அம்பேத்கர், குஹா, தமிழ் இந்து, சாதியம்: ஏதாவது புரிகிறதா?

ambedkar_002

சாதியப் பிரச்சனைக்குத் தீர்வு: புத்தர் போதாது, அம்பேத்கரும் போதாது, மார்க்ஸ் அவசியத் தேவை எனும் நூல், ரங்கநாயகம்மா என்பவர் எழுதி கொற்றவை தமிழில் மொழி பெயர்த்து அண்மையில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் மீதான விமர்சனம் எனும் பெயரில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரல்கள் வரிசையாக வலம் வந்து கொண்டிருக்கிறதோ என்று ஐயுறும் வண்ணம் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அம்பேத்கர் மீதான விமர்சனம் மெல்ல மார்க்ஸுடனான ஒப்பீடாக மாறியது. பின் அம்பேத்கரா மார்க்ஸா என்று உருவெடுத்தது. தொடர்ந்து அது இன்று தலித்தியமா? மார்க்ஸியமா? என சென்று கொண்டிருக்கிறது.

பொதுவாக தலித்தியம் என்பது பின்நவீனத்துவவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட மார்க்ஸியத்துக்கு எதிரான ஒரு கோட்பாட்டு முயற்சி. அந்த அடையாள அரசியல் ஓட்டுக் கட்சிகளாக மாறி சீரழிந்த நிலை ஒருபக்கம் இருந்தாலும், ஓட்டுக்கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு மார்க்ஸியமும் தலித்தியமும் அதிகம் பிரிவில்லாமலேயே பயணப்பட்டு வந்திருக்கிறது.

இந்த பின்னணியிலிருந்து பார்க்கும் போது, அந்த நூலும் அதனைத் தொடர்ந்த விவாதங்களும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவையோ என்று மேலெழும் எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை. இன்றியமையாமல் இணைந்தே இருக்க வேண்டிய, இணைந்தே இருக்க வேண்டிய சமூகத் தேவை கொண்ட மக்களை பிளவுபடத் தூண்டும் எதனையும் மீளாய்வு செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றும் இருக்க முடியாது. மார்க்ஸோ, அம்பேத்கரோ யாரும் ஒளிவட்டம் பொருந்தியவர்களோ, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களோ அல்லர். ஆனால், சூழல் என்னவாக இருக்கிறது?, அவ்வாறாக முன்தள்ளுபவர்களின் நோக்கம் என்னவாக இருக்கிறது? என்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டும். அவ்வாறல்லாமல், தூண்டல்களுக்கு ஏற்ப எதிர்வினையாற்றிக் கொண்டே செல்வது எதிரிகளின் நோக்கங்களுக்கு துணை போகும் நடவடிக்கைகளாகவே அமையும்.

இந்த சூழலில் தான் கடந்த ஞாயிறன்று (16.10.2016) தமிழ் இந்து நாளிதழில் இராமச்சந்திர குஹா எழுதி சாரி சுருக்கமாக தமிழில் மொழிபெயர்த்த கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. அம்பேத்கர் மதம் மாறிய 60 ஆம் ஆண்டு நினைவாக அந்தக் கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது. அம்பேத்கரின் பௌத்தம் செழித்திருந்தால் இந்தியா எப்படி இருந்திருக்கும்? எனும் அந்தக் கட்டுரையின் உட்கிடை என்ன?

அம்பேத்கர் பெருந்திரளான மக்களுடன் பௌத்த மதத்துக்கு மாறினார், அவ்வாறு மாறுவதை ஊக்குவித்தார், பார்ப்பனிய மதத்தின் சமூகக் கொடுமைகளுக்கு எதிரான தீர்வாக அதைக் கொண்டிருந்தார் என்பவை வரலாறு. அதில் மார்க்ஸியர்களுக்கு உடன்பாடு இருக்கிறதா என்பது வேறு விசயம். ஆனால், இந்தக் கட்டுரை முன்வைப்பது அம்பேத்கர் மதம் மாறியதைத் தொடர்ந்த ஒரு கற்பனை. இப்படி ஒரு கற்பனையை, அந்தக் கற்பனையையே வாசகர் மனதில் இருத்தும் மைய விசையாக கொள்ள வேண்டிய தேவை என்ன என்பதே கேள்வியாக இருக்கிறது.

அம்பேத்கர் மதம் மாறிய ஒன்றரை மாதத்தில் மரணமடைந்து விடுகிறார். அவ்வாறன்றி இன்னும் ஒரு பத்தாண்டுகள் அவர் மண்ணில் வாழ்ந்திருந்தால், அவரின் பௌத்த ஆய்வுகள் மூலம் பல லட்சக் கணக்கான, கோடிக்கணக்கான மக்கள் பௌத்தத்திற்கு மாறி இருப்பார்கள். அதன் மூலம் ஒரு சமூக மாற்றமே நிகழ்ந்து, பார்ப்பனிய மதம் தன் வர்ணாசிரமக் கொள்கைகளையே கைவிட்டிருக்கும் என்றெல்லாம் விரிகிறது கட்டுரையாளரின் கற்பனை.

எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர் ஒருவரின் கற்பனை அல்லது ஒரு வரலாற்று நிகழ்வை தொடர்ந்து செல்லும் ஊகம் இப்படி உள்ளீடற்ற ஒன்றாக இருக்க முடியுமா? சாதியப் படிநிலை என்பது பார்ப்பனிய மதத்தின் அடிப்படை. அது இல்லையென்றால் பார்ப்பனிய மதமே இல்லை. தன் அடிப்படையையே கைவிட்டுவிட்டு அந்த பார்ப்பனிய மதம் எதை எடுத்துக் கொள்ளும்?

சாதியப் படிநிலைகளால் உருவான சமூகக் கொடுமைகள் ஒரு தனி மனிதன் இன்னொரு தனி மனிதன் மீதான ஒடுக்குதல் மட்டுமா? அது சமூகக் கொடுமை. பண்பாடு, கலாச்சாரம், அன்றாட பழக்கவழக்கங்கள், சிந்தனை முறை, உழைப்பின் வடிவம், மீற முடியாத சட்ட ஒழுங்குகள் என அனைத்தையும் உள்ளடக்கிய சமூகக் கொடுமை. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வந்திருக்கும் சமூகக் கொடுமை. இவை மதம் மாறுவதால் தீர்ந்து விடும் என்பது மதவாதப் பிதற்றல். சாதியப் படிநிலை வழியாக இருக்கும் சமூகக் கொடுமை, தீண்டாமை என்பதை அதன் கொடூர எல்லைகளோடு புரிந்து வைத்திருக்கும் யாருக்கும் இப்படி ஒரு அசட்டுக் கற்பனை தோன்றியிருக்க முடியாது.

ஒரு வரலாற்று ஆய்வாளர் ஒரு வரலாற்று நிகழ்வின் நீட்சியை தன் மனக் கண்ணில் உருவாக்கிப் பார்க்கிறார் என்றால் எவற்றையெல்லாம் அவர் அடிப்படைகளாக கொண்டிருக்க வேண்டும்? எதனை அவர் இல்லாமல் போகும் என முடிவு செய்கிறாரோ அதன் முழுமையான வடிவம், அதன் இன்றியமையாத தன்மை, அது நீங்குவதால் அந்த மதத்தில் என்ன விளைவுகள் ஏற்படும்? அதனை அந்த மதம் எவ்வாறு எடுத்துக் கொள்ளும்? போன்றவற்றை ஒருபுற அடிப்படைகளாகவும்; மக்களின் மனோநிலை, சமூக ஒடுக்குமுறைகளுக்கு இதுகாறும் அவர்கள் காட்டிவந்த எதிர்ப்பு, அல்லது தவிர்க்கவியலாமல் சகித்து வந்த தன்மையின் அளவு, இந்த மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் எப்படி எதிர் கொள்வார்கள் போன்றவற்றை மறுபுற அடிப்படைகளாகவும் வைத்து சிந்தித்துப் பார்த்தால் மட்டுமே ஒரு வரலாற்று ஆய்வாளருக்கான உள்ளீடு கிடைக்கும். மாறாக கிரிக்கெட் விளையாட்டில் 10 ஓவரில் இவ்வளவு ஓட்டங்கள் அடித்தால் ஐம்பது ஓவரில் எவ்வளவு ஓட்டங்கள் அடிப்பார்கள் என்று கணக்கிடுவதைப் போல் கணக்கிட்டால் அது வரலாற்றுப் பதிவாக இருக்காது. மாறாக, உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கும்.

அப்படி என்ன பிரச்சனை இருக்கிறது அந்த வெற்று கற்பனையில்? சாதியப் படிநிலை தீண்டாமை எனும் சமூகக் கொடுமை எந்த அடிப்படையில் மேல் தங்கியிருக்கிறது என்பதை காண மறுக்கும் அல்லது திசை திருப்பும் வேலையை அந்த வெற்றுக் கற்பனை செய்திருக்கிறது. தலித்தியம் எனும் அடையாள அரசியலின் அடிப்படையும் அது தான். சாதியப் படிநிலைக் கொடுமைகள் என்பது ஒட்டுமொத்த சமூக ரீதியிலான ஒடுக்குமுறையாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இதை தலித்துகள் மட்டுமே ஒருங்கிணைந்து வெற்றி கண்டுவிட முடியும் என்பதே முழுமையற்ற பார்வை. எல்லா படிநிலை மக்களையும் ஒருங்கிணைத்துச் செய்ய வேண்டும். அது வர்க்க அடிப்படையில் மட்டுமே சாத்தியம் என்பதை மறுக்கும் பார்வை அது.

மார்க்சியம் வர்க்க அடிப்படையை முதன்மையாகக் கொண்டே பிரச்சனைகளை தீர்க்க முயல்கிறது. ஏனென்றால் இங்கு இருக்கும் அனைத்துப் பிரச்சனைகளும் வர்க்க அடிப்படை கொண்டவைகளே. அதனால் தான் மார்க்சியம் வர்க்க ஒற்றுமையைக் கோருகிறது. வர்க்க ஒற்றுமையைக் குலைக்கும் நோக்கம் கொண்ட அனைத்தும் எதிரிகளுக்கு உரமூட்டுவதாகவே முடிகின்றன.

இந்தியத் துணைக்கண்டத்தில் சாதியப் படிநிலைக் கொடுமைகள் இவ்வளவு காலம் தொடர்ந்து நீடித்திருப்பதற்குக் காரணமே அது உற்பத்தி முறையுடன் கொண்டிருக்கும் பிணைப்பு தான். உற்பத்தி முறையை மாற்றியமைக்கும் போராட்டத்தின் வழியாகத்தான் இந்த சமூகக் கொடுமையை தீர்க்க முடியும். இந்த புரட்சிகரமான மாற்றத்தைத் தான் அந்தக் கட்டுரையின் வெற்றுக் கற்பனை திசை திருப்பி, மத மாற்றத்தின் மூலம் இதை சாதித்துவிட முடியும் என மக்களின் மனதில் விதைக்க முயல்கிறது. எவ்வளவு தீங்கான எண்ணம் இது.

அண்மைக்கால விவாதங்கள் அனைத்துமே மார்க்சியத்தையும், தலித்தியத்தையும் தனித்தனியாக பிரிப்பதையே குவி மையமாக கொண்டு இயங்குகின்றன. அண்மையில் ஜெ.என்.யு பல்கலைக் கழக தேர்வில் அனைத்து இடங்களையும் பிடித்த இடது சாரிகளை குறிப்பிடாமல் விட்டுவிட்டு இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வென்ற ஏ.பி.வி.பி யினரின் கொண்டாட்டங்களை வண்ணப் படத்துடன் வெளியிட்ட தமிழ் இந்து நாளிதழுக்கு, இவ்வாறான கட்டுரைகளை வெளியிடுவதில் வேறெதுவும் நோக்கம் இருந்து விட முடியுமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

5 பதில்கள்

  1. ஏதோ குறை இருப்பதாக உள்மனம் கூறுகிறது. ஆனால் அதை எப்படி கூறினாலும் நீங்கள் உங்கள் வாதத்திறமையால் நான் கூறுவதை தவறு என்று கூறிவிடுவீர்கள். ஆகையால் நான் எதுவும் கூறாமலேயே இருந்துவிடுகிறேன்.

  2. நண்பர் அல்தாஃப்,

    இலக்கணத்தில் வேண்டுமானால் வழுவமைதி இருக்கலாம். கருத்தில் இருப்பது பெரும்பிழையை உருவாக்கி விடும். கூறினால் நானும் தெரிந்து கொள்வேன் அல்லவா?

  3. அல்லது குழு மனப்பான்மை வாழுகின்ற மக்களுக்குள் தானாகவே உருவான ஒன்றாக இருக்குமோ — ? செய்யும் தொழில் சார்ந்து ஏற்பட்டதா … ? வாழ்ந்த இடம் சார்ந்ததா …. ? இன்று ” தான் இந்த சாதி இன்று கூறுபவனின் ” நிரந்தர ஆதாரம் காட்டமுடியுமா … ? கலப்பில்லாத ஏதாவது ஒரு சாதியை அடையாளப்படுத்தும் ஆசாமி யாராவது இருக்கிறார்களா … ? இன்று எதிரும் புதிருமாக இருக்கும் சாதியினர் — முன்னொரு காலத்தில் ஒரே சாதியினராக இருந்திருக்க சாத்தியக் கூறுகள் உண்டா — இல்லையா … ? இன்னும்நிறைய கேள்விகள் சாதியை சுற்றி இருப்பதற்கு — பதில் அளிக்க கூடிய சாதி வெறியன் இருக்கிறானா … ?

    ஒரே சாதியில் உள்ள தலைமைக்கும் — தொண்டனுக்கும் உள்ள ” வர்க்க கோளாறுபற்றி ” சிந்தித்தவன் உண்டா … ? சாதி தலைமை பயன்படுத்தும் வண்டி – வாகன — உடை — உறைவிடம் — உணவு — வசதி — வாய்ப்பு போன்ற அத்தியாவசியங்கள் அடியில் உள்ளவனும் பெற்று இருக்கிறானா .. ? இந்த வித்தியாசங்கள் எதனால் … ? இவற்றையெல்லாம் களைய முற்படுகின்ற ” விஞ்ஞான உத்தியே ” மார்க்சியம் — தற்காலத்தில் ஒரே சாதியில் — சமூகத்தில் — ஆட்சியில் — வாழ்க்கைமுறையில் இன்னும் பலவற்றில் உள்ள வேற்றுமைகளை துடைத்து ஏறிய — ஒரு வழி தேவை தானே — அது எதில்இருக்கிறது — தலித்தியத்திலா — மதமாற்ற செயலிலா — மார்க்கசியத்திலா என்பதை சிந்தித்தால் — ஒரு விடை கிடைக்க வாய்ப்புள்ளது — அப்படித்தானே …. ?

  4. அல்லது குழு மனப்பான்மை வாழுகின்ற மக்களுக்குள் தானாகவே உருவான ஒன்றாக இருக்குமோ — ? செய்யும் தொழில் சார்ந்து ஏற்பட்டதா … ? வாழ்ந்த இடம் சார்ந்ததா …. ? இன்று ” தான் இந்த சாதி இன்று கூறுபவனின் ” நிரந்தர ஆதாரம் காட்டமுடியுமா … ? கலப்பில்லாத ஏதாவது ஒரு சாதியை அடையாளப்படுத்தும் ஆசாமி யாராவது இருக்கிறார்களா … ? இன்று எதிரும் புதிருமாக இருக்கும் சாதியினர் — முன்னொரு காலத்தில் ஒரே சாதியினராக இருந்திருக்க சாத்தியக் கூறுகள் உண்டா — இல்லையா … ? இன்னும்நிறைய கேள்விகள் சாதியை சுற்றி இருப்பதற்கு — பதில் அளிக்க கூடிய சாதி வெறியன் இருக்கிறானா … ?

    ஒரே சாதியில் உள்ள தலைமைக்கும் — தொண்டனுக்கும் உள்ள ” வர்க்க கோளாறுபற்றி ” சிந்தித்தவன் உண்டா … ? சாதி தலைமை பயன்படுத்தும் வண்டி – வாகன — உடை — உறைவிடம் — உணவு — வசதி — வாய்ப்பு போன்ற அத்தியாவசியங்கள் அடியில் உள்ளவனும் பெற்று இருக்கிறானா .. ? இந்த வித்தியாசங்கள் எதனால் … ? இவற்றையெல்லாம் களைய முற்படுகின்ற ” விஞ்ஞான உத்தியே ” மார்க்சியம் — தற்காலத்தில் ஒரே சாதியில் — சமூகத்தில் — ஆட்சியில் — வாழ்க்கைமுறையில் இன்னும் பலவற்றில் உள்ள வேற்றுமைகளை துடைத்து ஏறிய — ஒரு வழி தேவை தானே — அது எதில்இருக்கிறது — தலித்தியத்திலா — மதமாற்ற செயலிலா — மார்க்கசியத்திலா என்பதை சிந்தித்தால் — ஒரு விடை கிடைக்க வாய்ப்புள்ளது — அப்படித்தானே …. ?

  5. மேலே உள்ள பின்னூட்டத்தில் ” சாதிகள் என்கிற பிரிவு அல்லது ” என்பதை முதல் வார்த்தையாக இணைத்து படிக்கவும் … நன்றி

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: