நவம்பர் எட்டாம் தேதி மோடியிடமிருந்து கிளம்பிய பணத்தாள் மதிப்பிழப்பு எனும் ஓங்கலை (சுனாமி) மக்களின் வாழ்வாதாரத்தை வாரிச் சுருட்டிக் கொண்டது, இன்னமும் சுருட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் மோடியும் அதன் வீழ்படிவுகளும், அரசும் அதன் காலாட்படைகளும் அது சரியான நடவடிக்கை என்று தடிக் கம்புகளால் நம்மை கனிய வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டின் இறுதி நாளன்று, மோடி விதித்த 50 நாள் கெடு முடிந்த பின்னரும் நிலமை சீரடையவில்லை என்பதால் மோடியைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை மோடவாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு வந்த பள்ளிக் கரணை காவல் துறையினர் இந்த ஆர்ப்பாட்டத்தை தடியடி நடத்தி கலைத்த்ததுடன், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளனர். குறிப்பாக உதவி ஆய்வாளர் ரவி. இந்த வக்கிரத்தை கண்டித்த தோழர்கள் 9 பேரை காவல்துறை வாகனத்தில் கடத்திச் சென்று லத்தியாலும், துப்பாக்கிக் கட்டையாலும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். தகவலறிந்து தென்சென்னை சி.பி.எம்மினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களை அடைத்து வைத்திருந்த மண்டபத்துக்குச் சென்று கடத்திச் செல்லப்பட்ட தோழர்கள் குறித்து விபரம் கேட்டனர். இது குறித்து எந்த வித விபரங்களையும் தெரிவிக்காத அங்கிருந்த காவல்துறையினர், கேள்வி எழுப்பியவர்கள், பொதுமக்கள், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் உட்பட அனவரையும் அரை கிலோமீட்டர் தூரத்துக்கு விரட்டிச் சென்று அடித்து துவைத்துள்ளனர். வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து சி.பி.எம் மாநிலச் செயலாளர் ஜி.மகேந்திரன் விடுத்துள்ள அறிக்கை இங்கே.
காவல்துறையினர் பாலியல் ரீதியாக சீண்டுவதை ஒரு உத்தியாகவே கடைப்பிடித்து வருகின்றனர். பொதுவாக எந்த விதமான போராட்டத்தை யார் நடத்தினாலும் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்தை சீர்படுத்துதல் எனும் பெயரில் மூக்கை நுழைக்கும் காவல் துறை போராட்டத்தை சீர்குலைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். தடியடி நடத்தி கலைப்பது தான் அவர்கள் இலக்காக இருக்கும். பேச்சுவார்த்தை நடத்தினாலும் பேச்சுவார்த்தையின் போக்கு போராட்டத்தை கலைப்பதை நோக்கியே இருக்கும். போராட்டத்தை நடத்தும் முன்னணியாளரை பொது இடத்தில் இழிவாகப் பேசி தாக்குவது, பொய்வழக்கு போட்டு சிறையில் உறுப்புகள் சிதையுமளவுக்கு அடித்து நொறுக்குவது என்பதை, அவர்கள் எதிர்காலத்தில் போராட்டத்தில் கலந்து கொள்வதில் இருந்து விலக்குவது எனும் நோக்கில் நடத்துகிறார்கள்.
இதுவே பெண்கள் என்றால், பாலியல் ரீதியாக சீண்டுவது என்பதை இனி போராட்டத்தில் கலந்து கொள்வதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே கூடாது என்பதற்காக திட்டமிட்டு நடத்துகிறார்கள். மூடு டாஸ்மாக்கை போராட்டத்தின் போது மண்டபத்தில் அடைக்கப்பட்ட தோழர்களை மாலை விடுவிக்க முன்வந்தது காவல்துறை. ஆனால் வேறு காரணங்களுக்காக இரவானாலும், ரிமாண்ட் செய்தாலும் பரவாயில்லை உய்ரதிகாரி வந்து பேச்சு நடத்தாதவரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என தெரிவித்த போது ஒரு காவல்துறை அதிகாரி தோழர் ஒருவரைப் பார்த்து இரவில் தங்குவதற்கு உன் கணவனிடம் அனுமதி வாங்கி விட்டாயா? என்று வக்கிரமான பொருளில் கேட்டார். இப்படி போராட்டங்களில் கலந்து கொள்ளும் பெண்கள் ஆபாச வசவுகளை, வக்கிரமான பொருளில் திட்டப்படுவதை கேட்பது ஒவ்வொரு முறையும் நடக்கிறது. அது இன்னும் பரிணாம வளர்ச்சி பெற்று பொது இடங்களில் அங்கங்களைத் தொடுவது, ஆடைகளை இழுத்துக் கிழிப்பது என்று விரிவடைந்திருக்கிறது. இது ஒன்றிரண்டு அதிகாரிகள் செய்யும் தவறு என்று எண்ண முடியாது. உளவியல் ரீதியாக தாக்குவது எனும் அடிப்படையில் திட்டமிட்டு நடத்தப்படுகிறது.
தனிப்பட்ட பொறுக்கிகள், சமூக விரோதிகள் கூட பொது இடங்களில், பலர் பார்த்துக் கொண்டிருக்கையில் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் அரசு பொறுக்கிகள் இன்னும் அதிகமாக செல்வதற்கும் தயாராக இருக்கிறார்கள். வாச்சாத்தியில் பழங்குடியினப் பெண்கள் வண்புணர்வு செய்யப்பட்ட வழக்கில், அந்த நேரத்தில் முதல்வராக இருந்தவர், அந்தப் பெண்கள் பணத்துக்காக காவல்துறை மீது அப்படி பழி சுமத்துகிறார்கள் என்று சட்டமன்றத்திலேயே கூறினார். இந்த பாதுகாப்பு தான் அவர்களை எந்த எல்லைக்கும் செல்ல வைக்கிறது. சட்டம், நீதி உள்ளிட்ட எதுவும் அவர்களுக்கு தடையில்லை. அண்மையில் கோவையில் ஒரு இழவை முன்னிட்டு காவி வானரங்கள் 18 கிலோமீட்டர் தூரத்திற்கு கடைகளை நொறுக்கி, திருடி, வாகனங்களை சேதப்படுத்தி ஊர்வலம் நடத்திய போது அவர்களுக்கு பாதுகாப்பாய் இருந்து வேடிக்கை பார்த்த காவல்துறை அரசுக்கு எதிரான போராட்டம் என்றால் நொடிகளில் பாய்ந்து குதறுகிறது. ஜாதி மோதல்களை தூண்டும் வண்ணம் ஆதிக்க ஜாதியினர் ஒட்டும் சுவரொட்டிகளை, பார்க்கவே கண்கூசும் படு ஆபாசமான நீலப்பட சுவரொட்டிகளை அனுமதிக்கும் காவல் துறை அரசை எதிர்த்து மக்களை விழிப்படையச் செய்யும் நோக்கில் ஒரு சுவரொட்டி ஒட்டினால், ஒட்டிய பசை உலர்வதற்குள் கிழித்துப் போடுகிறது, ஒட்டியவர்கள் மீது பொய்வழக்கு போடுகிறது. இப்படி எடுத்துக்காட்டுகள் ஆயிரம் கூறலாம். இதன் உள்ளடக்கத்தில் இருக்கும் உண்மை என்ன? என்பதே கேள்வி.
மக்களுக்கு எதிரான எந்த சமூக விரோதியையும் காப்பாற்றும், கூட்டு வைத்துக் கொள்ளும், கொள்ளையடிக்கும் காவல்துறை, அரசுக்கு எதிராக போராடும் எவரையும் கொஞ்சமும் அனுமதிப்பதில்லை. சமூக விரோதிகளோடும், குற்றவாளிகளோடும் கூடிக் குலாவும் போது குறுக்கே வராத சட்டம் நீதி போன்ற மாய வஸ்துகள், மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடும் போது அதை தடை செய்வதற்கு பாட்டை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதேநேரம் அரசுக்கு எதிரான போராட்டங்களை தடுக்கிறது எனும் ஒரே காரனத்துக்காக பாலியல் வண்புணர்வு உள்ளிட்ட மக்களுக்கு எதிரான எந்தகைய குற்றங்களிலிருந்தும் காவல்துறையை பாதுகாக்கிறது அரசு. இது தான் அந்த உண்மை. அரசு என்பது மக்களுக்கானதில்லை, அதனால் காவல்துறையும் மக்களுக்கானதில்லை. அரசு என்பது மக்களுக்கு எதிரானது, அதனால் காவல்துறையும் மக்களுக்கு எதிரானது.
காவல்துறை உங்கள் நண்பன் எனும் அறுவறுப்பான பொய்யை, அது பொய் என்று தெரிந்த பின்னும் எதற்காக உண்மை போல பாவித்துக் கொண்டிருக்க வேண்டும்? அவர்கள் அரசு சீருடையை அணிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக இன்னும் எத்தனை நாள் அந்தப் பொறுக்கிகளைப் பொறுத்துக் கொண்டிருக்கப் போகிறோம்?
பொறுக்கிகளால் தாக்கப்பட்ட, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட தோழர்கள் இங்கே நடந்தவைகளை விவரிக்கிறார்கள்.
ஒரு ” ஒப்புக்கு சப்பாணி ” போல முதல்வர் …. அவர் செயல்பட விடாமல் அடுத்த முதல்வர் என்கிற அழுத்தம் கொடுக்கும் அடிமைகள் கூட்டம் — மாபியா கூட்டத்திடம் சிக்கி முழி பிதுங்கி செய்வதறியாது தடுமாறும் அரசு இயந்திரம் — இது போன்ற நிலையில் எந்த கீழ்த்தரமான செயலை செய்தாலும் – கேட்பாரில்லை என்கிற துணிச்சல் — எல்லாம் சேர்ந்து நடத்திய கொடூரம் ….
இதையெல்லாம் கண்டும் – காணாததைப்போல இருக்கும் மற்ற கட்சிகள் — ஜாதி கட்சிகள் …. ஒரு கண்டனமும் தெரிவிக்க துப்பில்லாத ஊடகங்கள் — சமூக ஆர்வலர்கள் ….. மகா கேவலமான நிலை …. காலனி ஆதிக்கத்தில் கூட நிகழாத படு பாதகமான செயல் — இம் .. என்றால் அடி – உதை … ஏன்.. என்றால் சிறை வாசம் — சொரணையுள்ளவர்களே நாம் எந்த நூற்ராண்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை கொஞ்சம் நினைத்து செயலாற்றுங்கள் ….
” நாம் எந்த ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டும் என்று தீர்மானிப்பது நமது எதிரிகள் தான் ” என்று அன்றொருவன் கூறியதை — நடைமுறை படுத்த நம்மை தூண்டும் ஏகாதிபத்திய எதேச்சார சக்திகளுக்கு என்ன பதில் கூற போகிறோம் …. ?
very sad and vulgar on govts