நெடுவயல் இன்னொரு மெரினாவாக மாறிக் கொண்டிருக்கிறது. கடந்த 14 நாட்களுக்கும் மேலாக மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள். காவி பண்டாரங்களைத் தவிர வேறெவரும் அதை ஆதரிக்கவில்லை. அந்த பண்டாரங்கள் கூட நேரடியாக ஆதரிக்க முடியாமல் பசப்பலான சொற்களால் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களிடம் அறுவறுக்கத்தக்க காவித் திமிர் வெளிப்படவே செய்கிறது. மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்கிறார்கள். அப்படியென்றால் நெடுவயலில் குவிந்திருக்கும் மக்களைக் குறித்து இந்த காவிக் கயவர்கள் கொண்டிருக்கும் கருத்து என்ன? ஆளுக்கொரு கருத்தை உமிழ்வது, முன்னுக்குப் பின் முரணாக உளருவது, அபத்தமான பொய்களை அவிழ்த்து விடுவது என மோடியின் கிழிந்து போன கோவணத்தை மறைக்க கடும் முயற்சி செய்து தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த போது அதற்கு ஒப்ப விலையைக் குறைக்காமல் வரிகளை உயர்த்தி மக்களை கொள்ளையடித்தது மோடி அரசு. அதேநேரம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கும் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணையைப் போலவே விலையை வைத்து மக்களை ஏய்த்தன தரகு நிறுவனங்கள். இந்த சட்டப்படியான கொள்ளையை பல்வேறு பொருட்களுக்கும் விரிவுபடுத்தும் நோக்கத்தில் தான் மேக் இன் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா என பல்வேறு திட்டங்களை முழக்கினார் மோடி. இதன் ஒரு தீற்றாகத்தான் உள்நாட்டு எரிபொருள் வளங்களை அதிகரிப்பது என முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவின்படி, ஏற்கனவே கண்டறியப்பட்டு சிறிய அளவில் இருக்கிறது, ஆழம், அதிகம், தூரம் அதிகம் போன்ற காரணங்களால் கைவிடப்பட்ட எரிபொருள் வயல்களை தூசி தட்டி எடுத்து தனியார் நிறுவனங்களுக்கு எல்லா சலுகைகளையும், விலக்குகளையும் வாரி வழங்கி களத்தில் இறக்கி விட்டிருக்கிறது மோடி அரசு.
உள்நாட்டு எரிபொருள் வளங்களை பயன்படுத்த நினைப்பது சரிதானே என்று டேஷ்பக்த கோயிந்துகள் கேட்கலாம். ஆனால் யார் பயன்படுத்துவது என்றொரு கேள்வி இருக்கிறதே. அடுத்த 15 ஆண்டுகளில் இந்த வளங்களை தனியார் நிறுவனங்கள் கொள்ளையிடுவதன் மூலம் அரசுக்கு கிடைக்கவிருப்பதாய் திட்டமிடப்பட்டிருக்கும் வருவாய் மொத்தம் 14 ஆயிரம் கோடி. நெடுவாசல், காரைக்கால் இரண்டு பகுதிகளுக்கும் சேர்த்து கிடைக்கவிருப்பது வெறும் 300 கோடி. கோயிந்துகளா, தமிழ்நாடு டாஸ்மாக்கில் மட்டும் ஒரு ஆண்டுக்கு கிடைக்கும் வருவாய் 35 ஆயிரம் கோடி. இதற்குப் பெயர் உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்துவதா? இதில் இன்னொரு அயோக்கியத்தனமும் இருக்கிறது. அரசுக்கு இவ்வளவு லாபம் கிடைக்கும் அறிக்கை வெளியிடும் மோடி அரசு, இதன் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதைப் பற்றி மூச்சு கூட விட மறுக்கிறது. நீ கடலை கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன், இரண்டு பேரும் ஊதி ஊதி திண்போம் என்று ஒரு சொலவடை சொல்லுவார்களே அது நினைவுக்கு வருகிறதா? தனியார் நிறுவனங்கள் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து கொழுப்பதற்கு, அதன் மூலம் மக்களின் வாழ்வை அழிப்பதற்கு, விவசாய நிலங்களைப் பாலையாக்கி, நிலத்தடி நீரை பாழாக்கி அனைத்து மக்களையும் பிச்சையெடுக்க வைப்பதற்குப் பெயர் உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்துவதா? ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள 22 நிறுவனங்களில் 4 மட்டுமே பொதுத்துறை நிறுவனங்கள். மீதமுள்ள 18ம் தனியார் நிறுவங்கள். இந்தப் 18 நிறுவனங்களில் 15 நிறுவங்கள் எந்த முன் அனுபவமும் இல்லாத கத்துக் குட்டி நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் தான் கத்துக்குட்டி, வழங்கப்படுள்ள சலுகைகளோ மொத்தமாக கட்டி. இதற்குப் பெயர் உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்துவதா?
தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம்.
இந்தத் துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற தேவையில்லை.
கூடுதல் வரிகள் நீக்கம், ராயல்டி தொகை குறைப்பு.
ஹைட்ரோ கார்பன் துரப்பண பணிக்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களுக்கு சுங்கவரி நீக்கம்.
அரசு நிறுவனத்திடமிருந்து தேவைப்படும் எந்திரங்களை கட்டணமின்றி பெற்று தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
துரப்பணம் செய்யும் போது தனியார் நிறுவனங்களின் செலவு அதிகமானால் அந்த செலவை அரசிடம் பகிர்ந்து கொள்ளலாம். அதற்கு ஈடாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் பங்கு என்று நடைமுறையில் இருக்கும் விதியை மாற்றி, தனியார் நிறுவனம் தீர்மானிக்கும் வருவாயின் ஒரு பங்கை பெற்றுக் கொள்வது என்று மாற்றம்.
என்பன போன்ற பல சலுகைகளைப் பெற்றுக் கொண்டு தான் பாஜக வின் நாடாளுமன்ற உறுப்பினரான சித்தேஸ்வரராவ் என்பவருக்கு சொந்தமான ஜெம் லேபரட்ரீஸ் என்னும், எந்த முன் அனுபவமும் இல்லாத நிறுவனம் தான் நெடுவயலில் களம் இறங்கியிருக்கிறது.
இது மீத்தேன் எடுக்கும் திட்டம் இல்லை. அந்த அளவுக்கு ஆழமாக தோண்ட வேண்டாம் மேலோட்டமாக கைகளால் தோண்டினால் போதும் என்று கொடூர இசை சவுண்ட்ராஜன் பாட்டு படித்திருக்கிறார். மீத்தேன் என்பது தனிப்பெயர் என்றால் ஹைட்ரோ கார்பன் பொதுப் பெயர். கச்சா எண்ணெய், ஷெல்கேஸ், மீத்தேன், ஈத்தேன், புரோப்பேன், பியூபேன், பெண்டேன் எக்சேன், எப்டேன், ஆக்டேன், நோனேன், டெக்கேன் என அனைத்து நச்சுகளுக்கும் பொதுப் பெயர் தான் ஹைட்ரோ கார்பன் என்பது. அதாவது ஹைட்ரஜனுடன் எத்தனை கார்பன் அணுக்கள் சேர்கின்றன என்பதைப் பொருத்து அதற்கு பெயர் மாறுபடும் அவ்வளவு தான்.
ஊரில் இருப்பவர்களை எல்லாம் நீ விஞ்ஞானியா? என்று கேட்டுக் கொண்டிருக்கும் பாஜகவின் வேதியியல் விஞ்ஞானிகள் புலம்பிக் கொண்டிருப்பது போல இது வளங்களை பயன்படுத்துவதல்ல. மக்களை துடிக்கத் துடிக்க கருவறுப்பது. பசுமைப் புரட்சி தொடங்கி இன்று வரை விவசாயத்தை வன்புணர்ச்சி செய்து கொண்டிருக்கிறது இந்திய அரசு. மூன்று லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் மானம் தாளாமல் தற்கொலை செய்து மாண்டு போயிருக்கிறார்கள். கொலைக் கருவிகளைக் கையிலேந்திய கழுதைப் புலிகள் கூட்டம் கண்ணில் படும் விலங்குகளையெல்லாம் கொன்று குதறுவதைப் போல இந்தியப் பரப்பின் அனைத்து வளங்களையும் கபளீகரம் செய்து வருகிறது பன்னாட்டு, தரகு முதலாளிகள் கூட்டம். வனங்களை அழித்து, காற்றை மாசுபடுத்தி, நீர்நிலைகளை சாக்கடையாக்கி அழித்த அந்தக் கூட்டம் நிலத்தின் ஆழத்தில் உறங்கும் ஹைட்ரோ கார்பன் எனும் அலாவுதீன் பூதத்தை அதன் எஜமானனாகிய மக்களின் அனுமதியின்றி துளை போட்டு தட்டி எழுப்பப் பார்க்கிறது. மட்டுமல்லாது, அதை மக்களைக் கொல்ல ஏவி விடவும் போகிறது. இதைப் புரிந்ததால் தான் மக்கள் போராடுகிறார்கள். தங்கள் எஜமானர்களான தரகு, பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளை லாபம் குறைந்து விடக் கூடாதே என்பதற்காக காவி வானரங்கள் கலங்குகின்றன.
எல்லா வழிகளையும் அடைத்து விட்டு மக்களை எலிகளைப் போல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
விவசாயிகளுக்கு கடனுதவி, காப்பீடு என்ற பெயரில் தனியாரின் உர, பூச்சிக் கொல்லி, விதை நிறுவனங்களுக்கு கொட்டிக் கொடுப்பது,
தொழிலாளர் நலச் சட்ட சீர்திருத்தம் என்ற பெயரில் கூலி அடிமைகளான தொழிலாளிகளை முதலாளிகளிடம் நேரடி அடிமைகளாக பூட்டி விடுவது,
கருப்புப்பணம், கள்ளப்பணம் ஒழிப்பு என்ற பெயரில் அனைத்து தரப்பு மக்களையும், குறிப்பாக சிறு குறு தொழில் முனைவோரை, தொழிலாளிகளை அவர்களின் வாழ்வாதாரங்களை பறித்து, நிதி நிறுவன முதலாளிகளின் லாபத்திற்காக பிச்சைக்காரர்களைப் போல அலைய விட்டிருப்பது,
இருக்கும் உரிமைகளை கேட்டுப் போராடினால் இராணுவம், போலீசைக் கொண்டு எந்தவித ஒழிவுமறைவும் இல்லாமல் மிருகத்தனமாக அடித்து நொறுக்கி ஒடுக்குவது,
கலாச்சாரம், பண்பாட்டு ஒருமை என்ற பெயரில், ஒற்றுமையாக வாழும் அனைத்து மக்களையும் காவி பயங்கரவாதிகளைக் கொண்டு வெறிபிடித்து பேச வைப்பது, கொடூரக் கொலைகளைச் செய்வது ஆகியவற்றின் மூலம் பிளவுபடுத்தி இரத்தம் குடிப்பது .. .. ..
என்று எல்லா வழிகளையும் அடைத்து விட்டு மக்களை எலிகளைப் போல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
இதோ, நெடுவாசல் போராட்டத்திலும் காவல்துறை குவிக்கப்பட்டு வருகிறது, போராட்டத்தில் நக்சலைட்டுகள், பயங்கரவாதிகள் ஊடுருவல் என்று பாசிச பண்டாரங்கள் கத்தத் தொடங்கி விட்டன. முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் பொம்மையோ ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். எனவே, போராட்டத்தை கை விடுங்கள் என்று எந்த உறுதிமொழியும் இல்லாமல் வாய்மொழியாக ஒப்பித்திருக்கிறார். மெரினா போராட்டத்தின் கடைசி கட்டத்தில் தென்பட்ட அத்தனை அறிகுறிகளும் தொன்பட்டுக் கொண்டிருக்கின்றன. எதிர்மறை படிப்பினையாக இன்னொரு மெரினா கடைசி நாளாக நெடுவாசல் மாறிவிடக் கூடாது. அதேநேரம் ஆண்டுக்கணக்காக தொடரும் கூடங்குளம் போராட்டத்தைப் போலவும் நெடுவாசல் மாறிவிடக் கூடாது.
தமிழகத்தின் அனைத்து அசைவுகளும் நெடுவாசலை நோக்கி உறையட்டும். இது வேற தமிழ்நாடு என்று காட்டுவோம்.