கடந்த 16/03/2017 அன்று இரவு திராவிடர் விடுதலைக் கழக செயற்பாட்டாளர் தோழர் ஃபாரூக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இரண்டு வாரங்களைக் கடந்த பின்னும் அதன் அதிர்வலைகள் அடங்கவில்லை. அந்த அளவுக்கு அந்தப் படுகொலையின் தாக்கம் இருக்கிறது. முதலில், ஒரு பெரியாரிய செயற்பாட்டாளரை இஸ்லாமிய மதவாதிகள் கொல்லத் துணிவார்களா? எனும் கேள்வி முதன்மையானது. அடுத்து, இந்தப் படுகொலையின் பிறகான எதிரொலிப்புகள் இஸ்லாமிய இயக்கங்களிடமிருந்தும், பெரியாரிய, இன்னும்பிற சமூக இயக்கங்களிலிருந்தும் மிக நிதனாமான, உணர்ச்சிவயப்படாத அணுகுமுறை. இந்தக் கோர நிகழ்வின் மெய்யான காரணம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. என்றாலும், சிலர் சரணடைந்திருக்கிறார்கள், சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதன் வாயிலாக இஸ்லாமிய மதவெறி இதில் பெரும் பங்காற்றியுள்ளது என்பது வெளிப்படையாகிறது.
தமிழகத்தில் செயல்படும் இஸ்லாமிய இயக்கங்கள் இந்த மதவெறியை எவ்வாறு உள்வாங்கியிருக்கின்றன அல்லது எவ்வாறு அறிந்து கொண்டிருக்கின்றன என்றால் அவைகளின் செயல்பாடுகள் அவ்வாறு இல்லை என்பதை நிரூபிக்கின்றன. இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம், இஸ்லாத்தை அறியாதவர்களின் செயல் என்பதை பதிய வைப்பதிலேயே அவை உறைந்திருக்கின்றன. மட்டுமல்லாது, இந்த இரண்டு வாரங்களில் பெரியாரிய இயக்கங்களும் இஸ்லாமிய இயக்கங்களும் உருவாக்கியிருந்த இணக்கமான சூழலை குலைக்கும் விதமாக ஒரு இஸ்லாமிய அமைப்பு வீடியோவை வெளியிட்டிருக்கிறது. இது எந்த நோக்கத்தை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நுணுகிப் பார்க்கும் தேவை ஏற்பட்டிருக்கிறது.
இஸ்லாமிய மதவெறி என்பது இல்லாத ஒன்றா? இஸ்லாத்தின் தொடக்க காலத்திலிருந்தே இந்த மதவெறி வெறியாட்டம் போட்டுக் கொண்டு தான் இருந்திருக்கிறது. தன்னை எதிர்த்து விமர்சனம் செய்கிறார்கள் என்பதற்காக அபு அபக் எனும் முதியவரையும், அஸ்மா பின் மர்வான் எனும் பெண் கவிஞரையும் கொடூரமாக கொலை செய்வதற்கு ஏவியவர் தான் முகம்மது நபி. இஸ்லாமிய ஆட்சி இருக்கும் நாடுகளில் அரசு இது போன்ற படுகொலைகளை வெகு எளிதாக செய்து கொண்டிருக்கிறது. பக்கங்கள் கொள்ளாத அளவுக்கு அந்த அட்டவணை நீண்டு செல்லும். அரசுக்கு வெளியே தனிப்பட்டவர்கள், இயக்கங்கள் செய்யும் அச்சுறுத்தல்களும், முடக்கங்களும் துயரங்களும் கொலைகளும் கூட தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அமெரிக்காவின் ஆமினா வதூத், கனடாவின் இர்ஷாத் மஞ்சி, எகிப்தின் நவ்வல் சதாவி, லெபனானில் சாதிக் ஜலால் அல் அஸ்ம், மஹ்தி அமில், பாகிஸ்தானின் தாரிக் அலி, சோமாலியாவின் ஹிர்ஸ் அலி போன்றோர் இஸ்லாத்தின் மீதான விமர்சனங்களால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியாத அளவுக்கு நெருக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள். தமிழகம் என்று எடுத்துக் கொண்டாலும் குமரி மாவட்டம் தக்கலையில் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல், புதுக்கோட்டையில் அலாவுதீன், நெல்லையில் துராப்ஷா என தொடர்ந்து கொண்டிருக்கிறது. அன்றைய முகம்மது நபி தொடங்கி இன்றைய கும்பல்கள் வரை அனைவரும் இஸ்லாத்தை அறியாதவர்கள் என்று மேம்போக்காக கடந்து சென்றால் இஸ்லாம் என்பதில் என்ன மிச்சமிருக்கும்? இஸ்லாத்தை அதன் தூ.. .. ..ய வடிவில் பரப்புகிறோம் என்று திரியும் இவர்களின் திரித்தல்கள் சமூகத்தில் என்ன விளைவை ஏற்படுத்தி இருக்கின்றன என ஆய்ந்து பார்க்காதவர்கள் மெய்யில் அந்தக் குற்றங்களை தூண்டியவர்கள் என்பதில் ஐயமொன்றும் இல்லை.
அதேவேளை பார்ப்பன மதவெறிக்கு சற்றும் குறைந்ததில்லை இஸ்லாமிய மதவெறி என்று கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த நினைக்கும் சமூக செயற்பாட்டாளர்களின் செயலும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. தபோல்கர், கல்புர்க்கி போன்றவர்களின் கொலைக்குப் பின்னே இருக்கு பார்ப்பனிய மதவெறியையும், ஃபாரூக் கொலைக்குப் பின்னே இருக்கும் இஸ்லாமிய மதவெறியையும் ஒரே தட்டில் வைத்து எடை போட முடியுமா? இந்தியாவைப் பொருத்தவரை இஸ்லாம் ஒரு ஒடுக்கப்படும் மதம். இஸ்லாமியப் பெயர் மட்டுமே போதும், அதை தாங்கியிருப்பவர் இயல்பான வாழ்கையை வாழ கூடுதல் சிரமப்பட வேண்டும் என்பது இங்கு யதார்த்தம். சிறுபான்மை இன மக்கள் ஒரு பதட்டத்துடனேயே எப்போதும் இருக்க வேண்டிய சமூகமாக இது இருக்கிறது. ஏனென்றால் இங்கு பார்ப்பனிய மதம் பெரும்பான்மை மதம் எனும் அடிப்படையில் மட்டும் இங்கு தங்கியிருக்கவில்லை. அரசு இயந்திரத்தின் அடி முதல் நுனி வரை கைப்பற்றியிருக்கிறது, அதிகாரத்தில் இருக்கிறது. தங்களுக்கு எதிரானவர்களை நீக்க நினைக்கும் உளவியல் இரண்டு மதத்தினருக்கும் ஒன்றே போல் இருக்க முடியுமா? தங்களின் தங்குதடையற்ற அதிகாரத்துக்கு இடையூறு எனும் உளவியலுக்கும், தங்கள் இருப்பே கேள்விக்குறியான சூழலில் அதையும் கெடுக்கும் இடையூறு எனும் உளவியலுக்கும் வேறுபாடு இல்லை எனக் கருதுவோரை எவ்வாறு வகைப்படுத்துவது?
இன்றைய சமூக சூழலில் கோவை ஃபாரூக் படுகொலை என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது? வட மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு சமூகநீதி அடிப்படையில் பலமடங்கு உயர்ந்த நிலையில் இருக்கிறது. அதனால் தான் ஆர்.எஸ்.எஸ் போன்ற சமூக விரோத அமைப்புகள் இங்கு தலைதூக்க முடியாமல் இருக்கிறது. மறுபுறத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உருவாக்கிய கள்ளக் குழந்தையான இஸ்லாமிய மீட்டுருவாக்கம் வளைகுடா நாடுகளின் பொருளாதார உதவியாலும், அங்கு அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் வேலை பார்ப்பதாலும் இஸ்லாமிய இயக்கங்கள் என்ற பெயரில் தமிழ்நாட்டில் வேர்பிடித்து வளர்ந்துள்ளன. இன்னொரு புறத்தில், இஸ்லாமியர்களை எதிரியாக நிலைநிருத்த பார்ப்பனியம் அனைத்து வேலைகளையும் அரசு எந்திரத்தின் உதவியுடன் செய்து வருகிறது. இதே கோவையில் சில மாதங்களுக்கு முன் சசிகுமார் எனும் பொறுக்கி கொலை செய்யப்பட்ட போது, அவனுடைய சடலத்தை 18 கிலோமீட்டர் தூரத்துக்கு ஊர்வலம் நடத்த அனுமதித்து, அவர்கள் வழியெங்கும் நிகழ்திய சூறையாடல்களையும், வக்கிரங்களையும் அனுமதித்து பாதுகாத்தது. ஆனால் ஃபாரூக்கின் உடலை விரைந்து அடக்கம் செய்ய தேவையானதைச் செய்தது. மட்டுமல்லாது பல இஸ்லாமிய குழுக்களை கருங்காலிகளாக உருவாக்கியும் வருகிறது. உவைசியின் அமைப்பு அம்மாதிரியான கருங்காலி அமைப்பு தானா எனும் ஐயம் இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி அமைப்புகள் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றன என்பது பாசிச ஜெயா மறைவுக்குப் பின்னரான நிகழ்வுகள் அம்பலமாக்கி இருக்கின்றன. இந்த சூழலில் தான் புதிய தேவை ஒன்று சமூகத்தின் மீது அழுத்துகிறது. பார்ப்பனியம் வெகு மக்களை நெருக்கடிக்குள் தள்ளத் தள்ள தலித்துகளும், சிறுபான்மை மக்களும் ஒன்றிணைந்து வருகிறார்கள். உனா சலோ போராட்டம் அதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு. மெரினாவிலும் பேதங்கள் இற்று வீழ்ந்தன. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் நீண்ட காலமாகவே இந்த இணக்கம் இங்கு உண்டு. புரட்சிகர, தலித்திய இயக்கங்கள் இஸ்லாமிய மக்களை தள்ளிவைத்து பார்த்ததே இல்லை. இது போன்ற சமூகச் சூழலில் நிகழ்ந்த ஃபாரூக்கின் படுகொலை யாருக்கு பலனை அளிக்கும் என்று பார்ப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
காவல்துறை இதுபோன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் எப்படி செயல்பட்டிருக்கிறது என்பதற்கு அதன் வரலாறு சான்றாக இருக்கிறது. ஃபாரூக் கொலை வழக்கிலும் அந்த சாத்தியங்களை மறுப்பதற்கில்லை. இந்த வழக்கில் சரணடைந்தவர்கள் கூறிய காரணங்களை உற்று நோக்கினால் இது புலப்படும். முதலில் சரணடைந்தவர் ஃபாரூக்கை அழைத்த தொலைபேசி இலக்கம் இரண்டு நாட்களுக்கு முன்னர் தொலைந்து போன என்னுடைய செல்லிடப் பேசியின் இலக்கம் என்று கூறி சரணடைந்தார். அதன் பிறகு இது குறித்த எந்த தகவலும் காவல்துறையின் பக்கமிருந்து வெளியிடப்படவில்லை. குறிப்பிட்ட இலக்கத்திலிருந்து தான் அழைப்பு சென்றிருக்கிறது என்று வெளியில் எப்படி தெரிந்தது? இரண்டாவது கட்டமாக சரணடைந்தவர்கள் காவல்துறை தங்களை துன்புறுத்துவதாகக் கூறி சரணடைந்திருக்கிறார்கள். ஆனால் இந்த விபரங்களெல்லாம் பின்னர் ஊடகங்களிலிருந்து மறைக்கப்பட்டு விட்டன. தற்போது ஆறுபேரிடம் விசாரணை செய்து வருகிறோம் என்று தான் காவல்துறையிலிருந்து தகவல் வெளியிடப்படுகிறது. எனவே, காவல்துறை இந்த வழக்கில் இஸ்லாமியர்களை கைது செய்து விசாரித்து வருகிறது, ஃபாரூக்கின் தகப்பனார் உள்ளிட்ட உறவினர்கள் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் கொடுக்கும் பேட்டிகள், இவைகளை மட்டும் வைத்துக் கொண்டு முடிவெடுக்க விரும்புவோர்கள் சுவாதி கொலை வழக்கு என்ன விதத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்பதை நினைவுபடுத்திக் கொள்ளட்டும்.
தமிழ்நாட்டில் இளைஞர்கள் பரவலாக இஸ்லாமிய, தலித்திய இயக்கங்களிலிருந்து விடுபட்டு பொதுவெளியில் சமூக அரசியல் கண்ணோட்டத்தில் போராட்டங்களில், நிகழ்வுகளில் கைகோர்த்து வருகிறார்கள். ஃபாரூக்கின் படுகொலை நேரடியாக இதில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே, இதில் உடனடியாக பலனை அனுபவிக்கும் இடத்தில் ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி கும்பல் இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. இஸ்லாமிய உழைக்கும் மக்களானாலும், இந்து உழைக்கும் மக்களானாலும் மதவெறியின் ‘தொடர்பு எல்லைக்கு’ வெளியே இருக்கிறார்கள். அன்றாட வழிபாட்டு நம்பிக்கைக்கு வெளியே மதம் என்பது பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால், பார்ப்பனிய மதவெறியர்களும் இஸ்லாமிய மத வெறியர்களும் அவர்களை மதங்களுக்குள் இழுத்து விடுவதையே தங்களுக்கான வெற்றியாக எண்ணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஃபாரூக் இதை எதிர்த்துத்தான் செயல்பட்டார். ஃபாரூக்கின் அடையாளம் இது தான். ஃபாரூக் மதவெறியர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு விட்ட பின்பு அவரின் அடையாளம் என்ன என்பதை மதவெறியர்கள் தீர்மானிக்க நாம் அனுமதிக்கக் கூடாது. அது தான் ஃபாரூக்குக்கு நாம் செலுத்தும் வீர வணக்கம்.
16/06/2017 . MONTH MISTAKE .. NOT JUNE — MARCH
நன்றி, திருத்தி விட்டேன். திருந்திக் கொண்டேன்.
Absurd article.irrelevan to the title.
எந்த வகையில் பொருத்தமில்லை எனக் கூறினால் நாம் அதுகுறித்து விவாதிக்கலாம்