கடந்த 75 நாட்களாக அப்பலோவை மையம் கொண்டிருந்த மர்மம் ஒன்று கரை கடந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து முடிவுக்கு வந்திருக்கிறது.
ஜெயலலிதா.
இவரை எப்படி மதிப்பிடுவது?
மரணம் அவர் உடலைக் குடித்து விட்டது என்பதற்காக,
அந்தக் கோப்பையில் நிரம்பியிருந்த வஞ்சக நஞ்சு
அமுதமாக மாறிவிடுமா?
மரணத்தின் பொருட்டு தான் ஒருவரை மதிப்பிட வேண்டுமென்றால்
யாரும் இங்கே அயோக்கியர்கள் அல்லர்.
அல்லது,
மரணத்தை முன்வைத்து ஒருவரை புனிதராக்கிக் கொள்ள முடியுமென்றால்
அற்பனென்றோ, அற்புதனென்றோ யாராவது இருக்க முடியுமா?
எது ஆளுமை?
ஒற்றைக் கையெழுத்தில் சாலைப் பணியாளர்களை குப்பை போல் விசிரியடித்ததா?
வேட்பாளர் படிவத்தில் சுயநினைவின்றி உருட்டப்பட்ட பெருவிரலா?
சமச்சீர் கல்வியை உச்ச நீதி மன்றம் வரை விரட்டிச் சென்றதா?
பத்துமுறை உத்தரவிட்டும் கூட அண்ணா நூலகத்தை செல்லா நூலகமாக்கியதா?
மின்கட்டண உயர்வை கசப்பு மருந்தாக அறிவித்ததா?
கார்டனுக்கு கூப்பிட்டு மின்சார அமைச்சரிடம் மூவாயிரம் கோடி கறந்ததா?
அமைச்சர்களுக்கு மியூசிகல் சேர் நடத்தியதா?
துணிச்சலா? திமிரா?
ஒத்தை ரூபாய் சம்பளத்தில்
கோடிகளைக் கொட்டி நடத்திய திருமணம் திமிரா, துணிச்சலா?
பதினெட்டு ஆண்டுகளாய் ஜவ்வு மிட்டாய் தின்று
குமாரசாமியின் கால்குலேட்டரை திருடியது திமிரா, துணிச்சலா?
செம்பரம்பாக்கம் ஏரி காத்த அம்மனாய் தூங்கி விட்டு
மாண்டதெத்தனை, அழிந்ததெவ்வளவு கணக்கு சொல்லாதது திமிரா, துணிச்சலா?
இல்லை,
டாஸ்மாக்கில் பெண்களின் வாழ்வை தள்ளாட வைத்ததா?
இது நிர்வாகத் திறமையா?
துரைமுருகன் சேலை இழுத்தார்,
ஜானகி மோரில் விசம் வைத்தார்.
சென்னா ரெட்டி கையைப் பிடித்தார்,
இது என் கையெழுத்தே இல்லை.
விடாமுயற்சிக்கு இது தான் பொருளோ
91ல் ராஜிவ் காந்தி
2001ல் பெரிய கூட்டணி
2011ல் விஜயகாந்த்
2016ல் வைகோவும் தேர்தல் கமிசனும்.
ஆண்களுக்கு மத்தியில் ஒற்றைப் பெண்
கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றிய
நிர்வாகத் திறமை இது தான்
பாசிச கோமாளியின் பித்துக்கு
தமிழக மக்கள் கொடுத்த விலை
ஜெயலலிதா.
எல்லாவற்றையும் மரணத்தால் மறந்து விட வேண்டுமோ!
இதோ,
மண்டைக்காடு தொட்டு கோவை வழி முட்டி மோதிய காவி வானரங்கள்
அப்பல்லோவில் நாக்கைச் சொட்டி
பிணத்தின் பின்னே நுழைந்து நிற்கிறது.
அம்மாவை இறக்கி வைத்து விட்டு
ஆட்டத்துக்கு வாருங்கள் அடிமைகளே!
மின்னூலாக(PDF) தரவிறக்க
can you say with all that honesty about fidel castro in that same breath?
நண்பரே …. ! சாலைப்பணியாளர்களை பற்றி குறிப்பிட்டு இருக்கிறீர்கள் — அவர்களுக்கு பணியானை கொடுத்த வள்ளல் பெருமான் பின்னாளில் எந்தவித சிக்கலும் ஏற்படாத வகையில் ஏன்– அளிக்க தவறினார் என்பதை தாங்கள் தான் விளக்க வேண்டும் …
ஆயிரம் குறைகள் இருந்தாலும் – ஒரு ” சாமானியனுக்கு ” இன்றைய காலக்கட்டத்தில் வாழ்க்கை சுமைகள் ஏராளம் — பிள்ளைகளின் படிப்பு — உணவு — அன்றாட தேவைகள் என்று சொற்ப வருமானத்தில் காலம் தள்ளுவது கடினம் — அந்த சுமைகளை ஓரளவாவது குறைத்தவர் ஜெயலலிதா என்பதை ஒப்புக்கொள்ள தான் வேண்டும் …
பல விமரிசனங்கள் இருந்தாலும் — இருண்ட தமிழகத்தை — அந்த கொடுமையில் இருந்து மீட்டு — மின்சார கட்டணத்தை உயர்த்தியதையும் — தங்கள் பாணியில் கசப்பு மருந்தை கொடுத்தாலும் — இருட்டிலிருந்து மீட்டது — அதற்கு பரிகாரமாக 100 யூனிட் கட்டணமில்லாத மின்சாரம் தற்போது அளித்து — பல லட்சம் குடும்பங்கள் மின்கட்டணம் கட்ட தேவையில்லாமல் ஆக்கியது — தங்களுக்கும் தெரியும் ….
அந்தக்கால ஜெயாவைப் பற்றி ஆயிரம் குறைகள் கூறினாலும் — கொஞ்சம் பக்குவப்பட்டு போன ஜெயாவைப்பற்றி சிறிதளவு நினைவுகூர்ந்து இருக்கலாம் … அரசியல் என்கிற பம்மாத்தில் 100 சதவீதம் உத்தமர்கள் எவரும் இல்லை என்பதில் இருந்து — ஜெயா மட்டும் விலகி இருக்க முடியுமா .. ? ” தேனை எடுப்பவன் – புறங்கையை கக்கிய தீருவான் ” என்று அரும்பெரு தத்துவத்தை உதித்தவர்களும் — ஊழலை தொழில் போல கண்ணும் கருத்துமாக செய்தவர்களும் — இருக்கவே செய்கிறார்கள் ….
பொதுவுடைமை சித்தாந்தத்தின் ஒரு சிலவற்றை — அதாவது இலவசக்கல்வி — மருத்துவ வசதி — தங்கும் இல்லம் என்று அனைத்தும் அளித்து — ஏகாதிபத்தியவாதிகளுக்கு – சவாலாக இருந்த — நாட்டை வழி நடத்திய ” பிடல் காஸ்ட்ரோ ” அவர்களுக்கே ஒரு வார்த்தையில் அஞ்சலி செலுத்த மனம் இல்லாமல் போன பலரும் இருக்கத்தான் – செய்கிறார்கள் — அவர்கள் எப்படி ஜெயலலிதாவுக்கும் — ஒரு அனுதாபம் தெரிவிக்க போகிறார்கள் — என்பது தானே — கேள்வியாக தொக்கி நிற்கிறது — அப்படித்தானே …. ?