500, 1000: இனி செய்ய வேண்டியது என்ன?

modi-cartoon

மக்களின் வாழ்வு தலைகுப்புற புரட்டிப் போட்டது போலிருக்கிறது. எதிர்ப்படும் அனைத்து முகங்களிலும் ஏனைய அனைத்து உணர்ச்சிக் குறிகளையும் விட என்ன செய்வது எனும் கவலையே மேலோங்கித் தெரிகிறது. ரூபாய்தாள்கள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகு எல்லாம் முடங்கிக் கிடக்கிறது. மக்களின் அவலங்கள் அன்றாடச் செய்திகளாய் சுருங்கி, கடந்து போய்க் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் இன்று என்ன அறிவிப்பு புதிதாய் வரப்போகிறது? அதைக் கொண்டு எப்படி தங்களின் அடிவருடித்தனத்தை புதுப்பித்துக் கொள்வது என்று ஊடகங்கள் அலைகின்றன. பொதுவாக ஊடகங்களும் காவிக் கூடாரங்களும் ரூபாய்த் தாள்கள் செல்லாததாக்கிய நடவடிக்கையை கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கை என்றே சாதிக்கின்றன.

இந்த நடவடிக்கையை எதிர்ப்பவர்கள் எல்லோரும் இது எப்படி கருப்புப் பணத்தை ஒழிக்காது என்பதை பலவிதமான விளக்கங்களுடனும் தரவுகளுடனும் எடுத்து வைத்து வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆதரிப்பவர்களோ அவர்களின் விளக்கங்களுக்கு மறுப்பளிக்காமல், கேள்விகளுக்கு பதிலளிக்காமல், கருப்புப் பணத்தை ஆதரிக்கிறார்கள், அதனால் தான் இந்த நடவடிக்கையை எதிர்க்கிறார்கள் என்று மடைமாற்றுவதைத் தவிர வேறெதையும் சொல்ல மறுக்கிறார்கள்.

பாசிச மோடியோ, இரண்டு நாட்களில் நிலமை சீராகி விடும், இரண்டு வாரங்களில் சீராகி விடும் என்று தற்போது ஐம்பது நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் என்கிறார். டேஷ் பக்தாக்களின் இராணுவ வீரன் கதையை விட மோடியின் ஐம்பது நாள் கதை கேலிக் கூத்தாகிக் கொண்டிருக்கிறது. அரசின் ஒவ்வொரு அறிவிப்பையும் வரும் செய்திகள் குப்பையாக்கிக் கொண்டிருக்கின்றன.

நிலமை விரைந்து சீரடையும் எனும் அறிவிப்பை, புழக்கத்திலிருந்து நீக்கப்பட்ட ரூபாய்த் தாள்களின் மொத்த மதிப்பை அச்சடித்து முடிக்க ஏழு மாதங்கள் வரை ஆகும் என்று இந்தியாவின் அச்சடிப்புத் திறனுடன் ஒப்பிட்டு பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள். தவிரவும் அச்சடிப்பு குளறுபடிகளால் 500 ரூபாய்த் தாள்கள் அச்சடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக அரசு மறு அறிவிப்பு செய்திருக்கிறது. மட்டுமல்லாது, முன்னர் ரூபாய்த் தாள்கள் அச்சடித்துக் கொண்டிருந்த சில நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றன – கள்ளநோட்டுகளை அச்சடிக்கின்றன – என்ற குற்றச்சட்டின் பேரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த நிறுவனங்களுக்கெல்லாம் மீண்டும் அச்சடிக்க வாய்ப்பு தரப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இவைகளெல்லாம் நிலமை விரைந்து சீரடையாது எனும் தவிர்க்க முடியாத உண்மையை அரசு ஏற்றுக் கொண்டிருப்பதற்கான சான்றுகள்.

நாளுக்கு நாள் வங்கிகளில் கூட்டம் அலை மோதிக் கொண்டிருப்பதை அடுத்து, மக்கள் கோபத்தை தணிப்பதற்காக, இனி வங்கிகளில் உள்ள சேமிப்புப் பணத்தை வரம்பின்றி எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்தது அரசு. ஆனால் வங்கிகளில் பணமில்லை, மக்களுக்கும் வங்கி அலுவலர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுகின்றன.

பா..க வினரிடமே கட்டுகட்டாக புதிய ரூபாய்த் தாள்கள் பிடிபட்டதும் ஆடம்பரமாய் 10 லட்ச ரூபாய் கோட்டு போட்டது விவாதமானவுடன் ஏலம் விட்டு சமாளித்ததைப் போல் நவம்பர் 8 லிருந்து டிசம்பர் 30 வரை பா..க வினர் தங்கள் கணக்குகளை கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தார்கள். ஆனால் அமித்ஷாவே நவம்பர் 8 ம்தேதி 35 சதவீத கமிஷனுக்கு கோடி கோடியாக பணத்தை மாற்றிக் கொடுத்தார் என்றும், மோடியின் நண்பர்கள், கார்ப்பரேட்டுகள் பலருக்கு செல்லாது நடவடிக்கை முன்பே தெரியும் என்றும் மோடிக்கு வலது கரமாக இருந்த யாதின் ஓசா பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதுவரை எந்த யோக்கியனும் பதில் கூறவில்லை.

நவம்பர் 8ன் வீரியம் படிப்படியாக இறங்கி, கருப்புப்பணம் என வீர வசனம் பேசியவர்கள், பின்னர் கள்ளப் பணம் தான் குறிக்கோள் என்றார்கள். இப்போது அதுவும் இறங்கி பணமற்ற பொருளாதாரம் தான் எங்கள் நோக்கம் என்று மடிகிறார்கள். வங்கிகளில் மாற்றி, அட்டைகளை உரசினால் ஊழல் உயிர் வாழாது என்று சத்தியம் செய்தார்கள். அதுவும் ஆதாரங்களுடன் மறுக்கப்பட்டு விட்டது.

முட்டுச் சந்தில் வசமாக மாட்டிக் கொண்ட திருடன் போல் விழி பிதுங்கி, கூனிக் குறுகி நிற்க வேண்டிய மோடி, திமிருடன் அடுத்த அறிவிப்பை வாசிக்க கையில் கார்ப்பரேட்டுகள் எழுதிக் கொடுத்த தாளுடன் தயாராக இருக்கிறார் என்றால், அதன் பொருள் இதை கருப்புப்பண எதிர்ப்பு நடவடிக்கை என இன்னும் நம்பும் அப்பாவிகள் இருக்கிறார்கள் என்பது தான்.

ஆனால் இதில் பலியிடப்பட்டுக் கொண்டிருப்பது நம்முடைய வாழ்வாதாரங்கள் தான். குறைந்த முதலீட்டுடன் சொந்தத் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் தொடங்கி, அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பவர்கள் வரை அனைவரும் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் கவலை படிந்து நிற்கிறார்கள். மாதச் சம்பளம் வாங்கும் அரசு, தனியார் ஊழியர்கள் கூட முதன்முறையாக தங்களைச் சுற்றி ஏதோ நடக்கிறதோ என்று சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

நாட்டுக்காக இதையெல்லாம் தாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்கள். நாடு என்பது என்ன? வெறுமனே எல்லைகளும், எல்லைகளுக்கு நடுவே இருக்கும் நிலமும் தானா? அதில் வசிக்கும் மக்கள் இல்லையா? நாட்டுக்காக தாங்கிக் கொள்ளலாம் தான். எதன் பொருட்டு தாங்கிக் கொள்வது. மக்களை ஏமாற்றுவதையே முழுமூச்சாய்க் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த அரசின் பொருட்டா? எதற்காக பொறுத்துக் கொள்ள வேண்டும்?

உணவு மானியம் வெட்டு,

ரேசன் கடைகள் மூடல்,

கல்வி தனியார்மயம்,

அரசு பள்ளிகள் சீரழிப்பு,

கல்விக் கடனுக்கு கடும் வட்டி,

கல்விக் கடனை வசூலிக்க ரிலையன்ஸுக்கு அனுமதி,

மின் கட்டண உயர்வு,

பேருந்து கட்டண உயர்வு,

இரயில் கட்டண உயர்வு,

அத்தியாவசியப் பொருட்கள் அத்தனையும் விலை உயர்வு,

சந்தை விலையை விட மூன்று மடங்கு விலையில் பெட்ரோல், டீசல்,

நீராதாரங்கள் அனைத்தும் பராமரிப்பின்றி சாக்கடையாக்கியது,

எல்லாப் பொருட்களிலும் மறைமுக வரி,

கல்வி வரி,

சேவை வரி,

விற்பனை வரி,

குறைந்தபட்ச கோரிக்கைக்காக போராடினால் கூட காவல்துறை தடியடி,

கார்ப்பரேட்டுகளுக்கு ஆண்டொன்றுக்கு 5 லட்சம் கோடி வரிச்சலுகை,

7.5 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி,

இயற்கை வளங்கள் அனைத்தையும் கொள்ளையடிக்க ஏற்பாடு

இன்னும் எத்தனையோ விதங்களில் மக்களை வதைக்கும் இந்த அரசின், கார்ப்பரேட்டுகள் நலம் பேணும் நடவடிக்கைகளுக்காக மக்கள் எதற்காக தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தாங்கிக் கொள்ள வேண்டும்?

50 நாட்கள் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். 50 நாட்கள் கழித்து .. .. ..?

விலைவாசி இறங்கிவிடுமா?

இலவசக் கல்வி கிடைக்குமா?

உயர்கல்விக் கொள்ளைகள் நிறுத்தப்படுமா?

வேலை வாய்ப்புகள் பெருகி விடுமா?

கருப்புப் பணமோ, கள்ளப் பணமோ 50 நாட்களுக்குப் பிறகு இருக்காதா?

நீர்வளம் காக்கப்படுமா?

வனம் பேணப்படுமா?

சிறுவணிகம் பாதுகாக்கப்படுமா?

விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

பங்குச் சந்தை, ஊக வணிக சூதாட்டங்கள் நிறுத்தப்படுமா?

சுகாதாரம் உறுதி செய்யப்படுமா?

காற்று, நீர் மாசுபாடுகள் அகற்றப்படுமா?

தீண்டாமை ஒழிக்கப்படுமா?

மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலம் நீக்கப்படுமா?

என்ன செய்யப்படும் இந்த 50 நாட்களுக்குப் பிறகு? எவன் உறுதிமொழி கொடுப்பான் இவைகளுக்கு?

எதுவும் நடைபெறப் போவதில்லை. வங்கிகளில் நாம் சிறுகச் சிறுக போட்டு சேமித்து வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து முடித்து விட்டார்கள். இனி புதிதாக கடன் எனும் பெயரில் கொள்ளையடித்து நாட்டை சுடுகாடாக்க; நம்மிடமிருக்கும் பரிவர்த்தனைப் பணத்தை வங்கிகளில் செலுத்த வைக்கத் தான் கருப்புப் பண எதிர்ப்பு நாடகங்கள். சில்லரை வர்த்தகங்களில் லட்சக்கணக்கான கோடிகள் புரள்வதால் கார்ப்பரேட்டுகள் அதை வழித்தெடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த கள்ளப் பண நாடகங்கள்.

அமெரிக்க சப் பிரைம் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பொருளாதார பலம் வாய்ந்த பல நாடுகள் சீட்டுக் கட்டு கோபுரம் போல் சரிந்து விழுந்தன. அதற்குக் காரணம் அங்கு பரிவர்த்தனை அனைத்தும் வங்கிகளில் நடந்தது தான். அந்த நிலையில் இந்தியப் பொருளாதாரம் பெரும் சரிவைத் தவிர்த்து வீழாமல் நின்றதற்குக் காரணம், இங்கு பெரும்பாலான பரிவர்த்தனைகள் ரொக்கமாக நடைபெற்றது தான்.

நம்மைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் வேறு வேறு அல்ல. இந்த கொள்ளைக் கும்பல்களிடம் இருந்து நாட்டையும் நம்மையும் பாதுகாக்க வேண்டுமென்றால் அதற்கு இப்போதைக்கு சாத்தியமுள்ள ஒரே வழி ரொக்கப் பொருளாதாரத்தை தக்க வைத்துப் பாதுகாப்பது தான். வங்கிகளுக்குச் செல்லுங்கள், நீங்கள் உழைத்து சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தை உங்களுக்கு தேவையான அளவு எடுங்கள். மறுத்தால் அப்போதே கணக்கை முடிப்பதாகக் கூறி மொத்தப் பணத்தையும் திரும்பக் கேளுங்கள். இது ஒரு இயக்கமாக மாறினால் அது அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கும், நாம் ஏமாளிகள் அல்ல என்பதை நிரூபிக்கும். நம்மை மட்டுமல்ல, நம் நாட்டையும் காப்பாற்றும் வழி பிறக்கும்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

ஒரு பதில்

  1. வேறொன்றும் நடக்கப்போவதில்லை — ஒன்றே ஒன்றை தவிர அது – கார்போரேட்டுக்களின் காலை நக்கிக் கொண்டு இருப்பது — அவர்கள் கொழுக்க ஆவண செய்வது — வங்கிஏய்ப்பாளர்கள் — வராக்கடன் பேர்வழிகள் — நாட்டை சுரண்டும் கேப்மாரிகள் போன்றவர்களுக்கு மக்கள் பணத்தை வரிச்சலுகை மூலம் தாரைவார்ப்பது …. இன்னும் எவ்வளவோ … ?

    அதனால் தான் டாட்டா — அம்பானி போன்றவர்கள் மாய்ந்து – மாய்ந்து பாராட்டுகிறார்கள் — மன நோய் பிடித்தவரை … ! ஒன்றும் கழட்டப்போவதில்லை – 50 – நாட்களுக்கு பிறகும் — என்பது இந்த அடாவடியை நடைமுறை படுத்திய அவர்களுக்கே நன்கு தெரியும் — Liberalised Remittance Scheme (LRS) என்பதின் மூலம் கருப்புகளை வெள்ளையாக்கவும் – பதுக்கவும் ” கொள்ளையடித்து குவிக்கும் முதலைகளுக்கு ” வழிகாட்டிவிட்டு — வெந்த சோத்துக்கு அல்லாடுகிறவங்களின் சேமிப்பில் கைவைத்து — அவுங்க வயிற்றில் அடித்து – ஈரத்துணியை போட்டு வேடிக்கைபார்க்கும் எத்தர்களை எதில் சேர்ப்பிப்பது … ?

    தேனாறும் – பாலாறும் ஓடும் என்று ” கனவுடன் ” வாக்களித்தவர்கள் — வங்கி வாசல்களில் ஒண்ணுக்கு போகவும் வழியில்லாமல் – தவித்து கிடக்க வைத்தது தான் — இவர்கள் செய்த சாதனை …. ஆயிரத்தினூறு கோடிகளை வெட்டி விளம்பரங்களுக்கு செலவழித்த வீணர்கள் — அடுத்து செய்ய ” தங்கம் ” ஒன்று இருக்கிறது — அதற்கும் ஆப்பு வைக்க தயாராகிவிட்டார்கள் இவர்கள் … ரெட்டி போன்றவர்கள் ஐநூறு கோடிக்கும் மேல் செலவு செய்து — கிலோ கணக்கில் நகை போடுவதை பாராட்டி — வாழ்த்தியவர்கள் — கொஞ்சம் – கொஞ்சமாக சேர்த்து அவசரத்திற்கு ” அடகு ” வைக்க உதவுகிற தங்கத்திற்கும் கட்டுப்பாடு விதிக்க போகிறார்கள் என்பதுதான் — அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்க போகும் — அடுத்த ஷாக் …. அப்படித்தானே …. ?

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: