புல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்

jawans_3_08259

கடந்த 14ம் தேதி காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபூரா எனும் இடத்தில் இராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இப்படி ஒரு செய்தி வந்த உடனேயே இந்தச் செயலை கண்டிக்க வேண்டும் என்பது ஒரு மீப்பெரும் தார்மீகக் கடமையாக பொதுத் தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைவர் மீதும் சுமத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தேச பக்தி ஆறாக பெருக்கெடுத்து ஓட வேண்டும் என எதிர்பார்க்கப் படுகிறது. அவ்வாறு இல்லாவிட்டால் குடியுரிமையே சோதனைக்கு உள்ளாக்கப்படும் என்பதான ஒரு சூழல் இங்கு வலிந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை எப்படி புரிந்து கொள்வது?

ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த யாரேனும் குற்றங்களில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பொதுத்தளத்தில் வினையாற்றும் அனைவரும் அதனை கண்டித்தே ஆகவேண்டும் எனும் பொது விதி இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த விதி பெரும்பான்மை இனத்தவருக்கு பொருந்தாது. இது அந்த சிறுபான்மை இனத்தவர்கள் இரண்டாம்தர குடிமக்களாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான அடையளம். இதே அடிப்படையில் தான் இராணுவத்தினர் மீதான தாக்குதலைக் கண்டிக்காவிட்டால் தம்முடைய தேசபக்திக்கு இழுக்கு வந்துவிடுமோ என அச்சப்பட நேரிடுகிறது.

நாடு என்றால், அந்த நாட்டின் குடிமக்கள் என்றால், அந்த நாட்டின் அத்தனை செயல்பாடுக்ளுக்கும் ஆதரவளித்தே ஆக வேண்டும் எனும் கட்டாயம் ஒன்றும் கிடையாது. அப்படி ஆதரவளிக்காமல் இருப்பது அல்லது எதிர்ப்பை தெரிவிப்பது அவரின் நாட்டுப் பற்றை குறைவுபடுத்தவும் செய்யாது.

இந்த அடிப்படையில் இருந்து காஷ்மீரில் நடத்தப்பட்ட இராணுவத்தின் மீதான தாக்குதலைப் பார்த்தால், அதில் பல கேள்விகள் எழுகின்றன. நாட்டுப் பற்றையும் இராணுவத்தையும் இணைத்துக் கும்மியடிப்பவர்கள் இந்தக் கேள்விகளுக்கு பதில் கூறியாக வேண்டும்.

நாடு என்பதன் பொருள் அதன் புவியியல் எல்லைகள் அல்ல. அனைத்து விதத்திலும் அந்த எல்லைக்குட்பட்ட மக்களைக் குறிப்பதே நாடு எனும் சொல்லின் பொருள். இதனடிப்படையில் இராணுவம் என்பது நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கானது. ஆனால் இலங்கைக் கடற்படை இதுவரை 600 க்கும் மேற்பட்ட மீனவர்களை கொன்றிருக்கிறது. இதற்கு எதிராக இந்திய இராணுவம் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதில்லை. ஓக்ஹி புயல் தாக்கிய போது இந்திய இராணுவம் துரிதமாக செயல்பட்டிருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும். ஆனால் வேடிக்கை பார்த்தது. இது போன்ற இன்னும் பல எடுத்துக் காட்டுகளைக் கூற முடியும். இது போன்ற நிகழ்வுகளில் இராணுவம் ஏன் தன் சொந்த மக்களை பாதுகாக்கத் தவறியது? ஏனென்றால் அது அரசின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டது.

இதை மைய, மாநில அரசுகளின் உரிமை குறித்த பிரச்சனையாகவோ, தமிழகம் பாதிக்கப்படுகிறது என தேசிய இனப் பிரச்சனையாகவோ, பாஜக, காங்கிரஸ் அரசாங்கம் என ஓட்டுக் கட்சிகளின் பிரச்சனையாகவோ கூறவில்லை. மாறாக, நிலையான நிர்வாக ரீதியிலான இந்திய அரசு என்ன முடிவெடுக்கிறதோ அதனை நிறைவேற்றும் பொருட்டே இராணுவம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மக்கள், மக்களுக்கான பிரச்சனை எனும் அடிப்படையில் இராணுவம் ஒரு போதும் செயல்பட முடியாது. இப்படிப் பாருங்களேன், 1947 க்கு முன்னரும் இந்திய இராணுவம் இருந்தது. பெரும்பாலான மக்கள் வீதியில் இறங்கி அப்போதைய அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தார்கள். இந்த சூழலில் இராணுவம் செய்தது என்ன? மக்களுக்கு துணையாக நின்று போராடியதா? அல்லது,  மக்களை சுட்டுக் கொன்றதா? அதே இராணுவம் தானே இன்றும் இருக்கிறது. தூத்துக்குடியை எடுத்துக் கொள்வோம். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். லட்சக் கணக்கான மக்கள் திரண்டு ஸ்டெர்லைட் ஆலை இருக்கக் கூடாது என்றனர். விளைவு, 14 உயிர்கள் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டன. இதில் காவல்துறைக்குப் பதிலாக இராணுவம் அழைக்கப்பட்டிருந்தால் அவர்கள் போராடும் மக்களை பாதுகாத்திருப்பார்களா? அல்லது சுட்டுக் கொன்றிருப்பார்களா? காவல்துறை என்பது உள்நாட்டில் இருக்கும் இராணுவம், இராணுவம் என்பது எல்லையில் இருக்கும் காவல்துறை. காவல்துறையின் மீது மக்கள் கொண்டிருக்கும் மதிப்பு என்ன? இதற்கு இராணுவம் விலக்காகி விட முடியுமா? அன்று வெள்ளைக் காரனுக்காக செயல்பட்ட இராணுவம் இன்று வேதாந்தாக்களுக்காக செயல்படுகிறது. ஆக மொத்தம் மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. அந்த இராணுவத்தில் 45 பேர் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதற்காக இரங்கல் தெரிவிப்பதும் தெரிவிக்காமல் இருப்பதும் எப்படி தேசப்பற்றை சந்தேகத்துக்கு உள்ளாக்கும்?

அரசின் அதாவது நிலையான நிர்வாக ரீதியிலான இந்திய அரசு என்ன முடிவெடுக்கிறதோ அதைச் செயல்படுத்துவதற்கு மட்டுமே இராணுவமும் காவல்துறையும் இருக்கின்றன. அரசு எப்போதாவது மக்களின் கருத்துக்கு ஏற்ப, மக்களை வாழ வைப்பதற்கு ஏற்ப முடிவெடுத்திருக்கிறதா? மக்களுக்கு எதிராக முடிவெடுத்துவிட்டு அதை மக்களை எப்படி ஏற்க வைப்பது? எந்த முறையில் ஏமாற்றுவது என்று தான் சிந்தித்திருக்கிறது. அரசின் திட்டங்கள் வேண்டாம் என தடுக்கக் கோரியும், இன்னின்ன தேவைகளை அரசு எங்களுக்கு செய்து தர வேண்டும் என்று கோரியும் தினந்தோறும், கணந்தோறும், எல்லா இடங்களிலும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எட்டுவழிச் சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் இன்னும் இது போன்ற திட்டங்கள் வேண்டாம் என்று மக்கள் போராடுகிறார்கள். போராடும் மக்களை அடக்கி ஒடுக்கி அத் திட்டங்களை செயல்படுத்த முனைகிறது. பள்ளிக்கூடங்களை கட்டுங்கள், டாஸ்மாக்கை மூடுங்கள் என மக்கள் போராடுகிறார்கள். அரசு டாஸ்மாக்கை திறக்கிறது பள்ளிக் கூடங்களை மூடுகிறது. இவை உணர்த்தவில்லையா அரசின் திட்டங்கள் செயல்கள் மக்களுக்கு எதிராகவே இருக்கின்றன, எதிராகத் தான் இருக்கும் என்பதை. இப்படி மக்களுக்கு எதிராக இருக்கும் அரசு, தன்னுடைய நலனுக்காக வைத்திருக்கும் காவல்துறையிலும் இராணுவத்திலும் ஏற்படும் இழப்புகளுக்காக இரங்கல் தெரிவிப்பதும் தெரிவிக்காமல் இருப்பதும் எப்படி தேசப்பற்றை சந்தேகத்துக்கு உள்ளாக்கும்?

நாடெங்கிலும் காவல்துறையும் இரணுவம் செய்துவரும் சட்ட மீறல்களையும் அடாவடிகளையும், கொலைகளையும், வன்புணர்வுகளையும் எப்படி எடுத்துக் கொள்வது? இராணுவமே எங்களை கற்பழியுங்கள் என்று பதாகைகளை ஏந்தி நிர்வாணமாக நின்று போராடினார்களே மணிப்பூரின் தாய்மார்கள். அவர்கள் இரங்கல் தெரிவிப்பார்களா? காஷ்மீரில் அப்பாவி மக்களை பிடித்து சுட்டுக் கொன்று விட்டு தீவிரவாதிகளை கொன்றதாகக் கூறி பதக்கங்கள் வாங்கி குத்திக் கொண்டார்களே இராணுவத்தினர். கொல்லப்பட்ட அந்த மக்களின் பெற்றோர்கள் இரங்கல் தெரிவிப்பார்களா? காஷ்மீரில் வடகிழக்கு மாநிலங்களில் காணாமல் போனோர்களின் பட்டியல் எங்கே? இது போன்ற நிகழ்வுகள் ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்லி முடிப்பதற்கு?

இவை அனைத்தையும் மீறி இராணுவத்தின் மீதும், காவல்துறை மீதும் நம்பிக்கை வைப்பது தான் தேசப் பற்று என்றால், அவர்கள் இராணுவ வீரர்கள் என்பதை மீறி சக மக்கள், எங்கள் சகோதரர்கள் என்று எண்ணிப் பார்த்தால் அப்போதும் இரக்க உணர்வு தோன்றவில்லை, கோபம் தான் தோன்றுகிறது.

இப்படி ஒரு தாக்குதல் நடத்தப்படவிருக்கிறது என்று கடந்த எட்டாம் தேதியே தகவல் கிடைத்ததாக அரசு தெரிவித்திருக்கிறது. அப்படியென்றால் கடந்த எட்டாம் தேதியிலிருந்து பதினான்காம் தேதி வரை இராணுவ வீரர்களைக் காப்பதற்கு அரசு எடுத்த முயற்சிகள் என்ன?

சி.ஆர்.பி.எஃப் செய்தித் தொடர்பாளர் ஆசிஸ்  குமார் ஜா கூறும் போது, “2500 வீரர்கள் செல்லும் நிகழ்வு இது. இதற்காக ஜம்மு சிரீநகர் நெடுஞ்சாலையில் ஒருவாரமாக போக்குவரத்துகள் அனைத்தும் தடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட பின்னரே இந்த நகர்வுக்கான அனுமதி வழங்கப்பட்டது” என்கிறார்.  என்றால் இத்தனை கண்காணிப்பையும் மீறி இத்தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி? இந்த நகர்வுக்கு பொறுப்பேற்றிருந்த அதிகாரி யார்? இந்த நிகழ்வு குறித்த அவரின் கருத்து என்ன?

நிகழ்வு நடந்த சில மணித்துளிகளில் இத்தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ முகம்மது எனும் அமைப்பு என்றும், தாக்குதலை நடத்திய தற்கொலைப் படை தீவிரவாதி  ஆதில் அகமது தர் என்றும், ஏற்கனவே இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஒரு காணொளி வெளியிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுவதை எவ்வாறு எடுத்துக் கொள்வது? தாக்குதல் நடந்து முடிந்த பிறகு இவ்வாறு அறிவிக்கலாம் என காத்திருந்தார்களா?

ஜெய்ஷ் இ முகம்மது பொறுப்பேற்றுள்ளதாக வந்த காணொளி ஆதில் அகமதுவின் தன்னிலை விளக்கமாக இருக்கிறது. இதுவரை நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களில் காஷ்மீர் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்கும் அமைப்புகள், நிகழ்வுக்குப் பிறகு அமைப்பின் சார்பில் நேரடியாக பொறுப்பேற்பதாக வெளியிடப்படுவதையே கண்டு வந்திருக்கிறோம். ஆனால் இதில் ஜெய்ஷ் இ முகம்மது எனும் அமைபின் சார்பாக இல்லாமல் தாக்குதல் நடத்திய தீவிரவாதியே நேரடியாக அதுவும் நிகழ்வுக்கு முன்பே அறிவித்தது முரண்பாடாக தெரிகிறதே. இதற்கு யார் பதில் சொல்வது?

ஆண்டுக்கு இரண்டு லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, இரண்டு லட்சம் துணை இராணுவப் படையினர், எழுபத்தைந்தாயிரம் ராணுவ வீரர்கள்,  அதி நவீன ஆயுதங்களைக் கொண்ட காவல்துறையினர் நான்கு வீட்டுக்கு ஒருவர் எனும் கணக்கில் இருக்கின்ற போதிலும் இந்த தாக்குதலை நடத்துவதற்காக 350 கிலோ வெடிபொருட்களை திரட்டி கொண்டு வந்து இடிக்கச் செய்தது எவ்வாறு? பாதுகாப்பு நடவடிக்கைகளில் என்ன குறைபாடு? போன்றவற்றுக்கு யார் பதில் சொல்வது?

தாக்குதல் நடந்த தெற்கு காஷ்மீரில் முழுவதுமாகவும், பிற பகுதிகளில் 2ஜி அளவுக்கும் இணையம் முடக்கப்பட்டது ஏன்? தாக்குதல் காணொளிக் காட்சிகள் வெளியாகி சமூக அமைதி குலைந்து விடக்கூடாது என்று காரணம் கூறப்பட்டிருக்கிறது. ஒரு தீவிரவாத இயக்கம் நாட்டின் இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது குறித்த காணொளிகள் வெளியாவது மக்களிடம் அந்த தீவிரவாத இயக்கத்தின் மீது கொந்தளிப்பை ஏற்படுத்தி அந்த இயக்கத்தை தனிமைப்படுத்தி அதில் சேர்வதை தடுக்கத் தானே உதவும். இதை உடனடியாக தடுக்க வேண்டிய அவசியம் என்ன? தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் பிறகும் இதே உத்தி கையாளப்பட்டதை நினைவு கூர்க.

இப்படி பல கேள்விகள் பதில் கூறப்படாமல் இருக்கையில், ஊடகங்கள் இது குறித்த எந்த கேள்விகளையும் எழுப்பாத நிலையில், இந்த அரசு எப்படி நடந்து கொள்கிறது? பிரதமர் உடனடியாக உயர்மட்டக் குழுவைக் கூட்டி இராணுவத்துக்கு முழுச் சுதந்திரம் வழங்குவதாக அறிவிக்கிறார். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் உலக அரங்கில் அந்நாடு தனிமைப் படுத்தப்படும் என அறிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் தூதர் அழைக்கப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் தூதரை திருப்பி அழைக்க ஆலோசனை நடக்கிறது.  ஐ.நாவுக்கு கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது. இவைகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் இத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என மறுப்பு தெரிவித்திருக்கிறது.

இவ்வாறு தெரிவிப்பது பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்படும் ஆதரவா? பாகிஸ்தானில் ஒவ்வொரு முறை தாக்குதல்கள் நடக்கும் போதும், அந்நாட்டு ஊடகங்களும் அரசும் இவ்வாறு தான் நடந்து கொள்கின்றன. இரண்டு நாடுகளிலும் தாக்குதல் நடப்பதும், ஒன்றின் மீது மற்றொன்று குற்றம் சாட்டுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இரண்டு நாடுகளும் தத்தமது அரசியல் லாபங்களுக்காக இதனை பயன்படுத்திக் கொள்வதோடு முடிவுக்கு வந்து விடாமல் தொடர்ந்து பராமரிக்கவும் செய்கின்றன.

இந்தியாவில் எப்போதெல்லாம் ஆளும் வர்க்கங்களுக்கு நெருக்கடி வருகிறதோ அப்போதெல்லாம் தீவிரவாதத் தாக்குதல்கள் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. கார்கில் போரை எடுத்துக் கொள்ளுங்கள், அஜ்மல் கசாப் நடத்திய தாக்குதலை எடுத்துக் கொள்ளுங்கள். பாராளுமன்றத்தில் நடந்த தாக்குதலை எடுத்துக் கொள்ளுங்கள் அனைத்திலும் ஆளும் வர்க்கங்களே பலனடைந்திருக்கின்றன. இன்னும் குறிப்பாகச் சொன்னால் அஜ்மல் கசாப் நடத்திய தாக்குதலினால் அவனோ அல்லது அவனைச் செலுத்திய இயக்கமோ அடைந்த பயன் என்ன? ஒன்றுமில்லை. மாறாக பார்ப்பன பாசிச இயக்கங்கள் நடத்திய குண்டு வெடிப்புகளை கண்டுபிடித்து அம்பலப்படுத்திய நேர்மையான காவல்துறை அதிகாரி ஹேமந்த் கார்க்கரே புல்லட் புரூஃப் கவசம் அணிந்திருந்த நிலையிலும் கொல்லப்பட்டார். அவர் அணிந்திருந்த கவச ஆடைகளை துப்பாக்கிக் குண்டுகள் ஊடுருவியது எவ்வாறு? என்பதற்கான விளக்கம் இதுவரை கிடைத்திருக்கிறதா? என்றால் இது யாருக்கான பயன்? ஆளும் வர்க்கங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்த்தப்படும். இது தான் உலகின் வரலாறு.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் இது தான் நிலமை. ஐ.எஸ் போன்ற இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் கூறுவது என்ன? இஸ்லாத்துக்கு சிக்கல்கள் ஏற்படும் போது நாங்கள் எதிர்த்தாக்குதல் நடத்துவோம் என்கிறார்கள். இஸ்லாத்தின் கொள்கைகளை நேரடியாக எதிர்க்கின்ற, நீதிமன்றங்கள் மூலமும், பிற நடவடிக்கைகள் மூலமும் இஸ்லாமிய நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற எந்த நாட்டின் மீதும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்தியதில்லை. மாறாக, எந்த நாடெல்லாம் அமெரிக்காவுடன் முரண்படுகிறதோ அந்த நாட்டிலெல்லாம் இஸ்லாமிய தீவிரவாதம் பரவுகிறது, தாக்குதல்களை நடத்துகிறது. ஈராக் தொடங்கி சிரியா வரை எத்தனை எடுத்துக் காட்டுகள் வேண்டும்?

இந்தியாவில் பாஜக அரசாங்கத்திற்கான நெருக்கடி முற்றியிருக்கிறது. பண மதிப்பிழப்பு தொடங்கி பெட்ரோல் விலை உயர்வு வரை அதன் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கோபத்திலிருந்து மக்களை திசை திருப்ப, நாட்டுப்பற்றை எகிர வைத்து அதை ஓட்டுகளாக அறுவடை செய்ய வேண்டிய தேவை பாஜகவுக்கு இருக்கிறது. ஏன் அதற்காக இத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கக் கூடாது? இதுவும் ஐயம் தான். தாக்குதல் என்றவுடன் தேசபக்தியை வழிய விடுவதற்குப் பதிலாக இவ்வாறான வாய்ப்பையும் ஏன் பரிசீலிக்கக் கூடாது?

அப்படி என்றால் இதை ஏன் காங்கிரசும் பிற கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். எதிர்த்தால் அதையே துருப்புச் சீட்டாகக் கொண்டு தேசவிரோதி என முத்திரை குத்தப்படுவார்கள். காங்கிரசோ பிற கட்சிகளோ பாஜகவின் இந்த உத்திகளை முறியடிக்க வேண்டுமென்றால் இந்த தாக்குதலை எதிர்த்து அதன் பலன்கள் பாஜகவுக்கு போக அனுமதிக்காது. மாறாக அதை ஆதரித்துக் கொண்டே பாஜகவுக்கான ஆதரவை குறைக்க முயலும். அதைத்தான் இந்த ஓட்டுக் கட்சிகள் செய்கின்றன. ஏனென்றால் இவை அனைத்துமே ஆளும் வர்க்கக் கட்சிகள் தாம்.

பாகிஸ்தான் இத்தாக்குதலை திட்டமிட்டு நடத்தியிருப்பதாக வைத்துக் கொள்வோம். இப்படி ஒரு தாக்குதல் நடந்திருப்பது பாகிஸ்தானுக்கு எந்த விதத்தில் பலனைத் தரும்? இன்றைய சூழலில் பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதை எப்படி தவிர்ப்பது என்பதை விட்டுவிட்டு இத்தாக்குதலை பாகிஸ்தான் திட்டமிட்டு நடத்தியது என்றால். அது உறுதியானால், மீண்டும் பாகிஸ்தான் உலக அரங்கில் தனிமைப்படும். இதனால் குறைந்து கொண்டிருக்கும் முதலீடுகள் தடைப்படும். நிதி உதவிகள் நிறுத்தி வைக்கப்படும். பெயரளவிலான வளர்ச்சித்திட்டங்கள் கூட முடக்கி வைக்கப்பட்டு தீவிரவாத இயக்கங்களை ஒடுக்குவதற்கு இருக்கும் நிதியையும் செலவு செய்து நடவடிக்கை எடுக்க உலக நாடுகள் நிப்பந்திக்கும். இது அந்நாட்டு மக்களுக்கு அரசின் மீதான கோபத்தை அதிகரித்து போராட்டங்களைத் தூண்டும். இவைகளை பாகிஸ்தான் விரும்புமா? அல்லது நாம் அப்படி நம்ப விரும்புகிறோமா?

இது போன்ற தாக்குதல்களுக்கு பதிலடியாக திட்டமிடப்படுவது என்ன? பாகிஸ்தானுடனான போருக்கு வாய்ப்பிருப்பதாக ஊடகங்கள் எழுதுகின்றன. பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் தேச பக்த மக்கள் விரும்புகிறார்கள். பாகிஸ்தானுடன் போரை நடத்தி தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்க முடியும் என்றால் ஏற்கனவே நடந்த போர்களினால் அது தடுக்கப்பட்டிருக்க வேண்டுமே. ஒவ்வொரு போரின் பிறகும் அது வளர்ந்து கொண்டு தான் வந்திருக்கிறது. இப்போது இன்னுமொரு போர் என்றால் அதன் உடனடி விளைவுகள் இரண்டு.

  1. இன்னும் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும், மக்களும் கொல்லப்படுவார்கள்.
  2. போரை நடத்தியதற்கான செலவுகள் மக்கள் தலையிலேயே விடியும்.

நடத்தப்படும் போரினால் பலனடையப் போவது ஆயுத வியாபாரிகள் மட்டுமே. குறிப்பாக அமெரிக்க, ரஷ்யா ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்கள். இதனாலேயே கூட அமெரிக்காவும் ரஷ்யாவும் இத் தாக்குதலை உடனடியாக கண்டித்து அறிக்கை விட்டிருக்கலாம். தெளிவாகச் சொன்னால் எந்த முனையிலும் நடக்கும் நடக்கப் போகும் நிகழ்வுகளால் மக்களுக்கு கொஞ்சமும் பலன் ஏற்படப் போவதில்லை.

இந்த மக்கள் பிறந்து வளர்ந்த நாடு எனும் ஒரே காரணத்திற்காக அந்த நாட்டின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆதரித்தாக வேண்டும் என்பது கட்டாயம் ஒன்றுமில்லை. அரசு என்ன செய்கிறது. அது மக்களை எந்த அளவுக்கு பாதிக்கிறது அல்லது வளர்க்கிறது என்பதைக் கொண்டே அதை ஆதரிக்க வேண்டுமா? எதிர்க்க வேண்டுமா? என்பதை முடிவு செய்ய வேண்டும். அரசியல் என்பதன் உண்மையான பொருளே இது தான்.  இந்த அடிப்படையிலிருந்து பார்த்தால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சனை என்பது அரசியல் பிரச்சனை, தீவிரவாதப் பிரச்சனை அல்ல. இரண்டு தரப்புமே இந்தப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனும் முனைப்பில் எந்த ஒன்றையும் செய்யவில்லை, செய்யப் போவதில்லை. ஏனென்றால் இரண்டு பக்கமும் ஓட்டுக் கட்சி அரசியலுக்காக இந்த பிரச்சனை நீடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றன. அதனால் தான் இன்னும் இது தீர்க்கப்படாமல் நீடிக்கிறது. தீர்க்கப்பட வேண்டும் எனும் அழுத்தத்தை மக்கள் கீழுருந்து தான் அரசுகளுக்கு புரிய வைக்க வேண்டும்.

இத்தாக்குதலுக்கு இரங்கல் தெரிவிப்பதோ, பரிதாபம் கொள்வதோ, தேசபக்திப் பெருமிதங்களை உணர்வதோ அரசுகளுக்கு புரியவைப்பதற்கு ஒருபோதும் உதவாது. மாறாக, அரசை நோக்கி கேள்வி எழுப்புவது, அரசை பதில் கூற நிர்ப்பந்தம் செய்வது மட்டுமே தீர்வை நோக்கி நகர வைப்பதோடு இது போன்ற தீவிரவாத தாக்குதல்களையும் இல்லாமல் ஆக்கும்.

மின்னூல் கோப்பாக(PDF) பதிவிறக்கம் செய்ய

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s