கடவுள் எனும் மீப்பெரும் ஆற்றலின் இருப்புக்கான நோக்கம், மனிதனின் தினப்படி வாழ்வில் குறுக்கீடு செய்து அவனுக்கு வழிகாட்டுவது என்பதாகும். இது தான் பொதுவான, பெரும்பாலான மக்களின் கடவுள் மீதான நம்பிக்கையாக, ஆன்மீகமாக இருக்கிறது. ஆனால், இதுவல்லாத மாற்றொரு முறையில் கடவுள் நம்பிக்கையை விவரிக்கிறார் நண்பர் விவேக். இது ஒன்றும் புதிதான ஒன்றல்ல, சங்கரர் அருளிய மாயை தத்துவத்திலிருந்து கொண்டு தான் நண்பர் விவேக் உரையாடிக் கொண்டிருக்கிறார். இதற்கு எளிமையாக சங்கரர் காலத்திலேயே பதிலும் அளித்திருக்கிறார்கள்.
நண்பர் விவேக் கடவுள் பற்றி கூறும் கருத்துகளின் சாரம் என்ன? கடவுளுக்குள் அனைத்தும், அனைத்தும் அடக்கம். காணும் பொருள் எதுவாக இருந்தாலும் அது கடவுளுக்கு உள்ளேயே இருக்கிறது. கடவுளுக்கு வெளியே என்று எதுவும் இல்லை. மனிதனின் தினப்படி வாழ்வில் கடவுள் குறுக்கிடுவதில்லை, சொர்க்கம் நரகம் கடவுளின் வேலையில்லை, வணக்க வழிபாடுகள் தேவையில்லை. இவ்வாறாக கடவுளை உருவகப்படுத்துவது மதவாதிகளின் வேலை. கடவுளை பொருட்களின் உலகில் அதாவது நடப்பு உலகில் நிரூபிக்க முடியாது. கடவுளை நிரூபிக்கும் அளவுக்கு அறிவியல் முழுமையானது அல்ல. அறிவியல் குறைபாடுள்ளது. பொருட்களின் அறிவியல், ஆன்மீக அறிவியல் என்று தனித்தனியாக இருக்கிறது. பொருட்களின் அறிவியல் குழந்தை என்றால் ஆன்மீக அறிவியல் முதிர்ந்த அனுவம் மிகுந்த மனிதனைப் போன்றது. .. .. .. இவை குறித்து விவரிப்பதற்கு முன்னால் கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவு குறித்து நினைவுகூர்ந்து கொள்வது தேவையாக இருக்கிறது.
மனிதனின் ஆதி தொடக்க காலத்தில் மனிதனுக்கு கடவுள் குறித்த எந்த உணர்வும் இருந்திருக்கவில்லை என்பது ஆய்வாளர்களின் முடிவு. (இப்படிக் கூறியவுடன் நண்பர் விவேக் எந்த ஆய்வாளர்களின் முடிவு? பொருட்களின் அறிவியலை அடிப்படையாகக் கொண்டு ஆய்பவர்களின் முடிவு, ஆன்மீக ஆய்வாளர்களின் முடிவு அல்ல என குறுக்கிடலாம். மனிதனும் ஒரு பொருள் தான் எனும் அடிப்படையில் பொருட்களின் அறிவியல் அடிப்படையில் ஆராய்வதே மனிதனுக்கு பொருத்தமானது. ஏனையவற்றை பின்னர் கவனிக்கலாம்) பின் இயற்கையுடன் ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்க்கும் விதத்திலேயே கடவுள் குறித்த சிந்தனை மனிதனுக்கு ஏற்படுகிறது. இயற்கையின் புதிர்களுக்கான விடையாக கடவுள் முன்னிருத்தப்பட்ட கணத்திலிருந்தே கடவுட் சிந்தனைக்கு எதிரான சிந்தனையும் தொடங்கி விட்டது. இன்றுவரை தொடர்ந்து கொண்டும் இருக்கிறது.
மனிதனுக்கு கடவுள் ஏன் தேவைப்பட்டது என்றொரு கேள்வியை எழுப்பினால், அதற்கான பதில்; தொடக்கத்தில், இயற்கையின் புதிர்களுக்கு விடை தெரியாததால் அந்த இடத்தில் கடவுளை விடையாக கொண்டு வந்தார்கள். அதுவே பின்னர், படிப்படியாக விரிவடைந்து மனிதனின் அன்றாட வாழ்வில் குறுக்கீடு செய்து அவனை ஒழுங்குபடுத்தும் ஒன்றாக மாறியது. ஏன் கடவுள் மனிதனின் வாழ்வில் குறுக்கிட்டு வழிநடத்த வேண்டும் எனும் கேள்வி எழுந்தபோது தான் இந்த பேரண்டம் தொடங்கி மனிதன் உட்பட அனைத்தையும் படைத்து பாதுகாப்பது கடவுள் தான் எனவே மனிதனை ஒழுங்குபடுத்தும் தேவை கடவுளுக்கு இருக்கிறது, கடவுளின் கட்டுப்பாட்டுக்குள் ஒழுகும் தேவை மனிதனுக்கும் இருக்கிறது என்று விரிவடைகிறது. இது தான் கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவு.
இப்படி தொடரும் கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவில், மனிதனின் தினப்படி வாழ்வை கட்டுப்படுத்தாத கடவுள் என்ற ஒன்று இருக்க முடியுமா? முடியும் என்றால் அந்தக் கடவுளின் இருப்பில் மனிதனுக்கான தொடர்பு என்ன? அதாவது மனிதனின் வாழ்வியல் செயல் எதிலும் கடவுள் தலையீடு செய்வதில்ல என்றால் ஏன் அந்தக் கடவுள் இருக்க வேண்டும்? அந்தக் கடவுள் இருப்பதனால் மனிதனுக்கு என்ன பலன்? மனிதனையும் பேரண்டத்தையும் படைத்துவிட்டு மனிதனுடன் தொடர்பே இல்லாத ஏதோ ஓர் இடத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு கடவுளுடன் மனிதனுக்கு என்ன பிரச்சனை இருந்துவிட முடியும்? அப்படி ஒரு கடவுள் இருப்பதும் இல்லாதிருப்பதும் ஒன்று தான். ஆனால் காலம்காலமாக கடவுள் இருக்கிறதா இல்லையா எனும் விவாதம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்றால் அதன் பொருள் மனித வாழ்வில் குறுக்கீடு செய்யும் கடவுள் இருக்கிறதா இல்லையா என்பதை தீர்த்துக் கொள்ள வேண்டிய தேவை மனிதனுக்கு இருக்கிறது என்பது தான்.
ஆக, கடவுள் என்பது, மனிதனின் வாழ்வில் குறுக்கிடும் கடவுள் என்றும் மனிதனின் வாழ்வில் குறுக்கிடாத கடவுள் என்றும் இரண்டாக இருக்கிறது. குறுக்கிடும் கடவுளுடன் தான் பிரச்சனை குறுக்கிடாத கடவுளுடன் பிரச்சனை ஒன்றுமில்லை என்று ஒதுங்கி விட முடியுமா? இரண்டு காரணங்களால் அவ்வாறு ஒதுங்கிவிட முடியாது. 1. குறுக்கிடும் கடவுள் குறுக்கிடாத கடவுள் என்று இரண்டு வித கடவுள் இருக்கிறதா? இதை இருவருமே ஏற்றுக் கொள்வதில்லை. அப்படியானால் எது சரி எனும் கேள்வி எழுகிறது. 2. கடவுள் இருக்கிறதா இல்லையா எனும் விவாதத்தில் கடவுளை உறுதிப்படுத்த முடியாத ஆத்திகர்கள் கடவுளை நிருவுவதற்கு பல்வேறு நிலைகளை எடுக்கிறார்கள். அவ்வாறான பல நிலைகளில் ஒன்று தான் குறுக்கீடு செய்யாத கடவுள் என்பது. எனவே இதை அம்பலபடுத்தும் தேவை எழுகிறது.
குறுக்கீடு செய்யாத கடவுள் இருக்க முடியுமா எனும் கேள்வியை அறிவியலிலிருந்து தொடங்கலாம். அறிவியலில் பொருட்களின் அறிவியல் ஆன்மீக அறிவியல் என்று வேறுவேறான அறிவியல்கள் இருக்கின்றனவா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இருப்பது அறிவியல் மட்டும் தான். மனிதன் தன் ஐம்புலன்களின் வழியே கண்டு கொண்டதை மூளையில் சேமித்து வைத்திருந்து தேவையான போது அதன் படிப்பினைகாளிலிருந்து முன்மாதிரிகளை உருவாக்கி நடைமுறையில் செயல் படுத்தி சோதித்துப் பார்த்து முடிவுகளை வந்தடைந்தான். இது தான் அறிவியல். இது இன்று பல்வேறு துறைகளில் விரிந்து பரவி நிற்கிறது. இதில் ஆன்மீக அறிவியல் என்று தனியாக ஒன்று இல்லை. இருக்கிறது என்றால் அது என்ன என்பதை விவரிக்க வேண்டும். அறிவியல் கைக்குழந்தை ஆன்மீக அறிவியல் வளர்ந்த மனிதன் என்றெல்லாம் ஒப்பீடு செய்வது அறியாமை.
கடவுளை ஏற்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அறிவியல் குறைப்பாடுடையது என்பதிலிருந்து தான் தொடங்குகிறார்கள். ஏனென்றால் அறிவியல் மட்டுமே கடவுளின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி, இல்லாமையை போட்டுடைக்கிறது. அறிவியல் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை தட்டையாக புரிந்து கொள்வதன் விபரீதம் தான் அறிவியல் குறைபாடுடையது என்பது. அறிவியல் மாறுகிறது என்பதை பொதுவானதாக புரிந்து கொள்கிறார்கள். அறிவியல் மாறுகிறது என்பது குறிப்பானது. குறிப்பானதை பொதுவானதாக மாற்றுவதும் பொதுவானதை குறிப்பானதாக மாற்றுவதும் கள்ளத்தனம். அறிவியல் முடிவுகள் மாறுகின்றன அல்லது வளர்கின்றன என்றால் அது குறிப்பான அம்சத்தில் மாறுகிறது வளர்கிறது என்று பொருள். எடுத்துக்காட்டாக பூமியின் வடிவத்தை எடுத்துக் கொள்வோம். தொடக்கத்தில் தட்டை என்றார்கள், பின்னர் உருண்டை என்றார்கள், அதற்கும் பின்னர் துருவங்களில் தட்டையான கோள வடிவம் என்கிறார்கள். பூமியின் வடிவம் என்பதில் அறிவியல் முடிவு மாறுகிறது. அதாவது, சரியானதை நோக்கி மாறுகிறது, வளர்ச்சியடைகிறது. இதை புவியின் வடிவம் குறித்த அறிவியல் முடிவு மாறுகிறது என்று புரிந்து கொள்ள வேண்டுமா? அறிவியல் மாறுகிறது என்று புரிந்து கொள்ள வேண்டுமா? ஒரு பொருளைக் குறித்த அறிவியல் முடிவு மாறுகிறது என்றால் தவறானதில் இருந்து சரியானதை நோக்கி மாறுமே தவிர சரியானதில் இருந்து தவறானதை நோக்கி ஒருபோதும் மாறாது. இப்படி ஒரு பொருள் குறித்த அறிவியல் முடிவு மாறுவது குறித்த இன்னொரு விளக்கமும் இன்றியமையாதது. சூரியன் எனும் விண்மீனின் ஹீலியம் இருப்பு இன்னும் மூன்னூறு கோடி ஆண்டுகளில் தீர்ந்து போகும் என்பது அறிவியல் முடிவு. இந்த முன்னூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன் எனும் விண்மீன் தன்னுடைய தன்மையில் சூரியனாக இல்லாமல் வேறொன்றாக மாறிய பின் சூரியன் குறித்த அறிவியல் முடிவு மாற வேண்டுமா? அப்படியே இருக்க வேண்டுமா? மாறியே ஆக வேண்டும். அறிவியல் முடிவு மாறும். இப்பேரண்டத்தில் இருக்கும் இருக்கும் அத்தனை பொருட்களும் நிலையாக இல்லாமல் மாறிக் கொண்டே இருக்கின்றன. இப்படி மாறிக் கொண்டே இருக்கும் இப்பேரண்டத்தைப் பற்றிய அறிவியல் முடிவுகள் மாறாமல் இருக்க வேண்டும் எனக் கோருவது மடமை அல்லவா? எனவே, அறிவியல் குறைபாடு உடையது என்பவர்கள் தங்கள் குறைபாட்டை உணர்ந்து மாறிக் கொள்ள வேண்டும்.
கடவுள் குறித்து விவரிப்பவர்கள் யாராக இருந்தாலும் – குறுக்கிடும் கடவுள் குறுக்கிடாத கடவுள் என்ற பேதமின்றி – நடப்பு அறிவியல் கருவிகளால் கடவுளை அளக்க முடியாது என்றே நிலைப்படுகிறார்கள். அறிவியலால் அளக்க முடியாத கடவுளை அவர்கள் எப்படி அறிந்து கொண்டார்கள்? இதற்குத்தான் தியானம் போன்றவற்றை அறிமுகப்படுத்துகிறார்கள். தியானித்தால் கடவுளை அறிந்து கொள்ளலாம் என்கிறார்கள். தியானம் என்பது என்ன? மனதை ஒருமுகப்படுத்துவது. மனதை ஒருமுகப்படுத்தினால் மனதில் உள்ளதை அறிந்து கொள்ள முடியலாமே தவிர மனதுக்கு வெளியே உள்ளதை எப்படி அறிந்து கொள்ள முடியும்? அப்படி என்றால் கடவுள் என்பது மனதுக்குள் இருப்பது தானா? மனது என்பது ஐம்புலன்களின் வழியே வந்த அறிதலின் பாற்பட்டது தான். ஐம்புலன்களில் கடவுள் சிக்காதவரை மனிதனின் மனதுக்குள் கடவுள் வர வாய்ப்பில்லை. ஆனாலும் கடவுள் மனிதனின் மனதில் இருக்க முடியும் என்றால் அது கற்பனையாக மட்டுமே இருக்க முடியும். தியானம் உள்ளிட்டவைகள் மனிதனின் அக விருப்பம் இல்லாமல் எந்த முடிவையும் வந்தடையாது. நான் தியானம் இருக்கிறேன் என்று கொள்வோம். வாழ்நாள் முழுக்க தியானம் இருந்தாலும் என்னால் கடவுளை அறிய முடியாது. ஏனென்றால் கடவுள் இருக்கிறார் எனும் அக விருப்பம் என்னிடம் இல்லை.
சரி, கடவுள் வெளியே இல்லை உள்ளேயே தான் இருக்கிறார் என்றால், அதாவது உடல் எனும் பொருளுக்குள் தான் கடவுள் என்ற ஒன்று இருக்கிறது என்றால் அதை ஏன் கருவிகளால் அறிந்து கொள்ள முடியவில்லை? இதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தியானம் போன்றவைகளினால் அக விருப்பம் இல்லாதவர்களால் தனக்குள்ளே இருக்கும் கடவுளை தெரிந்து கொள்ள முடியாது. அதேநேரம் யாராலும் எந்தக் கருவிகளாலும் கடவுளை அறிந்து கொள்ள முடியாது. தியானம் போன்றவற்றால் கடவுளை அறிந்தவர்களும் கூட தூலமான முறையில் அறிந்தவர்களில்லர். அதாவது அக விருப்பம் சார்ந்து ஏதோ ஒரு வகையில் இருப்பதாக நம்புகிறார்களே தவிர ஆய்வுக் கண்ணோட்டத்தில் ஐயம்திரிபற அறிந்தவர்கள் இல்லர். மறுபக்கம் அறிவியல் ரீதியில் உடலுக்குள் கடவுள் இருப்பதை கண்டறிய முடியாது என்றாலும் உடலியக்கம் சாராத ஏதோ ஒன்று உடலுக்குள் இருக்கிறது என்றாவது கண்டறிய முடிந்திருக்கிறதா? அல்லது ஆன்மீக அறிவியல்(!) கொண்டு அப்படி எதையாவது கண்டறிந்துவிட முடியுமா? எதுவுமே முடியாது. இவைகளிலிருந்து நாம் வந்தடையும் முடிவு என்ன? உடலில் கடவுள் இல்லை, இருக்க முடியாது, அது சில மனிதர்களின் சிந்தனையில் கற்பனையில் மட்டுமே இருக்கிறது என்பதாகத்தானே இருக்க முடியும்.
உடலுக்குள் இல்லாத கடவுள் என்ற ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்றால் அது இந்தப் பேரண்டத்துக்குள் தான் இருந்தாக வேண்டும். இல்லை பேரண்டத்தையும் கடந்த பெரு வெளியில் இருக்கிறது என்றால், பேரண்டம் கடந்த பெருவெளி என்பது அறிவியல் ரீதியாகவே கருதுகோள் தானே தவிர அறுதியான முடிவல்ல. எனவே, இப்பேரண்டத்துக்குள் இருக்கும் ஏதோ ஒன்று என்றால் அது அறிவியல் கருவிகளில் அகப்பட்டே தீரவேண்டும். பேரண்டம் முழுவதையும் அறிவியல் உளவி விட்டதா என்றால் இல்லை என்பதே பதில். அப்படியென்றால் அறிவியல் இன்னும் ஊடுருவாத ஏதோ ஒரு பகுதியில் கடவுள் என்ற ஒன்று இருக்கக் கூடுமோ. இப்படி ஒரு வாய்ப்பை பரிசீலித்தால் அதற்கும் இருக்க முடியாது என்பதே பதிலாக கிடைக்கும். எவ்வாறென்றால், குறுக்கிடும் கடவுள் குறுக்கிடாக் கடவுள் என எந்தக் கடவுளாக இருந்தாலும் அது மனிதர்களுடன் இடையறாது தொடர்பில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. கடவுளை அது இருக்கும் இடத்தில் தான் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் இப்படி மனிதர்களை தொடர்பு கொள்ளும் வழியையாவது கண்டறிய முடியாதா? அப்படி எதையும் கண்டறிய முடியவில்லை என்பது தானே பிரச்சனை.
ஆக, கடவுளைத் தேடி பயணப்பட்டால் எந்தத் திக்கில் சென்றாலும் முட்டுச் சந்தில் தான் சிக்கிக் கொண்டு நிற்க நேர்கிறதே தவிர வழி புலனாகவில்லை. எனவே தான் கடவுள் இல்லை எனும் முடிவுக்கு வரவேண்டியதிருக்கிறது. கடவுளை ஏற்பவர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இங்கே கடவுள் ஏற்பு, கடவுள் மறுப்பு என்று இரண்டு நிலை இருக்கிறது. கடவுளை ஏற்பவர்கள் அதை வெற்று நம்பிக்கையாக ஏற்றுக் கொண்டாலும், மெய்யாகவே இருப்பதாக ஏற்றுக் கொண்டாலும் அது அவர்களைப் பொருத்தவரை பிரச்சனை ஒன்றுமில்லை. ஆனால், கடவுளை ஏற்காதவர்களுடன் விவாதித்து ஏற்கச் செய்ய வேண்டும் என்றால் ஏதாவது ஒரு வகையில் – அது எந்த வகையில் என்றாலும் – கடவுள் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதைதவிர வேறு வழியே இல்லை.
இங்கு தான் கடவுளை ஏற்பவர்களுக்கு ஒரு உளவியல் சிக்கல் வந்து விடுகிறது. ஒரு பொருளை இருப்பதாக நிரூபிக்க முடியவில்லை என்றால் அது இல்லை என்பதை ஒப்புக் கொண்டதாகவே பொருள் படும். கடவுளின் இருப்பை நிரூபிக்க இயலாது என்பதை கடவுளை ஏற்பவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். ஆனால் அது இல்லை என ஒப்புக்கொள்ள முடியுமா? முடியாது என்பதால் தான் மாயை தத்துவம் தொடங்கி ஏராளமான வழிகளில் நிரூபிக்க முடியாத வகையில் நிருவிவிடத் துடிக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறும் எந்த வழிகளையும் நுணுகி ஆராய்ந்தால் அதில் முரண்பாடுகளும் குழப்பங்களுமே மலிந்து கிடக்கின்றன. ஆகவே, கடவுள் என்ற ஒன்று இல்லை.
இனி, நண்பர் விவேக் அவர்களின் வாதங்களுக்கு நேரடியான பதில்களை பார்க்கலாம்.
\\\ஒரு பாதி பௌதீக உலகம்(பொருள் உலகம்). மற்ற பாதி அபௌதீக உலகம்(ஆவி உலகம்). ஒவ்வொரு பௌதீக அணுவுக்கும் இணையான அபௌதீக அணு உண்டு. பௌதீக அணுக்களால் ஆனது பௌதீக உலகம். அபௌதீக அணுக்களால் ஆனது அபௌதீக உலகம். பௌதீக கருவிகளைக்கொண்டு அபௌதீக உலகை கண்டுபிடிக்க முடியாது. மெய்யுணர்வின்மூலம் மட்டுமே பௌதீக உலகத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களை உணரவோ காணவோ முடியும்///
அபௌதீக உலகம் என்ற ஒன்று இருக்கிறதா? ஒவ்வொரு அணுவுக்கும் நிகராக எதிர் அணு ஒன்று இருக்கிறது என்றால், இந்த பேரண்டத்துக்கு நிகராக இன்னொரு பேரண்டம் இருக்கிறது என்று (கற்பனையாக) கொண்டால் மனிதனைப் போன்ற உயிர்களும் அங்கு இருக்குமா? இருக்கும் என்றால் அந்த மனிதர்களை கடவுள் வழிநடத்திக் கொள்ளட்டும். இந்த பேரண்டத்தில் இருக்கும் மனிதர்களுடன் கடவுளுக்கு என்ன தொடர்பு? பௌதீக கருவிகளைக் கொண்டு அபௌதீக உலகை கண்டுபிடிக்க முடியாது என்றால் அபௌதீக கருவிகளைக் கொண்டு பௌதீக உலகை எப்படி கண்டு பிடிக்க முடியும்? இது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே.
\\\பொருள் உலகம்(material world) மற்றும் ஆவி உலகம்(spirit world) என்ற இரண்டு உலகங்களும் வெறும் மாயை(illusion). சார்பு உலகம் ஒரு மாயை. சுய விழிப்புணர்வு கொண்ட ஆற்றல்(self aware energy) என்பது சுத்தமான விழிப்புணர்வு நிலை(state of pure awareness). அதிலிருந்துதான் அனைத்தும் தோன்றுகிறது. அதற்குள்தான் அனைத்தும் ஒடுங்குகிறது. பொருள் உலகம் மற்றும் ஆவி உலகம் என்ற சார்பு உலகம், சுத்தமான விழிப்புணர்வு நிலை என்ற முற்றுமுதல் உலகத்திற்குள்(absolute world) தோன்றுகிறது, பின்பு அதற்குள் ஒடுங்குகிறது. எனவே விழிப்புணர்வு கொண்ட ஆற்றல் என்பதை பௌதீகம்(physics) என்றோ அல்லது அபௌதீகம்(meta physics) என்றோ வகை படுத்த முடியாது. ஏனெனில் இந்த இரண்டு நிலைகளும் அதற்குள் அடக்கம்///
மாயை, விழிப்புணர்வு கொண்ட ஆற்றல் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. விழிப்புணர்வு கொண்ட ஆற்றல் என்றால் அது உயிரினங்கள் மட்டுமே. அந்த உயிரினங்களுக்கும் விழிப்புணர்வு என்பது மாறுபடும். மனிதன் மட்டுமே இந்த விழிப்புணர்வில் மேலோங்கி நிற்கிறான். இதற்கு அப்பாற்பட்டு விழிப்புணர்வு கொண்ட ஆற்றல் என்று எதுவுமில்லை. மாயை என்றால் நீங்களோ நானோ மாயை அல்ல. இப்பேரண்டத்தில் இருக்கும் அனைத்தும் புறநிலை யதார்த்தம். தாம் கற்பனையாக கொண்டிருக்கும் கடவுள் என்ற ஒன்று மாயையாக இருப்பதால் இருக்கும் அனைத்தையும் மாயையாக்கி விடுவது ஒன்றுதான் கடவுளை மெய்ப்பிக்கும் வழி என்பது தான்மாயை என்ற சொல்லின் பின்னால் இருக்கும் மாயாவாதம்.
\\\ஆன்மீக அறிவியலின் மூலம் பல அறிய உண்மைகளை அறியலாம். இதை ஏற்க நீங்கள் தயாரில்லை.///
அப்படியில்லை. ஆன்மீக அறிவியலின் மூலம் நீங்கள் கண்டறிந்ததாக கருதப்படும் கடவுள் என்ற ஒன்றைப் பற்றியே ஆண்டாண்டு காலமாக இங்கு விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இது அல்லாமல் நீங்கள் ஆன்மீக அறிவியல் மூலம் கண்டறிந்த அரிய உண்மைகளை பட்டியலிடுங்கள் பரிசீலிக்கலாம்.
\\\தற்காலத்திய அறிவியலே 12 பரிமாணங்கள் வரை இருக்கலாம் என்று கூறுகிறது. இந்த மூன்றாம் பரிமாணத்தில் இருந்துகொண்டு அதில் தெரியாத எதுவும் வேறு எங்கும் இருக்க முடியாது என்பது அறிவுக்கு ஏற்புடையது அல்ல///
இந்த 12 பரிமாணங்கள் குறித்த தகவலை தாருங்கள் தெரிந்து கொள்கிறேன்.
\\\நாம் பௌதீக உலகத்திலும் ஆவி உலகத்திலும் ஒரே நேரத்தில் இருக்கிறோம்!///
இந்த இடத்தில் நீங்கள் எழுதி வந்த அனைத்தும் குழப்பமாகி விட்டது. பௌதிக உலகிற்கு நிகராக அபௌதீக உலகம் இருக்கிறது. பௌதீக உலகின் கருவிகளைக் கொண்டு அபௌதீக உலகை அளக்க முடியாது என்கிறீர்கள். அதேநேரம் மனிதன் பௌதீக உலகிலும், அபௌதீக உலகிலும் ஒரே நேரத்தில் இருக்கிறான் என்கிறீர்கள். அப்படியென்றால் மனிதன் பௌதிகப் பொருளா? அபௌதீகப் பொருளா? ஒரு பொருள் பௌதீக உலகிலும், அபௌதீக உலகிலும் ஒரே நேரத்தில் இருக்க முடியும் என்றால் ஏன் பௌதீக கருவிகளா அபௌதீக உலகை அளக்க முடியாது?
\\\அணுவை பிளந்துகொண்டே போனால் இறுதியில் அது ஆற்றலாக முடியும். இது அறிவியல் கூறுவது. இதை ஏற்கிறீர்கள் தானே? இங்கு அக விருப்பம் என்ற பேச்சுக்கு இடமில்லை. அறிவியல் கூறும் ஆற்றலைத்தான் கடவுள் என்கிறேன். அதாவது, ஆற்றல் வடிவத்தையும் பொருள் வடிவத்தையும் கடவுள் என்கிறேன். ஆற்றல் இருப்பது உண்மை என்றால் கடவுள் இருப்பதும் உண்மைதான். ஏனென்றால் ஆற்றலும் கடவுள் ஒன்றே; வேறுவேறு அல்ல. பிறகு கடவுள் இருப்பை நிரூபிக்க உங்களுக்கு வேறு என்ன அறிவியல் சான்று வேண்டும்?///
அறிவியல் ஆற்றலை தான் நீங்கள் கடவுள் என்று கூறுகிறீர்கள் என்றால் கடவுளை மெய்ப்பிக்க முடியாது நிரூபிக்க முடியாது அபௌதீக உலகம் என்று ஏன் சுற்றிச் சுழல வேண்டும்? அறிவியல் கூறும் ஆற்றல் என்பது என்ன? ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு ஆற்றல் உண்டு. அந்த ஆற்றலின் மூலம் பொருள். அதாவது பொருளாக இருப்பதால் தான் ஆற்றல் வெளிப்படுகிறது. இதைத்தான் நீங்கள் கடவுள் என்று மாற்றுப் பெயர் கொடுக்கிறீர்கள் என்றால், அந்த ஆற்றல் தான் பேரண்டத்தையும் உயிரினங்களையும் படைத்தது என்பது பொய். இதை ஒப்புக் கொள்கிறீர்களா?
\\\லெமூரியா, அட்லாண்டிஸ் நாகரிகங்கள். நியாண்டர்தால் என்று அழைக்கப்படுகிற மனித இனம் ஹோமோ எரெக்டஸ் என்கிற இன்றைய மனித இனத்தைவிட பல வகையில் உயர் ஆன்மீக வளர்ச்சி பெற்று இருந்தது.///
மன்னிக்கவும் புறக்கணிக்கத்தக்க கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்கிறீர்கள்.
நண்பர் செங்கொடி,
ஆன்மீக உண்மைகளில் ஓரி சிலவற்றை உங்கள் கட்டுரைகளின் பின்னூட்ட பகுதியில் இதுவரை கூறினேன். அவற்றில் எந்த ஒன்றும் உங்களுக்கு புரியவில்லை என்பது தெரிய வருகிறது. அதன் விளைவு மேற்கண்ட உங்களின் கட்டுரை. ஆன்மீக புரிதல் உங்களுக்கு இன்னும் வரவில்லை. நீங்கள் நிறைய வளரவேண்டி இருக்கிறது. அதுவரை எது சொன்னாலும் உங்களுக்கு புரியப்போவதில்லை. எனவே மேற்கொண்டு கருத்து பரிமாற்றம் செய்வது என்பது அர்த்தமற்றது என்று எனக்கு தோன்றுகிறது. இருப்பினும் ஒரு சிலவற்றுக்கு மட்டும் பதில் அளித்து விடை பெறுகிறேன். நன்றி.
செங்கொடி : சங்கரர் அருளிய மாயை தத்துவத்திலிருந்து கொண்டு தான் நண்பர் விவேக் உரையாடிக் கொண்டிருக்கிறார். இதற்கு எளிமையாக சங்கரர் காலத்திலேயே பதிலும் அளித்திருக்கிறார்கள்.
விவேக் அத்வைதி : சங்கரரின் நூல்களை நான் படித்ததில்லை. அவர் அத்வைத தத்துவத்தை போதித்தார் என்பது மட்டும் மேம்போக்காக எனக்கு தெரியும். நான் கூறுவது அத்வைதம் என்று அழைக்கப்படுகிற கருத்துக்கள்தான். தியானம் மூலம் சங்கரர் பல உண்மைகளை கண்டிருக்கிறார் என்பது திண்ணம். சங்கரர் மட்டுமல்ல, எல்லா காலங்களிலும் பல ஆன்மீக குருமார்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். சங்கரரின் போதனைகளுக்கு மறுப்பாக என்ன பதில்அவர் காலத்தில் அளிக்கப்பட்டது என்று கூறுங்கள். அவை எப்படிப்பட்டவை என்று பார்ப்போம்.
செங்கொடி : நண்பர் விவேக் கடவுள் பற்றி கூறும் கருத்துகளின் சாரம் என்ன? கடவுளுக்குள் அனைத்தும், அனைத்தும் அடக்கம். காணும் பொருள் எதுவாக இருந்தாலும் அது கடவுளுக்கு உள்ளேயே இருக்கிறது. கடவுளுக்கு வெளியே என்று எதுவும் இல்லை. மனிதனின் தினப்படி வாழ்வில் கடவுள் குறுக்கிடுவதில்லை, சொர்க்கம் நரகம் கடவுளின் வேலையில்லை, வணக்க வழிபாடுகள் தேவையில்லை. இவ்வாறாக கடவுளை உருவகப்படுத்துவது மதவாதிகளின் வேலை.
விவேக் அத்வைதி : ஆன்மிகம் வேறு, மதம் வேறு என்று நான் பல முறை தெளிவுபடுத்தி இருக்கிறேன். இருப்பினும் இவை இரண்டும் ஒன்றுதான் என்று காண்பிக்க முயலுகிறீர்கள். நான் கூறுவதை எந்த மதமும் கூறுவதில்லை. ஆன்மீகம்தான் கூறுகிறது. சில ஆன்மீக கருத்துக்கள் சில மதங்களில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அவ்வளவுதான்.
செங்கொடி : மனிதனின் ஆதி தொடக்க காலத்தில் மனிதனுக்கு கடவுள் குறித்த எந்த உணர்வும் இருந்திருக்கவில்லை என்பது ஆய்வாளர்களின் முடிவு. (இப்படிக் கூறியவுடன் நண்பர் விவேக் எந்த ஆய்வாளர்களின் முடிவு? பொருட்களின் அறிவியலை அடிப்படையாகக் கொண்டு ஆய்பவர்களின் முடிவு, ஆன்மீக ஆய்வாளர்களின் முடிவு அல்ல என குறுக்கிடலாம்.
விவேக் அத்வைதி : சரியாக சொன்னீர்கள்! சரி. பொருள்சார்ந்த அறிவியலார்களின் முடிவுக்கே வருவோம். முதல் மனித இனம் எப்பொழுது தோன்றியது, யாரால் தோற்றுவிக்கப்பட்டது, எதற்காக உருவாக்கப்பட்டது, அந்த மனிதர்களின் அறிவு வளர்ச்சி எந்த அளவில் இருந்தது, அவர்களின் சராசரி ஆயுள் எவ்வளவு. என்பதெல்லாம் நீங்கள் கூறும் ஆய்வாளர்களுக்கு தெரியுமா? அல்லது எதனை மனித நாகரிகங்கள் நமக்கு முன்னே இருந்தன என்றாவது அவர்களுக்கு தெரியுமா?
செங்கொடி : மனிதனும் ஒரு பொருள் தான் எனும் அடிப்படையில் பொருட்களின் அறிவியல் அடிப்படையில் ஆராய்வதே மனிதனுக்கு பொருத்தமானது.
விவேக் அத்வைதி : மனிதன் மட்டுமல்ல, அனைத்துமே அடிப்படையில் ஆற்றல்தான். ஆற்றலின் அதிர்வு வேகத்தை குறைக்கும்போது அது பொருளாக வெளிப்படுகிறது. இன்னொரு வகையில் கூறுவதென்றால், குறைவான அதிர்வு வேகமுடைய ஆற்றல்தான் பொருள்.
செங்கொடி : பின் இயற்கையுடன் ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்க்கும் விதத்திலேயே கடவுள் குறித்த சிந்தனை மனிதனுக்கு ஏற்படுகிறது.
விவேக் அத்வைதி : இது கடவுளின் இருப்பை மறுக்க நினைப்பவர்களின் யூகம்.
செங்கொடி : மனிதனுக்கு கடவுள் ஏன் தேவைப்பட்டது என்றொரு கேள்வியை எழுப்பினால், அதற்கான பதில்; தொடக்கத்தில், இயற்கையின் புதிர்களுக்கு விடை தெரியாததால் அந்த இடத்தில் கடவுளை விடையாக கொண்டு வந்தார்கள். அதுவே பின்னர், படிப்படியாக விரிவடைந்து மனிதனின் அன்றாட வாழ்வில் குறுக்கீடு செய்து அவனை ஒழுங்குபடுத்தும் ஒன்றாக மாறியது.
விவேக் அத்வைதி : இதுவும் கடவுளின் இருப்பை மறுக்க நினைப்பவர்களின் யூகம்.
செங்கொடி : ஆனால், கடவுளை ஏற்காதவர்களுடன் விவாதித்து ஏற்கச் செய்ய வேண்டும் என்றால் ஏதாவது ஒரு வகையில் – அது எந்த வகையில் என்றாலும் – கடவுள் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதைதவிர வேறு வழியே இல்லை.
விவேக் அத்வைதி : விவாதம் தேவை அற்றது என்பதுதான் ஆன்மிகம். ஆன்மீக வாதிகள் போதனை செய்வார்கள். மற்றவர்களை கட்டாய படுத்தமாட்டார்கள். விவாதம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் கருத்து பரிமாற்றம் செய்யலாம். அதைத்தான் நாம் இங்கு செய்துகொண்டிருக்கிறோம். உண்மையான ஆன்மிகம் ஆற்றல்தான் கடவுள் என்கிறது. ஆற்றல் இருக்கிறது என்பதை அனைவரும் ஏற்கிறார்கள் தானே?
செங்கொடி : தியானம் உள்ளிட்டவைகள் மனிதனின் அக விருப்பம் இல்லாமல் எந்த முடிவையும் வந்தடையாது. நான் தியானம் இருக்கிறேன் என்று கொள்வோம். வாழ்நாள் முழுக்க தியானம் இருந்தாலும் என்னால் கடவுளை அறிய முடியாது. ஏனென்றால் கடவுள் இருக்கிறார் எனும் அக விருப்பம் என்னிடம் இல்லை.
விவேக் அத்வைதி : சரியான முறையில் தொடர்ந்து தியானம் செய்து பாருங்கள்.
நண்பர் விவேக்,
கடவுள் எனும் பொருளில் செய்யப்படும் விவாதங்கள் அனைத்தும் இப்படியான உள்ளீடற்ற விதங்களில் சென்று சேர்வது வழமையானது தான். நிச்சயமாக நீங்கள் கூறும் கருத்துகளை புரிந்து கொள்ளாமலோ, புரிந்து கொள்ள மறுத்தோ என்னுடைய கருத்தை இங்கு வைக்கவில்லை. உங்களுக்கும் அதன் மூலம் வாசகர்களுக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். என்னுடைய கருத்தை நானும், உங்களுடைய கருத்தை நீங்களும் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருப்பதால் பயன் ஏற்படப் போவதில்லை. மாறாக என்னுடைய கேள்விகளுக்கு நீங்களும், உங்களுடைய கேள்விகளும் நானும் பதில் கூறுவதில் தான் இந்த விவாதத்தின் பயன் இருக்கும். அதன் மூலம் தான் தெளிவடைய முடியும். உங்களுக்கு புரிய வைத்துவிட முடியும் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதேபோல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள். விவாதம் செய்வது ஒன்றும் தவறானதல்ல. தேவைப்பட்டால் இந்த விவாதத்தின் வடிவத்தை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம். கட்டுரைகளாக எழுதாமல் ஒவ்வொரு கேள்வியாக எடுத்துக் கொண்டு பதில் தேடலாம். என்ன சொல்கிறீர்கள். உங்கள் பதிலின் பிறகு அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறேன்.
நண்பர் செங்கொடி,
இந்த தளத்தில் கேள்வி-பதில் வடிவத்தில் கடவுள் குறித்த நம்முடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ளலாம். அதற்கான ஏற்பாட்டை செய்யுங்கள். நன்றி.
நண்பர் விவேக்,
விவாதம் பகுதி தொடங்கப்பட்டு விட்டது. இங்கு சென்று உங்கள் பதிவுகளை தொடங்குங்கள்,
https://senkodi.wordpress.com/argue-10-vivek-senkodi/