நண்பரே … ! ஓர் அறிவுஜீவி … என்பவர் யார் … ? உங்கள் பார்வையில் .. !
செல்வராஜன் கேள்வி பதில் பகுதியிலிருந்து
தோழர் செங்கொடி, தங்களின் பதில்களுக்கு நன்றி. எனது மற்றுமொரு கேள்வியை இங்கே முன்வைக்கிறேன்.
மதம் என்பது, மக்களின் புரட்சி எண்ணங்களை மங்கச் செய்யவும், அரசு இயந்திரத்திற்கெதிரான அவர்களின் புரட்சியை தடைசெய்யவுமே தோற்றுவிக்கப்படுகிறது என்பது பொதுவான கருத்து. ஆனால், மதத்தை தோற்றுவிக்கும் செயல்பாடு என்பது ஒரு தனிநபரின் பெரும் முயற்சியாக இருக்கிறது. மத ஸ்தாபகரின் முயற்சிகளுக்கு பின்னணியில் இருந்து பல சக்திகள் ஆதரவு அளிக்கலாம்தான். ஆனால், ஒரு மதம் தோன்றும்போது, அது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மதங்களால் பல இன்னல்களுக்கு ஆளாகிறது. பஹாய் எனும் ஒரு மதம் 19ம் நூற்றாண்டில் ஈரான் நாட்டில் வடிவம் எடுத்து வந்தபோது, இஸ்லாமிய மதத்தினால் பெரும் துன்பத்திற்கு ஆளானது. அதன் ஸ்தாபகர் பஹாவுல்லா என்பவர். இப்படி ஒரே நோக்கத்திற்காக உருவாகும் மதங்களுக்குள் எதற்காக இந்தப் போட்டி? அந்தப் போட்டியை உருவாக்குபவர்கள், அந்த மதங்களுக்கு தலைமையேற்கும் மதகுருக்களே. அரசு அமைப்பின் பிரதிநிதிகளாக இருக்கும் அந்த மதகுருக்கள் ஏன் இந்த மோதலை உருவாக்குகிறார்கள்? சமரசம் செய்துகொண்டு செல்லலாமே? பழைய மதத்திலிருந்து புதிய மதத்திற்கு மாறிக் கொள்ளலாமே? தொழில் ஒன்றுதானே?
மேலும், ஒரு மதத்தின் ஸ்தாபகர், தன் வாழ்நாளை செலவழித்து, இப்படியொரு கடினமான பணியைச் செய்ய வேண்டிய அவசியமென்ன? அவர்களுக்கு, இதைத் தாண்டி வேறு லட்சியங்களும் உண்டா? அரேபிய வணிகரான முகமது, கதீஜாவின் மூலமாக கிடைத்த சொத்தை அனுபவிப்பதை விட்டுவிட்டு, பல்வேறு கடின முயற்சிகளின் மூலமாக ஒரு மதத்தை தோற்றுவிக்க வேண்டிய அவசியமென்ன? அவர் இறந்த பிறகு, அதைப் பார்க்கப் போகிறாரா என்ன?
எனவே, மதங்கள் எதற்காக, எந்த அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன? அவற்றின் மூலங்கள் என்ன? அவற்றின் தொடர்புகள் என்ன? என்பது குறித்து எனக்கு விரிவான விளக்கம் தேவை.
எனது கேள்வியானது சற்று குழப்பமாகவும் இருக்கலாம். ஆனாலும், கேள்வியை மீண்டும் மீண்டும் படித்து, புரிந்துகொண்டு பதிலளிப்பீர்கள் என்று நம்புகிறேன் தோழரே. தங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
பிரசன்னா, கேள்வி பதில் பகுதியிலிருந்து
தோழர் பிரசன்னா,
நீங்கள் கேட்டுள்ளது மிகச் சிறந்த கேள்வி என எண்ணுகிறேன். மதங்களைப் பற்றிய இந்த உங்களின் கேள்விக்கான பதிலை கடவுள் நம்பிக்கைக்கும் மதத்துக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கூறுவதிலிருந்து தொடங்குவது பொருத்தமாக இருக்கும்.
பொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் கடவுள் நம்பிக்கையும் மதமும் ஒன்றல்ல. கடவுள் நம்பிக்கை காலத்தால் முற்பட்டது மதம் பிற்பட்டது. இயற்கையின் மீதான அறியாமை, மரணத்தின் மீதான் பயம், பதைப்பு ஆகியவையே கடவுள் நம்பிக்கைக்கான தோற்றுவாய். மதம் என்பது அரசு உருவான பின்பு குறிப்பிட்ட ஒரு சமூகத் தேவை காரணமாகவோ, தேவையின்மையை அகற்றும் காரணமாகவோ அரசுக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ தோற்றம் பெற்றது. இரண்டையும் தனித்தனியே பிரித்துப் பார்த்து புரிந்து கொள்வது மதங்களைப் பற்றிய புரிதலுக்கு இன்றியமையாதது.
உலகின் எந்த மதமும் தனியொரு மனிதரால் உருவாக்கப்பட்டவை எனக் கொள்வது மாத்திரைக் குறைவானதாகவே இருக்கும். நீங்கள் கூறும் பஹாய் என்பது தனி மதமல்ல, இஸ்லாத்தின் ஒரு பிரிவு. இதற்கு எதிராய் இஸ்லாத்தின் சன்னி, ஷியா பிரிவு மதவாதிகள் கூறுவதை பொருட்டாய் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இஸ்லாம் குறித்து பார்த்தால் இஸ்லாம் முகம்மதால் உருவாக்கப்பட்டதல்ல. அவர் நிறுவியது ஓர் அரசைத் தான். இஸ்லாம் முகம்மதின் மரணத்திற்குப் பிறகே உருவாக்கப்பட்டது.
சமூகத்தில் உருவாகும் அனைத்திற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது உற்பத்தி முறையே. இதனை மார்க்சியம் அடிக்கட்டுமானம் என்கிறது. இந்த அடிக்கட்டுமானத்தில், உற்பத்தி சக்திகளுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளை தீர்க்க ஏற்படுத்தப்படும் வடிவங்கள் எல்லாம் மேற்கட்டுமானம் ஆகிறது. அந்த வகையில் மதம் என்பது ஒரு மேற்கட்டுமான அமைப்பு. தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மதத்தையும் ஆராய்ந்து பார்த்தால் அவை சமூகத்தில் நிலவிய ஏதாவது ஒரு சிக்கலுடன் தொடர்புடையதாகவே இருக்கும். எனவே, மதம் என்பது அதன் தோற்ற அடிப்படையில் சீர்திருத்த நிகழ்வாகவே இருக்கிறது.
ஆகவே, மதம் என்றாலே அது புரட்சிகர எண்ணங்களை மழுங்கடிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது என புரிந்து கொள்வது தட்டையான புரிதல். எடுத்துக்காட்டாக ரோமனிய மன்னர்களும் திருச்சபைகளும் இணைந்து நிலப்பிரபுத்துவத்தின் கடைசிக் காலத்தில் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்த போது அதை எதிர்த்து புரோட்டஸ்டாண்ட் பிரிவு தோன்றியது. பார்ப்பனிய மதம் விவசாயத்துக்கு உற்றதுணையாக இருந்த மாடுகளை தின்று தீர்த்துக் கொண்டிருந்த போது அதற்கு எதிராக பௌத்தம் கொல்லாமையை பேசியது. இந்நிகழ்வுகளை மார்டின் லூதருடனும், கௌதம சித்தார்த்தனுடனும் மட்டுமே இணைத்துப் பார்க்க முடியுமா? அந்தக் காலகட்டத்தின் புரட்சிகர எண்ணங்களை அவர்கள் தங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார்கள்.
அதேநேரம் மதங்கள் தங்கள் இயல்பில் ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது? எந்த ஒரு கோட்பாடும் அது தோன்றிய காலகட்டத்துக்கு மட்டுமே புரட்சிகரமானதாக இருக்கும். சமூகத்தில் மாற்றம் நேரும் போது அதை பிரதிபலிக்கும் கோட்பாட்டிலும் மாற்றம் தேவைப்படுகிறது. அவ்வாறான மாற்றம் நேராத போது, அல்லது சமூகத்துக்கு தேவையற்ற காலத்தில் மாற்றங்கள் நேருகின்ற போது அந்தக் கோட்பாடு தேங்கிப் போகிறது. எந்த ஒரு அரசானாலும் அதன் தவிர்க்கவியலாத குணமாக இருப்பது, நிலவுகின்ற உற்பத்தி முறையில் எந்த மாற்றமும் நேர்ந்து விடாதவாறு பாதுகாப்பது. உற்பத்தி உறவுகளுள் முரண்பாடு தோன்றும் போது அது நிலவும் உற்பத்தி முறையை தாக்கிவிடக் கூடாது என்பதற்காக உற்பத்தி உறவுகளான மக்களை மழுங்கடிக்க அரசு செய்யும் பல்வேறு உத்திகளில் மதம் – தேக்கமடைந்து மாற்றங்களுக்கு முகம் கொடுக்காத மதம் – முதன்மையானதாக இருக்கிறது. இது தான் அரசுகளுக்கும் மதங்களுக்கும் இடையேயான பிரிக்க முடியாத பிணைப்பு. மதங்களை மக்களிடம் நிலை நிறுத்துவதற்கு தேவையான இன்றியமையாத கச்சாப் பொருள் தான் கடவுள் நம்பிக்கை.
ஆக, மதம் என்பதை அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானத்திற்கு உட்படுத்தி பார்க்கும் போது மட்டுமே நம்மால் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும். மதங்கள் அந்தந்த காலகட்டத்தின் தேவையை ஒட்டியே பிறந்திருக்கின்றன. இதை தனி ஒருவரால் முன் திட்டமிட்டு தொடங்கியிருக்க முடியாது. இருப்பினும் மதங்களின் தோற்றத்தில் தனி மனிதர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடவும் முடியாது. சமூகத்தின் தேவையை முழுமையான அம்சமாக கொண்டால் தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்பை குறிப்பிட்ட அம்சமாக கொள்ளலாம்.
மதங்களின் தோற்றங்களின் போது தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்புக்கு வேறுசில நோக்கங்கள் இருந்திருக்கலாம். இஸ்லாம் எனும் மதத்தை எடுத்துக் கொண்டால் முகம்மதின் நோக்கம் மூன்று பிரிவாக இருந்த மக்களை ஒருங்கிணைத்து ஒரு அரசை தோன்றுவிக்க வேண்டும் என்பது மட்டுமே. அந்த அரசுக்கு வாரிசுகள் யார் எனும் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவரும் தேவையே இஸ்லாம் எனும் மதமாக உருத்திரண்டது. கிருஸ்தவத்தை எடுத்துக் கொண்டால் இயேசுவின் – இவர் உலகில் வாழ்ந்த ஒரு மனிதரா? இல்லையா என்பது வேறு விசயம் – நோக்கம் அடிமைகள் மீதான இரக்கமாக இருந்தாலும், பவுலின், அப்பலோஸ்தர்களின் நோக்கம் அடிமைகளின் எழுச்சியை மட்டுப்படுத்தி மன்னனுக்கு கீழ்ப்படிய வைப்பதே.
எந்த விதத்தில் பார்த்தாலும் மதங்கள் என்பவை மக்களின் தேவைகளோடு தொடர்பு கொண்டவைகளாகவே இருந்திருக்கின்றன. நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ மக்களின் துயரங்களுக்கான வடிகால்களாக இருந்திருக்கின்றன. அதேநேரம் மக்களை துயரங்களைத் தீர்க்கும் அறிவியல் ரீதியான தீர்வு எது எனும் பார்வையை மதங்கள் கொண்டிருக்க முடியாது. இதனால் தான் மார்க்ஸ் மதம் மக்களுக்கு அபினியாக இருக்கிறது என்பதோடு இதயமற்ற உலகின் இதயமாகவும் இருக்கிறது என்பதையும் சேர்த்துச் சொன்னார். விலங்குகளுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. மனிதனின் தொடக்க காலங்களில் கடவுள் நம்பிக்கையோ, மதவழிப்பாடோ இல்லாமல் இருந்ததைப் போல இனி வருங்காலத்திலும் மதமும் கடவுள் நம்பிக்கையும் இல்லாமல் போகும்.
உங்களின் கேள்விக்கு பொருத்தமான பதிலாக இருக்கும் என நம்புகிறேன். இல்லையென்றால் தொடருங்கள்.
************************************************
நண்பர் செல்வராஜன்,
உலகில் உள்ள அனைவருக்கும் அறிவு இருக்கிறது. அனைவருமே தங்கள் வாழ்க்கைக்கு உதவும் தகவல்களை சேமித்து வைத்து அதனைப் பயன்படுத்தி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் அறிவுஜீவி எனும் சொல் எங்கிருந்து வந்தது?
அறிவு என்பது என்ன? நேரடியாகவோ, மறைமுகமாகவோ உலகில் நிலவும் தகவல்களை உள்வாங்கிக் கொண்டு, அவைகளைப் பயன்படுத்தி தேவையான பொழுதுகளில் சரியான முடிவை எடுப்பதற்குப் பெயர் தான் அறிவு. ஒவ்வொரு மனித மூளையிலும் ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. கணந்தோறும் மனிதன் முடிவுகளை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறான். இந்நிலையில் தனியாக யாரை அறிவுஜீவி என்பது? மீனவராக இருக்கும் ஒருவருக்கு கடல் குறித்த அறிவு இருக்கும், ஆனால் தறி குறித்த அறிவு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நெசவாளிக்கு தறி குறித்த அறிவு இருக்கும் ஆனால், கடல் குறித்த அறிவு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உலகின் எந்த மனிதரும் அனைத்து தகவல்களையும் கொண்டிருப்பதில்லை. அவரவர் செயல்படும் துறைகளில் மட்டுமே அறிவு கொண்டவராக இருப்பர். இதில் ஒருவர் இன்னொருவரைப் பார்த்து வியக்க என்ன இருக்கிறது?
நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் வயது அதிகமாவதை அறிவாக உணர்ந்தனர். ஏனென்றால் வயதாவது என்பது அதிக அனுபவத்தை வழங்கும் என்பதால். ஆனால் முதலாளித்துவ காலகட்டம் வந்ததும் தொழில்நுட்பம் வளர்ந்தது. தொழில்நுட்பம் அனுபவத்தை விட கல்வியறிவுக்கு முதன்மைத்தனம் கொடுத்தது. இதனால் முதியவர்களைப் போற்றும் நிலையிலிருந்து மாறி கற்றவர்களைப் போற்றும் மனோநிலை உருவாகியது. இந்த மனோநிலதான் விரிவடைந்து கல்லாதவர்களிடம் இருக்கும் அறிவு குறைவுடையதாகவும், கற்றவர்களிடம் இருக்கும் அறிவு உயர்வுடையதாகவும் உருப்பெற்றது. உடல் உழைப்பை விட மூளை உழைப்பை உயர்வானதாக கருதும் போக்கு உருவானது.
இந்த அடிப்படையில் தான் இதழ்களில், இணையத்தில் எழுதுபவர்கள், விளக்கவுரை விரிவுரை ஆற்றுபவர்கள், துறை சார்ந்த நுணுக்கங்களை விவரிப்பவர்கள் எல்லாம் அறிவாளிகளாக அறிவுஜீவிகளாக ஆனார்கள். இவர்களிடம் உடலுழைப்பு சார்ந்த அறிவு எதையாவது எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். எனவே துறைசார்ந்த அறிவு கொண்டிருக்கும் யாரையும் அறிவுஜீவியாக கொள்ள வேண்டிய அவசியமில்லை.
பின், யார் அறிவுஜீவி? தன்னிடமிருக்கும் அறிவை யார் சமூக உயர்வுக்காக பயன்படுத்த எண்ணுகிறாரோ, தன்னிடமிருக்கும் அறிவை நடைமுறையுடன் இணைத்து பிற மக்களின் அறியாமையையும், துயரங்களையும் போக்கிட அதற்காக செயல்பட முன்வருகிறாரோ அவரே அறிவுஜீவி. ஏனென்றால் ஒருவருக்கு இருக்கும் அறிவு அவரால் மட்டுமே முனைந்து பெறப்பட்டதல்ல. பல தலைமுறை முயற்சிகள் இணைந்தே அறிவாக அவருக்கு கிட்டியது. அந்த விதத்தில் தம் அறிவை பிற மக்களின் உயர்வுக்காக செலவிடுவது தன்னுடைய கடமை என்பதை உணர்ந்தவரே அறிவு ஜீவி.
நன்றி நண்பரே …. ! ரொம்ப நாளா இருந்த ஒரு குழப்பம் தீர்ந்தது … !! நான் நினைத்து இருந்தது :– எவனொருவன் ” புதிய சிந்தனைகளை வரவேற்கிறானோ — ஒரு செய்தியை பன்முகத்தன்மைக்கு எடுத்து செல்கிறானோ — தினமும் புதியவைகளை நோக்கி அடியெடுத்து வைத்து — பலரின் சந்தேககங்களுக்கும் — வினாக்களுக்கும் விடையளிக்கிறானோ — ஒரு சொல் உதாரணமாக வர்க்கம் என்பதை பல கூறுகளில் சிந்தித்து வியாக்கியானம் செய்து விளக்குகிறானோ — தான் கற்றவற்றை பலருக்கும் எளிதில் கைக்கொள்ள வைக்கிறானோ ” இதில் எந்த ஒன்றில் நிபுணனாக பலருக்கும் பயன் தரும் வகையில் செயலாற்றுகிறானோ அவனும் ” அறிவு ஜீவி ” என்பது என்னுடைய நிலைப்பாடு ….
” முதலாளித்துவம் ” என்கிற ஒற்றை சொல்லை வைத்து புரட்சி மூலம் இந்தஉலக மக்களை விழிப்படைய செய்தவர்கள் தான் — உண்மையான அறிவு ஜீவிகள் ….
” இந்து மதம் எங்கே போகிறது ” சடங்குகளின் கதை — என்பதை விளக்ககமாக வேதங்களில் இருந்தே எடுத்துக்காட்டி — அவர்களின் வேஷங்களை வெளிச்சம் போட்டு காட்டிய — அக்னி கோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் ” அவர்களும் ஒரு அறிவுஜீவி தானே …. ?
தோழர் செங்கொடி அவர்களே..! தங்களின் அர்ப்பணிப்புள்ள பதிலுக்கு நன்றி. ஆனால் அதில் ஒரு அம்சத்திற்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. பழைய மதங்களுக்கு தலைமை வகிக்கும் மத குருக்கள், புதிய மதம் தோன்றும்போது கடுமையாக எதிர்ப்பதற்கு காரணம் என்ன? அவர்கள், தங்கள் மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்து, அதை நேசிப்பதால்தான் என்ற விளக்கத்தில் நிச்சயம் உண்மை இருப்பதாக நான் நம்பவில்லை. மதகுருக்கள், தங்கள் ஆதிக்கத்தையும், சொகுசு வாழ்வையும் எப்போது கைவிட விரும்பாத பேர்வழிகள். எனவே, மக்களைத் தூண்டிவிட்டு, அவர்களின் மடத்தனங்களைப் பயன்படுத்தி, புதிய மதங்களைத் துன்புறுத்த வேண்டிய உண்மையான பிற காரணங்கள் என்ன?
மேலும், இஸ்லாம் என்ற மதத்தின் உருவாக்கம் முகமதுவின் மரணத்திற்குப் பின்னரே நிகழ்ந்ததாக நீங்கள் கூறியுள்ளீர்கள். முகமது ஒரு சில பிரிவினரை ஒன்றிணைத்து ஒரு அரசை மட்டுமே உருவாக்கினார் என்று கூறியுள்ளீர்கள். அப்படியெனில், அவர்களுக்கு எதற்காக கடவுளின் பெயரில், பல புனித வழிகாட்டுதல்கள், முகமதுவின் வாயால் வழங்கப்பட வேண்டும்? இதுதொடர்பாக சற்று விரிவான விளக்கம் தேவை.
அடுத்ததாக, பஹாய் மதத்தின் தனித்துவம் பற்றியது? அதை இஸ்லாமின் ஒரு பிரிவு என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். ஆனால், அம்மதம் பற்றி ஓரளவு நன்கு அறிந்தவன் என்ற முறையில், அது அகமதியா பிரிவு போல் அல்லாமல், தன்னை ஒரு தனித்துவம் வாய்ந்த மதமாகவே முன்னிறுத்திக் கொள்கிறது. அதன் ஸ்தாபகர் பஹாவுல்லா என்பவர், இதர அனைத்து இறைத் தூதுவர்களாலும் முன்மொழியப்பட்ட மறுவருகை தானே என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். அவர், பிற மதங்கள் காலாவதியாகிவிட்டன. இன்றைய காலகட்டத்தின் வெளிப்பாடு பஹாய் மட்டுமே என்றும் கூறினார். அம்மதத்தில், இஸ்லாம் கோட்பாட்டின் கூறுகள் நிறைய இருக்கலாம்தான். மேலும் பல கிறிஸ்தவக் கூறுகளும் இருக்கின்றன. இதற்காக, அதை இஸ்லாமின் ஒரு பிரிவு என்று சொல்வது எப்படி சரியாகும்? இஸ்லாமிலும் ஆப்ரகாமிய மதங்களின் கூறுகள் ஏராளமாக நிறைந்து இருப்பதை நாம் காணலாம். அதனால், இஸ்லாமையும் ஒரு பிரிவு என்றே கூறலாமா? இதுபற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அடுத்ததாக, மார்ட்டின் லூதர் பற்றியது. அவரைப் பற்றி பாடப்புத்தகங்களில் (கல்லூரி உட்பட) படித்தது பல. ஆனால், இணையத்தில், எங்கோ ஓரிடத்தில் அவரின் போராட்டங்களைப் பற்றி படிக்கும்போது, அவர் நிலப்பிரபுத்துவத்தின் பிரதிநிதியாகவே செயல்பட்டார் என்றே பல தகவல்களை அளித்திருந்தார்கள். அதாவது, திருச்சபையின் ஆதிக்கத்திலிருந்து நிலப்பிரபுக்களின் உரிமைகளை மீட்பதற்கான போரட்டமாகவே அவரின் போராட்டம் இருந்ததாய் தகவல்கள் இருந்தன. அத்தகையதொரு போராட்டத்தில், திருச்சபைக்கு எதிராக அக்காலத்தில் செயல்பட்ட பிரிட்டன் போன்ற நாடுகளின் ஆதரவை அவர் இயல்பாகவேப் பெற்றார். அவர், கிறிஸ்தவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட ஒரு மதப்பற்றாளர் என்றும் நான் கேள்விப்பட்டுள்ளேன். இதுபற்றி உங்களின் கருத்து…?
எனக்கு மத நம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கை ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள் குறித்து, தெளிவான மற்றும் அனுபவரீதியிலான புரிதல்கள் உண்டு.
மதங்களின் சமூக அணுகுமுறைகளைப் பார்க்கும்போது, அவை பொதுவாக எளிய மனிதர்களைத்தான் அதிகம் பயமுறுத்துவதாக நான் உணர்கிறேன். பாவ – புண்ணியங்களை அவர்களின் மீதுதான் திணிக்கின்றன. மார்க்ஸ் கூறியதுபோல், “பாட்டாளிகளே, உங்களுக்கான உரிமைகளை வன்முறையின் மூலமாகவேனும் அடையுங்கள்” என்பது போன்றெல்லாம் அதிரடியாக பேசியதில்லை. இந்த உலகில் நீதி கிடைக்கவில்லை என்றால், அடுத்த உலகில் கட்டாயம் கிடைக்கும் என்று சமாதானம் சொல்கின்றன. பசியால் செத்திடினும், அடுத்தவர் பொருளை திருடாதீர்கள் என்று ஏழைகளுக்குத்தான் உபதேசம் சொல்கின்றன. “வறியவர்களுக்கு உதவிடுங்கள் செல்வந்தர்களே” என்று அவர்களைப் பிச்சைப் போடத்தான் சொல்கின்றனவேத் தவிர, உற்பத்தி உழைப்பில் நியாயமான பங்கினை அளியுங்கள் என்றெல்லாம் சொல்வதில்லை. நிலப்பிரபுக்களுக்கு எதிராகவோ அல்லது முதலாளிகளுக்கு எதிராகவோ தன் விரலை உயர்த்துவதில்லை. எனவே, இத்தகைய மதங்கள், மார்க்ஸ் சொல்வதைப்போல், இதயமற்றவர்களின் இதயம் என்ற அந்தஸ்தைப் பெற முடியுமா?
தோழர் பிரசன்னா,
புதிய மதம் தோன்றும் போது அதை பழைய மதம் ஒடுக்கி அழிக்க முயல்கிறது என்பதை எப்படி புரிந்து கொள்வது. வெறுமனே அது மத வியாபாரத்துக்கு பாதிப்பு என்பதல்ல விசயம். ஒரு புதிய மதம் அல்லது கோட்பாடு அல்லது தலைவர் உருவாகிறது, உருவாகிறார் என்றால் அதன் பொருள், நடப்பில் இருக்கும் ஏதோ ஒரு அம்சத்தை அவர்/அது மாற்ற விரும்புகிறார்/றது என்பதே. இது தான் முதன்மையான முரண்பாடு. மாற்ற விரும்பும் புதிய மாற்றம் மக்களின் விருப்பத்திலிருந்து வந்திருந்தால் அது நிலைக்கும். மக்களின் விருப்பங்களைக் கணக்கில் எடுக்காமல் தன்னுடைய சொந்த விருப்பத்திலிருந்து வந்திருந்தால் அழிந்து போகும். இதற்கு மேல் மதச் சட்டங்கள், புனிதம், சொகுசு வாழ்க்கை இத்யாதிகளெல்லாம் மேம்போக்கானவை. இது என்னுடைய முந்திய பதிலில் இருக்கிறது எனக் கருதுகிறேன்.
இஸ்லாம் எனும் மதம் குறித்து கூற வேண்டுமென்றால், முகம்மது தன்னுடைய அக, புற காரணிகளிலிருந்து அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு அரசை நிறுவ வேண்டுமென் விரும்புகிறார். இந்த எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்க அன்றைய போதில் நடைமுறையில் இருந்த கடவுள் நம்பிக்கைகளை சீர்திருத்தி பயன்படுத்திக் கொள்கிறார். தன்னுடைய முயற்சிகளில் பெருவெற்றியும் அடைகிறார். அவரின் மரணத்திற்குப் பிறகு தான் யார் வாரிசு எனும் பெரும் சிக்கல் தோன்றுகிறது. இதன் வழியில் ஒரு குழு தன்னை முன்னிலைப்படுத்துவதற்கு செய்த முயற்சிகள் உருத்திரண்டு தான் இஸ்லாம் எனும் மதமாக உருவெடுத்தது. குரான் ஹதீஸ்களெல்லாம் இந்த முயற்சியில் உருவானவைகள் தாம். இவைகளுக்கு குரான் ஹதீஸ்களிலிருந்தே ஆதாரம் காட்ட முடியும்.
பஹாய் குறித்து கூற வேண்டுமென்றால், ஒரு மதத்தின் வேர் எந்த பிற மதத்திலிருந்தும் கிளையாமல் தனித்த தன்மையில் இருக்க வேண்டும். பஹாய் அப்படி இல்லாமல் இஸ்லாத்திலேயே அதன் வேரைக் கொண்டிருக்கிறது எனக் கருதுகிறேன். ஆனால், பிற பிவினரைப் போல் பஹாயினர் இஸ்லாத்துக்கு சொந்தம் கொண்டாடுவதில்லை என்பது மட்டுமே வித்தியாசமாக தெரிகிறது. இந்த அடிப்படையிலிருந்தே என்னுடைய கருத்தை நான் வந்தடைந்தேன். உங்களுக்கு பஹாய் குறித்து அதிகம் தெரியுமென்றால் விளக்குங்கள் பரிசீலிக்கிறேன். அப்ரஹாமிய மதங்களைப் பொருத்தவரை அவைகளை பிரிவுகள் என்று கூறுவதில் பொருட்பிழை ஒன்றும் இல்லை. வரலாறு, புரிதல் அடிப்படையிலேயே அவைகளை தனித்தனி மதங்களாக கருதுகிறேன்.
லூதரைப் பொருத்தவரை அவர் கிருஸ்தவ மத பற்றாளர் தான் என்றாலும் நகரத்தார்களின் பிரதிநிதியாக இருந்தார். அதாவது நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் உருவாகிவந்த நகரத்தார்களில் கீழ்த்தட்டு பிரிவைச் சேர்தவர்களின் பிரதிநிதியாக இருந்து நிலப்பிரபுத்துவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கிருஸ்தவ மதத்தை எதிர்த்துத் தான் புரோட்டஸ்டண்ட்பிரிவு உருவாகி வலுத்தது. பின்னர் கால்வின் தோன்றி கிருஸ்தவத்தை முதலாளித்துவ மதமாக மாற்றியமைத்த பின்னர் புரோட்டஸ்டாண்ட் தன் தன்மையை இழந்து விட்டது.
இதயமற்றவர்களின் இதயமாக இருக்கிறது எனும் மார்க்ஸின் கூற்று மதங்களின் தன்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக, அதனைப் பின்பற்றும் மக்கள் அவ்வாறு இருக்கிறார்கள் என்பதனால் தான். மதம் மக்களுக்கு அபினியைப் போன்றது என்பதை மட்டும் தனித்துப் பார்ப்பது எவ்வாறு மாத்திரைக் குறைவானதோ அதேபோல இதயமற்ற உலகின் இதயமாக இருக்கிறது என்பதையும் தனித்துப் பார்க்க முடியாது. இரண்டையும் பிரிக்காமல் பார்ப்பது தான் சரியான பொருளைத் தரும்.