊடகங்களும் பிரியாணி என்பது போல் உருவகத்தில் குறிப்பிட்டு மக்களின் உணர்வுகளைத் தூண்டி, மாட்டுக்கறி வாங்கினாலோ, வைத்திருந்தாலோ, உண்டாலோ அல்லது அவ்வாறு செய்ததாக ஐயம் ஏற்பட்டாலோ, அதுவே பொதுவெளியில் தாக்கி கொடுமைப்படுத்தும், கொல்லும் அளவுக்கு கொண்டு செல்கின்றன.
உனாவில் நடந்த நிகழ்வு அரசியலமைப்பு சாசன உரிமைக்கான, அடிப்படை சுதந்திரத்துக்கான வன்முறையற்ற போராட்டமாக உருமாறியது. அதுவும் இது போன்ற தாக்குதல்களுக்கு இலக்காகும், இதுவரை ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களே முன்னெடுத்துச் சென்ற போராட்டமாகியது.
இந்த வாரம் அக்லக் மீதான தாக்குதலின் முதல் ஆண்டு நிறைவு வாரம். கோமாதாவை இழிவுபடுத்துவது, சட்டத்தை மீறுவது என காரணம் கூறி பல வன்முறை நிகழ்வுகள் அக்லக்கை தொடர்ந்து நடந்தேறிக் கொண்டுள்ளன. இது போன்ற வன்முறைகளுக்கு எதிராக காலங்கடந்த வெற்று அறிக்கைகள் தான் அதிகாரத்திலிருந்து பதிலாக கிடைக்கிறது என்பது ஓர் அதிசயம் தான். அதிகாரத்தின் பல்வேறு மட்டங்களின் இந்த தோற்றுப் போன நிலை இன்னும் அதிகமதிகம் மக்கள் கொல்லப்படுவதற்கு முன் தன்னிறைவடையுமா?
Superb
சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்கிற தகுதியும் தற்பொழுது தங்களுக்கு வந்துவிட்டது.