தோழர் செங்கொடி,
மதங்கள் என்பவை பகுத்தறிவை முடமாக்குபவை, நிலப்பிரபுத்துவத்தையும், முதலாளித்துவத்தையும் கட்டிக்காப்பவை, பெண்களை அடிமையாக்குபவை என்பன போன்ற உண்மைகளை சிந்திக்கத் தொடங்கும் மனிதர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்பதை நாம் அறிவோம்.
ஆனால், இஸ்லாம் எனும் மதத்தில் மட்டும் ஒரு புதிரான மற்றும் கொடுமையான, அதாவது, பகுத்தறிவுக்கு நேர் எதிரான ஒரு நம்பிக்கை வேர்விட்டு தளைத்திருக்கிறதே, அதுகுறித்துதான் உங்களின் விளக்கத்தை வேண்டுகிறேன்.
கேள்வி – அல்லா தனது தூதர் முகமது மூலமாக வழங்கிய குரான், மனித இனத்தின் ஒட்டுமொத்த ஆயுளுக்கும் நீடித்து, வழிகாட்டவல்ல ஒரே வேதம். வேறு எதுவும் அதற்கு நிகரல்ல மற்றும் வேறு எதுவும் தேவையுமில்லை. அதன் கொள்கைகளே எப்பேர்பட்ட உலகிற்கும் வழிகாட்டுவதற்கு ஏற்றது மற்றும் போதுமானது.
மேலும், 7ம் நூற்றாண்டு அரேபிய முகமதுவின் வாழ்வுமுறை, இந்த உலகம் உள்ளவரைக்கும், மனிதர்கள் அனைவருக்குமான ஒரு அழகிய முன்மாதிரி..! வேறு எதுவும் அதற்கு நிகரில்லை மற்றும் தேவையுமில்லை…!
மேற்கண்ட கருத்துகளின் உண்மை சாத்தியங்கள், இஸ்லாமிற்குப் பிந்தைய பல நூற்றாண்டுகளின் நடைமுறை வாழ்க்கைப் போக்கில் தகர்ந்து உதிர்ந்துவிட்டாலும், அவர்களின் நம்பிக்கை மட்டும் இறுகியிருப்பதன் ரகசியம் என்ன? பொதுவெளியில் பிறரை, “வாருங்கள், இஸ்லாமை அறிவுப்பூர்வமாய் விவாதிப்போம், முடிந்தால் எங்களை வெல்லுங்கள்” என்று வாதத்திற்கு இழுக்கும் அளவு அவர்களை தூண்டுவது எது?
இத்தகைய ஒரு கருத்தாக்க கலாச்சாரம் இஸ்லாமிய சமூகத்தில் எப்படி வேரூன்றியது மற்றும் எப்போது? இதன் பிழைப்புவாத காரணகர்த்தாக்கள் யார்? எந்த நாட்டில், எந்த இயக்கத்தால் இது தொடங்கப்பட்டது? நடைமுறையை நன்கு உணர்ந்திருந்து அனுபவப்பட்டாலும் முஸ்லீம்கள் இந்த மதிப்பற்ற கருத்தாக்கத்தில் தொடர்ந்து விடாப்பிடியாக இருப்பதேன்? அவர்கள் தம் அறிவை இந்த விஷயத்தில் பயன்படுத்த மறுப்பதேன்?
இதுபோன்றதொரு கருத்தாக்கம் கொடூரமான பார்ப்பனிய மதத்தில்கூட கிடையாது. இத்தகைய கருத்தாக்கம் இல்லாத கிறிஸ்தவம் இன்றும் பரவலாக நிலைத்திருக்கிறது மற்றும் அதன் பிழைப்புவாதிகள் முஸ்லீம் பிழைப்புவாதிகளைவிட நன்றாகத்தானே சம்பாதிக்கிறார்கள்.
என்னுடைய கேள்வியின் ஒவ்வொரு வரியையும் படித்துப் பார்த்து, எந்த ஒன்றையும் தவறவிடாது முழுமையாக பதிலளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தோழரே.
பிரசன்னா கேள்வி பதில் பகுதியிலிருந்து
வணக்கம்,
மிகச் சிறந்த கேள்வி ஒன்றைக் கேட்டிருக்கிறீர்கள். இந்தக் கேள்விக்கான பதிலுக்கு செல்வதற்கு முன் சில புரிதல்களை தெளிவுபடுத்தி விடலாம்.
நீங்கள் கேட்டிருக்கும் இந்தக் கேள்வி மதம் சார்ந்ததல்ல, முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தது.
அடுத்து, மதத்தை ஏற்பவர்களின் சிந்தனை முறை பகுத்தறிவுவாதிகளின் சிந்தனை முறையை ஒத்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஏனென்றால், அவர்களின் அடிப்படையே வேறானது. கருத்து முதல்வாதம் என்பதும் பொருள் முதல்வாதம் என்பதும் இருவேறு நிலைபாடுகள் என்பது மட்டுமல்ல. ஒன்றுக் கொன்று எதிரானவையும் கூட. கருத்து முதல்வாதம் என்றால் என்ன? என தெரிந்து கொண்டிருக்காதவர்கள் கூட மதத்தை ஏற்றிருப்பதனால் கருத்து முதல்வாதியாகவே சிந்திப்பார், எனவே, இது மதம் என்பதைத் தாண்டி அறிவியல் கண்ணோட்டத்துடன் இணைந்தது.
அடுத்து, இன்றைய முதலாளித்துவ உலகம் அதன் ஏகாதிபத்திய வளர்ச்சிப் போக்கில் மதங்களின் அடிப்படைகள் சிலவற்றை தகர்த்தாலும், அது முற்றிலும் தகர்ந்து விடா வண்ணம் தன்னுடைய தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது, பயன்படுத்திக் கொண்டிருக்கும். எனவே, மதங்களில் ஏற்படும் மாறுதல்களை மதம் சார்ந்ததாக மட்டும் புரிந்து கொள்ளாமல் அதற்கு அப்பாற்பட்டும் உற்று நோக்க வேண்டிய தேவை இருக்கிறது.
முதலில், முகம்மது சொன்னதற்கு மாற்றாக எதுவுமே இருக்கக் கூடாது, மனிதகுல ஆயுள் முழுவதும் அவரே வழிகாட்டி என்பதெல்லாம் இப்போதைய பிம்பங்கள் தாம். தொடக்கத்திலும் இடைக்காலத்திலும் இவ்வாறு இல்லை. முகம்மதின் மரணத் தறுவாயில் முகம்மதின் வேண்டுகோள் அவரின் நெருங்கிய சகாக்களினாலேயே (அபூபக்கர், உமர்) புறக்கணிக்கப்பட்டது என்பது ஹதீஸ்களில் பதியப்பட்டிருக்கிறது. முகம்மதின் மகள் பாத்திமா முகம்மதின் அறிவுரையை புறந்தள்ளி தன் வாழ்நாள் முழுவதும் அபூபக்கருடன் பகைமை கொண்டு பேசாமல் இருந்தார் என்பது வரலாறு. எனவே, முகம்மது தன்னுடைய சமகாலத்தில் இன்றிருப்பது போன்ற நாயக பிம்பத்துடன் போற்றப்பட்டவரல்ல என்பது உண்மை.
இஸ்லாமின் பொற்காலம் என போற்றப்படும் அப்பாசித்துகள் காலத்தில் முத்தஸிலி எனும் தத்துவம் செல்வாக்குடன் இருந்தது. முத்தஸிலி என்பது பகுத்தறிவுடன் இஸ்லாத்தை அணுகும் தத்துவம். அதாவது வணக்க வழிபாடுகள், ஆன்மீக நம்பிக்கைகள் தொடர்பாக இஸ்லாமிய வேத விளக்கங்களையும், பிற நடைமுறை வாழ்வுக்கு பகுத்தறிவு வாதங்களையும் இணைத்து உருவானது முத்தஸிலி தத்துவம். 14 ஆம் நூற்றாண்டுடன் முத்தஸிலி தத்துவம் காணாமல் போய் விட்டது என்றாலும் இன்றும் அதன் செல்வாக்கு பல்வேறு வடிவங்களில் உலவிக் கொண்டு தான் இருக்கிறது. அண்மைக் காலங்களில் அரபு மார்க்ஸியம் என்றொரு தத்துவம் நிலவில் இருக்கிறது. அதாவது ஆன்மீக விசயங்களுக்கு இஸ்லாம், பொருளாதார விசயங்களுக்கு கம்யூனிசம் என்றொரு கதம்பக் கோட்பாடு.
மட்டுமல்லாது முகம்மதின் காலத்திலிருந்து அண்மைக் காலம் வரை முகம்மதுவுக்குப் பிறகு நானே தீர்க்கதரிசி என்று கூறிக் கொண்டு பலர் கிளம்பியிருக்கிறார்கள். ஸன்னி மட்டுமல்லாது,ஷியா, அஹ்மதியா உட்பட பல பிரிவுகள் இருக்கின்றன. இவைகளெல்லாம் இஸ்லாத்தை கொள்கையாக கொண்டவை என்றாலும் முகம்மதை முன்மாதிரியாக கொள்வதில் ஏற்றத் தாழ்வுகளுடன் இருப்பவை. எனவே, இஸ்லாம் அன்றிலிருந்து இன்று வரை அல்லது மனிதகுலம் இருக்கும் வரை ஒரே மாதிரியானது, மாறாதது என்பது ஒரு பிரிவினரின் நம்பிக்கை மட்டுமே அன்றி பொதுவானது அல்ல. அந்த ஒரு பிரிவினரும் கூட தொடக்கத்தில் அவ்வாறான நம்பிக்கையில் இல்லை என்பதற்கு பல காட்டுகளை ஹதீஸ்களிலிருந்தே கொடுக்க முடியும். என்றால் இந்த நம்பிக்கை எப்போது தோன்றியது? ஏன் தோன்றியது?
இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் சர்வதேசிய அரங்கின் அரசியல் நிலமை இரு கூறாக இருந்தது. ஒன்று அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ ஏகாதிபத்திய முகாம், இரண்டு சோவியத் யூனியன் தலைமையிலான சோசலிச முகாம். எல்லாவிதத்திலும் இரண்டு முகாம்களும் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. இராணுவ ரீதியில் இரண்டும் சம பலத்துடன் இருந்தன. இந்த காலகட்டத்தில் கம்யூனிசம் விரிவடைந்து வந்தது. மக்கள் நல அரசாக இல்லையென்றால் அது சோசலிச அரசாக மாறிவிடும் எனும் அபாயம் முதலாளித்துவ அரசுகளுக்கு இருந்தது. இதை தடுப்பதற்கு எல்லாவித முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தது ஏகாதிபத்திய முகாம். வியட்நாம் தோல்வி அமெரிக்காவுக்கு சொந்த மக்களிடமே கெட்ட பெயரையும், வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியிருந்தது. வியட்நாமை தொடர்ந்தது ஈரான். நேரடி இராணுவ நடவடிக்கை எடுத்து, சோவியத் யூனியன் ஈரானுக்கு ஆதரவாக வந்தால் அது அமெரிக்காவுக்கு இன்னொரு வியட்நாமாக முடியும். இதை தவிர்ப்பதற்காக அமெரிக்க வெற்றிகரமான ஒரு முறையைக் கையாண்டது. அது தான் மதப் புரட்சி. அதாவது, அரசியல் எதிரியை வீழ்த்துவதற்கு மத ரீதியாக திரட்டப்பட்ட மக்களை பயன்படுத்துவது. மதத்தில் தூய்மைவாதத்தை புகுத்தி, எதிரியின் அரசியல் நடவடிக்கைகள் மதத்தின் புனிதத்துக்கு எதிரானவை என திரிப்பதன் மூலம் உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்தி, அதன் வழியாக அரசியல் மாற்றத்தை செய்து முடிப்பது என்பது இதன் திட்டம். ஈரானிலும் அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் வெற்றிகரமாக இது நடைமுறை படுத்தப்பட்டது. தாலிபான் தொடங்கி இன்றைய ஐ.எஸ் குழுக்கள் வரை அனைத்தையும் உருவாக்கியது அமெரிக்கா தான். இந்த இஸ்லாமிய மீட்டுருவாக்கத்தின் எளிமைப்படுத்தப்பட்ட வடிவம் தான் இன்று தமிழகத்தில் உலவிக் கொண்டிருக்கும் வஹ்ஹாபியக் குழுக்கள்.
அமெரிக்காவின் இந்த திட்டத்துக்கு மத வடிவம் கொடுத்தவர் அன்று அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த எகிப்தைச் சேர்ந்த செய்யது குதூப். இன்று தமிழ்நாட்டில் பி,ஜே உள்ளிட்டவர்கள் வைக்கும் அனைத்து வாதங்களும் செய்யது குதூப்பினால் உருவாக்கப்பட்டவை. குரானின் வசனங்களில், உறுதி செய்யப்படாமல் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும் வசனங்களில் வாய்ப்புள்ள இடங்களில் அறிவியலைப் புகுத்தி குரான் அறிவியலை முன்னறிவிக்கிறது எனும் வடிவத்தை உருவாக்கி உலகெங்கும் பரப்பியவர் செய்யது குதூப். அதற்கு அமெரிக்காவும் அதன் ஏவல் நாடுகளும் பொருளுதவி உள்ளிட்ட அனைத்தையும் செய்து கொடுத்தன. இது தான் இஸ்லாமிய மீட்டுருவாக்கம் தோன்றி வளர்ந்த கதை.
செய்யது குதூப், இதை எகிப்திலும் செயல்படுத்த முனைந்தார். ஆனால் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு கமால் அப்துல் நாஸரால் அரசுக்கு எதிரான சதிக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
இதை மதவாதிகள் தங்கள் மத பிழைப்பு வாதத்துக்காக உருவாக்கி வளர்த்த கருத்தாக்கம் என எண்ணுவது பிழையானது. இன்று அது பிழைப்பு வாதத்துக்கும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது வேறு. இன்று முஸ்லீம்களைப் பொருத்தவரையில் முகம்மதின் நாயக பிம்பத்துக்கு வெளியே எதுவுமில்லை. உச்சகட்ட சுரண்டலில் இருக்கும் ஏகாதிபத்தியம் இதில் தொய்வு ஏற்படாமல் பாதுகாக்கும். இந்த நிலை நீடிக்கும் வரை அதாவது, இது மதம் சார்ந்த பிரச்சனை, மத நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்துவதன் மூலம் மட்டும் இதை சரி செய்து விட முடியும் என எண்ணுவதும் ஒரு விதத்தில் மூட நம்பிக்கை தான். மத நம்பிக்கைகள் சமூகத்தில் என்ன பாத்திரத்தை வகிக்கிறது? சமூகத்தின் முன்னேற்றத்துக்கு பங்களிக்கிறதா? அல்லது சமூகத்தை பின் தள்ளுவதற்கு உதவுகிறதா? எது சமூக முன்னேற்றம்? என்பதை உய்த்துணர முன்வரும் போது மட்டுமே சரி செய்ய முடியும். ஆனால் இஸ்லாமியர்கள் இதை சமூக அரசியல் தளங்களில் உலவாமல் மதம் எனும் அடிப்படையில் இருப்பதால் தான், ஏகாதிபத்தியம் தன்னுடைய நலன்களிலிருந்து உருவாக்கிய இஸ்லாமிய மீட்டுருவாக்கத்தை தன்னுடைய மத நலன் என புரிந்து கொள்வதால் தான், தன்னுடைய சொந்த வாழ்வின் ஈடேற்றம் என்று புரிந்து கொள்வதால் தான் அவர்கள் தங்கள் நம்பிக்கைகளில் இறுக்கம் கொண்டு இருக்கிறார்கள். மதம் எனும் தளத்திற்கு வெளியே கொண்டு வராமல் இதை சரி செய்ய முடியாது.
இந்த கருத்தாக்கம் இல்லாததால் தான் கிருஸ்தவம் நீடித்திருக்கிறதா? இந்த கருத்தாக்கம் இல்லாததால் தான் கிருஸ்தவ பிழைப்புவாதிகள் அதிகம் சம்பாதிக்கிறார்களா? அப்படி இல்லை. இஸ்லாமிய நாடுகளின் குறிப்பாக மத்திய தரைக்கடல் நாடுகளின் எண்ணெய் வளமும், அதைனைச் சூழ்ந்த சர்வதேச அரசியலும் தான் அந்த பகுதி மக்களின் மதமாக இருக்கும் இஸ்லாத்தை இவாறான கருத்தாக்கத்திற்கு தள்ளிக் கொண்டு வந்திருக்கிறது. அந்தப் பகுதி மக்களிடம் கிருஸ்தவம் மதமாக இருந்திருந்தால் இதேபோன்ற கருத்தாக்கம் கிருஸ்தவத்தில் ஏற்பட்டிருக்கும். இதன் வேர் அரசியலில் இருக்கிறதே அன்றி ஆன்மீகத்தில் இல்லை. ஒவ்வொன்றும் தேவையை முன்னிருத்தியே ஏற்படுத்தப்படுகின்றன. எண்ணெய் வளத்தை சுரண்ட வேண்டிய தேவையிருப்பதால் தான் பலஸ்தீனப் பிரச்சனையும். இஸ்ரேல் எனும் நாடும் உருவாக்கப்பட்டிருக்கிறது. எண்ணெய் வளம் தீர்ந்து விட்டாலோ, அல்லது எண்ணெயை விட மிக மலிவான ஏகாதிபத்தியங்களுக்கு பெருலாபம் ஏற்படுத்திக் கொடுக்கும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டாலோ மத்திய கிழக்கின் அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக தீர்ந்து போகும் அல்லது மறக்கடிக்கப்படும்.
அதேநேரம் பார்ப்பனிய மதத்தில் இந்த நடைமுறை இல்லை என்றெல்லாம் தட்டையாக சொல்லிவிட முடியாது. தங்களின் அரசியல் அதிகாரத்துக்கான அத்தனை வழிகளிலும் பார்ப்பனியம் மதத்தை பயன்படுத்தியே வந்திருக்கிறது. இன்று மோடியின் நடவடிக்கைகள் கூட மதத்தை முன்னிருத்தினாலும் அவை தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்துவதையும், அரசியல் எதிரிகளை இல்லாமல் செய்வதையும் நோக்கமாகக் கொண்டே செய்யப்படுகின்றன. தங்களின் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள பார்ப்பனியம் மாட்டை முன்வைத்து மனிதர்களை அடித்துக் கொல்லவும் செய்யும், கோவில் திருவிழாவில் கூழ் ஊற்றவும் செய்யும்.
ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் அவரவர் வர்க்கங்களின் நலன் மறைந்து கிடக்கிறது. இந்த வர்க்க நலன் பலவித வேடங்களில் வெளிப்படும். வேடங்களை விட வர்க்க நலன் எனும் அரசியலே முதன்மையானது. அரசியல் இல்லாமல் வேடங்களை பிடித்துக் கொண்டிருந்தால் பிரச்சனைகளை ஒருபோதும் தீர்க்க முடியாது.
பதிலுக்கு நன்றி தோழரே..ஒரு சிறிய திருத்தம், நான் ‘அத்தகைய கருத்தாக்கம் இல்லாமலும் கிறிஸ்தவம் நிலைத்திருக்கிறதே’ என்றுதான் கேள்வியில் குறிப்பிட்டிருக்கிறேனே தவிர, ‘அது இல்லாமல் இருப்பதால்தான் கிறிஸ்தவம் நிலைத்திருக்கிறது’ என்று குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாெதுவுடைமையும் … வள்ளலாறும் தங்கள் மதிப்பீட்டில் …?