அம்மணம் உங்கள் கன்னத்தில் அறையவில்லையா?

manippu delhi naked struggle

 

ஊதாரிகளின் அம்மணம்

ஊக்கிப் பேசப்படும்

நாகரீகமாய்.

அந்த அம்மணங்களின் கூடுகளில்

சுயநலப் புழுக்கள் நெளியும்

அறுவெறுப்பாய்.

 

அம்மணம் இங்கே

பக்தியாக இருக்கும் போது

போராட்டமாய் கூடாதா?

 

லட்சக் கணக்கில் விவசாயிகள்

உயிர் துறந்த போது

செய்தியாக மட்டுமே இருந்தது உங்களுக்கு,

ஆடை துறந்த போதோ

உங்கள் வல்லரசுக் கனவு

அம்மணப்பட்டதாய் அலறுகிறீர்கள்.

 

இந்திய இராணுவமே எங்களைக் கற்பழி

மணிப்பூரில் எங்கள் தாய்மார்கள்

ஆயுதமேந்திய கிருஷ்ணன்களை நோக்கி அம்மணமானார்கள்.

 

பன்றித் தொழுவத்தின் முடை நாற்றத்தை

அம்மணமாக்கினார்கள் எங்கள் விவசாயிகள்.

அந்த கிருஷ்ணன்களின் இளைய தம்பிகள் இன்று

கைது ஆடை அணிவிக்கிறார்கள்.

 

பத்து லட்சத்தில் ஒற்றை ஆடை அணிந்தவர்கள்

இந்த அம்மணத்தைக் கொஞ்சம் பார்க்கட்டும்

ஆடையின் அம்மணத்தை உடுத்திக் கொண்டு

அங்கத்தின் அம்மணத்தை மறைத்தவர்கள்

தங்கள் அரசியலின் அம்மணத்தை கொஞ்சம்

உற்றுப் பார்த்து தரிசிக்கட்டும்.

 

பாதி மயிர் மழிப்பில் தொடங்கி

தலை கீழாக நின்றது வரை

வடிவங்கள்.

அவற்றில் ஒன்று தானா அம்மணம்?

புழுத்துப் போன இந்த அரசமைப்பு

நம்மை அரவணக்காது என்றுணர்ந்த

குறியீடு அது.

 

37 லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்து விட்டு

கூச்சமே இல்லாமல்

விவசாயக் கடன் தள்ளுபடி என்பது

நேர்மையை பாதிக்கும் என்றார்களே

அது அம்மணம் இல்லையா?

 

மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை

பாசனப் பரப்புகள் அனைத்தும் சாக்கடை

வனங்களை அழித்ததால் மழைவளம் நோயாளி

பசுமைப் புரட்சி கொண்டு வேளாண்மைக்கு தூக்கு

இடுபொருள் விலை உச்சம்

விளைபொருள் விலை துச்சம்

இன்னும் .. .. இன்னும் .. .. .. ஆனாலும்

இந்தியா விவசாயநாடு என்கிறார்களே

அது அம்மணம் இல்லையா?

 

மரபணு மாற்று விதை என்றும்

பணப்பயிர் விவசாயம் என்றும்

ஏகாதிபத்திய அறுவடைக்காக

விவசாயி மூளையில் உழுதன அரசுகள்.

 

நம்மாள்வார்கள் போராடிக் கொண்டிருக்கையில்

சுவாமிநாதன்களை கொண்டாடின அரசுகள்.

 

மலட்டு விதைகள்

விவசாயிகள் ஆண்மையை நசுக்கிய போது

பி.டி க்கு எதிராக பேசவும் கூடாதென

சட்டம் போட்டு முந்தி விரித்தன அரசுகள்.

 

கடற்கரை தொடங்கி ஆற்றங்கரை வரை

ஒட்டச்சுரண்டி விற்றுக் குவித்த போது

கலவிக் கொண்டிருந்த அரசுகள்,

விவசாயி கரம்பை மண்ணை அள்ளிய போது

மானமே போனதாய் துடித்தன.

 

கோடைக்கு முன்னே பாலை தலை காட்டி

வைத்த நாற்றும் வதங்கக் கண்டு

மொத்தமும் போனதாய் மண்ணில் வீழ்ந்தான்.

குடிக்க தண்ணீர் மட்டுமல்ல

கண்ணீரும் வற்றிய போதும்

தாமிரவருணியில் உபரி நீர் என்று

பெப்சி கோலாக்களின் உதடுகளில்

முத்தமிட்டுக் கொண்டிருந்தன நீதிமன்றங்கள்.

 

இவற்றை அம்மணமாய் பார்க்காதவர்கள்

முகம் சுழிக்கிறார்கள்

விவசாயிகளின் அம்மணம் கண்டு.

 

பூமியை அவிழ்த்து உண்ணத் தந்தவர்கள்

ஆடையை அவிழ்த்து பார்க்கத் தந்திருக்கிறார்கள்.

வயிற்றிலடிக்கத் தெரியாத அவர்களுக்கு

அவிழ்க்க மட்டுமல்ல,

அடிக்கவும் தெரியும்.

வன்முறை என்று அலறாதீர்கள்.

அவர்கள் அடிக்கத் தொடங்கும் போது

கல்லறைக்குள்ளும்

உங்களால் செத்து விட முடியாது.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

3 thoughts on “அம்மணம் உங்கள் கன்னத்தில் அறையவில்லையா?

 1. நண்பரே … ! ஒரு மாத காலத்திற்கும் மேலே தொடர்கிற போராட்டம் பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் — சந்திக்க திராணியின்றி — மௌனம் காக்கும் மோடி மஸ்தான் — வாசனையோடு வருகின்ற — வேஷம் கட்டும் வெத்துவேட்டு ” நடிகைகளை ” அவர்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்து ” மரியாதைக்காட்டுவதை ” ரசிக்க ஆசாமிக்கு நிறைய நேரம் இருக்கிறது …

  வியர்வை சிந்தி உழைத்து — உலகத்தவர்கள் அனைவருக்கும் வெற்று பயல்கள் உட்பட உணவு உற்பத்தி செய்யும் ” கோமணாண்டிகளை ” பார்க்க நேரமில்லை … என்னே ஒரு பரந்த மனது … இந்த ஜென்மங்களை எதில் சேர்ப்பது ….. ? பட்டுக்கோட்டையார் அன்று எழுதிய ஒரு பாடல் : —

  ‘வசதி இருக்கிறவன் தரமாட்டான், அவனை
  வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்
  வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
  வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான்…

  எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
  உழுது ஒளச்சு சோறு போடுறான்.
  எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
  நல்ல நாட்டைக் கூறு போடுகிறான் இவன்
  சோறு போடுறான் அவன்
  கூறு போடுறான்…’ என்பது எவ்வளவு தீர்க்கமான எல்லா காலங்களுக்கும் ஒத்த வரிகள் ….

  இந்த டெல்லி போராட்டத்தையும் கொச்சையாக சித்தரிக்கிற கோமாளிகளும் இருக்கிறார்கள் … நாளை ” சோத்துக்கு ” அல்லாடும் போது அவர்களுக்கு கண்டிப்பாக புரியும் — இதன் மகத்துவம் … ஓட்டு ஒன்றையே பொறுக்க அலையும் கூட்டம் ஓய்வது எப்போது …. ?

 2. அய்யா .. அம்மணமாக போராடி விடுவதாலேயே ஒரு அயோக்கியத்தன்மான கோரிக்கையை நியாயம் என சொல்ல முடியாது தானே.. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோருவது என்பது கர்நாடக விவசாயிகளது நலனுக்கு எதிரானது தானே..

 3. அய்யா, உங்கள் கருத்துகளை கொஞ்சம் விரிவாக, தெளிவாக பதிவு செய்தால் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s