உத்திரப்பிரதேசம், உத்தர்காண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு பல கட்டங்களாக தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இவைகளில் உத்திரப்பிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்திருக்கின்றது. பஞ்சாப்பில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்திருக்கிறது. மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டாலும் அதிக இடங்களைப் பிடித்த கட்சியாக வந்துள்ளது.
ஓட்டுக் கட்சிகள் தேர்தல்களை எப்படி எதிர் கொள்கின்றன என்பதற்கு புதிதாக விளக்கம் கூற வேண்டிய தேவையின்றி அனைவருமே நன்றாக அறிந்திருக்கின்றனர். ஒற்றை வரியில் சொல்வதானால் ஜாதியையும், பணபலத்தையும் தாண்டி அதில் வேறொன்றுமில்லை. ஆனால் வென்ற பின் அவர்களின் கூப்பாடு இருக்கிறதே .. .. .. சொல்லி மாளாது. பாஜக தன் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றியாக கூறியிருக்கிறது. பாஜக வுக்கும் காங்கிரசுக்கும் ஒரே கொள்கைதான். அது மக்களை மொட்டையடிப்பது. தங்களை கொள்ளையடிக்கும் கொள்கைக்காக மக்கள் இந்த கொள்ளையர்களை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளவா?
உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும், பஞ்சாப், கோவாவில் பாஜகவும், உத்தர்காண்ட், மணிப்பூரில் காங்கிரசும் ஆளும் கட்சிகளாக இருந்தன. இதில் மணிப்பூர் தவிர – அங்கும் ஆட்சி அமைப்பதற்கு போதிய வலுவில் ஆளும் கட்சி வரவில்லை – ஏனைய மாநிலங்களில் ஆளும் கட்சிகள் தோல்வியடைந்துள்ளன. தனியார்மயக் கொள்கைகளை புதிய உத்வேகத்துடன் செயல்படுத்தப்படத் தொடங்கிய 90 களிலிந்து நடைபெற்ற அனைத்து தேர்தல்களையும் – மத்திய தேர்தலானாலும், மாநில தேர்தல்களாலும் – எடுத்துக் கொண்டு பார்த்தால் இந்த முடிவு தான் ஒவ்வொரு முறையும் கிடைத்திருக்கிறது. வெகுசில விதிவிலக்குகளில் சிறப்புக காரணங்கள் இருக்கின்றன. ஆளும் கட்சி தோல்வியடைந்து எதிரில் இருந்த கட்சி வெற்றியடைகிறது என்றால் அதன் பொருள் என்ன? எங்களை சரியாக ஆளவில்லை அல்லது எங்களை சரியாக வாழ விடவில்லை என மக்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பது தானே. இதை கண்டுபிடிப்பதற்கு துப்பறியும் புலிகளை வரவழைக்க வேண்டுமா?
குதிரை பேரம் என்றொரு சொல் நீண்ட காலமாய் இங்கே புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் அண்மையில் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல், மக்கள் நம்மைப் பற்றி என்ன கருதுவார்கள் எனும் சிந்தனையற்று வெகு இயல்பாய் அந்த குதிரை பேரம் நடக்கிறது. கூவத்தூரையும், கோவா மணிப்பூரில் நடப்பதையும் குதிரை பேரம் எனும் சொல்லின் இலக்கணத்தினுள் அடக்கி விட முடியுமா? சட்டபூர்வமான செயலைப் போலவே நடக்கின்றன. மக்களாட்சி எனும் சொல், அதன் மெய்யான பொருளை புரிந்து கொள்ளாதவர்களைப் பார்த்து தன் பின் வாயால் சிரித்துக் கொண்டிருக்கிறது.
ஊடகங்களின் வாந்தி நாற்றம் சகிக்கவே முடியாததாய் இருக்கிறது. அரசு எதைக் கழிந்தாலும் அதை உண்டு வாந்தி எடுப்பது ஒன்றே தன் ஒரே வாழ்நாள் கடமை என்றுதான் அச்சு காட்சி ஊடகங்கள் அனைத்தும் செயல்படுகின்றன. இதில் வாந்தி நாற்றத்தில் தான் மூக்கைப் படித்துக் கொண்டு மக்கள் தமக்கான செய்திகளை தேடி அடைய வேண்டியதிருக்கிறது.
இந்த நிலமைகளின் நடுவே தான் தேர்தல் முடிவுகளைக் கொண்டு தன்னுடைய கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி என்று மக்களை நம்ப வைக்க அல்லது மக்களை முட்டாளாக்க பாஜக முயல்கிறது. உ.பியிலும், உத்தர்காண்டிலும் வென்றது கொள்கைகளுக்கு கிடைத்த ஆதரவு, மோடி அலை இன்னும் குறையவில்லை என்று கொண்டால் பஞ்சாப்பில் படு கேவலமாக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டதே பாஜக அதன் பொருள் என்ன? கோவாவிலும், மணிப்பூரிலும் முக்காடு போட்டுக் கொண்டு பின்வாசல் வழியாக நுழைய வேண்டியிருந்ததே அதன் பொருள் என்ன?
முதலில் தேர்தல் முடிவுகள் என்பவை மக்கள் முடிவை எதிரொலிப்பவை அல்ல. மக்களாட்சி என்றால் என்ன? இரட்டை ஆட்சி முறை என்பன போன்ற சற்றே கடினமானவைகளை விலக்கி வைத்து விட்டு எளிமையாக பார்க்கலாம். தேர்ந்தெடுத்து வாக்களிப்பது எனும் தன்மையே பெரும்பாலான மக்களிடம் இல்லை. கல்லானாலும் கணவன் எனும் மூடநம்பிக்கையைப் போல எப்போதோ ஏதோ ஒரு ஈர்ப்பினால் தாலி கட்டிக் கொண்டதைப் போன்ற மனோநிலையில் வாக்களிப்பவர்களே இங்கு அதிகம். நாம் ஏற்றிருக்கும் கட்சி செய்தது சரியா என சிந்திப்பதை விட இதை எப்படி நியாயப்படுத்துவது என்று சிந்திப்பதே இங்கு அதிகம். அடுத்து, மக்களிடம் இயல்பாய் இருக்கும் நேர்மை உணர்ச்சியை பணம் கொடுத்து கரையானாய் அரித்து, பணம் கொடுப்பவனுக்கு நேர்மையாய் இருப்பது என்று மாற்றியிருக்கின்றன அனைத்து ஓட்டுக் கட்சிகளும். இவைகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளுமே தாம் தோற்கும் போது வாக்குப் பதிவு இயந்திரத்தில் நிரலை தங்களுக்கு சாதகமாய் எழுதி முடிவை மாற்றி விட்டார்கள் எனும் குற்றச்சாட்டை வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். தேர்தல் கமிசனும், ‘எங்கே சுற்றித் திரிந்தாலும் சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவள் என்பதைப்போல’ வாக்குப்பதிவு இயந்திரத்தின் நிரலை மாற்ற முடியாது எனும் ஒற்றைப் பதிலை ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டிருக்கிறது. இவைகளின் எந்த இடைவெளியிலாவது பாஜக வின் கொள்கைகளுக்கான ஆதரவு கசிந்து வருகிறதா?
ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பினால் அனைத்து மக்க்ளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முதுகில் வலித்தாலும் தாங்கிக் கொண்டு தாலி கட்டிக் கொண்டவர்களைத் தவிர வேறு யாரும் இதை ஆதரிக்கவில்லை என்பதோடு மட்டுமல்லாமல் திட்டித் தீர்க்கிறார்கள் என்பதும் வெளிப்படை. மதவெறிப் படுகொலைகள், கலவரங்கள், தினந்தோறும் வெறியூட்டும் பேச்சுக்கள், தேசப்பக்தி என இவர்களால் மக்க்ள் ஒவ்வொரு நாளும் அல்லலுற்றுக் கொண்டே இருக்கிறார்கள். என்றாலும் இந்த வானரங்களுக்கு வாக்குகள் எப்படிக் கிடைத்தன? இதற்கான பதில் முடை நாற்றமெடுக்கும் ஊடகங்கள் என்பது தான். மக்களின் துயரங்கள் மக்களிடம் சென்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் ஊடகங்கள் காட்டிய முனைப்பு மனுவின் கடைவாயில் வழிந்த அதிகார கொழுப்பை விட அறுவெறுக்கத் தக்கது. மக்கள் தன்னெழுச்சியாக வங்கிகளை தாக்கி நொறுக்கினார்கள் என்பது எளிதாக கடந்து போகும் செய்தியல்ல. அறுபதுக்கும் மேற்பட்ட மக்களை உயிரிழந்தார்கள் என்பது பத்தோடு பதினொன்றான செய்தியா? ஆனால் அப்படி கடந்து செல்ல மக்களை நெட்டித் தள்ளின ஊடகங்கள். பெய்டு நியூஸ் என்பதையெல்லாம் இப்போது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத அளவுக்கு ஊடகங்களால் மலிவாக்கப்பட்டிருக்கின்றன. இவைதான் ஆளும் கட்சிக்கு எதிரான ஒரு மாற்றுக் கட்சியாக பாஜக வை மக்களுக்கு அடையாளப் படுத்தியிருக்கின்றன.
இப்போதும் இது பாஜகவின், மோடியின் மீப்பெரும் வெற்றியாக மக்களிடம் முன்னிருத்தி மக்களை மூளைச் சலவை செய்து கொண்டிருப்பதும் இதே ஊடகங்கள் தாம். இதில் மயங்குவதற்கு ஒன்றுமில்லை. பாஜகவும், மோடியும் அதே நைந்து கிழிந்து போன ப்ழைய கோமணத் துணி தான். ஆளும் கட்சிக்கு எதிரான மனோநிலை வரும் போது பஞ்சாப்பில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது போல் மக்களால் உமிழப்படுவார்கள் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை. ஆனால் அவர்கள் அதிகாரத்தில் இருக்கும் காலம் தான் அனைத்தையும் விட கவனம் கொள்ளத் தக்கது.
இந்தத் தேர்தல் முடிவுகள் மக்களை நேசிப்பவர்களுக்கு கடந்து செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமிருப்பதை உணர்த்தியிருக்கிறது. உ.பி வெற்றியை கொள்கைக்கு கிடைத்தது என்று மட்டும் பாஜக கூறவில்லை. ராமர் கோவில் கட்டுவதற்கு மக்கள் தந்திருக்கும் ஒப்புதலாகவும் பாஜக பரப்பிக் கொண்டுள்ளது. 80களில் ஒற்றை இலக்கத்தில் இருந்த பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அயோத்தி பிரச்சனையை முன் வைத்தே உயர்த்தினார்கள். புழுத்து நாறிக் கிடக்கும் இந்தக் கட்டமைப்பை தாக்கி வீழ்த்துவதில் தான் மக்களின் வெற்றியே அடங்கியுள்ளது. அதற்கு கிழிந்து போன திரைச்சீலையான தேர்தல்கள் ஒருபோதும் உதவாது என்பதை மக்கள் கருத்தாக மாற்ற வேண்டும். இதைச் செய்து முடிப்பது தான் மெய்யான வெற்றி.
இன்றைய தமிழகத்தின் துடிப்பை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்றுமதி செய்யும் பெரும் கடமை மக்களை நேசிப்பவர்களுக்கு இருக்கிறது. மெரினா எழுச்சியின் துடிப்பு இன்னமும் இளைஞர்களிடம் கனன்று கொண்டிருக்கிறது. சிந்தனைக் குழாம்களின் திட்டமிடுதலில் என்.ஜி.ஓக்கள் நடத்தும் போராட்டங்கள் உலகமெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மெரினா எழுச்சியும் அப்படி தொடங்கியது தான். ஆனால் உலகமெங்கும் வெற்றிகரமாக போராட்டங்களை நடத்தியவர்கள மெரினாவில் முதல் நெருடலைச் சந்தித்தார்கள். அவர்களின் கைகளிலிருந்து போராட்டம் கை நழுவி மக்களின் கைகளில் வந்தது. கோக் பெப்சிக்கு எதிராக, விவசாயத்துக்கு ஆதரவாக என்று சுழன்றடித்தது. இதை நீறு பூக்க விடாமல் காப்பதோடு இதன் துடிப்பலைகளை இந்தியாவெங்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும்.
நண்பரே ….! தேர்தல் முடிவுகள் …? நம் மக்களுக்கு பழகிப்போன ஒன்று … சிந்திக்கும் திராணியற்று மழுங்கிப்போய் .. செய்ததையே திரும்ப – திரும்ப செய்யும் மனோநிலை … ஏன் – எதற்கு என்பதைப்பற்றி கவலையில்லாமல் ” ஜாதியையும் – மதத்தையும் – பிச்சை இலவசங்களையும் – வேட்பாளர்கள் இறைக்கிற காசு பணத்தையும் ” நம்பி வாக்குகளை விற்கும் கூட்டம் இருக்கும் வரை — கிரிமினல்கள் என்று முத்திரை குத்தப்பட்ட பேமானிகளும் தேர்தலில் நின்று வெற்றிபெற்று — சபைகளில் கோலோச்சும் அவலம் தொடர்கதையாகி விட்டது என்பது தானே உண்மை நிலவரம் …. ?
விபச்சார ஊடகங்கள் தங்கள் நிலை மறந்து ” paid news ” போடும் தொழிலை தொடரும் கேடு நிறைந்த நாட்டில் எண்ணத்தை எழுதி — கூறி நடக்கப்போகிறது … ?
கோவாவில் அரசியலைப்பு சட்டத்தையே கேலிக்கூத்தாக்கி — குறைந்த இடங்களை பெற்ற கட்சி குதிரைபேரத்தில் இறங்கி மொத்த எம்.எல்.ஏ . க்களின் எண்ணிக்கையில் ” 2 பேருக்கு ஒருத்தர் மந்திரி.. !!” என்று பதவி ஆசையை தூண்டி ஆட்சி அமைத்ததை பெருமையாக பேசி கொண்டாடி மகிழ்கிறது ….
மணிப்பூரில் எம்.எல்.ஏ. க்களை கடத்தி ” கூவத்தூர் பார்முலாவை ” கையில் எடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க பேயாட்டம் போடுகிறது … ஊடகங்களும் — அரசியல் நோக்கர்கள் என்று மார்தட்டும் நபர்களும் – மக்களும் – ” வாயில் விரல் வைத்துக்கொண்டு ” வேடிக்கை பார்ப்பது தான் ” ஜனநாயகமோ ” … ?
மெரினா எழுச்சியும் — போராட்டமும் மட்டும் போதுமானதா … ? மக்களின் ஆதரவு தேசம் முழுக்க தேவைதானே –? அது ஏற்படப்போகும் நன்னாள் என்றோ … ?
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் மணலில் கயிறு திரிக்கும் கம்யூனிச காம்ரேட்டுகள் துடைத்து எறியப்பட்ட வலி உங்களது கட்டுரையில் தெரிகிறது….