உயர் மதிப்பு கொண்ட ரூபாய்த் தாள்கள் மதிப்பிழந்தவைகளாக அறிவித்து நாற்பது நாட்களைக் கடந்து விட்டது. கருப்புப் பணம் என்றார்கள், கள்ளப்பணம் என்றார்கள், ஊழலை ஒழிக்க என்றார்கள் சல்லடையில் அள்ளிய தண்ணீர் போல் எதுவும் நிற்கவில்லை மக்களிடம். கடைசியில் நிதியமைச்சரின் வாயிலிருந்தே பூனைக்குட்டி வெளியே வந்தது, கேஷ்லெஸ் எகானமி தான் எங்கள் நோக்கம் என்று. அதாவது கருப்புப் பணத்தை, கள்ளப்பணத்தை ஒழிப்பதெல்லாம் எங்கள் நோக்கமல்ல நாட்டில் ரொக்கமற்ற பொருளாதாரத்தை கொண்டு வருவதே எங்கள் நோக்கம் என்கிறார்கள். கடந்த நாற்பது நாட்களுக்கும் மேலாக மக்கள் அடைந்த துன்பம் எழுதி மாளாது. அத்தனையும் கருப்புப் பணம் ஒழிக்கப்படும் எனும் போதையில் தான் கரைக்கப்பட்டது. மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக, அண்மைக்கால தேவைகளுக்காக சேர்த்து வைத்த பணம் இப்போது வங்கிகளின் பிடியில். வங்கிகளோ கார்ப்பரேட்டுகளின் பிடியில்.
மோடியின் கருப்புப் பண பம்மாத்து பல்லிளித்துப் போனதும், அடுத்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். நாடு முழுவதும் ஆங்காங்கே ரெய்டுகள் நடத்தி பல்லாயிரம் கோடி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணமும், நகைகளும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் இரண்டு முக்கியமான செய்திகள் இருக்கின்றன. 1. ரெய்டு செய்யப்பட்டவர்களில் வங்கி நிர்வாகிகளும் அடக்கம். 2. கைப்பற்றப்பட்ட பணத்தில் கோடிகணக்கில் புதிய 2000 ரூபாய் தாள்கள் இருந்தன.
வங்கிப் பரிமாற்றம் குறித்து தற்போது அதிகம் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களை வங்கிப் பரிமாற்றத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்பதில் மோடி மட்டுமல்ல, மன்மோகன் சிங்கும் முனைப்பு காட்டினார். ஏனென்றால், மக்கள் அனைவரும் வங்கிகளின் மூலம் பரிமாற்றங்களை மேற்கொள்வது என்பது பெருமுதலாளிகளுக்கு ஆதரவான நடவடிக்கை. இதற்காகத் தான் ஜன் தன் திட்டம் என்றும், மானியங்களை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிலேயே சேர்த்து விடுகிறோம் என்றும் ஆசை காட்டினார்கள். வங்கிப் பரிமாற்றத்துக்கு பழகி விட்டால் ஊழல் இருக்காது திருட்டு இருக்காது என்று பட்டியலிட்டு தூண்டிப் பார்த்தார்கள். இப்போது ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கழுத்தில் கை வைத்து மக்களை வங்கிகளுக்குள் நெட்டித் தள்ளியிருக்கிறார்கள்.
நவம்பர் எட்டாம் தேதி இரவில் மதிப்பிழக்கச் செய்யப்பட்டது தோராயமாக 13 லட்சம் கோடி. இப்போது வரை வெளியிடப்பட்டிருக்கும் புதிய ரூபாயின் மதிப்பு தோராயமாக 5.5 லட்சம் கோடி. மீதமுள்ள 8 லட்சம் கோடி வெளியிடப்படுமா? அவ்வாறான எந்த உறுதியும் யாரிடமிருந்தும் வரவில்லை. ஏனென்றால் பணத் தட்டுப்பாடு நீடிக்க வேண்டும். பணத் தட்டுப்பாடு நீடித்தால் தான் மக்கள் வங்கிகளை தொடர்ந்து நாடுவார்கள் என்பதால் முழு மதிப்புக்கும் புதிய பணத்தாள்கள் அடித்து வெளியிடப்பட மாட்டாது.
இதன் அடிப்படையில் அந்த இரண்டு செய்திகளையும் பார்த்தால், ஒருவர் 2000 ரூபாய் மட்டுமே பெற முடியும் என்ற நிலையில் கோடிக்கணக்கான புதிய 2000 ரூபாய் கட்டுகளை எப்படி ஒருவர் வைத்திருக்க முடியும்? ஒரு வங்கி நிர்வாகி எந்த வகையில் தனிப்பட்ட ஒருவருக்கு கோடிக் கணக்கான ரூபாயை கொடுக்க முடியும்? விவசாயிகள், கூலித் தொழிலாளிகள், அடித்தட்டு உழைக்கும் மக்கள் என பல்லாயிரம் செயல்படுத்தப்படாத வங்கிக் கணக்குகள் ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் இருக்கின்றன. இது போன்ற செயல்படாத வங்கிக் கணக்குகளில் கணக்கு வைத்திருப்பவரின் அனுமதியைப் பெறாமலேயே அந்த வங்கி நிர்வாகிகளால் பணத்தை போடவும் எடுக்கவும் முடிந்திருக்கிறது. அதாவது, போட்டு எடுத்ததாக கணக்கு காட்ட முடிந்திருக்கிறது. ஏற்கனவே நகைக்கடன் வாங்கியவரின் வங்கிக் கணக்கிலிருக்கும் பணத்தை அவருடைய அனுமதி இல்லாமலேயே கடனுக்கான தவணையாக பணத்தை எடுத்து மாற்றிய செய்திகள் செய்தித்தாள்களில் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. மட்டுமல்லாது அந்த நடவடிக்கை நியாயப்படுத்தவும் படுகிறது. ஏற்கனவே செல்பேசிகளில் நாம் செயல்படுத்தாத, நமக்குப் புரியாத பல வசதிகளை நீங்கள் செயல்படுத்தினீர்கள் என்று சொல்லி இருப்பில் இருக்கும் பணத்தை கொள்ளையடித்துக் கொள்வது செல்பேசி வைத்திருக்கும் ஒவ்வொருவரின் அனுபவமாக இருக்கிறது. இதை எதிர்த்து யாரும் எதுவும் செய்ய்துவிட முடியாத நிலை தான் நீடிக்கிறது. இவ்வாறான சூழலில் தான் மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான பணம் வங்கிகளில் குவிக்கப்பட்டு ரொக்கமற்ற பரிமாற்றத்துக்குள் மக்கள் திணிக்கப்படுகிறார்கள்.
ரொக்கப் பரிமாற்றத்தில் மக்களுக்கு எந்த இழப்பும் இல்லை. ஆனால் வங்கிப் பரிமாற்றம், கடன் அட்டைகள், பண அட்டைகளின் மூலம் பரிமாற்றங்களைச் செய்யும் போது, ஒவ்வொரு பரிமாற்றத்திலும் சேவைக் கட்டணமாக குறிப்பிட்ட தொகையை மக்கள் இழக்க வேண்டியதிருக்கும். மக்கள் தங்கள் தேவைக்கான அன்றாட வணிக நடவடிக்கைகளைக் கூட அட்டைகள் மூலம் தான் நடத்திக் கொள்ள வேண்டும் என மக்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.. அவ்வாறென்றால், ஒவ்வொரு நடவடிக்கைக்கும் குறிப்பிட்ட அளவு பணத்தை இழக்க வேண்டும். இதன்படி, ஒரு நாளைக்கு, ஒரு மாதத்துக்கு, ஒரு ஆண்டுக்கு எவ்வளவு பணத்தை இழக்க வேண்டியதிருக்கும்? நம் நாட்டின் மக்கட்தொகை 120 கோடிக்கும் அதிகம். கோடிக்கணக்கான மக்கள், பல கோடிக்கணக்கான வணிக நடவடிக்கைகள். இதன் மூலம் மக்கள் இழக்கும் பணம் ரொக்கமற்ற பரிமாற்ற நிறுவனங்களை நடத்தும் ஒரு சில பன்னாட்டு, தரகு நிறுவனங்களின் கைகளில் சென்று குவியும். இதில் மக்களிக்கு ஏதாவது பலன் இருக்கிறதா?
ரொக்கப் பரிமாற்றத்திலிருந்து ரொக்கமற்ற பரிமாற்றத்துக்கு மாறியே ஆகவேண்டும் என்று என்ன அவசியம் வந்திருக்கிறது? யாருக்கு அவசியம் வந்திருக்கிறது? பணப் பரிமாறத்துக்கு முன்பு பண்டப் பரிமாற்றம் நடைமுறையில் இருந்தது. நெல்லைக் கொடுத்து பருத்தி வாங்க வேண்டும், மிளகைக் கொடுத்து சர்க்கரை வாங்க வேண்டும். இந்த பண்டப் பரிமாற்றம் ஒழிந்து பணப் பரிமாற்றம் வந்த போது மக்களுக்கு சில நன்மைகள் இருந்தன. பெரிய வணிக நடவடிக்கைகளை யாரும் செய்யலாம் எனும் சுதந்திரம் கிடைத்தது. கட்டுப்பாடுகள் அகன்று யாரும் எந்தப் பொருளையும் வாங்கலாம் எனும் சுதந்திரம் கிடைத்தது. இவைகளில் அந்த நேரத்தில் தேவைகளுக்கான உற்பத்தியிலிருந்து நுகர்வுக்கான உற்பத்திக்கு மாறிச் சென்ற உடமையாளர்களின் நலனும் அடங்கியிருந்தது என்றாலும் மக்களும் அதில் பலனடைந்தனர். ஆனால் உடமையாளர்களுக்கேயான முதன்மையான ஒரு நன்மையும் அதில் இருந்தது. அது பரிமாற்றத்தின் இரகசியத் தன்மை.
உடமையாளன் ஒருவன் கிராம அலுவலரிடம் ஒரு வண்டி எள் தருகிறேன் அதற்குப் பதிலாக ஆற்று நீரை தாராளமாக பயன்படுத்த எனக்கு அனுமதி தாருங்கள் என்று கேட்டால் அந்த நடவடிக்கையில் ஏதாவது இரகசியம் இருக்குமா? இன்னாரிடமிருந்து இன்னாருக்கு ஒரு வண்டி எள் எதற்காக செல்கிறது என்று மக்கள் சிந்திக்க்கும் அளவுக்கு அந்தச் செயல் வெளிப்படையாக நடைபெறும். பணப் பரிமாற்றம் இந்த வெளிப்படைத் தன்மையை அழித்து இரகசியத் தன்மையைக் கொண்டு வந்தது. பண்டப் பரிமாற்றத்திலிருந்து பணப் பரிமாற்றத்துக்கு நகர்ந்த நிகழ்வில் உடமையாளனுக்கு கிடைத்த ஆகக் கூடிய பலன் இது தான். மொத்தத்தில் பரிமாற்றத்திற்காகவே பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டதன் அடிப்படையில் உடமையாளனின் பொருட்கள் விற்றுத் தீர்வதற்கும், வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காகவும் கொண்டுவரப்பட்ட மாற்றம் தான் பணப்பரிமாற்றம். இதில் உழைக்கும் மக்களுக்கு கிடைத்த பலன் பண்டமாற்றில் இருந்த ஏமாற்று குறைந்ததும், எல்லாப் பொருட்களையும் யாராலும் வாங்க முடியும் என்பதும் தான். இதன் பின்னர் தான் சமூகப் பணத்தை தனிநபர் பயன்படுத்தும் நோக்கில் வங்கிகள் உருவாயின.
இந்தியாவைப் பொருத்தவரை தனியார்மயம் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட 90 களுக்குப் பிறகு வெளிவந்த ஊழல்களை பட்டியலிட்டால், அதற்கு பக்கங்கள் போதாது. இவை அனைத்தும், ரொக்க அல்லது வங்கி பரிமாற்றத்தின் மூலம் நடந்தவைகள். இவற்றின் பிற்கால ஊழல்களின் முதன்மையான அம்சம் என்றால் அரசியல்வாதிகளையும், அதிகாரவர்க்கத்தினரையும் தாண்டி கார்ப்பரேட்டுகளின் கைகளும் அந்த ஊழல்களின் மையமாக இருக்கின்றன என்பது அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது பண்டப் பரிமாற்றத்தின் போது இருந்த வெளிப்படைத்தன்மை போன்று இல்லாவிட்டாலும் நுணுக்கமான அளவில் அதே போன்ற தொரு வெளிப்படைத் தன்மை ஏற்பட்டிருக்கிறது. இதை மறைப்பதற்காக கார்ப்பரேட்டுகளுக்கு சுவிஸ் வங்கி, பார்டிசிபேட்டரி நோட்டுகள் போன்றவற்றுக்கும் அப்பாற்பட்டு ஒரு முறை தேவைப்படுகிறது. அந்த முறை தான் டிஜிட்டல் பரிமாற்றம் எனும் ரொக்கமற்ற பரிமாற்றம்.
பண்டப் பரிமாற்றத்திலிருந்து ரொக்கப் பரிமாற்றத்துக்கு மாறியது உடமையாளர்களின் நலனுக்காதத்தான் என்றாலும், மக்களுக்கான நலனும் அதில் உள்ளடங்கி இருந்தது. ஆனால் இந்த ரொக்கமற்ற பரிமாற்றத்தில் மக்களுக்கான நலன் துளியும் இல்லை என்பதோடு மட்டுமல்லாமல் மக்களின் உழைப்பை இன்னும் கூடுதலாக சுரண்டுவதற்கும் வழியேற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மொத்த ரொக்கமற்ற பரிமாற்றம் இன்னும் 15 விழுக்காட்டை தாண்டாத நிலையிலும் பேடிஎம் எனும் ஒரு நிறுவனம் தங்களிடம் நாளொன்றுக்கு 70 லட்சம் பரிமாற்றங்கள் நடப்பதாக அறிவித்திருக்கிறது. அப்படியென்றால் இது முழு அளவை எட்டும் போது அது எந்த அளவுக்கு மக்களின் உழைப்பைச் சுரண்டியிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
நமக்கு பலனளிக்காத நம்மை ஒட்டச் சுரண்டும் இந்த அட்டைகள் நமக்குத் தேவையா?
முதலில் பார்வை நிலைத்து — அப்புறம் பிதற்றி — அப்புறம் கிறுக்கி — அப்புறம் சிரித்து — அப்புறம் துணிகளை கிழித்து — அப்புறம் இஷடத்திற்கு குதித்து — ஓடி — பிடித்து — கடித்து — சேஷ்டைகள் புரிந்து — தனக்கு தானே எதையாவது செய்துகொண்டு இருக்குமே — ஒன்று அது போல …..
செல்லா நோட்டுகள் — அப்புறம் கள்ள கருப்புப்பண ஒழிப்பு — சேமிப்புக்கு கெடுபிடி — ” போட – எடுக்க ” அடாவடி தனம் — அப்புறம் ரொக்கமற்ற பரிவர்த்தனை — அப்புறம் மின் பரிவர்த்தனை — அப்புறம் வங்கி பரிமாற்றம் — அப்புறம் மாற்றி – மாற்றி உத்திரவுகளுக்கு மேல் உத்திரவு — அப்புறம் மிரட்டல்கள் — அப்புறம் தேச துரோக முத்திரைகள் — ரெய்டுகள் — புது நோட்டுகள் அச்சடித்து வந்துகொண்டே இருக்கிறது என்கிற செய்திகள் — அடித்து வந்த நோட்டுகள் பெரும் முதலைகளுக்கு விநியோகம் — மக்களுக்கு பெப்பே — மூடி மறைக்க ஏகப்பட்ட மாய்மாலங்கள் — ஐயோ … தாங்க முடியலை …. மேலே உள்ளதுக்கும் — இதுக்கும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா … நண்பரே – உங்களுக்கு ….?
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் செங்கொடி அவர்களே! அருமையாக எழுதி இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள். ஆனால் இஸ்லாம் என்றால் மட்டும் உங்கள் பார்வை ஏன் சுறுங்கி விடுகிறது. இன்ஷா அல்லாஹ் நீங்கள் விரைவில் மனம் திரும்புவீர்கள். அந்த வாய்ப்பை அல்லாஹ் எங்களுக்கு வழங்குவானாக… ஆமீன்.