உலகம் முழுவதும் மார்ச் 8 ம் நாள் உழைக்கும் பெண்கள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதிலும் இது போல் பல நாட்கள் பல்வேறு சிறப்புகளாக கூறப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு நாளாக கடந்து போக முடியாத நாள் இது. இன்றில் கொண்டாடப்படுவது போல் கோலப் போட்டியாகவோ, பூனை நடை அழகிப் போட்டியாகவோ, சமையல் போட்டியாகவோ, பெண்களுக்கு மட்டும் என்று அரங்குக்குள் ஆட்டம், பாட்டு என கேளிக்கை கொண்டாட்டமாகவோ முடித்துவிட முடியாத, முடித்து விடக் கூடாத ஒரு நாள் இன்று. ஏனென்றால் இதற்கென்று ஒரு வரலாறு உண்டு.
இன்று பெண்களின் நிலை ஆண்களுக்கு நிகராக கருதப்படுவதில்லை. ஆனால் பெண்ணே நீண்ட நெடுங்காலம் இவ்வுலகை தலைமை தாங்கி வழிநடத்தினாள் என்பது நாம் அறியாத வரலாறு. புவியில் ஹோமோஎரக்டஸ் எனும் நிமிர்ந்த மனித இனம் தோன்றிய பிறகும் தீயின் பயனை அறிதல், ஈமச்சடங்கு எனும் இரண்டு பண்புகளை அறிந்த பிறகே மனிதன் எனும் வகைக்குள் கொண்டு வருகிறார்கள் வரலாற்றாய்வாளர்கள். அந்த வகையில் மனிதன் தோன்றி சற்றேறக் குறைய மூன்று லட்சம் ஆண்டுகள் ஆகின்றன. வில் அம்பைக் கண்டுபிடித்து வேட்டையில் உபரியை அடைந்த பிறகு வேலைப் பிரிவினை, வர்க்கப் பிரிவினை தோன்றுகிறது. இது நடந்தது இன்றைக்கு பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால். இதன் பிறகே சமூகத்துக்கு ஆண் தலைமை ஏற்கத் தொடங்குகிறான். அதுவரை பெண்ணே உலகை தலைமை தாங்கி நடத்தினாள். அதாவது இரண்டு லட்சத்து எண்பத்தைந்தாயிரம் ஆண்டுகள் உலகை வழிநடத்தியவள் பெண். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மருத்துவம், கட்டிடக் கலை என அனைத்தையும் கண்டுபிடித்து உலகிற்கு அளித்தவள் பெண்.
அந்தப் பெண்கள் தான் இன்று அடிமை போல் நடத்தப்படுகிறாள். வெறுமனே பிள்ளை பெற்றுத் தரும் இயந்திரம், சமையல், வீட்டு பராமரிப்பு என்று மட்டுமே இயங்கும் அடிமை. அவளுக்கென்று எந்த உரிமையும் இல்லை. குடும்பத்தில் கூட அவள் தனிப்பட்டு எந்த முடிவையும் எடுத்து நடைமுறைப் படுத்த முடியாது. ஆணாதிக்க நுகத் தடியில் மாட்டிக் கொண்ட ஒரு விலங்கைப் போலவே அவள் உழல்கிறாள். கணவன் இறந்துவிட்டால் வாழவே உரிமையில்லை என்று உடன்கட்டை ஏறச் சொன்னது பார்ப்பனியப் பண்பாடு. மறுமணம் மறுத்து பாலியல் வடிகாலாய் பொட்டுக்கட்டச் சொன்னது பார்ப்பனியப் பண்பாடு. தந்தை, கணவன், மகன் என ஆணின் துணையுறுதலே பெண்ணின் அறம் என்றார்கள். உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு என்று அழகைக் கூட ஆணே தீர்மானித்தான். இப்படி எல்லாவற்றிலும் பெண்ணை அடக்கி ஒடுக்கி அழுத்தி வைத்து விட்டு பெண் இயல்பாகவே பலவீனமானவள் என்று மதம் பேசினான்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலாளித்துவம் பெண்ணை விடுவிக்கிறோம் என்றது. வட்டாடையை கழற்றி வீசுவதே பெண்னியம் எனப் பிதற்றியது. பொருளாதார விடுதலையே பெண் விடுதலை என்று தத்துவம் பேசியது. நடந்தது என்ன? சம வேலைக்கு சம ஊதியம் தராமல், குறைந்த கூலிக்கு பெண்ணின் உழைப்பைச் சுரண்டவே தத்துவம் பேசியது வெளிப்படையானது. மறுபக்கம், இந்த பொருளாதாரச் சுதந்திரமே பெண்ணுக்கு இரட்டைச் சுமையாகியது. அலுவலகத்தில், தொழிற்சாலையில், கடைகளில் குறைந்த கூலிக்கு அதிக வேலை. அது முடிந்து வீட்டுக்கு வந்தால் வழக்கம் போல சமையல் குடும்ப பராமரிப்பு என்று இடுப்பு முறியும். இப்படி வேலை பார்த்தாலும் அதிலிருந்து ஒரு காசைக் கூட அவளால் சுயமாக செலவு செய்து விட முடியாது.
ஆணின் பலதார வேட்கையிலிருந்து தன்னை காத்துக் கொள்ளவே காதல் எனும் அருமருந்தை கண்டுபிடித்தாள் பெண். ஆனால் அதன் பெயரிலேயே இன்று பெண்கள் வேட்டையாடப்படுகின்றனர். பாலியல் வன்முறைச் செய்தியில்லாத ஒரு நாளும் விடியவில்லை. பெண் நீதிபதியைக் கூட குத்துப் பாட்டுக்கு ஆடச் செய்த செய்தியும் கடந்து சென்றது. நுகர்வுக் கலாச்சார வெறியில் பெண்ணே நுகர் பொருளானாள்.
அனைவருக்கும் பொது என்று எதுவும் இல்லை. அதைப் பேணிக் காக்க வேண்டிய தேவை இல்லை. தன்னைத் தவிர ஏனைய அனைத்தும் நுகர்வுக்காகவே. நுகர்வே அனைத்தையும் தீர்மானிக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு ஒரு சமூகம் இயங்கினால், அது எவ்வளவு சீர்கெட்டு இருக்கும் என்பதற்கு நடப்பு உலகமே எடுத்துக் காட்டு. புவி தோன்றிய காலம் தொட்டு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்புவரை பாதுகாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த அத்தனையும் இன்று அழிவுக்கு உள்ளாகி நிற்கிறது. நீர், நிலம், காற்று, வான்வெளி, கனிம வளங்கள் என்று எதுவும் தப்பவில்லை. எல்லாவற்றையும் விட தனிச்சிறப்பாய் இவைகளோடு இயைந்து வாழ்ந்த மக்களும் அழிவுக்கு உள்ளாகி நிற்கிறார்கள்.
இவைகளைச் செய்தது யார்? எது அனைவரையும் சமமாக நடத்தும் என நாம் நம்பினோமோ, எது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என நாம் நம்பினோமோ, எது நீதியாய், நேர்மையாய் நடந்து கொள்ளும் என்று நம்பினோமோ அந்த அரசின் அனுமதியோடு தான் இவை அனைத்தும் நடந்தன. தெளிவாகச் சொன்னால் இவை அனைத்தும் நடக்க வேண்டும் என்பதற்காகவே அரசுகள் இருந்தன.
எப்படி பார்ப்பனியம் உழைக்கும் மக்களை இழிவுபடுத்தி ஒதுக்கி வைத்ததோ, அதே போன்று தான் ஆணாதிக்கம் சரிபாதி மக்கட் தொகையினராகிய பெண்களை இழிவுபடுத்தி அடக்கி வைத்தது. ஆணாதிக்கம் தான் இங்கு சமூகமாக, கலையாக, கல்வியாக, கலவியாக, சமூகத்தில் எல்லாமுமாக இருந்தது, இருக்கிறது. இதை தகர்க்காமல், தகர்க்கும் சிந்தனை முறை இல்லாமல் பெண் விடுதலை அடைவது என்பது கனவு தான். பெண் விடுதலை என்பது குறியீடு. சமூக விடுதலையின் குறியீடு.
உற்பத்தியிலிருந்து என்று பெண் விலக்கி வைக்கப்பட்டாளோ அன்றுலிருந்து தான் பெண்ணின் மீதான அடக்குமுறைகள் தொடங்குகின்றன. எனவே, மீண்டும் பெண்கள் உற்பத்தியில் ஆணுக்கு நிகராக ஈடுபடுத்தப்பட வேண்டும். ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையில் அது பெண்ணுக்கு இரட்டைச் சுமையாக அல்லவா இருக்கும்? இதற்கான விடை சோசலிச சமூகத்தில் தான் கிடைக்கிறது.
சமையலறையிலிருந்து பெண்கள் விடுதலை அடைவது என்பது பெண் விடுதலைக்கு அத்தனை இன்றியமையாதது. சமையலறையும், குழந்தை வளப்பும், வீட்டு பராமரிப்பும் பெண்ணை அழுத்திக் கொண்டிருக்கும் பாறைகள். இவைகளை அகற்றும் சிந்தனையும், நடைமுறையும் சோசலிசத்தில் மட்டுமே இருக்கிறது. இயற்கை வளங்களை காப்பதில் தொடங்கி, மக்களை மகிழ்வாக வாழ வைப்பது, நிர்வாகச் செலவுகளைக் குறைத்து மக்கள் அனைவரையுமே அரசுப் பணியாளராக மாற்றுவது என்பது சோசலிசத்தால் மட்டுமே சாத்தியம்.
இந்த சாத்தியத்தை நோக்கித் தான் 1908ம் ஆண்டு அமெரிக்காவில் பெண்கள் ஒன்று திரண்டு போராடினார்கள். 17 பெண்களை இரத்தில் நனைத்து அந்த போராட்டம் முன்னேறியது. அதைத்தான் பெண்கள் தினமாக கடைப்பிடிக்கிறோம். அந்த உழைக்கும் பெண்களின் போராட்ட நாளை தொலைக் காட்சிப் பெட்டியில் ஒரு மொக்கைத் திரைப்படத்தைப் பார்த்தோ, ஏதோ ஒரு சந்தை இழந்த நடிகையின் உளரல்களை செவ்வி என்ற பெயரில் கேட்டு பொழுது போக்கியோ இந்த உணர்வேற்றும் போராட்ட நாளை கடந்து போகலாமா?
One thought on “மார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது”