எகானமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி எனும் ஆங்கில இதழ் தன்னுடைய இணைய தளத்தில் தற்போது தமிழிலும் கட்டுரைகளை மொழிபெயர்த்துத் தருகிறது. மார்க்சிய சொல்லாடல்களை தாங்கி ஏராளமான கட்டுரைகளைத் தந்திருக்கிறது என்றாலும், இது மார்க்சிய இதழல்ல. இந்தக் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் ஆய்வுரையும், அதன் புள்ளி விவரங்களும் முதலாளித்துவ விழுமியங்களை தாங்கிக் கொண்டிருப்பவை தான். அந்த ஆய்வுரையை எழுதியவர்களுக்கும், அதை கட்டுரையாக எழுதிய இ.பி.டபிள்யு இதழுக்கும் ஏதேனும் உள்நோக்கம் இருந்திருக்கக் கூடும். இவை எல்லாவற்றையும் மீறி இந்தக் கட்டுரை பேசும் உண்மை அறிய வேண்டியது மட்டுமல்ல மக்களின் எதிர்வினைகளையும் கோரி நிற்கிறது.
****************************************
இந்திய முதலாளித்துவத்தில் நிலவும் ராட்சஸ அளவிலான சமத்துவமின்மை அனைவருக்கும் எளிதில் புலப்படும் விஷயம்தான் என்றாலும் இருத்தியோராம் நூற்றாண்டில் மூலதனம் என்ற புத்தகத்தை எழுதிய புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கெட்டியும் அவருடன் பணிபுரியும் பாரீஸ் பொருளாதாரப் பள்ளியின் (பாரீஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்) வோர்ல்ட் இனீக்குவாலிட்டி லேஃபை சேர்ந்த லூகாஸ் சான்சலும் வருமானத்தைப் பொருத்தவரை இந்த சமத்துவமின்மை தொடர்பான புள்ளிவிவரங்களை இப்போது தந்துள்ளனர். ‘‘இந்திய வருமான சமத்துவமின்மை, 1922&2014’’ என்ற இவர்களது ஆய்வுக் கட்டுரையின் உப தலைப்பு ‘‘பிரிட்டிஷ் ராஜ்யத்திலிருந்து கோட்டீஸ்வரர்களின் ராஜ்யத்திற்கு’’ கோபத்தை தூண்டக் கூடியதாக இருக்கிறது. இது இத்தகைய விஷயங்களில் இந்தியப் பொருளாதார நிபுணர்களை அவர்களுக்கிருக்கும் மதிமயக்கத்திலிருந்து எழுப்புவதாகவும் பத்திரிகையாளர்களை உரத்து சிந்திக்கத் தூண்டுவதாகவும் இருக்கிறது.
சான்சல்&பிக்ளீமீட்டியின் ஆய்வுக் கட்டுரையின்படி கடந்த முப்பது ஆண்டுகளில் தேசிய வருமானத்தில் உச்சத்தில் இருக்கும் 1% பேரின் வருமானம் உச்சபட்சமாக உயர்ந்திருக்கும் நாடாக இந்தியா உருவாகியிருக்கிறது, அதாவது 1982ல் 6.2%ஆக இருந்தது 2013&2014ல் 21.7%ஆக உயர்ந்திருக்கிறது. சொல்லப்போனால் 1922ல் வருமான வரி நிர்ணயிக்கப்பட்டதிலிருந்து இது வரை அதிகரித்திருப்பதில் ஆக அதிகபட்ச உயர்வு 21.7%. 1939&40ல் தேசிய வருமானத்தில் உச்சத்திலிருக்கும் 1%த்தினரின் பங்கு 20.7%ஆக இருந்த பிரிட்டிஷ் அரசின் சாதனையை முறியடித்திருக்கிறது.
மிக மோசமான, அதிர்ச்சி தரக்கூடிய இந்தியாவின் சமத்துவமற்ற வளர்ச்சியில் அழுத்தம் தந்து சுட்டிக்காட்டப்பட வேண்டிய முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. 1980&2014 காலகட்டத்தில் அடிமட்டத்திலிருக்கும் 50% பேரின் (20 வயதிற்கு மேற்பட்டவர்கள்) வருமானம் 89% உயர்ந்தது, இடைநிலையில் இருக்கும் 40% பேரின் (நடுவன் நிலைக்கு மேலேயும் உச்சத்திலிருக்கும் 10% பேருக்கு கீழேயும் இருப்பவர்கள்) வருமானம் 93%மும், உச்சத்திலிருக்கும் முதல் 10%, 1%, 0.1%, 0.01%, 0.001% பேர்களின் வருமானங்கள் முறையே 395%, 750%, 1138%, 1834%, 2726% ஆக உயர்ந்திருக்கிறது. உச்சத்திலிருக்கும் 1% பேரின் வருமான வளர்ச்சிக்கும் (750% வளர்ச்சி) ஒட்டுமொத்த மக்கள்தொகையில் வயதுவந்தோர் அனைவரின் வருமான வளர்ச்சிக்கும் (187%) இடையிலான இடைவெளி இந்தியாவில்தான் அதிகபட்சம். 1980&2014 காலகட்டத்தில் சீனாவில் அடிமட்டத்திலிருக்கும் 50% பேரின் வருமானம் 312% ஆக வளர்ச்சியடைந்த நேரத்தில் இந்தியாவில் அது 89%ஆக இருக்கிறது. இடைநிலையில் உள்ள 40% பேரின் வருமான வளர்ச்சி சீனாவில் 615%ஆகவும் இந்தியாவில் அது வெறும் 93%ஆகவும் இருக்கிறது. அதி உச்சத்தில் (0.001% பேர்) இருப்பவர்களின் வருமான உயர்வு இந்தியாவில் 2726%ஆக இருக்கையில் சீனாவில் அது சற்றுக் குறைவாக 2546%ஆக இருக்கிறது.
கடந்த முப்பது ஆண்டுகளில் சீனாவிலும் இந்தியாவிலும் சமத்துவமற்ற வளர்ச்சி மிக மோசமாக இருந்திருக்கிறது. ஆனால் சீனா கருத்துச் சுதந்திரத்திற்கு வாய்ப்பளிக்காத காரணத்தால் அதுவொரு ஜனநாயக நாடு இல்லையென்றாலும் 1980&2014 காலகட்டத்தில் இந்தியாவோடு ஒப்பிடுகிற போது சமத்துவமற்ற வளர்ச்சி அங்கு குறைவு. அதன் மக்கள்தொகையில் அடியிலிருக்கும் 90% பேர் தேசிய வருமான வளர்ச்சியில் 56%த்தை கைப்பற்றியுள்ள நிலையில் இந்தியாவின் அதே 90% பேர் பெற்றிருப்பது 34% மட்டுமே. இந்தக் காலகட்டத்தில் மொத்த தேசிய வருமானத்தில் இந்தியாவில் இடைநிலையில் உள்ள 40% பேர் மிகக் குறைவாகவே (சீனா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளை ஒப்பிடுகிற போது) பலனடைந்துள்ளனர். இந்தியாவின் நடுத்தர வர்க்கமல்ல (நடுவிலுள்ள 40%) மாறாக உச்சத்திலிருக்கும் 10% பேர்தான் (2014ல் 8 கோடிப் பேர்) & ‘‘ஒளிரும் இந்தியா’’ & கடந்த முப்பது ஆண்டுகளில் தேசிய வருமான வளர்ச்சியில் (அந்த வளர்ச்சியில் இவர்கள் பெற்றது 66%) மிக அதிகமாகப் பலனடைந்தவர்கள்.
இந்தியா ‘‘ஒளிர்கிறது’’ என்பது பெரும்பாலும் பணக்காரர்கள் விஷயத்திலேயே உண்மை என்பதை சான்சல்&பிக்கெட்டி ஆய்வுக் கட்டுரையின் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் வருமான சமத்துவமின்மையை விளக்குவதில் இந்தக் கட்டுரை அனுபவப்பூர்வமாக தெரியவரும் விஷயங்களுக்கு மேலதிகமாக செல்லவில்லை. புள்ளிவிவரங்கள் எல்லா விவரங்களையும் சொல்லிவிடுவதில்லை. அவற்றை புரிந்துகொள்ள கோட்பாட்டின் துணை அவசியம். மேலும், இந்த விஷயத்தில் புள்ளிவிவரங்கள் பெரும்பாலும் வருமானவரி செலுத்தியவர்கள் பற்றிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஒருவர் சந்தேகப்படுவதைப் போலவே இவை பெரும்பாலும் பொய்யானவை. கார்ப்போரேட் கம்பெனிகளை கட்டுப்படுத்தும் பெரும் பணக்காரர்கள் விஷயத்தில் அவர்களது தனிப்பட்ட வருமானத்திற்கும் அவர்கள் கட்டுப்படுத்தும் நிறுவனங்களின் வருமானத்திற்கும் இடையிலான வேறுபாடு என்பது குறைந்தபட்சம் ஓரளவேனும் செயற்கையானது. உதாரணமாக, அவர்கள் அனுபவிக்கும் பல விஷயங்களின் செலவுகள், அதிலும் தனிப்பட்ட செலவுகள் நிறுவனத்தின் செலவாக காட்டப்படும். ‘‘பணக்காரர்களின் வரி ஏய்ப்பு … இந்தியப் பொருளாதார சூழலின் தொடர்ந்து நிலவும் அம்சமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்’’ என்று தலைசிறந்த பொருளாதார நிபுணர் டி ஆர் காட்கில் எழுதியது (பசிபிக் அஃபர்ஸ், ஜூன் 1949, ப. 122) இப்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள 1922&2014 காலகட்டம் முழுவதற்கும் பொருந்தும். இந்த வெளிச்சத்தில் பார்க்கும் போது இப்போது யதார்த்தத்தில் இருக்கும் உண்மையான சமத்துவமின்மை சான்சல்&பிக்கெட்டி மதிப்பிடும் வருமான சமத்துவமின்மையை விட மிக மோசமாக இருக்கும் என்று சொல்லலாம்.
உச்சத்திலிருக்கும் 10% பேர் அதிலும் குறிப்பாக 1% பேரின் வருமானது வர்த்தக லாபத்திலிருந்து பெறப்படுவது, பங்குசந்தை மற்றும் கடன் பத்திரங்களிலிருந்து கிடைக்கும் டிவிடென்ட் மற்றும் வட்டியிலிருந்து பெறப்படுவது, நிலம் மற்றும் கட்டிடங்களிலிருந்து வாடகையாக பெறப்படுவது, தாங்கள் கட்டுப்படுத்தும் வர்த்தக நிறுவனங்களிலிருந்து சம்பளமாக, போனஸாக பெறப்படுவது, இவற்றில் சில சொத்துக்களிலிருந்து பெறப்படும் வருமானம், வேலை செய்வதிலிருது பெறப்படும் வருமானம் அல்ல. மேலும் கடந்த முப்பது ஆண்டுகளாக உழைப்பிலிருந்து கிடைக்கும் உண்மையாக கூலி குறைந்திருக்கக்கூடும். இதன் காரணமாக சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் அளவு அதிகரித்திருக்கும். சொத்து வருமான விஷயத்தில் கூட ஒரு சில ஏகபோக நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை இல்லாததால் லாபங்கள் சிறு வர்த்தக நிறுவனங்களுக்கு செல்லாமல் ஒரு சில பெரு முதலாளிகளில் கைகளில் குவிகிறது.
விலை குறைவாக மதிப்பிடப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துக்கள், கனிமங்கள் மற்றும் காட்டு வளங்கள், தொலைபேசித் துறையில் ஸ்பெக்டரம் அலைவரிசை ஒதுக்கீடு ஆகியவை பெரும் வர்த்தக நிறுவங்களின் கைகளுக்குச் செல்வதை மறந்துவிடக் கூடாது. இதிலிருந்து கிடைக்கும் சித்திரம் என்னவெனில் கார்ப்போரேட் நிறுவனங்களால் வழிநடத்தப்படும் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி நிதி முதலைகளால் ஆளப்படுகிறது. தலைசிறந்த பொருளாதார நிபுணர் அமித் பாதூரி கூறுவதைப் போல சிறுதொழில் உற்பத்தியில் பத்து பேர் வேலையிழந்து ஐந்து பேருக்கு கார்ப்போரேட் நிறுவனங்களில் வேலை கிடைக்குமெனில் உற்பத்தியின் அளவு பாதிக்காது என்பதால் பாதி பேர் வேலையிழக்கிறார்கள் ஆனால் உற்பத்தி இரு மடங்காகிறது. இத்தகைய கார்ப்போரேட் முதலீட்டை ஊக்குவிக்க நிலம் உட்பட இயற்கை வளங்கள் கார்ப்போரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு தரப்படுகின்றன. மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் சொத்துக்களை பெறுவதற்கு நன்றிக்கடனாக இந்த கார்ப்போரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு பெரும் நிதியை நன்கொடையாக வழங்குகின்றன. இந்த நிலையில் நன்கொடை கிடைக்கப்பெறாத கட்சிகளுக்கு, நபர்களுக்கு தேர்தலை சந்திப்பது பெரும் கடினமாகிவிடுகிறது. கார்ப்போரேட்டுகளால் வழிநடத்தப்படும் வேலைவாய்ப்பில்லாத வளர்ச்சியும் கார்ப்போரேட் நிறுவனங்களால் நடத்தப்படும் ஜனநாயகமும் ஆட்சி செய்கிறது (“On Democracy, Corporations and Inequality,” EPW, 26 March 2016″).
காலனிய ஆதிக்கத்தின் நீண்ட கால, சிதைவுற்ற ஆட்சி செயல்பாட்டின் விளைவாக 19ஆம் நூற்றாண்டின் கடைசி இருபத்தியைந்து ஆண்டுகள் மற்றும் 20ஆம் நூற்றாண்டின் முதல் ஐம்பது ஆண்டுகளில் (இந்தக் காலகட்டத்தில் உண்மையான தனிநபர் வருமானம் குறைந்ததுடன் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பஞ்சத்தின் விளைவாக லட்சக்கணக்கானவர்கள் மாண்டுபோக பண முதலைகள் கொழித்தன.) உருவான இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் இன்றைய ஆட்சியில் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்ததை விட சமத்துவமின்மை அதிகரித்திருப்பது சோகமானது. அந்தக் காலத்தில் காலனியாதிக்கத்தின் கொடூரம், தங்களது இன உயர்வு குறித்த அதன் ஆபத்தான சித்தாந்தம் இருந்தது எனில் இப்போது இந்திய வகைப்பட்ட நாசிசமான இந்துத்துவாவின் அரை பாசிசம் மற்றும் அதன் சித்தாந்தத்தின் நாசகரமாக விளைவுகளை காண்கிறோம். இந்துத்துவா தனது கலாச்சார பழைமைவாதத்துடன் தேர்தல் அரசியலையும் சட்டத்திற்கு புறம்பான வன்முறையையும் கையாள்கிறது. மேலும், சான்சல்&பிக்கெட்டி ஆய்வுக் கட்டுரை தெளிவாக காட்டியிருக்கும் சமத்துவமற்ற வருமானத்திற்கு வழிவகுக்கும் சமத்துவமற்ற வளர்ச்சிக்கு எதிராக இருப்பதாக தான் காணும் அனைத்தையும் இந்த அரசியல் சக்தி நொறுக்குவதில் உறுதியாக இருக்கிறது.
முதற்பதிவு: இ.பி.டபிள்யு