கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்

regeneration

 

Aiya,

Thangal pahuththarivu reethiyana Islaththai patri araivathu emakku oru vilippunarvai etpaduththi ainthikka thoondukirathu.. Irunthum sila nerangalil mathangalai kadanthu sinthikka mudiyamal oru achcham ullaththil eluhirathu. Suppose maraniththa pin unmaileye Iraivan vanthu ean enakku valippadavilla enral enna seyvathu? Oruvelai nadanthal ellavatrukkum ayaththamaha irukka vendum thane.

ஷான் கேள்வி பதில் பகுதியிலிருந்து.  இங்கே

நண்பர் ஷான்,

ஒரு முறை பெரியாரிடம், நீங்கள் கடவுள் இல்லை என சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென உங்கள் முன் கடவுள் தோன்றி விட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்கள். சற்றும் யோசிக்காமல் பதில் சொன்னார் பெரியார், இருக்கிறார் என்று பிரசாரம் செய்து விட்டுப் போகிறேன். இது கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதற்கான பதில் இல்லை. கடவுள் இல்லை என்பதில் பெரியாருக்கு இருந்த உறுதியை எடுத்துக் காட்டும் பதில். மட்டுமல்லாது, உண்மையை ஏற்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை, அது இதுவரை நான் பரப்புரை செய்து கொண்டிருப்பதற்கு எதிராக இருந்தாலும் கூட எனும் உறுதியையும் அந்த பதில் வெளிக் காட்டுகிறது. இந்த உறுதி கடவுளை நம்பிக் கொண்டிருக்கும் எவருக்கும் கைகூடாத ஒன்று. இந்த உறுதியைத் தான் மதம் குறித்து, கடவுள் குறித்து பேசுவோர் ஒவ்வொருவரிடமும் எதிர்பார்க்கிறோம். உங்களிடம் இருக்கும் எனும் அடிப்படையிலேயே தொடங்குகிறேன்.

உங்கள் கேள்வியை அப்படியே திருப்பிப் போட்டால்; நீங்கள் வாழ்நாள் முழுவதும் எதை நம்பிக் கொண்டிருந்தீர்களோ, எந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டீர்களோ அந்த கடவுள் இல்லை என்றாகும் போது என்ன செய்வீர்கள்? இதற்கு நீங்கள் என்ன பதிலை சொல்வீர்களோ அந்த பதிலை நீங்கள் சரியாக உள்வாங்கிக் கொள்ல வேண்டும்.  இதற்கு உங்களின் பதில் என்னவாக இருக்கும்? கடவுள் இல்லையென்றால் தான் இறந்த பிறகு எனக்கு வாழ்வு கிடையாதே. மரணத்துடன் முடிந்து விடும். என்பது தானே. அப்படியென்றால் இதை சரியாக உள்வாங்குதல் என்பது என்ன? இறந்த பிறகு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பது பொது உண்மை அல்ல, அது யதார்த்தமும் அல்ல. கடவுள் இருக்கிறது என்று நம்புவோரின் ஒரு கிளை நம்பிக்கை அவ்வளவு தான். இதற்கு மேல் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. ஆக ஒருவரின் வெற்று நம்பிக்கையை அந்த நம்பிக்கையை ஏற்காத பிரிதொருவரிடம், அவரால் ஏற்கப்படாத நம்பிக்கையின் அடிப்படையில் கேள்வி எழுப்ப முடியுமா?

இதை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம். நெருப்பு சுடும் என்பது பொது உண்மை. (மரணித்த பின் வாழ்வு இல்லை என்பதும் ஒரு பொது உண்மை) இல்லை, நெருப்பு குளிரும். எனவே விரலை வைத்துப் பாருங்கள் என்று சொன்னால் அதை ஏற்க முடியுமா? நெப்பில் விரலை வைத்து விட்டு எடுத்து விட முடியும், எனவே, யாரும் நெருப்பு குளிரும் என்று ஏமாற்ற முடியாது. மரணத்தின் பிறகு திரும்பி வர முடியாது என்பதால் அப்படி ஒன்று இருக்கிறது என ஏமாற்ற முடிகிறது.

இந்த இடத்தில் தான் ஒரு குழப்பம் வருகிறது. மரணத்தின் பின் வாழ்வு இருக்கிறதா இல்லையா என்பதற்கு எந்த உறுதியான சான்றும் இல்லை எனும் போது இரண்டுக்கும் சம வாய்ப்பு இருக்கிறது தானே என்பது தான் அந்தக் குழப்பம். அதனால் தான் நீங்கள், “எல்லாவற்றுக்கும் ஆயத்தமாக இருக்க வேண்டும் தானே” என்று கேட்டிருக்கிறீர்கள். இந்தக் குழப்பம் மனித உடல் குறித்தும், கடவுள் குறித்தும் அறியாமையில் இருப்பதனால் மட்டுமே ஏற்படுகிறது. மனித உடல் குறித்தும் கடவுள் குறித்தும் தெளிவான அறிதல் இருந்தால் இந்தக் குழப்பம் ஏற்படாது. மாறாக, இது ஏமாற்று வேலை என புரிந்து போகும்.

மனிதன் என்பது என்ன? நான் எனும் சிந்தனையா? அல்லது உடலா? இரண்டும் இணைந்தது தான். உடல் இல்லை என்றால் சிந்தனையும் இருக்க முடியாது. மூளை என்ற பொருள் இல்லை என்றால் எது குறித்த சிந்தனையும் இருக்க முடியாது. இன்னும் தெளிவாகச் சொன்னால் சமூகம் இல்லாமல், இந்த உலகம் இல்லாமல் அறிவு, சிந்தனை என எதுவும் இருக்க முடியாது. மரணம் என்பது என்ன? உடல் மீள முடியாதபடி செயலிழந்து விட்டதால் அவனது மூளையில் பதியப்பட்டிருக்கும் தகவல்களும் அறிவும் அதனூடான சிந்தனையும் செயலற்று விட்டது என்பது தான். மீள முடியாத படி இயக்கமற்று விட்ட மனிதன், பின்னொரு காலத்தில் மீண்டெழுவான் என்பது கற்பனையாக மட்டுமே இருக்க முடியும்.

உலகில் பொருள் கருத்து என்று இரண்டு உண்டு. மனிதனும் ஒரு பொருள் தான். பொருள் கருத்து இரண்டுக்கும் இலக்கணங்கள் உண்டு. பொருள் என்றால் நான்கு பரிமாணம் இருக்க வேண்டும். நீளம், அகலம், உயரம், காலம் எனும் நான்கு பரிமாணங்கள் எல்லாப் பொருளுக்கும் உண்டு. இந்த நான்கு பரிமாணங்கள் இல்லாமல் எந்தப் பொருளும் இருக்க முடியாது. அதேபோல் கருத்து என்றால் அது பொருளைச் சார்ந்து தான் இருக்க முடியுமே அன்றி பொருள் இல்லாத தனித்த கருத்து என்று எதுவுமே இருக்க முடியாது. பிற கருத்துகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் பொருள் இல்லாத கருத்து கற்பனை அல்லது சிந்தனை எனப்படும். ஒரு மனிதன் மரணிக்கிறான் என்றால், மனிதன் எனும் அந்தப் பொருளின் நான்கு பரிமாணங்களும் முடிவுக்கு வந்து விட்டன என பொருள்படும். பொருள் முடிந்து விட்டது என்பதால் அந்தப் பொருளைச் சார்ந்து உருவான கருத்தும் அழிந்து விடுகிறது. அழிந்து விட்ட ஒரு பொருளும் அதனைச் சார்ந்த கருத்தும் மீண்டும் உருவாகும் என்பது கற்பனை தான். ஏனென்றால் நான்கு பரிமாணங்களும் அழிந்து விட்ட பொருள் மீண்டும் அதே பரிமாணங்களை பெற முடியாது. அதேபோல் இருக்கலாமே தவிர அதுவாக இருக்காது. எனவே, தனிப்பட்ட மனிதன் எனும் பொருள் அழிந்து விட்ட பிறகு மீண்டும் ஒருபோதும் அந்தப் பொருள் ஏற்படாது, அவ்வாறு ஏற்படும் என எண்ணுவது வெற்றுக் கற்பனை.

இந்த இடத்தில், மீண்டெழுதல் கற்பனை எனும் உண்மையை ஏற்க முடியாத மதவாதிகள், அதற்கு எதிராக எந்தவித சான்றையும் முன் வைக்க முடியாத மதவாதிகள், இந்த அறிவியலுக்கு பதிலாக அந்த இடத்தில் மீண்டும் ஒரு கற்பனையை முன் வைக்கிறார்கள். அது தான் கடவுள் எனும் கற்பனை. கடவுளால் எல்லாம் முடியும்.

கடவுளால் எதெல்லாம் முடியும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். கடவுள் என்பது என்ன? பொருளா? கருத்தா? அல்லது இந்த இரண்டும் அல்லாத வேறொன்றா? வேறொன்று என்றால் அது என்ன? கடவுளை நம்பும் எவராலும் இந்தக் கேள்விக்கு பதில் கூற முடியாது. கடவுள் குறித்து கூறப்படுவன எல்லாம் – அது எந்த மதக் கடவுளாக இருந்தாலும் – கடவுளின் தன்மைகள் தானே தவிர கடவுள் என்றால் என்ன என்பது அல்ல. ஆக உங்கள் கேள்வியை நெருக்கிப் பார்த்தால் அது கடவுள் என்றால் என்னவென்றே தெரியாமல் கடவுளால் இதெல்லாம் முடியும் என நம்பு என்பதாகத் தான் இருக்கிறது. அதாவது, கடவுளை எந்த அடிப்படையும் இல்லாமல் வெறுமனே நம்புகிறவர்கள், அறிவியல் ரீதியான, வரலாற்று ரீதியான, சமூக ரீதியான புரிதல்களோடு கடவுள் இல்லை என்பவர்களிடம்; மரணத்தின் பிறகு கடவுள் வந்து விட்டால் உன்னால் மீண்டும் வாழ முடியாது எனவே மரணத்துக்கு முன்பு கடவுளை நம்பு என்கிறார்கள். இந்த அபத்தம் புரிகிறதா உங்களுக்கு?

கடவுள் உண்டு என்பவர்கள், அதற்கு எந்தவித சான்றையும் காட்டியதில்லை, காட்டவும் முடியாது. ஆனால் கடவுள் இல்லை என்பவர்களோ அதற்கான சான்றுகளை தெளிவாகவே முன் வைக்கிறார்கள்.

அறிவியல் ரீதியான காரணங்கள்:

 1. எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை.
 2. தொடக்கமோ முடிவோ இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை.
 3. எந்த ஒரு பொருளையும் சாராமலும், எந்த ஒன்றிலிருந்து சார்பு பெறப்படாமலும் எதுவுமில்லை.

வரலாற்று ரீதியான காரணங்கள்:

 1. ஆதி மனிதர்கள் வாழ்வில் கடவுள் எனும் நிலை இருந்ததற்கான எந்த சான்றும் கண்டறியப் படவில்லை.
 2. பூமியில் மனிதன் எனும் உயிரினம் தவிர ஏனைய உயிரினங்களுக்கு கடவுள் எனும் உணர்வு இல்லை.

சமூக ரீதியான காரணங்கள்:

 1. கடவுளின் தகுதிகள் என கூறப்படுபவை உள்ளுக்குள் சுய முரண்பாடுகலோடு இருக்கின்றன. அதாவது, ஒரு தகுதி இன்னொரு தகுதிக்கு முரண்படுகிறது.
 2. கடவுளிடமிருந்து கிடைத்தது என்று சொல்லத்தக்க, சோதித்தறியத்தக்க எதுவுமே கண்டறியப்படவில்லை.

எனவே, கடவுள் இருக்க முடியுமா எனும் கேள்விக்கு இருக்க முடியாது என்பது ஆதாரபூர்வமான பதிலாக இருக்கிறது. மனிதன் மீண்டும் உயிர்த்தெழ முடியுமா எனும் கேள்விக்கு உயிர்த்தெழ முடியாது என்பது தெளிவான பதிலாக இருக்கிறது. ஆகவே, மரணத்துக்குப் பின் கடவுள் வந்து விட்டால் என்ன செய்வது எனும் கேள்வி மக்களை ஏமாற்றுவதற்காக முன் வைக்கப்படும் கேள்வி, மக்களை குழப்புவதற்காக முன் வைக்கப்படும் கேள்வி, மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி பயங்காட்டுவதற்காக  முன் வைக்கப்படும் கேள்வி.

அந்தக் கேள்வியை புறந்தள்ளி விட்டு இந்த உலகைப் பாருங்கள். சொர்க்கம் என்றால் அது இந்த உலகில் ஏகாதிபத்தியவாதிகள் வாழும் வாழ்வு. நரகம் என்றால் அது இந்த உலகில் உழைக்கும் மக்கள் வாழும் வாழ்வு என்பதாக புரிந்து கொள்ளுங்கள். அன்றிலிருந்து இன்றுவரை மக்கள் படும் வேதனைக்கும் துன்ப துயரங்களுக்கும், மக்களின் உழைப்பு சுரண்டப்படுவதற்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது. அந்த சுரண்டலை அகற்றுவதற்கு கரம் சேருங்கள். அது தான் இப்போதைய இன்றியமையாத தேவையாக இருக்கிறது.

மாறாக, மரணித்த பிறகு வாழும் வாழ்க்கை குறித்து யாராவது உங்களிடம் பேச வந்தால் கடவுள் என்றால் என்ன என்பதை நிரூபித்து விட்டு மேலே பேசுங்கள் என்று சவால் விட்டுச் சொல்லுங்கள்.

 

மின்னூலாக (பி.டி.எஃப்) தரவிறக்க

12 thoughts on “கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்

 1. கடவுள் இல்லை என்ற பிரகடனத்திற்கு மதவாதிகளின் அநீதிகள், மறுபக்கம் பகுத்தறிவிற்கு ஏற்காத மூட வழக்கங்கள் ஆரம்ப காரணம் எனில் அது முற்றிலும சரியே. ஆனால் மறு வாழ்வு என்பது இல்லை , எனவே கடவுளை மறுக்கிறோம் என்பது பகுத்தறிவின்மை. மேலும் அதின்அடிப்படையில் நீயும் கடவுளை மறுப்பதே புத்திசாலித்தனம் என போதிப்பதை ஏற்க முடியாது.

  1) விதை அழிந்தபின் உயிர் பெற்று மறுவாழ்வை துவக்குவது எதில் சேர்ப்பது? அது உயிரோடிருக்கும் வரை அதற்கு மறுவாழ்வில்லையே ஏன்?

  2) மரம் அழிந்தபின்பே நிலக்கரி! அதுவும் அழிந்தபின்பே வைரம். எனவே மறு வாழ்வு இல்லை என மறுப்பதை பகுத்தறிவு எனலாமா?

  3) புழுக்கள் அழிந்து அவை வண்ணத்து பூச்சிகளாக பறப்பதை காண்கிற நான் மறு வாழ்வை மறுப்பது எங்ஙனம் ?

  4)ஆக்ஸிஜன் கார்பண்டை ஆக்ஸைடு கரைந்தும் உள்மறைந்துமே உயிர்நீர் உருவெடுக்கையில் ‘மறைவும் மறு தோற்றமும்’ மறுப்பதற்கில்லை.

  5)டார்வினின் missing links ஏராளம் காணகிடைக்கவில்லை என்பதைவிட அதற்கு வாய்ப்பே இல்லை எனும்போது நாம் காண்கிற யாவும் இயற்கை தந்தவை என எளிதாக கூறமுடியவில்லை!

  6)ஒரு மனிதன் இயற்கை என பெயரிட்டு வியக்க உரிமை உள்ளவனாக உள்ளபோது , அதே பகுத்தறிவுள்ள மற்றொருவன் கடவுள் என நம்ப உரிமை அற்றவனாக இருக்க முடியுமா? தேட,அனுக,உறவு கொள்ள ஆராய கூடாதா என்ன?

  7)கடவுள் பக்தியால் காட்டுமிராண்டிகளாக வாழ்வது சமூகத்திற்கு பெருந்தீமையே!
  ஆனால் மறுவாழ்வு, நியாயத்தீர்ப்பு என்ற நம்பிக்கையை உடைய ஓர் உண்மை ஆன்மீகவாதியால் யாருக்கும் நட்டமில்லை. அவன் சமூகமும் சட்டமும் தடுக்கின்றவைகளை கடவுள் நம்பிக்கை நிமித்தமாக ஏற்கனவே வெறுத்து விலகி வாழ்கின்றானே அதனால் அவனுக்கும் நட்டமில்லை, மாறாக மன அமைதி, உடல் ஆரோக்கியம், உழைப்பு, உண்மை,நேர்மை, பகைவனைக்கூட நேசிக்கும் சமூக இணக்க சிந்தனை! உடையவனாக உருவாகிறான்.

  8)அப்படியே மறுவாழ்வு இல்லாமல் போனாலும் தன்னையும் பிறரையும் கெடுக்காத புனிதன் என்ற எதிர்பார்ப்பால் ஓர் மனிதனாக வாழ்ந்தானே அது வெற்றித்தானே. கடவுள் என்ற கட்டுப்பாட்டை மனிதனை விட்டு அவிழ்த்துவிடுவது சமுதாயத்திற்கு பேரழிவு தரும்.

  9) நாம் காணும் அணைத்திலும் ஆராய்ந்து முடியாத அனந்த ஞானம் பொதிந்துள்ளது. ஓர் ஒழுங்குள்ள வடிவம் design வடிவமைத்தவர் designer யார்? என தேட வைக்கிறது. அணைத்திலும் காணப்படும் நோக்கம் purpose ஓர் படைப்பாளியை சுட்டிக்காட்டுவது பகுத்தறிவிற்கு புறம்பான சிந்தையா?

  10)இப்படி நூற்றுக்கணக்கில் வாத்ஙகளை எடுத்து வைப்பவர் ஏராளம் மனிதன் தோன்றியதிலிருந்து இருந்திருக்கின்றனர். இக்கால மனிதனுக்கு நிரூபிக்க தக்க சுமார் 5000 ஆண்டுகள் தான் வரலாறு. அந்த ஆண்டுகளில் எங்கும், எப்போதும் இறை நம்பிக்கை உடையவனாத்தான் மனிதன் இருந்துள்ளான். அதையும் மறுத்ததுபோல் தனது ஒன்றாம் புள்ளியில் கட்டுரையாளர் எழுதியுள்ளது நீண்ட வாத்த்திற்கு உரியது.

 2. வணக்கம் சேசு சோசப்,

  நீங்கள் எதை உண்மைதானே என்று ஐயம் கொள்கிறீர்களோ அது உண்மை தான். நாம் மின்னஞ்சலில் அது குறித்து பேசிக் கொள்ளலாம்.

 3. Enlightened people do not argue as they know truth stands on its own strength and it does not need proof from outside.

 4. கடவுள் என மதவாதிகள் வைத்திருக்கும் கருத்துக்கள் வேண்டுமானால் உங்கள் வாதங்களுக்கு வலு சேர்க்கலாம்.

  ஆனால் கீழ்க்கண்டவற்றுள் நான் முற்றிலுமாக வேறுபடுகிறேன்.:

  அறிவியல் ரீதியான காரணங்கள்:

  எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை.

  தவறு. இந்த பிரபஞ்சம் நமக்கு முன்பிருந்தே நிலையாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது அறிவியல் நமது பால்வெளி மண்டலத்திற்கு வேண்டுமானால் ஒரு தொடக்கம் இருக்கலாம் ஆனால் மொத்த பிரபஞ்சமும் திடீரென தோன்றியதல்ல என்பது ஒப்புக்கொள்ளத்தக்கது என கருதுகிறேன். (பிரபஞ்சம் ஒரு ஆற்றலே).

  தொடக்கமோ முடிவோ இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை.

  நம்மால் அறிய இயலவில்லை என்பதால் அப்படி ஒன்று இல்லை என்று நம்மால் உறுதியாக கூற முடியாது. (பிரபஞ்சம் ஒரு நல்ல உதாரணம்).

  எந்த ஒரு பொருளையும் சாராமலும், எந்த ஒன்றிலிருந்து சார்பு பெறப்படாமலும் எதுவுமில்லை.

  மீண்டும் இந்த பிரபஞ்சமே என் மனதில் தோன்றுகிறது. மொத்த பிரபஞ்சமும் அதனுள் உள்ள பொருட்கள் யாவும் ஒன்றுடன் ஒன்று சார்ந்து இருந்தாலும், இப்படிப்பட்ட சார்பு நிலை கொண்டு இவற்றை இயக்கும் சக்தி எதனையும் சாராமல்தான் இருக்க வேண்டும்.

 5. வாதம் புரிவது பயனற்றது. ஒருவரை ஒருவர் தோற்கடிப்பது என்பது கண்ணியமற்ற செயல். எனவே எவரையும் வாதம் புரிந்து தோற்கடிப்பது என்பது ஏற்புடையது அல்ல. கருத்து பரிமாற்றம் என்ற வகையில் கடவுள் குறித்து கேள்விகள் கேட்பவருக்கு எனக்கு தெரிந்த வரை பதில் அளிக்க தயாராக இருக்கிறேன்.

  கடவுள் என்பது மெய்யுணர்வு(consciousness); விழிப்புணர்வு(awareness). அது மட்டுமே இருந்தது. அதற்கு வெளியே என்று எதுவும் இல்லை. அதற்கு எல்லை என்பது இல்லை. அதுவே எல்லாமுமாக இருந்தது. அந்த நிலை சுத்த உலகம்(absolute world). சுத்த உலகம் வெறுமை நிறைந்தது(emptiness). அதில் விழிப்புணர்வை தவிர வேறு எதுவும் இல்லை.

 6. மனிதன் என்பது என்ன?

  மனிதன் மூன்று பகுதியானவன். அதாவது உடல், மனம், ஆன்மா என்ற மூன்றும் சேர்ந்த கலவைதான் மனிதன். இந்த மூன்றில் உடலும் மனமும் மாயைகள். ஆன்மா மட்டுமே உண்மையானது. எனவே அடிப்படையில் மனிதன் என்பவன் ஆன்மா.

  மனிதன் மட்டுமல்ல, எல்லா ஜீவராசிகளும் ஆன்மாக்கள்தான். தாவரங்கள், பூமி, கோள்கள், சூரியன், சந்திரன் போன்ற அனைத்துமே ஆன்மாக்களே.

 7. அறிவியல் ரீதியான காரணங்கள்:

  1.எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை.

  2.தொடக்கமோ முடிவோ இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை.

  3.எந்த ஒரு பொருளையும் சாராமலும், எந்த ஒன்றிலிருந்து சார்பு பெறப்படாமலும் எதுவுமில்லை.

  என்னுடைய பதில் :

  1. ஆற்றல் மெய்யுணர்விலிருந்து தோன்றுகிறது. மெய்யுணர்வின் விருப்பத்திற்கேற்ப ஆற்றல் மாறும். ஆனால் ஆற்றலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் மெய்யுணர்வு நிரந்தரமானது.

  2. பொருள் வேறு ஆற்றல் வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான். அவற்றின் அதிர்வு வேகம் தான் மாறுபடுகிறது.
  விழிப்புணர்வு தொடக்கமோ முடிவோ இல்லாதது. விழிப்புணர்வு என்பது ஆற்றலும் அல்ல, பொருளும் அல்ல.

  3.விழிப்புணர்வு எதையும் சார்ந்து இல்லை. சுத்த உலகம் எந்த சார்பும் இல்லாத உலகம். அங்கு அனைத்துமே ஒன்றுதான்(singularity). ஒருமைதான்(unity); வெறுமைதான்(emptiness).

 8. வணக்கம்,

  தொடர் வேலைகள் காரணமாக இணையத்திற்கு இடைவெளி விழுந்து விட்டது. உங்கள் அனைத்து பின்னூட்டங்களையும் பரிசீலித்து ஆகஸ்ட் 5 க்கு பிறகு பதிலளிக்கிறேன்.

  நன்றி

 9. வணக்கம்,

  என்னுடைய பின்னூட்டங்களுக்கு உங்களுடைய கருத்து என்ன என்பதை அறியவும் மேலும் பல கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் ஆவலாக இருக்கிறேன்.

  நன்றி

 10. சமூக ரீதியான காரணங்கள்:
  1.கடவுளின் தகுதிகள் என கூறப்படுபவை உள்ளுக்குள் சுய முரண்பாடுகலோடு இருக்கின்றன. அதாவது, ஒரு தகுதி இன்னொரு தகுதிக்கு முரண்படுகிறது.

  2.கடவுளிடமிருந்து கிடைத்தது என்று சொல்லத்தக்க, சோதித்தறியத்தக்க எதுவுமே கண்டறியப்படவில்லை.

  என்னுடைய பதில் :

  1.கடவுளின் தகுதிகள் என மதங்கள் கூறுவதை பற்றி குறிப்பிடுகிறீர்கள். மதங்கள் கடவுளை பற்றி தவறான புரிதலை கொண்டிருக்கின்றன. ஏனென்றால் மதங்கள் அறிவொளி பெறாத மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. கடவுளின் உண்மையான தன்மைகளை பற்றி மதங்கள் பேசுவதில்லை.

  2.கடவுளிடமிருந்து சோதித்து அறியக்கூடிய ஏதாவது ஒரு பொருளை பெறவேண்டும் என்று கூறுகிறீர்களா? கடவுளுக்கு வெளியே என்று, கடவுள் அல்லாத ஏதோ ஒன்று என்று எதுவும் இல்லாதபோது நீங்கள் கேட்பது சாத்தியமில்லாத ஒன்று.

 11. செங்கொடி : இறந்த பிறகு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பது பொது உண்மை அல்ல, அது யதார்த்தமும் அல்ல.

  விவேக் அத்வைதி : மரணம் என்று பொதுவாக எதை கருதுகிறோமோ அப்படிப்பட்ட மரணம் என்று எதுவும் இல்லை. வாழ்க்கை மட்டுமே இருக்கிறது. அது என்றென்றும் தொடர்ந்து கொண்டிருப்பது. இல்லாமல் போவது என்று புரிந்து கொள்ளப்படுகிற மரணம் என்பது கிடையாது. நாம் நம்முடைய ஆற்றலை மாற்றிக்கொள்கிறோம். அப்படி நம்முடைய ஆற்றலை விரும்பும்போது விரும்பியவண்ணம் நாம் மாற்றிக்கொண்டு நித்தியமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். நாம் ஒருபோதும் அழிவதில்லை, இல்லாமல் போவதில்லை. மாறாக நாம் நித்தியமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s