அரசியல் எழுச்சியுற்ற பெண்களாவோம்

irumbu_2379057g

உழைக்கும் பெண்களே!

மார்ச் 08 ம் நாள் அனைத்துலக மகளிர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்களை சமூக நடவடிக்கையில் ஈடுபடுத்திய வெற்றி தினமே இந்த மகளிர் தினம். ஆனால் இன்றைய சமூகத்தின் பெண்களின் நிலை என்ன? அரியலூர் நந்தினி, போரூர் ஹாசினி, எண்ணூர் ரித்திகா, பெங்களூர் விமானப் பணிப் பெண், நடிகை பாவனா .. .. ..

ஒவ்வொருவரும் மகளிர் தினம் பற்றி பேச முற்படும் போது இப்படி ஒரு பட்டியல் வரிசை கட்டி வந்து நிற்கிறது. காதலன் என்ற கயவனாலேயே கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டு, அவருடைய பிறப்புறுப்பை பிளேடால் கிழித்து கருவை உருவி எரித்துக் கொன்று நிர்வாணமாய் பாழடைந்த கிணற்றில் வீசப்பட்டாள் அரியலூர் நந்தினி. காணாமல் போன அன்றே புகார் கொடுத்தும், 15 நாட்கள் கழித்து பிணமாக கண்டுபிடித்து கொடுத்தது காவல்துறை. ஆணாதிக்க வெறியுடன், சாதி ஆதிக்க வெறியும் இந்துமத வெறியும் சேர்ந்து தலைக்கேறிய மணிகண்டன் என்ற இந்து முன்னணி பொறுக்கிகளின் வக்கிர செயலின் விளைவு தான் சிறுமி நந்தினி.

நந்தினிக்கு நேர்ந்த கொடுமை இப்படி என்றால் 6 வயது சிறுமி ஹாசினிக்கும் 3 வயது குழந்தை ரித்திகாவுக்கும் நேர்ந்த கொடுமை நெஞ்சை பதற வைக்கிறது. ஒடுக்கப்பட்ட ஏழைக் குழந்தைகள் மட்டும் என்றில்லை, பெங்களூரு விமானப் பணிப்பெண்ணாக இருந்தாலும், பிரபல நடிகை பாவனாவாக இருந்தாலும் கூட பெண்ணாக பிறந்த யாரும் இந்த பொறுக்கித் தனத்திலிருந்து தப்பிக்கை முடியவில்லை. வாழத் தகுதியற்றதாக மாறிவிட்ட சமூக நிலையை துலக்கமாக எடுத்துக் காட்ட பெண்களின் மீதான இந்த வன்முறைகள் போதாதா?

நிர்பயா தொடங்கி பாவனா வரை ஒவ்வொரு நிகழ்வின் போதும் குற்றம் சாட்டப்படுவது, கொடுமைக்குள்ளான அதே பெண்கள் தான். வன்முறைக்கு ஆளான பெண்ணையே ஏன் 6 மணிக்கு மேல் வெளியே சென்றாய்? ஏன் ஆண்களுடன் இயல்பாய் பேசினாய்? ஏன் சத்தம் போட்டு சிரித்தாய்? என்று குற்றம் சாட்டுவது சமூகம் அவர்கள் மீது தொடுக்கும் இரண்டாவது வன்முறை.

பாலியல் வன்முறை என்பது இத்துடன் முடிந்து விடுவதில்லை. பெண்ணாய் பிறந்தாலே பிறந்தது முதல் குடும்பத்தில் தந்தையை, சகோதரனை, கணவனை, கடைசியாய் மகனை அண்டி வாழ கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். முதலாளியாள், உயர் அதிகாரிகளால், சக ஆண் ஊழியர்களால், சக மாணவனால் .. .. .. என பெண்கள் வன்முறைக்கு ஆளாவது தொடர்கதையாய் உள்ளது. தன்னுடைய  வாழ்க்கையையும், தன்னுடைய வாழ்க்கைத் துணையையும் வயதுக்கு வந்த பெண் தானே தேர்ந்தெடுக்க குடும்பமும் சமூகமும் அனுமதிப்பதில்லை. சாதி மதம் மாறி திருமணம் செய்யும் பெண்கள் கௌரவத்தின் பெயரால் குடும்பத்தினராலேயே கொலை செய்யப்படும் வக்கிரம். பெண்ணுரிமை, சமூக உரிமை பற்றி பேசும் படங்களை தடை செய்யும் அரசு, ஆணாதிக்கம், சாதி ஆதிக்கம், ஆபாசம் ஆகியவற்றை சினிமா இணையங்களில் தடை செய்ய மறுக்கிறது.

அரசின் தனியார்மய தாராளமய உலகமய கொள்கையால் கல்வி, மருத்துவம், குடிநீர், மின்சாரம் .. .. .. அனைத்தும் காசுக்கு என்றான நிலையில் பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டிருக்கிறது. அங்கு பெண்கள் அற்பக் கூலிக்கு கொத்தடிமைகளாக உறிஞ்சப்பட்டு எச்சில் இலைகளைப் போல் வீசப்படுகிறார்கள்.

படித்த பெண்களும் கூட அலுவலகங்களில், வணிக நிறுவனங்களில் சிரமப்பட்டு உடல்வலிக்க வேலை செய்துவிட்டு வீடு திரும்பினால் அங்கும் வீட்டு வேலைகள் அவர்களை அடித்துத் துவைக்கின்றன. சமூகத்தின் மனப்போக்கு மட்டுமல்ல, போலீசு, நீதித்துறை, பாராளுமன்றம், சட்டமன்றங்கள், செய்தி ஊடகங்கள் என அனைத்தும் ஆணாதிக்க தன்மையுடனேயே இயங்குகின்றன. மொத்த கட்டமைப்புமே பெண்களுக்கு எதிராக நிற்கும் போது இந்தக் கட்டமைப்புக்குள்ளேயே பெண்கள் விடுதலை பெறுவது சாத்தியமாகுமா?

மெரினா எழுச்சியில் தமிழகமெங்கும் இரவு பகலாக ஆண்களுக்கு நிகராக பெண்களும் இணைந்து போராடினார்கள். ஆண்களும் பெண்களும் ஆயிரக் கணக்கில் குழுமியிருந்தும் ஒற்றைஒரு பாலியல் சீணடலுக்குக் கூட பெண்கள் ஆளகவில்லை. அழுகிப்போன இந்த சமூகத்தை தாக்கி தகர்த்துவிட்டு புதிய சமுதாயத்தை கட்டியமைக்கும் மாற்று அரசியலுக்கான எழுச்சியே பெண் விடுதலையை சாத்தியமாக்கும் என்பதற்கு துலக்கமான எடுத்துக்காட்டு இது.

உலக மகளிர் தினத்தை கடைப்பிடிக்கும் வழியில் அத்தகைய மாற்று அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுக்க உறுதியேற்போம்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s