அறிவியலா? அறிவியலாளர்களா? மதமா?

devotional vs political

வணக்கம் தோழர்,

அறிவியலை நாம் அறிவியலாளர்கள் வாயிலாகவே அறிகிறோம்.அறிவியலாளர்களிலும் கடவுள் நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்களே. அறிவியலையும், அறிவியலாளர்களையும் எப்படி பிரித்து புரிந்து கொள்வது ?

 ராஜ்ரம்யா கேள்விபதில் பகுதியிலிருந்து

 தோழரே,

அரசியல் இஸ்லாம் மற்றும் ஆன்மீக இஸ்லாம் ஆகியவற்றுக்கான வேறுபாடுகள் குறித்து விரிவாக அறிய விரும்புகிறேன். இதுகுறித்த தங்களின் விளக்கங்களுடன், அதுதொடர்பான ஏதேனும் புத்தகம் இருந்தாலும் அதை ஆன்லைனில் அனுப்பி வைத்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். மற்றபடி, தங்களுடைய துணிச்சலான அறிவுசார் சமூகப்பணி தொடர்வதற்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

 பிரசன்னா கேள்விபதில் பகுதியிலிருந்து

நண்பரே! ” அதிகாரம் என்கிற சொல் பொதுவுடைமைக்கு ஏற்புடையதா?

 செல்வராஜன் கேள்விபதில் பகுதியிலிருந்து

 

அறிவியலுக்கும் அறிவியலாளர்களுக்கும் இடையிலான வேறுபாடு என்பது நுணுக்கமானது. ஒரு மனிதனுக்கு அனைத்து துறைகளிலும் அல்லது அனைத்து நிகழ்வுகளிலும் கருத்து நிலைப்பாடு இருக்கும். அந்த கருத்து நிலைப்பாடு அறிவியல் நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மட்டுமல்லாது, அறிவியல் நிலைப்பாட்டுக்கு புறம்பானதாகவும் இருக்கலாம். இந்த நிலை அறிவியலாளர்களுக்கு எப்படி ஏற்படுகிறது?

 

ஒரு மருத்துவரைப் போல, ஒரு பொறியாளரைப் போல ஒரு அறிவியலாளரும் சமூகத்துடன் ஒட்டாத கல்வியத் தான் கற்கிறார். அவர்களைப் போலவே ஒரு வேலையாகத் தான் அறிவியலாளரும் பணிபுரிகிறார். மருத்துவர் என்றவுடன் எப்படி அவர் பகுத்தறிவுவாதியாக இருப்பார் என்று நாமாக ஒரு முடிவுக்கு வரமுடியாதோ அதே போலவே ஒரு அறிவியலாளரும் பகுத்தறிவுவாதியாக இருக்க வேண்டும் என்றும் நாமாக முடிவுக்கு வரமுடியாது. அறிவியலாளர் என்பது குறிப்பிட்ட ஒரு மனிதரின் ஒட்டு மொத்த சாரம் அல்ல. அது அவரின் கல்வி, பணி குறித்த ஓர் அம்சம் மட்டுமே, கூடுதலாக ஆர்வமும் இருக்கலாம்.

 

ஆனால் இவைகளைத் தாண்டி அறிவியல் கண்ணோட்டம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களையெல்லாம் நாம் அறிவியலாளர்களாக கருதுவதில்லை. எடுத்துக்காட்டாக கம்யூனிஸ்டுகளைக் கொள்ளலாம். கம்யூனிஸ்டுகள் அனைத்து நிகழ்வுகளையும் அறிவியல் கண்ணோட்டம் கொண்டே பார்க்கிறார்கள். இயங்கியல் முறையில் பகுத்துப் பார்த்தே எதிலும் முடிவுக்கு வருகிறார்கள். இந்தக் கண்ணோட்டம் அவர்களுக்கு பயிற்சியின் மூலம், சரியான சமூகப் பார்வையின் மூலம் வருகிறது. இந்த வாய்ப்புயும் முயற்சியும் எப்படி ஒரு மருத்துவருக்கு, ஒரு பொறியாளருக்கு இருந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லையோ அதைப் போலவே, ஓர் அறிவியலாளருக்கும் இருந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆகவே எப்படி ஒரு மருத்துவரிடமிருந்து மருத்துவத்தை மட்டும் எதிர்பார்க்கிறோமோ அதை போல ஓர் அறிவியலாளரிடம் அறிவியலை மட்டுமே எதிர்பார்க்க வேண்டும்.

 

எந்த ஒரு செயலும் அறிவியலைக் கொண்டே அறிவியல் விதிகளைப் பயன்படுத்தியே நடைபெறுகிறது. எனவே, நம் நம்பிக்கைகள் பழக்க வழக்கங்கள், திட்டங்கள், எண்ணங்கள் என அனைத்தையும் அறிவியலைக் கொண்டே சோதித்துப் பார்க்கிறோம், சரி காண்கிறோம். அறிவியலை விலக்கி விட்டு எதையும் செய்ய முடியாது. அதேநேரம் எது அறிவியல் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். நிலத்தின் ஆழத்தில் இருக்கும் ஹைட்ரோ கார்பன் எனும் எரிபொருள் மூலத்தை வெளியில் எடுத்து பயன்பாட்டுக் கொண்டு வருவது என்பது அறிவியல் தான். அறிவியல் என்பதாலேயே அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? என்பது முதன்மையான கேள்வி. கூர்மையான ஒரு கத்தி உடலை வெட்டுவது எனும் செயல் கூட அறிவியல் விதிகளுக்கு உட்பட்டு தான் நடக்கிறது. ஆனால் அதைச் செய்ய வேண்டுமா? செய்யக் கூடாதா? என்பதை அறிவியலைக் கொண்டு மட்டும் நாம் முடிவெடுப்பதில்லை. சமூகக் காரணங்களைக் கொண்டு தான் முடிவெடுக்கிறோம்.

 

மனித வாழ்வில் அறிவியலின் பாத்திரம் என்ன? சமூகமே அனைத்தையும் விட முதன்மையானது. நிகழ்வுகளின் விதிகளைத் தீர்மானிப்பதற்கும் தேவைவின் அடிப்படையில் மீளமைப்பதற்கும், தடுப்பதற்குமே அறிவியலின் துணை மனிதனுக்கு தேவையாய் இருக்கிறது. எதை அறிந்து கொள்வது? எதை மீளமைப்பது? எதைத் தடுப்பது? என்பதை சமூகமே தீர்மானிக்க வேண்டும். எனவே, சமூகத்தின் கையில் பயணப்படும் அறிவியலே தேவை. ஆனால் இன்றைய அறிவியல் முதலாளித்துவத்தின் கைகளில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் தான் சாக்கடை அடைப்பை போக்குவதற்கு நேரடியாக மனித உழைப்பையும், செவ்வாயில் மண்ணை அள்ளி வர அறிவியலையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

 

இந்த அம்சங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்துத் தான் அறிவியலை புரிந்து கொள்ள வேண்டும். இந்த புரிதல் ஒரு கம்யூனிஸ்டுக்குத் தான் இருக்கும். அன்றி, ஓர் அறிவியலாளனுக்கு இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. அதனால் தான் சந்திராயன் விண்கல மாதிரியை திருப்பதி பாலாஜியின் காலடியில் வைத்து வணங்கி விட்டு ஏவினார்கள்.

 ***************************************

 

 அரசியல் இஸ்லாம், ஆன்மீக இஸ்லாம் குறித்து நூல்கள் எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இந்த மாறுபட்ட இரண்டு இஸ்லாம் எனும் கருதுகோள் நானாக உருவாக்கிக் கொண்டது தான். ஆனால் இஸ்லாம் குறித்த அனைத்து நூல்களிலும் குரான் ஹதீஸ்கள் உட்பட இந்த வேறுபட்ட இரண்டு இஸ்லாம்களுக்கான கூறுகளைப் பார்க்க முடியும். இருக்கும் இரண்டு இஸ்லாம்களில் ஆன்மீக இஸ்லாம் குறித்தே பெரும்பாலானோர் அறிந்து வைத்திருக்கின்றனர். இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கூட அதை ஒரு மதமாக பார்த்து அது பிறழ்ந்து போன திசைகள் குறித்து ஆய்கிறார்களே தவிர இஸ்லாம் ஓர் அரசியல் எனும் பார்வையில் ஆய்வதாக தெரியவில்லை. ஆன்மீக இஸ்லாம் என்பதே அரசியல் இஸ்லாத்தின் ஒரு விளைவு தான். இஸ்லாம் என்பது முகம்மது தொடங்கிய மதமா அல்லது முகம்மதுவின் காலத்துக்குப் பிறகு உருவான மதமா எனும் பார்வையே ஆன்மீக இஸ்லாம், அறிவியல் இஸ்லாம் என்பதற்கான அடிப்படை. இஸ்லாம் முகம்மது தொடங்கிய மதம் எனக் கருதுபவர்கள் ஆன்மீக இஸ்லாத்தைப் பார்க்கிறார்கள். அது முகம்மதுவின் காலத்துக்குப் பிற்கு தோற்றம் பெற்றது எனக் கருதுபவர்கள் அரசியல் இஸ்லாத்தை பார்க்கிறார்கள். வரலாற்று தரவுகளின் வழியே கவனித்தால் அரசியல் இஸ்லாமே இயல்பாக இருக்கிறது. அதை மறைப்பதற்கான தேவையிலிருந்தே ஆன்மீக இஸ்லாம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அல்லது ஆன்மீக இஸ்லாம் அரசியல் தேவையிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படையில் உலகின் பிற மதங்களோடு ஒப்பிடமுடியாத அளவில் இஸ்லாம் இருக்கிறது. இதனுடன் ஓரளவு பொருந்தக் கூடியது பார்ப்பனிய மதம். இதை இன்னும் விரிவாக பேசவேண்டும் என்றால் தனித்தனி தலைப்புகளாக பிரித்துக் கொண்டு வரலாற்று, சமூக கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும். அவ்வாறு அணுகிப் பார்க்கும் ஆர்வமும் தேடலும் உங்களுக்கு இருக்கிறது எனக் கருதுகிறேன்.

 ***************************************************

 

அதிகாரம் என்கிற சொல் பொதுவுடைமைக்கு ஏற்புடையதா? இந்தக் கேள்வி எதனை அடிப்படையாக வைத்து கேட்டிருக்கிறீர்கள் எனத் தெரியவில்லை. பொதுவுடமை எனும் சொல்லை இயங்கியல் ரீதியாக புரிந்து கொள்ளும் போது இது போன்ற கேள்விகள் எழாது.

 

உற்பத்திக் கருவிகளை தனியுடமையிலிருந்து விடுவிப்பதன் திசைவழியில் உலக வளங்கள் அனைத்தையும் எந்த ஒரு தனி மனிதருக்கோ அல்லது தனி குழுவுக்கோ சொந்தமாக இருக்க விடாமல் அனைவருக்கும் பொதுவாக்குவது எனும் இலக்கைத் தான் பொதுவுடமை எனும் சொல் குறிக்கிறது. அப்படியென்றால் நடப்பு உலகம் அம்மாதிரியான பொதுவுடமையில் இல்லை என்று பொருளாகிறது. என்றால் யாரிடம் இருக்கிறது? எப்படி அதனை அடைவது? இதற்கு விடை தான் பொதுவுடமை எனும் தத்துவம்.

 

வரலாற்றியல் பொருள்முதவாதத்தின் அடிப்படையில் இன்றைய முதலாளித்துவ உற்பத்திமுறை கட்டமைப்பை எந்தக் கோணத்தில் இருந்து அணுகினாலும் அது முதலாளித்துவ ஜனநாயகம் எனும் பெயரிலிருக்கும் முதலாளித்துவ சர்வாதிகாரமே. இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது என எண்ணுகிறேன். அப்படியானால் தன் கொடூரக் கைகளை எல்லாத் திக்கிலும் விரித்திருக்கும் இந்த முதலாளித்துவ சர்வாதிகாரம் எனும் கட்டமைப்பை நீக்கிவிட்டு அந்த இடத்தில் அதற்கு மாற்றான ஒரு கட்டமைப்பை நிருவ வேண்டியதிருக்கிறது. அது தான் பொதுவுடமை சமுதாயம். இந்த பொதுவுடமை சமுதாயத்தில் அதிகாரம் எனும் சொல் பொருளற்றதாக இருக்கும். ஆனால் அந்த பொதுவுடமையை அடையும் வரை நடப்பு முதலாளித்துவ சமூகத்திலிருந்து பல்வேறு தலைகீழ் மாற்றங்களைச் செய்தாக வேண்டியதிருக்கிறது. இந்த தலைகீழ் மாற்றத்தைச் செய்வதற்கு அதிகாரம் தேவை. தெளிவாகச் சொன்னால் முதலாளித்துவ சர்வாதிகாரத்துக்கு எதிராக பயன்படுத்துவதற்கு மக்களுக்கு அதிகாரம் தேவை. அந்த இடைக்கால அதிகாரம் தான் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம். அதாவது பொதுவுடமையை அடைவதற்கான பாட்டை. இந்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது முதலாளி வர்க்க சர்வாதிகாரம் வீழ்ச்சியடைந்த பின்பு ஏற்படுவது. முதலாளி வர்க்க சர்வாதிகாரத்தை வீழ்த்துவதற்கும் மக்களுக்கு அதிகாரம் தேவை.

4 thoughts on “அறிவியலா? அறிவியலாளர்களா? மதமா?

  1. நீங்க பேசும் வாதம் பொதுவுடமை தானா? ஏனெனில் சாக்கடை அடைப்புக்கு மனித உழைப்பையும் செவ்வாய் கிரகத்துக்கு அறிவியலையும் பயன்படுத்துவது ஆட்சியாளர்கள் தானே. அதற்கெதற்காக அறிவியலாளர்களை குற்றம்சாட்டுகிறீர்கள் அய்யா

  2. அய்யா, உங்கள் கருத்து குழப்பும் விதத்தில் இருக்கிறது. நீங்கள் காட்டியிருக்கும் அந்த எடுப்பில் நான் அறிவியலாளர்கள் மீது குற்றம் சாட்டவில்லையே.

  3. நண்பரே …. ! ” அதிகாரம் ” என்ற ஒற்றை சொல்லை ஆக்கிரமித்துக்கொண்டுதானே – ஆள்பவர்களும் — அரசியல்வாதிகளும் — அதிகாரிகளும் — கார்பொரேட் திருடர்களும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறார்கள் — ” மக்கள் அதிகாரம் ” என்பது பல உருவ போராட்டங்களில் மட்டுமே தானே வரம்பியலுக்குள் இருந்து ஊசலாடுகிறது …. வேறு என்ன அதிகாரம் ” ஓட்டரசியலில் ” மக்களுக்கு தற்போது இருக்கிறது … ?

    நீங்கள் குறிப்பிட்டுள்ள // இந்த பொதுவுடமை சமுதாயத்தில் அதிகாரம் எனும் சொல் பொருளற்றதாக இருக்கும் // இருக்குமா … ? பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மூலம் முதலாளி வர்க்க சர்வாதிகாரம் வீழ்ந்த பின் — ” பாட்டாளி வர்க்க இயங்கியல் ” என்று மாறினால் என்ன … சர்வாதிகாரம் என்கிற சொல் பாட்டாளியோடு இணைந்து இருப்பது தேவையா … ?

  4. அரசு என்பது அதிகாரம் தான். எல்லா அரசுகளுக்கும் அதிகாரம் இருந்தது போல் பாட்டாளி வர்க்க அரசுக்கும் அதிகாரம் இருக்கும், இருக்க வேண்டும். இன்றைய முதலாளித்துவ அதிகாரத்திலிருந்து மக்களை பாட்டாளி வர்க்க அதிகாரத்துக்கு நகர்த்திக் கொண்டு செல்வதற்கு தேவைப்படும் திட்டம் தான் மக்கள் அதிகாரம். மக்கள் அதிகாரம் வரம்புக்கு உட்பட்ட போராட்டங்களைத் தான் இப்போது நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இது மாறும் மக்களின் உணர்வு நிலை உயர உயர அந்த வரம்பும் மாறிக் கொண்டே செல்லும்.

    வர்க்கம் என்பது இருக்கும் வரை அதிகாரம், சர்வாதிகாரம் இருக்கவே செய்யும். ஆண்டைகளின் சர்வாதிகாரம் இருந்தது, நிலப்பிரபுக்களின் சர்வாதிகாரம் இருந்தது, முதலாளிகளின் சர்வாதிகாரம் இருக்கிறது, பாட்டாளிகளின் சர்வாதிகாரமும் இருக்கும். என்ன வித்தியாசம் என்றால் ஏனைய சர்வாதிகாரங்கள் வர்க்கங்களை வளர்த்தெடுத்தன. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வர்க்கங்களை அழிக்கும். எனவே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்குப் பிறகு வர்க்கங்களே இருக்காது என்பதால் அதிகாரம் தேவைப்படாது. அது தான் பொதுவுடமை சமுதாயம்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s