அன்பார்ந்த தொழிலாளர்களே!
தீபாவளி எதற்காக கொண்டாடப்படுகிறது?
மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒரு அவதாரத்தின் போது நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்டதைக் கொண்டாடுவதே தீபாவளி என்கிறது, வேதமதமாகிய இந்து மதம்.
யார் இந்த நரகாசுரன்?
இரண்யாக்சன் என்றொரு ராட்சசன் பூமியை பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒழித்து வைத்து விட்டான். பூமாதேவியை மீட்க மகாவிஷ்ணு பன்றியாக (வராக அவதாரம்) உருவெடுத்து கடலுக்குள் புகுந்து பூமியை மீட்டெடுத்தார். அப்போது விஷ்ணு பூமாதேவியின் மீது காமமுற்றதால், நரகாசுரன் பிறந்தானாம். அவன் தேவர்களைக் கொடுமை செய்த அசுரனாம். இதனைத் தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிடவே அவர் கிருஷ்ண அவதாரத்தின் போது நரகாசுரனைக் கொன்றாராம். கொல்லப்படும் போது, தனது மரணத்தை கொண்டாடும்படி நரகாசுரன் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கொண்டாடப்படுவது தான் தீபாவளியாம்.
பகுத்தறிவைக் கேலி செய்கிறது தீபாவளிப் புழுகு!
உருண்டையான பூமியைச் சுருட்ட முடியுமா? அப்படியே சுருட்டிய பூமியை கடலுக்குள் ஒழிப்பதென்றால் கடல் என்ன அந்தரத்திலா இருக்கும்? பூமி என்பதே கடலும் நிலமும் சேர்ந்தது தானே? ஒரு மனிதன் பன்றியாக முடியுமா? மனிதனுக்கும் பூமிக்கும் குழந்தை பிறக்க முடியுமா? முடியாது என்று சொல்கிறது உங்களது பகுத்தறிவு. பகுத்தறிவை புழுகுமூட்டைகளால் மழுங்கடிக்கிறது வேதமதம்!
புழுகுமூட்டைக்க்குப் பின்னே ஒழிந்திருக்கும் சதி!
நரகாசுரனின் கொலைக்குப் பின்னே மறைக்கப்பட்ட வரலாறூம், திட்டமிட்டு பின்னப்பட்ட சதியும் ஒழிந்து இருக்கிறது. நரகாசுரனின் கதை வெறும் தசாவதாரக் கதையல்ல. மத்திய ஆசியாவிலிருந்து நாடோடிகளாக இந்தியாவுக்கு ஆரியர்கள் வந்த போது இந்த மண்ணின் பூர்வகுடிகளை வென்றடக்க முயன்றார்கள். சுரா என்கிற மதுவைக் குடித்த ஆரியர்களை சுரர்கள் எனவும், மது குடிக்காத மண்ணின் மைந்தர்களை அசுரர்கள் என்றும் அடையாளப்படுத்தியது ஆரியம். ஆரிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய மண்ணின் மைந்தர்களைக் கொன்றும், போர்களில் வென்றும் ஆரிய வந்தேறிக் கூட்டம் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. படுகொலை செய்யப்பட்டதன் குறியீட்டுப் பதிவே புராணங்களும் இதிகாசங்களும். மண்ணின் மைந்தர்கலான இராவணன், மகிஷாசுரன், இரணியகசிபு, நரகாசுரன் போன்றோரை சதிகள் செய்து கொன்றது ஆரியக் கும்பல். ஒவ்வொரு இனக் குழுவையும் தனித்தனியே வஞ்சகத்தால் ஆரியர்கள் தோற்கடித்ததைச் சொல்லுபவை தான் பத்து அவதாரக் கதைகளும்.
வென்றவர்கள் எழுதிய வரலாறு!
மண்ணின் மைந்தர்களது கொலையைக் கொண்டாடவும் செய்தது. அவ்வாறான கொண்டாட்டங்கள் தான் இராம்லீலா, விஜயதசமி, தீபாவளி போன்றவை. இந்த கொண்டாட்டங்களை நியாயப்படுத்துவதற்காக மண்ணின் மைந்தர்களை அயோக்கியர்களாக, கொடூரர்களாக, பெண்பித்தர்களாக, கொலை வெறியர்களாக சித்தரிக்கின்றன புராணங்கள்.
கொல்லப்பட்டவர்களது உருவங்களை நினைவுபடுத்திப் பாருங்கள். கருத்தும், பெருத்தும் கிடக்கின்றன. உடல் முழுவதும் ரோமங்கள் மண்டிக் கிடக்கின்றன. தலையில் கொம்பு அச்சமூட்டுகின்ற பற்கள், சிவந்த கண்கள் இது தான் அசுரர்களின் உடலமைப்பு. இந்த உடலமைப்பு உழைக்கும் மக்களது உடலமைப்பு அல்லவா? கொன்றவர்களது உருவங்கள் எப்படி இருக்கின்றன. சிவந்த மெல்லிய உடல் நளினமான பேச்சு, நாகரீகத்தின் உறைவிடம். கார்ப்பரேட்டுகளின் தோற்றமும் இவ்வாறு தானே இருக்கிறது? தோற்றது நாம் வென்றது ஆரியக் கும்பல் என்கிற உணர்வு உங்களுக்கு எழவில்லையா? ஒடுக்கப்பட்டவன் என்கிற கோபம் கொப்பளிக்கவில்லையா உங்களுக்கு?
முப்பாட்டன் கொலையை கொண்டாட முடியுமா?
தமிழகத்தில் நாயக்க மன்னர்கள் படையெடுத்து ஆட்சியை நிலைநாட்டியதற்கு முன்பு வரை இங்கு தீபாவளி கொண்டாடப்பட்டதில்லை. அதற்குப் பின்னர் கூட பார்ப்பனர்களும், சில உயர்ஜாதியினரும் தீபாவளியைக் கொண்டாடினர். அப்போதெல்லாம் உழைக்கும் மக்களது குடும்பத்தில் என்ன நடந்தது என்பதை நினைவுகூர்ந்து பாருங்கள்?
தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குழிப்பார்களே அதன் காரணம் என்ன? எப்போதெல்லாம் தமிழர்கள் எண்ணெய் தேய்த்துக் குழிப்பர்? ஒருவர் இறந்தால் அவர் நினைவாக இதைச் செய்வோம். அப்படியானால் நரகாசுரன் நமது முப்பாட்டன் என்பதால் தான் நமது முன்னோர் தீபவளி தினத்தன்று எண்ணெய் தேய்த்துக் குழித்து, தங்கள் முப்பாட்டன் நரகாசுரனை நினைவுகூர்ந்து வந்தனர். இதுவே காலப் போக்கில் மறைந்து கொண்டாட்டமாகி விட்டது. நம் குடும்பத்தில் ஒருவரைக் கொன்று விட்டு அவரை அயோக்கியன் எனச் சித்தரித்துப் புராணம் எழுதி நம்மையே அதைக் கொண்டாட வைத்தது நயவஞ்சகம் இல்லையா?
ஏன் இந்த நயவஞ்சகம்?
ஆதிக்க வரலாற்றை மாற்றி எழுதி இருக்கிறது ஆரியம். பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஆபாசக் கதைகளைச் சொல்லி, அறிவியக்கத்தை மூடப் புராணம் தோற்கடிக்கிறது. இதை திட்டமிட்டுச் செய்யும் சிந்தனைக் குழாம் – பார்ப்பனியம் – அதன் கலாச்சாரம் தான் உயர்வானதென்றும் பிறரின் கலாச்சாரம் இழிவானதென்றும் நிறுவ முயல்கிறது. வந்தேறிகள் மண்ணின் மைந்தர்களை அடக்கியும், இழிவுபடுத்தியௌம் வருகின்ற அயோக்கியத்தனத்தை புனிதப்படுத்தி வருகிறது. இதைக் கொண்டாடுவதானது, ஆதிக்கத்தைக் கொண்டாடுவதாகும். ஒடுக்கு முறையைக் கொண்டாடுவதாகும். அவமானத்தைக் கொண்டாடுவதாகும்.
வேறு எதைக் கொண்டாடுவது?
கொண்டாட்டம் என்பதென்ன? நாம் மகிழ்ச்சி அடைவதற்கும், பெருமைப் படுவதற்கும், உற்சாகமடைவதற்கும் எந்த நிகழ்வு நம்மைத் தூண்டுகிறதோ அது தான் கொண்டாட்டம்! எந்த நிகழ்வு நம்மை இழிவுபடுத்துகிறதோ, எந்த நிகழ்வு நம்மை அடக்கியாள்கிறதோ, எந்த நிகழ்வு நாம் வெறுக்கத்தக்கதாக இருக்கிறதோ அதை அவமானம் என்கிறோம்.
8 மணிநேர வேலை உரிமைக்காக ரத்தம் சிந்திய தியாகிகளின் நினைவாக மே தினத்தை போராட்ட தினமாக உயர்த்திப் பிடிக்கிறோம். ஏனெனில், அது நம் உரிமைக் குரலைப் பிரதிபலிக்கிறது.
உழைக்க மட்டும் தெரிந்த அழுக்குச் சட்டைகள் என்று எள்ளி நகையாடப்பட்ட தொழிலாளர்களால் நாட்டை ஆளவும் முடியும், முதலாளித்துவம் உருவாக்கிய வறுமை, நோய் வேலையின்மை போன்றவற்றிலிருந்து மீளவும் முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய ரசிய சோசலிசப் புரட்சி நாள் (1917 நவம்பர் 7) நமக்கு கொண்டாட்ட தினம். ஏனெனில், ரசியப் புரட்சி உலகெங்கும் இருக்கின்ற உழைக்கும் மக்களுக்கும், ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கும் ஒரு நம்பிக்கை ஒளி.
தீபாவளி தமிழனின் பண்டிகையா … ? அசல் தமிழன் கொல்லப்பட்ட நாளை தமிழனே கொண்டாடும் நிலைக்கு அவர்களை தள்ளிய ” கைபர் – போலன் கணவாய் வழியே பிழைக்க வந்த வந்தேறிகள் ” கும்பலின் — சதித்திட்டம் … !
தீபாவளி என்பது வடநாட்டு மார்வாடிகளும் – குஜராத்திகளும் தங்களின் புதுக்கணக்கு ஆரம்பிக்கும் நாள் தான் அது — ” ஆரிய பார்ப்பனர்கள் கட்டவிழ்த்துவிட்ட கற்பனை கதையே ” என்று சைவத் தமிழ் பெரியார் திரு .மறைமலை அடிகள் தனது ” தமிழர் மதம் ” என்ற நூலிலும் — தீபாவளிக்கும் – தமிழருக்கும் – தமிழ் இலக்கியத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அ .கி.பரந்தாமனார் ‘ மதுரை நாயக்க மன்னர் கால வரலாறு ” என்னும் நூலிலும் — இன்னும் பல தமிழறிஞர்கள் தங்களின் நூல்களிலும் கூறியுள்ளனர் ….
வந்தேறி கும்பல்களின் ” அசுரர் அழிப்பு என்கிற வெறியாட்டு கதைகளை ” நம்பி — வீரத் தமிழர்களின் கொலை நாளை கொண்டாடுவது — ஏற்புடையது — அல்ல — அல்ல … !!!
நண்பர் வேதப் பிரகாஷ்,
உங்களுடைய பின்னூட்டங்கள் நீக்கப்படுகின்றன. உங்கள் கருத்து எத்தகையதானாலும் அதை இங்கு உங்கள் வாதமாக முன்வைக்கலாம். அதற்கு துணையாக உங்கள் கட்டுரைகளின் இணைப்பையும் கொடுக்கலாம், தவறில்லை. ஆனால், எதையுமே கூறாமல் இணைப்பை மட்டும் தந்து விட்டுச் செல்வதை ஏற்க முடியாது.
நன்றி