8 மணிநேர வேலை உரிமைக்கான போராட் டம் துவங்கி 130 ஆண்டுகளாகி விட்டது. அதற்கு முன்னதாகவே பல போராட்டங்கள் நடந்திருந்தாலும், மே முதல் தினத்தன்று நடந்த போராட்டம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களது இரத்தத்தில் நனைந்து தியாக வரலாறாக பதிவாகி இருக்கிறது. இந்தியாவில் தொழிற்சங்கம் துவங்குவதற்கான சட்டம் போடப்பட்டு 90 ஆண்டுகளாகி விட்டது. இந்த சட்டமும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களது தியாகத்தால் போடப்பட்டதுதான்.
8 மணிநேர வேலை என்கிற உரிமையும், தொழிற்சங்க உரிமையும் நடைமுறையில் இருக்கிறதா? இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை ! தொழிற்சங்கம் துவங்கியதற்காக கொலைப்பழியோடு வாழ்நாள் சிறையில் தள்ளப்பட்டுள்ள மாருதி ஆலைத் தொழிலாளர்களும், முதலீட்டாளர்களது இலாபவெறிக்காக ஒருமணிநேர அவகாசத்தில் வேலையை விட்டே துரத்தப்பட்ட ஆயிரக்கணக்கான காக்னிசண்ட் ஐடி நிறுவன ஊழியர்களும் மிகச்சமீபத்திய உதாரணங்கள். இரண்டு பிரிவிலும் வேலைமுறைதான் வெவ்வேறாக இருக்கிறதே தவிர, துயரங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறது. வாழ்நாள் சிறையும், வேலைபறிப்பும் சாராம்சத்தில் ஒரே மாதிரியான தண்டனைதான்.
எல்லா வேலைகளும் காண்டிராக்ட்மயமாகி விட்டதால் எப்போது வேலை பறிபோகும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. எந்த வேலைக்கும் உத்தரவாதம் இல்லை. வேலை கிடைப்பதே அரிதாகி வருகிறது. கிடைக்கிற காண்டி ராக்ட் வேலைக்கும் போட்டிகள் அதிகரித்து வருகிறது. எத்தனை மணிநேர வேலைக்கும் தயார்; எவ்வளவு குறைந்த சம்பளத்துக்கும் தயார், எந்த வேலைக்கும் தயார் என்றெல்லாம் இறங்கி வந்து, கிடைத்த காண்டிராக்ட் வேலையை காப்பாற்றிக் கொள்ள குட்டகுட்ட குனிந்து நிற்க வேண்டி இருக்கிறது.
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்பதை உள்ளடக்கிய மறுகாலனியாக்கக் கொள்கையை மத்திய – மாநில அரசுகள் கடந்த 25 ஆண்டுகளாக தீவிரமாக அமல்படுத்தியதால் முதலாளித்துவ இலாபவெறிக்கு தொழிலாளி வர்க்கம் மட்டும் பலியாகவில்லை. விவசாயிகள், சிறுவணிகர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்து வர்க்கங்களும் பேரழிவை சந்தித்து வருகின்றன. நாட்டின் இயற்கை வளங்கள், தாது வளம், ஆயிரக்கணக்கான சிறுதொழில்கள் ஆகிய அனைத்து வாழ்வாதாரங்களையும் சூறையாடி வருகிறது, மறுகாலனியாக்க நடவடிக்கைகள்.
மறுகாலனியாக்கக் கொள்கையானது இந்திய விவசாயத்தை குறிவைத்து அழித்து வருகிறது. விவசாயத்துக்கு தரப்படுகின்ற சலுகைகள் அனைத்தையும் வெட்டுவது, விவசாயக் கடன்கள் மறுப்பு, நீராதாரங்களை வணிக நோக்கத்துக்கு பயன்படுத்துவது, விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய ஆதாரவிலையை நிர்ணயிக்க மறுப்பது, உரம், விதைகள் உள்ளிட்ட இடு பொருட்களை பன்னாட்டு நிறுவனங்களது ஆதிக் கத்துக்கு விட்டுவிடுவது, வீரிய, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை கட்டாயமாக்கி, விதைகளுக்காக பன்னாட்டு விதைக்கம்பெனி களை சார்ந்து நிற்பது, ஒப்பந்த விவசாயம் என்கிற பெயரில் சிறுவிவசாயிகளையும், உணவுப்பயிர் விவசாயத்தையும் ஒழித்துக்கட்டுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் விவசாயத்துக்கு சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகாலம் நம்பி இருந்த விவசாயம் கைவிட்டுப்போன நிலையில் கடன் தொல்லை தாங்க முடியாமலும், பிழைப்புக்கு வழி தெரியாமலும் தற்கொலை செய்து கொள்ளுகின்ற விவசாயிகள் மத்தியில், பிழைப்பு தேடி நகரத்துக்கு வந்தால் காண்டிராக்ட் வேலையைத் தவிர வேறு வழியில்லை.
ஆன்லைன் வர்த்தகம், ஒற்றை முத்திரை – பல் முத்திரை வணிகம் ஆகிய அனைத்துக்கும் அனுமதி அளித்து சிறுவணிகத்தை ஏகபோக வர்த்தகத்துக்கு பலியிட்டுள்ளது, அரசு. நவீனமயமாக்கல், காப்புரிமை போன்ற பல்வேறு நடவடிக்கைகளால் சிறுதொழில்கள் சுடுகாட்டுக்கு அனுப்பப்பட்டுள் ளன. பலகோடி பேருக்கு வேலைவாய்ப்பினை தந்து கொண்டிருந்த சிறுவணிகமும், சிறுதொழில்களும் ஒழிக்கப்பட்ட நிலையில், இவற்றை சார்ந்திருந்த மக்களின் கதி என்ன?
காடுவளம், தாதுவளம், நீர்வளம், கடல்வளம் ஆகிய அனைத்தும் இலாபத்துக்காகவே என்கிறது, அரசின் கொள்கை. குடிப்பதற்கு தண்ணீரின்றி தவித்தாலும், கோக்-பெப்சிக்கு தண்ணீர் தந்தாக வேண்டும். ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகின்ற பழங்குடி மக்களை துரத்திவிட்டு, காடுகள், மலைகளை கார்ப்பரேட் கம்பெனிகளது சூறையாடலுக்கு அனுமதிக்க வேண்டும். கடலன்னை மீன்வளத்தை வாரிக்கொடுத்தாலும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கே அவை சொந்தம்.
சொந்த நாட்டு மக்களைவிட கார்ப்பரேட் கம்பெனிகளது இலாபவேட்டை முக்கியம் என்கிறது, அரசு. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரிச்சலுகை, மானியங்கள், பொதுத்துறைகள் தாரைவார்ப்பு, மின்சாரம் உள்ளிட்ட எல்லா அடிப்படை துறைகளிலும் தொழில் துவங்க அனுமதி, கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளை வணிகமாக்கிக் கொள்ள அனுமதி, இயற்கை வளங்களை அள்ளிக் கொள்ள அனுமதி, தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தம், நில அபகரிப்பு ஆகிய அனைத்தையும் செய்து முடிக்கிறது.
வாழ்வதாரங்கள் பறிக்கப்பட்ட நிலையில் எங்கு போனாலும் வேலையின்மையும், விலைவாசி உயர்வும் நம்மை துரத்திக் கொண்டு தானிருக்கின்றன. கார்ப்பரேட் காட்டாட்சி நாட்டையும், வீட்டையும் நாசப்படுத்திக் கொண்டிருப்பதை என்னதான் பிழைப்புக்கு வழியில்லை என்றாலும் எத்தனை காலத்துக்கு இந்த கொடுமைகளை சகித்துக் கொண்டிருப்பது ? மறுகாலனியாக்க கோரத்தாண்டவத்தை ஆடினாலும், இந்து மதவெறியர்கள் உழைக்கும் மக்களை தேசபக்தி போதையில் மூழ்கடித்து வருகின்றனர்.
இத்தனை நெருக்கடியிலும் மக்கள் தங்களது வாழ்வுரிமைகளைப் பாதுகாக்க போராட்டக்களம் புகுந்துள்ளனர். குறிப்பாக, மெரீனா எழுச்சிக்குப் பின்னர் போராட்டமே தமிழகத்தின் முகவரியாகி உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக போராட்டங்கள் நடந்திருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிபரங்கள் சொல்லுகின்றன. குறைந்தபட்ச போராட்டமே மறியலும், முற்றுகையும்தான் என்கிற அளவுக்கு தமிழக மக்களது போராட்டங்கள் வீச்சாக நடந்து வருகின்றன.
இந்த போராட்டங்களை ஒடுக்குவதற்கு போலீசு விதவிதமான அடக்குமுறைகளை ஏவி விட்டுள்ளது. நியாயம் கேட்டு நீதிமன்றம் போனால், நீதிமன்ற பாசிசம் மக்களது ஜனநாயக உரிமைகளைக்கூட பறிக்கிறது. அரசு என்பது அனைவருக்கும் பொதுவானதாக சொல்லிக் கொண்டாலும், நடந்து கொண்டிருப்பது முதலாளிகளது அரசுதான் என்பதை ஒவ்வொரு நடவடிக்கையும் நிரூபிக்கின்றன. மக்கள்நலன், நாட்டுநலன் என்கிற பேச்சுக்கே இடமில்லை. எந்த கட்சி ஆட்சி செய்தாலும் கார்ப்பரேட் முதலாளிகள் போடுவதே சட்டம் என்றாகிவிட்டது. உழைக்கும் மக்கள் வாழ வேண்டும் என்றால் இந்த அரசு தூக்கியெறியப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
மக்களுக்கான அரசு தேவை என்றால், அங்கு கார்ப்பரேட்டுகளது அதிகாரம் ஒழிக்கப்பட்டு மக்களது அதிகாரம் நிலைநாட்டப்பட வேண்டும். முதலாளித்துவ இலாபவெறிக்காக திணிக்கப்பட்டு வருகின்ற மறுகாலனியாக்கத்துக்கும், அதனைப் பாதுகாப்பாக சுமந்து செல்கின்ற பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்துக்கும் முடிவுகட்டுகின்ற ஆற்றல் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே இருக்கிறது. போராடுவது எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியமானது, அந்த போராட் டங்கள் புரட்சிகர அரசியலை ஏந்தி நிற்பதும், புரட்சிகர அமைப்பால் வழிநடத்தப்படுவதும். தமிழகத்தின் மூலைமுடுக்குகளெங்கும் நடந்து வருகின்ற மக்கள் போராட்டங்களை புரட்சிகர அமைப்புகளது தலைமையின்கீழ் ஒருங்கிணைப் போம். போராட்டக்களத்தில் செங்கொடி ஏந்தி முன்னேறுவோம். மேதினத்தின் போராட்ட பாரம்பரியத்தையும், மே தினத் தியாகிகளது நினைவையும் உயர்த்திப்பிடிப்போம்!
முதற்பதிவு: வினவு
நண்பரே … ! இன்று மே 1 – உலக தொழிலார் தினம் … கடுமையான போராட்டங்களை முன்கொண்டு — தியாகங்கள் பலவற்றை இறைத்து பெற்ற உரிமை தினம் இன்று … ஆனால் நம் நாட்டில் ஜாலியான விடுமுறைநாள் … குடும்பத்தோடு எங்காவது சென்று சுற்றிவிட்டு — கண்டதை தின்று விட்டு ஒரு சினிமா பார்த்தால் சரி என்கிற கூட்டம் …
தொலைக்காட்சி சானல்கள் காட்டுகிற குத்தாட்ட பாடல் மற்றும் விளையாட்டுகளையும் – பட்டிமன்றம் என்கிற பெயரில் அடிக்கிற லூட்டிகளையும் — ஒன்றுக்கும் உதவாத – உத்தமர்கள் போல வேஷம் கட்டும் வீணர்களின் பேட்டிகளையும் போட்டு அனைவரும் வாய் பிளந்து ரசிக்க வைத்து இந்நாளின் ” மேன்மையை ” மறக்கடிக்க செய்வதை கண்டு களிக்கும் கூட்டம் ….
மே தினத்தைப்பற்றி ஒன்றும் தெரியாமலேயே — நாட்டுக்கே உழைப்பதைப்போல – ” சுரண்டும் ” ஆளும் கட்சியினரும் – பிற கட்சியினரும் ” உழைப்பாளிக்காக ” உழைத்து ஓடாகி போனதைப்போல பாவ்லா காட்டி — எவனோ எழுதிக் கொடுப்பதை வாசித்து காட்டியும் — அறிக்கைபோல விட்டும் ஏமாற்றும் அரசியல்வாதிகளும் — நிறைந்துள்ள நாட்டில்
— இவர்களை முதலில் திருத்த ஒரு ” போராட்டம் ” முன்னெடுக்க வேண்டும் …
// வேலை செஞ்சா உயர்வோமென்ற
விபரம் மண்டையில் ஏறணும்…..
ஜனத்தொகை மிகுந்தாலும்
பசித்துயர் மலிந்தாலும்
பணத்தொகை மிகுந்தோர் – மேலும்
பணம் சேர்க்க முயல்வதாலும்
உழைத்தால்தான் பற்றாக்குறையை
ஒழிக்கமுடியும் – மக்கள்
ஓய்ந்திருந்தால் நாட்டின் நிலைமை
மோசமாக முடியும் // ….
என்கிற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளை மனதில் கொண்டு — இனியும் ” மக்கள் ஓய்ந்திருக்காமல் ” போராட்டங்களை ஒருங்கிணைத்து போராடினால் — மே தினத்தின் மேன்மை புரியும் — உயரும் … அப்படித்தானே …. ? ” உலக தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் ” என்கின்ற பொன்னான வார்த்தைகளை போற்றுவோம் — கைக்கொள்வோம் — உரிமைக்காக போராடுவோம் என்று ஒவ்வொருவரும் நினைத்து செயல்பட வேண்டிய நன்னாள் — இந்நாள்…. !!!
எதையும் எதிர்த்து போராடுவதால் அதை மாற்ற முடியாது. எதை நீங்கள் எதிர்கிறீர்களோ அது தொடர்ந்து இருந்துகொண்டு இருக்கும்(what you resist persists).