நீட் தேர்வுக்கு எதிராக கடந்த ஒரு வாரமாக தமிழகம் போராடி வருகிறது. ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் கூடியதைப் போல் மெரினாவிலோ அல்லது வேறெங்கேனுமோ மாணவர்கள் இளைஞர்கள் கூடிவிடக் கூடாதே என்று தமிழகத்தின் ஒட்டுமொத்த காவல்துறையும் விழிப்புடன் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. குக்கிராமங்களின் ஆளே இல்லாத பேருந்து நிலையங்களில் கூட காக்கிக் காலிகள் நின்று கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தான் உச்ச நீதிமன்றம் என்ற பெயரிலிருக்கும் உச்சுக்குடுமி மன்றமான உச்சா மன்றம் நீட்டுக்கு எதிரான போராட்டங்களை அனுமதிக்க முடியாது என்று தடை விதித்திருக்கிறது. பின்னர் பாதிப்பு இல்லாத வகையில் போராடலாம் என்று மாற்றியமைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமையாக அரசியலமைப்புச் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த உரிமை அத்தியாவசிய பணிகள் பாதுகாப்பு எனும் பெயரில் ஏற்கனவே ஒரு திருட்டுச் சட்டத்தால் பறிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் போதெல்லாம் போக்குவரத்து பாதிப்பு, பிறருக்கு பாதிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்ற பெயரில் தான் காக்கிக் காலிகள் மறுத்தனர். பாதிப்பு இல்லாமல் எப்படி போராட்டம் நடத்துவது? நாங்கள் பாதிக்கப் பட்டிருக்கிறோம் என்பதை கண்டு கொள்ள மறுக்கும் அரசுக்கு எதிராகத் தான் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதை யாருக்கு பாதிப்பு இல்லாமல் நடத்த வேண்டும்?
இடிந்தகரை, கூடங்குளத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் தான் ஆயிரக் கணக்கான நாட்களாக போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அணு உலை நிறுத்தப்பட்டு விட்டதா? தில்லியில் விவசாயிகள் யாருக்கும் பாதிப்பு இல்லாமல்தான் போராடினார்கள். பிரியங்கா சோப்ரா புகழ் மோடி சந்தித்தாரா?
கடவுளையும் கேள்வி கேட்ட மண் இது என்பதை மறந்து நீதிபதிகள் தங்களை ஆண்டவர்களாக பாவித்துக் கொள்கிறார்கள். நீதிமன்றங்களும்(!)
நீதிபதிகளும்(!) இதுவரை எதைப் பற்றியும் – அரசியல் சாசனம், சட்டங்கள் உட்பட எதைப் பற்றியும் – கவலைப் படாமல் அளித்த தீர்ப்புகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. நீட் தேர்வு விசயத்தில் இந்த உச்சா மன்றங்கள் நிகழ்த்திய அயோக்கியத்தனங்கள் எத்தனை எத்தனை.
2013 ல் அல்தாமஸ் கபீர் தலைமையிலான அமர்வு நீட் தேர்வு வேண்டாம் என தீர்ப்பளிக்கிறது. அந்த அமர்வில் இருந்த 3 நீதிபதிகளில் அனில் தவே என்பவர் மட்டும் நீட் வேண்டும் என்கிறார். ஏனைய இருவரும் நீட் தேர்வு வேண்டாம் என்கிறார்கள். இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய 2016ல் ஒரு நீதிமன்ற அமர்வு அமைக்கப்படுகிறது. 2013ல் எந்த ஒரேஒரு நீதிபதி நீட் வேண்டும் என்று தீர்ப்பு சொன்னாரோ அதே அனில் தவே தலைமையில் அந்த அமர்வு அமைக்கப்படுகிறது. இதில் எந்த விசாரனையும் நடைபெறாமலேயே மூலத் தீர்ப்பை முடக்கி வைப்பதாகவும், நீட்டை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றும் இடைக்கால தீர்ப்பளிக்கிறது அனில் தவே தலைமையிலான அமர்வு.
மதுரை உயர்நீதி மன்றத்தில் நீட் தொடர்பான வழக்கில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களை திடீரென சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தேர்வு எழுதச் சொல்வது எப்படி சரி? என்றும் ஏற்கனவே மாநில பாடத்திட்டத்தில் அவர்கள் எடுத்த மதிப்பெண்னுக்கு என்ன மதிப்பு? என்று கேள்வி எழுப்பியது. இதற்கு எதிராக சிபிஎஸ்இ தொடுத்த முறையீட்டில் இந்தக் கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்காமல் மதுரை நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்தது.
நீட்டை அமல்படுத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ யில் படித்த மாணவர் ஒருவர் தொடுத்த வழக்கில் மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் தான் பெரும்பான்மையினர் என்றாலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்களையும் கவனத்தில் கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கிய நீதி மன்றம், தீர்ப்பில் பெரும்பான்மையினர் படித்திருக்கும் மாநில பாடத்திட்டம் குறித்து எந்தக் கவனமும் கொள்ளாமல் நீட் அவசியம் யாருக்கும் எந்தச் சலுகையும் வழங்க முடியாது என்கிறது.
இப்படி எந்தச் சட்ட விதிகளையும் மரபுகளையும், வழக்கங்களையும் அடாவடியாக மீறும் அந்த உச்சா மன்றம் தான் நம்மைப் பார்த்துச் சொல்கிறது நீட்டுக்கு எதிராக போராடுவதை தடை செய்கிறோம் என்று.
அன்று சின்ன மருதுவின் திருச்சிப் பிரகடனம் சொல்கிறது, யாரெல்லாம் வெள்ளையனுக்குப் பயந்து தொண்டூளியம் செய்கிறானோ அவன் வைத்திருக்கும் மீசை என்னுடைய அடிமயிருக்குச் சமம் என்று. அதையே இன்று நாம் திருப்பிச் சொல்ல வேண்டியதிருக்கிறது.
மக்களுக்கு சேவை செய்வதை மறுத்து பெரு மருத்துவ நிறுவனங்களுக்கு தொண்டூளிய்ம் செய்வதையே தகுதி எனக் கருதும் அனைவரும் எங்கள் அடிமயிருக்குச் சமம் என்று உரக்கச் சொல்ல வேண்டியதிருக்கிறது.