வணக்கம் தோழர்
எது புரட்சி ? எது சீர்திருத்தம் ?
புரட்சியாளருக்கும் சீர்திருத்தவாதிக்கும் என்ன வித்தியாசம் ?
ராஜ்ரம்யா, கேள்வி பதில் பகுதியிலிருந்து
ஜப்பான் ஒரு இரண்டாம் உலக போரில் அனைத்தும் இழந்து விட்டது.அதற்கு காரணம் அமெரிக்கா. பின் ஏன் அமெரிக்கா மூலதனம் அங்கு குவிக்கப்பட்டது அதனை எப்படி அந்த நாட்டு மக்கள் ஏற்று கொண்டர்கள்
குமரன், கேள்வி பதில் பகுதியிலிருந்து
1937ம் ஆண்டின் இந்தி எதிர்ப்பு போரை முன்னின்று நடத்திய பெரியார், 1965ம் ஆண்டின் மாபெரும் இந்தி எதிர்ப்பு போரில் ஆற்றிய பங்களிப்பு பற்றிய தகவல்கள் தெளிவில்லாமல் இருக்கின்றன. அந்தப் போராட்டத்தையே அவர் வசைபாடியதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன. உண்மையில், அப்போராட்டத்தில் பெரியாரின் நிலைப்பாடு மற்றும் பங்களிப்புதான் என்ன?
பிரசன்னா, கேள்வி பதில் பகுதியிலிருந்து
தோழர் பிரசன்னா,
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டு காலகட்டங்களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் போது பெரியாரின் பங்களிப்பு ஒரே மாதிரி இருந்ததில்லை என்பது உண்மை தான். ஆனால் இரண்டின் தன்மையும் ஒன்று தான். அதாவது இந்தித் திணிப்புக்கு எதிராக அவர் ஒரே மாதிரியான நிலைப்பாட்டைத் தான் கொண்டிருந்தார்.
பெரியாரின் கண்ணோட்டம் எப்போதுமே அடித்தட்டு மக்களைச் சார்ந்தே தான் இருக்கும். அடித்தட்டு மக்களின் முதன்மையான பிரச்சனையாக சாதிக் கொடுமைகளையே பார்த்தார். இந்த அடிப்படையில் இருந்து கொண்டு தான் அவர் கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு கொள்கைகளை வந்தடைந்தார். அவரை எதிர்த்தவர்கள் தான் அவரை கடவுள் மறுப்பாளராக முன்னிருத்தினார்கள். நாத்திகத்தை விட சாதி தீண்டாமை ஒழிப்புதான் முதன்மையானது. இந்த அடிப்படையில் தான் கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு அதன் பிறகு கடவுள் இருக்கிறான் என்று பிரச்சாரம் செய்வேன் என்பது போல் பதில் கூறினார். எல்லா பிரச்சனைகளிலும் சாதிக் கொடுமைகளுக்கு எதிரான நிலைப்பாடு தான் அவரை வழிநடத்தியது.
எடுத்துக்காட்டாக மது விலக்கு போராட்டத்தைக் குறிப்பிடலாம். மதுவிலக்கு போராட்டத்தில் இவ்வளவு தீவிரம் காட்ட வேண்டாம் என காந்தி கோரிக்கை விடுத்த போது கூட அதை மறுத்த பெரியார் ஈரோட்டிலிருக்கும் இரண்டு பெண்கள் தான் அதை முடிவு செய்ய வேண்டும் என்றார். ஆனால் ராஜாஜி மது விலக்கை கொண்டு வந்த போது அதை எதிர்த்தார் பெரியார். அதற்கு அவர் கூறிய காரணம், இப்போது மதுவிலக்கை கொண்டு வருவார்கள். பிறகு வருமானம் போதவில்லை என்று கல்விக் கூடங்களை மூடுவார்கள். நம் பிள்ளைகளின் படிப்பு கெட்டுப் போகும். நம் பிள்ளைகள் முன்னேற கல்வி அவசியம் எனவே, மதுவிலக்கை காரணம் காட்டி கல்விக் கூடங்களை இழக்க முடியாது என்றார். இதை எப்படி புரிந்து கொள்வீர்கள்?
திராவிட எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு, வந்தேறி என்று வார்த்தைகளை வைத்துக் கொண்டிருப்பவர்கள் இப்போது பெரியாரை தமிழர்களுக்கு எதிரியாகக் காட்ட 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எதிராகச் செயல்பட்டார் என்று காட்ட முனைகிறார்கள். 1937 இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பிறகு பெரியார் மாறி விட்டாரா? இல்லை. இந்தித் திணிப்பை தொடர்ச்சியாக எதிர்த்து வந்திருக்கிறார் பெரியார்.
1952 ல் மத்திய அரசு நிறுவனங்களின் இந்தி எழுத்துகளை தார் பூசி அழிக்கும் போராட்டத்தை நடத்தினார். 1957 ல் அனைத்து நீதி மன்றங்களிலும் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியே அலுவல் மொழியாக இருக்கும் எனும் அறிவிப்புக்கு எதிராக தேசியக் கொடி எதிர்ப்புப் போராட்டம் நடத்தினார். 1960 ல் ஆதித்தனாருடன் சேர்ந்து இந்திய வரைபடத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்தினார். இந்தி திணிப்பை எதிர்ப்பதில் சமரசம் கொண்டவராகவோ, சளைத்தவராகவோ பெரியார் இருந்ததில்லை. ஆனால் இவை ஏன் 65 போராட்டங்களில் எதிரொலிக்கவில்லை? இதில் தெளிவில்லை என்றாலும் இரண்டு காரணங்களை கூறலாம். முதலாவது, 1965 போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் மாணவர்கள். போராட்டத்தில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் கொல்லப்பட்டார்கள். இரண்டாவது, இந்த போராட்டத்தை திமுக தன்னுடைய ஓட்டரசியல் லாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்கவும் முயன்றது. இந்த இரண்டு காரணங்களையும் விலக்கி வைத்து விட்டு பெரியாரின் நிலைப்பாட்டை பரிசீலிக்க முடியாது.
பெரியாரின் இந்த நிலைபாடு சரியானதா என்பதல்ல இங்கு முதன்மை. வேறு சிறப்பான நிலைப்பாட்டை பெரியார் எடுத்திருக்கலாம். அது அவர் சமூகம் குறித்து என்ன கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தார் என்பதைப் பொருத்தது. ஆனால் அவரின் எதிரிகள் காரணங்களை விலக்கி விட்டு காரியத்தை மட்டும் அவருக்கு எதிராக முன்னிருத்துகிறார்கள். இதை ஏற்க முடியாது.
**************************************************
நண்பர் ராஜ்ரம்யா,
புரட்சிக்கும், சீர்திருத்தத்துக்கும் இடையிலான வித்தியாசம் என்ன? இதைப் புரிந்து கொள்ள புரட்சி என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வது இன்றியமையாதது. ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் நிலவில் இருக்கும் உற்பத்தி முறை தேக்கமடைந்து உற்பத்தி சக்திகளின் முன்னேற்றத்துக்கு தடையாக மாறும் போது மக்கள் திரண்டெழுந்து அந்த உற்பத்தி முறையை நீக்கி விட்டு புதிய உற்பத்தி முறையை ஏற்படுத்துவதற்குப் பெயர் தான் புரட்சி. ஒரு உற்பத்தி முறை சமூகத்தில் நிலவுகிறது என்றால் அதன் பொருள் அந்த உற்பத்தி முறையை பிரதிபலிக்கும் வர்க்கத்தின் மேலாண்மையில் ஒரு அரசு நிலவுகிறது என்பது தான். எனவே, புரட்சி என்பது இருக்கும் அரசுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டம்.
இந்த நோக்கம் இல்லாமல், அதாவது உற்பத்தி முறையை மாற்றும் நோக்கில் இல்லாமல் உற்பத்தி முறையை தக்க வைக்கும் நோக்கிலோ, அல்லது வேறு நோக்கங்களிலோ, போராடும் மக்களை அமைதிப்படுத்தும் விதமாக செய்யப்படும் மாறுதல்கள் சீர்திருத்தங்கள் ஆகின்றன.
எடுத்துக்காட்டாக 1917 புரட்சிக்குப் பின் ரஷ்யா சோவியத் யூனியனாக பரிணமித்ததால் தொழிலாளர்களின் அரசாக இருந்து எட்டுமணி நேர வேலையை கொண்டுவந்தது. அனைவருக்கும் கல்வி வேலை வழங்கியது. இன்னும் பலவாறான மாறுதல்கள் உலகில் முதன்முறையாக செய்யப்பட்டன. இதனைக் கண்ட பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாடுகளில் தொழிலாளர் போராட்டங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தொழிலாளர்களுக்கு அது போன்ற பல சலுகைகளை வழங்கின. இந்தியாவில் அமைக்கப்பட்ட ரேசன் கடைகள் கூட சோவியத் யூனியனைப் பார்த்து செய்யப்பட்ட மாறுதல் தான். சோவியத் யூனியனில் நடைபெற்றது புரட்சி. அனைப் பார்த்து பிற நாடுகள் செய்து கொண்டவை சீர்திருத்தங்கள்.
நுணுக்கமாகப் பார்த்தால் புரட்சியும் சீர்திருத்தமும் ஒன்றுக்கொன்று எதிரான நோக்கங்களைக் கொண்டவை. எனவே, புரட்சியாளனும் சீர்திருத்தவாதியும் வேறு வேறானவர்கள். ஒரு புரட்சியாளன் அன்றைய சமூக நிலையைக் கருத்தில் கொண்டு பொருத்தமான சீர்திருத்தத்தை கோரிக்கையாக வைக்கலாம். இதனால் அதன் புரட்சிகரத் தன்மை மாறி விடாது. ஆனால் ஒரு சீர்திருத்தவாதியிடமிருந்து உற்பத்திமுறை மாற்றம் குறித்த புரிதல் ஏற்படாமல் புரட்சி எண்ணங்கள் ஒருபோதும் ஏற்படாது.
எல்லாமே அரசு பற்றிய புரிதலில் தான் இருக்கிறது. அரசு எப்படி ஏற்பட்டது? அதன் வர்க்கத் தன்மை என்ன? அது எந்த வர்க்கத்தைப் பிரதிபலிக்கிறது? நாம் எந்த வர்க்கத்தைப் பிரதிபலிக்கிறோம்? போன்ற தெளிவு இல்லாத யாரும் புரட்சியாளனாக ஆகிவிட முடியாது. சீர்திருத்தல்வாதியாக ஆவதற்கு இந்த அடிப்படைகள் எதுவும் இல்லாமல் கொஞ்சம் மனிதாபிமானம் மட்டும் இருந்தாலே போதுமானது.
**************************************************
நண்பர் குமரன்,
உங்கள் கேள்விக்கான பதில் உலகப் போர்கள் ஏன் ஏற்பட்டன? என்பதில் இருக்கிறது. முதல் உலகப் போருக்கு ஆஸ்திரிய இளவரசன் பிரான்சிஸ் பெர்னாண்ட் இளவரசி இசபெல்லா ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டதையும், இரண்டாம் உலகப் போருக்கு ஹிட்லரின் இனவெறியையும் காரணமாகக் கூறுகிறார்கள். ஆனால் இரண்டு உலகப் போர்களுமே உலகச் சந்தையை தங்களுக்குள் மறுபங்கீடு செய்ய தொழிற்துறையில் வளர்ந்த நாடுகள் மேற்கொண்ட போட்டியே காரணம் என்பது தான் உண்மை.
இந்த அடிப்படையில் பார்த்தால் இரண்டாம் உலகப் போரின் முடிவில் உலகை மறு பங்கீடு செய்யும் போட்டியில் தோல்வியைத் தழுவிய ஜப்பான், வெற்றி பெற்ற அமெரிக்காவின் பொருளியல் ஆதிக்கத்துக்குள் வந்தது. ஏற்கனவே தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றிருந்த ஜப்பானின் தொழில்துறையில் அமெரிக்க அதிக முதலீடுகளைச் செய்தது.
காலனி நாடுகளைப் பிடித்து வைத்துக் கொள்வது மூல வளங்களைச் சுரண்டவும் தன் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப் படுத்தவுமே. பெரிய அளவில் மூல வளங்கள் இல்லாத ஜப்பானில் தன் தொழில்நுட்பத்தையும், உழைப்பையும் பயன்படுத்திக் கொள்வதற்காக ஜப்பானின் தரகு முதலாளிகளை வெகுவாக வளர்த்தது அமெரிக்கா.
மக்கள் எப்படி ஏற்றுக் கொண்டார்கள்? இந்தக் கேள்வியே பொருளற்றது. எந்த ஒரு நாட்டின் செயலும் மக்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. எல்லா நாட்டிலும் அரசைப் பிரதிபலிக்கும் வெகு சில முதலாளிகளே அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள். இதற்கு ஜப்பான் விதிவிலக்கா என்ன?
ஈவெராமசாமிக்கும் இந்திக்குமான தொடர்பு 1937லுக்கு முன்பிருந்தே இருந்தது. 1920கள்ல ஈரோட்டுல இந்தி பயிற்சி மையத்தை வைத்தார் காந்தி பேச்சை கேட்டு. ஈவெராமசாமி இந்திக்கு எதிரியும் இல்ல, நண்பனும் இல்ல… இந்தி திணிப்பை நிகழ்த்துவது நண்பனா, எதிரியா என்பதை பொறுத்தே ஈவெராமசாமியின் இந்தி ஆதரவு எதிர்ப்பு நிலை இருந்தது. காமராசருக்கு இந்த திமுககாரனுங்க இந்தி போராட்டத்தில் தொந்தரவு தர்ரான்களே என்பதால் தான் ஈவெராமசாமி இந்தி திணிப்பை எதிர்த்தவர்களை எதிர்த்தார். பார்ப்பான் ராசாசி இந்தியை திணிக்கிறானே என்பதால் தான் எதிர்த்தார். ஒரு நாயக்கன் இந்தியை திணித்திருந்தால் ஈவெராமசாமி மூடிட்டு தான்.இருந்திருப்பார். மத்தப்படி வேறு எந்த வெங்காயமு கிடையாது.
மிக்க நன்றி தோழர் செங்கொடி