நெடுவாசலை நீதிமன்றத்தில் தீர்க்க முடியாது

neduvasal

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் விரைவில் பொதுநல வழக்கு தொடரவிருப்பதாக, “என் தேசம் என் உரிமை” என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் என்பவர் கூறியிருப்பதாக இன்றைய தமிழ் தி இந்து நாளேட்டில் செய்தி வெளிவந்திருக்கிறது.  வழக்கு தொடுப்பதன் விபரீத விளைவு தெரிந்துதான் இந்த இளைஞர்கள் செய்கிறார்களா தெரியவில்லை. வழக்கு தொடுப்பது என்பது நெடுவாசல் மக்களின் போராட்டத்தை தோற்கடிப்பதற்கு மட்டுமே பயன்படும் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம்.

கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நமக்கு ஒரு பாடம். அணு உலை நிறுவுவது என்பது அரசின் கொள்கை முடிவு. எத்தனை அறிவியல் ஆதாரங்களை அடுக்கினாலும் அதனை நீதிமன்றம் தடுத்திருக்காது. இருப்பினும், ஒரு அணு உலை நிறுவும்போது பின்பற்றப்பட வேண்டிய முறைகள் எதையும் கூடங்குளத்தில் அரசு பின்பற்றவில்லை என்பதால், அவற்றையெல்லாம் எடுத்துக் காட்டி, இவற்றின் காரணமாக மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சொன்னால், உச்ச நீதிமன்றம் தடை விதிக்கக் கூடும் என்று நம்பி உச்ச  நீதிமன்றத்தில் மனுச்செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றமும் அரசாங்கத்தை கடுமையாக கண்டிப்பதைப் போல பாசாங்கு செய்தது. இதைப் பார்த்து நீதி கிடைத்துவிடும் என்று மக்கள் பலர் நம்பினார்கள். முடிவில் அணு உலைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மக்களின் முதுகில் குத்தியது உச்ச நீதிமன்றம்.

கெயில் வழக்கில் நீதி கேட்டு உச்ச நீதி மன்றத்துக்கு சென்ற விவசாயிகளுக்கும் இதே கதி தான் நேர்ந்தது.

கூடங்குளம், கெயில் அல்லது மீதேன் போன்ற திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் என்று தெரிந்துதான் மத்திய மாநில அரசுகள் இவற்றைக் கொண்டு வருகின்றன. கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைதான் மத்திய மாநில அரசுகளின் கொள்கையாக இருக்கிறது. இதைத்தான் முன்னேற்றம் என்று எல்லா கட்சிகளும் பேசுகின்றன. மக்களின் விருப்பத்துக்கு விரோதமாக நிலத்தைக் கைப்பற்ற அரசுக்கு அதிகாரம் தரும் வகையில்தான் சட்டங்கள் உள்ளன.

நீதிமன்றம் என்பது ஏற்கெனவே என்ன சட்டம் உள்ளதோ அந்த சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கும். காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்கு என்று மத்திய அரசின் சட்டம் சொன்னதன் அடிப்படையில்தான் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதனால்தான் சட்டத்தை மாற்று என்று நாம் போராடினோம்.

தற்போது அமலில் இருக்கும் சட்டங்களின் கீழ், ஹைட்ரோ கார்பன் திட்டத்தையோ, மீதேன் திட்டத்தையோ தடுக்க முடியாது. அரிச்சந்திரனே நீதிபதியாக இருந்தாலும், மேற்கூறிய சட்டங்களின் கீழ் நமக்கு நீதி கிடைக்காது. இந்த நாசகர திட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்குவது தான் நடக்கும்.

“நிலத்தடி நீர் குறையக்கூடாது, கழிவு நீர் தேங்க கூடாது, சுற்றுச் சூழல் மாசுபடக்கூடாது” என்று ரொம்பவும் கண்டிப்பாக பேசுவது போல உதார் விட்டு, திட்டத்துக்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். அதற்குப் பிறகு பாஜக அல்லது அதிமுக அரசுகள் என்ன செய்யும்? நீதிமன்றமே சொல்லி விட்டது. நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுகிறீர்களா அல்லது போலீசை அனுப்பவா என்று மக்களை மிரட்டும்.

எனவே, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு போடுவது என்பது, கூரைக்கு கொள்ளி வைக்கும் வேலை. இதனை தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் விளைவு ஒன்றுதான்.

நெடுவாசல் மக்களே, போராட்டத்தை ஆதரிக்கும் தமிழக மக்களே, மாணவர்களே, எச்சரிக்கை!

சிலர் அறியாமையின்  காரணமாக நீதிமன்றம் போகலாம், சிலர் விளம்பரம் தேடுவதற்காக நீதிமன்றம் போகலாம், இந்த திட்டத்தை திணிக்கும் நோக்கத்துடன் பாஜக வினரே ஒரு ஆளை செட் அப் செய்தும் நீதிமன்றத்துக்குப் போகலாம். நீதிமன்றத்தில் வழக்கு போடுபவன் அசடா, அயோக்கியனா என்று நாம் கண்டு பிடிப்பது கடினம். அந்த ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லை. இப்போதுதான் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்காக தமிழகம் போராடி வெற்றி கண்டிருக்கிறது. நீதிமன்றத்தில் நீதி கிடைக்காமல்தான் மக்கள் மன்றத்தில் போராடி நாம் வெற்றி பெற்றோம். அவ்வாறிருக்கையில் யாரும் இப்படியொரு தவறான முடிவை எடுக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். “என் தேசம் என் உரிமை” என்ற கட்சியினர் இந்த முடிவைக் கைவிடுவதாக உடனே அறிவிக்க வேண்டும்.

“எங்கள் நிலம், எங்கள் உரிமை!” “.யாரும் நீதிமன்றத்துக்குப் போகாதீர்கள்! மக்கள் மன்றத்தில் முடிவு செய்வோம்!” என்று போராடும் நெடுவாசல் வட்டார மக்கள் ஒரு அறிவிப்பு கொடுக்க வேண்டும். போராட்டத்தை காப்பாற்றுவதற்கும், நிலத்தைக் காப்பாற்றுவதற்கும் இது அவசியம். அவசரம்.

(அவசியம் கருதி நண்பர்கள் இச்செய்தியினை சமூகவலைத்தளங்களில் பரவலாக பகிருமாறும், பரப்புமாறும் கோருகிறோம்)

முதற்பதிவு: வினவு

6 thoughts on “நெடுவாசலை நீதிமன்றத்தில் தீர்க்க முடியாது

 1. நெடுவாசல் நீரகக்கரிம எடுப்பு

  தேவையான தீங்குகள்​ [Necessary Evils] ​

  நாட்டின் நிதிவள மனித நல அமைப்பு வளர்ச்சிக்கு [Infrastucture] சில தேவை யான தீங்குகள் அவசியமாகின்றன.

  எரிசக்தி / விறகு நெருப்பு, நீரகக்கரிமம் [மீதேன், புரொபேன், டீசல், பெட்ரோல், எரிவாயு, அணுசக்தி] வெடி விபத்துக்கள் உண்டாக்கும் இவை யாவும் நாட்டுக்குத் தேவையான தீங்குகள். அவற்றைக் கவனமாகக் கண்காணிக்கும் திறமையான பொறியியல் நிபுணர் இந்திய நாட்டில் உள்ளார்.

  அவற்றைப் பாதுகாப்பாக, கவனமாகக் கையாளப் பயிற்சிகள் அடிக்கடி மக்களுக்குத் தரவேண்டும். இந்தியர் கவனமாகப் பாதுகாப்பாக அவற்றைப் பயன்படுத்த முடியும். பயன்படுத்த வேண்டும்.

  நீரகக்கரிமம் எடுப்போர் முதன்முதலில் சம்பந்தப்பட்ட நாட்டு நிலப் பரப்புகளில் பற்பல ஆழத்துளைகள் இட்டு அடித்தள நீரோட்டம் பற்றித் தீவிர ஆய்வுகள் செய்த பிறகே திட்டத்தைத் துவங்குவார்.

  நீரகக்கரிமம் எடுப்பு, அணுசக்திப் பயன்பாடு பற்றி மனிதருக்கு வெறுப்பு, அச்சம் இருக்கலாம். ஆனால் வெறுப்பு, அச்சத்தைத் தாண்டி உறுதியும், ஒருபோக்குத் துணிச்சலும் வரவேண்டும். காரணம் இவற்றின் பயன்பாடு இடர்ப்பாடை விட மிகையானது.

  No Risk, No Progress. No Pain, No Gain.

  அச்சம் தாண்டி ஒருபோக்குத் துணிச்சல் இல்லாவிடில் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்திருப்பாரா ? நாசா அமெரிக்க விண்வெளித் தீரர் நிலவில் தடம் வைத்து மீண்டு வந்திருப்பாரா ? சைக்கிள் கடை வைத்த ரைட் சகோதரர் வான ஊர்தியில் பறந்திருப்பாரா ?

  அச்சம் கொண்டவர் மாட்டு வண்டியில் போவதை யாரும் தடுக்கவில்லை. மற்றும் மாட்டுச் சாணத்தில் எரிவாயு எடுப்பதை யாரும் நிறுத்த வில்லை.

  சி. ஜெயபாரதன், கனடா

 2. வணக்கம் ஐயா,

  நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் கருத்துகளை பதிவு செய்தமைக்கு நன்றி.

  உங்களைப் போன்ற அறிவியலாளர்கள் அறிவியலைத் தவிர வேறெதையும் பார்ப்பதில்லை என்பது ஒரு சிக்கல். அறிவியலை யாரும் எங்கும் மறுக்கப் போவதில்லை. ஆனால் அந்த அறிவியல் எவ்வாறு யாருக்கு பயன்படுகிறது என்பதை பார்க்க வேண்டியதும் இன்றியமையாதது. ஆயிரக்கணக்கான அடிகளுக்குக் கீழே சிறைபட்டுக் கிடக்கும் எரிவாயுக்களை வெளியே கொண்டுவர முடிந்திருக்கிற அறிவியல், மலக்குழிக்குள் சிக்கிக் கிடப்பதை வெளியேற்ற மனிதனைத்தான் இறக்கி விட்டுக் கொண்டிருக்கிறது. ஏன் அங்கு பயன்பட்ட அறிவியல் இங்கு பயன்பட மறுக்கிறது என்பது தான் எளிமையான கேள்வி.

  நீங்கள் கூறுவது ஒருவிதத்தில் சரியானது தான் பெய்ன் இல்லையென்றால் கெய்ன் இல்லை தான். ஆனால் யாருக்கு கெய்ன் யாருக்கு பெய்ன் என்பது தான் கேள்வி.

  தீங்குகளைக் கண்காணிக்கும் திறமையான பொறியாளர்கள் இந்த நாட்டில் உண்டு என்கிறீர்கள். அப்படி திறமையான பொறியாளர்கள் இருக்கும் இந்த நாட்டில் தான், சில நாட்களுக்கு முன் வங்கக் கடலை வாளியில் அள்ள முயற்சித்தோம் நினைவிருக்கும் எனக் கருதுகிறேன்.

  அறிவியலை அறிவியலாக மட்டும் தான் பார்க்க வேண்டுமா? சமூகத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டுமா? அரசின் புள்ளி விபரங்கள் அரசுக்கு இத்தனை கோடி லாபம் கிடைக்கும் என்று கூறுகின்றன. அதை எடுக்கும் தனியார் நிறுவனங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்று ஏன் இந்த அரசு கூற மறுக்கிறது? இது அரசியல்வாதிகளின் பிரச்சனை என நீங்கள் கருதினால், இந்த நீர்க்கரிமத்தை எடுப்பதும் அரசியல்வாதிகளின் முன்முயற்சியினால் தான். இது போன்ற அறிவியல் துணையுடன செயல்படுத்தப்பட்ட அனேக திட்டங்களில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடுகள், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், தீட்டப்பட்டிருக்க வேண்டிய மாற்றுத் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கின்றனவே ஏன்? இதுவும் அரசியல்வாதிகளின் பிரச்சனை தான் என்று நீங்கள் கூறலாம். ஆனால் அந்த அரசியல்வாதிகள் ஏன் முதலாளிகளுக்கு லாபம் தரும் திட்டங்களை உடனடியாக செய்கிறார்கள், மக்களை வாழவைக்கும் திட்டங்களை கிடப்பில் போடுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டாமா?

  எனவே இங்கு அறிவியல் பிரச்சனை இல்லை. அந்த அறிவியல் சமூகத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பது தான் பிரச்சனை. அதெல்லாம் இல்லை இந்த நீர்க்கரிமம் எடுக்கும் பிரச்சனையில் அறிவியலைத் தவிர வேறெதையும் இணைக்க மாட்டோம் என நீங்கள் கருதினால், அறிவியலை மட்டும் ஏன் இணைக்க வேண்டும் அதையும் நீக்கி விட்டுப் பார்ப்போமே. அங்கு போராடிக் கொண்டிருப்பவர்களின் எளிமையான கேள்வி இது தான். எவனோ லாபம் சம்பாதிக்க நாங்கள் ஏன் இறக்க வேண்டும்? இதற்கு உங்கள் பதில் என்ன?

 3. நண்பர் செங்கொடி,

  வணக்கம்.

  ///ஆயிரக்கணக்கான அடிகளுக்குக் கீழே சிறைபட்டுக் கிடக்கும் எரிவாயுக்களை வெளியே கொண்டுவர முடிந்திருக்கிற அறிவியல், மலக்குழிக்குள் சிக்கிக் கிடப்பதை வெளியேற்ற மனிதனைத்தான் இறக்கி விட்டுக் கொண்டிருக்கிறது. ஏன் அங்கு பயன்பட்ட அறிவியல் இங்கு பயன்பட மறுக்கிறது என்பது தான் எளிமையான கேள்வி ///

  கனடா போன்ற மேலை நாடுகளில் ஊரமைப்பு, நகரமைப்புக் கழிவு நீக்கப் பைப்புகள், பம்புகள், சுத்தீர வசதிகள் ஆரம்பத்திலே கட்டப் படுகின்றன. நமது பழம்பெரும் ஊர்களில் அவ்வித அமைப்புகள் இல்லை. ஊரெங்கும் சுத்தமான கழிவரைகள் அமைக்கப் படவில்லை. அவரவர் கழிப்பறையைச் சுத்தம் செய்ய இந்திய மனிதர் முன்வருவாரா ?

  அப்படி வரவில்லையாயின், மலக்குழி, கழிப்பறைச் சுத்தம் செய்யும் தற்போதைய தொழிலாளருக்கு, குப்பை வண்டி ஊழியருக்குத் தமிழக அரசாங்கம் நல்ல ஊதியம், இலவச உடை, உணவு, வீடு, இலவசக் கல்வி, மருத்துவ வசதி அளிக்க வேண்டும். இவற்றைச் செய்ய வேண்டும் என்று திராவிடக் கட்சித் தலைவர் வீரமணிக்கு எழுதி கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதாவுக்குத் தெரிவிக்கும்படி 6 மாதங்களுக்கு முன் அறிவித்தேன்.

  நீரகக்கரிம எனது பின்னோட்டக் கருத்து அறிவியல் சார்ந்ததாயினும் சமூக நலனுக்குத்தான் எழுதப்பட்டது. உங்கள் குறுகிய நோக்கில் ஆய்ந்து, அரசியல் போராட்டமாக மாற்றி இந்தியாவில் எந்தத் திட்டமும் நிறைவேறாது.

  உங்கள் மகன் என்ன படிக்கிறான், எங்கே படிக்கிறான் ? வானியல் பட்டம் பெறுபவனுக்கு அறிவியல் தொழில் வேலை கிடைக்க, தொழிற்சாலை யார் கட்டுவார் ? ஒன்று அரசாங்கம், வெளிநாட்டுத் தொழிற்சாலை, அல்லது டாடா போன்ற செல்வந்தர்தானே !

  சி. ஜெயபாரதன், கனடா

 4. Electric Power Generation, Power Transmission & Power Network.

  People should understand clearly some main features in Electric Power Need according to Demands in the Industrial cities & towns, whenever we consider Solar Power, Wind Power, Hyrdo-electric Power & thermal Power, using coal.

  1. Main Bulk Power, called Base Loads : Power for heavy industries all day / all week / all months operation. You need large continuous supply with a high capacity reserve to feed at once. For these requirements, only Thermal, hydro-electric or Nuclear Power Plants can fulfill the demands. They are reliable sources for industries.

  2. Swing Power, called Swing Loads : Interrupting power, domestic lights / street lights etc. Solar Power and wind power are good for these needs only. They do not have a reserve capacity to supply a large loads at once, as the sources are interrupted day and night and not reliable for any day. At present you cannot store their power for upcoming needs.

  3. We need primarily a reliable bulk power supply by hydro-electric, thermal or nuclear power plants and may use the solar power & wind power for swing power requirements.

  S. Jayabarathan

 5. வணக்கம் ஐயா,

  உங்கள் பின்னூட்டத்தின் கருத்து சமூக நலனுக்கானதா? இல்லை என்கிறேன் நான். இதை மக்கள் பயன்படுத்துவார்கள் என்பதைத்தானே சமூகப் பயன் என்று கருதுகிறீர்கள்? இன்றைய எரிபொருட்களின் விலை நிலவரங்களைப் பாருங்கள். அடக்க விலையைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாக விலை வைத்து மக்களை கொள்ளையடிக்க அனுமதிக்கும் நாடு இது. இந்த நீரகக் கரிம எடுப்புக்காக தனியார் நிறுவனங்களுடன் போடப்பட்டிருக்கும் ஒப்பந்தங்களைப் பாருங்கள். எவ்வளவு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்று. இவ்வளவு சலுகைகள்யும், வரிவிலக்குகளையும் பெற்றுக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள் எடுக்கும் எரிவாயுக்களையும், துணைப் பொருட்களையும் குறைந்த விலையில் மக்களுக்கு கொடுப்பார்களா? அல்லது கொள்ளை லாபமடிப்பார்களா? மக்கள் தங்கள் உழைப்பின் மூலம் பெறும் ஊதியத்தை சுரண்டியெடுக்கும் ஒரு ஆயுதமாகத்தான் முதலாளிகளுக்கு இவை பயன்படப் போகின்றன. இதை சமூக நலன் என்று மொழிபெயர்க்க வேண்டுமா?

  இதை எடுப்பதனால் ஏற்படப் போகும் சிக்கல்களை எதன் பொருட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்? கிட்டத்தட்ட வாழ்வாதாரமே அழிந்து போகும் நிலை ஏற்படும். குடிநீர் தட்டுப்பாடு தொடங்கி நிலநடுக்கம் வரை ஏற்படப்போகும் பாதிப்புகளை சில முதலாளிகள் கோடி கோடியாய் கொள்ளை லாபம் குவிக்கும் பொருட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

  போராட்டங்களால் எந்தத் திட்டமும் நிறைவேறாததைப் போல் நீங்கள் எழுதியிருப்பது எந்த அளவுக்கு நீங்கள் மக்களை விட்டு விலகியிருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. மக்கள் போராடிப் பெற்ற உரிமைகளை அரசு தன் அதிகார பலத்தின் மூலம் மக்களிடமிருந்து பறித்துக் கொண்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் கிடைக்கும் தாது வளத்தை சில முதலாளிகள் கொள்ளையிட வேண்டும் என்பதற்காகவே, பசுமை வேட்டை என்ற பெயரில் மக்களை வேட்டையாடியது அரசு. இது உங்களுக்கு தெரியுமா? மக்களின் கடும் எதிர்ப்பால் ஓரிரு திட்டங்கள் தாமதிக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் மக்களைக் குழப்பி, கருங்காலிகளை நுழைத்து வேறு ஏதாவது ஒரு வடிவத்தில் நிறைவேறி இருக்கும். ஏனென்றால் அவை முதலாளிகளுக்கான திட்டங்கள். இங்கு மக்களுக்கான திட்டங்கள் என்று எதுவுமில்லை. ஒருகோடி வீடுகள் கட்ட 23000 கோடி ஒதுக்கியுள்ளேன் என்று பகட்டாக பட்ஜெட்டில் அறிவித்து ஏமாற்றும் பிரதமரைக் கொண்ட நாடு இது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. அதேநேரம் மக்களின் எதிர்ப்பு இல்லாமல் சேதுகால்வாய் திட்டம் பார்ப்பனிய மத நம்பிக்கையை காரணம் காட்டி நிறுத்தப்பட்டது. இதற்கு நீதி மன்றங்களும் ஒத்தூதின. இவைகளையெல்லாம் நீங்கள் கவனிக்க மாட்டீர்களா? அரசு மக்கள் நலனுக்காக திட்டங்கள் தீட்டி அல்லும் பகலும் செயல்படுவதை போலவும், அதை புரிந்து கொள்ளாமல் மக்கள் போராடி அந்த நல்ல திட்டங்களை தடுத்து விடுவது போலவும் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா நீங்கள்? முதலில் அந்த மாயையிலிருந்து வெளியே வாருங்கள்.

  நீங்கள் கனடாவுடன் ஒப்பிட்டு கழிவறை குறித்து பேசியிருக்கிறீர்கள். வீடே இல்லாமல் நடைபாதையில் படுத்துறங்கி வாழ்நாளைக் கடத்தும் கோடிக்கணக்கான மக்களைக் கொண்ட நாடு இது. இங்கு முதல் தேவை மக்களுக்கு உணவும் உறைவிடமும், மலக்குழியில் முத்தெடுக்க அனுப்பும் அவலத்தை தடுப்பதும், சுகாதாரமும், கல்வியும் தான். அதை செய்து கொடுக்காத, செய்து கொடுக்க மறுக்கும், மக்கள் தாங்களே முயன்று அதை செய்ய முற்பட்டாலும் அதையும் கெடுக்கும் இந்த அரசு; அறிவியலை முகமூடியாக அணிந்து கொண்டு மக்களை முதலாளிகளிக்ளுக்கு சோரம் போக வற்புறுத்தும் போது அதை கண்மூடி ஏற்றுக் கொள்ள மக்கள் என்ன மூடர்களா?

  உங்களைப் போன்ற அறிவியலாளர்களுக்கு நான் அறிவியல் விளக்கங்களை அளிக்க முடியாது. எனவே நான் கோருவதெல்லாம் அறிவியலை சமூகத்துடன் இணையுங்கள் என்பதை மட்டும் தான்.

 6. வணக்கம் செங்கொடி.

  இந்தியப் பிரச்சனைகள் ஆயிரம். ஒவ்வொன்றாக அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும். எல்லாப் பிரச்சனைகளையும் அள்ளி மடியில் போட்டுக் கொண்டு, திக்குத் தெரியாமல் இப்படி யாராலும் தீர்வு காண முடியாது.

  எந்த சமூகத்திலும் ஏழை பணக்காரர் உள்ளார். இந்தியாவில் நிதியைச் செலவழித்து விஞ்ஞானத் தொழிற்சாலைகள் அமைக்கச் செல்வந்தர் அவசியம் தேவை. அங்கே உழைத்து ஊழியம் செய்ய பொதுநபர் உள்ளார். குறை கூறிக்கொண்டே வாழ்நாள் முழுதும் வீணடிப்பதில் ஆக்கபூரவமான தீர்வுகள் / வேலைகள் எதுவும் நிறைவேறா.

  மலக்குழிச் சுத்தீகரிக்க வழி கேட்டீட்கள். நான் என் கருத்தைக் கூறினேன். பல வழிகளில் இதுவும் ஒன்று. இப்படி ஓவ்வோர் பிரச்சனையை எடுத்துக் கொண்டு தீர்ப்போம்.

  நன்றி என் கருத்தை வெளியிட்டதற்கு.

  சி. ஜெயபாரதன், கனடா

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s