ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகிறார்கள். தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இடையே பொங்கல் விடுப்பு விடுபட்டதும் வந்து போனது. ஆனால் இப்படி பொங்கி எழுந்து போராடும் அளவுக்கு ஜல்லிக்கட்டுக்கு என்ன கனம் இருக்கிறது? வீர விளையாட்டு, நாட்டு மாடுகள், தமிழர் அடையாளம் இத்யாதி, இத்யாதிகளை.. .. .. கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு பார்ப்போம். மாட்டுக் கொம்பின் கூர்ப்பில் கண்டுபிடிக்கப்பட்ட வீரமா? கொத்துக் கொத்தாய் மடிந்து போன விவசாயிகளின் தற்கொலையில் தென்படாத ஈரமா? எது முதன்மையானது? மாணவர்களே! கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்றானே ஒரு கிழவன். அவனை தமிழன் இல்லை என அறிவித்து விடலாமா?
சர்வ நிச்சய்மாக உங்கள் போராட்ட உணர்வை குறைத்து மதிப்பிட விருப்பமில்லை. ஆனால் உங்கள் போராட்டம்.. .. ? ஜல்லிக்கட்டில் ஓராயிரம் கேள்விகள் இருக்கின்றன. அவைகளை இங்கு எழுப்பவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கருகிய பயிர்களைப் போல் தாங்களும் கருகி வீழ்ந்து கிடக்கிறார்களே, இதை விட ஜல்லிக்கட்டு எந்த விதத்தில் இன்றியமையாததது?
நாடு முழுவதிலும் கடந்த 25 ஆண்டுகளில் தோராயமாக 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போயிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய இந்தப் பிரச்சனை வெகு மக்களிடம் எந்த தக்கங்களையும் ஏற்படுத்தாமல் கடந்து போயிருக்கிறது. அதாவது கடந்து செல்ல வைக்கப்பட்டிருக்கிறது. தீவிரவாதம், குண்டு வெடிப்பு முதல் தேசபக்தி வரை பல்வேறு செய்திகள் இந்த கடந்து போதலுக்கு பக்கமேளமாக ஆகியிருக்கின்றன. உங்கள் போராட்டமும் அவ்வாறான ஒரு பக்கமேளமா எனும் மெல்லிய ஐயம் இழையோடுகிறது.
எந்த ஒரு அரசியல் இயக்கமோ, அமைப்போ முன்னெடுக்காமல் சமூக வலைத்தளங்களின் உந்துதலால் மட்டுமே ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் அணிதிரண்டிருக்கிறார்கள். அரசுக்கு எதிரான செய்திகள் சத்தமில்லாமல் நீக்கப்படுவதும், திடீரென ஒரு செய்தி வைரலாகி இணையத்தை கலக்குவதும் இயல்பானது போன்ற ஒப்பனையுடன் உலாவருகின்றன. அண்மை ஆண்டுகளில் மத்திய தரைக்கடல் நாடுகளில் நடத்தப்பட்ட வானவில் புரட்சிகள் நிழலாடுகின்றன. அந்தப் போராட்டங்களில் எதை எதிர்த்து மக்கள் திரண்டார்களோ அது தான் இப்போதும் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. போராடிய மக்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏகாதிபத்தியத்துக்கு அடிமைத்தனம் மட்டுமல்ல, அவ்வப்போது கிளர்ச்சிகளும் தேவைப்படுகின்றன.
காவிரி கழிமுக பகுதிகளில் கொத்துக் கொத்தாக மடியும் விவசாயிகள் அச்சு, காட்சி ஊடகங்களிலோ, வெகுமக்களிடமோ பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை என்பதன் உள்ளீடு, அதன் பின்னே ஏகாதிபத்தியம் இருக்கிறது என்பதில் மையம் கொண்டிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக காவிரியில் தண்னீர் திறந்து விடப்படவில்லை என்பதன் பின்னே மீத்தேன், நியூட்ரினோக்களும், ஷெல்கேஸ், கெயில்களும் இல்லை என்று கூற முடியுமா?
அந்நிலங்களை பாழ்நிலங்களாக வைத்திருக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. போஸ்கோவுக்கு எதிராக நியாம்கிரி மக்கள் நடத்திய போராட்டங்கள் எதிர்மறையாக அவர்களுக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் அவை. நேர்மறையாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய பாடங்கள் எங்கே? ஜல்லிக்கட்டு போராட்டங்கள் யாருக்கு உதவுவதற்காக?
நூற்றைம்பது விவசாயிகள் வரை தங்களை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். மிகவும் தாமதமாக கர்நாடகா, கேரளாவுக்குப் பிறகு வறட்சி மாநிலம் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசோ 17 விவசாயிகள் மட்டுமே உயிரிழந்திருப்பதாக கூறியுள்ளது. மரணமடைந்த விவசாயிகளுக்கு 3 லட்சம் நிவாரணமகவும், ஏக்கருக்கு 5500 இழப்பீடாகவும் அறிவித்து எச்சைக்கையால் காக்காய் விரட்டியிருக்கிறது. விவசாயிகளை தூக்குக் கயிற்றின் முன்னே நிருத்தி, அவர்களின் தலையை சுருக்கினுள் மாட்டி விட்ட செயல் வரை இந்த அரசுகளும் அதன் கொள்கைகளும் செய்தவை. ஆற்று மணல் கொள்ளை தொடங்கி, நீர்நிலைகளை நாசமாக்கியது, இருக்கும் சொற்ப நீராதாரத்தையும் பன்னாட்டு நிறுவங்களுக்கு தாரை வார்த்தது, எந்த வரைமுறைகளும் இல்லாமல் தொழிற்சாலைகளை அமைக்க அனுமதித்து சுற்றுச் சூழலை நாசமாக்கியது, கனிம வளங்களை எடுக்கிறோம் என்ற பெயரில் காடுகளை மொட்டையடித்தது என அனைத்தும் சேர்ந்து தான் மழை வளத்தை அரித்தது. எல்லாவற்றையும் முதலாளிகளின் நலன் எனும் அடிப்படையிலிருந்து செய்து விட்டு, இயற்கை பொய்து விட்டது, வயோதிகத்தால் இறந்தார்கள் என்று இப்போது சொல்கிறதே இந்த அரசு. ஆளும் கட்சி எதிர்க்கட்சி வித்தியாசமில்லாமல் அனைத்து வண்ண தனியார்மய தாசர்களும் ஜல்லிக்கட்டை ஆதரித்து நிற்கிறார்களே. என்றால் இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் யாரைக் காப்பாற்ற?
பொங்கல் என்றால் அது அறுவடைத் திருவிழா. பாளம் பாளமாய் நிலம் வெடித்து அந்த வெடிப்பின் வழியே விவசாயிகளின் உயிர் காய்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் பொங்கல் கொண்டாடுவது என்பதன் பொருள் என்ன? இழவு வீட்டில் கொண்டாட்டமா என்பது ஒரு புறம் இருக்கட்டும். உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் இடத்துக்கு எதிரே உண்ணும் விரதம் நடத்துவது போல், இந்த நேரத்தில் பொங்கல் கொண்டாடுவது செத்துப் போன அந்த விவசாயிகளைக் கேலி செய்வது போல் இல்லையா?
இதோ, செத்துப்போன விவசாயிகளுக்கு நீதி வேண்டும் என்று குடந்தை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டத் தீப்பொறியை பற்ற வைத்திருக்கிறார்கள். கல்லூரிகளில் தீ பரவட்டும்.