அனிதாவின் தற்கொலை தோற்றுவித்திருக்கும் தமிழக மக்களின் கோபத்தை திசைதிருப்ப ஆர்.எஸ்.எஸ் கும்பலால் இறக்கிவிடப்பட்டிருக்கிறார், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி. நீட் தேர்வை ஆதரித்து பேசும் தமிழக பாஜக தலைவர்கள் இப்போது முன்னிலும் அதிகமாய் இதுதான் எதிர்காலம், மாணவர்கள் தயாராக வேண்டும் என கட்டளை இட்டு வருகின்றனர்.
நீட் தேர்வை ஏற்பதற்கு அதுதான் தரம் குறித்த தரமான சோதனை, தரமான மருத்துவர்களை கண்டுபிடிக்கும் தரமான தேர்வு, இந்தியா முழுவதும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள், மருத்துவக் கவுன்சில் முடிவு செய்வதை யாரும் கேள்வி எழுப்ப முடியாது, உச்சநீதிமன்றமே ஆழமாக ஆய்வு செய்து நீட் தேர்வை ஏற்றுக் கொண்டுவிட்டது, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கவோ, மாற்றவோ முடியாது, அடுத்த வருடமாவது நீட் தேர்வை எதிர்கொள்ளுமாறு தமிழக மாணவர்களை தயார் செய்தல் வேண்டும், தமிழக பாடத்திட்டம் – சமச்சீர் கல்வி தரமற்றது, சி.பி.எஸ்.இ பாடத்திட்டமே சாலச்சிறந்தது, அனிதா போன்ற மாணவர்கள் மருத்துவர்களானால் மருத்துவத்தில் தரம் இருக்காது என்று பல்வேறு கருத்துக்களை பா.ஜ.க கும்பல் பிரச்சாரம் செய்து வருகின்றது.
அனிதாவின் தற்கொலையை அதிர்ச்சியுடன் நோக்குவோரும், நீட் தேர்வை கொள்கை அளவில் எதிர்ப்போரில் கணிசமானோரும் கூட நமது பாடத்திட்டம் சரியில்லை, நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு கொடுத்திருந்தால் அடுத்த வருடம் மாணவர்கள் தயாராகியிருப்பார்கள் என்று கருதுகிறார்கள். ஊடகங்கள் பலவும் இப்படித்தான் பேசுகின்றன.
இந்த கருத்துக்களின் பின்புலத்தை, ஆதாரங்களுடம் தகர்க்கிறது தோழர் மருதையனின் உரை. எது தரம்? உச்சீநீதிமன்றத்தின் ‘தரம்’, மருத்துவக் கவுன்சிலின் ‘தரம்’, பாஜகவின் மூன்றாண்டு ஆட்சியின் ‘தரம்’ என இந்த தரங்கெட்டவர்களின் இரட்டை நாக்குகளை, சதிகளை, மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துகின்றது இந்த உரை!
மக்களுக்கு சேவை செய்வதும், துறை சார் அறிவுத் தரமும் வேறு வேறாக இருக்க முடியாது என்பதை பல்வேறு சான்றுகளோடு நிறுவுகிறது இந்த உரை!
அனிதாவின் தற்கொலைக்கான நமது போராட்டம், ஏதோ மருத்துவம் படிப்பில் நமது மாணவர்களை சேர்ப்பது குறித்து மட்டுமல்ல, நமது மக்களின் சுகாதாரம், ஆரோக்கியம் குறித்த பிரச்சினையும் கூட! பணக்காரர்கள் மட்டும் கேஸ் சிலிண்டரை மானியமில்லாமல் வாங்க வேண்டும் என பேசிய பாஜக வாய் தற்போது அனைத்து மக்களுக்கும் மானியம் இல்லை என்று பகிரங்கமாக கொண்டு வந்து விட்டது. பல்வேறு துறைகளில் இதுதான் நிலைமை!
நீட்டிற்கு எதிரான நமது போராட்டம் நாட்டு மக்களின் வாழ்வாதாரம், ஜனநாயக உரிமைகள் அனைத்திற்குமானா போராட்டமாக மாற வேண்டும். அதற்கோர் ஆயுதமாக இந்த உரையை பயன்படுத்த அழைக்கிறோம்.
பாருங்கள் – பகிருங்கள்!
முதற்பதிவு: வினவு