கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் எனும் கட்டுரைக்கு எதிர்வினையாக சில கருத்துகள் வந்திருந்தன. அவை அந்தக் கட்டுரை எந்த விதத்தில் பயணப்பட்டிருந்ததோ அதை மறுதலிக்காமல், அதேநேரம் அந்தக் கட்டுரையின் மையப் பொருளை மறுப்பதாக இருந்தன. இவை அந்தக் கட்டுரையை பின்னூட்டங்களின் பாதையில் இன்னும் தெளிவாக விளக்குவதற்கான வாய்ப்பை அளித்ததாக நான் கருதுகிறேன். அந்த அடிப்படையில் வளரும் இக்கட்டுரையை முந்திய கட்டுரையின் தொடர்ச்சியாக கொள்க.
முதலில் ஓர் அடிப்படையை தெளிவுபடுத்தி விடலாம். நாத்திகம் என்பது முழுமையடையாத ஒன்று. அது ஒரு பகுதி மட்டுமே. தனிமனித வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும் கடவுள் நம்பிக்கையை மறுக்கும் ஒரு இயல். அது சமூகவியல் கோட்பாட்டுடன், நடைமுறையுடன் இணையும் போது மட்டுமே முழுமையடையும். எனவே, முழுமையை மறுத்து ஒரு பகுதியை மட்டும் முழுமையாக பார்ப்பது நம்மை பிறழ்தலுக்கு இட்டுச் செல்லும்.
மரணத்தின் பின்பு ஒரு வாழ்வு இருக்கிறதா? இந்தக் கேள்விக்கான பதிலை தேடும் முன், ஒரு தெளிவை நாம் எப்படி வந்தடைகிறோம் என்பதை மீளாய்வு செய்து விடலாம். இந்த பேரண்டத்தில் எங்கோ ஒரு கோளில் உயிரினம் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற வாக்கியத்தையும் நான் சுவைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கனி டகதுபோடா எனும் கோளிலுள்ள தகிமலா எனும் மரத்தின் கனி என்ற வாக்கியத்தையும் நம்மால் ஒரே மாதிரி எடுத்துக் கொள்ள முடியுமா? (டகதுபோடா, தகிமலா குழப்பம் வேண்டாம் புரிதலுக்காக கொடுக்கப் பட்டிருக்கும் பொருளற்ற பெயர்ச் சொற்கள்) முதல் வாக்கியம் அறிவியல் சாத்தியங்களுடன் கூடியிருக்கும் ஒரு பொது உண்மை. இரண்டாவது வாக்கியம் எந்த சான்றும் இல்லாத கற்பனை. இதை எவ்வாறு முடிவு செய்கிறோம்? 1. பொதுவானதா, தனிப்பட்டதா எனும் சோதனை, அதாவது எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் பொது உண்மையா அல்லது சான்று தேவைப்படும் தனிப்பட்ட விசயமா என்று பார்க்கிறோம். 2. அறிவியலை அடிப்படையாக கொண்டிருக்கிறதா என்று பார்க்கிறோம். இந்த இரண்டு சட்டகங்களுக்குள் அடங்கவில்லை என்றால் அதன் மீது ஐயம் எழுவது இயல்பு. மூன்றாவதாக ஒப்பு நோக்குக் கூறுகள் எனும் அடிப்படையில் ஆய்வு செய்ய முடியுமா? எடுத்துக்காட்டாக பூமி எனும் கோள் இருக்கிறது அதில் மா மரமும் அதன் மாங்கனிகளும் இருக்கின்றன. எங்கோ ஒரு கோளில் உயிரினம் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதும் பொது உண்மையாக இருக்கிறது. என்றால், ஏன் எங்கோ ஒரு டகதுபோடா எனும் கோளில் தகிமலா எனும் மரமும் கனியும் இருக்கக் கூடாது? என்று கேள்வி கேட்டால் அதை எப்படி எடுத்துக் கொள்வது?
மரணத்தின் பின்பு ஒரு வாழ்வு இருக்கிறது என்பது பொது உண்மையா? இல்லை. பொது உண்மை என்பது அறிவியலால் அதன் வாய்ப்புகள் உறுதிப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இங்கு அப்படி எதுவும் இல்லை. கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடம் மட்டுமே இருக்கும் இன்னுமொரு நம்பிக்கை. இந்த நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகளா என்பது தொடர்புடையவர்கள் எந்த அளவுக்கு மீளாய்வுக்கு ஆயத்தமாக இருக்கிறர்கள் என்பதைப் பொருத்தது. தங்கள் நம்பிக்கைகளுடன் ஒப்பு நோக்குக் கூறுகளை இணைத்து மயங்குவது பொருளற்றது. எந்த இடத்தில் அறிவியல் சான்றுகள் தேவைப்படுகின்றனவோ அந்த இடத்தில் தர்க்க ரீதியான ஒப்பு நோக்கு பதில்கள் உண்மையை வெளிக் கொண்டு வாராது.
மரணத்துக்குப் பின்பு ஒரு வாழ்வு இருக்கிறது என்பதற்கு அறிவியல் சான்றுகள் தேவைப்படுகின்றன என்பதை விட அதை அறிவியல் திடமாக மறுக்கிறது என்பதே உண்மை. இது தான் சென்ற கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. பொருள் என்றால் நான்கு பரிமாணங்கள் வேண்டும். நான்கு பரிமாணங்களும் அழிந்த பின் மீண்டும் அதே பரிமாணங்கள் தோன்ற முடியாது என்பதே அறிவியல். அறிவியலுக்கு புறம்பான எதையும் ஏற்க முடியாது.
இப்போது நண்பர் ஜாகோப் மனோகரன் கூறும் மறுவாழ்வுக்கான அடிப்படைகளைக் காண்போம். விதை அழிந்து தளிர் தோன்றுவது, மரம் புதையுண்டு நிலக்கரியாக வைரமாக மாறுவது, லார்வாக்கள் சிதைந்து வண்ணத்துப் பூச்சிகளாக வருவது, ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் சேர்ந்து நீர் உருவாவது போன்றவை மறுவாழ்வு இருப்பதை தர்க்க அடிப்படையிலேனும் உறுதிப்படுத்துகின்றனவா? இல்லை. இவைகளெல்லாம் ஒரு பொருளின் தொடரும் மாறுபட்ட வடிவங்கள். பொருளின் பரிமாணங்கள் அழிந்து புதிதாக் உருவாவதில்லை. ஒரு மரமும் அதன் தொடர்ச்சியாக உருவாகும் இன்னொரு மரமும் ஒரெ பொருளில்லை. தகப்பனும் மகனும் தனித் தனியானவர்கள் என்பது போல. இவைகளை புரிந்து கொள்ள சாதாரண உள்வாங்கும் திறனே போதுமானது. ஆனால் கடவுள் என்று வரும் போது எதுவும் பயனற்றுப் போய்விடுகிறது என்பது தான் பரிவுக்கு உரியதாக இருக்கிறது.
மதவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் அல்லது ஒரு மத நம்பிக்கையாளின் இணக்கமான நடைமுறைகள் இவைகளைக் கொண்டு தனிப்பட்ட அவர்களைத்தான் மதிப்பிட முடியுமே அன்றி கடவுளை மதிப்பிட முடியாது. இது உரிமை சார்ந்த பிரச்சனை அல்ல. இது அறிவியல் ரீதியாக சான்று கோரப்படும் ஒரு பிரச்சனை. கடவுள் என்ற ஒன்றை நம்புவதும் அதன் படி ஒழுகுவதும் ஒருவரின் தனிப்பட்ட உரிமைகள் அதில் குறுக்கீடு செய்ய எதுவுமில்லை. ஆனால் அது சமூகத்தில் பரப்புரை செய்யப்படும் போது அதை மறுக்கும் உரிமையும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இரண்டும் உரிமைகள் எனும் போக்கில் எது சரி எனும் தெரிவு மறுக்கப்படுகிறது. அறிவியலுக்கு மாறானதை பரப்புரை செய்வது தடை செய்யப்பட வேண்டும் என்பதே சமூகத்தின் உரிமையாக இருக்க முடியும். தனி மனித உரிமைகளை முன் வைத்து சமூகத்தின் உரிமையை மறுக்க முடியுமா? சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு மனிதன் நல்லவனாக வாழ்வது கடவுள் எனும் கட்டுப்பாட்டால் தான், அல்லாவிட்டால் சமூகம் பேரழிவைச் சந்திக்கும் என்பது உண்மைக்கு புறம்பான ஒரு கற்பிதம். ஒருவன் நல்லவனாக வாழ்கிறான் என எந்த அடிப்படையைக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது? சமூகத்தைக் கொண்டா? மதங்களைக் கொண்டா? கடவுள் எனும் கட்டுப்பாடு தான் மனிதனை நல்லவனாக நடத்தும் என்றால் இவ்வுலகில் கெட்டவைகளே அல்லது கெட்டவர்களே இருக்கக் கூடாது. ஏனென்றால் ஆயிரக்க்கணக்கான ஆண்டுகளாக இங்கே கடவுள் நம்பிக்கை கோலோச்சிக் கொண்டு இருக்கிறது. இன்றைய நிலை அப்படியா இருக்கிறது. சந்திக்கும் சக மனிதன் நல்லவன் என யாராலும் உறுதி கூற முடியாத நிலையல்லவா இருக்கிறது. என்றால் கடவுளின் கட்டுப்பாடு எங்கே போனது? சக மனிதனுக்கு தீங்கு செய்யும் எண்ணம் கொண்ட அனைவரும் (உங்கள் வசதிக்காக பெரும்பாலானோர் என்றும் வைத்துக் கொள்ளலாம்) கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் கடவுள் நம்பிக்கை எந்த விதத்தில் அவர்களைக் கட்டுப்படுத்தியது? அல்லது கட்டுப்படுத்தத் தவறியது?
கெட்டவர்களை விட்டு விடுவோம், சமூகத்தில் நல்லவர்களாக வாழ்வோர் கடவுள் எனும் கட்டுப்பாட்டால் தான் நல்லவர்களாக வாழ்கிறார்களா? இல்லை. சட்டத்தின் கட்டுப்பாட்டால், சமூகத்தின் கட்டுப்பாட்டால் தான் கெட்டவைகளைச் செய்யாமல் தவிர்க்கிறர்கள். விதிவிலக்கில்லாமல் எல்லா மத போதிப்பாளர்களிலும் பாலியல் குற்றவாளிகள் இருக்கிறார்கள். அவர்கள் அம்பலப்படுவதற்கு முன்பும் பின்பும் அக்குற்றங்களை சமூகத்திலிருந்து மறைக்க வேண்டும், சட்டங்களிலிருந்து மறைக்க வேண்டும் என எண்ணுகிறார்களே தவிர கடவுளிலிருந்து மறைக்க வேண்டும் என எண்ணுவதில்லை. அவர்கள் அம்பலப்படுவதற்கு முன்பு வரை சமூகத்தில் நல்லவர்களாகவே மதிக்கப்பட்டார்கள் என்பதை மறுக்க முடியுமா? எனவே, சமூகம் தான் மனிதர்களைக் கட்டுப்படுத்துகிறதே அன்றி மதங்களோ கடவுளோ அல்ல.
பொதுவாக அனைத்து மதங்களுமே மாறாத நீதி போதனைகளையே தங்கள் வேதங்களாக வழிகாட்டுபவைகளாக கொண்டிருக்கின்றன. சமூகமோ கணந்தோறும் மாறிக் கொண்டே இருக்கிறது. நேற்றிருந்த வாழ்க்கை முறை இன்று இல்லை. இன்றிருக்கும் பழக்க வழக்கங்கள் நாளை வழக்கொழிந்து போகும். நேற்றிருந்த உற்பத்தி முறை இன்றில்லை. நேற்றிருந்த உறவு முறைகள் இன்று நிறமிழக்கின்றன. இப்படி மாறிக் கொண்டே இருக்கும் வாழ்க்கை முறையில் மாறவே மாறாத மதநெறிகள் நல்லவை கெட்டவைகளை தீர்மானிக்க முடியுமா?
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நல்லதும் கெட்டதும் எல்லோருக்கும் சமமாய் இருப்பதில்லை என்பது முதன்மையானது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள், நாங்கள் அடிமைகள் இல்லை என திருப்பித் தாக்கினால் அது கலவரமாக சித்தரிக்கப்படும் காலத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். அரசு திட்டமிட்டு உழைப்பைச் சுரண்டினால், அல்லது சுரண்ட அனுமதித்தால் அதை முன்னேற்றம் என்றும், அறியாத மக்கள் அதை தங்களுக்குள் செய்தால் அதை திருட்டு என்றும் அழைக்க வழக்கப்படுத்தப்பட்ட சமூகத்தினுள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒன்று நல்லதா கெட்டதா என்பது அது யாருக்கு சாதகமாக இருக்கிறது, யாருக்கு பாதகமாக இருக்கிறது என்பதைக் கொண்டே முடிவு செய்யப்படுகிறது. இதில் எங்கிருந்து எல்லோருக்கும் நல்லவனாக இருப்பது? யாராலும் எல்லோருக்கும் நல்லவனாக இருக்கவே முடியாது. வர்க்கமாய் பிரிந்திருக்கும் சமூகத்தில் எல்லோருக்குமான நீதி என்பதே சட்டத்தினால் வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் ஒன்று எனும் போது; ஒரு கடவுள், ஒரு மதம், அதன் மாறவே மாறாத வாழ்முறைகளின் கட்டுப்பாடினால் மனிதன் நல்லவனாக இருக்கிறான் என்பது கற்பனையாக மட்டுமே இருக்க முடியும்.
ஆகவே, கடவுளால் தால் அல்லது கடவுள் எனும் கட்டுப்பாட்டல் தான் மனிதன் நல்லவனாக இருக்கிறான் இல்லையென்றால் சமூகம் பேரழிவைச் சந்திக்கும் என்பது மேலோட்டமான ஆழமான புரிதல் இல்லாத முடிவு. சமூகம் தான் ஒருவனை அவன் எப்படிப் பட்டவனாக இருக்க வேண்டும் என தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறது. இதற்கும் மனிதன் மரணித்தபின் இருப்பதாக நம்பப்படும் ஒரு வாழ்வுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
பரிணாமக் கோட்பாடு, இண்டலக்சுவல் டிசைன் போன்றவைகளெல்லாம் விரிவாக பேசவேண்டிய தனிப் பகுதிகாள். வாய்ப்பிருந்தால் அவைகள் குறித்து பின்னர் பேசலாம்.
கடவுள் குறித்து பேசும் போதெல்லாம் தத்துவம் எனும் பெயரிலான ஏதோ ஒன்றில் புகுந்து கொண்டு குழப்புவது ஆன்மீகவாதிகளுக்கு வாடிக்கையானது. திரு விவேக் அத்வைதி யினுடைய கருத்தையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன். கடவுள் என்றால் என்ன? மனிதன் என்றால் என்ன? இந்த பேரண்டம் என்றால் என்ன? இவைகளை நாம் அறிவியல் வழியாகப் பார்த்தால் நமக்கு தெளிவான பதில்கள் கிடைக்கின்றன. ஆனால் அந்தப் பதில்கள் ஆன்மீகவாதிகளுக்கு உவப்பானதாக் இருப்பதில்லை. அதனாலேயே ஆன்மா தொடங்கி மெய்யுணர்வு, விழிப்புணர்வு என்றெல்லாம் சுற்றி வருகிறார்கள். தத்துவம் என்பதன் பொருளே சிக்கலான விசயங்களை எளிமையாக புரியவைப்பது என்பது தான். ஆனால் இன்றைய நிலையில் தத்துவம் என்றால் எளிமையான விசயங்களைக் கூட புரிவதற்கு சிக்கலான முறையில் கூறுவது என்றாகி இருக்கிறது.
மனிதன் தான் தோன்றிய தொடக்க காலம் முதற்கொண்டு தன்னுடைய ஐம்புலன்களின் வழியே உலகைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். தான் பார்த்து புரிந்து கொண்டதை மூளை எனும் உறுப்பின் மூலம் தொகுத்து பகுத்து தன் தேவைகளுக்கு ஏறப பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். இதில் தான் அறியாத, தனக்கு புதிராய் இருக்கும் விசயங்கள் எதிப்படும் போது அதனை விளங்குவதற்கு ஏற்கனவே இருக்கும் அறிதலைக் கொண்டு அதற்கும் மேலாக கற்பனைகளை இணைத்துக் கொண்டும் விளக்க முற்படுகிறான். இந்த வழியில் தான் கடவுள் வருகிறார். அதாவது கணிதத்தில் ‘எக்ஸ்’ எனும் பயன்பாடு இருக்கிறதல்லவா அதைப் போல. ஒரு சமன்பாட்டில் தெரியாத விடையை எக்ஸ் என வைத்துக் கொண்டு படிப்படியாக அந்த விடையை வந்தடைவார்களே, அதேபோல தனக்கு புதிராக உள்ள விசயங்களை கடவுளினால் இயலும் என பாவித்துக் கொண்டு விளக்கமளிக்க முற்பட்டான். இந்த வழியில் கடவுளின் எல்லை படிப்படியாக விலகிக் கொண்டே வந்தது. அதாவது, மனித அறிவின் எல்லை அதிகரித்துக் கொண்டே வந்தது.
மற்றொரு பக்கம், உற்பத்தி முறைகளின் மாற்றத்தின் விளைவாய் சமூக உறவுகளில் மாற்றம் ஏற்பட்டு, வர்க்கமாகி அதுவும் அதிகார வர்க்கமாகவும், அதிகாரமற்ற வர்க்கமாகவும் தெளிவாகப் பிரியப் பிரிய; அதிகாரமற்ற வர்க்கத்தினரை அடக்கி வைக்க அதிகார வர்க்கத்தினருக்கு ஒரு கருவி தேவைப்பட்டது. அந்தக் கருவியாக கடவுளை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அதாவது கடவுளை எந்த அளவுக்கு புரியாத, விளங்கிக் கொள்ள சிக்கலான விசயமாக மாற்றுகிறார்களோ அந்த அளவுக்கு அது அவர்களுக்கு பயன்படுகிறது. மனிதன் அறிவியலின் துணை கொண்டு கடவுளை விளக்க விளக்க, சிக்கலான தத்துவங்களைக் கொண்டு அதை புரிவதற்கு கடினமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் மற்றொரு பிரிவினர். இது ஒரு எல்லைக்கு மேல் செல்லும் போது புனிதங்களாகவும், புனிதங்களுக்கு எதிரான அவமதிப்பாகவும் விரிகிறது. இது தான் கடவுள், மதங்கள் குறித்த சுருக்கமான வரலாறு.
மனிதன் என்றால் என்ன? இந்த பூமி எனும் கோளில் இருக்கும் ஏனைய உயிரினங்களைப் போலவே மனிதனும் ஒரு உயிரினம். ஒரு சமூக விலங்கு. தன்னுடைய உழைப்பின் பலனால் அடைந்த மாற்றங்களைக் கைப்பற்றிக் கொண்டு, முன்மாதிரி உருவாக்கத்தினால் பிற விலங்குகளிலிருந்து மேம்படத் தொடங்கி அதன் வழியே வியத்தகு மாற்றங்களை சாதித்துக் காட்டிய ஒரு விலங்கு.
பேரண்டம் என்றால் என்ன? ஒரு சிங்குலாரிடியிலிருந்து பெருவெடிப்பின் மூலம் இந்தக் கணம் வரை விரிவடைந்து கொண்டிருப்பது தான் இப் பேரண்டம். அந்த சிங்குலாரிடிக்கு முன் என்ன என்பதில் சில கணங்கள் வரை அறிவியல் நீண்டிருக்கிறது. அதற்கும் முன்பு என்ன என்பதில் அறிவியலிடம் தெளிவான விடைகள் இல்லை. அலைவுக் கோட்பாடு உட்பட பல கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. தெளிவான சான்றுகள் கிடைக்கும் வரை அவை அறிவியல் ரீதியிலான யூகங்கள் மட்டுமே. இருந்து கொண்டிருக்கும் இந்தப் பேரண்டத்தின் பல கோடி பருப் பொருட்களில் ஒப்பிடவே முடியாத அளவுக்கு தூசு போன்ற பொருளே பூமி எனும் கோள். இந்தப் பேரண்டம் ஏதோ ஒரு ஆற்றலால திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு எந்த வித சான்றுகளும் இல்லை. அவ்வாறான சான்றுகள் கோரப்படும் போதெல்லாம், இப்பேரண்டத்தில் நிலவும் ஒழுங்கு சான்றாக முன்வைக்கப்படுகிறது. ஆன்மீகவாதிகளால் சுட்டப்படும் பேரண்ட ஒழுங்கு என்று எதுவும் இங்கு இல்லை. கணந்தோறும் அண்டவெளியில் எந்த ஒழுங்குமின்றி மோதல்களும் வெடிப்புகளும், புதிய பருப் பொருட்கள் உருவாவதும், மறைந்து போவதும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்தப் பேரண்டத்துக்குள் தான் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கடவுளும் இதே பேரண்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருப்பதாக நம்பப்டுகிறது. மனிதனின் ஆதி வாழ்வில் கடவுள் எனும் உணர்வு இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இது தரவுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பின்னரே கடவுள் எனும் ஒன்று மீப்பெரும் ஆற்றலாக மக்களிடையே உருவாகி இருக்கிறது. அன்றிலிருந்தே கடவுளுக்கு எதிரான விவாதங்களும் உருவாகி விட்டன, இன்றுவரை அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை கடவுளுக்கு ஆதரவாக எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு வாதமும் அறிவியல் வளர்ச்சியின் துணை கொண்டு முறியடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறை முறியடிக்கப்படும் போதும் கடவுளை விளக்க முடியாத தத்துவ விசாரங்கள் மூலம் சிக்கலான ஒன்றாக மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அவ்வாறு சிக்கலான ஒன்றாக மாற்றுவதற்கு உற்ற துணையாக இருந்த பலவற்றுள் ஆன்மா என்பது முதன்மையானது.
ஆன்மா என்பது என்ன? இதற்கு தெளிவான எந்த விளக்கமும் கிடையாது. கடவுளுக்கு தெளிவான விளக்கம் ஏதாவது இருக்கிறதா? அதைப் போலவே ஆன்மாவும். அதன் தன்மை என்ன என விவரிக்கப்படுமே தவிர ஆன்மா என்றால் என்ன என்பது ஒருபோதும் விவரிக்கப்பட்டதே இல்லை. இந்து மதத்தை ப் பொருத்தவரை வேதங்களில் ஆன்மா என்ற ஒன்றை ஆயிரம் உருப்பெருக்கி வைத்து தேடினாலும் கிடைக்காது. பின்னாட்களில் அந்த வேதங்களுக்கான விளக்க உரைகளாக வந்த உபநிடதங்களில் தான் ஆன்மா வருகிறது. ஆதாவது வெறுமனே சடங்கு வழிபாடுகளாக, போலச் செய்தல்களாக கடவுள் இருந்த நிலை மாறி மனித வாழ்வில் ஒழுங்குகள் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதனால் மனிதன் என்பவன் கடவுளுக்கு கட்டுப்பட்டே தீரவேண்டியவன் என்பதை வலியுறுத்துவதற்காக ஆன்மா எனும் கருத்து திணிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே மறு பிறப்பும் வந்து இணைகிறது.
இப்போது இருக்கும் பிரச்சனை இது தான். கடவுள் என்றால் என்ன என்பதை விளக்க முடியவில்லை என்பதால், அந்த தோல்வியை மறைப்பதற்காகவும், கடவுளின் பிடியிலிருந்து மனிதன் விடுபட்டு விடாமல் இருப்பதற்காகவுமான தேவை பெரிதாக எழுகிறது. இதை மனிதன் என்பவன் எவ்வாறு உருவாகிறான்? இறந்த பிறகு அவன் என்னவாகிறான்? என்பதை விளக்குவதன் மூலம் ஈடுகட்ட முயன்றார்கள். அந்த முயற்சியின் விளைவு தான் ஆன்மா, மறுவாழ்வு என்பதெல்லாம். இதில் இன்றியமையாத விசயம் என்ன வென்றால், ஆன்மீகவாதிகள் அளிக்கும் இந்த விளக்கங்கள் எல்லாம் அறிவியலுக்கு புறம்பானதாக, அறிவியலுக்கு எதிரானதாக இருக்கிறது என்பது தான். அறிவியலுக்கு எதிரானதை ஏற்றுக் கொள்ளவியலாது என்று தொடர் விவாதங்கள் முளைத்ததும், அறிவியலே ஐயத்துக்கு இடமானது தான். அறிவியல் முழுமையானது இல்லை என்றெல்லாம் எதிர் வாதங்கள் கிளம்பி வந்தன.
அறிவியல் என்றால் என்ன? இப்பூமியில் உயிரினங்களோடு இயிரினமாக, விலங்குகளோடு ஒரு விலங்காக இருந்தபோதிலிருந்து தன்னுடைய தேவைகளுக்காக தன் ஐம்புலன்களின் மூலம் புற உலகை அறிந்து கொள்ள முற்பட்டான். தான் அறிந்ததை மூளை எனும் உறுப்பில் சேமித்து வைத்து பயன்படுத்தினான். இதன் தொடர்ச்சியாக மூளையின் நினைவுகளிலிருந்து முன்மாதிரியை உருவாக்கினான். இந்த முன்மாதிரியை நடைமுறையில் சோதித்தான். சோதனையில் கிடைத்த வெற்றியை சமூகத்தோடு பகிர்ந்து கொண்டான். இது தான் அறிவியல். நாம் இந்த உலகில் தெரிந்து கொண்டிருக்கும் அத்தனையும் அறிவியல் மூலம் நமக்கு கிடைத்தவை தாம். எந்த ஒன்றை நாம் செய்தாலும் அதில் அறிவியல் விதிகள் இல்லாமலில்லை, அதை நாம் அறிந்திருக்கவில்லை என்றாலும் கூட. நடைமுறை வாழ்வில் நமக்கு ஏற்படும் அனைத்து சிக்கல்களையும் நாம் அறிவியலின் துணை கொண்டே தீர்த்துக் கொள்கிறோம். ஏனென்றால் அறிவியல் தான் ஒரே தெளிவு. அறிவியல் தான் ஒரே உரைகல்.
இந்த அடிப்படையிலிருந்து தான் கடவுளை, மதங்களை, அதன் வழிகாட்டு நெறிகளை, கடவுளை சரிகாண கூறப்படும் வாதங்களை உரசிப் பார்க்க வேண்டியதிருக்கிறது. கடவுளின் இருப்பை உறுதி செய்ய முடியாது என்பது நாத்திகர்களுக்கு மட்டுமல்ல, ஆத்திகர்களுக்கும் தெரியும். அதனால் தான் கடவுள் என்றால் என்ன என கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம் கடவுளின் தன்மைகளைக் கூறுவார்கள், ஆன்மாவின் தன்மைகளை விளக்குவார்கள், மறுபிறப்பினை அதாவது சொர்க்கத்தில் கிடைக்கும் பலன்களை, நரகத்தில் கிடைக்கும் இன்னல்களை விளக்குவார்கள். இவை அனைத்தையும் அறிவியல் என்றோ தன் குப்பைக் கூடையில் வீசி விட்டது.
எனவே, மரணித்ததன் பிறகான மறுவாழ்வு தொடங்கி, ஆன்மா, தத்துவம், தன்னை அறிதல் என எங்கெல்லாமோ சுற்றிச் சுழலும் அனைத்து வாதங்களின் சாரமான ஒரே கேள்வி கடவுள் என்றால் என்ன என்பது தான். இதற்கான விடையை எந்த ஆன்மீகவாதியும் கூறப் போவதில்லை. எல்லா பயங்காட்டல்களும் பயனற்ற பின் கூறப்படுவது தான் கடவுள் அறிவியலுக்குள் அடங்கமாட்டார், அறிவியலுக்கும் அப்பாற்பட்டவர் கடவுள் என்பது. இந்தப் பேரண்டத்துக்குள் அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்று எதுவுமே இல்லை. இப்பேரண்டத்துக்குள் இயங்காமல், இப்பேரண்டத்துக்கு அப்பாற்பட்டிருக்கும் கடவுள் குறித்து நானோ நீங்களோ கவலைப்பட ஒன்றுமில்லை. பிரச்சனை இப்பேரண்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கடவுள் குறித்து தான். இன்று கடவுளுக்கு கூறப்படும் அனைத்து தகுதிகளையும் தன்மைகளையும் நீக்கி விட்டு கடவுள் என்ற ஒன்று இப்பேரண்டத்துக்குள் இருக்கலாம் என்றால் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் தகிமலா பழம் போல் இது தான் கடவுள் என்றோ, அவரை வணங்காவிட்டால் நரகத்தில் வறுத்தெடுப்பார் என்றோ கூறாதீர்கள்.
இவை எல்லாவற்றையும் விட இன்றியமையாத இன்னொரு விசயம் இருக்கிறது. இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் கடவுள் எவ்வாறு தாக்குப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்? உலகின் மக்களை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று சுரண்டுபவர்கள், இன்னொன்று சுரண்டப்படுபவர்கள். சுரண்டுபவர்கள் தங்கள் சுரண்டலை மறைப்பதற்கு, மக்களை திசைதிருப்புவதற்கு கடவுள் நம்பிக்கையை ஓர் உத்தியாக பயன்படுத்துகிறார்கள். அதனால் கடவுளைக் காப்பாற்ற வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. சுரண்டப்படுபவர்களுக்கோ தங்கள் வாழ்வியல் தோல்விகளிலிருந்து இளைப்பாறல் பெறுவதற்கு, எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொள்வதற்கு கடவுள் ஒரு கருவியாக இருக்கிறது. இந்த இரண்டு அடிப்படைகளினால் தான் உலகில் கடவுள் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாரே தவிர அவர் மெய்யாகவே இருக்கிறார், அளப்பறிய ஆற்றல்களைக் கொண்டிருக்கிறார் என்பதால் அல்ல.
மார்க்சியர்கள் கடவுளை மறுப்பதற்கான காரணமும் இது தான். இறந்த பிறகான உலகாக பொய்யான பொன்வாழ்வின் எதிர்பார்ப்பில், இருக்கும் உலகின் கோமணம் அவர்களிடமிருந்து களவாடப்படுவதை மறந்திருக்கிறார்கள். அறிவியலுக்கு எதிராக சமூகத்துக்கு எதிராக மூடக் கருத்துகளை ஏற்றுப் பரப்புவதன் மூலம் பொய்யான இரட்சகனின் ஒளியில் மெய்யான எதிரியை மறைக்கிறார்கள். சுரண்டப்படும் இந்த சூழல் இருக்கும் வரை எதிர்காலம் குறித்த பயம் நீடிக்கும். எதிர்காலம் குறித்த பயம் நீடிக்கும் வரை கடவுளும் உயிர் வாழ்வார். இந்த சுரண்டல் உலகம் மாற்றப்படும் போது தான், சுரண்டுவோர்கள் வீழ்த்தப்படும் போது தான் கடவுள் இற்றுப் போவார். காயத்தின் மீதுள்ள பொருக்கைப் போல் அற்றுப் போவார். அதற்காகத்தான் மார்க்சியர்கள் போராடுகிறார்கள். இது கடவுளுக்கு எதிரான போராட்டமல்ல, மக்களுக்கான போராட்டம்.
திரு.செங்கொடி அவர்களுக்கு கடவுள் என்ற ஒன்று இருக்கிறதா? அப்படி இருந்தால் அது எப்படி பட்டது என்று அறிய உண்மையில் ஆர்வம் இல்லை என்று தெரிகிறது. அதனால்தான் கடவுள் என்பது என்று விளக்க முற்பட்டால், அதை புரிந்துகொள்ளவோ பதில் கூறவோ முன்வராமல், வெறுமனே தத்துவம் கூறி குழப்ப ஆன்மீகவாதிகள் முயல்வதாக கூறுகிறார்.
கடவுள் பற்றிய உண்மைகளை அறியாதவருக்கு விளக்கமளிக்க நான் தயார். விரும்புபவர்கள் தெளிவு பெறலாம்.
செங்கொடி : மரணத்துக்குப் பின்பு ஒரு வாழ்வு இருக்கிறது என்பதற்கு அறிவியல் சான்றுகள் தேவைப்படுகின்றன என்பதை விட அதை அறிவியல் திடமாக மறுக்கிறது என்பதே உண்மை.
விவேக் அத்வைதி : நீங்கள் ஜட அறிவியலை(material science) மட்டும் நம்புவேன் என்கிறீர்கள். ஆன்மீக அறிவியலை(spiritual science) பற்றி அறிந்துகொள்ளவோ அங்கீகரிக்கவோ மறுக்கிற எவரும் யதார்த்தம் என்பது என்ன, அது எப்படி உருவாகிறது, கடவுள் என்பது என்ன, நாம் யார் போன்ற பல உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அடையாதவர்களாவே இருக்கின்றனர். ஆன்மிகம் வேறு அறிவியல் வேறு அல்ல. உண்மையான ஆன்மிகம் என்பதே அறிவியல்தான். ஜட அறிவியல் என்பது அறிவியலின் கைக்குழந்தை பருவம். வளந்தவர்கள் பேசுவதை கைக்குழந்தை புரிந்துகொள்ளவில்லை என்பதால் பேசப்படும் உண்மை இல்லை என்றாகிவிடாது.
நண்பர் விவேக் அத்வைதி,
நீங்கள் கடவுள் இருக்கிறார் எனும் நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள். நான் இல்லை எனும் நிலைப்பாட்டில் இருக்கிறேன். உங்கள் கருத்தை நீங்கள் முன்வைத்தால் தான் பரிசீலிக்க இயலும். கடவுள் உண்மையா என்பதை உணர்த்துங்கள். கடவுள் பற்றிய உண்மை என்றால் அதில் பொருள் மயக்கம் இருக்கிறது. எனவே, கடவுள் உண்மையா? பொய்யா? என்பதை முதலில் தீர்த்துக் கொள்வோம். சரிதானே.
உளம் சார்ந்த அறிவியல் (spiritual) பொருள் சார்ந்த அறிவியல் என்றெல்லாம் அவரவர் வசதிக்கேற்ப பிரித்துக் கொள்ள முடியாது. அறிவியல் அவ்வளவு தான். அதில் இருக்கும் பல வகைகளைப் பற்றி பேசுவோம். உள அறிவியல் என்று தனித்த அறிவியல் இருக்கிறது என்று நீங்கள் நம்பினால் அதைப் பற்றியும் கூறுங்கள். தடை ஒன்றும் இல்லையே.
கூறுங்கள்.. .. .. பேசுவோம்.
செங்கொடி : கடவுள் உண்மையா என்பதை உணர்த்துங்கள். கடவுள் பற்றிய உண்மை என்றால் அதில் பொருள் மயக்கம் இருக்கிறது. எனவே, கடவுள் உண்மையா? பொய்யா? என்பதை முதலில் தீர்த்துக் கொள்வோம்.
விவேக் அத்வைதி : இருப்பது(That which is) தான் கடவுள். இருப்பது அனைத்துமே கடவுள். நம்முடைய ஐம்புலன்களால் அறிந்துகொள்ளக்கூடியவை மட்டுமல்லாமல் நம் புலன்களுக்கு அப்பாற்பட்ட நிலையிலும் எது எல்லாம் இருக்கிறதோ அவை அனைத்துமே கடவுள்தான். அதாவது பொருள் நிலையில் மட்டுமல்லாமல் பொருள் நிலைக்கு அப்பாற்பட்ட நிலையிலும் எது இருக்கிறதோ அது கடவுளாக இருக்கிறது. கடவுளுக்கு வெளியே என்று ஒரு குறிப்பு புள்ளி இல்லாததால் எது இருந்தாலும் அது கடவுளுக்கு உள்ளேயே இருக்கிறது; கடவுளின் ஒரு அங்கமாக இருக்கிறது. நம்முடைய பிரபஞ்சம் மட்டுமல்லாமல் மற்ற பல பிரபஞ்சங்களும் கடவுளுக்கு உள்ளே, கடவுளின் அங்கமாக, கடவுளாக இருக்கின்றன. ஆகவே கடவுள் இருப்பது உண்மையா என்று நீங்கள் கேட்டால், நீங்கள் இருப்பது உண்மை என்றால்; பிரபஞ்சம் இருப்பது உண்மை என்றால்; கடவுள் இருப்பதுவும் உண்மைதான் என்பதுதான் அதற்கு பதில்.
கடவுள் பற்றிய உண்மை என்றால் அதில் பொருள் மயக்கம் இருக்கிறது என்று கூறுகிறீர்கள். கடவுள் பொருள் நிலையிலும்(physical state). ஆவி நிலையிலும்(meta physical state), இந்த இரண்டு நிலைகளையும் தாங்கி பிடித்துக்கொண்டிருக்கிற சூன்ய நிலையிலும்(void state) கடவுள் இருக்கிறது. இங்கே பொருள் மயக்கம் என்று மட்டும் எங்கிருந்து வந்தது? பொருள் மயக்கம் என்று எதை கூறுகிறீர்கள் என்பதை விளக்கவும்.
செங்கொடி : உளம் சார்ந்த அறிவியல் (spiritual) பொருள் சார்ந்த அறிவியல் என்றெல்லாம் அவரவர் வசதிக்கேற்ப பிரித்துக் கொள்ள முடியாது. அறிவியல் அவ்வளவு தான்.
விவேக் அத்வைதி : உளம் சார்ந்த அறிவியல் என்று நான் கூறவில்லை. ஆன்மீக அறிவியல் என்று கூறினேன். பொருள் நிலையில் அல்லது மின்சார ஆற்றல் போன்ற பொருள் நிலைக்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்கக்கூடியவற்றை பொருள் சார்ந்த உபகாரணங்களால் மற்றும் பொருள் சார்ந்த புலன்களால் மட்டுமே அறியக்கூடியதுதான் பொருள் சார்ந்த அறிவியல். இதற்கு மாறுபட்டதே ஆன்மீக அறிவியல். பொருள் நிலைக்கு அப்பாற்பட்டவைகளை ஆன்மீக உபகரணங்களைக்கொண்டு அறிந்துகொள்வதுதான் ஆன்மீக அறிவியல். அதனால்தான் ஆன்மிகம் மூலம் அறிந்துகொள்ளும் உண்மைகளை பொருள் சார்ந்த உபகரணங்களால் மற்றும் பொருள் சார்ந்த புலன்களால் தெரிந்துகொள்ளவோ அளவிடவோ முடியாது. அதாவது, சரியான உபகரணத்தை பயன்படுத்தினால்தான் சரியான விடை கிடைக்கும். வெப்ப அளவை கணக்கிட வேகத்தை கணக்கிடக்கூடிய கருவியை பயன்படுத்த முடியாது. அதே போன்றுதான் ஆன்மீக உண்மைகளை பொருள் சார்ந்த கருவிகளால் கண்டுபிடிக்க முடியாது. அதற்கு ஆன்மீக கருவிகள் தேவை.
Aanmeega karuvigal yevai? vagai paduthungal.
செங்கொடி : எனவே, மரணித்ததன் பிறகான மறுவாழ்வு தொடங்கி, ஆன்மா, தத்துவம், தன்னை அறிதல் என எங்கெல்லாமோ சுற்றிச் சுழலும் அனைத்து வாதங்களின் சாரமான ஒரே கேள்வி கடவுள் என்றால் என்ன என்பது தான். இதற்கான விடையை எந்த ஆன்மீகவாதியும் கூறப் போவதில்லை.
விவேக் அத்வைதி : தன்னையே அறியாமல் இருந்த ஆற்றல் தன் சுயத்தை பற்றி விழிப்புணர்வு பெற்றது(self awareness). விழிப்புணர்வு அடைந்த ஆற்றல் உணர்வும் (sentience)அடைந்தது. விழிப்புணர்வும் உணர்வும் கொண்ட ஆற்றல்தான்(self aware sentient energy) கடவுள். இதை தோற்றுவாய்(origin) என்று கூறலாம்.
Aanmeega karuvigal yevai? vagai paduthungal.
தியானம்(meditation), தெய்வீக பாலுறவு(divine sex), மந்திர உச்சாடனம்(chanting mantras), மெய்யுணர்வு செயல்(act of consciousness), சூட்சும உடல் பயணம்(astral body travel),மெய்யுணர்வு குவிப்பு(projection of consciousness),வேற்று பரிமாண ஜீவன்களுடன் பேசுவது(channeling),எண்ணம் மூலமாக தகவல் பரிமாறுவது(telepathy) போன்றவையே ஆன்மீக கருவிகள்.
செங்கொடி : இப்பேரண்டத்துக்குள் இயங்காமல், இப்பேரண்டத்துக்கு அப்பாற்பட்டிருக்கும் கடவுள் குறித்து நானோ நீங்களோ கவலைப்பட ஒன்றுமில்லை.
விவேக் அத்வைதி : கடவுளுக்குள்ளே பிரபஞ்சங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, நம்முடைய கடவுளுக்கு உள்ளே 397 பிரபஞ்சங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் சேர்ந்ததுதான் அண்டம்(Multiverse). இந்த அண்டத்தின் அடிமட்டத்தில் உள்ள முதலாவது பிரபஞ்சத்தில் நாம் இப்பொழுது இருக்கிறோம்.
செங்கொடி : ஆன்மா என்பது என்ன? இதற்கு தெளிவான எந்த விளக்கமும் கிடையாது. கடவுளுக்கு தெளிவான விளக்கம் ஏதாவது இருக்கிறதா? அதைப் போலவே ஆன்மாவும். அதன் தன்மை என்ன என விவரிக்கப்படுமே தவிர ஆன்மா என்றால் என்ன என்பது ஒருபோதும் விவரிக்கப்பட்டதே இல்லை.
விவேக் அத்வைதி : தான் என்ற விழிப்புணர்வும்(self awareness) உணர்வும்(sentience) கொண்ட ஆற்றல்தான் ஆன்மா. இதைத்தான் கடவுள் என்றும் உயிர் என்றும் தோற்றுவாய்(Origin) என்றும் அனைத்துமாய் இருப்பது(All that is) என்றும் இருப்பது(That which is) என்றும் கூறுகிறோம்.
செங்கொடி : இதனால் மனிதன் என்பவன் கடவுளுக்கு கட்டுப்பட்டே தீரவேண்டியவன் என்பதை வலியுறுத்துவதற்காக ஆன்மா எனும் கருத்து திணிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே மறு பிறப்பும் வந்து இணைகிறது.
விவேக் அத்வைதி : மதங்கள் கடவுளை பற்றி மிக தவறான கருத்துக்களை போதிக்கின்றன. இப்படிப்பட்ட தவறான கருத்துக்களின் அடிப்படையில் நீங்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கிறீர்கள். இது வேண்டும் அது வேண்டும் என்று கடவுள் தன் படைப்புகளிடம் எதையும் கோருவதில்லை. குறிப்பாக தன் படைப்புகள் தன்னை வணங்க வேண்டும் என்று ஒருபோதும் அது விரும்பவில்லை; கேட்கவில்லை. ஆனால் மதங்களோ மனிதர்கள் கடவுளை வணங்கவேண்டும் என்று கூறுகின்றன. தேவை(need) என்ற ஒன்று இல்லை. தேவை என்பது ஒரு மாயை. இந்த மாயைக்குள் விழிப்பு நிலை அடையாத மனிதர்கள் சிக்குண்டு இருப்பதால் கடவுளுக்கும் தேவைகள் இருக்கும் என்று நினைத்து இப்படி மத கருத்துக்களை உருவாக்கி இருக்கின்றனர். எனவே தேவை என்ற ஒன்று இல்லாததால் கோருதல்(requirement) என்பதுவும் இல்லை. அதனால்தான் கடவுள் எதையும் கோருவதில்லை. ஆனால் மதங்களோ மனிதர்கள் இப்படி நடந்துகொள்ள வேண்டும்; அப்படி நடந்துகொள்ள கூடாது என்று கோரி கடவுள் சட்டங்கள் போடுவதாக கூறுகின்றன. உண்மையில், சட்டமே இல்லை என்பதுதான் கடவுளின் சட்டம்(God’s law is no law). ஆகவே கோருதல் என்ற ஒன்று இல்லாதபோது தண்டனை, வெகுமதி என்ற ஒன்றும் இல்லை(no punishment and no reward). ஆனால் கடவுள் மதங்கள் தண்டனை மற்றும் வெகுமதி கொடுப்பவர் என்று மதங்கள் கூறுகின்றன. உண்மையில் கடவுள் எவரையும் எதற்காகவும் தண்டிப்பதில்லை. இது ஏனென்றால் கடவுளிடம் எந்த முன்னுரிமையும்(preference) இல்லை. தன்னுடைய படைப்புகள் என்ன செய்ய வேண்டும் என்பதில் கடவுளுக்கு முன்னுரிமை எதுவும் இல்லை(God has no preference in what his creations do,think and say). கடவுள் செய்வது எல்லாம் அவதானிப்பது(observation) மட்டுமே.
செங்கொடி : மறுபிறப்பினை அதாவது சொர்க்கத்தில் கிடைக்கும் பலன்களை, நரகத்தில் கிடைக்கும் இன்னல்களை விளக்குவார்கள். இவை அனைத்தையும் அறிவியல் என்றோ தன் குப்பைக் கூடையில் வீசி விட்டது.
விவேக் அத்வைதி : நரகம், சுவர்க்கம் என்று தனியாக எந்த இடமும் இல்லை. இருப்பது அனைத்தையும் உள்ளடக்கிய பிரமாண்ட யதாத்தம்(greater reality) மட்டுமே. இந்த பிரமாண்ட யதார்த்தத்தை வேண்டுமானால் சுவர்க்கம் என்று கூறலாம். அப்படியானால் அனைத்தும் எப்பொழுதும் சுவர்கத்திலேயே இருக்கின்றன. அதன் அனுபவம் தான் ஒவ்வொருத்தருக்கும் மாறுபடுகிறது. யதார்த்தத்தை நரகமாக அனுபவிப்பதும் சுவர்க்கமாக அனுபவிப்பதும் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுப்பதை பொருத்தது. நாம் ஏற்கெனவே சுவர்க்கத்தில் இருப்பதால் நாம் சுவர்க்கத்திற்கு போக முடியாது. அதாவது, நாம் எங்கு இருக்கிறோமோ அங்கே போக முடியாது(We cannot go where we are).
செங்கொடி : அறிவியலுக்கு மாறானதை பரப்புரை செய்வது தடை செய்யப்பட வேண்டும் என்பதே சமூகத்தின் உரிமையாக இருக்க முடியும். தனி மனித உரிமைகளை முன் வைத்து சமூகத்தின் உரிமையை மறுக்க முடியுமா?
விவேக் அத்வைதி : ஒவ்வொரு மனிதனுக்கும் தனி மனித உரிமை உண்டு. தனி மனிதர்கள் இல்லாமல் சமூகம் இல்லை. அதே சமயம் சமூகத்திற்கு தீங்கு ஏற்படும் வகையில் தனி மனிதன் நடந்துகொள்ள கூடாது. தனி மனிதன் தன் உரிமையை சமூகத்தின் மீது திணிக்க கூடாது. அதேபோல் சமூகமும் சமூக உரிமையை தனி மனிதன் மீது திணிக்க கூடாது. திணிப்பு என்பதே கூடாது.
அறிவியல் என்பதும் நிலையானது அல்ல. அறிவியலும் மாறிக்கொண்டே இருக்கும். உதாரணத்திற்கு, நேற்று அறிவியல் உண்மையாக இருந்தது இன்று அறிவியலுக்கு புறம்பாக மாறுகிறது. பல அறிவியல் கோட்பாடுகள் யூகங்கள் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. பிறகு அவை தவறு என்று அறிய வரும்போது அந்த அறிவியல் கோட்பாடுகள் கைவிடப்படுகின்றன. இந்த பிரபஞ்சம் பெரு வெடிப்பினால் உருவானது என்ற அறிவியல் கோட்பாடு யூகத்தின் அடிப்படையில் கூறப்படுகிறது. பிரபஞ்சம் உருவானது பற்றிய பல கோட்பாடுகளில் பெரு வெடிப்பு என்பதும் ஒன்று. எனவே நீங்கள் இப்பொழுது அறிவியல் என்று நினைப்பது எல்லாவற்றிற்கும் இறுதியான தீர்வோ அல்லது இறுதியான உண்மையோ அல்ல(absolute truth). அந்த வகையில், தனி மனிதர்களோ அல்லது ஒரு குழுவோ தங்கள் நம்பிக்கைகளை பரப்புரை செய்யலாம். அந்த நம்பிக்கை உங்களுடைய அறிவியலுக்கு புறம்பாக இருந்தாலும் பரப்புரை செய்யும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. அந்த பரப்புரையை ஏற்பதும் ஏற்காததும் மற்றவர்களுடைய உரிமை. பரப்புரையை தடை செய்யும் உரிமை சமூகத்திற்கு கிடையாது. சுருங்க கூறுவதென்றால், மற்றவர்களை கட்டுப்படுத்தும் உரிமை தனி மனிதனுக்கோ சமூகத்திற்கோ கிடையாது. ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உண்டு. ஆன்மாவின் இயல்பே சுதந்திரம்தான்.
நண்பர் விவேக்,
திங்கட்கிழமையன்று கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் பகுதி 3 வெளிவரும் அதன் பிறகு உங்கள் விமர்சனங்களைத் தொடரலாம்.