வணக்ககம் தோழர்
முதலாளித்துவத்தை தான் எதிர்க்கிறோம் முதலாளிகளை அல்ல அதுபோல ஆளும் வர்க்கத்தை தான் எதிர்க்கிறோம் ஜெயலலிதாவையோ கலைஞரையோ அல்ல என்று நண்பர் ஒருவர் மார்க்சிய பாடம் எடுத்தார்.இந்த உதாரணம் என்னுடைய கேள்வியை சரியாக விளக்கத்தான்.
உண்மையில் முதலாளி வேறு ? முதலாளித்துவம் வேறுதானா ?
ராஜ்ரம்யா கேள்வி பதில் பகுதியிலிருந்து.
வணக்கம் ராஜ்ரம்யா,
முதலாளியும் முதலாளித்துவமும் வேறு வேறா? அப்படி இருக்க முடியாது. முதலாளித்துவம் என்பது, முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது முதலாளியின் உழைப்புச் சுரண்டலை விளக்குவது. சுடாத நெருப்பு எப்படி இருக்க முடியாதோ அதுபோல சுரண்டலில் ஈடுபடாத முதலாளியும் இருக்க முடியாது. சுரண்டலில் ஈடுபடும் செயலை உள்ளடக்கிய மனிதனைக் குறிப்பது தான் முதலாளி எனும் சொல். எனவே, முதலாளியும், முதலாளித்துவமும் பிரிக்க முடியாதவைகள்.
ஆனால், முதலாளி எனும் சொல்லுக்கு உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுபவர் எனும் பொருள் கொள்ளாமல் மூலதனம் வைத்திருப்பவர் எனப் பொருள் கொண்டால் மூலதனத்தை நீக்கி விட்டு அவரின் தனி மனிதப் பண்புகளை மட்டும் ஒன்றாக்கி மூலதனம் இல்லாத மனிதர் என்றும், மூலதனம் கொண்ட முதலாளி என்றும் தனித்தனியாகப் பார்க்க இயலும். அனேகருக்கு இப்படியான பார்வை இருக்கிறது. ஆனால் இது சரியான பார்வையா?
மூலதனம் என்பது தனிப்பட்ட ஒன்றல்ல. ஆசான்களின் மொழியில் சொன்னால் கடந்த காலம் நிகழ் காலத்தின் மீது செலுத்தும் அதிகாரம். அதாவது மூலதனம் என்பது, கடந்த காலத்தில் செய்யப்பட்ட உழைப்பின் மீதான சுரண்டல் உருத்திரண்டு நிகழ் காலத்தில் உழைப்பைச் சுரண்டுவதற்க்கான கருவியாக பயன்படுகிறது. மூலதனம் என்பது வெறும் பணமோ சொத்தோ மட்டுமல்ல, அதனைக் கொண்டு தான் உழைப்புச் சுரண்டல் நடக்கிறது. ஆகவே மூலதனம் ஒரே நேரத்தில் கடந்த காலத்தின் உழைப்பைச் சுரண்டியதாகவும், நிகழ்காலத்தில் உழைப்பைச் சுரண்டுவதற்குப் பயன்படுவதாகவும் இருக்கிறது. இதை தனித்த ஒன்றாக பார்க்க முடியுமா?
அடுத்து, மூலதனம் தனி மனித பண்புகளில், சிந்தனையில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. சொந்த உழைப்பை தடை செய்யக் கோருகிறது. கடந்த கால உழைப்பை சுரண்டிச் சேர்த்தது எனும் அடிப்படையில் அது தன்னளவில் பெருகிக் கொண்டே இருக்க வேண்டும். பெருக இயலாவிட்டால் அது மூலதனமாக நீடிக்காது. இந்த அடிப்படையில் தான் அது மேலும் மேலும் உழைப்பைச் சுரண்டவும், நுகர்வில் திளைக்கவும் மனிதனை மாற்றுகிறது. எனவே, மூலதனத்தையும் அதைக் கொண்டிருக்கும் மனிதனையும் தனித்தனியாக பிரிக்கவே முடியாது.
இப்போது உங்கள் எடுத்துக்காட்டுக்கு வருவோம், ஆளும் வர்க்கத்தை எதிர்க்கிறோம் என்பதன் பொருள் என்ன? ஆளும் வர்க்கம் என்பது எதைக் குறிக்கிறது? பிற வர்க்கங்களை அடக்கி ஒடுக்குகின்ற பண்பைக் கொண்டிருக்கும் மனிதர்களை தானே குறிக்கும். அப்படி என்றால் அரசை பிதிநிதித்துவப்படுத்தும் ஆளும் வர்க்கமாக இருக்கின்ற மனிதர்களை எதிர்ப்பதாகத் தானே பொருள் கொள்ள முடியும். வர்க்கம் என்பது தனிப்பட்ட பண்பா? அல்லது அந்தப் பண்பை கொண்டிருக்கும் மனிதர்களா? ஜெயலலிதாவையோ, கருணாநிதியையோ, மோடியையோ, ட்ரம்பையோ எதிர்க்கவில்லை ஆனால் ஆளும் வர்க்கத்தை எதிர்க்கிறோம் என்பதில் ஏதாவது பொருள் இருக்க முடியுமா?
ஒருவேளை அவர்கள் இப்படி கூற நினைத்திருக்கலாம், அரசை எதிர்க்கிறோம். ஆனால், அந்த அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் தனிப்பட்ட நபர்களை எதிர்க்கவில்லை. இன்னும் எளிமைப்படுத்தினால் அரசை எதிர்க்கிறோம் ஆனால் அரசாங்கத்தை எதிர்க்கவில்லை. இப்படியெல்லாம் சுற்றி வளைப்பதற்குப் பதிலாக அரசை ஆதரிக்கிறோம் என்று நேரடியாகவே கூறி விடலாம். ஆளும் வர்க்கத்தை எதிர்ப்பதாக கூறிக் கொள்ளும் அவர்களால் ஏன் ஜெயலலிதாவையோ, கருணநிதியையோ எதிர்க்க முடியாது? ஒவ்வொருவரின் சொல்லும் செயலும் அவரவர் வர்க்கத்தையே எதிரொலிக்கிறது. என்றால், ஜெயலலிதாவும் கருணாநிதியும் பாட்டாளி வர்க்கத்தை எதிரொலிக்கிறார்களா?
தனிப்பட்ட சில குணங்களைக் கொண்டு ஒருவரை மதிப்பிட்டு அந்த மதிப்பீட்டின் அடிப்படையை மூலதனத்தோடு அல்லது உழைப்புச் சுரண்டலோடு பொருத்துவது அபத்தமானது. கருணாநிதி சிறந்த வசனகர்த்தாவாக இருக்கலாம், ஜெயலலிதா சிறந்த நடிகையாக இருக்கலாம். இந்த அடிப்படையிலிருந்து அவர்களின் அரசியல் வாழ்வை பார்க்க முடியுமா? ஹிட்லர் குழந்தைகளை ஆழமாக நேசித்தவர் என்பதை அடிப்படையாகக் கொண்டு அவரை மதிப்பிட்டால் அது பெரும் பிழையாக அல்லவா போகும். உற்பத்தி சார்ந்து சமூகத்தில் ஒருவரின் பங்களிப்பு எந்த இடத்தில் இருக்கிறது. வர்க்க ரீதியாக ஒருவரின் சிந்தனை செயல்பாடு எதற்கு ஆதரவாக இருக்கிறது என்பதை வைத்தே அவரை மதிப்பிட முடியும்.
பிரச்சனையின் தொடக்கப் புள்ளியே இது தான். மார்க்சியத்தில் அரசு பற்றிய புரிதல் தலையாய ஒன்று. அரசு என்பதை சரியாக புரியாத வரை குழப்பம் நீடிக்கவே செய்யும். அரசு எப்போதும் ஒரு வர்க்கத்தை சார்ந்தே செயல்படும், சமூகத்துக்கு பொதுவானதாய் காட்டிக் கொள்ளும் அதேநேரம் சமூகத்தை விட மேம்பட்டதாய் இருத்திக் கொள்ளும். இந்த அடிப்படையிலிருந்து பார்த்தால் ஆளும் வர்க்கத்தையும், ஜெயலலிதாக்களையும், கருணாநிதிகளையும் பிரிக்க முடியாது. முதலாளியையும், முதலாளித்துவத்தையும் பிரிக்க முடியாது.
Why no jyoti basu lenin or Stalin in ஆளும் வர்க்கம்
நண்பரே … ! ” முதலாளித்துவம் ” என்பது — பொருட்களை வழங்கும் ஒரு கருவி — அது உற்பத்தி செய்யாது — மற்றவர்கள் உழைப்பில் உருவாவதை விற்கும் — முதலாளி என்ற உருவத்தில் பணத்தை நம்மிடம் இருந்து கல்லாக்கட்டி கொண்டே இருக்கும் …. அப்படித்தானே …. ?
அடுத்து ஒரு கேள்வி —– ” வர்க்க போராட்டத்திற்கு ” இறுதி [ முடிவு ] உண்டா … எப்போது … ?